பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்
அந்நஜாத்
இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்
மார்ச் 2020
ரஜப்- ஷஃபான் 1441
- தலையங்கம்!
- அமல்களின் சிறப்புகள்…
- அறிந்து கொள்வோம்…
- ஆதிகால வேதங்களும்! இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!!
- இறைவனின் பார்வையில் இருந்து வீழ்ந்துவிட்ட இஸ்லாமிய சமூகம் மறுமலர்ச்சி பெற ஒரு வெற்றி ஃபார்முலா!!
- இஸ்லாம் சொல்லும் தேசப்பற்று!
- உங்கள் இறைவனிடமிருந்து வந்த பெரும் சோதனை!
- கைக்கூலியின் விபரீதங்களும்! அதை ஒழிக்க வேண்டுகோளும்!!
- சுவர்க்கம் என்பதும் மறைவான இறைநம்பிக்கையில் உள்ளதாகும்! ஷ
***********************************************
தலையங்கம்!
சீரழியும் உத்திரபிரதேசம்!
உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சிக் காலமானது, அச்சில் கொண்டு வரமுடியாதவற்றையே சாதனைகளாகக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை காஷ்மீர் அல்ல, மத்திய பாரதத்தை ஆட்டிப்படைக்கும் மாவோயிஸ்ட்டுகளும் அல்ல, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகளும் அல்ல, பாகிஸ்தானும் அல்ல, சீனமும் அல்ல, மனிதர்களின் அன்றாட அழிவுக்குக் காரணமாக இருக்கும் உத்திரபிரதேசம் தான்.
உத்திரபிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளும், 404 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. இருந்தும், இந்திய ஜனநாயகம் கடுமையாகச் சேதப்படும் மாநிலமாக அது திகழ்கிறது. வகுப்புவாதம், சாதிவெறி, சமூக அநீதி, ஊட்டச்சத்துக் குறைவு என்று அனைத்துமே இங்கு நிறுவன மயமாக்கப்பட்டு நிரந்தரமாகிவிட்டது. இந்திய நாட்டுக்குள் உத்திரபிரதேசம் வளர்ச்சி பெற என்ன திட்டத்தை வைத்திருக்கிறோம்?
கள யதார்த்தங்கள் :
2000க்குப் பிறகு உத்திரபிரதேசத்தில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டது. ஏற்றத் தாழ்வுகள் சிறிதளவுக்குக் குறைந்தன என்ற எண்ணம் ஏற்பட்டது. 2017க்கான மனிதவள வளர்ச்சி அட்டவணையில் இந்தியாவிலேயே உத்திரபிரதேசமும், பீகாரும் மிக மோசமான செயல்பாட்டுக்காக இறுதியில் இடம்பெற்றன. கடந்த 27 ஆண்டுகளாக உத்திரபிரதேசம் தனது மனிதவளக் குறியீட்டு அட்டவணையை மேம்படுத்தவே இல்லை என்பதை ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
புள்ளியியல் திட்ட அட்டவணைத் துறை, கல்வி பற்றிய அறிக்கை தயாரிப்பில் “குடும்பங்களின் சமூக நுகர்வு’ என்ற தலைப்பிலும், நிதி ஆயோக் அமைப்பு “பள்ளிக் கல்வித்தர அட்டவணை’ என்ற தலைப்பிலும், பெண் கல்வியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலம் கேரளம் என்றும், மிக மோசமாகச் செயல்பட்ட மாநிலம் உத்திரபிரதேசம் என்றும் ஆய்வு செய்து தெரிவித்துள்ளன. ஒரு காலத்தில் உத்திரபிரதேசத்துடன் சேர்ந்திருந்த உத்திரகண்ட் இப்போது தரத்தில் உயர்ந்து வருகிறது.
வகுப்புவாதம் உருவான வரலாறு :
சட்டம் ஒழுங்கின்மை. கொள்ளை, வகுப்புவாதம், சாதிக் கொலைகள், பாலியல் சார்ந்த கொடூரச் சம்பவங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத நிலை, கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணையார்கள் அடிமைப்படுத்திச் சுரண்டுவது என்று அனைத்துமே இந்த மாநிலத்தில் தொடர்கின்றன. அதன் ஏழைகளில், ஒரு பகுதியினர், இடம்பெயரும் தொழிலாளர்களாக மாநிலத்தின் நகர்ப் பகுதிகளுக்கோ, பிற மாநிலங்களுக்கோ வேலை தேடிச் செல்கின்றனர். உத்திரபிரதேசமானாலும், வெளி மாநிலமானாலும், நல்ல உணவு, குடிநீர், உடை, மருத்துவ வசதி, சுகாதாரமான சுற்றுப்புறம், கல்வி, வேலைக்கேற்ற நியாயமான ஊதியம், அரசு அல்லது தன்னார்வ நிறுவனங்களின் அரவணைப்பு என்று எதுவுமே இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்களாகவும் சபிக்கப்பட்டவர்களாகவும் போகும் இடங்களிலும் உத்திரபிரதேச ஏழைகள் வாழ்கின்றனர்.
மும்பை நகரில் வேலைக்குச் செல்வோர் மகாராஷ்டிரத்தவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மேற்கு ஆசியாவில் முறையான குடியிருப்பு, வேலை அனுமதி இல்லாமல், பணத்தாசை பிடித்த ஒப்பந்ததாரர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, கசக்கிப் பிழியப்படுகின்றனர். எழுத்தறிவின்மையும் வறுமையும் அவர்களின் நிரந்தர அடையாளங்களாகி விட்டன. உத்திரபிரதேசத்தில் நடக்காத சமூகக் கொடுமையோ தாக்குதல்களோ கிடையாது. காரணம், மாநிலம் மிகவும் பெரியது, ஆப்பிரிக்க, ஐரோப்பிய, தென் அமெரிக்காக் கண்டங்களில் கூட உத்திரபிரதேசம் அளவுக்கு மக்கள் தொகை கிடையாது.
மாநில நிர்வாகத்தில் லஞ்சமும், ஊழலும் நிலவுகின்றன. அதிகாரிகளுக்கும் ஆட்சியளர்களுக்கும் மக்களைப் பற்றி கவலையில்லை. மக்களைக் கொடூரமாக நடத்த எவருக்கும் தயக்கம் இல்லை என்பதால், மதம்தான் மக்களை வழிநடத்துகிறது. இங்கு இந்து, இஸ்லாம் இரண்டிலுமே மிகவும் கட்டுப்பெட்டியான, தீவிரமான மதவாதிகளே மக்களை வழிநடத்துகின்றனர். நவீனத்துவமும் அரசு நிர்வாகமும் பெருமளவில் மக்களை ஊடுருவவில்லை. அரசாங்கத்தை மக்கள் விரோதியாகப் பார்க்கும் மக்களுக்குச் சாமியார்களும் குண்டர்களும் மீட்பர்கள் போல் தெரிகின்றனர்.
சாதி, மதம் அடிப்படையிலான தீயைக் கடந்துதான் அரசியல் அதிகாரத்தைக் கட்சிகள் கைப்பற்றுகின்றன. எனவே, சாதியமும் மதவாதமும் ஆழ வேரூன்றிவிட்டன. அன்றாட வகுப்புவாதம், கலவரங்கள் இப்போதைய உத்திரபிரதேசத்தின் அங்கமாகிவிட்டன என்பதை அறிஞர்கள் சுதாபை, சஜ்ஜன் குமார் தெரிவிக்கின்றனர். உள்ளூர் அளவில், குறிப்பிட்ட கால இடைவெளியில், சின்னஞ்சிறு வகுப்பு மோதல் சூழல்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால், மாநிலம் எப்போதுமே கொதிநிலையில் இருக்கிறது. மாநிலத்தின் கங்கை, யமுனை கலாச்சாரத்தின் இன்றைய நிலை இது.
குற்றச் செயல் தரவுகள் :
குற்றங்கள் அவசியமானவை, நியாயமானவைதான் என்ற சூழலிலேயே ஒவ்வொரு உத்திரபிரதேசக் குடி நபரும் இன்று வளர்கிறார். தேசிய குற்றச் செயல் பதிவேட்டு முகமை கடந்த ஆண்டு தரவுகளை வெளியிட்டது. இந்தியாவில் பதிவான மொத்த குற்றச் செயல்களில் 10%, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கை கள், உத்திரபிரதேசத்தில்தான் பதிவாகின்றன. மகளிருக்கு எதிரான குற்றங்களில் மாநிலத்தில் நடந்தவை மட்டும் 56,011. எல்லா மாநிலங்களிலும் சேர்த்து 3,59,849. துப்பாக்கி உரிமங்களிலும், துப்பாக்கிகளை வைத்திருப்பதிலும் உத்திரபிரதேசம் தான் முதலிடம் வகிக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் பதிவின்படி 2016ல் உத்திரபிரதேசத்தில் துப்பாக்கி உரிமம் வைத்திருந்தவர்கள் 1277 லட்சம் பேர். ஜம்முகாஷ்மீரில் 3,69 லட்சம் இவையயல்லாம் அதிகாரபூர்வமாகத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை மட்டுமே. 2015ல் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாக நாடு முழுவதும் பதிவான வழங்குகள் 3 லட்சம். உத்திரபிரதேசத்தில் மட்டும் 1.5 லட்சம். உத்திரபிரதேசத்திலும் நவீனத்துவத்தைப் புகுத்தும் எந்த முயற்சியும் சாதி ரீதியாக மக்களைத் திரள வைக்கிறது அல்லது இந்து, முஸ்லிம் மோதலுக்குக் காரணமாகிறது.
உத்திரபிரதேசத்தை ஏன் பிரிக்க வேண்டும்?
உத்திரபிரதேச மாநிலத்தை இப்போதிருக்கும் நிலையிலிருந்து ஏன் பிரிக்க வேண்டும் என்றால், அரசு நிர்வாகத்தின் புறக்கணிப்புதான் முக்கிய காரணம். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூர்வாஞ்சல் (கிழக்கு உ.பி. பந்தேல்கண்ட் அவத் (மத்திய உ.பி.) பச்சிம் பிரதேஷ் (மேற்குப் பகுதி) ஆகியவை தங்களுடைய பகுதியின் வளர்ச்சிக்கு அதிக நிதியாதாரம் வேண்டும். இல்லாவிட்டால் உத்திரபிரதேசத்திலிருந்து தனியாகப் போகத் தயார் என்று கூறுகின்றன. தண்ணீர் பெறக்கூட இவை மாநில அரசிடம் போராடுகின்றன. உத்திரபிரதேசத்திலிருந்து பிரிந்த பிறகு உத்திரகாண்ட் வளர்ச்சி அடைந்து வருகிறது.
மாநிலங்கள் மறு சீரமைப்பு ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை 1955ல் வெளியானது. அதற்கான குழுவில் வரலாற்றாசிரியர் கே.எம்.பணிக்கரும் இடம் பெற்றிருந்தார். உத்திரபிரதேசம் நிர்வாக ரீதியில் கட்டுக்கடங்காத பெரிய நிலப்பரப்பாக இருப்பது குறித்து, பணிக்கர் 10 பக்கத் தனிக் குறிப்பைத் தயாரித்துத் தந்தார். இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு உத்திரபிரதேசம் பெரிய சவாலாக விளங்கும் என்று அப்போதே அவர் கணித்தார்.
உத்திரபிரதேச மக்களின் நன்மைக்காகவும், இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவும் ஜனநாயக முறைப்படி உத்திபிரதேசத்தை மேலும் பிரிப்பது குறித்த விவாதத்தை மத்திய, உத்திரபிரதேச அரசுகள் தொடங்குவது நல்லது. நீண்ட காலமாகச் சேதப்பட்ட அது உளவியல் ரீதியாகக் குணப்படுத்தப்பட வேண்டும்.
நன்றி : இந்து தமிழ் திசை வெளியீடு. 11.2.20
ராகுல் ஜெயராம், ஜிண்டால் பல்கலைக் கழகப் பேராசிரியர், தி இந்து, தமிழில் : சாரி.
***********************************************
அமல்களின் சிறப்புகள்….
தொடர் : 55
- அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும், வெளியிட்டோரும் :
பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.
அல்ஹம்துலில்லாஹ்! அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தின் பக்கம் 392ன் நான்காவது பத்தியில் ஆரம்பித்து 393ன் முதல் பத்தி முடிய ஆக மொத்தம் மூன்று பத்தி களில் “நபி(ஸல்) அவர்கள் தங்களது இரு பாதங்களும் வீங்கும் அளவுக்கு நின்று தொழுது வந்த” ஹதீஃதில், பொய்களை இடைச் செருகல் செய்து ஹதீஃத் என்ற பெயரில் எழுதி இருந்ததை ஆய்வு செய்து வருகிறோம்.
ஜனவரி 2020 அந்நஜாத் இதழில், அசி புத்தகத்தின் முதல் பத்தியில் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் எதுதான் ஆச்சரியமாக இல்லாமல் இருந்தது?” என்று அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கேட்டதாக எழுதப்பட்டிருந்த செய்தியும், “நபி(ஸல்) அவர்கள் இரவில், என்னுடைய படுக்கையில் சற்று படுத்திருந்த பின், “என்னுடைய ரப்பை நான் வணங்குவதற்கு என்னை விடு!” என்று கூறிவிட்டு எழுந்து சென்று உளூச் செய்து, தொழுவதற்காகத் தக்பீர் கட்டி அழ ஆரம்பித்துவிட்டார்கள். கண்ணீர் அன்னாருடைய நெஞ்சின் மீது வழிந்தோடிக் கொண்டிருந்தது.
பிறகு ருகூவிலும், சுஜூதிலும் இவ்வாறே அழுது கொண்டிருந்தார்கள். சுப்ஹு தொழுகைக்கு பிலால்(ரழி) அவர் கள் வரும்வரை இரவு முழுவதையும் இவ்வாறே கழித்தார்கள்” என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாக அசி புத்தகத்தின் இரண்டாவது பத்தியில் எழுதி இருந்த செய்திகளும், அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அவ்வாறு சொல்லவேயில்லை என்பதையும், அசி புத்தகம் தெரிவித்ததற்கு நேர் மாற்றமாக “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முழு இரவும் தொழ மாட்டார்கள்” என்று அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறிய செய்தி அதே ஹதீஃதில் இடம் பெற்றிருந்ததையும் பிப்ரவரி 2020 அந்நஜாத் இதழில் எழுதி, அசி ஆசிரியர் அவரது பொய்களை ஹதீஃதில் சொருகி மோசடி செய்து இருக்கிறார் என்பதையும் நிரூபித்து இருந்தோம்.
அசி புத்தகத்தின் ஆசிரியர், தான் சுமந்து கொண்டிருக்கும் பொய் மூட்டையை அவிழ்த்து அதிலிருந்து எடுத்து அள்ளி வீசும் அடுத்த பொய்களை மூன்றாவது பத்தியில் வர்ணிப்பதை கீழே கொடுத்துள்ளோம். பார்வை இடுங்கள்.
அசி புத்தகத்தில் மூன்றாவது பத்தியிலுள்ள செய்தி :
அப்பொழுது நான் மாநபி(ஸல்) அவர்களிடம் “யா ரசூலல்லாஹ் தாங்கள்தான் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்களே. அப்படியிருக்க ஏன் இவ்வளவு அழவேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், “நான் அல்லாஹு தஆலாவுக்கு நன்றியுள்ள அடியனாக இருக்க வேண்டாமா?” என்று கூறிய பின், “நான் எவ்வாறு அழாமல் இருக்க முடியும்? இன்றுதான் இன்ன ஃபீ கல்கிஸ் ஸமாவாத்தி என்ற ஆயத்து இறங்கியது என்று கூறியபின் “இந்த ஆயத்துக்களை ஓதி, அவற்றின் கருத்துக்களை சிந்தனை செய்யாத மனிதனுக்கு நாசம்தான்” என்று அருளினார்கள்.
எமது ஆய்வு :
அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறி வித்த ஹதீஃத் எனக் கூறி சில செய்திகளை அசி புத்தகத்தில் எழுதிவிட்டு, அது எந்த ஹதீஃத் நூலில் இடம் பெற்றிருக்கிறது என்ற தகவல் ஏதும் தராமல், தெரிவித்ததாகக் கூறும் செய்தியை ஹதீஃத் என்று மட்டும் மொட்டையாக எழுதி விட்டனர்.
செய்தியின் முக்கிய சாராம்சமான “நபி (ஸல்) அவர்கள் தங்களது இரு பாதங்களும் வீங்கும் அளவுக்கு நின்று தொழுது வந்ததை” மையாக வைத்து அது சம்பந்தமான அனைத்து ஹதீஃத்களையும் எடுத்தோம். அவைகளில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஃத்களை அடுத்து எடுத்தோம். அவைகளை ஆய்வு செய்ததில், அசி புத்தகம் ஹதீஃத் என்று கூறிய ஹதீஃதை நாம் கண்டுபிடித்து முந்தைய அந்நஜாத் இதழில் எழுதி இருந்தோம். அவர்கள் தெரிவித்திருந்த மையக் கருத்து இடம் பெற்றிருந்த அந்த ஹதீஃதில் அசி புத்தகம் தெரிவித்த 3 செய்திகளில் 2 செய்திகள் ஹதீஃதில் இடம் பெறவேயில்லை என்பதை முந்தைய அந்நஜாத் இதழ்களில் நிரூபித்து இருந்தோம்.
இப்போது அந்த 3வது செய்தியையும் ஆய்வு செய்து விடுவோம்.
ஏன் இவ்வளவு அழவேண்டும்? என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதாக தமது கற்பனையில் உதித்த பொய்யை அடுத்து சொடுக்கி விடுகிறார் அசி ஆசிரியர்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஹதீதுகள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை தயவு செய்து பார்வை இடுங்கள். ஜக்கரியா அவர்கள் பொய்யை அவிழ்த்துக் விட்டுக் கொண்டு இருக்கிறார் என்பது உங்களுக்கே புரிந்து விடும். “பாதங்கள் வீங்கும் அளவுக்கு நஃபில் தொழுகைகளை நீளமாகத் தொழுது சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்களே?” என்று நபித் தோழர்கள், நபி(ஸல்)அவர்களிடம் கேட்டதை, அப்படியே உல்ட்டா செய்து “ஏன் இவ்வளவு அழவேண்டும்?” என்று கேட்டதாக அடுத்தடுத்து பச்சைப் பொய்களை துணிந்து புளுகி வருகிறார்.
