வணக்க வழிபாடுகளால் மட்டுமே சூழப்பட்டதா இஸ்லாம்?

in 2025 ஜனவரி

வணக்க வழிபாடுகளால் மட்டுமே சூழப்பட்டதா இஸ்லாம்?

M. சையத் முபாரக், நாகை.

சுன்னத்தின்  அவசியம் :

தமிழ்நாட்டில் தவ்ஹீத்தின் எழுச்சிக்குப்பின் மக்கள் அல்குர்ஆன், ஹதீத் வழிநடக்க விரும்பினர். நபி(ஸல்) அவர்களின் சுன்னத்களை சரிவர பின்பற்றவேண்டும் என்ற ஆர்வத்தில் ஆலிம்கள் ஒவ்வொரு அமலுக்கான ஹதீத்களையயல்லாம் இணைத்து ஆராய்ந்தனர். அதன் அடிப்படையில் தீர்வுகளை கூறினர். (.ம்) பெண்களை ஆண்கள் (மனைவியை கணவன்) தொட்டால் உளூ முறியுமா? தனது பிறப்புறுப்பை தொட்டாலும் உளூ முறியுமா? இது சம்பந்தமான ஹதீத்களையும் ஆராய்ந்து, இணக்கம் ஏற்படும் வகையில் இச்சையுடன் தொட்டால் உளூ முறியும். சாதாரணமாக (மற்ற உறுப்புகளை தொடுவது போன்று)த் தொட்டால் உளூ முறியாது என்று தெளிவுபடுத்தினர் ஆலிம்கள் இப்படிப் பலவற்றிற்கு சுன்னத்தின்  அவசியத்தை  உணர்ந்து  தீர்வுக்  கண்டனர்.

ஸலஃபுகளின்  அகங்காரம் :

ஆனால், இன்றோ ஸலஃபுகளைப் பின்பற்றுவதாகக் கூறும் ஆலிம்கள் ஒரே ஒரு ஹதீதை மட்டும் பிடித்துத் தொங்குகிறார்கள். அதோடு தொடர்பு கொண்ட மற்ற ஹதீத்களைப்  புறந்தள்ளிவிடுகின்றனர்.

(.ம்) 1. “ஃபாத்திஹா ஸூரா ஓதாதவர்க்குத் தொழுகை இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புகாரி: 756, முஸ்லிம் 651)

ஆகவே, முதல் ரக்அத்தில் இமாம் ருகூவு செல்லும்போது மஃமூம் (பின் தொடர்பவர், ருகூவில் சேர்ந்து கொண்டாலும் இமாம் ஸலாம் கொடுத்தவுடன் மஃமூம் எழுந்து ஒரு ரக்அத் தொழ வேண்டும் என்று ஸலஃபு களைப் பின்பற்றுவதாகக் கூறும் நவீன ஆலிம்கள் கூறுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் தொழுவிக்கும் போது ருகூவு சென்றார்கள். நான் (அபூ பக்ரா(ரழி)) (ஆரம்ப தக்பீர் கூறி) ருகூவு செய்துவிட்டு வரிசையில் சேர்ந்து கொண்டேன். இது பற்றி பிறகு நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்து வானாக! இனி இப்படிச் செய்யாதே! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (புகாரி:783)

இதன்மூலம் ஒரு ரக்அத் கிடைத்து விடுகிறது. இமாம் ஸலாம் கொடுத்ததும் எழுந்து மேலும் ஒரு ரக்அத் தொழுதால் 4+1=5 ரக்அத் ஆகிவிடுமே. இது தவறல்லவா? என்று கேட்டால், அல்ஹம்து ஸூரா ஓதவில்லையே அதனால் தொழுதே ஆகவேண்டும் என்கிறார்கள். சிலர் பிரயாணத் தொழுகையில் 4 ரக்அத்தை  2 ரக்அத்தாக தொழ(கஸர்) அனுமதி இருப்பது போல, இதையும் சலுகையாக எடுத்துக் கொள்ளலாமே என்றால் ஓட்டை  ரெக்கார்டு  ஃப்ளேயர் போல திரும்ப  திரும்ப  அதையே  சொல்கின்றனர்.

2. பல தவ்ஹீத் பள்ளிவாசல்களில் வானிலை அறிக்கை வந்தாலே (மழை வராவிட்டாலும் கூட) தொழுகைகளை ஜம்உ செய்து (லுஹருடன் அஸரை, மஃரிபுடன் இஷாவைச் சேர்த்து) தொழுகிறார்கள்; அதனை கடமையாக, நிறைவேற்றுவது முக்கியம் என்பதாக நினைக்கிறார்கள். ஜம்உ செய்யாத பள்ளிவாசல்களைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாகப் பார்க்கிறார்கள் என்று ஸலஃபிகளைப் பின்பற்றுவதாகக் கூறும் நவீன ஆலிம்களில் சிலர் கூறுகின்றனர். இவர்கள் கற்பனை செய்து கூறுவது போல எந்தப் பள்ளிவாசலிலும் நிகழ்வதில்லை. கீழ்க்கண்ட ஹதீத்களின் அடிப்படையில் மிகவும் சிரமம் ஏற்படும் நிலையில்  ஜம்உ  செய்கிறார்கள்.

