இணைய வழி இல்லம் நுழையும் குழப்பவாதிகள்

in 2022 நவம்பர்

இணைய வழி இல்லம் நுழையும் குழப்பவாதிகள்

 அபூ ஹனிபா, புளியங்குடி

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் 1000 பேரில் 1000 பேர் நரகவாதியா?

சமூக வளைதளங்களில் ஃபஸாது :

கடந்த சில ஆண்டுகளாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்கள் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை விளக்கம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள்.

தனது முடிவை நோக்கி உலகம் பயணித்துக் கொண்டிருப்பதையும், அதன் நெருக்கத்தில் நாம் இப்போது இருப்பதையும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவையே. அதன் ஓர் அடையாளமாக அறிவீனர்களை மக்கள் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களது தீர்ப்பு மூலம் தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள் என்ற நபிமொழி(புகாரி:100) அடிப்படையில் மேடைகளிலும், இணை யத்திலும், மார்க்கம் என்ற பெயரில் தனது கற்பனைக் குதிரைகளின் கால்தடங்களை கேட்போர் நெஞ்சில் பதித்துச் செல்கின்றார்கள். இன்றைய நவீன கால மார்க்க அறிஞர்கள் அவர்களின் பேச்சுகளில் சமீபகாலமாக இணையத்தில் பரவிவரும் தலைப்புகளில் ஒன்றுதான் இறுதிநாளின் அடையாளமான யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்.

குறிப்பாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் அடைத்து வைக்கப்படவில்லை, அவர்கள் வெளியேதான் இருக்கிறார்கள். அவர்கள் வெள்ளை நிறத்தை உடைய பிரிட்டீஸ்காரர்களும், மஞ்சள் நிறத்தை உடைய மங்கோலியர்களும்தான். மேலும் மறுமைநாள் அடையாளங்கள் சம்பந்தமாக வரக்கூடிய ஹதீத்களுக்கு அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப சிந்தித்து விளங்கிக் கொள்ள வேண்டும். முற்கால அறிஞர்களின் விளக்கத்தை அப்படியே கண்மூடி பின்பற்றக் கூடாது. இன்றைக்கு இருக்கக்கூடிய பெரும் பான்மை மக்கள் சுயமாக சிந்திப்பதில்லை. முற்கால அறிஞர்களை அப்படியே தக்லீது செய்து வருகிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.

முதலில் யஃஜூஜ் மஃஜூஜ் சம்பந்தமாக வரக்கூடிய புகாரி : 3348வது ஹதீதுக்கு உண்மையான விளக்கம் என்ன? நவீன கால அறிஞர்களின் விளக்கம் என்ன என்பதை பார்ப்போம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம் (அலை) அவர்களை நோக்கி, “ஆதமே!’ என்பான். அதற்கு அவர்கள், “இதோ! வந்துவிட் டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்’ என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், “நீங்கள் நரகத்திற்குச் செல்ல இருப்பவர்களை தனியாகப் பிரித்திடுங்கள் என்று கூறுவான்.

ஆதம்(அலை) அவர்கள், “எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள். அதற்கு அவன், “ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்பது பேரை என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் சிறுவன் கூட நரைத்து விடுவான். கர்ப்பமுற்ற பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் பிரசவித்து விடுவாள். மக்களை போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையான தாகும். (இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதும்)

உடனே மக்கள், “இறைத்தூதர் அவர்களே! நரகத்திலிருந்து அந்த ஒரு நபர் எங்களில் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க் கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறி னார்கள். உடனே, நாங்கள் “அல்லாஹு அக்பர் என்று கூறினோம். உடனே அவர்கள், “சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்று கூறினார்கள்.

நாங்கள் “அல்லாஹு அக்பர்’ என்று கூறினோம். அவர்கள், “சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். நாங்கள் “அல்லாஹ் அக்பர்’ என்று கூறினோம். அப்போது அவர்கள், “நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போன்றே இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியில் உள்ள வெள்ளை முடியைப் போன்றே இருப்பீர்கள். (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பீர்கள்) என்று கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரழி) அறிவித்தார். புகாரி:3348

“நவீன’ விளக்கம் :

இந்த ஹதீதுக்கு விளக்கம் சொல்கிறேன் என்ற பெயரில் நவீன மார்க்கப் பிரசங்கி ஒருவர் பல கேள்விகளை முன் வைத்திருக்கிறார். உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்கள் 1000 பேர் இருப்பார்கள் என்று சொன்னால்? இன்றைக்கு உலகத்தில் 700 கோடி பேர் இருக்கிறார்கள்? அப்படி என்றால் இந்த பூமியில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார். 7 இலட்சம் கோடி பேர் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள். நம்மை விட அதிகமாக இருக்கும் அவர்களை எப்படி அடைத்து வைக்க முடியும்? அதனால் அவர்கள் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் வெளியில் தான் இருக்கிறார்கள். நம்மோடு கலந்து இருக்கி றார்கள் என்று சொல்கிறார்.

மேலும் இரண்டு மலைகளுக்கு இடையே தடுப்புச்சுவர் கட்டி தான் துல்கர்னைன் மன்னர் யஃஜூஜ் மஃஜூஜ் கூட் டத்தினரை தடுத்து வைத்தார்கள். மேலே மூடி போட்டு அடைத்து வைக்கவில்லை. இப்போதும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார்கள் என்று சொன்னால் சுவருக்கு அந்த புறம் இருப்பவர்களை நம்மால் பார்க்க முடியுமா? முடியாதா? இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் இவ்வளவு பெரிய கூட்டம் அடைத்து வைக்கப்பட்டு இருந் தால் சேட்டிலைட் கொண்டு அவர்களை கண்டுபிடித்து விட முடியுமா? முடியாதா? என்று கேட்கிறார்.

அதுபோல சொர்க்கவாசிகளில் நீங்கள் நான்கில் ஒரு பங்கினராக, மூன்றில் ஒரு பங்கினராக, பாதி பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் நான்கில் ஒரு பகுதி முஸ்லிம்கள் என்றால் மற்ற பங்கினர் யார்? நரகவாசிகள் சொர்க்கத்திற்கு வரமுடியாது. அப்படி என்றால் மற்ற பங்கினர் யார்? அவர்கள் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினராகத்தான் இருக்க முடியும் என்று சொல்கிறார். இப்படி பல கேள்விகள் கேட்டு அதற்கு தகுந்தாற்போல் சுயவிளக்கமும் கொடுத்திருக்கிறார்.

இன்ஷா அல்லாஹ் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பற்றி வரக்கூடிய ஹதீத்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது அனைத்து கேள்விகளுக்கும் இன்ஷா அல்லாஹ் பதில் கிடைக்கும். (கொடுப்போம் என்பதை இந்த பதிவில் தெரிவித்துக் கொள்கிறேன்)

1000 பேரில் 999 பேர் ஏன் நரகம் போகிறார்கள்?

முதலில் ஹதீதுக்கு விளக்கத்தை பார்க்கும் முன் மனிதர்களில் ஏன்? 1000 பேருக்கு 999 பேர் நரகம் போகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம். ஏன் என்றால் இவ்வளவு தொகையினர் நரகத்திற்கு போவார்களா? என்று மக்கள் ஆச்சரியமாக கேட்கிறார்கள். அதற்கான பதில் குர்ஆனில் இருக்கிறது.

நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற் கென்றே படைத்துள்ளோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற் றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெறமாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு. ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள். இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள் இல்லை! அவற்றை விடவும் வழிகேடர்கள்; இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (அல்குர்ஆன் 7:179)

இந்த வசனத்தின் மூலமாக 1000 பேருக்கு 999 பேர் ஏன்? நரகம் போகிறார்கள் என்பதை தெளிவாக விளங்க முடிகிறது. மேலும் சொர்க்கத்திற்குள் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இன்றைக்கு எளிதாக சொர்க்கம் சென்றுவிடலாம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது என்பதை விளக்கும் விதமாகத்தான் இந்த ஹதீத் அமைந்துள்ளது. மறுமையை பற்றி அலட்சியமாக இருக்கும் முஸ்லிம்கள் இதை எப்போது சிந்திக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை.

1000 பேரில் ஒருவர் சொர்க்கவாசி:

இப்போது ஹதீதின் விளக்கத்திற்கு வருவோம். முதலில் ஆதம் நபியை அல்லாஹ் அழைத்து நரகத்திற்கு செல்ல இருப்பவர்களையும் சொர்க்கத்திற்கு செல்ல இருப்பவர்களையும் தனித்தனியாக பிரியுங்கள் என்று கூறுகிறான். அதற்கு ஆதம் நபி(ஸல்) எத்தனை நரகவாசிகளை? என்று கேட்கிறார்கள். அதற்கு அல்லாஹ், ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை என்று பதி லளிக்கிறான்.

அதாவது ஆதம் நபியின் வாரிசுகளில் ஆதம் நபியின் உம்மத் முதல் மறுமை நாள் ஏற்படக்கூடிய நேரம் வரை பிறக்கும் அனைத்து ஆண்களும், பெண்களும் குறிப்பாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் உட்பட மொத்த தொகையில் ஒவ்வொரு ஆயிரம் பேராக பிரித்து அதில் ஒருவர் சொர்க்கவாசி மற்ற 999 பேர் நரகவாசி என்று தேர்ந்தெடுக்க சொல்கிறான்.

1000 பேர் என்றால் ஒருவர் 10 ஆயிரம் பேர் என்றால் 10 பேர், 1 இலட்சம் பேர் என்றால் 100 பேர், 10 இலட்சம் பேர் என்றால் 1000 பேர், 1 கோடி பேர் என்றால் 10 ஆயிரம் பேர் ஆக ஆயிரத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் சொர்க்கவாசி, நரகவாசி என்று அல்லாஹ் பிரிக்க உத்தரவிடுகிறான். ஆக ஒட்டுமொத்த மனிதர்களில் குறிப்பாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் உட்பட 1000 பேரில் 999 பேர் நரகம் போவார்கள். ஒருவர் மட்டும் சொர்க்கம் செல்வார் என்பது முதல் பகுதிக்கான விளக்கம்.

இப்படி அவன் கூறும் வேளையில் சிறுவன் கூட நரைத்துவிடுவான், கர்ப்பமுற்ற பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் பிரசவித்து விடுவாள். மக்களை போதையுற் றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால் அவர்கள் போதையுற்றிருக்க மாட்டார்கள். இந்த செய்தியும் குர்ஆனுக்கு விளக்கமாக இருக்கிறது. எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும், நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள். (அல்குர்ஆன் 73:17)

நரகத்தில் இருந்து வெளியேறும் ஒரு நபர் யார்?

உடனே மக்கள், “இறைத்தூதர் அவர் களே! நரகத்திலிருந்து (வெளியேறும்) அந்த ஒரு நபர் எங்களில் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் இருப்பார்கள் என்று கூறினார்கள். இப்படி கூறியதை நவீன கால அறிஞர்கள் எவ்வாறு விளங்கி இருக்கிறார்கள் என்று தெரியுமா?

இன்றைக்கு இந்த பூமியில் ஒரு முஸ்லிம் வாழ்கிறார் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் பேர் வாழ்கிறார்கள். மேலும் இந்த பூமியில் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படும் அனைவருமே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் தான் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். அதனால்தான் சொர்க்கவாசிகளில் நீங்கள் நான்கில் ஒரு பங்கினராக, மூன்றில் ஒரு பங்கினராக, பாதி பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதை, சொர்க்கத்தில் நான்கில் ஒரு பங்கு முஸ்லிம்கள் என்றால் மற்ற பங்கினர் யார்? வேறு யாரும் அல்ல, அது யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் தான். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திலும் நல்ல செயல்கள் செய்து சொர்க்கம் செல்லக்கூடியவர்கள் இருக்கி றார்கள். அவர்கள்தான் அந்த பங்கினர் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். இவர் களின் புரிதல் சரியா? தவறா? என்பதை பார்ப்போம்.

உங்களில் ஒருவருக்கு என்பது யாரை குறிக்கிறது?

முதலில் உங்களில் ஒருவருக்கு என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுவது யாரை என்று இவர்கள் எங்காவது சொல்லியிருக்கிறார்களா? அவர்கள் எத்தனை பேர் இருக்கி றார்கள்? எத்தனை பேருக்கு ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? அவர்கள் முஸ்லிம்களா? அல்லது நபி(ஸல்) அவர்கள் உம்மத்தா? அல்லது ஆதம் நபியின் ஒட்டு மொத்த சந்ததிகளா? அவர்கள் யார் என்று தெரிந்தால்தான் உங்களில் ஒருவர் என்பதற்கான பதில் கிடைக்கும். இது பற்றி நவீன கால அறிஞர்கள் எங்கேயாவது விளக்கம் கொடுத்திருக்கிறார்களா? என்றால் இதுவரைக்கும் இல்லை. அப்படி என்றால் எந்த அடிப்படையில் இதுபோன்ற விளக்கங்களை கொடுத்து வருகிறார்கள்?

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் எத்தனை பேர் நரகம் செல்வர்?

அதுபோல உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் பேர் இருப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் பேர் இருப்பார்கள் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களில் சொர்க்கம் செல்பவர்கள் எத்தனை பேர்? நரகம் செல்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எந்த சதவிகித அடிப்படையில் சொர்க்கவாசி! நரகவாசி என்று பிரிக்கப்படுகிறார்கள்? உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் ஆயிரம் பேர் இருப்பார்கள் என்றால் அனைவரும் சொர்க்கம் செல்வார்களா? ஃபஸாது செய்யக்கூடிய கூட்டம் சொர்க்கம் செல்லுமா? இதைப்பற்றி எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் ஓராயிரம் பேர் இருப்பார்கள். அதிலும் முஸ்லிம்களை விட அதிகமாக இருப்பார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

யஃஜூஜ் மஃஜூஜ் ஃபஸாது செய்யும் கூட்டம் :

அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள்; ஆதலால் எங்களுக்கும், அவர்க ளுக்குமிடையே ஒரு தடுப்பு நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா? என்று கேட்டார்கள்.  (அல்குர்ஆன் 18:94)

இந்த வசனத்தின் மூலமாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஃபஸாது செய்யக்கூடிய கூட்டம் என்பது தெளிவாகிறது. பூமியில் ஃபஸாது செய்யக்கூடிய கூட்டம் சொர்க்கத்தில் முஸ்லிம்களை விட அதிகமானவர்களாக இருப்பார்கள் என்று சொன்னால் அதனை நம்ப முடிகிறதா?

அப்படி என்றால் உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஓராயிரம் பேர் இருப்பார்கள் என்பதற்கான விளக்கம் என்ன? உங்களில் ஒருவர் என்றால் அவர்கள் யார்? அதுபோல நீங்கள் சொர்க்கத்தில் நான்கில் ஒரு பங்கினராக, மூன்றில் ஒரு பங்கினராக இருப்பீர்கள் என்று சொல்லப்படுகிறதே அந்த நீங்கள் என்று சொல்வது யாரை குறிக்கிறது? இதற்கான விளக்கம் தெரியாமல் ஹதீதிற்கு உண்டான சரியான விளக்கத்தை பெறமுடியாது இதற்கான விளக்கம் என்ன என்பதை பார்ப்போம்.

யஃஜூஜ் மஃஜூஜ் 1000 பேரில் 1000 பேர் மற்ற மக்களில் 1000 பேரில் 999 பேர் நரகவாசி:

பொதுவாக ஆதம் நபியின் சந்ததியில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 1000 பேரில் ஒருவர் சொர்க்கவாசி மற்ற 999 பேர் நரகவாசி என்று பிரிக்கப்படுகிறது.

அதில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரை மட்டும் தனியாக பிரித்துக் காட்டும்விதமாக, உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஓராயிரம் பேர் இருப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது ஆதம் நபியின் உம்மத்து முதல் முஹம்மது(ஸல்) அவர்களுடைய உம்மத்தில் இறுதியாக பிறக்கும் குழந்தை வரை உள்ள அனைத்து மக்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு பிரிவாகவும் ஆதம் நபியின் வாரிசுகளில் உள்ள யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரை மட்டும் தனியாக பிரித்து மற்றொரு பிரிவாகவும் பிரித்து இருவருக்கும் உண்டான வித்தியாசத்தை வெளிப்படுத்தும் விதமாகத்தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியிருக்கிறார்கள்.

உங்களில் ஒருவருக்கு என்பது யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் தவிர்த்த மற்ற மக்கள் தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 பேரில் ஒருவர் சொர்க்கவாசியாக இருப்பார். மற்ற 999 பேர் நரகவாசியாக இருப்பார் அதுபோல யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஒவ்வொரு 1000 பேரில் 1000 பேரும் நரகத்தில் இருப்பார்கள். இதை தான் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடு கிறார்கள்.

இப்படி நாம் சொல்ல காரணம் நரகத் தில் இருந்து வெளியேறும் அந்த ஒரு நபர் எங்களில் யார்? என்று மக்கள் கேட்கிறார்கள். அதற்கு உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஓராயிரம் பேர் இருப்பார்கள் என்று கூறுகிறார்கள். இங்கே ஓராயிரம் பேர் இருப்பார்கள் என்பது எங்கே இருப்பார்கள் என்பதுதான் கேள்வி? அதற்கு பதில் நரகத்தில் இருப்பார்கள் என்பது தான் உண்மை. காரணம் அதற்கு முன்பே ஆதம்(அலை) அவர்கள் சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் செல்ல இருப்பவர்களை 1000 பேருக்கு ஒருவர் என்ற சதவிகிதத்தின் அடிப் படையில் பிரிக்கிறார்கள். அந்த சதவிகி தத்தை அடிப்படையாக கொண்டு தான் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரையும், மற்ற மக்களையும் நபி(ஸல்) அவர்களும் பிரித்துக் குறிப்பிடுகிறார்கள். உங்களில் ஒருவருக்கு என்றால் அங்கே 1000 பேருக்கு ஒருவர் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

அதுபோல 1000 பேர் இருப்பார்கள் என்பதற்கு 1000 பேருக்கு 1000 பேர் இருப்பார்கள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களில் ஒருவருக்கு என்பது யாரைக் குறிக்கும் என்ற கேள்விதான் மிஞ்சும். அவர்கள் முஸ்லிம்களா? நபி(ஸல்) அவர்கள் ஒட்டுமொத்த உம்மத்தா? அல்லது நாம் சொன்ன ஆதம் நபியின் சந்ததிகளில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்கள் தவித்து இருக்கக்கூடிய ஒட்டுமொத்த மக்களா? அவர்கள் யார்? இதற்கு அவர்களால் ஒரு காலமும் பதில் தரமுடியாது. அப்படி தந்தால் அவர்கள் கொடுத்த அனைத்து விளக் கங்களும் தவறாகத்தான் வந்து நிற்கும்.
சொர்க்கவாதிகளில் 4ல் 1 பங்கினர் யார்?

அப்படி என்றால் சொர்க்கத்தில் இருக்கும் மற்ற பங்கினர் யார் என்று கேள்வி கேட்கலாம்? சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பங்கினராக, மூன்றில் ஒருபங்கினராக, இரண்டில் ஒரு பங்கினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னது நாம்தான். முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தான நம்மை பார்த்து தான் நபி(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பங்கினராக, மூன்றில் ஒரு பங்கினராக, பாதி பங்கினராக இருக்க வேண்டும் என்று. அப்படி என்றால் மற்ற பங்கினர் யார்? என்று கேட்டால் அது மற்ற நபிமார்களின் உம்மத்தினர் மற்ற நபிமார்களின் உம்மத்தில் ஈமான் கொண்டு சொர்க்கம் சென்ற மக்கள். இந்த உலகத்தில் இலட்சக்கணக்கான நபிமார்கள் வந்திருக்கிறார்கள். அவர்களின் உம்மத்தில் ஈமான் கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களும் சொர்க்கம் செல்வார்கள்.

அப்படி சொர்க்கம் செல்லும் மற்ற நபிமார்களின் உம்மத்தினரையும் தனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களையும் நான்கில் ஒரு பங்கு, மூன்றில் ஒரு பங்கு, இரண்டில் ஒரு பங்கு என்று சதவிகித அடிப்படையில் பிரித்துக்காட்டி இருக்கிறார்கள். மேலும் எனது உம்மத்தினரான நீங்கள் சொர்க்கத்தில் அதிக தொகையினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்காக அதிகமான பிள்ளைகளை பெறுங்கள் என்று சொல்லக்கூடிய ஹதீத்களும் இருக்கத்தான் செய்கின்றன.

மஹ்ரில் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தின் சொர்க்கவாசிகள் :

மேலும், நீங்கள் (மஹ்­ர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போன்றே இருப்பீர்கள். அல்லது கரு நிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போன்றே (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள் என்று சொன்னதும் தனது உம்மத்தில் உள்ள சொர்க்கவாசிகளை தான். மஹ்ஷர் மைதானத்தில் நீங்கள் சிறிய கூட்டத்தினராக இருப்பீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னது நபி(ஸல்) அவர்களின் உம்மத் தைத்தான் குறிக்கிறது என்று எப்படி சொல்கிறீர்கள்? அது ஒட்டுமொத்த சொர்க்கவாசிகளை குறிப்பிடலாம் இல்லையா? என்று கேட்கலாம்.

ஆதம் நபியின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஆயிரத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் 10,000 பேர் சொர்க்கவாசியாக இருப்பார்கள். 10,000 பேர் சொர்க்கவாசிகள் என்றால் அதில் நான்கில் ஒரு பங்கு 2500 பேர், ஆக ஒரு கோடி பேரில் 2500 பேர் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தில் சொர்க்கவாசியாக இருப்பார்கள். அப்படி என்றால் மஹ்ர் மைதானத்தில் அவர்கள் சிறிய கூட்டத்தினராக இருப்பார்கள் என்பது சரிதானே!

நவீன கால அறிஞர்களின் தவறான புரிதல் :

ஆக உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் ஓராயிரம் பேர் இருப்பார்கள் என்பது ஆதம் நபியின் சந்ததியில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் தவிர்த்து மற்ற மனி தர்களில் 1000 பேரில் ஒருவர் சொர்க்கவாசியாக இருப்பார். யஃஜூஜ் மஃஜூஜ் கூட் டத்தினரில் 1000 பேரில் 1000 பேரும் நரகவாசியாக இருப்பார்கள் என்பதுதான் உண்மை. இதை விளங்கிக் கொள்ளாமல், உங்களில் ஒருவர் முஸ்லிம் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் கூட்டத்தினர் ஓராயிரம் பேர் இருப்பார்கள். அவர்களும் சொர்க்கம் செல்வார்கள் என்று தவறாக விளங்கிக்கொண்டு ஹதீதுக்கு சுய விளக்கங்களை கொடுத்து முஸ்லிம்களிடம் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களையும் மற்ற நபி மார்களின் உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களையும் பிரித்துக்காட்டும் விதமாக குறிப் பிட்டதை ஆதம் நபியின் ஒட்டுமொத்த மக்களில் சொர்க்கம் செல்பவர்கள் ஒரு பங்கினரும் மற்ற பங்கினர் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் என்று தவறாக விளங்கிக் கொண்டு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் :

மேலும் தங்களுடைய தவறான புரிதலை மற்ற ஹதீத்களுக்கும் கொடுத்து விளக்கம் பெற முயற்சி செய்திருக்கிறார்கள். அதனால் தான் பல ஹதீத்களுக்கு முழுமையான விளக்கத்தை கொடுக்க முடியாமல் இப்படி விளங்கிக்கொள்ள வேண்டும். அப்படி விளங்கிக்கொள்ள வேண்டும் என்று ஹதீத்களுக்குள் தங்களுடைய சுய விளக்கங்களை திணித்திருக்கிறார்கள். இவர்கள் இதுவரை ஹதீத்களுக்கு கொடுத்த விளக்கங்கள் என்ன? எது சரி? எது தவறு? யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் அடைத்து வைக்கப் பட்டு இருக்கிறார்களா? அல்லது வெளியில் வந்துவிட்டார்களா? என்பதை ஒவ்வொன்றாக இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். அதுபோல இந்த ஹதீதுக்கு அவர்கள் கொடுத்த தவறான விளக்கத்தின் மூலம் அவர்கள் கொடுத்த பல விளக்கங்கள் தவறாகவே அமைந்திருக்கிறது. அது என்ன என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

Previous post:

Next post: