தலையங்கம் :
அழகிய கடன் கொடுப்பது இறைவனுக்கா? இறைவனுக்காகவா?
“கண் பார்வையற்றவர்கள் உதவிக் கேட்டு பாடியபோதுதான் தெரிந்தது, இங்கே காது கேளாதவர்கள் அதிகம் என்று‘.
மேற்கண்ட வாசகம் பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையில் மனிதர்கள் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதை மிக சுருக்கமாக கூறுகிறது.
இவ்வுலகில் பல மதங்கள் இருக்கின்றன. எல்லா மதங்களும் பிறருக்கு உதவி செய்வதை வலியுறுத்தி கூறுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்கள் பிறருக்கு உதவிச் செய்வதைக் காட்டிலும் முஸ்லிம்கள் பிறருக்கு உதவி செய்வது இயல்பிலே கூடுதலாக உள்ளது. இதை மாற்று மத சகோதர சகோதரிகள் பெரும்பாலோர் ஒப்புக்கொண்ட உண்மை.
பிறருக்கு உதவாதவர்களை கல் நெஞ்சக்காரன், கஞ்சன், இரக்கமில்லாதவன் என்று உலகம் கூறும். அதுவே இரக்க குணம் உள்ளவனை கொடைவள்ளல், தர்மகர்த்தா, இளகிய மனம் படைத்தவர் என்று கூறுவர்.
இத்தகைய இரக்க குணம் என்பது இறைவனின் பண்புகளில் ஒன்றாகும். ஆயினும் இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் ஏழை, பணக்காரன் என்று இருக்க வேண்டும் என்பதும் இறைவ னின் ஏற்பாடே. ஏனெனில் எந்தவொரு மனிதனுக்கும் இறைவன் 100 சதவீதம் எல்லா இன்பங்களையும் முழுமையாக வழங்கவே இல்லை. அதாவது ஒரு துன்பம் கூட இல்லாத எந்த ஒரு மனிதனும் உலகில் இல்லை. அதுபோல் சிலருக்கு சில பாக்கியங்கள் கொடுக்கப்பட்டு இருப் பதையும் காணலாம்.
சில பாக்கியம் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அவருக்கு கொடுக்கப்படாத சில பாக்கியங்கள் இருப்பதையும் காணலாம்.
உதாரணமாக : செல்வமும், ஆரோக்கி யமும் கொடுக்கப்பட்ட ஒருவருக்கு ஏதே னும் குறைகள் இருக்கும். எவ்வாறு என் றால், பொருத்தமில்லாத மனைவி, கட்டுப் படாத பிள்ளைகள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாமை, ஊனம், சிந்தனை திறன் குறைவு, படிப்பறிவு இல்லாமை இப்படி ஏதேனும் ஒருசில குறைகள் மனிதர்களுக்குள் இருக்கும்.
இது ஒரு வகை, மனிதர்களில் மற்றொரு வகை மனிதர்களும் உலகில் உண்டு.
“பணம் இருக்கும் மனிதனிடம் மனது இருப்பதில்லை, மனது இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை‘
எனவேதான் இறுதி இறைதூதர் அவர்கள் வலியுறுத்தி சொல்லப்பட்ட பல விசயங்களில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதும் முக்கியமாக இடம் பெற்றுள்ளது.
அவை :
1. ஏழை எளியோரின் பசியைப் போக் குங்கள்.
2.பிறருக்கு நீங்கள் உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள், இறைவனும் உங்களுக்கு உதவி செய்வான்.
3.எல்லோரிடமும் கருணை மற்றும் அன்புடன் பழகுங்கள். இறைவன் உங்கள் மீது கருணையும், அன்பையும் காட்டுவான்.
4.அண்டை வீட்டாருக்கு நன்மை செய்யுங்கள், அவர்களுக்கு தொந்தரவு செய்யாதீர்கள்.
5.எல்லோரிடமும் மலர்ந்த முகத்துடன் பழகுங்கள், மிக அழகியதையே பேசுங்கள். என்று கூறினார்கள்.
இறைவனும் தன் இறைநூலில் (குர் ஆனில்) பிறருக்கு உதவுவதைப் பற்றி கூறும்பொழுது,
“குர்ஆன் இறைவழிகாட்டும் நூல் என்று நம்பினாலும், மறைவானவற்றை நம்பினாலும், தொழுகையை நிறைவேற்றினாலும் நாம் வழங்கியவற்றிலிருந்து நல்வழியில் பிறருக்கும் செலவிட வேண் டும்” என்று கூறுகிறான்.
1. மேலும் “…நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாக வும் நல்வழியில் செலவிட்டு, நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். இத்தகையவர்களுக்கே மறுமையில் நற்கூலி உண்டு” அல்குர்ஆன் 13:22
2. மேலும் “..உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் நம்மிடத்தே நெருக்கத்தை ஏற்படுத்துபவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர, அவ்வாறு செய்தவர்களுக்கு அவர்கள் செய்தவற்றுக்காக பன்மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளி கையில் கவலையற்றிருப்பார்கள்” அல்குர்ஆன் 34:37
3. “…தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், இறைவனுக்காக அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காக மதிப்புமிக்க கூலி உண்டு” அல்குர்ஆன் 57:18
மேலே குறிப்பிட்ட மூன்றாவது வசனத்தில் “இறைவனுக்கு அழகிய கடன்‘ கொடுக்குமாறு கூறப்படுகிறது.
இதை ஏனைய மதங்களில் கடவுளுக்கு கொடுப்பது என்றால் வழிபாட்டுத் தலங்களில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துதல் அல்லது பூசாரிகளின் கையில் கொடுத்தல் என்று புரிந்துகொள்ளப் பட்டுள்ளது.
அதுவே இஸ்லாம் மார்க்கத்தில் மதரஸாவிற்கு கொடுப்பது என்றும், ஹஜரத்துகளுக்கு கொடுப்பது தர்ஹாக்களின் உண்டியலில் செலுத்துதல் என்றும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் இறைவன் குறிப்பிடுவது என்னவென்றால் தான தர்மங்களைப் பற்றி தொடர்புப் படுத்திக் கூறும் கட்டளைகள் அனைத்தும் தேவையுடைய மனிதர்களுக்கு உதவுவதே என்பதே பொருளாகும்.
அதாவது நீங்கள் ஏழைகளுக்கு உதவினால் அதற்கான பிரதிபலனை நான் உங்களுக்கு தருவேன். அதிலும் பல மடங்காகப் பெருக்கித் தருவேன். இது தனக்கு கொடுக்கப்பட்ட கடனாக நான் எடுத்துக்கொள்வேன் என்பது மிக முக்கிய செய்தியாகும்.
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால், புண்ணியம் உடையவர்கள் இறைவனின் மீதும் இறுதி நாளின் மீதும், வானவர்கள் மீதும் வேதத்தின் மீதும் நபிமார்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, செல்வத்தை தம் விருப்பத்தின் மீது உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கருக்கும் யாசிப்பவர்களுக்கும் அடிமைகளின் மீட்புக்காக கொடுத்தவரும். இன்னும், தொழுகையை கடைபிடித்து தர்மத்தையும் கொடுத்து இன்னும் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும் (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும் பொறுமையுடன் இருந்தவர் களுமாவர்; அத்தகையோர் தாம் உண்மையாளர்கள்; இன்னும், அவர்கள்தாம் (இறைவனை) அஞ்சியவர்கள். அல்குர்ஆன் 2:177
எனவே இறைவனும், இறைதூதரும் சொன்னபடி ஏழைகளுக்கு உதவுவதை கடமையாக்கிக் கொள்வோம்.