“ஸ்பீடு’ – வேகம்
– இன்ஜினீயர்
மறு பதிப்பு
“எந்த மவ்லவிகளானாலும், அல்லாஹ்வும் அவன் தூதர்(ஸல்) அவர்களும் கூறிய உண்மையான நேர்வழியைக் காட்டமாட்டார்கள்” என்று “அந்நஜாத்’ மூலம் சொல்லிக்காட்டிக் கொண்டே இருக்கிறோம். இவ்வுண்மையை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் “அல்லாஹ் அர்ஷ´ன் மீதா? அல்லது ஆகாயத்திலா?” என்ற ஒரு 21ம் நூற்றாண்டுக்கு மிகவும் தேவையான ஒரு கேள்வியை அவர்களாகவே கேட்டுக் கொண்டு பதிலையும் அவர்களாகவே கொடுத்துக் கொண்டுள்ளார்கள். இப்படி ஒரு அறிவுமிக்க ஒரு கேள்வியை எவருமே நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். இப்படி ஒரு கேள்வி நிச்சயம் தேவைதான். இல்லை என்றால், எவருக்கும் உணவு, உடை, தண்ணீர் கிடைக்காது. ஏன் இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளைக் கூட செய்திட இயலாது. முஸ்லிம்கள் தீவிர வாதிகள் என்று பெயர் பெற்று இருக்கும் இக்கால கட்டத்தில் இந்த ஆராய்ச்சி அத்தியாவசியத் தேவைதான். இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்தால், தவ்ஹீது ரசிகர்கள் கூடிய விரைவில் “இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் தேவைதானா?” என்ற ஒரு அறிவுப்பூர்வமான ஆராய்ச்சியை வேண்டி நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
நபி(ஸல்) அவர்கள், “நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி, இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன்” என்று கூறியது, அல்லாஹ்விற்கு சர்வ சாதாரண மானது என்பதை விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
எந்த ஒரு முஸ்லிமும் அல்லாஹ் கீழ் வானத்திற்கு இறங்கி வந்துவிட்டால், “அர்ஷ்’ காலியாகி விடும், என்ற அவர்களின் கண்டுபிடிப்பை, நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.
மனிதர்கள்தான் ஒரே நேரத்தில் பல்வேறு, ஏன் இரு வேறு காரியங்களைச் செய்திட முடியாது. தன் பின்னால் என்ன நடக்கிறது என்று கூடப் பார்க்க முடியாது. வல்ல அல்லாஹ்வுடன் மனிதனையும் ஒப்பிட்டு, ஆராய்ச்சி செய்திருப்பது கேலிக் கூத்து. மேலும் மிகப் பெரிய பாவம்.
அவர்களுடைய புதிய கண்டுபிடிப்பின்படி, அல்லாஹ்வால் ஒரே ஒரு மனிதனைத் தான் பார்க்க முடியும். ஒரே ஒரு மனிதனின் துஆவைத்தான் அங்கீகரிக்க முடியும். ஏனெனில் ஒரு மனிதனை பார்த்துக் கொண்டிருக்கும்போது, இன்னொரு மனிதனைக் கண்காணிக்க இயலாது. அவர்களின் புது Theoryபடி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வந்துவிட்டால், பழைய இடம் காலியாகி விடுகிறதே!
ஆனால், அவர்களுடைய புதிய கண்டு பிடிப்பிற்கு சாட்டையடியாக, வல்லோன் கூறுவதைக் காண்க :
“அல்லாஹ், தன் ஞானத்தால் அனைத் தையும் சூழ்ந்துள்ளான்”. (அல்குர்ஆன்:65:12)
“அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை”. (அல்குர்ஆன் 6:59)
“நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினா லும், நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்தா லும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும் போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும், (நபியே) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைந்து விடுவதில்லை….” (அல்குர்ஆன் 10:61)
நாம் அடிக்கடி தினந்தோறும் ஓதும் ஆயத்து குர்ஸியில், “அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது…” என்று கூறியுள்ளான். (அல்குர்ஆன் 2:255)
“(நபியே) என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால், நிச்சயமாக நான் மிகச் சமீபமாகவே இருக்கிறேன் பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு விடையளிக்கிறேன்….” (அல்குர்ஆன் 2:186)
மேற்கூறப்பட்ட ஐந்து ஆயத்களே நபி (ஸல்) அவர்களின் ஹதீஃதை நிரூபிக்கப் போதுமானவை.
அவர்களின் விளக்கத்திலுள்ள அபத்தங்களைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறோம்.
அல்குர்ஆன் வசனம் 7:54க்கு அவர்க ளின் மொழி பெயர்ப்பாவது “உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும், ஆறு நாட்களில் படைத் தான். பின் அர்ஷ´ன் மீது அமர்ந்தான்”. இது போன்றவைகள் 20:5, 10:3, 13:2 வசனங்களி லும் அல்லாஹ் அர்ஷ´ன் மீது அமர்ந்திருக்கின்றான் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளனர். அல்குர்ஆன் வசனம் 11:7ஐ விட்டுவிட்டனர். ஆனால் அவர்கள் கூறியுள்ளபடி “அர்ஷ´ன் மீது அமர்ந்தான்’ என்று பெருவாரியான மொழி பெயர்ப்புகளில் காணப்படவில்லை. அமைந்தான், நிலைநாட்டினான், உயர்ந்தான் என்றே காணப்படுகின்றன. அவைகளின் விபரம் :
“நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியை யும் ஆறு நாட்களில் படைத்து, அர்ஷ´ன் மீது தன் ஆட்சியை நிலைநாட்டினான்”. தர்ஜுமத்துல் குர்ஆன் ஆசிரியர்: ஆ.கா. அப்துல் ஹமீது பாகவீ.
“நிச்சயமாக உங்கள் ரப்பு அல்லாஹ் தான், அவன் எத்தகையவனென்றால், வானங்களையும், பூமியையும் ஆறு நாட்க ளில் படைத்தான். பின்னர் அர்´ன் மீது (தன் ஆட்சியைக் கொண்டு) நிலையானான்” தர்ஜுமா அல்குர்ஆனில் கரீம், ஆசிரியர் க. முஹம்மது சிராஜுத்தீன் நூரீ.
“நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷ´ன் மீது தன் ஆட்சியை அமைத்தான்.” குர்ஆன் மஜீத், வெளியீடு : ஜான் டிரஸ்ட்.
….வானங்களையும் மற்றும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர்(தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத் திற்குரியவாறும் அர்´ன் மீதிருப்பது அவ னுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்´ன் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட் டான்…. (மதீனா மொழிபெயர்ப்பு)
இக்கருத்துக்களை அல்குர்ஆன் வசனம் 2:255 சிறப்புடையதாக்குகிறது. அதாவது உறுதிப்படுத்துகிறது. “அவனுடைய அரியா சனம் (குர்ஸிய்யு) வானங்களிலும் பூமியி லும் பரந்து நிற்கின்றது.’
எனவே அவர்கள் கூறியுள்ளபடி, “அமர்ந்தான்’ என்றால் “அமர்ந்ததுதான்’ பின்பு “எழுந்திருக்கவே முடியாது’ என்று எவரும் மொழி பெயர்க்கவில்லை. கீழ் வானத்திற்கெல்லாம் வந்தால் 24 மணி நேரமும் அங்கேயே தான் இருக்கவேண்டி வரும். வேறு பணியாற்ற இயலாது என்று வல்ல அல்லாஹ்வையும், மனிதனைப் போல் அவர்கள் கருதிவிட்டனர்.
மேலும் அவர்கள் எழுதியுள்ளபடி, “அமர்ந்தான்’ என்ற வார்த்தை IFT மொழி பெயர்ப்பில் காணப்படுகிறது. இருப்பினும் IFT மொழி பெயர்ப்பில், 7:54 வசனம் பொருள் முடிவாக அறிவிக்கப்பட முடியாத “முதாஷாபிஹாத்’ என்று குறிப்பிட்டுள்ளனர். பார்க்க : IFT திருகுர்ஆன், பதிப்பு 1989, முதல் பாகம் பக்கம் 261 அடிக்குறிப்பு.
7:54 முதஷாபிஹாத் வசனம்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கீழ்க்கண்ட ஆயத்துகளையும் காண்க:
அல்குர்ஆன் 22:47 வசனத்தில் “உம்முடைய இறைவனிடம் ஒருநாள் என்பது நீங்கள் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகள் போலாகும்’, என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
70:4 வசனத்தில், “ஒரு நாள் மலக்குகளும் (ஜிப்ரயிலாகிய) அவ்வான்மாவும் அவனிடம் ஏறிச் செல்வார்கள். அ(த்தினத்தி)ன் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்’ என்றும் அல்லாஹ் கூறி யுள்ளான்.
எனவே அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் என்பது 1000 ஆண்டுகள் என்பதும், 50000 ஆண்டுகள் என்பதும் புரிகின்றது.
2:255ல் “அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது’ என்று அல்லாஹ் கூறியுள்ளான். எனவே அல்லாஹ்வின் ஆட்சி அனைத்திடங்களிலும் உள்ளது.
