அழகிய  முன்மாதிரி!

in 2021 டிசம்பர்

தலையங்கம்!

அழகிய  முன்மாதிரி!

அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

வல்லோனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ்வை வழிபட்டு, அவனது இறுதித் தூதருக்கு மட்டும் கட்டுப்பட்டு, அதாவது அல்லாஹ் இறக்கி அருள்புரிந்த நேர்வழி போதிக்கும் குர்ஆனையும், குர்ஆனுக்கிணங்க தூதர் போதித்த செய்திகளையும் (ஹதீத்கள்) பின்பற்றி, உலகளவில் முஸ்லிம்களின் ஒரே ஜமாஅத்தாக (ஜமாஅத்துல் முஸ்லிமீன்) ஒரே தலைமையின் (அமீரின்) கீழ் செயலாற்றுவதுதான் இஸ்லாம்.

ஆதாரமாக, அல்லாஹ்வின் சொல்லும் தூதரின் ஹதீதும் இதோ! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு, நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.  (அல்குர்ஆன் 33:21)

“நிச்சயமாக! நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டே தான்” என்று (நபியே!) நீர் கூறும்; என்றாலும், அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, செவிடர்கள் அந்த அழைப்பை செவியேற்க மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 21:45)

“உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன், அவைகளை நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் வரை வழி தவற மாட்டீர்கள். அவை, அல்லாஹ்வின் புத்தகமும், அவனுடைய தூதரின் வழிமுறை ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: மாலிக்(ரழி), அவர்களிடமிருந்து யஹ்யா, நூல்: முஅத்தா மாலிக் அரபிபாடம் 46, எண் 16:28, ஆங்கில பாடம் 46, எண் 3)

இதுதான் இஸ்லாம் என்றிருக்க, பிறகு எதற்கு முஸ்லிம்கள் பல பிரிவுகளுக்குள் தஞ்சம் ஆயினர்? இதோ! புனித குர்ஆன் பதிலளிக்கிறது! “அவ்வாறிருந்தும், நிச்சயமாக (இப்லீஸாகிய) அவன் உங்களில் அதிகமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?” (அல்குர்ஆன் 36:62) இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜஹன்னம் (நரகம்) ஆகும். (அல்குர்ஆன் 36:63)

“(இப்லீஸ் ஆகிய) உன்னைப் பின்பற்றி வழி கெட்டவர்களைத் தவிர, நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எந்தவித அதிகாரமும் இல்லை” என்று கூறி அல்லாஹ் பிரிந்து போகாமல் மார்க்கத்தில் திடமாக இருக்கும் அடியார்களைப் பாதுகாத்து வருகிறான்; அல்ஹம்துலில்லாஹ்!

எச்சரிக்கை வந்த பிறகும் பல பிரிவுகளை ஏற்படுத்தியவர்கள் யார்? மார்க்கத்தை அறிந்தவர்கள் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பெரியார்களும் தலைவர்களும் தான்! இதைப் பற்றி இந்த குர்ஆன் மக்களுக்கு எச்சரிக்கை செய்யவில்லையா? ஏன் இல்லை? இதோ பாருங்கள்! தங்களிடம் ஞானம் வந்த பின்னர், தங்களுக்கு இடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை. (அல்குர்ஆன் 42:14)

நிச்சயமாக இஸ்லாம் தான் அல்லாஹ் விடத்தில் மார்க்கமாகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்கு கிடைத்த பின்னரும் தம்மிடையே உள்ள பொறாமையின் காரணமாக மாறுபட்டனர். எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன் 3:19)

இதுபோன்ற வசனங்களுக்கு பதிலளிக்க முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்களில், தப்பித்துக் கொள்ள ஏதுவாக, “இந்த வசனம் காஃபிர்களுக்கு இறக்கப்பட்ட வசனம்” என்று சொல்லிவிடுவார்கள்! இப் படிப்பட்ட பதில்கள் இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது! இதுபோன்ற பதில்களை கேட்பவர்கள் கூட காஃபிர் களுக்கு இறக்கப்பட்ட வசனம் முஸ்லிம் களுக்கு பொருந்தாதா? என்று அவர்களிடம் எதிர் வினா தொடுப்பதும் இல்லை!

இது இப்படி இருக்க, “உலகத்தார் அனைவருக்கும் குர்ஆன் நல்லுபதேசமே யன்றி வேறில்லை’ என்று 68:52 வசனத்தை மறுபக்கம் மக்களுக்கு உபதேசித்துக் கொண்டிருப்பார்கள் இந்த பிரிவினை வாதிகள். நிச்சயமாக இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் மார்க்கமாகும் என்று அல்லாஹ் கூறிவிட்ட பிறகு, அல்லாஹ் கூறிய இஸ்லாம் குர்ஆன், ஹதீதை பின்பற்றாதது போலவும், அதில் தவ்ஹீத் இல்லாதது போலவும், அவர்களின் பிரிவுகளுக்கு அஹ்லே ஹதீத், தவ்ஹீத், குர்ஆன், ஹதீத் என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்ந்து கொள்கிறார்கள்?

இந்த மக்களுக்கு மிகமிகக் கடுமையான எச்சரிக்கையை இஸ்லாம் விதித்திருப்பதைப் பாருங்கள்! நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ! கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவர்கள். (அல்குர்ஆன் 33:66)

“எங்கள் இறைவா! நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம், அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்’ என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:67)

“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக! அவர்களை பெரும் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” என்பார்கள். (அல்குர்ஆன் 33:68)
இந்த வசனங்களை இவர்கள் பிறருக்கு உபதேசித்து வருவதுதான் வேடிக்கையும், ஆச்சரியமும் கலந்த ஹைலைட்!

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவுகளை உண்டாக்கி, பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ… ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (அல்குர்ஆன் 30:32)

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ, அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் 6:159)

அவர்கள் தங்களிடம் ஞானம் வந்த பின்னர், தங்களுக்கிடையே உள்ள பொறாமை யின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை. (அல்குர்ஆன் 42:14)

அடுத்த பிரச்சனை! குர்ஆன் மட்டும் போதுமாம், ஹதீத்கள் வேண்டாமாம். இப்படி ஒரு பிரிவு, இதை நிலைநாட்ட அவர்கள் பேத்துகிற பேத்தல் இருக்கே, அவர்கள் பின்பற்றுவதாகக் கூறும் குர்ஆனே அவர்களுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டி ருக்கிறது. அடுத்த அறிஞர்கள்! புகாரியில் பல ஹதீத்களை நிராகரித்து அகற்றி விடுகிறார். இவரது அறிவிற்கு அவைகள் சரியான ஹதீத்களாகப் படவில்லையாம்! இவரது அறிவைப் பற்றி அல்லாஹ் குர்ஆனிலும், அவனுடைய தூதர் ஹதீத்களிலும் எதையேனும் சொல்லி இருக்கிறார்களா என்று பார்த்தால் ஒன்றுமே சொல்லப்படவில்லை! மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர் அல்லாஹ்வின் தூதர் மட்டுமே,

நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு உலக முடிவு ஏற்படும் நாள் வரை உள்ள முஸ்லிம்களுக்கு வேலை என்ன தெரியுமா? அல்லாஹ்வின் மார்க்கத்தில் கருத்து சொல்வது அல்ல! படித்தோமா, அமல் செஞ்சோமா என்று அடங்கிக் கிடக்க வேண்டியது மட்டும் தான். ஆளாளுக்கு ஆட்டம் போடக் கூடாது. நான் சொன்ன எதிர்மறை வாக்கியத்தில் அல்லாமல், அல்லாஹ் அழகாக இணக்கமான வாக்கியமாக 2:285வது வசனத்தில் சொல்வதைப் பாருங்கள். “நாங்கள் செவிமடுத்தோம்; வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். நாங்கள் மீளுவதும் உன்னிடமேதான்’ என்று கூற வேண்டும். இதுவரை அப்படிக் கூறி இருக்கிறார்களா அவர்கள்?

நபி(ஸல்) அவர்கள் தெரிவித்த செய்திகளான ஹதீத்களை ஆதாரப்பூர்வமான வைகளா, பலவீனமானவைகளா என்றெல்லாம் இப்போதுள்ள எவரும் ஆராய்ந்து, தரம் பார்த்து அறிவித்துத் தரவேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் அல்லாஹ்வின் நல்லடியார்களாக வாழ்ந்த புகாரி, முஸ்லிம் போன்ற கல்விமான்கள் மற்றும் எண்ணற்ற ஹதீத் கலா வல்லுனர்கள். ஒவ்வொரு ஹதீதையும் கடுமையான பல நிபந்தனைகளுக்கு உட்படுத்தி, எவரும் திரும்ப பரிசோதனை செய்ய தேவையற்ற நிலையில் அத்தனை ஹதீத்களையும் தரம் பிரித்து தந்து விட்டனர். இவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் எவராக இருந்தாலும், அவற்றைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

புகாரி இமாம் சொன்னால் அது சரியா கத்தான் இருக்கும் என்று நினைத்து செயல்பட்டால், அவர்களை தக்லீது செய்வதாகும் என்ற புலம்பல் வேறு! அல்குர்ஆன் 53:3

உங்களுக்கு அறிவுரை தருகிறதைப் பாருங்கள்.

“நிச்சயமாக நாம் தான் இந்நெறி நூலை இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின் றோம்” (அல்குர்ஆன் 15:9) என்று கூறிய அல்லாஹ். “(நம் தூதராகிய) அவர் தம் மனோ இச்சைப்படி பேசுவது இல்லை’ (அல்குர்ஆன் 15:9) என்று கூறிய அல்லாஹ். ஹதீத்களை மட்டும் பாதுகாக்காமல் விட்டு விடுவானா?

அல்லாஹ்வின் ஏற்பாட்டை கவனியுங்கள்! அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இருந்த நபி(ஸல்) அவர்கள் ஹதீத்களைத் தந்தார்கள். இஸ்லாத்தின் எதிரிகள் இடைச் செருகல் செய்து ஹதீத்களில் களங்கத்தை ஏற்படுத்தி விட்டனர். தாபியீன்கள் கால கட்டத்திலும், தபஉ தாபியீன்கள் கால கட்டத்திலும் ஹதீத் கலா வல்லுனர்கள் ஹதீத்கள் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேராக தரம் பிரித்து தந்து விட்டனர்.

இப்படி பாடுபட்ட உத்தமர்களைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் புகழாரம் சூட்டுவதைப் பாருங்கள். “இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என் தலைமுறையினரே, பிறகு அவர்களை அடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து அவர்களை அடுத்துவரும் தலைமுறையினர் ஆவர். பிறகு உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களிடம் சாட்சியம் சொல்லும்படி கேட்கப்படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். நம்பிக் கைக்கு உரியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள், ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடையே பருமனாக இருக்கும் நிலை தோன்றும். (அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹுதைன் (ரழி) புகாரி எண்: 3650)

குர்ஆன் மற்றும் ஹதீத்களை அடிப் படையாகக் கொண்டு அல்லாஹ் வடி வமைத்து தந்த இஸ்லாத்தில் குறை காண முயலாமல், முழு மன திருப்தியுடன் பின்பற்றி வாழ்வோமாக!

Previous post:

Next post: