இஸ்லாம் பார்வையில்
வரவு, செலவு, சிக்கனம், சேமிப்பு…
M.A. ஹனிபா
அக்டோபர் தொடர்ச்சி…..
பகுதி – 4 :
அல்லாஹ்வே உணவளிப்பவன் :
“எத்தனையோ உயிரினங்கள் அவை தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்வே உணவளிக்கின்றான். அவன் செவியுறுபவன், நன்கு அறிந்தவன்.” (அல்குர்ஆன்: 29:60, மேலும் பார்க்க : 11:6)ஷ
எந்தவோர் உயிரினமாக இருந்தாலும் அதற்கு அல்லாஹ்வே உணவளிக்கிறான். மனிதனின் இம்மை வாழ்க்கைப் பயணம் ஒரு சாண் வயிறுக்கு உணவு தேடலிலிருந்து தான் துவங்குகிறது.
“இரு கண்களையும், ஒரு நாவையும் இரு உதடுகளையும் அவனுக்கு நாம் வழங்கவில்லையா? மேலும், அவனுக்கு (நன்மை தீமை என்ற) இரு வழிகளையும் நாம் காட்டவில்லையா?” (அல்பலத் 90வது அத்தியாயம் எல்லா வசனங்களையும் வாசிக்க)
மாற்றுத் திறனாளிகளை விட்டு விடுவோம். கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் என அறிவு வளர்ச்சியடைந்த ஆரோக்கியமான உடல் திறன் பெற்ற மனிதன், முறையான தேடலில் முனைந்து உழைத்து உணவைப் பெற்று தாமும் உண்பதோடு, பலவீனம் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும். அப்போது தான், “உணவு அளிப்பவன் இறைவன்” என இறையருட் கொடைகளை மனதார ஒப்புக் கொண்டதாகும்.
இந்த உலகம் ஒரு விளையாட்டு மைதானம், கேளிக்கையாக (Amus-Amusment) நாளினைப் போக்கிட அமைக்கப்பட்ட மனமகிழ் மன்றம். “இவ்வுலக வாழ்வு விளையாட்டும் கேளிக்கையும் தான்”. (47:36)
“நீங்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் உங்களுக்குரிய கூலியை அவன் உங்களுக்கு வழங்குவான். உங்களது செல்வங்களை உங்களிடம் அவன் கேட்கமாட்டான். (47:36)
அல்லாஹ் தேவையற்றவன், மனிதனின் செல்வங்களிலிருந்து அவன் எதையும் கேட்கமாட்டான். அவன் நாடுவதெல்லாம் பிறருக்கான உரிமையை வழங்கிட வேண்டும் என்பதே. (பிறருக்கான உரிமையைப் பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளோம்)
மற்றொரு வசனம் கூறுவது :
“(நபியே!) எவர்கள் தமது மார்க்கத்தை விளையாட்டாகவும், கேளிக்கையாகவும் எடுத்து, இன்னும் இவ்வுலக வாழ்வும் அவர்களை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடுவீராக! ஒவ்வோர் ஆன்மாவும் தான் சம்பாதித்தவற்றின் காரணமாக (மறுமையில்) பிடிக்கப்படாமல் இருப்பதற்காக (குர்ஆனாகிய) இதன் மூலம் உபதேசம் செய்வீராக!” (அல்குர்ஆன்: 6:70)
விளையாட்டு வேடிக்கை, பகட்டு, ஆடம்பரம் நிறைந்த இவ்வுலக வாழ்க்கை மீது மனிதன் மோகம் கொண்டு மதிமயங்கி திசைமாறிச் சென்று விடுகிறான்.
பொருளீட்டுவது வரவு :
செல்வங்களை சேர்க்கும் பேராசையின் வேட்கை, மனிதன் மனோ இச்சைக்கு அடிபணிந்து நம்பிக்கைத் துரோகம், பிற மனிதனின் உரிமைப் பறிப்பு, லஞ்சம் ஊழல் போன்ற தீமைகளில் ஈடுபட்டு தன்னை மாசுப்படுத்திக் கொள்கிறான்.
பொருளீட்டுவதில் முறை தவறி இஸ்லாமிய வாழ்வியல் திட்டத்தையும் புறக்கணித்து மக்களின் உயிர், உரிமை, உடமை, தன்மானம் ஆகியவற்றைச் சேதப்படுத்துவதும், மக்களைக் கொடுமைப்படுத்துவதிலும் வரம்பு மீறி இஸ்லாம் வகுத்த எல்லையைக் கடந்து விடுகிறான்.
இறைமறை வசனம் :
“நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை, அதிகமாகத் தேடும் ஆசை உங்களைப் பராக்காக்கி விட்டது” (102:1-2)
நபி(ஸல்) அவர்கள், “மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது” என்று தொடங்கும் (102 ஆவது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன்.
அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம், எனது செல்வம்” என்று கூறுகிறான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் “தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அஷ்´க்கீர்(ரழி), நூல்கள்: முஸ்லிம்: 5665, திர்மிதீ: 2264)
மனிதன் சேமிக்கும் செல்வத்தால் அவனுக்கு எந்தப் பலனும் இல்லை. உண்பது உடுத்துவது இவை இரண்டும் இம்மையோடு முடிந்துவிடும். மரணத்திற்குப் பின் அவர் செய்த தர்மம் மட்டுமே மறுமை நாள் வரை உடன் இருந்து நன்மைகளைப் பெருக்கித் தரும்.
ஒரு முஸ்லிம் ஹலாலான வழியில் எவ்வளவு வேண்டுமானாலும் செல்வங்களைச் சேமிக்கலாம். பொன், பொருள், நிலம் என அவர் சம்பாதித்த செல்வங்கள் அவரை பணச் செருக்கில் தடுமாற வைத்துவிடக் கூடாது. நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினருக்கு செல்வங்களால் சோதனை உண்டாகும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
“ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு சோதனை உண்டு. “என் சமுதாயத்தின் சோதனை செல்வமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். (அறிவிப்பாளர்: கஅப் பின் இயாள்(ரழி), நூல்: திர்மிதீ : 2258)
பேராசை பெரும் நஷ்டம் :
மனிதனின் பேராசைக்கு ஓர் எல்லை இல்லை. குறைவான பணம் சில ஆயிரங்கள் உள்ளவன் லட்சங்களைத் தேடுவான், லட்சங்களை அடைந்தவன் கோடிக் கணக்கில் தேடுவான். மனிதனது தேடலுக்கு முடிவே இல்லை.
“ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிறைய) தங்கம் இருந்தாலும் தனக்கு மூன்றாவது ஓடையயான்று வேண்டு மென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை (அடக்கத்தலத்தின்) மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இதுபோன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவ மன்னிப்புக்கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக்(ரழி) நூல்கள்: புகாரி: 6439, முஸ்லிம்: 1894, திர்மிதீ: 2259)
இறந்து மண்ணறையில் வைத்து மண்ணைப் போட்டு மூடும் வரை மனிதனின் பேராசைத் தொடரும். இப்பேராசையிலிருந்து யாரை அல்லாஹ் காப்பாற்றுகின்றானோ அவர் தான் இதிலிருந்து தப்பிக்க முடியும். தவறை உணர்ந்து திருந்துவோரை அல்லாஹ் மன்னிக்கிறான்.
அல்லாஹ் அழகானவன் அழகை அவன் விரும்புகின்றான் :
நபி(ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும், தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன், அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி) நூல்: முஸ்லிம்: 147)
ஒரு முஸ்லிம் தம்முடைய ஹலாலான சம்பாத்தியத்திலிருந்து தமது வசதிக்கு ஏற்றவாறு தன்னை அழகுப்படுத்திக் கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை.
அல்லாஹ் தமக்கு வழங்கிய செல்வங்களுக்காக அவனுக்கு நன்றி செலுத்துவதோடு முறையாக அல்லாஹ்வின் ஆணையைக் கடைப்பிடிக்க வேண்டும். மாறாக, தன்னிலை மறந்து பணமிருக்கும் ஆணவத்தில் மக்களை இழிவாக மதித்து பெருமையடிக்கக் கூடாது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன் காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கணிக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டே நடந்தபொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். (புகாரி: 3485)
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அறிவித்தார் :
“தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்ககமாட்டான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரழி), “நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகிறது என்று கூறினார்கள். அதைக் கேட்ட இறைத் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே” என்று கூறினார்கள். (புகாரி:3665)
பகுதி – 5 :
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்:
“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகளின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. உடல் நலம், 2. ஓய்வு என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்கள்: புகாரி : 6412, திர்மிதீ: 2226)
இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் நோயற்ற வாழ்வும், கவலையற்ற நிலையும் மிகப் பெரும் அருட் செல்வங்களாகும்.
நோயற்ற வாழ்வையே ஆரோக்கியம் என்றும் கவலையற்ற நிலையையே ஓய்வு என்றும் மேற்கண்ட ஹதீஃதிலிருந்து விளங்குகிறோம். உடல்நலம், ஓய்வு என இறைவன் வழங்கிய இந்த இரு அருட்கொடைகளையும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விடுவதால் மனிதர்களில் பெரும்பாலோர் இழப்புக்குள்ளாகி விடுகின்றோம்.
திருக்குர்ஆன் 102வது அத்தியாயம் முதலிரு வசனங்களின் கருத்துப்படி அதிகமானப் பொருளீட்டும் ஆசையில் உடல் நலத்தைப் பேணுவதை ஊதாசீனப்படுத்தி விடுகின் றோம். பொருட்செல்வங்கள் மட்டுமே வாழ்வில் பிரதானத் தேவை எனக் கருதி ஓயாத உழைப்பு அதனால் விளையும் தொடர் மன உளச்சல் என உடலுக்கும், மனதுக்கும் ஓய்வளிக்கத் தவறி விடுகின்றோம்.
இதற்கான தீர்வு :
“(செல்வத்திலும் அழகிலும்) உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் உங்களுக்கு புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்கள்: முஸ்லிம்: 5671,திர்மிதீ: 2437)
பொருளாதார மேம்பாட்டில் தம்மை விட செல்வந்தராக இருப்போரைப் பார்த்து, அவரைப் போன்று அல்லது அவரை விடக் கூடுதலாக நாமும் பொருட் செல்வங்களை சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணாமல், தம்மை விட கீழிருப்பவர்களைப் பார்த்து, “அல்ஹம்துலில்லாஹ்” பொருளாதார மேம்பாட்டில் அல்லாஹ் இவர்களை விட நம்மை மேன்மையாக்கி, நமக்கு வழங்கிய அருட்கொடைகளை விசாலமாக்கியிருக்கிறான் என்று தன்னிறைவு பெறவேண்டும் என்பதே மேற்கண்ட ஹதீஃதின் விளக்கமாகும்.
செலவு :
“எவர் அணுவளவேனும் நன்மை செய்தாலும் அவர் அதனைக் கண்டு கொள்வார். எவர் அணுவளவேனும் தீமை செய்தாலும் அவன் அதனைக் கண்டுகொள்வான்”
(அல்குர்ஆன்: 99:7,8)
“மறுமை நாளில் ஓர் அடியானின் (பின்வரும் விஷயங்கள் குறித்து) விசாரணை செய்யப்படுவதற்கு முன் அவனுடைய பாதங்கள் (நின்ற இடத்திலிருந்து) நகர முடியாது”.
ஒன்று : அவன் வாழ்நாள்: அதை எவ்வாறு கழித்தான்?
இரண்டு : அவன் கற்ற கல்வி: அதைக் கொண்டு எவ்விதம் செயல்பட்டான்?
மூன்று : அவன் பொருளாதாரம்: அதை எங்கிருந்து திரட்டினான்?
நான்கு : அ(ந்தப் பொருளாதாரத்)தை எவ்வழியில் செலவிட்டான்?
ஐந்து : அவன் உடல்: அதை எதில் ஈடுபடுத்தினான்? என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூபர்ஸா (ரழி), நூல்: திர்மிதீ: 2341)
ஆயுள், இளமை, உடல்நலம், செல்வம், கல்வி என இவை இறைவன் மனிதனுக்கு வழங்கிய மிகப்பெரும் அருட்கொடைகளாகும். உயிர், உடல், பொருள், அறிவு, ஆற்றல், வளர்ச்சி, முன்னேற்றம் என எதை எடுத்துக் கொண்டாலும் அனைத்தும் மனிதனுக்கு இறைவன் கொடுத்த அருட்கொடைகள்.
அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவன் அவற்றைக் கொடுத்தவனின் அன்புக்கும், ஆணைக்கும் ஏற்ற வழிகளில் பயன்படுத்திட வேண்டும், செலவிட வேண்டும். சரியான வழிகளில் மனிதன் இயங்குகின் றானா என்பதை ஒவ்வொரு கணமும் இறைவன் கண்காணிக்கின்றான். மனிதனின் ஒவ்வோர் அசைவும் பதிவு செய்யப்படுகின்றது. பதிவேடு பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.
“அல்லாஹ் கணக்கு கேட்பதில் – விசாரணை செய்வதில் தீவிரமானவன், துரிதமானவன் என்ற கருத்தில் அநேக வசனங்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.
செலவும், சிக்கனமும் :
மறுமையில் விசாரணை நடக்கும் தீர்ப்பு நாளில் மனிதன் தன்னுடைய ஒவ்வோர் செயலுக்கும் அவன் கற்ற ஒவ்வோர் எழுத்துக்கும் சம்பாதித்த ஒவ்வொரு காசுக்கும் செலவு செய்த ஒவ்வொரு வினாடிக்கும் அவற்றை எவ்வழியில் ஈட்டினான் எவ்வழியில் பயன்படுத்தினான் என்பதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.
பொய்யுரைக்க முடியாது, அவனது பதிவேடு அவனைக் காட்டிக் கொடுத்துவிடும். அவ னது உறுப்புகள் அவனுக்கு எதிராகச் சாட்சியம் சொல்லும், தப்பிக்கவோ சமாதானம் கூறவோ முடியாது.
“நீங்கள் நல்லவற்றில் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே! அல்லாஹ்வின் (சங்கையான) முகத்தை நாடியன்றி நீங்கள் செலவிடவேண்டாம். (2:272)
“நீங்கள் நேசிப்பவற்றிலிருந்து, (நல்லறங்களுக்கு) செலவு செய்யாத வரையில் நீங்கள் நன்மையை அடைந்து கொள்ளமாட்டீர்கள். நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் நன்கறிந்தவனாவான்” (3:92)
“நயவஞ்சகர்கள் ஆண்களும், பெண்களும் அவர்களில் சிலர் மற்றும் சிலரைச் சார்ந்தோரே! அவர்கள் தீமையை ஏவி நன்மையை விட்டும் தடுக்கின்றனர். (நல்லறங்களில் செலவு செய்யாமல்) தமது கைகளைப் பொத்திக் கொள்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வை மறந்தனர். அதனால், அவனும் அவர்களை மறந்து விட்டான்” (9:67)
“மக்கள் புகழ்ச்சிக்காகத் தங்கள் செல்வங்களைச் செலவிடக்கூடாது” (4:38 வசனத்தின் கருத்து)
திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துப்படி, அல்லாஹ் அடியார்களுக்கு வழங்கிய செல்வங்களை அல்லாஹ்வுக்காக செலவும் செய்ய வேண்டும். சிக்கனத்தையும் பேண வேண்டும்.
கையை இருக்கவும் வேண்டாம், விரிக்கவும் வேண்டாம் :
“(நீர் செலவு செய்யாது) உமது கையை உமது கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர். மேலும், (அனைத்தையும் செலவு செய்து) அதனை முழுமையாக விரித்து விடவும் வேண்டாம். அவ்வாறாயின், நீர் இழிவுபடுத்தப்பட்டவராகவும், கைசேதப்பட்டவராகவும் ஆகிவிடுவீர்” (அல்குர்ஆன்: 17:29)
கஞ்சத்தனம் செய்தால் மக்களால் தூற்றப்படுவர், சக்திக்கு மீறி அனைத்தையும் செலவு செய்தால், மேற்கொண்டு செலவழிக்க ஏதுமின்றி கைசேதப்பட்டவராய் முடங்கி நிற்க வேண்டும்.
கருமித்தனமாக கையை மூடி வைத்துக் கொள்ளவும் வேண்டாம். ஊதாரித்தனமாக கையை விரித்து அனைத்தையும் செலவு செய்திடவும் வேண்டாம். “செலவும் செய்ய வேண்டும், சிக்கனம் பேணி சேமித்தும் வைக்கவேண்டும்” என்பதே மேற்கண்ட வசனத்தின் கருத்தாகும்.
நபிமொழி :
“நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர்(ரழி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (சேகரித்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் உன்னிடமும் கஞ்சத்தனம் காட்டப்படும் என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: செலவழி கணக்கிட்டு(செலவழித்து)க் கொண்டிருக்காதே! (அப்படிக் கணக்கிட்டு நீ செலவழித்தால்) அல்லாஹ்வும் உனக்கு (தரும்போது) கணக்கிட்டு(தந்து) விடுவான். கஞ்சத்தனமாகப் பையில் (சேர்த்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன்னிடம் கஞ்சத்தனமாக நடந்து கொள்வான். (அறிவிப் பாளர்: அஸ்மா(ரழி) நூல்கள் : புகாரி : 2590,2591, முஸ்லிம்: 1867, திர்மிதி: 1883)
செலவு செய்வதிலும் சிக்கனப்படுத்துவதிலும், நடுநிலை வகித்திட வேண்டும்.
சிக்கனம் :
ஊரடங்கு உள்ளிருப்பு காலத்தில் வருமானமின்றி சிரமப்படுவோருக்கு, அவர்களின் சிக்கனம் சேமிப்பு இந்த இக்கட்டான நேரத்தில் பேருதவியாக இருக்கும். பொருள் சிக்கனம், (விலை குறைந்த) ஆடை சிக்கனம், உணவுச் சிக்கனம் (அளவாகப் பேசும்) வார்த்தை சிக்கனம் என சிக்கனம் மிக அவசியமானது, அருமையானது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரழி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்” என்று கூறியதைக் கேட்டேன். (முஸ்லிம் : 4182)
“அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலிப்பகுதி” (நபிமொழி கருத்து) என நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்”
பகுதி – 6 :
இதன் பின்னர் பூமியை அவன் விரித்தான். மேலும், “அதிலிருந்து அதன் நீரையும், அதன் மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளிப்படுத்தினான். மேலும், மலைகளை (முளைகளாக அதில்) நாட்டினான். “உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனாக அமையும் பொருட்டு” (இவ்வாறு செய்தான்)
(அல்குர்ஆன்: 79:30-33)
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பூமியிலிருந்து அதன் நீரையும், அதன் மேய்ச்சல் நிலங்களையும் அல்லாஹ்வே வெளிப்படுத்தினான். மனிதர்களும் கால்நடைகளும் உண்ணும் தாவரங்கள் மற்றும் பயிர்களை வெளிப்படுத்தும் மேய்ச்சல் நிலங்களையே இவ்வசனங்கள் குறிப்பிடுகின்றது.
பூமியில் மேய்ச்சல் நிலத்தில் வெளிப்படும் தாவரங்களிலிருந்து நேரடியாக அல்லது வேறு ஒன்றாக மாற்றி எல்லா உயிரினங்களும் உணவைப் பெற்றுக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக: சைவ உணவு உண்ணாத வனவிலங்குகள் தாவரங்களை உண்ணும் கால்நடைகளை இரையாக்கிக் கொள்கின்றது.
சைவம் அசைவம் இரண்டையும் உண்ணும் மனிதன், மேய்ச்சல் நிலத்தில் விளையும் தாவரங்களையும், தாவரங்களை மேயும் கால்நடைகளையும் உணவாக்கிக் கொள்கிறான். ஆக, எல்லா உயிரினங்களுக்கும் பூமியிலிருந்தே நீர், உணவு வெளிப்படுகின்றன. இதுதான் உயிரினங்களுக்கு உணவளிக்கும் அல்லாஹ்வின் கட்டமைப்பு.
“நீரின்றி அமையாது உலகு” என்ற வாய்மைச் சொல்லுக்கேற்ப, பூமியில் ஊற்றெுத்து ஓடும் நீரோடையின் அருகில் குடி பெயர்ந்து, தரிசு நிலங்களையும் விவசாய நிலங்களாக பண்படுத்தி நீரைப் பாய்ச்சி விவசாயம் செய்து உணவைப் பெற்றுக் கொண்டனர். அத்துடன் கால்நடைகளையும் நிலங்களில் மேய்த்து வளர்த்துப் பயனடைந்து கொண்டார்கள்.
இப்படி, ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த மக்கள் அந்தந்தக் காலகட்டத்தின் சுற்றுச்சூழல் சுவை, மதிப்பு, மகிழ்ச்சியை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். வெறும் செய்தியைத் தவிர, முந்தைய தலைமுறையின் அனுபவ ரீதியான உணர்வு அடுத்தத் தலைமுறைக்குக் கிடைக்காது.
சுமார் 50 வயதைக் கடந்து இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் முதியவர்கள் தமது பால்யப் பருவம் மற்றும் வாலிபப் பருவத்தில் அனுபவித்துச் சுற்றுச் சூழல் மதிப்பையும், நீர் உணவு தரவுகளையும் இன்றைய உணவு நீர் தரவுடன் ஒப்பிட்டு நோக்கினால் உணவு, நீர், பால், பருகும் பானங்கள், நோய் நீக்கும் மருந்துகள் அனைத்திலும் பார்வையால் பிரித்தறிய இயலாத கலப்படப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, உணவாக மருந்தாக இருந்த காலம் மாறி, இப்போது உணவே விஷமாக இருந்தும் வேறு வழியின்றி அறிந்தே கலப்பட உணவை பசிக்காக சாப்பிடுகின்றோம். இதன் விளைவு, முன்னர் கேள்விப்படாத பெயர்களில் நோய்க்கு மேல் நோயாக மனித இனம் நோய்களை சந்தித்து வருகிறது.
மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளிலும் நோயாளிகள் கூட்டம் குவிந்து காணப்படுகின்றன. எந்த நோய்க்கு மருத்துவம் பார்த்தாலும் நோய் குணமடைய வைத்தியம் பார்ப்பதில்லை. நோயும் தொடர வேண்டும், மருந்தையும் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். மருத்துவருக்கும் தொடர் வருமானம் வந்து கொண்டிருக்க வேண்டும்.
இதை “வாழ்நாள் முழுவதும்” (LIFE LONG) மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்று நோயாளி சுமக்க முடியாத மருத்துவச் செலவை நோயாளியின் தலையில் சுமத்தி விடுகிறது. இதுதான் இன்றைய நவீன மருத்துவத் துறையின் அவலம்.
இதனால், இயற்கைக்கு எதிரான கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளை தினமும் நோயாளிகள் உட்கொள்வதால் உடல் உறுப்புகளின் ஒவ்வாமை, மாத்திரை மருந்துகளில் கலந்துள்ள கெமிக்கல், மற்ற உடல் உறுப்புக ளையும் தாக்கி பக்க விளைவை ஏற்படுத்தி நோய்களையும் அதிகரித்து விடுகின்றது.
புற்றுநோய், சர்க்கரை நோய், இருதய நோய், தைராய்டு, கிட்னி, கல்லீரல், மண்ணீ ரல், நுரையீரல் குடல், குடல்வால் நோய், மூட்டுகளில் வலி, தசைகளில் பாதிப்பு என எந்த ஒரு சிறு நோய்க்கும் அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு நோயாளிகள் நிர்ப்பந்திக் கப்பட்டுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் தாய்ப்பேறு சுகப்பிரசவம் அரிதிலும் அரிதாகி விட்டது. தாயின் கருவறையிலிருந்து குழந்தையை வெளியே எடுக்க அறுவை சிகிச்சை மட்டும் தான் ஒரே வழி என மருத்துவத் துறை அதற்கென ஒரு தொகையை நிர்ணயித்து வசூல் வேட்டை நடத்துகிறது. இப்படி ஏராளமான நோய்ச் செலவுகள் மனிதனின் வாழ்வில் புகுந்து கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.
சராசரி கீழ்த்தட்டு, நடுத்தட்டு மக்களால் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் மருத்துவச் செலவுகளை சமாளிக்க முடியாமல் நோயில் மரணிக்கின்றனர். அல்லது கடனை வாங்கியா வது மருத்துவம் செய்து நோயைக் குணப்படுத்தலாம் என்று முயன்றாலும் அதிலும் பலனின்றி நோயாளி மரணித்து விடுகிறார்.
இவை சொகுசான ஆடம்பர வாழ்க்கையை விரும்பி மனிதன் தன் கரங்களால் தேடிக் கொண்டவை நோயைத் தருபவனும் நோய் நிவாரணம் அளிப்பவனும் இறைவன். இறைவனைத் தவிர நிகழும் மரணத்தை எவராலும் நிறுத்திட முடியாது. எனினும், உடல் ஆரோக்கியம் குறைந்து அழிந்து வருவதற்கு மனிதன் இயற்கை உணவுகளைப் புறக்கணித்து உடல் உறுப்புக்களுக்கு ஒவ்வாத கலப்பின உணவுக்கு மாறியது பிரதான காரணமாகும்.
வாழ்வாதாரத் தேவைகளில் உணவுக்கானத் தேவையே மிக அவசியமாகும். உணவுக்கானத் தேவையை விட இன்றைய நவீன உணவினால் ஏற்படும் நோய்க்கான மருத்துவச் செலவுகள் அதிகரித்து விட்டன.
அதிகரித்துச் செல்லும் செலவுகள் கட்டுப்படுத்த வருமானம் அதிகரிக்க வேண்டும், செலவுக்கேற்ற வருமானம் இல்லை என்றால் செலவைக் குறைப்பதால் மட்டுமே சிக்கனம் ஏற்படும். இதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் நவீன உணவுப் பழக்கத்திலிருந்து விடுபட்டு, இயல்பான இயற்கை உணவின் பக்கம் திரும்ப வேண்டும். இன்றைய அறிவியல் சமூக ஆர்வலர்களும், மக்கள் நலம் நாடும் மருத்துவ அறிஞர்களும் வேண்டுவதும் இதுவே!