வல்ல அல்லாஹ் ஏழாவது வானத்திலி ருந்து முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இறங்கும் தூரத்தை அறிய வேண்டியவர்களாகிறோம். அவ்வாறு அறிந்தால்தான் அல்லாஹ்வின் ஆற்றல், வல்லமை புரியும். இவைகளை மனிதனால் நினைத்துக்கூடப் பார்க்க இயலாது என்பதும் புரியும்.
தூரத்தின் விபரத்தை அறிவதற்கு, கீழ்க்கண்ட ஆயத்துகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்”.
அல்குர்ஆன்: 37:6
மேலும் 41:12 வசனத்தில், “ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான். ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமையை இன்னதென அறிவித்தான். இன்னும் உலகிற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்….” என்று கூறியுள்ளான்.
எனவே ஏழு வானங்களில் கீழ் வானத்தில் தான் நட்சத்திரங்கள் உள்ளன என்பது தெளிவு.
இந்நட்சத்திரங்களில் மிக அருகிலுள்ள நட்சத்திரம், பூமியிலிருந்து 2,53,428 கோடி மைல்கள் தூரத்தில் உள்ளது. அதாவது சுமார் 2.5 இலட்சம் கோடி மைல்கள், இந்நட்சத்திரங்களில், முதல் வானத்திலுள்ள மிகப் பிரகாசமான நட்சத்திரம் 5,17,440 கோடி மைல்கள் தூரத்தில் உள்ளது. அதாவது சுமார் 5 லட்சம் கோடி மைல்கள்.
(தூரம் : ஆதாரம் Clarke’s Table என்ற Physical & Mathematical Tables by John B. Clarke)
எனவே பூமியிலிருந்து முதல் வானத்தின் தூரம் சுமார் 5 லட்சம் கோடி மைல்கள்.
சமீபத்தில் வானிற்கு சென்று வந்த “டிஸ்கவரி’ விண்கலத்தின் வேகம் மணிக்கு 16,900 மைல்.
காரின் வேகம் மணிக்கு 100 மைல் (அதிகபட்சம்)
இரயிலின் வேகம் மணிக்கு 100 மைல் (அதிகபட்சம்)
விமானத்தின் வேகம் மணிக்கு 1000 மைல் (அதிகபட்சம்)
இவைகளில் மிக வேகமாகச் செல்லக் கூடிய விண்கலத்தின் மூலம், முதல் வானத்தை அடைய, சுமார் 33,675 வருடங்கள் ஆகும்.
7வது வானத்தை அடைய சுமார் 2,35,725 வருடங்கள் ஆகும்.
எனவே அல்லாஹ் கூறிய அந்த 7 வானங்களையும் அடையவே அடைய முடியாதுங்கோ! கற்பனை கூட செய்ய முடியாது!
ஆனால் எந்தவித விஞ்ஞான முன்னேற்றம், கார், பஸ், இரயில், விமானம், விண்கலம் எதுவுமே இல்லாத சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் சுலைமான்(அலை) அவர்களிடம், ஞானம் மிக்க ஒருவர், அரசியின் சிம்மாசனத்தை கண்மூடித் திறப்பதற்குள் கொண்டு வந்ததாக, அல்குர்ஆன் இயம்புகிறது. காண்க. அல்குர்ஆன் 27:38,39,40)
2,35,725 வருடங்களில் சென்று அடையக்கூடிய 7வது வானத்தை, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையால், மிஃராஜ் இரவில் சென்று வந்துள்ளார்கள். காண்க. அல்குர்ஆன் 17:1,60 புகாரீ 1:349, முஸ்லிம் 1:309.
வல்ல அல்லாஹ்வின் அருட்கொடையால், நபி(ஸல்) அவர்கள் நொடிப் பொழுதில் 7வது வானத்திற்குச் சென்று வந்திருக்கும்போது, வல்லோனின் ஆற்றலைக் கணக்கிட இயலுமா?
எனவே வானங்கள், வானங்களின் தூரங்கள், அல்லாஹ் 7வது வானத்திலிருந்து முதல் வானத்திற்கு இறங்குவது போன்ற வைகள் நாம் இலகுவில் புரிந்து கொள்ள இயலாதவை.
ஆகவேதான் நாம் அல்லாஹ் கூறுவதையும், அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி (ஸல்) அவர்கள் நவின்றதையும் கூறியவாறே ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய சொந்த ஊகங்களைப் புகுத்தி, அல்லாஹ்வுடன் போட்டி போடக்கூடாது.
நாமும் ஒரு வேகத்தில் சென்றால் எல்லா வானங்களுக்கும் செல்ல முடியும். அது எந்த வேகம் என்று கேட்கிறீர்களா? அது மனோ வேகம்தான்.
அம்மனோ வேகத்தைவிட பல கோடி மடங்கு வேகத்தில் செல்ல வல்லோன் ஆற்றலுடையவன்! அல்லாஹ் மிக நன்கறிந்தவன்!!