உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! (ஸலாம்)
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:86)
மாற்று மதத்தார்கள் நமக்கு ஸலாம் சொல்லும்போது அதற்குப் பதிலாக இந்த வசனத்தின் பிரகாரம் வ அலைக்கு முஸ்ஸலாம் என்றோ அல்லது வரஹ்மத்துல் லாஹி வ பரக்கத்துஹு என்று கூடுதலாகவோ கூறலாம், அல்லது அப்படியே அதைத் திருப்பியும் சொல்லலாம் மாற்று மதத்தார்களுக்கு ஸலாம் சொல்ல மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை.
இதோ ஆதாரம் :
(அதற்கு இப்ராஹிம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடைய வனாகவே இருக்கின்றான்” என்று கூறினார். (அல்குர்ஆன் 19:47)
நிராகரிப்பாளரான தனது தந்தைக்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸலாம் சொன்னதாக எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.
மேலும், “ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்தது என எனக் கேட்டதற்கு (பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அறிவித்தார். புகாரி : 12. அத்தியாயம்: 2, ஈமான் எனும் இறை நம்பிக்கை.
மேற்கண்ட நபி மொழியில் யாரென்றே அறியாதவர்களுக்கும் ஸலாம் சொல்லலாம் என நபி(ஸல்) உத்திரவிடுகின்றார்கள்.
இந்த யாரென்றே அறியாதவர்கள் பட்டியலில் மாற்று மதத்தினர் அனைவருமே வந்துவிடுகின்றனர்.
இதுபோக நபி(ஸல்) அவர்கள் மாற்று மத மன்னர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கடிதம் அனுப்பும்போது கடிதத்தின் கடைசி வரியில் வஸ்ஸலாம் என முடிப்பார்கள்.
வஸ்ஸலாம் என்பதற்கு உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்ற பொருளைத் தருகின்ற வார்த்தையை எழுத்து மூலமாக சொல்வார்கள்.
மேற்கண்ட அல்குர்ஆன் வசனம் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளின் மூலம் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாத இந்து, கிறித்துவ சகோதரர்களுக்கும் தாராளமாக ஸலாம் சொல்லலாம் எனத் தெளிவாகத் தெரிய வருகிறது.
இதற்கு நேர்மாறாக மாற்று மதத்தவர்களுக்கு ஸலாம் சொல்லக்கூடாது என பெரும்பான்மையான முல்லாக்கள் மேற்கண்ட ஆதாரங்களை கவனிக்காமல் சில பலவீனமான ஹதீஃத்களை வைத்து சட்டம் போடுகின்றனர். மேற்கண்ட தெளிவான அல்குர்ஆன் வசனம் ஆதாரமாக இருக்கையில் வேறு யாருடைய யூகமும் தேவையில்லை. யூகங்கள் ஒருபோதும் மார்க்கமாகாது.