மதீனாவில் நபி(ஸல்) அவர்கள் லுஹரை, அஸரை சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்ச நிலையோ, பயணமோ இருக்கவில்லை. இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் “”இது ஏன்?”  என கேட்டபோது, “தம் சமுதாயத்தில் எவருக்கும் சிரமம் ஏற்படுத்தக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் கருதியதால்  என்று  கூறினார்கள்.  (முஸ்லிம்: 1268)

மிகக்குளிரான இரவில்,மழைபெய்யும் இரவிலும் பயணத்தின்போது உங்கள் கூடாரத்திலேயே தொழுதுகொள்ளுங்கள் என்று பாங்கு சொல்லும்போது கூறப்படும் என்பதை புகாரி 432 ஹதீதில் காணலாம்.

நிச்சயமாகத் தொழுகை இறை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமை.  (4:103)

என்பதற்கேற்ப அந்தந்த நேரங்களில் தொழுகிறார்கள். தேவை ஏற்படும் சூழலில் ஜம்உ செய்கிறார்கள் என்று நாம் கூறினால், அந்த நவீன ஆலிம்கள் வெளிவரமுடியாதபடி கடுமையான மழை இருக்கவேண்டும், லுஹர் தொழுதவுடன் அஸர் தொழும்போது மழை கொட்டோ கொட்டு என்று பெய்யவேண்டும் போன்ற நிபந்தனைகள் இருக்கின்றன என்கிறார்கள். இதற்கு ஹதீத் ஆதாரம் தாருங்கள் என்றால் ஸலஃபி ஆலிம்கள் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள்  என்று  அவர்களை  முன்னிருத்துகிறார்கள்.

ஸலஃப் (முன்னோர்களைப் பின்பற்றும்) ஆலிம்களும், கலஃப் (மத்ஹபைப் பின்பற்றும்) ஆலிம்களும் சொல்லும் கருத்துகள் குர்ஆன், ஹதீதா என்றும், அவைகளுக்கு நெருக்கமாக இருக்கிறதா? என்றும் நாம் ஆராய்ந்து அதனைப் பின்பற்ற வேண்டும். கண்மூடித்தனமாக இவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டு நடந்தால் நம்மை நடுத்தெருவிற்குக் கொண்டு வந்து விடுவார்கள்.

ஸலஃப்  ஆலிம்களும், ஆராய்ச்சியும் :

நாம் சுன்னத்தான செயல்களைச் சரியாகச் செய்தால், பர்ளுக்குக் கிடைக்கும் நன்மையுடன் சேர்த்து சுன்னத்திற்கான நன்மையும் கிடைக்கும். சுன்னத்தைச் சரியாகச் செய்யாவிட்டால் பர்ளுக்கான நன்மை கிடைக்கும். சுன்னத்திற்கான நன்மை கிடைக்காது. இந்த ஆலிம்கள் சுன்னத்தான பிக்ஹ் விசயங்களிலுள்ள கருத்து வேறுபாடுகளை பூதாகரமாக்கி, அது சரி என்றால் இரண்டு நன்மை; அது தவறு என்றால் ஒரு நன்மை என்கிறார்கள். தவறாக செய்தால் ஒரு நன்மை எப்படிக் கிடைக்கும்? இது இவர்களின் வார்த்தை ஜாலம்; மக்களைத் தெளிவை நோக்கி வரவிடாமல் தடுக்கும் கேடயம்.

அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, அவனது படைப்புகளைப் பற்றிச் சிந்தித்து, ஆராயச் சொல்லும் அல்குர்ஆன் வசனங்களின்படி (பார்க்க 2:164,266, 3:191, 4:83, 38:29, 45:13, 47:24) இந்த ஆலிம்கள் ஏதாவது ஆராய்ச்சி செய்கிறார்களா? அல்லது மக்களை ஆராயத் தூண்டுகிறார்களா? 

நீங்கள் இயன்ற அளவு படை பலத்தை, குதிரைப் படைகளைத் தயார்  நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் எதிரிகளை, உங்கள் எதிரிகளை, உங்களுக்குத் தெரியாத, அல்லாஹ் தெரிந்து வைத்திருக்கும் மற்ற எதிரிகளை அவற்றின் மூலம் நீங்கள் எச்சரிக்கலாம்.  (அல்குர்ஆன் 8:60)

குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் பயணிக்கவும், அலங்காரமாகவும் (படைத்தான்) அவன் நீங்கள் அறியாதவற்றையயல்லாம் படைப்பான். (அல்குர்ஆன் 16:8)

ஆலிம்கள் இந்த வசனங்களை ஆராய்ந்தி ருப்பின், மக்களை ஆராயத் தூண்டியிருப்பின் புதுப்புது கருவிகளை, வாகனங்களைக் கண்டு   பிடித்தும், (ஆயுத) வலிமையைப் பெருக்கியும் அரபு நாடுகள் தமது எதிரிகளை நடுங்க வைத்திருப்பார்களா? இல்லையா? இவர்களின் தூண்டுதல் இல்லாத காரணத்தால் ஆங்கிலேயருக்கும் ஐரோப்பியர்களுக்கும் அடிவருடியாக அரபு நாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. 

நற்குணங்கள் :

இஸ்லாம் எனும் நாணயத்தின் ஒரு பக்கம் வணக்கவழிபாடுகள் என்றால் மறுபக்கமாக நல்லொழுக்க மாண்புகள் இருந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாம் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது இஸ்லாம் வலியுறுத்தும் நற்குணங்களே. ஆலிம்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. வணக்க வழிபாடுகளுக்கு இணையாக ஏன்? ஒருபடி மேலே கூட நற்பண்புகளை இஸ்லாம் கடமையாக்கியிருக்கிறது. அதற்குச் சான்றாக பல குர்ஆன், ஹதீத் ஆதாரம் இருந்தாலும் ஓரிரண்டை மட்டும் இங்கு பார்ப்போம்.

உம்மைப் படைத்தாள்பவன் ஆணையிடு கிறான். என்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது, பெற்றோர்க்கு நன்மை செய்யவேண்டும்…”  (அல்குர்ஆன் 17:23)

ஒரு பகல், ஓர் இரவு (நாட்டின் எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபடுவதானது ஒரு மாதம் (பகலில்) நோன்பு நோற்றும் (இரவு முழுவதும்) நின்று வழிபடுவதைவிடவும் சிறந்ததாகும்…” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்:3876)

நற்குணங்களை, நற்பண்புகளை ஆலிம்கள் சிறார்க்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, பெரியவர்களுக்கு  அறிவுறுத்தாத  காரணத்தால்:

1. மாணவர்கள் செருப்பை, சைக்கிளை ஒளித்து வைக்கின்றனர்; பைக் சீட் கவரை கூரான கற்கள் போன்றவற்றால் கிழிக்கின்றனர். (சிறுவரான தனது பேரன் தமக்கு உரிமையில்லாத பேரீச்சை ஒன்றை எடுத்ததையே தடுத்தார்கள் நபி(ஸல்) அவர்கள். (புகாரி 1485, 1491 ஹதீத்களில் காணலாம்)

2. இளைஞர்கள் தெருவில் (பாதையில்) பந்து விளையாடுவது, கேரம்போர்டு விளையாடுவது, அரட்டை அடிப்பது இன்னும் சொல்லத் தகாத பல செயல்களில் ஈடுபடுகின்றனர். (பாதைக்கான உரிமையாக 1. பார்வையைத் தாழ்த்துவது (அந்நியப் பெண்களைப் பார்ப்பதிலிருந்து) 2. (பாதையில் செல்வோருக்கு சொல், செயலால்) தொல்லை தராமலிருப்பது, 3. ஸலாமுக்கு பதில் கூறுவது, 4. நன்மையை ஏவுவது, 5. தீமையை தடுப்பது. புகாரி 2465ல் பார்க்க)

3. பெரியவர்கள் பாதையில் பைக்குகளை நிறுத்தி வைப்பது, பள்ளி படிக்கட்டுகளில் செருப்பை கழற்றி வைப்பது, நிறுத்தி வைக்கப்பட்ட மற்றவர்களின் பைக்குகளில் ஏறி அமர்வது, பள்ளிவாசலில் மற்றவர்களுக்கு (தொழுபவர்களுக்கு) இடைஞ்சலாக சப்தமாக பேசுவது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். நாம் இங்கு தெரியாமல் செய்யும் தவறுகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். (பாதையில் முன் மரக்கிளையை அகற்றியதால் ஒரு மனிதருக்கு தொழுகை தாமதமாகிவிட்டது. அவருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு அளிக்கிறான்.  (புகாரி. 652ல் பார்க்க)

மனிதர்களை நற்குணங்கள் பக்கம் நகர்த்த வேண்டிய ஆலிம்கள் அதற்கான எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களைப் போதியுங்கள் என்றால் வழிகெட்ட கூட்டத்தினர் யார்? யார்? என்பதைப் பற்றி பாடம் எடுக்கின்றனர் ஆலிம்கள். வழிகெட்ட கூட்டம் எது? எது? என்று தெரிந்துவிட்டால் நேர்வழி நடக்கும் கூட்டம் எது? என்று தெரிந்துவிடுமாம். நற்பண்புகளைப் போதிக்க வேண்டிய ஆலிம்கள் அதன் முக்கியத்துவத்தை உணராத காரணத்தால் பெற்றோர்கள் குர்ஆன், ஹதீதின் வழியில் தொகுக்கப்பட்ட நல்லொழுக்க புத்தகங்களை வாங்கி தானும் படித்து சீர்திருந்தவேண்டும்; பிள்ளைகளுக்கும் உணர்த்தி, அதனை போதித்து நற்குணங்கள் மிக்கவர்களாக அவர்களை மாற்றவேண்டும். அல்லாஹ் அதற்கு  நல்லருள்  புரிவானாக!   அல்ஹம்துலில்லாஹ்!!

Previous post:

Next post: