அர்ரூம்!

in 2024 மே

தலையங்கம் :

அர்ரூம்!

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நபி ஆவதற்கு முன்பு (மக்காவில் இருந்த போது) உலகில் இரு வல்லரசுகள் மட்டுமே  இருந்தன.  அவைகள் :

ஒன்று : கிறிஸ்தவர்கள் ஆட்சி புரிந்துவந்த  ரோமபுரி  பேரரசு.

மற்றொன்று : நெருப்பை  வணங்கிக் கொண்டிருந்த  பாரசீக  சாம்ராஜ்யம்.

அதாவது நெருப்பை கடவுளாக வணங்கும் அன்றைய பாரசீகர்கள் இன்று ஈரானியர்கள். கிறிஸ்துவத்தை சமயமாக ஏற்றுக்கொண்ட அன்றைய ரோம பேரரசு இன்று அமெரிக்கா மற்றும்  இஸ்ரேல்  ஆகும்.

நபி(ஸல்) அவர்களை கி.பி.610ல் தன் தூதராக இறைவன் தேர்ந்தெடுத்து பொறுப்பை வழங்கினான். மேற்படி இதே ஆண்டில் இவ்விரு வல்லரசுகளும் மோதிக் கொண்டபோது ரோமபுரி பேரரசு(கிறிஸ்தவ சாம்ராஜ்யம்) தோற்கடிக்கப்பட்டது. அதாவது இயேசுவை ஈஸா(அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பைபிளையும் மேலும் இஸ்லாம் மார்க்கத்திற்கு நெருக்கமான பல கொள்கைகளை நம்பக்கூடியவர்களாக ரோம பேரரசு இருந்தது.

மறுபக்கம் இஸ்லாம் மார்க்கத்திற்கு நேர் எதிர்கொள்கையை கடைப்பிடிக்கும் நெருப்பை வணங்கும் பாரசீகர்கள் (மஜ்லீஸ்கள்) வெற்றி பெற்றதும்  நடந்தது.

இது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்வது போலவே தங்களிடம் இறைநூல் (பைபிள்) இருக்கிறது என்று கூறிக்கொள்ளும் ரோமபுரி சாம்ராஜ்யம் வீழ்ந்துவிட்டது. எனவே நம்மைப் போல் பல கடவுள்களை வணங்கும் பாரசிகமே வெற்றி பெற்றுவிட்டது. இதன் காரணமாக பல கடவுள்களை வணங்கும் மக்காவாசிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்களை வெற்றிக் கொள்வோம் என்ற நம்பிக்கையிலும் இருந்தனர். அதாவது பாரசீகர்களின் வெற்றி முஸ்லிம்களுக்கு எதிரான வெற்றி என்றும் பல கடவுள்களை வணங்கும் தங்களுக்கான வெற்றி என்றே  கூறிக் கொண்டிருந்தார்கள்.

இந்தப் போரை விட பன்மடங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியும் ஒன்று நடந்தது. நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும், நெருங்கிய உறவினர்களும் மக்காவாசிகளால் ஊர் நீக்கம் செய்யப்பட்டு எழுத்தில் வடிக்க முடியாத பல துன்பத்திற்கு  ஆளானார்கள். 

எனவே கி.பி.615ல் பெரும் எண்ணிக்கை கொண்ட முஸ்லிம்களின் குழு ஒன்று தன் வீடு, சொத்துகள், சொந்த பந்தங்களை எல்லாம் விட்டு விட்டு ரோம பேரரசின் நேச நாடாகத் திகழ்ந்த அபிஸீனியாவில் (கிறிஸ்தவ அரசிடம்) தஞ்சம் புகவேண்டிய அளவிற்கு நிலைமை  முற்றியிருந்தது.

மற்றும் கி.பி. 622ல் நபி(ஸல்) அவர்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு சென்றார்கள். இந்த சூழ்நிலையில்தான்அர்ரும்என்ற இந்த 30வது அத்தியாயம் இறங்கியது. அதில், 

ரோமபுரி தோற்கடிக்கப்பட்டு விட்டது. அவர்கள் அத்தோல்விக்குப் பிறகு சில வருடங்களுக்குள்ளே  வெற்றியடைவார்கள்.   (அல்குர்ஆன் 30:2)

அந்நாளில்  முஃமின்களும்  மகிழ்ச்சியடைவார்கள்  (அல்குர்ஆன் 30:4)

மேற்படி வசனத்தில் இரண்டு விசயங்களை ரப்பில் ஆலமின் முன் அறிவிப்பாக  வெளியிட்டான்.

அவை: ஒன்று : ரோம பேரரசு மீண்டும் சில வருடங்களுக்குள் வெற்றி பெறுவார்கள் என்பதும் மற்றொன்று  முஸ்லிம்களுக்கு  வெற்றி  கிட்டும்  என்பதுமாகும்.

கி.பி. 623ல் ரோம பேரரசு இறைவன் இறைநூலில் குறிப்பிட்டது போல் பாரசீகத்தை வெற்றிக் கொண்டது. அது போலபத்ருஎன்னும் இடத்தில் நடந்த போரில் முஸ்லிம்களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க மாபெரும் வெற்றி கிடைத்தது. இவைகள் எல்லாம் சுமார் கி.பி.610லிருந்து கி.பி.620க்குள்  நடந்து  முடிந்த  சம்பவமாகும்.

இப்பொழுது  அதுபோல் 2024  ஏப்ரலில்  வரலாறு  மீண்டும்  திரும்புகிறது.

அதாவது நெருப்பை வணங்கி வந்த பாரசீகர்கள் (ஈரானியர்கள்) இன்று “´யாகொள்கையில் இருந்தாலும் இஸ்லாத்திற்கு நெருக்கமான பல கொள்கையுடன் இணக்கமாக இருக்கிறார்கள். அதேவேளையில் இஸ்லாத்திற்கு முன்பு நெருக்கமாக இருந்த கிறிஸ்தவர்கள் யூதர்களுடன் (இஸ்ரேலுடன்) கை கோர்த்துக் கொண்டு மிகப் பெரிய  எதிரியாக  மாறிவிட்டார்கள்.

எனவே இஸ்லாம் மார்க்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஈரானியர்கள் வெற்றி பெறவேண்டும். ஏன் என்றால், பாலஸ்தீன முஸ்லிம் மக்களை சுமார் 36 ஆயிரம் பேரை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், போரில் சம்பந்தப்படாத இளைஞர்களை கொன்று குவித்த  இஸ்ரேல்  தோல்வியை அடையவேண்டும்.

பாலஸ்தீன முஸ்லிம்கள் அடையும் துன்பத்தைக் கண்டும், பல குழந்தைகள் அநியாயமாகக் கொள்ளப்படுவதையும் பார்த்துக்கொண்டும் முஸ்லிம் நாடுகள் பலவும் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் அடிமையாக இருக்கிறது. அதாவது சொகுசு வாழ்க்கையில் திகழ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது. பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாத இத்தகைய அரபு நாடுகளுக்கு ரப்பில் ஆலமீன் நல்ல  ஒரு  படிப்பினையும்  கொடுக்கவேண்டும்.

ரப்பில் ஆலமின் முஸ்லிம்களுக்கு வெற்றியை  கொடுப்பானாக.

Previous post: