பலவீனத்தால் தொலைந்த முஸ்லிம்களின் பலம்!

in 2022 ஏப்ரல்

பலவீனத்தால் தொலைந்த முஸ்லிம்களின் பலம்!

அபூ மலிக்

பிறக்கும்போதே வீரனாக யாரும் பிறப்பதில்லை. அதேபோல், பிறவிக் கோழையாகவும் உலகில் எவரும் அவதரிப்பதில்லை.

ஒருவனது வீரம், கோழைத்தனம் என்பது, அவனது வாழ்நாளில் அவனுக்குள் வளரும் ஆன்ம பலத்தின் அளவை வைத்தே தீர்மாணிக்கப்படுகிறது.

தனது ஆன்மாவின் பலத்தை அதிகரித்துக் கொள்பவன் வீரனாகிறான். இருக்கும் ஆன்ம பலத்தையும் வீணாகத் தொலைத்து விடுபவன் கோழையாகிறான். அவ்வளவு தான்…

பலம் பாதி, பலவீனம் பாதி எனும் கலவைப் படைப்பாகவே ஒவ்வொரு மனிதப் பிறவியையும் இறைவன் இவ்வுலகுக்கு அனுப்புகிறான்.

இந்த இரண்டில் பலத்தை வளர்த்துக் கொள்வதா? அல்லது பலவீனத்தை வளர்த்துக் கொள்வதா? என்பதைத் தீர்மானித்துக் கொள்ளும் தேர்வு சுதந்திரம் அவனவன் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரு முஃமின் தனது ஆன்ம பலத்தை வளர்க்கும் காரியங்களில் அதிகம் ஈடுபடும்போது அவன் பலசாலியாக வளர்ந்து விடுகிறான். இதன் விளைவாகத் தனது எதிரி ஷைத்தானின் தாக்குதல்களை அவன் இலகுவாக முறியடித்து ஜெயிக்கிறான்.

இத்தகைய பலசாலிகளாக ஒவ்வொரு முஸ்லிமும் வளர வேண்டும் என்பதே இறைவன் விருப்பம்.

ஆதாரம் : “ஒரு பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட ஒரு பலசாலியான இறை நம்பிக்கையாளரையே இறைவன் அதிகம் விரும்புகிறான்” என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்.   (முஸ்லிம் 2664, பாடம் 33, ஹதீத் 6441, இப்னு மாஜா 4168)

ஒரு முஃமின் தனது ஆன்ம பலத்தை வளர்த்துக் கொள்வதற்கு இரண்டு பிரதான வழிகளை இறைவன் வழங்கியுள்ளான்.

ஒன்று, இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தல்; மற்றது, அந்த இறைவனோடு நெருக்கமான தொடர்பைப் பேணுதல்.

இந்த இரண்டையும் ஒருவன் சரியாகச் செய்தால், அவனது ஆன்ம பலம் அபரிமிதமாகப் பெருகிவிடும். அதன் பின் ஒட்டுமொத்த ஷைத்தான்களும் ஒன்று திரண்டாலும் அவனை வீழ்த்த முடியாது.

அதே நேரம், இரு வழிகளிலும் ஒருவன் தனது ஆன்ம பலத்தை வளர்த்துக் கொள்ளத் தவறும்போது, அவனுக்குள் இயல்பிலேயே கலந்திருக்கும் இரு பிரதான பலவீனங்களும் அவனை ஆட்கொள்ள ஆரம்பிக்கும்.

அவ்வாறானதொரு தருணத்துக்காகவே அவனது ஜென்ம எதிரி ஷைத்தானும் ஆவலோடு காத்திருக்கிறான்.

காரணம், அவ்விரு பலவீனங்களும் ஒருவனை ஆட்கொண்டு விட்டால், அதன் பிறகு அவனது ஆன்மாவை அடித்து வீழ்த்தித் தனது அடிமையாக ஆக்கிக் கொள்வது ஷைத்தானுக்கு மிகவும் சுலபம்.

எனவே, அந்த இரு பலவீனங்களையும் சரியாக இனங்கண்டு, அவற்றின் ஆதிக்கத்திலிருந்து தனது ஆன்மாவைக் காத்துக் கொள்வது ஒவ்வொரு முஃமின் மீதுமுள்ள கடமை.

மனிதப் பிறவிக்குள் கலந்திருக்கும் அந்த இரு பிரதான பலவீனங்களும் என்ன தெரியுமா?

  1. பயம் எனும் உணர்வு
  2. ஆசை எனும் உணர்வு

இந்த இரண்டில் ஒரு பலவீனத்தை ஒரு மனிதனுக்குள் மிகைக்கச் செய்து விட்டாலே போதும், அதன் பிறகு அவன் ஷைத்தானின் அடிமையாவது உறுதி.

அச்சமும், ஆசையும் மனிதப் பிறவியின் ஆன்மாவில் இரண்டறக் கலந்த இரு உணர்வுகள். இதை நம்மிலிருந்து மொத்தமாக இல்லாதொழிக்க முடியாது. அதே நேரம், இவ்வுணர்வுகள் இயங்கும் திசையை மாற்றியமைப்பதன் மூலம் அதிலுள்ள பலவீனங்களை அகற்ற முடியும்.

இவ்வுண்மையை நம்மை விடவும் நன்கறிந்தவனே இறைவன். அதனாலேயே, நமது அச்சமும், ஆசையும் எப்போதும் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி மட்டுமே இயங்க வேண்டுமென்று கட்டளையிட்டுள்ளான்.

அது என்ன திசை?

சுவர்க்கத்தை நோக்கி மட்டுமே நமது ஆசை பயணிக்க வேண்டும். நரகத்தை நோக்கி மட்டுமே நமது அச்சம் பயணிக்க வேண்டும்.

இதை இன்னொரு விதத்திலும் கூற முடியும்.

இறைவனது எல்லையற்ற கருணையின் பிரதிபலிப்பே சுவர்க்கம். அவனது கடும் கோபத்தின் பிரதிபலிப்பே நரகம்.

இதற்கமைய, அல்லாஹ்வின் கரு ணையை நோக்கி மட்டுமே நமது ஆசை எப்போதும் பயணிக்க வேண்டும். அதேபோல், அல்லாஹ்வின் கோபத்தை நோக்கி மட்டுமே நமது அச்சம் எப்போதும் பயணிக்க வேண்டும்.

இறைவனை நோக்கி நமது அச்சமும், ஆசையும் இயங்கும்போது மட்டுமே நமது ஆன்மாவின் பலவீனம் அகன்று, பலம் உள்ளே பெருகும்.

இந்த ஆன்ம பலம் அமையப் பெற்ற ஒருவன் இறைவனைத் தவிர வேறெந்த சக்திக்கும் அஞ்சமாட்டான். உலகமே ஒன்று திரண்டாலும் அவன் தளரமாட்டான். எத்தனை ஷைத்தான்கள் ஒன்று சேர்ந்தாலும் அவனை வீழ்த்த முடியாது.

இறைவனின் கருணை மீது மட்டுமே ஆசை வைத்தும், அவனது கோபத்தை மட்டுமே அஞ்சியும் வாழ்ந்து பழக்கப்பட்ட நபிமார்களும், ஸஹாபாக்களும் ஒரு போதும் கோழைகளாக இருக்கவில்லை.

ஊரே சேர்ந்து தீயில் தூக்கிப் போட்ட போதும் இப்றாஹீம்(அலை) துளியும் அஞ்சவில்லை; இறைவனே எனக்குப் போதுமானவன் என்றே நெஞ்சை நிமிர்த்திக் கூறினார்.

ஃபிர்அவ்னின் படையே பின்னால் துரத்த முன்னால் கடல் குறுக்கிட்ட போதும் மூஸா(அலை) கலங்கவில்லை. என் இறைவன் என்னோடு இருக்கிறான் என்றே தைரியமாகக் கூறினார்கள்.

மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களது வாளை ஒருவன் உருவி யயடுத்து அன்னாரை நிராயுதபாணியாக்கிய ஒரு காட்டரபி, “இப்போது என்னிடமிருந்து உன்னைக் காக்கப்போவது யார்?’ என்று மிரட்டியபோது “அல்லாஹ்’ என்று பதில் சொன்ன நபியின் உள்ளத்தில் துளியும் அச்சம் இருக்கவில்லை.

“அரபுலகம் முழுவதும் உங்களை அழிக்க ஒன்று திரண்டு விட்டார்கள். இப்போது என்ன செய்து தப்பிக்கப் போகிறீர்கள்?’ என்று மதீனாவில் நயவஞ்சகர்கள் கேட்ட போது, “எங்களுக்கு அல்லாஹ்வே போது மானவன்’ என்று ஸஹாபாக்கள் கூறிய போது அவர்கள் உள்ளத்தில் துளியும் அச்சம் இருக்கவில்லை.

இந்த வீரமும், மனோ வலிமையும் இவர் களுக்கு எங்கிருந்து வந்தது?

இறைவனது கோபத்தை மட்டுமே அஞ்சியும், அவனது கருணை மீது மட்டுமே ஆசை வைத்தும் வாழப் பழகும்போது மட்டுமே இதுபோன்ற மனோ வலிமை ஒருவருக்குள் ஏற்படும். இதுவே இறைத் தூதர்களதும், நபித் தோழர்களதும் அபார மன வலிமையின் இரகசியம்.

இந்த மனோபலம் ஒருவருக்குள் இருக்கும் வரை ஷைத்தான் அவரை வீழ்த்துவதை நினைத்துப் பார்க்க முடியாது.

இந்த ஆன்ம பலத்தைத் தவிடுபொடியாக்குவதென்றால், நமக்குள் இருக்கும் இரு பலவீனங்களையும் மிகைக்கச் செய்வதன் மூலம் மட்டுமே அது சாத்தியம்.

இதை நன்கறிந்ததனாலேயே நமது அச்சம் மற்றும் ஆசை ஆகிய இரு உணர்வுகளையும் இறைவன் பக்கமிருந்து உலக விசயங்களை நோக்கித் திசை திருப்பும் சூழ்ச்சிகளில் ஷைத்தான் அதிகம் ஈடுபடுகிறான்.

அல்லாஹ் மீது மட்டுமே இருக்க வேண்டிய அச்சம், அவனை விடுத்து ஏனைய உலக அம்சங்கள் மீது தாவும்போது நமது பலம் குன்றிப் பலவீனம் மிகைத்து விடுகிறது.

அதேபோல், அல்லாஹ்வின் கருணை (சுவர்க்கம்) மீது மட்டுமே இருக்க வேண்டிய ஆசை, அதை விடுத்து ஏனைய உலக அம்சங்கள் மீது தாவும் போதும் நமது பலம் குன்றிப் பலவீனம் இன்னும் மிகைத்து விடுகிறது.

இன்று நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று கொஞ்சம் கண்களைத் திறந்து பாருங்கள்.

v     “உலகெங்கும் நம்மைத் தாக்க எதிரிகள் பாய்ந்து வருகிறார்கள்!  எச்சரிக்கை! எச்சரிக்கை!!’

v    “உலகெங்கும் நம்மைச் சுற்றிச் சதி வலைகள் பின்னப்படுகின்றன!  எச்சரிக்கை! எச்சரிக்கை!!’

v    “உலகெங்கும் கொள்ளை நோய் பரவுகிறது!  எச்சரிக்கை! எச்சரிக்கை!!’

v    “ஊருக்குள் கொள்ளை நோய் வந்து விட்டது! நாளை உங்கள் வீட்டுக்குள்ளும் வந்து விடும்!  எச்சரிக்கை! எச்சரிக்கை!!’

v   “தினமும் இறப்பு வீதம் கூடிக் கொண்டே போகிறது அங்கு அவன் செத்து விட்டான்! இங்கு இவன் செத்து விட்டான்! நாளை நீங்களும் செத்து விடலாம்!  எச்சரிக்கை!  எச்சரிக்கை!!’

v    “இன்னின்ன அறிகுறிகள் ஏற்பட்டுவிட்டால், அடுத்து இன்னின்ன விளைவுகள் ஏற்படும்! அத்தோடு கதை முடிந்து விடும்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!’

v    “கூட்டாகச் சேர்ந்து தொழுதால், நோய் தொற்றி இறந்து போவீர்கள்! எனவே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!’

எந்தப் பக்கம் திரும்பினாலும், ஊடகமும் அதை ஈமான் கொண்ட கோழைகளும் உங்களைப் பயமுறுத்துவதிலும், இதில் சாகாமல் எப்படியாவது தப்பித்து நூறு வருஷம் இவ்வுலகிலேயே குடும்பம் குட்டிகளோடு வாழ வேண்டும் எனும் ஆசையைத் தூண்டுவதிலும் மட்டுமே குறியாக உள்ளார்கள்.

இது போதாதென்று முஸ்லிம் உம்மத்தின் புத்திசாலிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் பல சமூக ஆர்வலர்களும் தம் பங்குக்கு இதே பல்லவியைத் தாமும் பாடிப் பாடி, ஏற்கனவே பலவீனத்தில் நலிந்துள்ள இச்சமூகத்தை இன்னுமின்னும் பயமுறுத்திப் பலவீனப்படுத்துவதில் மட்டுமே குறியாக உள்ளார்கள்.

அல்லாஹ்வை மட்டுமே அஞ்ச வேண்டிய இந்த உம்மத்தின் உள்ளத்தில் அல்லாஹ்வைத் தவிர ஏனைய அனைத்தின் மீதும் அச்சத்தை விதைப்பதிலேயே இவர்கள் தீவிரமாக உள்ளார்கள்.

சுவர்க்கத்தை மட்டுமே ஆசைப்பட வேண்டிய இந்த உம்மத்தின் உள்ளத்தில் மேலும் சுவர்க்கத்தைத் தவிர ஏனைய உலக அம்சங்கள் அனைத்தின் மீது ஆசை பீறிடச் செய்வதிலேயே இவர்கள் குறியாக உள்ளார்கள்.

நோயையும், வறுமையையும், பிரச்சினைகளையும், அந்நிய சமூக அச்சுறுத்தல்களையும் காட்டிக் காட்டியே உங்களைத் தினமும் இடைவிடாது பயமுறுத்தும் நம் சமூகத்தின் புத்திசாலிகளில் எவராவது, “நோய்க்குப் பயந்து ஜும்ஆ கடமையையே நாம் புறக்கணித்தோமே, இதற்காக இறைவனின் கோபப் பார்வை நம்மீது இறங்கினால் என்ன செய்வது? என்று ஒரு தடவையாவது இறைவனைக் காட்டி உங்களை அச்சுறுத்தினார்களா?”

“கொள்ளை நோயில் இறப்பவர் உயிர்த்தியாகி’ என்று நபியவர்கள் தெளிவாகக் கூறியிருக்கும்போது, அதை உங்களுக்கு எடுத்துக்காட்டி, “இந்த நோயில் நாமும் சிக்கி இறந்தால், அதுவும் ஒரு பாக்கியமே; கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் போக இது ஓர் அரிய வாய்ப்பு’ என்று சுவர்க்கத்தை நோக்கி உங்கள் ஆசையைத் திருப்பி அதன் மூலம் உங்களது அனாவசிய அச்சத்தைப் போக்க இந்த முஸ்லிம் அறிவாளிகளில் எவராவது இதுவரை முயன்றார்களா?

இல்லையே! ஏன்? இன்னுமா புரியவில்லை?

எதற்கெடுத்தாலும் உங்களைப் பயமுறுத்துவதிலும், மரணத்தை வெறுக்கும் கோழைத் தனத்தை உங்களுக்குள் விதைப்பதிலும், இவ்வுலக வாழ்வின் மீது உங்களுக்குள்ள ஆசையை இரட்டிப்பாக்குவதிலும் மும்முரமாக ஈடுபடும் இவர்கள் அனைவருமே ஷைத்தான்களின் ஊழியர்கள்.

ஊடகத்தில் மட்டுமல்ல, உங்களோடு பழகும் பல அறிஞர்கள் / நலன் விரும்பிகள் / “புத்திசாலிகள்’ கூட இன்று ஷைத்தானின் ஊழியர்களாகவே செயல்படுகிறார்கள், விழித்துக் கொள்ளுங்கள்.

உங்களது வாழ்வும், மரணமும் இறை வனது பதிவேட்டில் எப்போதோ எழுதப்பட்டாயிற்று. உரிய நேரம் வந்துவிட்டால் நீங்கள் மரணித்தே ஆகவேண்டும். உரிய நேரம் வராத நிலையில் ஆயிரம் கொள்ளை நோய் வந்தாலும் உங்களைச் சாகடிக்க முடியாது.

அல்லாஹ்வைத் தவிர ஏனைய விசயங்களைக் காட்டிப் பயமுறுத்துவது ஷைத்தானின் சூழ்ச்சி!

சுவர்க்கத்தின் மீதான ஆசையை மறக்கடித்து, மரணத்தின் மீது வெறுப்பை அதிகரித்து, உலகில் நீண்ட நாள் வாழ வேண்டுமென்ற அற்ப ஆசையை உள்ளத்தில் அதிகரிப்பதும் ஷைத்தானின் சூழ்ச்சி!

“இறைவனின் திருப்தி மட்டுமே நமக்கு முக்கியம். அதற்கு முன்னால் நோயாகட்டும், மரணமாகட்டும், இழப்பாகட்டும், அனைத்தும் கால்தூசுக்குச் சமம்’ என்று உங்களுக்கு யார் தைரியமூட்டுகிறானோ, அவனே முஃமின்.

இப்படித்தான் ஒரு முஃமின் இருக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. அல்லாஹ்வே சொல்லிவிட்டான்.

ஷைத்தானே தன் சகாக்களைக் கொண்டு (உங்களை) இவ்வாறு பயமுறுத்துகிறான். அவர்களை நீங்கள் அஞ்சாதீர்கள். நீங்கள் முஃமின்களாக இருந்தால் எனக்கு (மட்டுமே) பயப்படுங்கள்.  (அல்குர்ஆன் 3:175)

அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுங்கள், அவனைத் தவிர வேறெதனையும் அஞ்ச வேண்டாம்.

எதற்கெடுத்தாலும் ஒருவரையயாருவர் பயமுறுத்தி உங்களை நீங்களே ஷைத்தானின் ஊழியர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் அல்லாஹ்வை முன்னிறுத்தி தைரியம் சொல்லும் முஃமின்களாக மாற முயற்சிப்போம். தன்னை மட்டுமே நம்பிச் சார்ந்திருக்கும் முஃமின்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிடுவதில்லை.

இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைஷகள் அனைத்தும் என்னையே சாரும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.

Previous post:

Next post: