அமல்களின் சிறப்புகள்…

in பொதுவானவை

தப்லீக்  ஜமாஅத்தினரின்  தஃலீம்  தொகுப்பு நூல்…

அமல்களின் சிறப்புகள்…

ஒரு திறனாய்வு !

  1. அப்துல் ஹமீத்

தொடர் : 75

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்  (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

சென்ற இதழில் ….!

“திக்ர் செய்பவர் தூங்கினாலும், திக்ரை மறந்து இரவில் விழித்திரு(ந்து தொழுப) பவர்களை விட மேலான அந்தஸ்தை அடைந்து கொள்கிறார்’ என்று துணிச்சலாக, நெஞ்சழுத்தத்துடன், இஸ்லாத்தில் இல்லாத புதிய அமலை அசி ஆசிரியர் அறிவித்திருந்ததை சென்ற இதழில் விரிவாக பார்த்தோம். அசி புத்தகத்தின் இந்த கூற்று புனித குர்ஆன் ஆயத்துக்களுக்கும், ஹதீதுகளுக்கும் எதிராக ஷைத்தானியத்தனமாக பொய்யைப் புனைந்திருக்கிறது என்பதை அல்குர்ஆன் 73வது அத்தியாயத்தின் ஆரம்ப ஆறு வசனங்களையும், முஃகீரா இப்னு ஷிஅபா (ரழி) அவர்கள், புகாரியில் அறிவித்துள்ள ஹதீத் எண் 4836ஐயும் மேற்கோள்காட்டி நிரூபித்திருந்தோம்.

இந்த இதழில்….!

அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தின் பக்கம் 413ல் முதல் பாராவில் 36ஆம் எண்ணில் எழுதப்பட்டுள்ளதாவது:

திக்ரினால் ஏற்படும் ஒளி உலக வாழ்விலும், கப்ரிலும் உடனிருக்கும், சிராத்துல் முஸ்தகீம் பாலத்தின் மீதும் முன்னால் சென்று கொண்டிருக்கும்.

எமது ஆய்வு !

மேலே காட்டியுள்ள இரண்டு வரி செய்திகளில் மூன்று கருத்துக்களை அசி புத்தகம் தெரிவித்து இருக்கிறது.

  1. “திக்ர் செய்வதால் ஒளி ஏற்படும்’ என்பதை நேரிடையாகக் கூறாமல், அன்றாட வாழ்வில் அனைவருக்கும் வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏதோ உண்மை நிகழ்ச்சி போல சர்வசாதாரணமாக “திக்ரினால் ஏற்படும் ஒளி’ என்று கூறுகிறது அசி புத்தகம்!
  2. உலகத்திலும், கப்ரிலும் அந்த ஒளி திக்ர் செய்தவருடன் இருக்குமாம்.
  3. திக்ர் செய்தவர் மறுமையில் பாலத்தைக் கடக்கும்போது அந்த ஒளி முன்னால் சென்று கொண்டிருக்குமாம்.

அசி ஆசிரியர் கூறியிருக்கும் இந்த 3 செய்திகளும் உண்மையா? அல்லது பொய்யா? இதனை குர்ஆன், ஹதீத் ஆதாரங்களுடன் ஆய்வு செய்வோம். முதல் செய்தியான “திக்ர் செய்தால் ஒளி ஏற்படும்’ என்று அதாவது “திக்ரினால் ஏற்படும் ஒளி’ என்று கூறப்பட்டுள்ள செய்தியை இந்த இதழில் ஆய்வு செய்வோம்.

“திக்ரினால் ஒளி ஏற்படுமா?’ என்பதை ஆய்வு செய்யப் புகுமுன், ஒளியைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகி விட்டது. ஆகவே, முதலில் இறைவனின் பேரொளியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இறைவனின் பேரொளி :

கீழ்க்காணும் 7:143 இறைவசனத்தில் இறைவனின் பேரொளி பற்றி புனித குர்ஆன் பேசுகிறது.

“நாம் குறித்த காலத்தில் மூஸா வந்த போது’ “அவருடைய இறைவன் அவருடன் பேசினான்’ அப்போது மூஸா, “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!’ என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது; எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்’ என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்தபோது, அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும் “இறைவா! நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.  (அல்குர்ஆன் 7:143)

அழகாகவும் பொருத்தமாகவும் ஒரு செய்தி மற்றொரு செய்தியையும் இணைத்துக் கொண்டு சங்கிலித்தொடர் போல பற்பல செய்திகள் பொதிந்து கிடக்கும்படியாக கண்ணியமிக்க இறைவன் இந்த வசனத்தை அமைத்துத் தந்திருப்பது, ஆழ்ந்து படிக்கும் நம்முள் மென்மேலும் வியப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது! அதுமட்டுமல்லாமல், இறைவன் மீது நமக்குள் ஒரு பயத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. திக்ர் செய்வதால் ஒளி ஏற்படும் என்ற அசி புத்தகத்தின் கருத்தின் மீதான எமது இந்த ஆய்வுக்கு இந்த இறை வசனம் தொடர்புடையதாக இருப்பதால், இந்த வசனத்தை முடிந்தவரை இப்போது பார்த்து விட்டு, பிறகு இந்த இறை வசனத்தைக் கடந்து செல்வோம்!

“நாம் குறித்த காலத்தில் மூஸா வந்தபோது’ என்று ஆயத்து ஆரம்பிக்கப்பட்ட விதம், எந்த நேரத்தில் எந்த இடத்தில் மூஸா இறைவனை சந்திக்க வேண்டும் என்ற விசயத்தை, மூஸாவுக்கு அல்லாஹ் ஏற்கனவே அறிவித்திருக்கிறான் என்பதைத் தெரிவிக்கிறது. ஏனெனில், இறைவனை சந்திப்பதற்கு ஏதுவாக, குறிப்பிட்ட நேரமும், இடமும் தெரிந்திருந்தால் தானே மூஸா அந்த இடத்துக்கு சென்று இறைவனை சந்திக்க முடியும். இவற்றை எல்லாம் உள்ளடக்கி “நாம் குறித்த காலத்தில் மூஸா வந்தபோது’ என்று அழகாகத் தெரிவிக்கிறான் இறைவன்.

“அவருடைய இறைவன் அவருடன் பேசினான்’ என்ற சொற்கள் ஆயத்தில் அடுத்ததாக அமைந்திருக்கிறது. இம்மையில் இறைவனைப் பார்க்க முடியுமா என்பது இந்த ஆயத்தின் கருவாக இருக்கும்போது, இறைவன் மூஸாவுடன் பேசினான் என்றால், இறைவன் மூஸாவை பார்த்துத்தானே பேசி இருப்பான் என்றும், அப்போது மூஸாவும் இறைவனைப் பார்த்துத்தானே இருப்பார்கள் என்று ஒவ்வொருவரும் சிந்தனை செய்வதற்கு இந்த சொற்கள் தாராளமாக இடமளிக்கிறது. இறைவனின் இந்த சொற்கள் இம்மையில் இறைவனைப் பார்க்க முடியுமா? என்ற வினாவின் மீது நமக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்தை மென்மேலும் தூண்டி விட்டாலும், இந்த சிந்தனை பாவமாயிற்றே என்று இந்த வசனத்தின் இறுதியில் வரும் அல்லாஹ்வின் வார்த்தைகள் நம்மை பயப்படச் செய்து விடுகிறது!

அல்லாஹ் பிறரிடம் பேசும் வழி யாது?

அல்லாஹ் பிறரிடம் பேசும் வழியை 42:51வது இறைவசனம் தெரிவித்திருப்பதைப் பாருங்கள். “அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹியின் மூலமாகவோ, அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ, அல்லது தான் விரும்பியதை தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக்கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை’ நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்’.  (அல்குர்ஆன் 42:51)

அப்போது மூஸா, “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!’ என்று வேண்டினார். மூஸாவுடைய விருப்பத்திற்கு உடனே ரிசல்ட் கிடைத்து விடுகிறது. அதாவது “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது’ என்ற முடிவான தீர்ப்பை திட்டவட்டமாக தெரிவித்து விடுகிறான் இறைவன். இதுதான் இறைவன் தந்த ரிசல்ட்! விஷயம் முடிந்துவிட்டது.

ஆனால், இறைவனின் பேரொளியைப் பற்றி மூசாவும் நாமும் பாடம் பெற வேண்டுமே? ஆயத்தைத் தொடர்கிறான்! பாருங்கள்!!.

“என்றாலும், நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்’ என்று இறைவன் தொடர்கிறான். தம்மை சந்திக்கும்படி மூஸாவிடம் இறைவன் கூறிய இடம் ஒரு மலை என்பதை இப்போது அனைவராலும் அறிந்து கொள்ள முடிகிறது.

சொல்லப்பட்ட இடத்திற்கு வந்ததும், மூஸா இறைவனைப் பார்த்தாரா? இல்லை! “நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும்’ என்ற இறைவனின் கட்டளைக்கு அடி பணிந்து, மூஸா இப்போது மலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன எண்ணங்களுடன் அந்த மலையை மூஸா பார்த்துக் கொண்டிருப்பார்?

“அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்’ என்று இறைவன் மூஸாவுக்குக் கொடுத்த அதிர்ச்சித் தகவலின்படி, அந்த மலை நிலைத்து இருக்க வேண்டுமே. அப்போதுதானே இறைவனைப் பார்க்க முடியும் என்ற ஆவலுடன் மலையைப் பார்த்துக் கொண்டு இருந்திருப்பார் அல்லவா?

“ஆகவே, அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்தபோது, அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்’ என்று வல்லமை பொருந்திய அல்லாஹ் தெரிவிக்கிறான். மலையைத் தூளாக்கி விட்டதால், அதன் மூலமாக அல்லாஹ்வை இம்மையில் நேரில் எவரும் பார்க்க முடியாது என்பதை மூஸாவுக்கும், மனித குலம் முழுமைக்கும் இறைவன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டான்.

மலையைத் தூளாக்கியது அல்லாஹ் தான் என்றாலும், அவனது பேரொளியைத் தாங்கும் சக்தி மலைக்குக் கூட கிடையாது என்ற இன்னுமொரு உண்மையை 59:21 இறைவசனம் மூலம் இறைவன் நமக்கு எடுத்துக் காட்டுவதைப் பாருங்கள்!

“நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கி இருந்திருப்போமேயானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்…”
(குர்ஆன் 59:21)

மலையானது நொறுங்கி தூளாக்கிவிட்டதும், “மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார்’ என்று இறைவசனம் அடுத்துத் தெரிவிப்பதன் மூலம், இம்மையில் அல்லாஹ்வை நேரில் பார்க்கவே முடியாது என்பது மட்டுமில்லாமல் அல்லாஹ்வின் பேரொளியையும் பார்க்க முடியாது என்பதையும், “மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார்’ என்ற செய்தியின் மூலம் அல்லாஹ் தெரிவிக்கிறான்.

“இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியை தோற்றுவித்தபோது, அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்’ என்பதைப் படிக்கும்போது இறைவனை பார்க்க வேண்டும் என்று சொல்வதும், இறைவனின் பேரொளியைப் பார்க்க வேண்டும் என்று சொல்வதும் பாவம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எப்படி? “அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்’ என்ற உண்மையிலிருந்து இதை அறிந்து கொள்ள முடிகிறதல்லவா?

“என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!’ என்று வேண்டிய மூஸா, தான் வேண்டியதே தவறு; அதனால் அல்லாஹ்வின் கோபம் ஏற்படும் என்பதை உணர்ந்ததால்தான். மூஸா தெளிவடைந்ததும் “இறைவா! நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று அல்லாஹ்விடம் மன்றாடினார். இறைவனின் இந்த சொற்கள் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பது கூட பாவம் என்ற பயத்தை நமக்குள்ளும் ஏற்படுத்தி விட்டதல்லவா?

அது மட்டும் அல்ல: இம்மையில் இறைவனைப் பார்க்க நினைப்பது, இறை நம்பிக்கையாகிய இஸ்லாத்திற்கு முரணான நம்பிக்கையாகும் என்பதையும் மூஸா கூறிய “ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்’ என்ற தனது ஈமானுக்கு உத்திரவாதம் கொடுத்ததிலிருந்தும் மிகவும் தெளிவாக இறைவன் நமக்கு கற்றுத் தந்து விட்டான்.

இந்த சம்பவத்திலிருந்து அல்லாஹ்வை நேராகவோ, ஒளியாகவோ இம்மையில் யாரும் பார்க்கமுடியாது என்பதை அறிந்தோம்.

இறை நூல்களுக்கும் ஒளி :

அடுத்ததாக, இறை நூல்களுக்கும் ஒளி இருக்கிறது என்பதை இனி தெரிந்து கொள்வோம்!

தூதர்கள் ஒளி வீசும் வேதத்துடன் வந்திருந்தார்கள் என்கிறது 35:25 இறை வச னம் நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த ஒளியின் (அல்குர்ஆன்) மீதும் ஈமான் கொள்ளுங்கள் என்கிறது 64:8 இறைவசனம்; ஒளி மயமான குர்ஆனைப் பின்பற்ற சொல்கிறது 7:157 மற்றும் 42:52 இறைவசனங்கள்; மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் கொடுத்த நெறிநூல் ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனை யாகவும் இருந்தது என்கிறது 21:48 இறை வசனம்.

மனிதர்களுக்கு ஒளி :

அடுத்ததாக, இறைவன் படைத்த மனிதர்களுக்கு ஒளி இருக்குமா என்பதை கவனிப்போம்.

இஸ்லாத்திற்காக அல்லாஹ்வால் இதயம் விசாலமாக்கப்பட்டவர் இறைவனின் ஒளியில் இருக்கிறார் என்கிறது 39:22 இறை வசனம்: அல்லாஹ் தான் நாடியவரை ஒளி (என்னும் சத்தியப் பாதை)யின்பால் நடத்திச் செல்கிறான் என்கிறது 24:35 இறை வசனம்; புகாரி 3327, சுவர்க்கத்தில் பிரவேசிக்கும் முதல் அணியினர் சந்திரனைப் போல பிரகாசிப்பார்கள் என்கிறது; இன்னும் (மூசாவிடம்) உம் கையை உம் விலாப் புறமாக புகுத்தி (வெளியில்) எடுத்தால், அது ஒளி மிகுந்து மாசற்ற வெண்மையாக இருக்கும் என்கிறது 20:22 இறை வசனம்; இரண்டு சஹாபாக்கள் வீடு வரை செல்ல ஒளி, வழிக்காட்டி உதவியதை புகாரியின் 465, 3639, 3805 ஆகிய ஹதீதுகளில் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றை இப்போது தெரிவிக்கிறோம்.

நபித்தோழர்களில் இரண்டு மனிதர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (பள்ளிவாசலை விட்டும்) இருள் சூழ்ந்த இரவில் (தங்கள் இல்லங்களுக்கு) புறப்பட்டார்கள். அவ்விருவருக்கும் முன்னால் இரண்டு விளக்குகள் போன்று எதுவோ ஒளி வீசிக் கொண்டிருந்தது. (அந்த இருவரும் அவரவர் வழியில் பிரிந்து சென்றபோது) ஒவ்வொருவருடனும் விளக்கு போன்ற ஒன்று அவர்கள் தம் வீடுகளை அடையும் வரை ஒளி வீசிக் கொண்டிருந்தது. (அறிவிப்பாளர்: அனஸ் (ரழி), புகாரி 465 மற்றும் 3639,3805)

வஸ்துக்களுக்கும் ஒளி :

அடுத்ததாக, இறைவன் படைத்த மனிதர்களுக்கு ஒளி இருக்கிறது என்று இறைவன் கூறி இருப்பதை இப்போது கவனிப்போம். இறை வசனம் 10:5, அல்லாஹ் தான் சூரியனைப் பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான் என்கிறது; இறை வசனம் 24:35 அல்லாஹ் வானங்கள், பூமிக்கு ஒளி என்றும் ஒளி வீசும் நட்சத்திரம்  என்கின்றது.

மொத்தத்தில், அனைவருக்கும், அனைத்து வஸ்துக்களுக்கும் ஒளி இருக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜத் தொழுகையில் பிரார்த்தித்த போது, “இறைவா! நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் ஒளியும் ஆவாய்’ என்று பிரார்த்திப்பார்கள். (புகாரி 7447)

ஒளி வீசும் அனைவருக்கும் அனைத்து வஸ்துக்களுக்கும் ஒளி எப்படி கிடைத்தது?

இதனை கண்ணியம் மிக்க அல்லாஹு தஆலா 39:69 ஆயத்தில் “மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்” என்று குறிப்பிட்டதிலிருந்து எவருக்கும். எந்தப் பொருளுக்கும் தமக்குத் தாமே சுயமாக ஒளி இல்லை என்பதையும், ஒளி வீசும் அனைத்துமே இறைவனின் நாட்டத்தில் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கிறது என்பதையும் சுலபமாக அறிந்து கொள்ள முடிகிறது.

மனிதர்களுக்கும், வஸ்துக்களுக்கும் ஒளி கிடைப்பது அல்லாஹ் நாடினால்தானா?

அதிலென்ன சந்தேகம்? எல்லாமே அல்லாஹ்வின் நாட்டத்தின் பேரிலேதான் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது, இனியும் நடக்கும். “மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்” என்று அல்லாஹ் 39:69 ஆயத்தில் கூறியிருப்பதிலிருந்தும், “இறைவா! நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் ஒளியும் ஆவாய்…” என்று அல்லாஹ்வின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதிலிருந்தும் (புகாரி 7442 அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி 1120,7385,7442, 7499)

மனிதர்களுக்கும், வஸ்துக்களுக்கும் ஒளி கிடைப்பது அல்லாஹ்வின் நாட்டத்தில் தான் என்பது உண்மை.

குர்ஆன் கூறும் இந்த உண்மையை நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹதீதில் தமக்காகப் பிரார்த்திருப்பதைப் பாருங்கள். இதன் மூலம் நாமும் பிரார்த்திக்க ஒரு முன்மாதிரியைத் தந்திருப்பதையும் கவனியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்த னையில், “இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும், ஒளியை ஏற்படுத்துவாயாக! என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் வலது பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடது பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக!

எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு எல்லாவற்றிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் நரம்பிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் சதையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இரத்தத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் ரோமத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் சருமத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக என் மனதிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி 6316)

நமது அமல்களால் நமக்கு ஒளி கிடைக்குமா?

நமக்கு ஒளி கிடைப்பதற்கு, அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் அறிவித்துத் தந்துள்ள அமல் ஒன்றையும் தெரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்து அமல் செய்வோம்.

“பள்ளிவாசலின் மேற்புறத்தில் அபூ ஹுரைரா(ரழி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூ ஹுரைரா(ரழி) உளூச் செய்தார். அப்போது அவர்கள். “நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தினர் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால், “முகம், கை, கால்கள் ஒளிமயமானவர்களே!’ என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள். (அறிவிப்பாளர் நுஅய்கி அல் முஜ்மிர், புகாரி, 136)

நபியையும், அவருடன் ஈமான் கொண்டவர்களையும், அல்லாஹ் அந்நாளில் இழிவுபடுத்த மாட்டான். அவர்களுடைய ஒளி அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள், “எங்கள் இறைவா! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன் என்று கூறிக் கொண்டு இருப்பார்கள்.  (அல்குர்ஆன் 66:8)

இறைவனுடைய ஒளியைக் கொண்டு தான் அனைத்துமே பிரகாசிக்கிறது என்று புனித குர்ஆன் கூறுவதால், திக்ரினால் ஒளி ஏற்படும் என்ற அசி புத்தகத்தின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் குர்ஆன், ஹதீதுகளில் இல்லை. ஒளியை பிரார்த்தனையின் மூலம் பெற முயற்சிக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் நமக்குக் கற்றுத் தந்துள்ளதால், இன்ஷா அல்லாஹ், அதற்காக துஆ செய்வோம்.

அசி புத்தகத்திலுள்ள மற்ற இரண்டு கருத்துக்களையும் அடுத்தடுத்து தொடர்ந்து பார்ப்போம்!

இன்ஷா  அல்லாஹ்  தொடரும்…

Previous post:

Next post: