தலையங்கம்!
தேர்வு இல்லை! தேர்ச்சி உண்டு!!
கொரோனா ஊரடங்கால் 2019-2020 கல்வி ஆண்டுகளில் தேர்வு நடத்தாமல் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெறுவர் என அரசு அறிவித்தது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த அனைவருமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் என்ற ஊரில் தனியார் பள்ளி ஒன்றில் 2019-2020ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு படித்த ஸ்ரீதர் என்பவர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. ஸ்ரீதரின் தந்தை சுரேஷ் குமார் பள்ளி நிர்வாகத்தை அணுகினார். அடுத்த கல்வி ஆண்டில் பெயரை சேர்ப்பதாக பள்ளி நிர்வாகம் வாக்களித்ததாம்.
அடுத்த 2020-2021 கல்வி ஆண்டில் தேர்வு நடத்தாமல் அனைத்து மாண வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். ஆனால், தேர்ச்சியை எதிர்பார்த்து காத்திருந்த ஸ்ரீதர் ஏமாற்றம் அடைந்தார். ஏனெனில் இந்த ஆண்டும் அவர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை.
ஸ்ரீதரின் தந்தை சுரேஷ் குமார், மேற்கண்ட தகவல்களைக் கூறி, தனது மகனை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மனு ஒன்றை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருப்பதாவது. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களிடம் புதிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. நேரடி வகுப்புகள் இல்லாமலே, 2020-2021 கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் முறையிலேயே நடந்துள்ளது. இதனால் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. எனவே, இரண்டு வாரத்திற்குள் மனுதாரர் மகன் ஸ்ரீதர் 2020-2021ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற பாதிப்பு யாருக்கேனும் ஏற்பட்டிருந்தால், நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம். வழக்காடு மன்றத்தை அணுகுபவர்களுக்கு ஸ்ரீதருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு முன்மாதிரியாக இருக்கும் என நம்புகிறோம்.