இறந்தவர்களுக்கு நன்மை சேருமா?

in 2021 ஜுலை

இறந்தவர்களுக்கு நன்மை சேருமா?

கு. நிஜாமுத்தீன்

முஸ்லிம்களில் மரணித்தவருக்கு நன்மை சேர்க்கிறோம் என்ற பெயரில் அனேக சடங்குகள் நடப்பதை நாம் காண்கிறோம். இது சம்மந்தமாக இருதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.

  1. இறந்தவருக்காக எந்த நன்மையான காரியத்தை செய்தாலும் அதன் நன்மை இறந்தவருக்குப் போய்விடும் என்பதாகும். தர்மம் செய்தல், பாத்திஹா மற்றும் குர்ஆன் ஓதுதல் இதில் அடங்கும். இது முதல் சாராரின் கூற்று.
  2. நமது விருப்பப்படியயல்லாம் இறந்தவர்களுக்கு நன்மையை செய்ய முடியாது. மார்க்கம் ஒரு சில வி­யங்களையே அனுமதிக்கிறது என்பது இரண்டாம் சாராரின் கூற்று.

இந்த இரண்டு வாதங்களையும் அலசும் போது இரண்டாம் சாராரின் வாதங்களே சரியாக இருக்கின்றது. இரண்டாம் சாராரின் வாதங்களையும், ஆதாரங்களையும் பார்த்து விட்டு முதல் சாராரின் தவறுகளை காண்போம்.

வாதம்: 1

ரசூல்(ஸல்) அவர்களின் வாழ்நாளோடு இந்த மார்க்கம் நிறைவு செய்யப்பட்டு விட்டது. இதை இறைவன் அரஃபா மைதானத்தில் வைத்து அறிவித்துள்ளான். (இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணப்படுத்திவிட்டேன் அல்குர்ஆன் 5:3) முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் இறைவனாலோ, இறைத் தூதராலோ கற்றுக் கொடுக்கப்படாத ஒரு செயல் வழிகேட்டிற்கு இட்டுச் செல்லும் என்பது நபிவழி – பொது விதி.

நமது கட்டளை இல்லாமல் ஏதேனும் ஒன்றை யாரேனும் புதிதாக உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரழி), நூல்: புகாரீ) முஸ்லிம்.

புதிதாக உருவாக்கப்படுவதை விட்டும், உங்களை நான் எச்சரிக்கிறேன், புதியவைகள் அனைத்தும் வழிகேடாகும் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: ஜாபீர்(ரழி), நூல்: முஸ்லிம்.

நபி(ஸல்) இவ்வளவு எச்சரித்துள்ளதால் அவர்களின் ஏவல்களுக்கு அப்பாற்பட்ட செயல்கள், அவை எவ்வளவு நன்மையானதாக தெரிந்தாலும் அவை வழிகேடுகளாகும்.

எனவே இறந்தவர்களுக்கு நாம் நினைத்தபடி எல்லாம் நன்மை செய்யாமல் ரசூல்(ஸல்) அனுமதித்தவைகளையே செய்ய வேண்டும்.

வாதம் : 2

அருள்மறை குர்ஆன் இறங்கிக் கொண்டிருக்கும்போதே பல சஹாபாக்கள் மரணத்தை தழுவினார்கள். அவர்களில் எவருக்குமே இன்று நடக்கும் சடங்குகள் போல் நபி(ஸல்) செய்யவில்லை. சடங்குகள் செய்யுமாறு தூண்டி இறைவன் வஹி அறிவிக்கவில்லை.

இந்த இரண்டு வாதங்களுக்குப் பிறகு இறந்தவர்களுக்காக அனுமதிக்கப்பட்டவைகளுக்குரிய ஆதாரங்களை இரண்டாம் சாரார் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆதாரம் : 1

ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களை தவிர மற்ற செயல்கள் வெட்டப்படுகின்றன. (ஒன்று) பயன்படும் கல்வி, (இரண்டு) நிரந்தர தர்மங்கள், (மூன்று) நல்ல குழந்தைகள் என்பது நபிமொழி. அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்: முஸ்லிம், அஹ்மத்

ஒரு மனிதன் உயிரோடு இருக்கக் கூடிய காலங்களில் அவன் செய்த நல்லறங்களில் இரண்டு நல்லறங்களின் பலன்கள் மரணத்திற்கு பிறகும் அவனுக்குச் சென்றுக் கொண் டிருக்கின்றன. அவனது குழந்தைகளின் பிரார்த்தனையின் பலன்களும் மேலதிகமாக அவனுக்கு செல்கின்றன.

ஆதாரம் : 2: நோன்பு

இறந்துவிட்ட மனிதருக்காக இரத்தத் தொடர்புடைய முஸ்லிம்களும், இரத்தத் தொடர்பு இல்லாத மார்க்க சகோதர அடிப் படையிலான முஸ்லிம்களும் சில செயல்களை செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது.

எவரேனும் தம்மீது நோன்பு கடமையான நிலையில் இறந்துவிட்டால் அவருக்காக அவரது வாரிசுகள் நோன்பு வைக்கலாம் என நபி(ஸல்) அனுமதித்தார்கள். அறிவிப்பாளர்: ஆய்ஷா(ரழி), நூல் : புகாரி: முஸ்லிம்

“அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் ஒரு மாத நோன்பு கடமையான நிலையில் மரணமடைந்து விட்டார்கள், என் தாயாருக்காக நான் அந்த நோன்பை பிடிக் கலாமா? என்று ஒரு மனிதர் கேட்டார். உன் தாயாருக்கு கடன் இருந்தால் அதை நிறை வேற்றுவது உன்மீது கடமையல்லவா? நோன்பு இறைவனுக்குரிய கடனாகும். அது நிறைவேற்றுவதற்கு மிகவும் தகுதியானதாகும்” என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்: புகாரீ, முஸ்லிம்.

நபி(ஸல்) இந்த ஹதீஃதில் “வாரிசுகள்’ என்று கூறியுள்ளதால் இறந்தவரிடமிருந்து வாரிசுரிமைப் பெறக்கூடிய எவர் வேண்டுமானாலும் அந்த நோன்பை நிறைவேற் றலாம்.

ஆதாரம் 3 : ஹஜ் :

இறைவனின் தூதரே! ஹஜ் செய்ய வேண்டும் என்று என் தாயார் நேர்ச்சை செய்தார்கள். மரணம் வரும்வரை அதை அவர்கள் நிறைவேற்றவில்லை. அவர்கள் சார்பாக நான் ஹஜ் செய்யட்டுமா? என்று ஒரு பெண் கேட்டார். அதற்கு நபி(ஸல்) “உன் தாயாருக்கு கடன் இருந்தால் நிறைவேற்றுவாயல்லவா? அல்லாஹ்வின் கடன் நிறைவேற்ற மிகவும் தகுதி வாய்ந்ததாகும். எனவே நீ ஹஜ் செய்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்:புகாரி.

மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய கடன்கள், இறைவனுக்காக செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேற்றப்படாத நிலையில் எவரேனும் இறந்து விட்டால் அவர் சார்பாக அவரது சந்ததியினர் அவற்றை நிறைவேற்றலாம் என்பதற்கு மேற்கண்ட ஆதாரங்கள் தக்க சான்று.

மனிதர்களின் கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதிலிருந்து ஜகாத் கடமையான நிலையில் எவரேனும் மரணித்தால் அதுவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை விளங்கலாம்.

தொழுகை என்பது இறைவனுக்காக நிறைவேற்றப்படக்கூடியது என்றாலும் அதை “களா” செய்ய மார்க்கத்தில் அனுமதியில்லாததால் அதை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.

ஆதாரம் 4 : தான தருமங்கள் :

“கொஞ்சம் சொத்து இருக்கும் நிலையில் எந்த வஸிய்யத்தும் செய்யாமல் என் தந்தை இறந்துவிட்டார். அவருக்காக அந்த சொத்தை நான் தருமம் செய்தால் இறைவன் ஏற்பானா? என்று ஒரு மனிதர் கேட்டார். “ஆம்” என்று நபி(ஸல்) பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்: முஸ்லிம், அஹ்மத்.

என் தாயார் மரண வேளையில் இருக்கும்போது பேச முயற்சித்தார்கள். அவர்கள் பேசி இருந்தால் தர்மம் செய்ய சொல்லி இருப்பார்கள் என கருதுகிறேன். அவருக்காக, நான் தான தர்மம் செய்யலாமா? என்று ஒருவர் கேட்க, “ஆம்’ என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: ஆய்ஷா(ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்.

இறந்த பிறகு எவருடைய சொத்திலிருந்து தான தர்மம் செய்யலாம்? என்பதற்கு முதல் ஹதீஃத் தெளிவு கூறுகிறது.

என் தந்தை சொத்தை, விட்டு சென்றுள்ளார். அதிலிருந்து தர்மம் செய்யலாமா? என் பதே கேள்வி. நபி(ஸல்) “ஆம்’ என்று சொன்னதால் தர்மம் செய்ய இறந்தவரிடம் சொத்திருக்க வேண்டும் என்பது தெளிவு.

இரண்டாவது ஹதீஃதில், சொத்து இல்லாமல் தர்மத்திற்கான கோரிக்கை வந்துள்ளதால் எவரேனும் இத்தகைய கோரிக் கையை வைத்துவிட்டு மரணித்தால் அவரிடம் சொத்து இல்லாவிட்டாலும் கூட, வாரிசுதாரர் அவருக்காக தான தர்மம் செய்யலாம். ஆனால் எவரேனும் சொத்தையும் விட்டு செல்லாமல் தானதர்மத்திற்கான வஸிய்யத்தும் செய்யாமல் மரணித்தால் அவருக்காக தானதர்மம் செய்ய வேண்டிய கடமையில்லை. அத்தகையவர்களுக்கு பிரார்த்தனை செய்வது மட்டுமே போதுமானது.

ஆதாரம் 5 : எவர் வேண்டுமானாலும் பிரார்த்திக்கலாம்.

கப்ராளிகளுக்காக துஆ செய்ய குர்ஆன் கூறுகிறது.

“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர் களான எங்கள் சகோதரர்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக. (அல்குர்ஆன் 59:10)

நபி(ஸல்) துஆவை கற்று தந்துள்ளார்கள்.

முஃமினான முஸ்லிமான மண்ணறைவாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை தொடர்ந்து வருவோம். உங்களுக்கும் எங்களுக்கும் இறைவனின் சுக வாழ்வு கிடைக்கட்டும். அறிவிப்பாளர்: புரைதா (ரழி), நூல்: முஸ்லிம், அஹ்மத்.

மேற்கண்ட ஐந்து ஆதாரங்களின் அடிப்படையில் செய்யக்கூடிய செயல்களே இறந்துவிட்ட முஸ்லிமுக்கு நன்மைப் பயக்கக் கூடியதாக இருக்கின்றன. இதுவே இரண்டாம் சாராரின் வாதமாகும். குர்ஆன், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்து இவைப் பெறப்பட்டதால் இதுதான் ஏற்றுக்கொள்ளத்தக்க வழிமுறையாகும்.

இனி முதல் சாராரின் ஆதாரங்களை காண்போம்.

மேற்கூறப்பட்ட விஷயங்களோடு மட்டும் நின்றுவிடாமல் குர்ஆன் ஓதி அதன் நன்மையை சேர்த்து வைத்தல் மற்றும் பாத்திஹாக்கள் ஓதி அதன் நன்மையை சேர்த்து வைத்தல் ஆகியவையும் இறந்தவர்களுக்கு பயனளிக்கும் என முதல் சாரார் கூறுகிறார்கள்.

இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதலாமா? ஓதலாம் என்பதற்கு முதல் சாரார் கொடுக்கும் ஆதாரம்.

“உங்களில் இறந்தவர்களுக்கு யாசீன் ஓதுங்கள்” என்ற ஹதீஃதாகும். இந்த ஹதீஃத் இப்னு யஸார்(ரழி) அறிவிக்க அபூதாவூத், இப்னு மாஜ்ஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் வந்துள்ளது.

இது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்தால் முதல் சாராரின் கூற்றை ஏற்கலாம். ஆனால் இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. இந்த ஹதீஃதின் அறிவிப்பா ளர்களின் தொடரில் இடம் பெறும் இரண்டாவது அறிவிப்பாளரான உஸ்மான், மூன் றாவது அறிவிப்பாளரான அபூ உஸ்மான் ஆகிய இருவர் பற்றியும் நிறைய விமர்சனங்கள் உள்ளன.

இவர் யாரென்றே விளங்காதவர் (தஹபீ) இவரது தரம் சரியில்லாதது (இப்னுல் மதீனீ) இந்த ஹதீஃத் தொடர் பலவீனமானது (தாரகுத்னீ)

இப்படி பல வழிகளில் இந்த ஹதீஃத் செயல்படுத்த முடியாததாக ஆகிவிட்டதால் முதல் சாராரின் வாதம் பலவீனப்பட்டு விடுகின்றது.

அடுத்த ஆதாரம் :

இறந்து விட்டவரிடத்தில் யாஸீன் ஓதப்பட்டால் அல்லாஹ் அவருடைய வேதனையை குறைக்காமல் விடமாட்டான் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூதர்(ரழி) நூல்: அக்பர்.

இந்த ஹதீஃதின் நான்காவது அறிவிப்பாளர் மர்வான் இப்னு ஸாலிம் இவர் பற்றிய விமர்சனங்கள்.

இவர் பலமானவர் அல்ல (நஸயீ, அஹ்மத் பின் ஹம்பல்)

இவரது ஹதீஃத்கள் மறுக்கப்பட வேண்டியவை. (அபூஹாத்தம்)

நம்பகமானவர்கள் பெயரில் ஹதீஃதை இட்டுக்கட்டுபவர் (இப்னு ஹிப்பான்)

இவரது செய்திகள் ஒதுக்கப்பட வேண்டியவை (அபூநயீம்)

இந்த ஹதீஃதும் பிரச்சனையின் மொத்த உருவமாக இருப்பதால் இதுவும் ஒதுக்கப்பட வேண்டியதாகும்.

இந்த இரண்டு ஹதீஃத்கள் தவிர வேறு எந்த ஆதாரமும் முதல் சாராரிடம் இல்லை. இந்த ஹதீஃத்களில் கூட முழு குர்ஆன் ஓதுவதாக வரவில்லை. யாஸீன் மட்டுமே ஒத சொல்வதாக வந்துள்ளதையும் முதல் சாரார் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

யாசீன் ஓதுவதற்காகவாவது பலவீனமான ஹதீஃத்கள் இருக்கின்றன. 3,7,15,30, 40 நாள், 6 மாத வருட பாத்திஹாக்கள், ஓதுவதற்கு பலவீனமான ஹதீஃத்கள் கூட இல்லை. மத்ஹபுகளின் பிக்ஹு கிதாபுகளில் கூட இதற்கான ஆதாரங்கள் இல்லை. இது முழுக்க மாற்றார்களிடமிருந்து தழுவி எடுத்துக் கொண்ட முறையாகும். பிக்ஹு சட்டங்களில் இல்லாததைக் கூட, மக்கள் செயல்படுத்த ஊக்குவிப்பதன் காரணம் வருமானம்தான் என்பது தெளிவாகிறது.

ரசூல்(ஸல்) உயிரோடு இருக்கும் போதே சிறிய தந்தை ஹம்ஸா(ரழி), மனைவி கதீஜா(ரழி) உட்பட பல நபித் தோழர்கள் மரணமடைந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இதுபோன்ற சடங்கை நபி (ஸல்) செய்யவில்லை.

ஏனெனில் இறைவன் மூட சடங்குகளின் மூட்டையாக இஸ்லாத்தை கொடுக்கவில்லை. எனவே இதை உணர்ந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய முறைப்படி நமது செயல்களை அமைத்துக் கொள்ள முன் வருவோமாக.

Previous post:

Next post: