தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பது இஸ்லாமியக் கடமையல்லவா?

in 1990 ஜூலை-ஆகஸ்ட்

தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பது இஸ்லாமியக் கடமையல்லவா?

தொடர்:2

Er.H. அப்துஸ்ஸமது, B.Sc.,M.Sc.,(Eng), சென்னை

அபூஸயீதில் குத்ரீ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்:

உங்களில் யாரேனும் ஒரு முறையற்ற செயலைக் கண்டால் தன் கைகளால் அதை தடை செய்ய வேண்டும். அது முடியாவிட்டால் வாயால் கூறி சீர்த்திருத்தவேண்டும்; இவ்விரண்டும் முடியாவிட்டால், இதய பூர்வமாக அத்தீமையை வெறுக்க வேண்டும். கடைசி(யில் கூறிய)முறை ஈமானின் மிகவும் தாழ்ந்த நிலையாகும்.

இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள், நபி(ஸல்) இவ்வாறுக் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:

எனக்கு முன்னர் தோன்றிய எல்லா நபிமார்களும் அவர்களின் போதனையை ஏற்று அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்ததோடு, அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதில் தம் உயிர்களையும் அர்ப்பணிக்க வல்ல தோழர்கள் இருந்துள்ளனர். பின்னர் நபிமார்களின் போதனைகளுக்கு மாறாக செயல்படுபவர்களும், ஏவப்படாததை செய்பவர்களும் தோன்றினார்கள். இத்தகையோரைத் தமது கரத்தால் எதிர்த்துப் போரிடுபவரும் மூமினாவர். நாவால் எதிர்த்து போரிடுவோரும் மூமினாவார். இதன் பின்னர் கடுகின் ஒரு வித்தளவும் ஈமான் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

நுஃமான்பின் பஷர் அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை அலட்சியம் செய்து அதை மீறுபவர்களின் நிலை கீழே விவரிக்கப்படும் மக்களுடையதை ஒத்ததாகும். ஒருக் கப்பலில் பிரயாணம் செய்ய வேண்டியவர்கள், சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுத்து அவர்களில் சிலர் மேல்தட்டிலும் மற்றவர்கள் கீழ்த் தட்டிலும் பிரயாணம் செய்ய வேண்டும் என்பதை நிர்ணயித்தார்கள் கீழ்த் தட்டில் உள்ளவர்கள் (குடி) தண்ணீர் தேவைப்படும்போது மேல்தட்டுக்குச் சென்று பெறவேண்டும்: மேல்த்தட்டிலுள்ளவர்கள் இதை இடைஞ்சலாகக் கருதினார்கள். மேல்த்தட்டிலுள்ளவர்களின் மனநிலையை அறிந்த கீழ்த்தட்டிலுள்ள சிலர், கப்பல்களின் அடித்தளத்தில் ஓட்டைப் போட்டார்கள்.

இதை அறிந்த மேல்த்தட்டிலுள்ளவர்கள் இவர்களிடம் இதைப் பற்றி விசாரித்தபோது, கீழ்த் தட்டிலுள்ள நாங்கள் மேல்த்தட்டிற்கு வருவதால் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. எங்களுக்கோ தண்ணீர் அவசியமாக இருக்கிறது. அதனால் இவ்விதம் செய்வது தவிர்க்க முடியாததாகிறது என்றுக் கூறினர். இந்நிலையில் ஓட்டைப் போடுபவர்களின் கைகளை அவர்கள் பிடித்துத் தடுத்துக் கொண்டால் அவர்களும் தப்புவார்கள், மற்றவர்களையும் காப்பாற்றுவார்கள். அவ்வாறு செய்யாது விட்டுவிட்டால் தம்மையும் நாசமாக்கி பிறரையும் நாசமாக்கி விடுவார்கள். (புகாரீ)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீதில் குத்ரீ(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

அல்லாஹ்வின் பாதையில் மேற்க்கொள்ளப்படும் ஜிஹாது (அறப்போர்)களில் ஏற்றவும் உன்னதமானது வழி தவறிய ஆட்சியாளர்களிடம் அவ்வுண்மையை எடுத்துரைப்பது ஆகும். (இப்னு மாஜ்ஜா, நஸயீ, அபுதாவூது, திர்மிதீ)

அபூ பக்கர்(ரழி) அவர்கள் கீழ்வருமாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது:-

என்னுடைய மக்களே! நீங்கள் ஒருவருக்கொருவர் இந்த இறை வசனத்தை நினைவு கூர்ந்துக் கொள்ளவும்!

‘(விசுவாசிகளே!) நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறிய எவருடைய தீங்கும் உங்களைப் பாதிக்காது.”

இந்த வசனத்திலிருந்து நீங்கள் ஒரு மனிதன் தன்னை மாத்திரமே சீர்த்திருத்திக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும் கடமைப்பட்டுள்ளான்; மற்றவர்களுக்கு அவன் பொருப்பல்ல என்று தவறாக வாதிடுகின்றீர்கள். ரசூல்(ஸல்) அவர்கள் ஒருவன் அநீதியிலும் அக்கிரமத்திலும் ஈடுபட்டிருப்பதைக் கண்ணுற்ற மக்கள் அவனைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அல்லாஹ் அம்மக்கள் மீது தண்டனைகளை இறக்குவான்; அது அவர்கள் யாவரையம் சுற்றி வளைத்து விடும். (அபூதாவூது,திர்மீதி.நஸயீ)

அபூஹுரைரா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:-

ஒருவரிடம் அவர் கற்றுள்ள அறிவுப் பற்றிக் கேட்கப்படும்போது அதைக் கற்ப்பிக்காது அவர், அதை மறைத்தால் அவருடைய வாயில் நெருப்புக் கடிவாளம் பூணப்படும். (அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)

மேலே குறிப்பிட்ட நபிமொழிகளை ஊன்றிக் கவனிக்கும்போது, ஈமானின் மூலக் கோட்பாடுகளை விளக்குவது, மக்களின் அறியாமையைப் போக்குவது, எதிர்படும் ஆபத்துக்களை சட்டை செய்யாமல் இஸ்லாத்திற்கு எதிரான செய்கைக்கு எதிராக குரல் எழுப்புவது, மக்கள் நம்மை வெறுப்பார்களே என்ற அச்சம் இல்லாமல் மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பது யாவும் கடமையாக்கப்படாத வெறும் பண்பு அல்ல. மாறாக அவை ஒவ்வொருவரின் அறிவுத் தேர்ச்சிக்கேற்ப அழுத்தமாக வலியுறுத்தப்பட்ட கடமை என்பது தெளிவாகும்.

தன் அறிவுக்கும் ஆற்றலுக்ேற்ப ஒருவன் தீமைகளினின்றும் மக்களைச் சீர்த்திருத்த முனைப்புடன் ஈடுபடவில்லையாயின் அவன் அத்தீமையில் பங்குக் கொள்வதோடு, அத்தீமையைப் புரிபவர்களுக்கு இறங்கும் தண்டனைக்கும் உள்ளாக நேரிடும். ஆயுத பாணியாகவோ, சொல்வன்மையாலோ, சீர்த்திருத்த முயற்சியை மேற்க்கொள்ள முடியாதவர்கள் மாத்திரமே இதில் நின்றும் விதிவிலக்கு பெறலாம். முடியாத பட்சம், இத்தகைய தீமைகளைத் தீமைகளாக உளமாரக் கருதி அவைகளினின்றும் தம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். இதுவே இஸ்லாமின் கோரிக்கை.

ஆபத்துக்கள் நேரிடும் என்று கற்பனை செய்துக் கொண்டும், மிகச் சாதாரணமாக இடையூறுகளையும் தொல்லைகளையும் நொண்டிச் சாக்குகளாகக் காட்டியும் இறைமறை விதிக்கும் பொருப்புகளினின்றும் யாருமே விலகிக் கொள்ள முடியாது. சிலக் காலக்கட்டங்களில் சமுதாயம் சீர்த்திருத்தப்பட முடியாத அளவு சீர்க்குலைந்துக் காணப்படுவது உண்மையே! இத்தகைய சந்தர்ப்பங்களில், ஒருவன் சீர்த்திருத்தும் முயற்சியில் ஈடுபடாமல் விலகி நிற்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அறிவுப் பெற மக்களை ஆர்வமூட்டுவதாலும், அவர்களை சீர்த்திருத்த முயல்வதாலும் நேரமே விரயம் ஆகும் என்ற விரக்தி மனப்பான்மையோடு வீட்டை விட்டு வெளியேறாது, வீட்டில் முடங்கிக் கிடந்து தம் ஈமானையும் கோட்பாடுகளையும் பேணிப் கொண்டால் போதுமானது’ என்று வீண் சித்தாந்தம் பேசுவதற்காகச் சமுதாயம் சீர்திருத்த முடியாத அளவிற்கு சீர்க்குலைந்து விட்டது என்று கூறுவது நயவஞ்சகமாகும்.

முஸ்லிம் ஒருவன், தான் சார்ந்துள்ள சமுதாயத்தைச் சீர்த்திருத்துவதில் நின்றும் முற்றிலும் தவிர்ந்துக் கொண்டு தன் ஈமானையும் கோட்பாடுகளையும் காத்துக் கொண்டால் போதும் என்பதை நியாயப்படுத்த அச்சமுதாயம் எத்துணை சீர்க்குலைந்திருக்க வேண்டும் என்ற வரம்பையும் இஸ்லாம் வரையறுத்துள்ளது. வரையறுக்கப்பட்ட அந்த எல்லை எது? முழுச் சமுதாயத்திலும் அதன் சுவடே காண முடியாமல் இஸ்லாம் மறைந்து ஒவ்வொருவரும் தம் கடமையை நிறைவேற்றுவதை விட்டு விட்டு வெறும் மனோ இச்சைகளை நிறைவேற்றுவதிலேயே முனைந்திருப்பர். ஷரீயத் விதிகளைக் கடைப்பிடிக்காமல் ஆபாசங்களுக்கு மன விகாரங்களுக்கும் அடிமையாகி விடுவர்; இம்மையின் சுக போகங்களுக்கும் பொருளாதாயத்திற்கும், மறுமையை விட முக்கியத்துவம் நல்கப்படும்.

தன் யுத்திகளையும் சிந்தைகளையும் மாத்திரமே நாடி செயல்படுவர். பிறர் நல்கும்  மிகச் சிறந்த ஆலோசனைகளையும் ஏற்க முன் வரமாட்டார்கள். இவ்விதம் மாற்றவோ; சீர்த்திருத்தவோ முடியாத அளவு சீர்க்குலைந்த சமுதாயத்தில் வாழ்ந்தால் அவர்களின் பழக்க வழக்கங்களுக்கு நாமும் ஆளாகி விடுவோம் என்ற ஆபத்து உருவாகிவிடும். இத்தகைய சூழ்நிலைகளில் மற்றவர்களைப் பற்றிய சிரத்தையை விட்டுவிட்டு தன் ஈமானையும் கோட்பாடுகளையும் பெணிக் கொள்ளுவது நியாயமே ஆகும். இவ்வுண்மையை நிலைநிறுத்தும் நபிமொழி ஒன்றைக் காண்போம்.

அபூ தஃலபா(ரழி) அவர்கள் முன் குறிப்பிட்ட (5:105) என்ற இறை வசனத்தைப் பற்றி கூறும்போது இவ்வாறு அறிவிக்கின்றார்கள்:-

அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வசனம் பற்றி விசாரித்தேன். அதற்கு அவர்கள் கூறினார்கள். நல்லவற்றை ஏவுவதும் தீயவற்றைத் தடுப்பதுமே ஒருவருக்குரிய முறையான செயலாகும். என்றாலும் ஒரு சமுதாயம் உலோபித் தனத்திற்கு அடிமைப்பட்டு மன இச்சையைப் பின்பற்றி, இம்மையே மென்மையானதாகக் கருதி, தம்மில் ஒவ்வொருவரும் தம் அபிப்ராயத்திற்க்கே முதலிடம் கொடுத்து நடக்கத் தலைபடும்போது உங்களுடைய ஈமானையும் கோட்பாடுகளையும் பாதகாத்துக் கொள்ள ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும். அது சமயம்(பிற) மக்களை அவர்களே தம்மைக் காத்துக் கொள்ளும்படி விட்டு விட்டு உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள. (ஹதீஸ் சுருக்கம்) (திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)

Previous post:

Next post: