கோழி முதலா? முட்டை முதலா?
A.N. Trichy
கோழி முதலா? முட்டை முதலா? என்ற கேள்விக்கு விடை தெரிஞ்சால் என்ன? தெரியாமல் போனால் என்ன? இதுவொன்றும் அவ்வளவு முக்கியமான விசயமில்லையே என பலர் நினைக்கலாம் அல்லது அலட்சியப்படுத்தலாம்.
பொதுவாக எல்லோருக்கும் எல்லாமே தெரியுமா? என்றால் தெரியாது. சிலருக்கு தெரிந்த சில சாதாரண விசயங்கள் வேறு சிலருக்கு தெரியாமல் இருப்பது நிஜம்; அது எதார்த்தமும் கூட. ஆனால் மனிதர்களில் சிலர் தெரியாததை தெரிந்தமாதிரி நடித்து பல விசயங்களை தெரிந்து கொள்ளாமலே இருந்து விடுகின்றார்கள், இறந்தும் விடுகின்றார்கள். எனவே தெரியாததை தெரியாது என்று சொல்வதே நல்லது.
அதனால்தான் அல்லாஹ் தன் வழிகாட்டுதல் நூலில் (குர்ஆனில்) “அறியாதவர்கள், அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்‘ என்று கூறுகிறான்.
அதுமட்டுமல்ல குர்ஆனில் சில முக்கிய மான விசயங்களைப் பற்றி குறிப்பிட்டு இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா? என்று பல இடங்களில் அல்லாஹ் கேட்கின்றான்.
“உங்களுக்கு ஒரு வழிகாட்டும் நூலை அருளியுள்ளோம், அதில் உங்களுக்கு நற்போதனை உள்ளது, நீங்கள் சிந்திக்க மாட் டீர்களா? அல்குர்ஆன் 21:10
ஆக தெரியாததை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதும் சிந்திக்க வேண்டும் என்பதும் மிகமிக முக்கியம்.
கோழி முதலா? முட்டை முதலா? என்ற கேள்விக்கு வருவோம்.
மேற்கண்ட கேள்விக்கு படித்தவர்கள் முதல், பாமரர்கள் வரை விவாதம் செய்துக் கொண்டிருப்பதை இன்று வரை காணலாம். இது விடை தெரியாத ஒரு கேள்வியா? என்றால் நிச்சயமாக இல்லை. பின்பு இது எதனால் விவாதப் பொருளாயிற்று? அதற்கு காரணம் அல்குர்ஆனை மொழி பெயர்ப்புடன் படிக்காததே ஆகும்.
மேலும் மனிதர்களின் பலவீனம், மனிதர்களில் பெரும்பாலோர் கண்ணால் பார்ப்பதே நிஜம், மற்றவை எல்லாம் பொய் என்ற கோட்பாடு. அதற்கும் மேலாக டார்வின் தத்துவம் மக்களிடையே வேறூன்றியிருப்பதும் காரணமாகும்.
டார்வின் தத்துவம் என்பது கோயபல்ஸ் தத்துவம் போன்றது. அதாவது ஒரு பொய்யான விசயத்தை திரும்ப, திரும்பச் சொல்லி உண்மைபோல் நம்ப வைப்பது. உதாரணமாக: மனிதன் என்பவன் குரங்கிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக ஆனான்.
இந்த கருத்தை பள்ளியில் பாடமாக வைத்து மாணவர்களை நம்பவைத்தார்கள். இது உண்மையா என்றால் இல்லை. ஆனாலும் இதை நம்புவது நாத்திக சிந்தனையில் உள்ளவர் களுக்கு வசதியாக்கப்பட்டது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் பலரும் இதை நம்பினார்கள்.
டார்வினின் பொய்யான தத்துவத்தை அன்றைய காலத்திலிருந்த ஆன்மீகவாதிகளும், அரசியல் தலைவர்களும் பாடமாக வராமல் தடுத்திருக்க வேண்டும். அலட்சியமா? அறியாமையா? என்பது தெரியவில்லை.
ஆக கோழி முதலா? முட்டை முதலா? எப்படி தெரிந்து கொள்வது ஒரே வழி தான் உள்ளது. “குர்ஆனை மொழிப் பெயர்ப்புடன் படித்தாலே போதும்‘, விடை கிடைக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் :
“நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றையும் ஜோடி ஜோடியாகவே நாம் படைத்தோம்‘ என்பதாக. அல்குர்ஆன் 51:49
“மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனே ஒரே ஒரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான். மேலும் அவரிலிருந்தே ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். அல்குர்ஆன் 4:1
“அவனே பூமியை விரித்து அதில் மலைகளையும், ஆறுகளையும், ஏற்படுத்தினான். அதில் அனைத்து தாவர இனங்களிலும் ஆண், பெண் கொண்ட ஜோடிகளை உருவாக்கினான். இரவைப் பகலால் மூடுகின்றான். சிந்திக்கும் மக்களுக்கு இதில் சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் :13:3
மேற்கண்ட வசனங்களிலிருந்து மனிதனையும் ஏனைய அனைத்து உயிரினங்களையும், தாவரங்களையும் ஜோடியாகவே அல்லாஹ் படைத்துள்ளான் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
அடுத்தபடியாக உயிரினங்கள் பெருக ஒரு நியதியையும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். மனிதனாக இருக்கட்டும், மிருகங்களாக (விலங்காக) இருக்கட்டும். தாவரங்களாக இருக்கட்டும், அது–அது சேர்க்கையால் இணைந்து அதன் மூலமே அந்த இனம் பல்கி பெறுக வேண்டும் என்பதே ஆகும்.
அப்படியானால் கோழி இனம் சேர்ந்தால் கோழி குஞ்சு தானே பிறக்க வேண்டும். ஏன் எப்படி முட்டை வந்தது? இந்த சந்தேகம் நியாயமானதும் கூட. அதனால் தான் கோழி முதலா? முட்டை முதலா? என்பது விவாதப் பொருளாயிற்று.
படைத்தவனும், படைப்பாளனாகிய அல்லாஹ் முற்றிலும் அறிந்தவன். எனவே தான் கோழி இனம் பல்கி பெருக முட்டை இடுமாறு செய்தான். அதாவது கோழி என்பது பறவை இனத்தை சார்ந்தது. பறவை இனம் அனைத்தும் முட்டைதான் இட முடியும். குஞ்சை பெற முடியாது. ஏன் என்றால் கருவுற்ற நிலையில் குஞ்சை சுமந்திருந்தால் அதனால் பறக்க இயலாது. அது மட்டுமல்ல அதற்கு தேவையான உணவை பறந்து போய் தேடவேண்டிய நிலையில் உள்ளது. பறந்து செல்கின்ற போது இடையூறும் ஏற்படும்.
ஆக கோழி முதலா? முட்டை முதலா? என்றால் கோழிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை சாதாரணமான ஒரு விசயமாக கூட சிலர் நினைக்கலாம். பல சின்ன சின்ன விசயங்கள்தான் இறை நம்பிக்கை ஏற்படவும், வலுப்படவும் காரணமாக இருந்தது, இருக்கின்றது. அது மட்டுமல்ல தவறான கருத்தை திருத்திக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கின்றது.
“யா அல்லாஹ்! எங்களுக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!” என் பது நமது துஆவில் ஒன்றாக இருக்கட்டும்.