தலையங்கம் :
ஒரே நாடு! ஒரே தேர்தல்!! சாத்தியமா?
நமது மக்களவையில் (பாராளுமன்றத்தில்) மொத்தம் 543 எம்.பி.(னி.P.)க்கள் உள்ளனர். பொதுவாக எந்தவொரு மசோதாவை நிறைவேற்றுவதாக இருந்தாலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இது அனைத்து கட்சிகளுக்கும் தெரியும்; குறிப்பாக ஆளும் ஜனநாயக கட்சியின் கூட்டணிக்கும் தெரியும்.
ஆளும் ஜனநாயக கூட்டணிகளில் தற்போது 293 எம்.பி.(M.P.)க்கள் மட்டுமே உள்ளனர். அதேபோல் மாநிலங்களவையில் (ராஜ்யசபாவில்) மொத்தம் 245 எம்.பி. (M.P.)க்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நிரூபிக்க 164 எம்.பி. (M.P.)க்களின் ஆதரவு தேவை. ஆனால் ஜனநாயக கூட்டணியில் 112 எம்.பி.(M.P.)க்கள் மட்டுமே உள்ளனர்.
எனவே இந்த மசோதாவை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற முடியாது என்பதும் ஆளும் ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு நன்கு தெரியும். பின்பு ஏன் இதை தாக்கல் செய்கிறது என பலரும் நினைக்கலாம்.
உண்மை என்னவென்றால் இந்திய அரசியல் வரலாற்றில் இதுவொன்றும் புதியது அல்ல. வெறும் அரசியல் சித்து விளையாட்டே தவிர வேறுவொன்றும் இல்லை.
அதாவது கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு எப்படி உள்ளது என்பதை நாடி பிடித்து பார்ப்பது போல் இதை ஆளும் கட்சி பார்க்கிறது அவ்வளவே.
மேலும் இந்த மசோதா என்பது ஒருசில தனி நபரின் ஆசையாகும். மன்னர் ஆட்சி போல நாட்டை எதிர்காலத்தில் மாற்றுவதற்கான முன் ஏற்பாடு.
மேலும் இந்த மசோதாவை நிறைவேற்றினால் “ஒரே நாடு, ஒரே கட்சி‘ என்று படிப்படியாக திட்டமிட்டு மாநில கட்சிகளின் செயல்பாட்டை தடுக்கும் நோக்கமும் ஆகும். அடுத்து நமது நாட்டின் அரசியல் சித்து விளையாட்டால் மக்களின் முக்கிய பிரச்சனைகளை மறக்கடிக்க செய்து வேறு திசைகள் பக்கம் திசை திருப்பும் நோக்கமும் கூட.
இந்த மசோதா சுமார் 18,000 பக்கங்கள் கொண்ட ஒரு (வெற்று) அறிக்கையாகும். மக்களை ஏமாற்ற சென்ற 12.12.2024ம் தேதி அன்று இதற்கு ஆளும் ஒன்றிய அமைச்சர்களின் ஒப்புதலும் பெற்றுள்ளது.
ஏன் என்றால் ஆளும் ஒன்றிய அரசுக்கு எதிராக உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில கட்சிகளின் அரசை கலைக்க “ஒரே நாடு, ஒரே தேர்தல்‘ என்ற கோசத்தை காட்டி தேர்தல் வைக்க உதவியாக இருக்கும் என்பதுமாகும்.
எவ்வாறாயினும் நாடாளுமன்ற நிலைக் குழு உருவாக்கப்பட்டு அதன் ஒப்புதல் பெற்ற பிறகே இதை செயல்படுத்த முடியும். ஆனால் அங்கேயும் ஒப்புதல் கிடைக்காது.
அதுவரை இந்த மசோதா மீடியாக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வெறும் பேசு பொருளாக மட்டுமே இருக்கும் என்பது நிதர்சனம்.
நமது அரசியல் சாசன சட்டத்தின்படி இதை செயல்படுத்த சாத்தியமானதும் அல்ல.
நமது நாட்டின் அனைத்து சட்டங்களுக்கும் அரசியல் சாசனம் தான் தாய். ஆனால் தற்போதைய ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு சுமார் 2014 முதல் நிறைவேற்றிய பெரும்பாலான மசோதாக்கள் அரசியல் சாசன அமைப்புக்கு எதிரானதாகவே உள்ளன.
அதனால் அரசியல் சாசன அமைப்பு பாதுகாக்கப்படும் வரை இந்திய தேசம் பாதுகாக்கப்படும், இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும். “நிச்சயமாக வானங்கள், பூமியின் ஆட்சி அந்த இறைவனுக்கே உரியது. அந்த இறைவனை யன்றி உங்களுக்கு பாதுகாவலரும் இல்லை, உதவி செய்பவரும் இல்லை” (அல்குர்ஆன் 2:107)