அப்பட்டமாக பொய்யை பரப்புகிறது அசி புத்தகம் என்று நாம் நிரூபித்தாலும், “ஏன் சிரமப்பட்டு தொழ வேண்டும்?” என் பதற்கு பதிலாக “ஏன் இவ்வளவு அழவேண்டும்?” என்று எழுதினால், அதில் என்ன தவறு இருக்கிறது? எப்படி எழுதினாலும், நல்லதை செய்யத்தானே இந்த புத்தகம் ஆர்வம் ஊட்டுகிறது” என்று சிலர் இன்னமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி அமல்கள்தானே செய்கிறோம் என வாதிடக் கூடிய அந்த அப்பாவிகளுக்கு சுருக்கமாக கூறிக் கொள்கிறோம்.
“அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது” என்ற அல்லாஹ்வின் மேலான சொல்லான குர்ஆனின் 33:21 வசனத்தையும், “நம்முடைய இந்த மார்க்கத்தில், அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ, அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய (புகாரி: அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரழி), ஹதீத் எண். 2697) ஹதீஃதையும் சிந்தித்து ஏற்று இந்த அப்பாவிகள் செயல்படட்டும்.
அழுததாகக் கூறிய பொய்க்கு சப்பைக் கட்டுகட்ட அடுத்தடுத்து பொய்களை அவிழ்த்து விடும் கொடுமையை கவனியுங்கள்.
அசி புத்தகத்தின் அடுத்த புளுகு :
அசி புத்தகத்தின் அடுத்த புளுகு பற்றி இப்போது ஆய்வு செய்வோம். “நான் எவ்வாறு அழாமல் இருக்க முடியும்? இன்று தான் இன்ன ஃபீ கல்கிஸ் ஸமாவாத்தி என்ற ஆயத்து இறங்கியது” என்று கூறிய பின் “இந்த ஆயத்துக்களை ஓதி, அவற்றின் கருத்துக்களை சிந்தனை செய்யாத மனிதனுக்கு நாசம்தான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் தெரிவித்ததாக, அந்த ஹதீஃதுக்குள் புகுந்து அடுத்த புருடாவை எடுத்து விடுகிறார். அழுததாகக் கூறியதே பொய். அந்த பொய்க்குள் மேலே கூறிய அடுத்த பொய்யையும் திணித்து விட்டார்.
இந்த ஆயத்தைப் படித்த அசி ஆசிரியர், அதைப் படித்தவுடன் அழுதிருப்பாரா என்றால் அதுதான் இல்லை. நிச்சயம் அழுதிருக்கமாட்டார். ஏனெனில் அவரது முழு கவனமும் நபி(ஸல்) அவர்கள் அழுததாக மக்களிடம் பொய்யைக் கூறிவிட்டு, தாம் அதில் கவலைக் கொண்டுள்ளதாக வாசகர்களிடம் காண்பித்து நல்ல பிள்ளை பெயர் எடுக்க வேண்டும் என்பது மட்டுமே. அவர் அழுதிருக்க மாட்டார் என்று எப்படி ஒருவரால் ஊர்ஜிதமாக சொல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். அடுத்து என்ன பொய்யைக் கூறலாம் எனத் திட்டமிடுபவர்கள் எப்படி அழுவார்கள்? சிந்தனை அடுத்த பொய்யிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அல்லவா?
தப்லீக்காரர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அசி புத்தகத்திலுள்ள கண்டகண்ட கதைகளையும் மார்க்கம் என்று நினைத்து குர்ஆனை ஓரம் கட்டி வைத்து விட்டு, குர்ஆனை ஓரம் கட்டி வைத்து புறக்கணித்து விட்டோமே என்பதை கூட அறியாமல், அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் அதே நேரத்தில் அவர்கள் ஜமாஅத் மட்டும்தான் நேரான வழியில் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் அளவுக்கு பச்சை மண்ணாக அவர்கள் இருந்து வருவதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. சிந்திக்கத் தெரிந்தவர்களால் இப்படி இருக்க முடியுமா? சொல் அலங்காரத்திற்காக இப்படி நாம் எழுதிவிடவில்லை. அவர்களில் எனக்கு பழக்கமானவர்களில் ஒரு சிலரிடம் மார்க்கம் பேசியதில் நாம் அறிந்து கொண்ட உண்மை இதுதான் என்பதை நடைமுறையில் கண்டறிந்துள்ளோம்.
இதன் தொடர்ச்சி… இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்.
***********************************************
அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்,
- யாருக்கு(மனிதர்களில்) கேடுதான் என்று அல்லாஹ் கூறுகிறான்?
இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவிக்கும் கேடுதான் என அல்லாஹ் கூறுகிறான். அத். 45:7 - அல்குர்ஆன் எந்த மொழியில் தந்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
நபி(ஸல்) அவர்கள் பேசிய மொழியான அரபியில். 44:58 - நல்லுபதேசம் பெறுவதற்காகவும், நினைவுபடுத்திக் கொள்வதற்காகவும் குர்ஆனை எவ்வாறு அருளியதாக அல்லாஹ் கூறுகிறான்?
எளிதாக்கி இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். 44:58, 54:32 - யாரை வேதனை செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?
அநியாயம் செய்கிறவர்களை. 18:87 - யஃஜூஜ், மஃஜுஜ் கூட்டத்தாருக்கு யார் தடுப்பு சுவர் கட்டினார்?
துல்கர்னைன். 18:95,96,97 - வேதனை வந்தபின் என்ன செய்யப்பட மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
உதவி செய்யப்படமாட்டார்கள். அத். 39:54 - எவர்கள்(சுவனப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
நம்பிக்கை கொண்டு நல்லறம் புரிந்தவர்களை. 30:15 - சுலைமான்(அலை) அவர்களின் சிம்மாசனத்தின் முன்பு எதை போட்டதாக அல்லாஹ் கூறுகிறான்?
ஒரு சடலத்தைப் போட்டதாக அல்லாஹ் கூறுகிறான். 38:34 - நபியை எதற்காக அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்?
சாட்சியாளராகவும், நன்மாராயம் கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும். 48:8 - ஆத் கூட்டத்தினர் எவ்வாறு அழிக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான்?
கடும் புயல் காற்றினால். 69:6 - எந்த பள்ளிகளை தவிர்த்து நன்மையை எதிர்பார்த்து பயணம் செய்ய கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
காபா, நபவி, அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகள். 1189, புகாரி - ஹதீஃத் (காற்று பிரிதல்) ஏற்பட்டால் (உளூ) அங்கத்தூய்மை செய்யாததினால் என்னவாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
தொழுகை ஏற்கப்படாது. புகாரி : 135 - இறப்பின் நெருக்கத்தில் இருப்போரிடம் எதை நினைவுபடுத்த நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
“லா இலாஹா இல்லல்லாஹ்” என்ற கலிமாவை. முஸ்லிம் : 1672 - நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதத்தில் பத்து நோன்புகள் நோற்றாரா?
இல்லை என ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 2186, 2187 - எந்த நிலையில் பெண்கள் இருக்கும் போது “தலாக்” சொல்ல நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மாதவிடாய் இல்லாத காலத்தில். முஸ்லிம் : 2920 - நடைபெற்ற சம்பவத்தைக் கூற வருபவர்களில், யார் முதலில் பேசவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
வயதில் பெரியவர். முஸ்லிம்: 3440 - எந்த திருடனின் கையை நபி(ஸல்) அவர்கள் துண்டித்து வந்தார்கள்?
கால்தீனார்(பொற்காசு) அல்லது அதற்கு மேல் திருடியவனின் கையை. முஸ்லிம்:3478 - “லிஆன்” என்றால் என்ன?
சாப அழைப்பு பிரமாணம். முஸ்லிம்:2985 - நேர்த்திக் கடன் மூலம் என்ன விளைகிறது?
கஞ்சனிடம் இருந்து செல்வம் வெளிக்கொணரப்படுவதை தவிர வேறில்லை. முஸ்லிம்: 3368 - காலத்தை ஏசாதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் ஏன் கூறினார்கள்?
ஏனெனில் அல்லாஹ்வே காலம். முஸ்லிம் : 4523
***********************************************
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்
M.T.M. முஜீபுதீன், இலங்கை
பிப்ரவரி மாத தொடர்ச்சி…..
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது:
(நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தாராகிய) நாங்கள் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்காமலேயே ஒரு மாத காலம் கூட எங்களுக்குக் கழிந்திருக்கிறது. அப்போதெல்லாம் (வெறும்) பேரீச்சம்பழமும், நீரும்தான் (எங்கள் உணவாகும்) (எப்போதாவது) சிறிது இறைச்சி எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டால் தவிர (புகாரி:6458)
உர்வா பின் ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறியதாவது :
ஆயிஷா(ரழி) அவர்கள் என்னிடம் “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நாங்கள் பிறை பார்ப்போம். இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்த்திடுவோம். (ஆனால்) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது” என்று கூறினார்கள். அதற்கு நான் (அப்படியானால்) நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள் கறுப்புப் பொருட்களான பேரீச்சம் பழமும், நீரும் தான் (அப்போது எங்கள் உணவு) இருப்பினும், அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அண்டை வீட்டாராக இருந்தனர். அவர்களிடம் (இலவசமாகப் பால் கறந்து கொள்வதற்கான) இரவல் ஒட்டகங்கள் இருந்தன. (அவற்றிலிருந்து பால் கறந்து) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்குத் தம் இல்லங்களில் இருந்து அவர்கள் கொடுத்தனுப்புவார்கள். அந்தப் பாலை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள். (புகாரி : 6439)
அன்றும், இன்றும் ஆட்சித் தலைவர்களாக இருப்பவர்கள் பெரும் மாட மாளிகைகளில் ஆடம்பரமான வாழ்க்கை வசதிகளுடன் வாழ்வதைக் காண்கிறோம். அவர்களின் ஆடம்பரமான வாழ்வுக்காக பெருந் தொகையான மக்களது பணம் வீண் விரயமாக்கப்படுகின்றது. ஆனால் அல்லாஹ்வின் இறைத்தூதராகவும், நாட்டுத் தலைவராகவும் இருந்த முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை மிகவும் எளிமையாகவும், ஆட்சித் தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் இருந்தது. இஸ்லாமிய ஆட்சித் தலைவரின் படுக்கை விரிப்பு பஞ்சு மெத்தையாக இருக்கவில்லை. பின்வரும் ஹதீஃதை கவனியுங்கள்.
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது:
பேரீச்சம் நாரினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது. (புகாரி: 6456)
அல்லாஹ்வின் தூதர்முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று மாறாக போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். (புகாரி : 6446)
ஆகவே அல்குர்ஆனிலும், நபிவழியிலும் ஆட்சி அதிகாரமுடையவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு நிறைவான படிப்பினைகள் உள்ளன. அறிந்து படிப்பினை பெறுவோர் இல்லையா? மனிதர்களே சிந்தியுங்கள். நல்லறிவு பெற்று இம்மை, மறுமை வாழ்க்கையில் வெற்றிபெற முன்வாருங்கள். இஸ்லாம் யுத்த வெறி கொண்ட மார்க்கமல்ல. சாந்தி மார்க்கமாகும். அல்குர்ஆன் ஏக அல்லாஹ்வின் சத்திய உண்மை இறைநெறி நூலாகும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை, முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதராவார்கள். இதை நம்ப மறுப்பது பெரும் பாவமாகும். சத்தியத்தை மறுப்பவர்கள் மறுமையில் நரகையே அடையவேண்டி இருக்கும். அல்லாஹ்வே என்னையும், உங்களையும், மனித சமுதாயத்தினையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபட வழிகாட்ட வேண்டும். மரணத்தின் பின்னுள்ள மறுமை வாழ்க்கையில் சொர்க்கம் செல்வதற்கு அருள் புரிய வேண்டும். முற்றிற்று.
***********************************************
இறைவனின் பார்வையில் இருந்து வீழ்ந்துவிட்ட இஸ்லாமிய சமூகம்
மறுமலர்ச்சி பெற ஒரு வெற்றி ஃபார்முலா!!
- பஷிர் அஹமது, தென்காசி
எல்லாப் புகழும் படைத்தவனாகிய அல்லாஹுவிற்கே அவன் எல்லையில்லா அருளாளன், படைப்புகள் மீது அளவில்லா கருணையாளன், இறுதித்தூதர் முஹம்மத் (ரசூல்) அவர்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக. வார்த்தைகளில் சிறந்தது இறைவசனங்களாகும். செயல்களில் சிறந்தது நபிகளாரின் சொல், செயல் நடைமுறைகளாகும்.
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே :
இந்தக் கட்டுரையின் நோக்கம் நம்முடைய மீதமுள்ள வாழ்நாளை புரட்டிப் போட்டு அதன் போக்கையே மாற்றி மிகப் பெரிய வெற்றியாளர்களாக நம்மை ஆக்க அல்லாஹ் அருள் செய்ய வேண்டும் என்பதே.
இன்று முஸ்லிம்களின் பரிதாபமான நிலை குறித்து முஸ்லிம்களாகிய நாமே சிந்திப்பது இல்லை. நம்மில் அநேகருக்கு அதற்கு நேரமும் அதைப்பற்றி கவலையும் இல்லை. நமக்கு காலையில் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எழுந்து தொழிலை பார்க்க ஓட்டம் பிடித்து, இரவு வரை தொழில், நட்பு, குடும்பம் என்று இவைகளுக்கே நேரம் ஒதுக்க முடியாமல் திணறி ஒருவழியாக இரவு படுக்கைக்கு செல்லவே போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதில் சகோதர முஸ்லிம்களைப் பற்றியும், மறுமையை பற்றியும், குர்ஆனை பற்றியும் சிந்திக்க நேரம் எங்கே இருக்கிறது? ஐவேளை தொழுகை என்பது ஐம்பது வயதும் வசதி வாய்ப்பும் வந்தபின் செய்யவேண்டியது என்பது நம் பெரும்பான்மையினரின் எண்ணம். எங்காவது முஸ்லிம்கள் சிரமத்தில் இருக்கிறார்கள் என்றோ கொல்லப்படுகிறார்கள் என்றோ கேள்விப்பட்டால் நாம் எந்த சலனமும் இல்லாமல் அதை புறக்கணித்து கடந்து செல்கிறோம்.
இன்று நாம் இந்தியாவில் பெரிய சிறுபான்மை இனத்தவர் ஜனத்தொகையில் முப்பது சதவிகிதம் நாம் சிதறிக்கிடந்த சுமார் இரு நூறுக்கும் அதிகமான சமஸ்தானங்களை ஒன்றிணைத்து அதற்கு இந்தியா என்று பெயரிட்டு ஒரு பேரரசாக, ஒரு வல்லரசாக கட்டி எழுப்பி சுமார் எண்ணூறு ஆண்டுகள் ஆண்ட சமுதாயமிது. இன்றளவும் பின்பற்றப்பட்டுவரும் நில அளவு, பஞ்சாயத்து, ராணுவ மற்றும் நிர்வாக ஆட்சிமுறையை அறிமுகம் செய்தவர்கள் நம் முன்னோர்கள். வட இந்தியர்கள் இன்றும் பேசும் உருது மொழியை உருவாக்கி வளர்த்து இலக்கணமும், இலக்கியங்களும் படைத்து கொடுத்தவர்கள்.
ஆனால் அதை அவர்கள் இந்தி என்று பெயர் மாற்றி அழைக்கிறார்கள். அப்படி அவர்கள் அழைப்பதிலும் மதமும், அரசியலும் இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து 18ம் நூற்றாண்டின் இறுதி வரை பிரிட்டிஷ், போர்ச்சுகீசிய பிரெஞ்சு ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடி, இந்திய இறையாண்மையை காக்க வீரம் செறிந்த ஆயுத போராட்டங்களை இந்திய மண்ணில் நடத்தி எதிரிகளின் சூழ்ச்சிகளாலும், வஞ்சகத்தாலும் உள்நாட்டு புல்லுரிவிகளாலும் இறுதியில் வீழ்ந்தாலும், தன்மானத்துடன் வீர மரணத்தை முத்தமிட்டு ஏற்றுக்கொண்டவர்கள் அவர்கள். ஆனால் இன்று? வரலாறு புரட்டப்பட்டு நம்மவர்களின் உயிர்த்தியாகமும், போராட்டங்களும் பங்களிப்பும் சிறுமைப்படுத்தப்படுகிறது.
அந்த தியாகிகளின் வழிதோன்றல்களாகிய நாம் பொருளாதாரத்திலும், கல்வியிலும், அரசியல் அதிகாரத்திலும் அரசு கூறும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், தாழ்ந்தவனாக இருக்கிறோம் இரண்டாம் தரத்தில் கூட இல்லை. மூன்றாம் தர இந்திய பிரஜைகள் நாம். இதை விஞ்ஞான பூர்வமாகவும் புள்ளி விபரங்கள் அடிப்படையிலும் சச்சார் கமிஷன் அறிக்கை சொல்கிறது.
ஹலாலான உணவை உண்ண தடுக்கப்படுகிறோம். இன்று இந்தியாவில் நாயை ரோட்டில் வைத்து அடித்தாலும் கேட்பார் உண்டு. ஆனால் முஸ்லிம்கள் அதைவிட கேவலமாக அடித்து கொல்லப்படுகிறார்கள் கேட்பாரில்லை, நம் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. நமது பெண்களுக்கு பாதுகாப்பில்லை. வாலிபர்கள் தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு விசாரணையே இல்லாமல் ரிமாண்டிலேயே வாழ்க்கை முழுவதையும் முடித்துக் கொண்டு இறந்தும், நடைபிணமாகவும் ஆனோர் ஏராளம். இந்தியாவிலேயே மிக மோசமான வறுமையில் இருப்பவர்கள் விகிதாச்சாரத்தில் முஸ்லிம்கள்தான் முதலிடம். இதையும் சச்சார் கமிஷன் தெளிவாக சொல்கிறது. இன்று சுமார் ஐந்து லட்சம் முஸ்லிம்கள் அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக அஸ்ஸாமில் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இப்போது நாடு முழுமைக்கும் தேசிய குடியுரிமை சட்டம் கொண்டுவரப்படும் என்கிறார்கள். இது இந்தியாவில் உள்ள நிலைமை, மற்ற உலக நாடுகளிலும் இதே நிலைமைதான். அதை இங்கே விரிவாக பேச இயலாததால் அதை இங்கே விவாதிக்கவில்லை. ஆனால் நம்முடைய கடந்த 14 நூற்றாண்டு கால சரித்திரத்தை சற்று பின் நோக்கி பார்ப்பது நமது கட்டாயமாகிறது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டுகளில் ஆரம்பித்து பதினேழாம் நூற்றாண்டு வரை (அதாவது நபியவர்கள் மறைந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள்)
ஓமானில் தொடங்கி ஏன், இன்றைய ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உட்பட முழு அரேபியா தீபகற்பம்.
ஐரோப்பாவில் துருக்கி, ஸ்பெயின், பிளவுபடாத யுகொலோவாஸ்கியா, கொசோவா, ஹீர்ஜிவேனியா முதலியன.
ஆப்பிரிக்காவில் எகிப்து, துனி´யா, மொரோக்கோ, சூடான், நைஜீரியா மற்றும் இன்னும் பல நாடுகள்.
சைனாவில் ஜின் ஜியாங் மாகாணம் மற்றும் மங்கோலியா. முழு இந்தியா, பர்மா, நேபாளம் ஆப்கானிஸ்தான் உட்பட தூர கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, புருணை போன்ற நாடுகள் என்று உலகின் முக்கால்வாசி பகுதிகளை சுமார் பத்து நூற்றாண்டுகள் ஆண்டவர்கள் முஸ்லிம்கள் வெறும் ராணுவ வெற்றிகள் மட்டும் அல்ல. ஐரோப்பாவின் 18ம் நூற்றாண்டின் தொழில் புரட்சிக்கு காரணமான விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் அனைத்திற்கும் முன்னோடியான கணிதம், ரசாயனம், பெளதீகம், மருத்துவம் போன்ற துறைகளில் பெரும் ஆராய்ச்சிகள் செய்து அறிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி ஐரோப்பியர்களுக்கு தொழில் புரட்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர்கள் அவர்கள்.
ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உலகையே கட்டி ஆண்ட முஸ்லிம்கள் தங்களுடைய கடைசி உதுமானிய பேரரசையும் இழந்தார்கள். பெயரளவில் இருந்த கிலாபத்தும் அதாவது உலக முஸ்லிம்களின் மத மற்றும் அரசியல் தலைமை வீழ்ந்தது. 1967இல் பைத்துல் முகத்தசும் பறிபோனது இன்று சுமார் ஐம்பத்து எட்டு முஸ்லிம் நாடு கள் இருந்தும் திராணியற்றவர்களாக யூத, கிறிஸ்துவ மேலைநாடுகளின் அடிமைகளாக அவை ஆகிவிட்டன. அவர்களுக் கிடையில் தீராத பகை. சிரியா பற்றி எரிகிறது. ஏமனில் பட்டினியாலும், குண்டு வீச்சிலும் கொத்து கொத்தாக மக்கள் மடிகிறார்கள். ஈராக்கும், லிபியாவும், ஆப்கானும் ஏற்கெனவே ஜேயோநிஸ்ட்களிடம் (அதாவது யூத கிறிஸ்துவ ஆதிக்க சக்திகளிடம்) வீழ்ந்துவிட்டன. பாலஸ்தீனியர்கள் திறந்த வெளி சிறையில் இஸ்ரவேல் இராணுவத் தின் துப்பாக்கி நிழலில் வாழ்ந்து கொண்டு அல்ல செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கு ஏன் இந்த நிலைமை?
பத்ரிலும், உஹதிலும், ஹுனைனிலும் முஸ்லிம்களுடன் இணைந்து போரிட அல்லாஹ் மலக்குகளை ஆயிரக்கணக்கில் கண்கூடாக இறக்கி உதவி செய்ததாக குர்ஆனிலும், ஹதீஃத்களிலும் நாம் பார்க்கிறோம். அப்படி உதவி செய்த அல்லாஹ் சில நூற்றாண்டுகளுக்கு பின்பு நடந்த போர்களில் ஏன் உதவி செய்யவில்லை? இன்னும் ஒருபடி மேலே போய் முஸ்லிம்களை தண்டிக்கும் விதமாக எதிரிகளுக்கு உதவி செய்தானே என்ன காரணம்? 1967இல் நடந்த அரபு இஸ்ரேல் போரில், இஸ்ரேலிய யூதர்களைவிட காலாட்படையாலும், ராணுவ டாங்கிகளாலும், போர் விமானங்களாலும் எண்ணிக்கையில் மூன்று மடங்கு பெரிய ஏழு அரபு நாடுகள் சேர்ந்த அரபு கூட்டுப் படைகளுக்கு எதிராக அல்லாஹ் யூதர்களுக்கு உதவி செய்து வெற்றியையும் கொடுத்தானே. என்ன காரணம்?
நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் சகோதரர்களே!
ஆறாம் நூற்றாண்டு வரை சரித்திரமே இல்லாத, எதற்கும் லாயக்கில்லாத மூடர்களும் வம்பர்களுமான அந்த காட்டரபிகள் வெறும் 25 ஆண்டுகளில் நாம் மேலே கண்ட வாறு உலகையே ஆள தகுதி பெற்றது எப்படி? அதுதான் ரசூலுல்லாஹ் காட்டித்தந்த அந்த வெற்றி பார்முலா, பின்பு நம்மிடம் ஆள் பலம், பணபலம், ஆட்சி, அதிகாரம் என்று எல்லாம் இருந்தும் நமக்கு தோல்வியும், இழிவும் வருவதற்கு காரணமான நாம் மறந்த அந்த பார்முலா! நாம் இன்று அல்லாஹ்வின் பார்வையில் இருந்து வீழ்ந்து விட்டோம். நமது இந்த நிலைமையை அல்லாஹ் குர்ஆனில் எச்சரிக்கை செய்து முன் அறிவிப்பு செய்கிறான். ஒரு வசனம் இவ்வாறு சொல்கிறது.
உங்களுக்கு மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்கு கீழிருந்தோ வேதனையை உங்களுக்கு அனுப்புவதற்கும் உங்களை பல குழுக்களாக ஆக்கி, சிலரின் கொடுமையை உங்களில் சிலருக்கு சுவைக்கச் செய்யவும் அவன் ஆற்றலுடையவன் என்று நீர் கூறுவீராக! அவர்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு வசனங்களை நாம் எப்படி தெளிவுபடுத்துகிறோம் என்று பார்ப்பீராக! (குர்ஆன்: 6:65)
அல்லாஹ் எச்சரித்தது போன்று மேலே சொன்ன குர்ஆன் வசனங்கள் வரிக்கு வரி நம் கண் முன்னே நடைபெற்றுக்கொண்டு இருக்கிறதா? இல்லையா?
நம் முன்னோர்களான சஹாபாக்கள் ஆசாபாசங்கள், உலக தேவைகளான வியாபாரம், குடும்பம், சமூக வாழ்வு என்று எல்லா வகையிலும் நம்மை போன்றவர்கள் தான் இன்னும் சொல்லப்போனால் நம்மை விட எண்ணிக்கையில் குறைவானவர்கள், விஞ்ஞான முன்னேற்றம் இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்கள். நம் போன்று வாழ்க்கை வசதி பெறாதவர்கள். ஆனால் ராணுவ பலத்தால் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு மிகமிக அசுரபலம் வாய்ந்த ரோமானிய, பாரசீக மற்றும் பைஜாண்டிய பேரரசுகளை அல்லாஹ் சஹாபாக்கள் காலடியில் ஆக்கி அவர்களுக்கு இவர்களை ஆட்சியாளர்களாக்கினான். இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது?
அவர்களிடம் இருந்த நம்மிடம் இப்போது இல்லாதவைகள் என்னென்ன? நாம் சற்று சிந்திக்க வேண்டிய நேரமிது! அவைகள்….
மறுமை வாழ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் அதன் மீது பேராசையும் அவர்கள் கொண்டிருந்தார்கள்.
உலக வாழ்வை, மறுமை வாழ்வை சம்பாதிக்கக்கூடிய ஒரு வழியாக, கருவியாக பார்த்தார்கள். வாழ்வின் எல்லா நிலைகளிலும், குர்ஆனையும், நபிவழியையும் பற்றிப் பிடித்தார்கள்.
நமது நிலைமை எப்படி இருக்கிறது?
மறுமை வாழ்வை ஈமான் கொண்டதாக வெறும் நாவால் கூறிக்கொள்கிறோம். அதன் முக்கியத்துவம் நம் உள்ளத்தில் சிறிதுமில்லை. நம் உள்ளங்கள் யாவும் இம்மை வாழ்வால் நிரம்பி வழிகின்றது. நம்முடைய ஆசைகள், கனவுகள், எதிர்கால திட்டங்கள் எல்லாமே இவ்வுலக வாழ்க்கையாகவே இருக்கின்றது. நம் முதல் ஜமாத்தான சஹாபாக்களின் தியாகம், வீரம், சாதனைகள் எல்லாம் நமக்கு பழங்கதைகளாகிவிட்டன. நாம் குர்ஆனை விட்டும் நபியின் வழிமுறைகளை விட்டும் வெகு தூரமாகிவிட்டோம்.
நெறிநூல் குர்ஆன் அரபு மொழியில் இருப்பது நமக்கு மிக பெரிய பாரமாகிவிட்டது. ஆனால் உலக வாழ்விற்காக ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் நம் பிள்ளைகளை படிக்க வைப்பது மிக முக்கியமானதும், சிரமமில்லாததுமாகும் என்பது நம் எண்ணம். நெறிநூல் அரபியில் இருப்பதால் அதை பட்டுத் துணியில் சுற்றி பீரோவில் வைத்து விடுகிறோம். நல்லது கெட்டதுகளுக்கு ஆலிமோ மோதினாரோ வந்து பாத்திஹாவும், யாசீனும் ஓதிவிட்டு போய் விடுகிறார்கள். அப்புறமென்ன? என்று இருக்கிறோம் அல்லாஹ் குர்ஆனை பற்றி பிடியுங்கள். அதை சிந்திக்க மாட்டீர்களா? அதை விளங்கிக் கொள்ளமாட்டீர்களா? என்று நமக்கு மீண்டும் மீண்டும் கட்டளையிட்டு இருக்க நாம் அதை முற்றாக மறந்து அதற்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதவாறு கவனமாக பார்த்துக் கொள்கிறோம்.
இதில் வினோதமான ஆனால் வேதனையான உண்மை என்னவென்றால் நாமோ இம்மை இம்மை என்று அலைகிறோம். ஏதோ கொஞ்சம் இம்மையும் கிடைக்கிறது. ஆனால் அதில் கெளரவமும், அந்தஸ்தும் இல்லை, இழிவும், ஏழ்மையும் தான் தாண்டவமாடுகிறது. மறுமையும் முற்றாக பாழாகிறது.
இந்த சமயத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தை நம் கவனத்தில் கொள்வது அவசியம். அதாவது முஸ்லிம் சமுதாயம் அதன் மறுமை கொள்கை கோட்பாடுகளை விட்டு விலகி ஆள், பணம், செல்வாக்கு இவைகளில் நம்பிக்கை வைத்து பொறாமைப்பட்டு அதன் காரணமாக பிளவுபட்டு, ஆணவம் கொண்டு அநியாயம் செய்ய தலைப்பட்டால் என்ன நடக்கும் என்பதை பனி இஸ்ராயில்களுக்கு ஏற்பட்ட நிலைமையை காட்டி நம்மை அல்லாஹ் எச்சரிக்கிறான்.
பனி இஸ்ராயில்கள் நபி மூசா (அலை)வை பின்பற்றிய நெறிநூல் கொடுக்கப்பட்ட முஸ்லிம்களாக இருந்தனர். நபி மூசா(அலை)வுக்கு பின்பு வழி தவறி அக்கிரமம் செய்ய தலைப்பட்டார்கள். அல்லாஹ் அவர்களை எதிரிகளை ஏவிவிட்டு தண்டித்தான் அவர்கள் ஊர்களும், புனிதமான பைத்துல் முக்கதுசும் சூறையாடப்பட்டது. பின்பு அவர்களை மீண்டும் பலமிக்கவர்களாகவும் பல்கி பெருகவும் உதவி செய்தான். அவர்கள் மீண்டும் குழப்பம் செய்தனர். அல்லாஹ்வும் அவர்களை மீண்டும் தண்டித்தான். அதைத்தான் சூரா பனி இஸ்ராயில் வசனம் 7ல் கீழ்கண்டவாறு அறிவித்தான்.
நீங்கள் நன்மை செய்தால் உங்கள் ஆன் மாக்களுக்கே நீங்கள் நன்மை செய்கிறீர்கள். நீங்கள் தீங்கு செய்தால் அதுவும் உங்கள் ஆன்மாக்களுக்கே, இரண்டாவது வாக்குறுதி வந்தபோது உங்களது முகங்களை இழிவுபடுத்தவும், முதல் தடவை அல் அக்சா பள்ளியில் எதிரிகள் நுழைந்தது போன்று அதில் மீண்டும் நுழைவதற்காகவும், அவர்கள் ஆக்கிரமித்ததை முழுமையாக அழித்தொழிப்பதற்காகவும் (எதிரிகளை உங்கள் மீது சாட்டினோம்)
மேலே கண்ட நெறிநூல் வசனத்தில் நமக்கு தெளிவான எச்சரிக்கையும், இன்றைய கால கட்டத்திற்கு பொருத்தமான படிப்பினையும் இருக்கிறது சகோதரர்களே.
சஹாபா பெருமக்கள் மறுமை மறுமை என்று போராட்ட வாழ்வு வாழ்ந்தார்கள். அவர்களிடம் இம்மை தாழ்வாக வந்து காலடியில் கிடந்தது,
மறுமையும் வெற்றியாகிவிட்டது. மறுமையை உறுதியுடன் நம்பி இம்மையில் போராட்டத்துடன் வாழ்ந்தால் இம்மையும், மறுமையும் ஒருசேர கிடைக்கும். இம்மைக்காக மட்டுமே வாழ்ந்தால் இம்மையும், இழிவானதாக மாறும். மறுமையும் பாழாகிவிடும். இதுதான் நாம் அவர்களிடம் இருந்தும் நம் கடந்த கால வரலாறுகளில் இருந்தும் பெரும் வாழ்க்கை பாடம்.
இதுதான் குர்ஆன் காட்டித்தரும் வெற்றி பார்முலா :
மேலே செல்வதற்கு முன்பு குர்ஆனை பற்றி சுருக்கமாக நாம் சிறிது ஆராய்வது நல்லது குர்ஆன் வஹியாக ரசூலுல்லாஹ் மூல மாக நமக்கு கிடைத்து. அது இறைவனு டைய சொல் என்பது நாம் அறிந்தது தான். ஆனால் அதன் செய்தி அல்லது கருப்பொருள் என்ன என்பதை நாம் அறிந்தாக வேண்டும். அது தரும் ஒற்றை வரிச் செய்தி மறுமையும், அதன் விசாரணையும், அதன் அடிப்படையில் ஏற்படும் முடிவுற்ற மகத்தான வாழ்க்கையும் தான் அதை இறைவன் பிற்படுத்தி இருக்கிறான். அது ஒரு நாள் வந்தே தீரும். அதில் எந்த சந்தேகங்களும் இல்லை. அதை ஏற்று உறுதியுடன் நம்பிக்கை கொண்டவன் முஸ்லிம். அதாவது அடிபணிந்தவன் அதை ஏற்காதவன், நிராகரித்தவன் அதாவது இறை மறுப்பாளன் இந்த கருப்பொருளை சுற்றித்தான் குர்ஆனுடைய அத்தனை ஆயத்துக்களும் பேசுகிறது.
அறிவுப்பூர்வமாக சிந்தித்தால் மறுமை இருந்தாக வேண்டும் என்பது நமக்கு எளிதாக விளங்கும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயனுள்ளவையாக படைக்கப்பட்டு இருக்க மனிதன் மட்டும் நோக்கமில்லாமல் படைக்கப்பட்டு இருப்பானா? நிச்சயமாக இல்லை.
இதை வேறொரு கோணத்தில் சிந்தித்து பாருங்கள். அதாவது இந்த உலக வாழ்க்கையில் நன்மை செய்தவன் அதன் பலனை பல சந்தர்ப்பங்களில் அனுபவிக்காமலேயே இறந்து விடுகிறான். அநியாயம் செய்தவனும் செய்த குற்றத்திற்கு தண்டனை பெறாமல் இறந்தும் விடுகிறான். ஆக நிலைமை சமன்பாடு அடைய வேறொரு தீர்ப்பு வழங்குமிடம் கட்டாயம் இருந்தாக வேண்டுமல்லவா?
பொதுவாக புறப்பார்வை மட்டுமே கொண்ட எந்த மனிதனுக்கும், மறுமை வாழ்வை அடிப்படையாக கொண்ட இந்த வெற்றி பார்முலாவை நம்புவது சற்று கடினம்தான். அந்த அரபுகளுக்கும் அதை நம்புவது பெரிய கஷ்டமாகத்தான் இருந்தது. நாம் இறந்து நம் உடல் மண்ணோடு மண்ணாக மக்கிப்போய் பல நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் உயிரோடு எழுப்பப்படுமா? அது சாத்தியமா? என்று மனிதனின் பொது அறிவும் கேட்கிறது. மக்காவாசிகளும் இதையே கேட்டார்கள். இதற்கு அல்லாஹ் ஆணித்தரமாக குர்ஆனில் பதில் தந்துள்ளான்.
அதாவது எந்த பொருளாகவும் இல்லாதவனாக மனிதன் சில காலங்களுக்கு முன்னர் இருக்கவில்லையா? பின்பு இந்திரிய துளியாக சில காலமும் பின்பு தாயின் கருவரையில் ரத்த கட்டியாக சில காலமும், பின்பு மாமிச பிண்டமாக பின்பு முழுமையான குழந்தையாக அவனை நாம் உருவாக்கவில்லையா? அதே போல் இறந்தவனை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப நாம் சக்தி பெற்றவர்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறுகின்றான். இந்த அதிசயத்தை மனிதன் மறுமையில் நிச்சயம் தன் புறக்கண்ணால் காண்பான். ஆனாலும் நாம் சிந்திப்பதற்காக இறைவன் இதை இப்பவும் நம் கண் முன்னே நடத்தி காட்டிகொண்டுதான் இருக்கிறான்.
அதாவது மழைக்காலங்களில் நாம் ஈசல்களை பார்க்கிறோம், மழை பெய்தவுடன் நூற்றுக்கணக்கில் அல்லது சில சமயம் ஆயிரக்கணக்கில் அவை படை எடுக்கின்றன. சில மணி நேரத்தில் இறந்தும் போகின்றன. மழைக்கு முன்பு அவை இந்த காய்ந்த புழுதி மண்ணில் எங்கிருந்தன? மழை பெய் ததும் அதற்கு தலை உடம்பு கால்கள், சிறகுகள் என்று அது முழு ஈசலாக உருவெடுத்தது எவ்வாறு? நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் சகோதரர்களே! இந்த அதிசயத்தை நம் கண் முன்னே நிகழ்த்திக்காட்டும் இறைவனால் மறுமையில் நம்மை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்ப நிச்சயம் முடியும்.
நபியவர்கள்(ஸல்) தனது 23 வருட அழைப்புப் பணி வாழ்வில் முதல் 13 வருடங்களை மக்களிடம் இந்த மறுமையை பற்றிய நம்பிக்கை உறுதிப்படுவதற்காகவே செலவிட்டு இருக்கிறார்கள் என்றால் இதன் முக்கியத்துவம் விளங்கும். இந்த 13 வருடத்தில் நோன்போ, தொழுகையோ, ஜக்காத்தோ, ஜிஹாதோ இன்னும் மற்ற மற்ற கடமைகளோ பேசப்படவே இல்லை.
குர்ஆன் வசனங்களும் மறுமையை பற்றி மட்டும் விவாதிப்பதாகவே இறங்கின. நபியவர்களின் உழைப்பில் உருவான அந்த முதல் முஸ்லிம் ஜமாஅத்துதான் நமக்கு நாற்றங்கால் போன்றவர்கள் அவர்களின் ஒரே பலம் அவர்களுடைய அந்த ஈமான். அந்த நம்பிக்கை அந்த மறுமையைப் பற்றிய உறுதி அடுத்த பத்தாண்டுகளில் படிப்படியாக மற்ற கடமைகளை அல்லாஹ் ஒவ்வொன்றாக வஹியாக அறிவித்தான். அதை செயல்படுத்துவதில் அவர்களுக்கு எந்த தயக்கமோ, சடைவோ ஏற்படவில்லை. உலகம் உள்ளவரை யாராலும் மிஞ்ச முடியாத சாதனைகளை படைத்தார்கள். இன்று வரை அவர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்து கொண்டு பல மடங்கு பெரிய ராணுவங்களை சிதறடித்து பெற்ற வெற்றிகள் வேறு யாராலும் நினைத்துப் பார்க்க கூட முடியாது. அவர்கள் ஆண்ட நிலப் பரப்புக்கள் போன்று வேறு எந்த சாம்ராஜ்யமும் பெற்றிருக்கவில்லை. இன்றளவும் அவர்களை போன்று நீதியும், நேர்மையும் மிக்க ஆட்சியாளர்களை, மனிதாபிமானம் மிக்கவர்களை உலகம் இதுவரை கண்டதில்லை.
நம்மிடம் இன்றுள்ள பிரச்சனை என்னவென்றால் நம் உள்ளங்களில் ஈமான் அல்லது மறுமையை பற்றிய நம்பிக்கை ஏனோதானோ என்று இருக்கிறது. ஆனால் மறுமையை வெளிப்படையாக நாம் மறுப்பதும் இல்லை, அதேசமயம் அதற்காக எந்த முயற்சியோ, உழைப்போ செய்வதும் இல்லை. நமக்கு ஏற்கெனவே சொன்னது போன்று உலக தேவைகளை நிறைவேற்றவே நேரம் போதவில்லையே. அதனால் ஈமானுடைய கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத் நன்மையை ஏவி தீமையை தடுத்தல் போன்றவற்றிற்கு நம்மிடம் எந்த முக்கியத்துவமும் இல்லை. மொத்தத்தில் மறுமையை நிராகரிப்பவன் வாழ்வு போன்றுதான் நம் வாழ்வும் இருக்கிறது. நம்மில் சுமார் பத்து அல்லது இருபது சதவீதம் பேர் ஐவேளையும் தொழும் தொழுகையாளிகளாக உள்ளனர். மற்றவர்கள் தொழுகையை தொடர்ச்சியாக விடுவதன் மூலம் இஸ்லாத்திலிருந்தே வெளியேறியவர்களாக உள்ளனர். இந்த தொழுகையாளிகளில் பலர் தங்களுடைய கொடுக்கல் வாங்கல், குடும்ப உறவுகளை பேணுதல் போன்ற விஷயங்களில் இஸ்லாத்தை பேணுவதாக இல்லை. இந்த நிலமைக்கு காரணம் நாம் மறுமையை நம்ப வேண்டிய அளவு நம்பாமல் இருப்பதுதான். இதுதான் நம்முடைய எல்லா தோல்விகளுக்கும் ஆணிவேர்.
உலக வாழ்வை அளவுகடந்து நேசிப்பதால் ஏற்படும் மற்ற தீமைகளை பாருங்கள். மறுமையை நம்பாத மற்றவர்கள் போல் நாமும் சிந்திக்கிறோம், செயல்படுகிறோம். 24 மணி நேரமும் அவர்களை ஒத்த வாழ்க்கையே வாழ்கிறோம். மத்ஹபுகள் என்றும் இயக்கங்கள் என்றும் நாம் இன்று பல பிரிவுகளாகிவிட்டோம். நமக்குள் போட்டி, பொறாமை, மோதல் என்று கொலை வரை போய் விடுகிறது. ஆனால் நாம் நமக்குள் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளாத வரை நாம் ஈமான் கொண்டவர்களாகவே ஆக முடியாது என்று நபிகள் சொன்னதை மறந்து விட்டோம். நாம் இஸ்லாத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகிப் போய் நிற்கிறோம் என்பதை சற்று சிந்தியுங்கள்.
இன்று நம்மிடையே காணும் பல பிரிவுகளுக்கும் காரணம் தனிப்பட்டவர்களுக்கிடையில் உண்டான போட்டியும், பொறாமையும் தான் கொள்கைகளோ, செயல் திட்டங்களோ உண்மையான காரணங்கள் அல்ல. இவ்வாறு நாம் பிளவுபட்டது, நாம் நேர்வழியில் இருந்து மாறிப் போனதால் அல்லாஹ்வின் சோதனை அல்லது தண்டனை என்பதை கீழே காணும் குரான் வசனத்தின் மூலமாக அறிந்துகொள்ள கடமைப்பட்டு இருக்கிறோம். மார்க்கத்தில் பிரிவினை உண்டாக்குவது இணை வைப்புக்கு அடுத்த கொடிய பாவம் என்பதை கீழே கண்ட குர்ஆன் வசனங்கள் நமக்கு எச்சரிக்கை செய்கின்றன.
- நிச்சயமாக உங்களது இந்த சமூகம் ஒரே சமூகம் தான், நானே உங்களது இரட்சகன். எனவே என்னையே அஞ்சி நடந்து கொள்ளுங்கள். பின்னர் அவர்கள் தமது மார்க்க விஷயத்தை நமக்குள் பல பிரிவகளாக பிரிந்து விட்டனர். ஒவ்வொரு பிரிவாரும் தம்மிடம் உள்ளதை கொண்டு மகிழ்கின்றனர். (23:52,53)
- எவர்கள் தமது மார்க்கத்தை பிரித்து பல பிரிவுகளாகவும் ஆனார்களோ அவர்களின் எந்த விஷயத்திலும் நபியே நீர் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டு இருந்தது பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான். (6:159)
- நிச்சயமாக உங்களது இந்த சமூகம் ஒரே சமூகம் தான், நானே உங்களது இரட்சகன். எனவே என்னையே வணங்குங்கள். பின்னர் அவர்கள் நமது மார்க்க விஷயத்தில் நமக்குள் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே திரும்பி வரக்கூடியவர்கள். (21:92,93)
- எவர்கள் தமது மார்க்கத்தை பிரித்து பல பிரிவுகளாகவும் ஆனார்களோ, அவர்களில் நீங்கள் ஆகிவிட வேண்டாம். ஒவ்வொரு பிரிவாரும் தம்மிடம் உள்ளதை கொண்டு மகிழ்கின்றனர். (30:32)
- மார்க்கத்தை நிலைநாட்டுங்கள், அதில் பிரிந்து விடாதீர்கள். (42:13)
- தெளிவான சான்றுகள் தம்மிடம் வந்த பின்னரும் கருத்து முரண்பட்டு பிரிந்து விட்டவர்கள் போல் ஆகிவீடாதீர்கள். அவர்களுக்கு கடும் தண்டனை உண்டு. (3:105)
பிரிந்து போவது சம்பந்தமாக ஏராளமான ஹதீஃதுகளும் உள்ளன. அவைகள் அனைத்தையும் இங்கு குறிப்பிட இயலாது. ஆகையால் ஓரிரு ஹதீஃத்களை குறிப்பிடுகிறேன்.
- அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள் உங்கள் முன் வாழ்ந்த சமுதாயத்தினர் பிரிந்தார்கள். அதனால் அழிந்தார்கள்.
- இந்த சமுதாயத்தின் அழிவை இதற்குள்ளேயே அல்லாஹ் வைத்துள்ளான். (அழிவு வெளியிலிருந்து வராது)
- இந்த சமுதாயம் எழுபத்து மூன்று கூட்டங்களாக பிரியும் அதில் ஒரு கூட்டம் தவிர அனைவரும் நரகத்துக்கே செல்வார்கள்.
- மூமீன்கள் ஒரே உடலை போன்றவர்கள் பொறாமைப் படாதீர்கள். முதுகுக்கு பின் பேசாதீர்கள், பகைமை கொள்ளாதீர்கள், சகோதரர்களாக அல்லாஹ்வின் அடியார்களாக ஆகி விடுங்கள்.
- என் உயிர் எவன் வசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவனம் செல்லமுடியாது. ஒருவரையயாருவர் நேசிக்கும் வரை ஈமான் கொண்டவர்களாக முடியாது. நீங்கள் எதை செய்தால் ஒருவரை ஒருவர் விரும்புவீர்களோ அதை உங்களுக்கு சொல்லி தரட்டுமா? உங்களிடையே ஸலாமை பரப்புங்கள்.
நம்முடைய பிரதான பிரச்சனைகளாக அல்லது நம்முடைய தோல்விகளுக்கும் இழிவிற்கும் காரணமான இரண்டு விஷயங்கள் மேலே விவாதிக்கப்பட்டுள்ளது. ஒன்று மறுமை வாழ்வை பற்றிய உறுதி இல்லாத நம்பிக்கை, இரண்டாவதாக நமக்குள் உள்ள பிரிவினை இப்போது அந்த இரண்டையும் எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நம் ஈமானை எவ்வாறு பலப்படுத்துவது?
நம் ஈமான் பலப்பட ஒரே வழிதான் உள்ளது. அதாவது மறுமை வாழ்வின் செய்திகளையே தன் மொத்த கருத்தாக கொண்ட நம் நெறிநூல் குர்ஆனுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது தினமும் சுமார் நாற்பது நிமிடங்கள் குர்ஆனுக்காக ஒதுக்குவதா? அதுதான் நமக்கு சாத்தியமில்லையே, அது அரபியில் அல்லவா இருக்கிறது என்று நினைக்காதீர்கள். அது நம் தாய்மொழி தமிழிலும் எளிய நடையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு கடைகளில் கிடைக்கிறது. அதை வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி குர்ஆன் பிரதிகள் வீட்டில் இருக்க வேண்டும். அதை ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது சுமார் நாற்பது நிமிடங்கள் ஒதுக்கி சுயமாக படிக்க வேண்டும். அதில் புரியாத தத்துவங்கள் பேசப்படவில்லை. அடிப்படையான விஷயங்கள் எளிய நடையில் திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளது. அதை இறைவன் மிக எளிதானதாக ஆக்கியிருப்பதாக அவனே குர்ஆனில் பல இடங்களில் சொல்கிறான்.
ஆகவே நிச்சயம் நமக்கு அது எளிதாக புரியும். நீங்கள் இதை செய்து பாருங்கள். பேட்டரி ரீச்சார்ஜ் செய்வது போன்று நம் ஈமான் வலுப்பெறும். இதை தனியாகவோ அல்லது நான்கு அல்லது ஐந்து சகோதரர்கள் இணைந்து கூட்டாகவோ செய்யலாம். அதன் மூலம் அறிந்தவர் அறியாதவருக்கு கற்றுக் கொடுக்கலாம். சந்தேகங்கள் களையப்படலாம்.
முதலில் இஸ்லாம் என்பது இரண்டு தூண்களில் நிறுவப்பட்டுள்ளது ஒன்று நெறி நூல் குர்ஆன், மற்றது ரசூலின் சொல், செயல் நடைமுறை என்பதை நாம் சந்தேகம் இல்லாமல் மனதில் கொள்ளவேண்டும். நம் செயல்கள் நன்மையா? தீமையா? என்பதை இந்த இரண்டு அளவுகோல்களை வைத்தே முடிவு செய்ய முடியும். நாளை மறுமையிலும் அல்லாஹ் இந்த இரண்டை வைத்தே நம் செயல்கள் நன்மையா அல்லது தீமையா? என்று தீர்ப்பு செய்வான். ஆக நம் தனியான அல்லது கூட்டான செயல்கள் அனைத்தையும் நமக்கு நாமே சீர்தூக்கிப் பார்த்து சேர்க்க வேண்டியதை சேர்த்து தள்ள வேண்டியதை தள்ளி நமது இஸ்லாத்தை ஆரோக்கியமானதாக ஆக்குவோம்.
இதில் நம்மை நரகின் பக்கம் இட்டுச் செல்லும் இணைவைத்தல் என்னும் ஷ´ர்க் நம்மிடத்தில் பல வழிகளில் ஊடுருவியுள்ளது. அதில் முக்கியமாக கப்ர் வழிபாடு கடுமையான பிரச்சாரத்திற்கு பின்பு கூட குறைந்திருக்கிறதே தவிர ஒழியவில்லை. குறிப்பாக பெண்களிடத்தில் புதிய நடைமுறைகளான நபி பிறந்த தின கொண்டாட்டங்கள், சந்தனக்கூடு, உரூஸ் போன்ற அனாச்சாரங்கள், மத்ஹபுகளை கண்மூடித்தனமாக பின்பற்றிக் கொண்டு நம் இபாதத்துக்களான தொழுகை, நோன்பு ஹஜ் போன்றவைகளில் நபிவழிக்கு மாற்றமான புதுமைகள் என்று நம்மை வழிகேட்டில் தள்ளி விடும் செயல்கள் அனைத்தையும் கைவிடுவோம்.
இவைகள் நாம் தள்ளவேண்டிய விஷயங்கள் சேர்க்க வேண்டிய விஷயங்களில் முதன்மையானது தொழுகை. நாம் தொழுகிறோம். ஆனால் அதை நிலைநிறுத்துகிறோமா? என்றால் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டிய துயரமான நிலை இரண்டுக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.
சகோதரர்களே! இரவும், பகலும் கொண்ட ஒரு நாளில் நாம் ஐவேளை தொழுகைகளை மரணம் வரை தொடர்ந்து கடைப்பிடிப்பது சுத்தமாக இருத்தல், தொழுகையை அதன் நேரத்தில் தொழுவது, ருக்கு, சஜதாவை முறையாக செய்வதுடன் ஓதவேண்டிய திக்ருக்களை மனனம் செய்து அதன் அர்த்தம் விளங்கி ஓதுவது போன்றவைகள்தான் தொழுகையை நிலைநிறுத்துதல் ஆகும். இமானுக்கு பின் தொழுகையை பற்றித்தான் முதலில் கேள்வி கணக்கு கேட்கப்படும் என்று ஹதீஃத்கள் நமக்கு தெளிவாக்குகின்றன. நம்முடைய அன்றாட தேவைகளை முதலில் அல்லாஹ்விடம் தொழுகை மூலம் முறையிட்டுவிட்டு பின்பு நம் முயற்சியை கொண்டு அதை தீர்க்க முற்படலாம்.
இரண்டாவதாக நம்மிடையே இருக்கும் பிரிவினைகளை எவ்வாறு களைவது என்று பார்ப்போம்.
பிரிவினைகளை இரண்டு வகைகளாக பிரித்து நாம் ஆராயலாம். ஒன்று அரசியல் சாராதது மற்றது அரசியல் சார்ந்தது. முதல் வகையான அரசியல் சாராத பிரிவுகளில் சில ஜமாஅத்துக்கள், மத்ஹபுக்கள், தரீகாக்கள் உள்ளன. இவைகளில் மத்ஹபுகள், தரீக்காக்களை பொறுத்தவரை சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு யாரோ சிலரால் சான்றோர்களின் பெயரால் உருவாக்கப்பட்டு அதை விடாப்பிடியாக சில வழிதோன்றல்கள் நம்முடைய முன்னோர்கள் பயபக்தியாளர்கள் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், நாமோ மிக மிக பின்னால் வந்தவர்கள் நம்மை விட அவர்களே மார்க்கத்தை நன்கு கற்று உணர்ந்தவர்கள் அவர்களை பின்பற்றுவது தான் சரியான மார்க்கம் என்றும் அதை விட்டு சிறிதும் மாற்றமின்றி செயல்படுவது தான் வெற்றிக்கு வழி என்றும் செயல்படு கிறார்கள்.
ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விடுகி றார்கள். அதாவது இவர்களின் இந்த முன்னோர்களுக்கும் முந்தியவர்கள் சஹாபாக்கள் பின்பற்றியது குர்ஆன், ஹதீஃதை மட்டும் என்பதை இவர்கள் சிந்திப்பது இல்லை. குர்ஆன், ஹதீஃத் வழிமுறைகளுக்கு மட்டும் தான் அல்லாஹ் மற்றும் ரசூலின் அங்கீகாரம் உள்ளது. ஆக நாம் மறுமையின் விசாரணையில் வெற்றி பெற ரசூலுல்லாஹ்வால் நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்ட முதல் முஸ்லிம் ஜமாஅத்தான சஹாபாக்கள் அவர்கள் பின்பற்றிய குர்ஆன், ஹதீஃதைப் பின்பற்றுவதை தவிர நமக்கு இப்போதும், எப்போதும் வேறு வழி இல்லை.
இடையில் புகுந்த ஷிர்க்குகளும், பித்அத்துக்களும் நம்மை நரகில் கொண்டு தள்ளாமல் விடுவதில்லை. இதில் மத்ஹபுகளைப் பற்றி சில விஷயங்களை சொல்லியாக வேண்டும். அதாவது இங்கு பிரிவினைகள் அதிகாரபூர்வமாக ஆக்கப்பட்டு இதுதான் ஷரியத் சுன்னா என்று போதிக்கப்படுகிறது தனிப்பள்ளி, தனி சட்டம் என்று தீன் கூறுபோடப்படுகிறது. தெளிவான ஹதீஃத் ஆதாரங்களுடன் சுன்னத்தான நடைமுறைகளை நாம் பின்பற்றுவோம் வாருங்கள் என்று கூறினாலும் இல்லை இல்லை நமக்கு நம் உஸ்தாதுகள் சொல்லி தந்தது போதும் என்று மத்ஹப் மதம் பிடித்து நபிவழியை புறக்கணிக்கிறார்கள். தரீக்காவாதிகள் இருக்கும் தர்காக்களை பங்கு போட்டுகொண்டு ஷிர்க்கை விடாப்பிடியாக பரப்பி வருகிறார்கள். இவர்கள் நாளை இறைவனிடம் என்ன பதில் சொல் லப்போகிறார்களோ தெரியவில்லை.
இந்த வகை பிரிவில் இன்னும் சிலர் தங்களை இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்கள் என்றும் அசலான தீனை மக்களிடம் கொண்டு செல்வதாகவும் வாதிட்டு தங்களுக்கென்று தனி கூட்டம் (ஜமாஅத்) சேர்க்கிறார்கள். ஆரம்ப காலத்தில் இவர்கள் உழைப்பும் சமுதாயத்திற்கு ஷிர்க்கையும்’ பித்அத்களையும் கொஞ்சமேனும் களைவதில் பிரயோஜனப்பட்டது உண்மைதான்.
ஆனால் அவர்களின் சுயநல நோக்கங்கள் மக்களிடம் வெகு சீக்கிரத்தில் வெளிப்பட்டு, சாயம் வெளுத்து கால ஓட்டத்தில் காணாமல் போய்விடுகிறார்கள்.
அரசியல் சாராத பிரிவுகளில் தப்லீக் ஜமாஅத்தை பற்றி சிறிது பார்ப்போம். இவர்கள் தப்லீக் ஜமாஅத் என்று பிறரால் அறியப்பட்டாலும், இவர்கள் அதிகாரப்பூர்வமாக இயக்கப் பெயர் எதையும் தனியாக வைத்துக் கொள்ளவில்லை; பைலா, கொடி, சந்தா, செலவுகளுக்கு வசூல் என்றில்லாமல், அவரவர் செலவுக்கு அவரவரே பொறுப்பு என்றும், நிர்வாகிகள் தேர்தல் இல்லாமல் முஸ்லிம் என்ற பெயரிலேயே அரசியல் சாராத பிரிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இஸ்லாத்தின் தூய்மையில் களங்கம் ஏற்படுத்தும் விதமாக சூஃபியிஸ கருத்துக்களைக் கலந்து ஒரு நூதன இஸ்லாத்தை இவர்கள் அறிமுகம் செய்கிறார்கள். குர்ஆன் மற்றும் ஹதீஃத்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
தீனில் ஆர்வமுள்ளவர்கள் குறிப்பாக இளைஞர்கள் இவர்களுடைய உழைப்பு, தியாகம் ஆகியவைகளை பார்த்து அவர்களுடன் சேர்ந்து ஆதரவு கொடுக்கிறார்கள். இவர்களால் பள்ளிகள் ஓரளவு நிரம்புகிறது. இன்னும் சொல்லப் போனால் மக்களிடம் தீன் தூரமாகி ஷிர்க்கும் பித்அத்களும் மலிந்து கிடைக்கையில் பெரும்பாலான ஆலிம்கள் தங்கள் பணி இமாமத் செய்வதை தவிர வேறில்லை என்று ஒதுங்கி நிற்கையில் மக்களிடம் ஈமான், தொழுகை, சுன்னத்துக்கள், நபிகளின் வாழ்க்கை, சஹாபாக்களின் வாழ்க்கை மற்றும் தியாகங்கள் ஆகியவற்றை மக்களிடம் தொடர்ந்து தெரியப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் இவர்கள் தீமைகளை தடுப்பதும் இல்லை, குறிப்பாக கப்ரு வழிபாட்டை தடுப்பதில்லை. மார்க்கத்தில் புகுந்துவிட்ட பல பித்அத்களை வெறுப்பதும் இல்லை.
அவைகளை மறைமுகமாக அங்கீகரிக்கவும் செய்கிறார்கள். சூபியிச கருத்துக்களை வலியுறுத்தும் புத்தகங்கள் முக்கியத்துவத்துடன் படிக்கப்படுகிறது. ஆறு நம்ப ருக்குஅப்பாலும் தீன் இருக்கிறது என்பதை அவர்கள் உணரவேண்டும். பொதுமக்கள் மனம் நோகாமல் நாம் பணி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவர்களால் பெரும் கூட்டங்களை கூட்ட முடிகிறது. ஆனால் மக்களிடம் அது எந்தவித நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்துவதில்லை. இதுவரை அரசியல் சாராத பிரிவுகளை பார்த்தோம்.
இனி அரசியல் இயக்கங்களை பற்றி பார்ப்போம்.
1925ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முஸ்லிம் லீக் ஒன்றுபட்ட இந்தியாவில் ஆங்கிலேயனை எதிர்த்து சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டது. முஸ்லிம்கள் பெரும் தியாகங்கள் செய்தார்கள், மதக்கலவரங்களும் உயிர் மற்றும் பொருள் சேதமும் கண்ணீரும் தான் கண்ட பலன். 1940களில் நாட்டை பிரிக்க வேண்டும் என்ற இந்துத்வா சக்திகள் மற்றும் ஆங்கிலேய சதிகளுக்கு அதனுடைய பின்விளைவுகள் தெரியாமல் துணை போனது முஸ்லிம் லீக் விளைவு? மேற்கு பஞ்சாபையும் கிழக்கு வங்காளத்தையும் தவிர மீதி இடங்களில் வாழும் இந்திய முஸ்லிம்கள் தலைமை இல்லாத அரசியல் அனாதைகள் ஆனார்கள். நம்முடைய இன்றைய நிலைமைக்கு பிரிவினை ஒரு முக்கிய காரணமாக ஆகிவிட்டது. ஹிந்துத்துவாவின் சதித்திட்டம் நிறைவேறியது.
சுதந்திர இந்தியாவில் வட இந்தியாவில் இல்லாவிட்டாலும் தென் இந்தியாவில் சில கட்சிகள் தோன்றி உள்ளன. இவைகளால் எந்த பிரயோஜனமும் சமுதாயத்திற்கு இது வரை இல்லை. இவர்கள் கூட்டணி என்ற பெயரில் ஓட்டுக்காகவும், சீட்டுக்காகவும் ஈமானை அடகு வைக்கும் நிலை பரிதாபம். இதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் நெல் லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டது போன்று சிதறிக்கிடக்கிறார்கள் என்பது மட்டுமில்லை.
ஓட்டு ஜனநாயகம், கட்டுப்பாடற்ற சுதந்திரம் இவைகள் எல்லாம் மனித இனத்தை நாசமாக்கும் நோக்கத்துடன் யூதர்களால் உண்டாக்கப்பட்டதாகும். அதையயாட்டி இந்திய அரசியல் சட்டமும் இந்திய மக்கள் பிரதிநித்துவ சட்டங்களும் உண்டாக்கப்பட்டு ஜனநாயகம் என்ற பெயரில் பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்து. இது ஆதிக்க சக்திகளிடம் பலவீனமான மக்களை அடிமையாக்க வஞ்சகமாக வடிவமைக்கப்பட்டது. உண்மையில் இது பணநாயகம் தான்.
இந்த சட்டங்களின் அடிப்படையில் நடக்கும் தேர்தல்களும் இந்த கேடான நோக்கங்களுக்காகவே நடத்தப்படுகின்றன. நாட்டு நடப்புக்கள் இதற்கு சான்று பகர்கின்றன. கடந்த மக்களவை தேர்தலில் 30 சதமான ஓட்டு வாங்கிய கட்சி ஆட்சியிலும், மீதமுள்ள 70 சதமான ஓட்டு வாங்கியவர்கள் எதிர்கட்சியாகவும் இருக்கும் விநோதத்திற்கும் காரணம். இந்த நியாமற்ற தேர்தல் முறைதான். அதிலும் குறிப்பாக முஸ்லிம் எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் தேர்ந்து எடுக்கப்படவே கூடாது என்பதில் தேர்தல் ஆணையத்தில் இருந்து உள்ளூர் நிர்வாகம் வரை சதியில் ஈடுபட்டு கவனமாக பார்த்துக் கொள்வார்கள்.
இவைகளை எல்லாம் மீறி ஓரிருவர் தேர்வாகிவிட்டால் சமுதாயத்திற்காக அவர்களால் வாயை திறக்கக்கூட முடியாது. இந்த நிலைமையை எவ்வாறு சரி செய்வது? நாம் இந்த ஓட்டு அரசியலை விட்டு தற்காலிகமாகவேனும் ஒதுங்கி இருக்க வேண்டும். ஓட்டுபோட வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. கட்சிகள், போராட்டங்கள், மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நமக்கு எந்த பயனையும் பெற்றுத்தரவில்லை என்பது நிகழ்கால உண்மைகள். இவைகள் குர்ஆன், சுன்னாவிற்று உட்பட்டவையும் அல்ல. நாம் முன்நோக்க வேண்டியது அல்லாஹ்வின் முகத்தை அல்லாஹ்வின் கயிறான குர்ஆனை பற்றிப்பிடிப்பதன் மூலமும், பொறுமையின் மூலமும் அல்லாஹ்வின் உதவியை நாம் நாடுவோம். உதவிகள் வரும் வரை பொறுமை காப்பதை தவிர வேறு வழி இல்லை.
இதுவரை பிரிவினைகளால் சமுதாயம் அடைந்த கேடுகளை தெளிவாக பார்த்தோம். பிரிவுகள் கண்டிப்பாக தடை செய்யப்படவேண்டியவையே. காரணம் அல்லாஹ் அதை ஹராமாக்கி இருக்கிறான். நாம் இப்போது எல்லா பிரிவினைகளையும் விட்டு விலகி நாமே நமது தீனுக்கு பொறுப்பேற்று யாரையும் தரகராவோ, சிபாரிசுக் காரராகவோ எடுத்து கொள்ளாமல் குர்ஆன், ஹதீஃதுகளை முடிந்தவரை நாமே நேரடியாக படித்து விளங்க முற்பட வேண்டும். இதற்காக நாம் ஏற்கெனவே சொன்னது போல தினமும் சுமார் 40 அல்லது 50 நிமிடங்கள் செலவு செய்வோம்.
மறுமையில் நமது கேள்வி கணக்கை நாமே தனியாக எதிர்கொள்ள வேண்டியதுள்ளது என்பதை நினைவில் கொள்வோமாக. நாம் நம் கப்ர் வாழ்க்கையையும் தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் ஒரே உடலின் பல பாகங்கள் என்ற உணர்வு கொள்வோம். தெளஹீத் என்ற ஓரிறை கொள்கையின் பெயரால் நம்மிடையே புகுந்துவிட்ட ஷிர்க்கான பித்அத்களான விஷயங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு பிரிவுகளை களைந்து ஒரே ஜமாஅத்தாக செயல்படுவதற்கு உறுதி ஏற்போம். அதன்படி செயலாற்றுவதற்கு ஆயத்தமாவோம். ஏனென்றால் நமது நிகழ்காலம் மட்டுமல்ல எதிர்காலமும் கார்மேகம் சூழ்ந்து பயமுறுத்துகிறது. அதேசமயம் நாம் ஒரே ஜமாஅத்தாக ஆகிவிட்டால் மீண்டும் உலகம் நம் காலடியில், மறுமையும் இன்ஷா அல்லாஹ் வெற்றியாகிவிடும்.
நாம் ஆற்றவேண்டிய பணிகள் ஏராளம் நமக்காக காத்திருக்கின்றன. அவைகளை நாம் செவ்வனே செய்துமுடிக்க சரியான கொள்கை அடிப்படையிலான ஒற்றுமை இன்றியமையாதது. அந்த காத்திருக்கும் தலையாய பணிகளில் சில.
* நம் ஒவ்வொரு முஹல்லாவிலும் 10ம் வகுப்பு வரை தாய்மொழி மற்றும் ஆங்கிலம், அரபி கற்றுக்கொண்டு, மார்க்க போதனைகளுடனான பள்ளிகளை உருவாக்குவது. இதனால் நம் சந்ததியினரை மாற்று சிந்தனையாளர்களின் கோரப் பிடியில் இருந்து காப்பாற்றலாம். நம் பொருளாதாரமும் கொள்ளை போவது தடுக்கப்படும்.
* பொதுநல திட்டங்களான ஜகாத் வசூல் மற்றம் பங்கிடுதல், கடனுதவி போன்றவற்றை முழுமையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்த முடியும்.
* தேர்தல்களிலும் நாம் நம்முடைய ஒன்றுபட்ட சக்தியை காண்பிக்க முடியும்.
* அழைப்புப் பணியை அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் செய்ய முடியும். இன்னும் பல ஊர் மாவட்டம், மாநிலம் நாடு என்றாகி பின் உலகளவில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட முதல் முயற்சி நம்முடையதாக இருக்கட்டும்.
சிந்திப்போமா? வஸ்ஸலாம்.
***********************************************
இஸ்லாம் சொல்லும் தேசப்பற்று…
இப்னு ஸதக்கத்துல்லாஹ்
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள், மேலும், உங்களில் (ஆட்சி) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் (கட்டுப்படுங்கள்) 4:59
“தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து எதையாவது (கண்டு அதை) வெறுப்பவர், பொறுமையாக இருக்கட்டும்…” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்: 3769
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்து, இன்பத்திலும், துன்பத் திலும் (ஆட்சியாளரை) விரும்பினாலும், சரி, விரும்பாவிட்டாலும் சரி, எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்(டு நாங்கள் ஓரங்கட்டப்பட்)டாலும் சரி (ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு) கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும், அதிகாரத்திலிருப்போருடன் மோதல் போக்கை கையாளக் கூடாது என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் (எந்த நாட்டில் இருந்தாலும்) உண்மையே பேசவேண்டும் என்றும், (வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் மட்டும்தான் என்ற) அல்லாஹ்வின் (உரிமை சம்பந்தப்பட்ட) விஷயத்தில் (மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும், அதனால் ஏற்படும்) பழி(பகை)க்கு பயப்படக்கூடாது என்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்க(ள் எங்களிடம் உறுதிமொழி கேட்டார்கள். அவர்க)ளிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம். முஸ்லிம்: 3754, 3755
(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஆட்சித் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும்) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். (முஸ்லிம்: 3766)
எனக்கு பிறகு (ஆட்சியாளர்களிடம்) நிறைய சுயநலப் போக்கையும், பாரபட்சமாக நடக்கும் போக்கையும், நீங்கள் விரும்பாத பலவற்றையும் காண்பீர்கள் என்று நபி (ஸல்) சொன்னார்கள். அப்போது நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், குடிமக்கள் என்ற முறையில் நீங்கள் (ஆட்சியாளர்களா கிய) அவர்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து வாருங்கள். உங்களுடைய உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று சொன்னார்கள். புகாரி : 7052
அல்லாஹ்வின் தூதரே! எங்களை நிர்வகிக்கும் ஆட்சியாளர்கள், நாங்கள் அவர்களுக்கு செலுத்தவேண்டிய உரிமைகளைக் கேட்பவர்களாகவும், எங்களுக்கு அவர்கள் தரவேண்டிய உரிமைகளை மறுப்பவர்களாகவும் அமைந்துவிட்டால், நாங்கள் என்ன செய்வது என்று கேட்கப்பட்டது. (அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்) “நீங்கள் (உங்கள் ஆட்சித் தலைமையின் கட்டளையைச்) செவியுற்று, (அதற்குக்) கீழ்ப்படியுங்கள், ஏனெனில், அவர்கள்மீது சுமத்தப்பட்டது அவர்களைச் சாரும். உங்கள்மீது சுமத்தப்பட்டது உங்களைச் சாரும்” என்று சொன்னார்கள். முஸ்லிம் : 762
உங்களுடைய ஆட்சியாளர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய உரிமையை கடமையை கொடுத்து விடுங்கள் அவர் தன்னுடைய பொறுப்பில் எப்படி நடந்து கொண்டார் என்பதை பற்றி எல்லாம் அல்லாஹ் கவனித்துக் கொள்வான் என்று நபி(ஸல்) கூறினார்கள். புகாரி : 345
உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்கு பின்வரும் காலம் முன்பிருந்ததை விட மோசமானதாகத்தான் இருக்கும். எனவே, “மறுமையில் நீங்கள் இறைவனைச் சந்திக்கும் வரை பொறுமையாக இருங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். புகாரி: 7068
நயவஞ்சகர்களைப் பற்றி அல்லாஹ் :
அவர்களுடைய உடலமைப்பு, (தோற்றம்) உங்களை ஆச்சரியப்படுத்தும், அவர்கள் பேச ஆரம்பித்தால், (சோறு, தண்ணீர், மனைவி மக்கள் எல்லாவற்றையம் மறந்து விட்டு) அவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். (அந்த அளவுக்கு கலை, இலக்கியம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், வீரம், சோகம், காமெடி, சினிமா, டிராமா, மார்க்கம், லோக்கல் பாலிடிக்ஸ், இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் என்று விசாலமாக, புள்ளி விவரங்களோடு நீங்கள் அப்படியே லயித்துப் போகும் அளவுக்கு ஆளை மயக்கும் பேச்சுப் பேசுவார்கள்.
இப்படி வாய் கிழியப் பேசும், அவர்களிடம் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளுமாறு நீங்கள் புத்தி சொன்னால், காதிலேயே விழாதது போல் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்ட) மரக்கட்டைகளைப் போல் இருப்பார்கள். (அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர், சினிமாக்காரர்கள், மீடியாக்காரர்கள் என்று எங்கிருந்து) என்ன சப்தம் வந்தாலும் அதைத் தங்களுக்கு எதிரானதாகவே எண்ணிக் கொள்வார்கள். (முஸ்லிம்களுக்கு எதிராக எல்லாரும் ஒன்று திரண்டுவிட்டனர் என்று பீதியைக் கிளப்புவார்கள், பதற்றத்தை உண்டாக்குவார்கள்) இவர்கள்தான் (உங்களுடைய பிரதான) எதிரிகள். எனவே, இவர்கள் விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அல்லாஹ் இவர்களை அழிக்கத்தான் போகிறான். இவர்கள் எங்கே ஓடப் போகிறார்கள்? (அல்லாஹ்விடமிருந்து தப்பியோட முடியுமா? 63:4\
சிலர் அவர்களிடம் (வந்து) “நிச்சயமாக உங்களுக்கு எதிராக எல்லாரும் ஒன்று திரண்டுவிட்டனர். அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்” என்று (பீதியைக் கிளப்பினார்கள்) 3:173
ஷைத்தான்தான் தன் தோழர்களைக் கொண்டு இவ்வாறு பயமுறுத்துகிறான். 3:175
நயவஞ்சகர்களையும், நிராகரிப்போரையும் நிச்சயமாக அல்லாஹ் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான். 4:140
நம்பிக்கையாளர்களைப் பற்றி அல்லாஹ் :
நம்பிக்கையாளர்கள் யார் என்றால், அல்லாஹ்வின் திருப்பெயர் அவர்கள் முன் கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு படித்துக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மேலும்) வலுப்பெறும்; தங்கள் இறைவன் மீதே அவர்கள் முழு நம்பிக்கை வைப்பார்கள். 8:2
“எங்கள் இறைவனே! (உன் வசனங்களை) நாங்கள் செவியேற்றோம், அடிபணிந்தோம், எங்கள் இறைவனே! நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர். 2:285
நம்பிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே நம்பியிருப்பார்கள். 29:59
(நம்பிக்கையாளர்கள் யார் என்றால்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள், தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள், மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள், (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கிறான். 3:134
சிலர் அவர்களிடம் (வந்து) “நிச்சயமாக உங்களுக்கு எதிராக எல்லாரும் ஒன்று திரண்டு விட்டனர். அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்” என்று கூறி பீதியைக் கிளப்பியபோது, அவர்களுக்கு பீதி ஏற்படுவதற்குப் பதிலாக நம்பிக்கையே அதிகரித்தது. அது மட்டுமின்றி “அல்லாஹ் தான் எங்களுக்குப் போதுமானவன். அவன் தான் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கிறான்” என்றும் கூறினார்கள். 3:173
நம்பிக்கையாளர்கள் எதிரிகளின் படைகளைக் கண்டபோது, இது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு முன்னறிவிப்பு செய்ததுதான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் முன்னறிவிப்பு செய்தது உண்மையாகி விட்டது என்று கூறினார்கள். மேலும் அது அவர்களுடைய நம்பிக்கையையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் வலுப்படுத்தியது. 33:22
எங்கள் இறைவனே! எங்கள் காரியங்கள் அனைத்தையும் (உன்னிடமே) ஒப்படைத்து விட்டோம். நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிவிடாதே! என்று பிரார்த்தித்தார்கள். 10:85
உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிலிருந்தும் எதிரிகள் உங்களிடம் (படை எடுத்து) வந்தபோது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி)களை அடைத்து (நீங்கள் திணறி திக்குமுக்காடி போய்) அல்லாஹ்வைப் பற்றி என்னவெல்லாமோ எண்ணிக் கொண்டிருந்த நேரம் 33:10, அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைத்து சோதித்து பார்க்கப்பட்டனர். 33:11
சூழ்ச்சி (அரசியல்) .பற்றி அல்லாஹ் :
நிச்சயமாக ஷைத்தான் (பிடித்தவர்) களின் சூழ்ச்சி (அரசியல்) பலவீனமானது தான். 4:76
நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சி(அரசியல்) அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. 13:33
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இப்படித்தான்) சூழ்ச்சி (அரசியல்) பண்ணிக் கொண்டிருந்தார்கள். 13:42
ஒவ்வோர் ஊரிலும் சூழ்ச்சி (அரசியல்) செய்வதற்காக, குற்றவாளிகளையே நாம் தலைவர்களாக ஆக்கியிருக்கிறோம், ஆயினும் அவர்கள் தங்களுக்கெதிராகத்தான் சூழ்ச்சி (அரசியல்) செய்து கொள்கிறார்கள். (என்பதை) அவர்கள் உணரமாட்டார்கள். 6:123
அவர்களும் விதவிதமாகத்தான் சூழ்ச்சி (அரசியல்) பண்ணிப் பார்த்தார்கள். அவர்களுடைய சூழ்ச்சி(அரசியல்), மலைகளையே பெயர்த்துவிடக் கூடியவையாக இருந்தபோதிலும் அவை ஒவ்வொன்றையும் முறியடிக்கும் மாஸ்டர் சூழ்ச்சி (அரசியல்) அல்லாஹ்விடம் இருக்கிறது. 14:46
உங்களை (தடுத்து முகாம் எனும்) சிறையில் வைக்கவோ அல்லது கொல்லவோ அல்லது (அகதிகளாக) வெளியேற்றவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி (அரசியல்) செய்து கொண்டிருந்ததை எண்ணிப் பாருங்கள். அவர்களும் சூழ்ச்சி(அரசியல்) செய்தார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி(அரசியல்) செய்தான். சூழ்ச்சி(அரசியல்) செய்வதில் அல்லாஹ் கைதேர்ந்தவன், யாவரையும் மிகைத்தவன், (என்பதை இவர்கள் அறியமாட்டார்கள்) 8:30
அவர்கள் செய்த சூழ்ச்சி (அரசியல்)யை அடியோடு பெயர்த்தெடுத்து அவர்களின் தலைமீதே அல்லாஹ் விழ வைத்தான். அவர்கள் சுதாரிக்கும் முன் நினைத்துக் கூடப் பார்க்காத திசையிலிருந்து அவர்களுக்கு தண்டனை வந்தது. 16:26
நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தரும் தைரியமும், ஆறுதலும் :
(எல்லோருக்கும் பொதுவாக) பூமியிலோ அல்லது (தனிப்பட்ட முறையில்) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தக் கஷ்டமும், (நஷ்டமும்) அது ஏற்படுவதற்கு முன் னதாகவே (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. 57:22
அல்லாஹ்வுடைய அனுமதியின்றி எந்த ஒரு தீங்கும் (யாரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்புகிறாரோ, அவருடைய உள்ளத்தை (அவன்) நேர்வழியில் நடத்துகிறான், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். 64:11
இந்த மண்ணிலிருந்து உங்கள் பாதத்தைப் பெயர்த்து, உங்களை இங்கிருந்து வெளியேற்றிட வேண்டும் என்று அவர்கள் மும்முரமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்தால், உங்களுக்குப் பின் அவர்களும் இங்கு அதிக காலம் தங்கியிருக்க முடியாது. 17:76
நம்முடைய தூதர்கள் வியத்திலும் இதுதான் (நம்முடைய வழிமுறையாக இருந்த வந்தது) நம்முடைய (இவ்) வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீங்கள் காணமாட்டீர்கள். 7:77
(அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (இது நடக்கும்) இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் (இந்த) விஷயம் அல்லாஹ்வுக்கே சொந்தமானது, அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள். 30:4
யாரெல்லாம் கொடுமைக்கு ஆளான பிறகு அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத் செய்கிறார்களோ அவர்களுக்கு நாம் இவ்வுலகிலேயே நல்ல வசிப்பிடத்தை வழங்குவோம். மேலும், மறுமையின் கூலியோ அதைவிட மிகவும் மகத்தானதாகும். அவர்கள் (எத்தகைய நல்ல முடிவு தங்களுக்குக் காத்திருக்கின்றது என்பதை) அறிந்திட வேண்டும். 6:41
(இப்போது) உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டிருக்கிறது என்றால், (ஏற்கெனவே) இதேபோன்று அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம். 3:140
“எங்களுடைய இறைவன் ஒருவன் தான் (அல்லாஹ்தான்)” என்று சொன்னதற்காக இவர்கள் நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள், மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் மடங்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திருப்பெயர் சொல்லப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும், அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கிறான். 22:40
அவர்கள் செய்யும் (அரசியல்) சூழ்ச்சிகளை பற்றி (அப்படிச் செய்து விடுவார்களோ, இப்படிச் செய்து விடுவார்களோ என்று எண்ணி) நீங்கள் குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம். 16:127
அவர்கள் செய்யும் (அரசியல்) சூழ்ச்சியைப் பற்றி (அப்படியாகி விடுமோ, இப்படியாகி விடுமோ என்றெல்லாம் எண்ணி) நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். 27:70
அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு எதுவும்) ஒருபோதும் எங்களுக்கு ஏற்படாது அவன்தான் எங்களுடைய பாதுகாவலன், என்று நீங்கள் சொல்லுங்கள், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைக்கட்டும். 9:51
(பீதியைக் கிளப்பும்) நயவஞ்சகர்களுக்கும் (மிரட்டும்) நிராகரிப்பவர்களுக்கும் கீழ்ப்படியாதீர்கள், (பயப்படாதீர்கள்) அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள், உண்மையில், (என்ன நடக்கிறது என்பதை) அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். 33:1
நீங்கள் நிலைகுலையாமல் பொறுமையுடன், அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தால் (உங்களுக்கெதிராக) அவர்கள் கையாளுகின்ற சூழ்ச்சி (அரசியல் அவர்களுக்கு) எந்தப் பலனையும் தரப்போவதில்லை.
திண்ணமாக, அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் அல்லாஹ் சுற்றி வளைத்திருக்கிறான். 3:120
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள், நீங் கள் நம்பிக்கையாளராக இருந்தால் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள். 3:139
எப்படியாவது நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டுமென்று அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள், (அதனால்தான்) அவர்கள் தம்முடைய கையாலும், நாவாலும் உங்களுக்குத் தொல்லை தருகிறார்கள். 60:2
சிற்சில (துன்பங்கள்) தொல்லைகள் (இழப்புகள்) உண்டுபண்ணுவதைத் தவிர (பெரிய அளவிலான) தீங்கு எதுவும் இவர்களால் உங்களுக்குச் செய்துவிட முடியாது. 3:111
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்க ளுக்கு வராமலேயே (லேசாக) சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணு கிறீர்களா? அவர்களை கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன, அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும் என்று தூதரும் அவருடனிருந்த நம்பிக்கையாளர்களும் கேட்கும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது. 2:214
(நம்பிககையாளர்களை இதில் பங்கேற்கச் செய்தது எதற்காகவெனில், அல்லாஹ் நம்பிக்கையாளர்களை நன்மை தரக்கூடிய சோதனையில் ஆழ்த்தி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக, திண்ணமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். 8:17
நம்பிக்கையாளர்களை (அவர்கள் செய்த சிறு சிறு தீமைகளிலிருந்து) பரிசுத்த மாக்குவதற்கும், நிராகரிப்போரை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கிறான். 3:141
அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், பசி, களைப்பு நிராகரிப்ப வர்களுக்கு ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால் வைத்து அதனால் அவர்களிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய யாவும் இவர்களுக்கு நற்செயல்களாகவே பதிவு செய்யப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான். 9:120
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பிலும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக் காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதி ருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களால் தாங்கமுடியாத சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், நிராகரிப்போர் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! (என்று பிரார்த்தியுங்கள்) 2:286
“என் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும் வேதனையை நான் வாழும் காலத்திலேயே நிகழச் செய்தால் (அப்போது) இந்த அநியாயக்கார மக்களுடன் நானும் இருக்கும்படி செய்துவிடாதே” என்று நீங்கள் பிரார்த்தியுங்கள். 23:93
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடு(த்து சோதி)ப்பதில்லை. 2:286
***********************************************
உங்கள் இறைவனிடமிருந்து வந்த பெரும் சோதனை!
S.H. அப்துர்ரஹ்மான்
பிர்அவ்னின் கொடுமைக்கு காரணம் உங்கள் இறைவனிடமிருந்து வந்த சோதனையே!
இன்றைய இந்திய முஸ்லிம்கள் மீது அநீதியான ஆட்சியாளரின் கொடுமைக்கு காரணமும் உங்கள் இறைவனிடமிருந்து வந்த ஒரு சோதனையே!
“உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் நினைவு கூறுங்கள். அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள், அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.
“மேலும் உங்களுக்காக நாம் கடலைப் பிளந்து உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்)” (இறைநூல்: 2:49,50)
“இன்னும் நினைவு கூறுங்கள். பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம், அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, (உங்களைச் சிறுமைப்படுத்துவதற்காக) உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழ விட்டார்கள், இதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.” (இறைநூல் : 7:141)
மூஸா தம் சமூகத்தாரிடம்: பிர்அவ்னு டைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றியபோது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள், அவர்களோ, உங்க ளைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண் மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது என்று கூறினார். (இறைநூல் : 14:6)
இந்த வசனங்களில் இறைவன், பிர்அவ்ன் வரம்பு மீறி கொடுமை செய்தது பிர்அவ்னின் சோதனை அல்ல, அது உங்கள் இறைவ னிடம் இருந்து வந்த பெரும் சோதனை என்று இறைவன் கூறுகின்றான். பிர்அவ்னுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கியவனும் ஏக இறைவன் தான் அதன்மூலம் சோதனை வழங்கியவனும் ஏக இறைவன் தான் இதை முதலில் முஸ்லிம்கள் உணர வேண்டும்.
“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள் உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமை யுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!” (இறைநூல் : 2:155)
இந்திய முஸ்லிம்களே! உங்கள் அநியாயகார ஆட்சியாளர்களை நியமித்தது உங்கள் இறைவன்தான், அவர்களின் அக்கிரமம் மூலம் உங்களை சோதிப்பது உங்கள் இறை வன்தான் என்று உங்களுக்கு இன்னும் புரியவில்லையா?
ஏன் அவ்வாறு இறைவன் நியமித்து உள்ளான் என்று சிந்தித்து பார்த்து இறைவன் கூறியபடி உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். இறைவன் நாடினால் உங்களுக்கு நல்ல இறை அச்சம் உள்ள ஆட்சியாளர்களை ஏற்படுத்துவான்.
ஆட்டிடையன் சரியாக ஒரே அணிவகுப்பில் செல்லும் ஆட்டு மந்தையின் மீது வேட்டை நாய்களை ஒருபோதும் ஏவுவது இல்லை. எப்போது ஆடு மந்தையில் இருந்து ஆட்டிடையனுக்கு உத்தரவுக்கு கட்டுப்படாமல் தனிதனியே சிதறி செல்லும்போது அதனை சரி செய்ய வேட்டை நாயை ஏவி விடுகிறான். ஆடுகள் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஒரே மந்தையாக ஆகிவிட்டால் இடையன் வேட்டை நாய்களை திரும்ப அழைத்து கொள்வான்.
இறைவனின் சோதனையை உணர்ந்து கொள்ளும் மக்களுக்கு இந்த வசனங்களில் பாடம் உள்ளது.
“நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும், பிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு வாசித்து காண்பிக்கின்றோம்.
நிச்சயமாக பிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப்(பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலகீனப்படுத்தினான். அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான். நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலகீனப்படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும் அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.
இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி பிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப் பற்றி எ(வ்விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).” இறை நூல் : 28:3-6
முஸ்லிம்கள் சோதனையில் இருந்து இறைவன் நாட்டத்துடன் மீள்வது எப்படி?
“உங்களுக்கு முன்னே சென்று போனவர் களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன. “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்) (இறைநூல் : 2:214)
இந்த சோதனையில் முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப் போல் மனிதர்களுக்குப் பயப்படுகின்றனர். இவ்வுலக வாழ்க்கை அற்பமானது என்பதை மறந்து விட்டனர். மனிதர்களுக்கு அஞ்சுவது வீண். இதில் இருந்து நம்மை விடுவிக்க ஏக இறைவனால்தான் முடியும் என்பதை மறந்து, இஸ்லாம் அனுமதிக்காத ஆர்ப்பாட்டம், சாலை மறியல், போராட்டம் என்று பிரிவினை வாத தலைவர்களால் வழிநடத்தப்படுகின்றனர்.
அல்லாஹ்வும் தூதரும் முஸ்லிம்களுக்கு தடுத்த ஒன்று வெற்றியை தராது :
“நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழிமறிக்கவும் செய்கின்றீர்கள், உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்” என்று கூறினார், அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில், “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்பது தவிர வேறு எதுவுமில்லை. (அல்குர்ஆன்: 29:29)
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அறிவித்தார் :
“நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், “அப்படி என்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், “பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ, செயலாலோ துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலு ரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்’ என்று பதிலளித்தார்கள். புகாரி : 2465.
மேற்கண்ட குர்ஆன், ஹதீஃத்கள் சாலையை மறிப்பதையும் அதன்மூலம் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதையும் தடுக்கின்றன. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்த ஒன்று முஸ்லிம்களுக்கு ஒருபோதும் வெற்றியை தராது. அரசியல்வாதிகள் எப்போதும் முஸ்லிம்களை ஏமாற்றி அவர்கள் வாக்குகளை பெருவதிலே குறியாக உள்ளனர். முஸ்லிம்கள் இதனை உணர்ந்து, இறைவனிடம் சரணடைந்து, மன்னிப்பு கேட்டு தங்களின் வாழ்க்கையை குர்ஆன், ஹதீஃத் வழியில் அமைத்து இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரவேண்டும், தொழுகையில்லாதவருக்கு இஸ்லாத்தில் எந்த பங்கும் இல்லை, முஸ்லிமிற்கும் இறை நிராகரிப்பாளருக்கும் வேறுபாடு தொழுகை தான் என்று நபி(ஸல்) கூறியிருக்கும் போது ஆலிம்கள் இந்த உண்மையை முஸ்லிம்களிடம் எடுத்து சொல்வது இல்லை.
முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்க விருப்பம் இல்லை :
ஒருநாளின் முதல் தொழுகையான பஜ்ர் தொழுதவர் அந்நாள் முழுவதும் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறுகிறார். யார் சுபுஹு தொழுதுவிட்டு அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருப்பவரின் பாவங்களை மன்னித்து அவருக்கு இரக்கம் காட்டுமாறு இறைவனிடம் இறைஞ்சுகின்றனர் வானவர்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் நபிமொழியை அறிவிக்கிறார். அலி இப்னு அபூதாலிப்(ரழி), நூல்: அஹ்மது.
மேலே உள்ள நபிமொழி தினமும் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெறுவது தினமும் பஜர் தொழுவதன் மூலம் பெறலாம் என்கிறது. ஆனால் அதற்கும் முஸ்லிம்கள் தயார் இல்லை. இந்த நிலை முஸ்லிம்களிடையே இருந்தால் இறைவனின் பாதுகாப்பு கிடைக்குமா? முஸ்லிம்கள் உண்மையை உணர்ந்து குர்ஆன் வசனங்களின்படி பொறுமையுடன் கூடிய தொழுகையை கொண்டு ஒற்றுமையுடன் இருந்தால் இவைகள் வெற்றியை தரும். இன்ஷா அல்லாஹ்.
முஸ்லிம்கள், ஜும்மாவிற்கு வருவது போல் அனைவரும் பஜர் தொழுகைக்கு தினமும் வந்துவிட்டால் இந்திய யூதன் மட்டுமல்லாமல் உலக யூதனும் முஸ்லிம்களுக்கு தொந்தரவு தர அஞ்சுவார்கள் ஏக இறைவன் அவர்கள் உள்ளங்களில் அச்சத்தை ஏற்படுத்தி விடுவான்.
“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.”
“தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.”
“நீங்கள் இறைநூலை வாசித்துக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?”
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள், எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே யிருக்கும். (இறைநூல்:2:42-45)
(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக இறைவன் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
(இறைநூல்: 11:115)
(முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள், எனக்கே அஞ்சுங்கள், என்னுடைய வசனங்களை அற்பக்கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள் எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக இறை மறுப்பாளர்கள்தாம். (இறைநூல் : 5:44)
முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொறுமையை கொண்டும், தொழுகையை கொண்டும் குர்ஆன் வாக்குகள்படி இறைவனிடம் உதவி தேடினால் அநியாயக்கார ஆட்சியாளர்கள், இஸ்ரவேலர் கண்முன் இறைவனால் பிர்அவ்ன் அழிக்கப்பட்டது போல் உங்கள் கண்முன் அநியாயக்கார ஆட்சியாளர்கள் அழிக்கப்படுவதை பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.
எங்கள் இறைவா! இறை மறுப்பாளர்களுக்கு எங்களைச் சோதனை (ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன், ஞானம்மிக்கவன். (இறைநூல் : 60:5)
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்தி ருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், ஏக இறைவனை மறுக்கும் கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! (இறைநூல் : 2:286)
***********************************************
கைக்கூலியின் விபரீதங்களும்! அதை ஒழிக்க வேண்டுகோளும்!!
மர்ஹும் K.M.H. அபூஅப்தில்லாஹ்
1968ல் மறுமலர்ச்சியில் வந்தது :
இஸ்லாமிய சட்ட திட்டங்களின் மேன்மைகளையும், உண்மைகளையும் விஞ்ஞானத்தை நிரூபித்துவரும் இன்றைய உலகில் அவற்றின் சில சிலவற்றை பின்பற்றுவது கொண்டு முஸ்லிம் அல்லாதார் முன்னேற்றம் காணும் இன்றைய தினத்தில் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் நமது கொள்கைகளையும், லட்சியங்களையும் விட்டு மற்றவரின் கொள்கைகளை மேலாகக் கருதி பின்பற்றுவதின் காரணமாக எல்லாத் துறைகளிலும் வீழ்ச்சியுற்றிருக்கின்றோம் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அவைகளில் ஒன்றுதான் கைக்கூலிப் பழக்கம். நபி ஆதம்(அலை) அவர்களிலிருந்து நபி(ஸல்) அவர்கள் வரை தோன்றிய நபிமார்கள் அனைவரும் பெண்ணுக்கு மணமுடித்ததாக வரலாறு உண்டே ஒழிய கைக்கூலி வாங்கி மணமுடித்ததாக வரலாறு இல்லவே இல்லை. நமது இஸ்லாமிய ஷரிஅத்துச் சட்டமும் பெண்ணுக்கு அனைவரும் மஹர் கொடுத்து மணமுடிப்பதையே கடமையாக்கி இருக்கிறது.
நபி(ஸல்) அவர்களின் அருமைத் தோழர்களான ஸஹாபாக்களில் யாராவது ஒருவர் அல்லது நபி(ஸல்) அவர்களை முழுமையாக பின்பற்றி அல்லாஹ்(ஜல்)லின் அன்பையும் நேர்ச்சையும் பெற்ற இமாம்கள் வலிமார்கள் இவர்களில் யாராவது ஒருவர் கைக்கூலி வாங்கி மணமுடித்ததாக வரலாறு உண்டா என்றால் இல்லவே இல்லை அப்படியானால் நம்முடைய முன்னோர்களில் யாருமே செய்திராத நமக்குக் காட்டித்தராத ஷரீஅத்துச் சட்டம் அனுமதியாத ஒரு நவீன பழக்கத்தை நாம் பின்பற்றுகிறோமென்றால் அது அந்நியருடைய பழக்கமாகத்தான் இருக்க வேண்டும்.
நம்மைச் சுற்றியுள்ள ஹிந்து சகோதரர்களிடம் இந்தப் பழக்கம் உண்டு. அதற்கு காரணமும் உண்டு. முன் காலத்தில் ஹிந்து மதச் சட்டப்படி தகப்பனுடைய சொத்தில் பெண்ணுக்கு வாரிசு உரிமை இல்லை, ஆகவே திருமண சமயத்தில் கைக்கூலியையும், சீராகவும் அந்த பெண்ணுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பது அவர்களின் வழக்கமாகும். இது நியாயமும் கூட, ஆனால் தகப்பனுடைய சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு என்று நமது இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டம் தெளிவாக கூறியிருக்கும்போது இதனைக் கூலிப் பழக்கத்தை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன? நபி(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தராத அந்நிய சமூகத்தின் பழக்கமான இக்கைக்கூலி இன்று நம் சமூகத்தில் வேரூன்றி விட்டதால் ஏற்பட்டுள்ள கெடுதிகள் ஒன்றல்ல, பல அவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவோம்.
சமூக பொருளாதார வீழ்ச்சி :
ஒரு சமுதாயத்தின் பொருளாதார அபிவிருத்தி அச்சமூகத்தின் ஆண்கள் கையில் தான் தங்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆண்கள் சுறுசுறுப்புள்ளவர்களாக வும், உழைக்கும் ஆர்வமுள்ளவர்களாகவும், ஆற்றலுள்ளவர்களாகவும் இருந்தால் சமூக பொருளாதார நிலை உயரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இக்கைக்கூலிப் பழக்கமானது நமது ஆண் வர்க்கத்தை முழுச் சோம்பேறிகளாகவும், உழைக்கவே லாயக்கற்றவர்களாகவும் ஆக்கிவிட்டது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது முதுமொழி கண்களின் இளம் பிராயத்திலேயே உழைக்க வேண்டும், பொருள் தேடவேண் டும் என்ற ஆர்வம் உண்டானால்தான் அவர்கள் வாலிப பருவத்தில் உழைக்கும் ஆற்றலுள்ளவர்களாக இருப்பார்கள்
ஆனால் இக்கைக்கூலி பழக்கத்தால் ஆண்கள் சிறு பிராயத்திலிருந்தே பொறுப்பற்றவர்களாகவும் சோம்பேறிகளாகவும் வளரக் காண்கிறோம். பெண் வீட்டாரிடமிருந்து கைக்கூலியாகக் கிடைக்கும் பணத்தை நம்பியே ஆண்கள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். இன்று நடக்கும் பெரும்பாலான திருமணங்களை நோட்டமிட்டால் ஒரு வெட்கக்கேடான நிகழ்ச்சியைக கண்கூடாகக் காணலாம். கைக்கூலியாகக் கொடுக்கும் ரொக்கத்தையும், கல்யாண செலவுக்காக வேண்டிய பணத்தையும் பெண் வீட்டார் எப்பாடுபட்டாவது, பிச்சை எடுத்தாவது சேகரித்து விடும் வேளையில் உழைக்க அருகதையுள்ளவன் நான் என்று மார்தட்டிக் கொள்ளும் ஆண் தன் வீட்டு ரிப்பேர் வேலை, வெள்ளையடித்தல் தவிர தனது கல்யாண உடுப்பு, இதர கல்யாண செலவுகள் அனைத்திற்கும் பெண் வீட்டார் கைக் கூலியாகக் கொடுக்கும் பணத்தை எதிர்பார்க்கும் அவல நிலைதான் அது. அவன் பிறந்த மேனியைத் தவிர மற்றவை எல்லாம் இந்தப் பாழும் கைக்கூலிப் பணத்தால் ஆனவைகளே, திருமணம் வரை இப்படி சோம்பேறியாகப் பழகிவிட்ட இவன் திரு மணத்திற்குப்பின் உழைப்பாளியாக மாறுவான் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று.
இதனால்தான் கட்டிய மனைவியைக் காப்பாற்ற முடியாமல் திருமணம் நடந்த குறுகிய காலத்திலேயே அவளை தாய்வீட்டுக்குக் துரத்தத் துணிந்துவிடுகிறான் அல்லது அவனது தந்தையோ பாட்டனோ உழைத்துச் சம்பாதித்து வைத்த சொத்தை விற்றுக் காலந்தள்ளுக்கிறான். இக்கைக்கூலி பழக்கமுள்ள ஊர்களை நோட்டமிட்டால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் பெரும்பகுதி முஸ்லிம் அல்லாதாருடைய கைகளுக்கு மாறி இருப்பதைக் கண்கூடாக காணலாம். இக்கைக்கூலி பழக்கம் நம் சமூ கத்தில் தொடர்ந்து நீடிக்குமானால் நம் சமூகமே பிச்சைக்கார சமூகமாக மாற நேரிடும் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
விதிவிலக்காக ஒருசிலர் உழைக்க முன் வந்தாலும் கூட அவர்களின் வியாபாரங்களில், விவசாயங்களில், தொழில்களில் அபிவிருத்தியையும் பார்க்க முடியவில்லை இதற்குக் காரணம் உண்டு.
எவன் சிருஷ்டிகளிடம் கையேந்துகிறானோ அவனுக்கு கொடுக்கும் வாசலை அல்லாஹ் அடைத்துவிடுகிறான் என்று அல்லாஹ்(ஜல்) அருளியதாக அருமை நபி(ஸல்) அவர்கள் இயம்பியுள்ளார்கள். இக்கைக் கூலியும் பெண் வீட்டாரிடம் கையேந்திக் கேட்கும் கெளரவப் பிச்சைக் காசை விட மலத்தைச் சுமந்து கூலியாகப் பெறும் காசு எத்தனையோ மடங்கு உயர்ந்ததாக இருக்கும். கைக்கூலிப் பிச்சை வாங்கும் நம் சமூக மக்களின் முயற்சிகளில் எப்படி அபிவிருத்தி யைக் காணமுடியும். அல்லாஹ்(ஜல்) தருவான் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்பவர்களை அவன் வீணாக்குவதுமில்லை. அல்லாஹ் மீது நம்பிக்கை இழந்து படைப்பு களிடம் கையேந்துபவர்களை அவன் உருப்படச் செய்வதுமில்லை.
ஆகவே கைக்கூலிப் பிச்சை வாங்கும் மனிதர்களுடைய முயற்சிகளை அல்லாஹ் (ஜல்) உருப்படச் செய்வதில்லை. எந்த அளவு என்றால் கைக்கூலி வாங்குவதற்கு முன் மிகவும் சிறந்த முறையில் நடந்து கொண்டிருக்கும் வியாபாரம் கைக்கூலியாக வாங்கிய பணத்தில் கல்யாண செலவுகள் போக ஒரு சிறிய தொகை வியாபார மூதலீட்டில் போய்ச் சேரும். அவ்வளவுதான் அச்சிறிய தொகை ஏற்கனவே உள்ள பெரிய தொகையையும் அழித்துவிடும். இப்படி ஓட்டாண்டியான பலரை நாம் கண்ணாரப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே கைக் கூலிப் பழக்கம் நம் சமுதாயத்தில் தொடர்ந்து நீடிக்கும் வரை சமூக பொருளாதார நிலை ஒருபோதும் உயரப் போவதில்லை என்பது திண்ணம்.
அடுத்து கைக்கூலி பழக்கம் சமூகப் பண்பாடுகளில் ஏற்படுத்தியுள்ள கெடுதிகளைப் பார்ப்போம்.
சமூக பண்பாடுகளில் ஏற்பட்டுள்ள விபரீதங்கள் :
சமூகப் பொருளாதாரமே எப்படி ஆண்கள் கைகளில் தங்கி இருக்கிறதோ அதே போல் அச்சமூகத்தின் முழுப் பண்பாடுகள் பெண்களின் கைகளில் தங்கி இருக்கின்றது. சமூகப் பெண்கள் எப்பொழுது ஒழுக்கமுள்ளவர்களாக, பண்பாடுள்ளவர்களாக கற்புடையவர்களாகத் திகழ்கிறார்களோ அப்பொழுதுதான் சமூகத்தின் பண்பாடுகளும் சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இக்கொடிய கைக்கூலிப் பழக்கம் நம் சமூகப் பெண்களுக்கு மத்தியில் பல ஒழுக்கக் கேடுகளை உண்டாக்கிவிட்டது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும், திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களில் பலர் நம்முன் விளக்கியது போல் தங்கள் கணவன்மார்களால் தங்கள் பிறந்த வீட்டுக்கு விரட்டப்பட்டு, வாழ்விழந்து, வழி தவறுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இக்கைக்கூலி பழக்கத்தால் அழகிருந்தும், குணமிருந்தும், எல்லாம் இருந்தும் பணம் இல்லாத ஒரே காரணத்தால் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது
பல வருடங்கள் பல குமர்கள் வீட்டினுள் அடைப்பட்டிருந்து சீரழிவதையும் நாம் பார்த்துச் சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்பெண்கள் தவறு செய்வது. அவர்களுடைய குற்றமல்ல, சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு ஆணுடைய குற்றமாகும், ஒரு மனிதனை ஒரு அறையில் பல நாட்கள் அடைத்து வைத்துக் கொண்டு உள்ளே மலம் ஜலம் கழிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டால் அவன் அதை மீறி மலம் ஜலம் கழிப்பது அவனுடைய குற்றம் என்று எப்படி சொல்லமுடியும்? அது நிச்சயமாக அடைத்து வைத்தவனுடைய குற்றமாகத்தான் இருக்கவேண்டும்.
ஆகவே சமுதாய ஆண்களால் அநியாயஞ் செய்யப்பட்டு பல வருடங்கள் வீட்டினுள் அடைக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள் தவறு செய்கிறார்களென்றால் அதற்கு நாளை அல்லாஹ்(ஜல்)லுடைய சந்நிதானத்தில் ஆண்கள்தான் பதில் சொல்லியாக வேண்டும். அது மாத்திரமல்ல அநியாயஞ் செய்யப்பட்ட பெண்களின் சாபத்திற்கும் ஆண்கள் இவ்வுலகிலேயே ஆளாகித்தான் ஆகவேண்டும்.
ஏனென்றால் அநியாயம் செய்யப்பட்டவர்களுடைய சாபத்திற்கும், அல்லாஹ்வுக்கும் இடையில் திரை இல்லை என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்காகும். ஆண்களால் அநியாயஞ் செய்யப்பட்ட பெண்களின் பெருமூச்சினுடைய சக்தி இன்று அமெரிக்கா, ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல மடங்கு சக்தியுள்ள அணுகுண்டுகளாலும் விளைவித்துவிட முடியாது. இந்த அவல நிலைகளை நோட்டமிடுபவர்கள் இந்த உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் செய்வார்கள். முஸ்லிம் சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
இன்று பெண்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள ஒழுக்கக் கேடுகளை நோக்கும் போது அன்று நபி(ஸல்) அவர்களுடைய காலத்துக்கு முன் வாழ்ந்த அந்த அய்யா முல்ஜாகிலியா காலத்தின் மக்கள் தங்கள் பெண் மக்களை உயிரோடு புதைத்த கொடுஞ் செயலை நாமும் நெருங்கிவிட்டோம் என்று தான் சொல்லவேண்டும். இக்கைக் கூலி பழக்கம் இன்னும் சில காலம் தொடர்ந்து நீடிக்குமானால் கருச்சிதைவை ஆதரிக்கும் இந்திய நாட்டிலிருக்கும் நாம் நமக்குப் பிறக்கும் பெண் மக்களை பிறந்த மாத்திரத்தில் கழுத்தை நெறித்துக் கொன்று விட துணிந்து விடுவோம் என்பதில் ஐயமில்லை.
ஆகவே முஸ்லிம் சமூக உலமாக்களே. பேச்சாளர்களே, செல்வந்தர்களே சமூக சேவகர்களே, வாலிபர்களே வயோதிகர்களே, தாய்மார்களே இதற்கு மேல் காலம் தாழ்த்துவதற்கில்லை. உடனடியாக இது விஷயத்தில் நாம் ஒரு முக்கியமான முடிவுக்கு வரவேண்டியது அவசியத்திலும் அவசியமாகும். இந்த அடிப்படையில் திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்த உடன்குடி காலங்குடியிருப்பு, புதுமனை ஆகிய மூன்று ஊர்களையும் சேர்த்து பதினாலு தெருக்களிலும் தனித்தனியே ஊர்க் கூட்டங்கள் போடப்பட்டு கைக்கூலி வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்று தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பின் அந்தத் தெரு முத்தவல்லியையும், இன்னொரு பிரமுகரையும் அங்கத்தினர்களாகக் கொண்ட 13.4.68லிருந்து மேற்படி மூன்று ஊர்களிலும் கைக்கூலி கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்ற ஊர் கட்டுப்பாடு இச் சபையின் வாயிலாக வெற்றிகரமாக அமுல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தை உறுதியாகவும் சிறந்த முறையிலும் அமல் செய்வதற்குச் சுற்றியுள்ள ஊர்களிலும் இதேபோல் அமைக்கப்பட்டு ஊர் கட்டுப்பாடு கொண்டு வருவதோடு எல்லாக் கைக்கூலி பழக்கமுள்ள இதர ஊர்களிலும் கூட காலதாமதம் செய்யாமல் உடனடியாகக் கட்டுப்பாடுகள் கொண்டுவந்து செயல்படுவார்களேயானால் அது அவர்கள் சமுதாயத்தின் நலனைக் கருதி செய்த ஒரு அரிய செயலாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்
************************************************
சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்
எஸ்.எம். அமீர், நிந்தாவூர், இலங்கை.
பிப்ரவரி தொடர்ச்சி
மேலும், மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்களிடம், “(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ணவேண்டாம், மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர். தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர். உணவளிக்கப் பெறுகின்றனர்” 3:169 எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள் தெரிந்துகொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்´ன்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சுவர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும் என்று. (மஸ்ரூக் பின் அல் அஜ்தஉ(ரஹ்) முஸ்லிம்: 3834, திர்மிதி, இப்னு மாஜா, தாரிமி, தஃப்சீர் இப்னு கஸீர்: 2:299-308)
சுவர்க்கத்தில் தனி முத்தாலான ஒளிரும் அற்புதமான மாளிகைகள் :
(தனி முத்தாலான) கூடாரங்களி(ன் வடிவிலுள்ள மாளிகைகளி)ல் தங்கவைக்கப்பட்டுள்ள “ஹூருல் ஈன்” (எனும் பேரழகுக் கன்னிகளும் அங்கு) இருப்பார்கள். (55:72)
அங்கே (சுவர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு (தனி) முத்தாலானதாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (சுவர்க்க வாசியான) இறை நம்பிக்கையாளனுக்குத் துணைவியர் இருப்பர். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ(ரழி) புகாரி: 3243, முஸ்லிம்)
மேலும் நடுவில் துளையுள்ள(தனி) முத்தாலான ஒரு கூடாராம் சுவர்க்கத்தில் உள்ளது அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறை நம்பிக்கையாளர்களுக்குக் (“ஹூருல் ஈன்” எனும் பேரழகுக் கன்னியரான தூய) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலை யிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்கமுடியாது (சுவர்க்கவாசியான) இறை நம்பிக்கையாளர் அவர்களைச் சுற்றிவருவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் கைஸ் அல் அஷ்அரீ(ரழி) அபூமூச அல் அஷ்அரீ(ரழி) புகாரி: 4879, முஸ்லிம் : 5459, திர்மிதி: 2648) அதாவது சுவர்க்கத்திலுள்ள கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரே ஒரு முத்தால் தயாரிக்கப்பட்ட மாளிகையாகும் சுவர்க்கவாசியான இறை நம்பிக்கையாளர் அந்த மாளிகையின் எந்த மூலைக்குச் சென்றாலும் அவரை உபசரிக்க அங்கே அவரது துணைவியர் இருப்பர். (புகாரி: பாகம்3, பக்கம்,843, 3243இன் சிறு குறிப்பு : 46)
சுவர்க்கத்தில் கதீஜா(ரழி) அவர்களுக்குரிய முத்து மாளிகை:
(ஒருமுறை) நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ! கதீஜா தம்முடன் குழம்பு அல்லது உணவு அல்லது குடிபானம் உள்ள பாத்திரத்தை எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் முகமன் (சலாம்) கூறி, அவருக்குச் சுவர்க்கத்தின் கூச்சலோ, குழப்பமோ, களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள் என்று கூறினார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), முஸ்லிம்: 4817)
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா(ரழி) அவர் கள் கூறியதாவது:
கதீஜாவுக்கு நற்செய்தி கூறுங்கள். அவருக்கு சுவர்க்கத்தில் முத்தாலான ஒரு மாளிகை உள்ளது. அதில் வீண் கூச்சலோ எந்த சிரமமோ இருக்காது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள (புகாரி : 1791, 1792)
சுவர்க்கத்தில் முத்தாலான ஒளிரும் கோபுரங்கள்:
மிஃராஜ் எனும் விண்ணேற்றப் பயணம் தொடர்பான நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் சுவர்க்கத்தினுள் அனுமதிக்கப்பட்டேன். அங்கே முத்தாலான உயர்ந்த கோபுரங்கள் இருந்தன என்று (அனஸ்(ரழி),புகாரி 349, 3342, முஸ்லிம்: 263) மேலும்,
சுவர்க்கத்தில் உமர்(ரழி) அவர்களின் மாளிகை:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்த போது அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சுவர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம்) புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தனது அழகையும், பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளும் வகையில்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், “இந்த அரண்மனை யாருடையது? என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். “உமர் இப்னு கத்தாப் அவர்களுடையது’ என்று (ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது (அதனுள் நுழைந்து பார்க்க எண்ணினேன் ஆனால்) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, (அதனுள் நுழையாமல்) அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டேன்’ என்று கூறினார்கள். இதனைக் கேட்ட உமர்(ரழி) அவர்கள் அழுதார்கள். பிறகு, “இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’ என்று கேட்டார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 3242,7023,7024)
பிலால்(ரழி) அவர்களின் சுவர்க்கச் சோலை:
ஒருமுறை ஃபஜ்ருத் தொழுகையின் போது பிலால்(ரழி) அவர்களிடம் “பிலாலே’ இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் நான் கேட்டேன் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரழி) “இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளுவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல் என்று விடையளித்தார் கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 1149)
அந்நாளில் சுவர்க்கம் அருகில் கொண்டு வரப்படும் :
(அந்நாளில்) சுவர்க்கம் இறையச்ச முடையோருக்கு அருகில் கொண்டு வரப்படும். (26:90) இறையச்சத்துடன் வாழ்ந்தோர் சுவர்க்கத்தை அருகில் காண்பார்கள். அந்நாளில் சுவர்க்கவாசிகளுக்கு அருகே நெருக்கமாகச் சுவர்க்கம் கொண்டு வரப்படும். பார்ப்போரைக் கவரும் வண்ணம் அது சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
சுவர்க்கத்தின் சுகந்தமான நறுமணம் :
சுவர்க்கத்தின் நறுமணம் நாற்பது ஆண்டு காலப் பயணத் தொலைவில் இருந்தே வீசிக்கொண்டிருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி), புகாரி: 3166,6914, தஃப்சீர் இப்னு கஸீர் 3:654) மற் றொரு ஹதீஸில் சுவர்க்கத்தின் நறுமணமோ எழுபது ஆண்டு காலப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) திர்மிதி, இப்னு மாஜா, தஃப்சீர் இப்னு கஸீர்: 3:654,655) மற்றுமோர் அறிவிப்பில் சுவர்க்கத்தின் வாசமானது அதிலிருந்து ஐந்நூறு ஆண்டுகள் நடந்து செல்லும் தொலை தூரத்திலிருந்து தான் கடைசியாகப் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி) முஸ்லிம்)\
சுவர்க்கத்தில் நறுமண ஆவி பிடிப்பதற்காக வைத்திருக்கும் தூப கவசங்களின் எரிபொருள் “ஆகில்’ எனும் (சந்தனக்) கட்டைகளால் எரிக்கப்படும். மேலும் சுவர்க்கத்தின் நறுமணப் புகை சுவனத்து சந்தனக் கட்டை களினாலானதாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹுரைரா(ரழி), புகாரி: 3245,3246) திர்மிதி: 2660)
அதனால்தான் சுவர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்ப தென்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள். (சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரழி) அனஸ்(ரி),புகாரி: 3250,2796) பிரயாணத்தின் போது அரபிகள், தாங்கள் பயணிக்கும் வாகனப் பிராணியிலிருந்து கீழே இறங்கி, தரையில் ஓய்வெடுக்க ஓர் இடம் பிடிக்க விரும்பும்போது தெரிவு செய்யப்பட்ட அந்த இடத்தில் தமது சாட்டையைப் போட்டு விடுவது வழக்கம். அந்தச் சாட்டை போடும் அளவுக்கு சிரிதளவு இடமேலும் சுவர்க்கத்தில் ஒருவருக்குக் கிடைப்பதென்பது கூட மாபெரும் பேறுதான் என்பதையே நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு விபரிக்கின்றார்கள். (உம்தத்துல் காரீ)
மேலும் உங்களில் ஒருவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்பது சூரியன் எந்த அளவு நிலப்பரப்பின் மீது உதிக்கின்றதோ அல்லது எந்த அளவு நிலப் பரப்பிலிருந்து மறைகிறதோ அந்த அளவு நிலப்பரப்பை விடச் சிறந்ததாகும். (புகாரி: 3253)
மேலும், சுவர்க்கவாசிகளின் நெஞ்சங்களிலிருந்து பொறாமை, குரோதம் போன்ற காழ்ப்புணர்ச்சியை அகற்றப்படும். அவர்களின் நெஞ்சங்களில் இருந்து காழ்ப்புணர்ச்சியை நாம் அகற்றிவிடுவோம். 7:43
அவர்களின் நெஞ்சங்களில் இருக்கும் குரோதத்தை நாம் அகற்றிவிடுவோம். 15:47
அவர்களுடைய இறைவன் காழ்ப்புணர்வு, பொறாமை, குரோதம் ஆகிய தீய உணர்வுகளிலிருந்து அவர்களைத் தூய்மைப்படுத்தும் பானத்தை அவர்களுக்கு அருந்தக் கொடுப்பான். 76:21
அதையே, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை நம்பிக்கையாளர்கள் நரகத்தின் பாலத்திலிருந்து தப்பி வரும்போது சுவர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அவ்விடத்தில், உலகத்தில் வாழ்ந்தபோது பரஸ்பரம் அவர்களிடையே நடந்த அநீதிகளுக்காகச் சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில் அவர்கள் பாவங்களிலிருந்து முற்றிலுமாக நீங்கித் தூய்மையாகி விடும்போது அவர்களுக்குச் சுவர்க்கத்தில் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று (அபூசயீத் அல்குத்ரீ(ரழி), புகாரி: 2440, 6535, முஸ்னத் அஹ்மத்)
சுவர்க்கவாசிகளின் உள்ளங்கள் அனைத்தும் ஒரே மனிதனின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இருக்காது. எந்தவிதக் குரோதமோ, கோபமோ, மன வேறுபாடோ பரஸ்பர வெறுப்புணர்வோ, பொறாமையோ இருக்காது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி:3245, 3246,3254, திர்மிதி : 2660
அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களின் நெஞ்சங்களிலிருந்து கீறிக் கிழிக்கும் வனவிலங்குகளைப் போன்ற குரோதங்களை வெளியேற்றாதவரை அவர்கள் சுவர்க்கத்திற்குள் நுழையமாட்டார்கள் என்று அபூஉமாமா(ரழி) அவர்கள் கூறினார்கள். (தஃப்சீர் தபரீ)
இந்த 7:43 வசனம் தொடர்பாக சுத்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
சுவர்க்கவாசிகளை சுவர்க்கத்திற்கு அழைத்து வரப்படும்போது சுவர்க்கத்தின் வாசலுக்கு அருகில் ஒரு மரத்தைக் காண்பார்கள் அதன் அடியில் இரண்டு நீரூற்றுக்கள் இருக்கும் அவற்றில் ஒன்றிலிருந்து அவர்கள் நீர் அருந்துவார்கள். அப்போது அவர்களின் நெஞ்சங்களில் இருந்து பொறாமை, குரோதம் போன்ற காழ்ப்புணர்ச்சிகள் அனைத்தும் அகன்றுவிடும். அதுவே “தூய பானம்’ எனும் “ரபுன் தஹூரா’ ஆகும் என்று கூறினார்கள். (தஃப்சீர் தபரீ, இப்னு கஸீர்: 3:760)
பின்னர், ஸலாம் சொல்லி வரவேற்று சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் உள்ளே செல்லுங்கள் என்று சொல்லப்படும் :
தமது இறைவனை அஞ்சியவர்கள் கூட்டம் கூட்டமாகச் சுவர்க்கத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவார்கள். இறுதியில் அவர்கள் அங்கு வந்து சேர்ந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்களிடம் அதன் காவலர்கள் “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் “மீது சாந்தி” உண்டாவதாக) நீங்கள் மனநிறைவு அடைந்தீர்கள் நீங்கள் இதில் நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடுங்கள் என்று வாழ்த்துக் கூறப்படும்போது அவர்கள் பூரிப்படைவார்கள் (39:73) எனும் மேற்கண்ட வசனம் தொடர்பாக அலீபின்அபீதாலிப்(ரழி) அவர்கள் கூறியதாவது:
சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திற்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள், இறுதியில் அவர்கள் சுவர்க்கத்தின் வாசல்களில் ஒரு வாசலுக்குப் போய்ச் சேர்வார்கள் அந்த வாசலுக்கு அருகே ஒரு மரத்தைக் காண்பார்கள் அதன் அடிப்பகுதிக்குக் கீழிருந்து இரு ஊற்றுக்கண் ஆறுகளாக வெளிவரும் அவ்விரு ஊற்றுக்களில் ஒன்றை நோக்கிச் சென்று அதில் நீராடித் தூய்மை அடைவார்கள் அவர்கள் மீது சுகவாழ்வின் செழிப்பு மலரும் அதன்பின் ஒருபோதும் அவர்களின் சருமங்கள் மாற்றமடையாது அதன் பின் அவர்களின் ரோமங்கள் ஒருபோதும் பரட்டையாகாது அவர்கள் (முடியில்) எண்ணெய் தேய்க்கப்பட்டவர்களைப் போன்று இருப்பார்கள்.
பின்னர் அவர்கள் தமக்குக் கட்டளை யிட்டதைப் போன்று மற்றதோர் ஊற்றை நோக்கிச் செல்வார்கள் அதிலிருந்தும் நீரருந்துவார்கள் அதனால் அவர்களின் வயிற்றிலிருந்த அசுத்தங்களையும், உபாதைகளையும் அது அகற்றிவிடும். அவர்களைச் சுவர்க்கத்தின் வாசல்களில் வானவர்கள் உங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக நீங்கள் மனமகிழ்ந்தீர்கள் நீங்கள் அதில் நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடுங்கள் என்று கூறி வரவேற்பார்கள். (தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், முஸன்னஃப் இப்னு அபீஷைபா, தஃப்சீர் இப்னு இஸீர்: 7:974)\
“அத்ன்’ எனும் நிலையான சுவர்க்கச் சோலைகளுக்குள் இவர்களும் இவர்களுடைய பெற்றோர், துணைகள், வழித்தோன்றல்கள் ஆகியோரில் நல்லவர்களும் நுழைவார்கள் அவர்களிடம் வானவர்கள் ஒவ்வொரு தலைவர்கள் வழியாகவும் வருவார்கள். அந்த வானவர்கள் நீங்கள் பொறுமை காத்ததன் பலனாக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக) மறுமையின் முடிவு உங்களுக்கு நல்லதாகிவிட்டது” என்று வாழ்த்துக் கூறுவார்கள். (13:23,24)
அவர்களிடம் “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) நீங்கள் செய்து கொண்டிருந்த(நற்) கருமங்களுக்காகச் சுவனபதிக்குள் நுழையுங்கள்” என்று அவ்வானவர்கள் சொல்வார்கள். (16:32, 7:46, 10:10, 14:23, 19:62, 56:26, 33:44, 56:91, 13:23,24, 36:58)
இன்று நீங்கள் நிம்மதியுடன் நிரந்தரமான சுவர்க்கத்திற்குள் நுழையுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்படும். நீங்கள் அச்சமற்றவர்களாக நிம்மதியுடன் இவற்றில் நுழையுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும். (15:46)
அதாவது சுவர்க்கவாசிகளுக்கு முகமன் கூறி வரவேற்கப்பட்டு நீங்கள் எல்லாவிதமான ஆபத்து, அச்சம், கலகம், கலக்கம், சஞ்சலம் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படுவோம் என்றோ, அருட்கொடைகள் இடையில் நின்றுவிடும் அல்லது அழிந்துவிடும் என்றோ நீங்கள் அஞ்சவேண்டாம் என்றும் அவர்களுக்குச் சொல்லப்படும். (தஃப்சீர் இப்னு கஸீர் : 4:1034)
************************************************