ஆசையில்லாத பெண் மனமா?
N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு
அல்லாஹ் தன் வழிகாட்டி நூலில்(அல்குர்ஆனில்) பெண்களைப் பற்றி குறிப்பிடும்போது “…ஆண், பெண்ணை போன்றவன் அல்ல” அல்குர்ஆன் 3:36
என்று கூறிவிட்டு, அதனால் பெண்களுக்குரிய சில சலுகைகளையும், பெண்களுக்குரிய சில தனிப்பட்ட சட்டங்களையும், பெண்களுக்குரிய பாதுகாப்பைப் பற்றியும், பெண்களுக்கு சொத்தில் உள்ள உரிமைகளையும், இன்னும் பலவற்றையும் கூறியுள்ளான்.
குறிப்பாக ஆண்களால் செய்யமுடியாத, தாங்கமுடியாத பெண்களால் மட்டுமே முடிந்த ஒரு சிரமத்தை பற்றியும் இறைநூலில் குறிப்பிடுகிறான்.
அது என்னவென்றால்,
“…அவனது தாய் சிரமத்துடன் அவனைச் சுமந்து சிரமத்துடன் அவனைப் பெற்றெடுத்தாள், அவனைச் சுமந்ததும், பால் கொடுத்து அவனை வளர்க்க செய்ததும் முப்பது மாதங்களாகும்…” அல்குர்ஆன் 46:15
மேலும் மற்றொரு வசனத்தில் கெட்ட குணமுள்ள, நல்ல குணமுள்ள இரண்டு பெண்களையும் முன்னுதாரணமாக இறைவன் கூறுகிறான்.
கெட்ட பெண்கள் :
1. நூஹ்(அலை) அவர்களின் மனைவி
2. லூத்(அலை) அவர்களின் மனைவி அல்குர்ஆன் 66:10
நல்ல பெண்கள் :
1. ஃபிர்அவ்னின் மனைவி
2. மர்யம்(அலை) நபி ஈஸா(அலை) அவர்களின் தாய். அல்குர்ஆன் 66:11,12
எனவேதான் நபி(ஸல்) அவர்களும் பெண்களைப் பற்றி இரண்டுவிசயங்களை கூறியுள்ளார்கள்.
ஒன்று : “உலக செல்வங்களில் மேலானது நல்ல பெண்களே‘ அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ருஆஸ்(ரழி) அவர்கள் நூல்: முஸ்லிம்:2911
மற்றொன்று : இவ்வுலக செல்வங்களில் மேலானது பெண்களே என குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள் அதிகமான பெண்களை நரகில் பார்த்ததாகவும் கூறியுள்ளார்கள்.
“பெருநாள் தொழுகை திடலிற்கு நபி (ஸல்) அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே (பெண்களே) என எனக்குக் காட்டப்பட்டது…” என்று கூறினார்கள்.
(இதுவொரு மிக நீண்ட ஹதீத், சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன்) நூல்:புகாரி: 1462, பாகம்(2)
அதிகமான பெண்கள் நரகில் இருக்க காரணம் என்ன?
ஆசைதான் :
எனவேதான் தன் வழிகாட்டி நூலில் பெண்களைப் பற்றி குறிப்பிடும்போது குறிப்பாக நபி(ஸல்) அவர்கள் மனைவிமார்களுக்கும் அதன்மூலம் ஏனைய பெண்களுக்கும் எச்சரிக்கையாக கூறியிருப்பது என்னவென்றால்,
“நபியின் மனைவியரே! நீங்கள் மற்ற பெண்களைப் போன்றவர்கள் அல்ல! இறை யச்சமுடையோராக இருப்பதால் பேச்சில் (பிற ஆண்களிடம் பேசும்போது) நளினம் காட்டாதீர்கள்! ஏனென்றால் தவறான எண்ணத்தில் உள்ள ஆண்கள் (பேச்சில் நலினம் காட்டினால்) ஆசை கொள்வார்கள். எனவே நல்ல பேச்சையே (தேவையானதை மட்டுமே) பேசுஙகள்.” (அல்குர்ஆன் 33:32)
மேற்கண்ட வசனத்தின் மூலம் பெண்கள் பிற ஆண்களிடம் நளினமாக பேசினால் அதுவே அனைத்துவிதமான ஆசை(தீமை)களுக்கும் மூலகாரணமாக இருக்கின்றது என்பதை இறைவன் சுட்டிக்காட்டி உள்ளான்.
மேற்கண்ட வசனத்தில் நளினமாக பேசுவதை பல தவறுகளுக்கு மூலகாரணமாக இருப்பதை கூறிவிட்டு அடுத்து கீழ்கண்ட வசனத்தில் அனைத்து தவறுகளிலிருந்தும் பாதுகாப்பு பெற இறைவன் இறைநூலில் கூறியுள்ளதாவது; (பார்க்க வசனம் : அ.கு.24:32, 33:59)
அதாவது பெண்கள் நளினமாக பேசினால் (ஆசையை தூண்டும் வகையில்) எப்படி ஆபத்து ஏற்படுமோ அதற்கு அடுத்த அவர்கள் பார்வைகள், அணியும் ஆடைகள் கவர்ச்சியாக இருந்தால் பல இன்னல்களும் அவர்களுக்கு ஏற்படும் என்பதை தவிர்க்கவே மேற்கண்ட அறிவுரையை (வழிகாட்டுதலை) கூறியுள்ளான்.
மேலும் மற்றொரு வசனத்தில் பெண்களை படைத்த நோக்கம் என்னவென்பதை தெளிவாக கீழ்கண்ட வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.
“அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்று. உங்கள் இனத்திலிருந்தே (மனித இனத்திலிருந்தே) மனைவியரைப் (பெண்களை) படைத்தான். நீங்கள் அவர்களிடத்தில் மன அமைதி பெறுவதற்காகவும், உங்களுக்கிடையே அன்பும் மற்றும் இறக்கமும் (கருணை) ஏற்படுத்தினான். சிந்திக்கும் மக்களுக்கு இதில் சான்றுகள் உள்ளன.” அ.கு. 30:21
ஆயினும் பெண்களால் மன அமைதி கிடைக்காமல் தவிக்கும் ஆண்களே பெரும்பாலோராக இருக்கின்றார்கள். அதற்கு காரணம்; பெண் மனதில் உள்ள ஆசைகள்தான்.
இதற்கு உதாரணமாக இறைவன் தன் வழிகாட்டி நூலில் நபி யூசுப்(அலை) அவர்கள் வாழ்க்கையில் மன்னரின் மனைவியின் ஆசையினால் நடந்த ஒரு சம்பவத்தை அல்குர்ஆன் அத்தியாயம் 12ல் முழுமையாக கூறியுள்ளான்.
மேலும் அகில உலகிற்கும் அருட்கொடையாகவும், முன்மாதிரியும் என குறிப்பிட்ட நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையில் பெண்களில் ஆசையினால் நடந்த ஒரு சம்பவத்தையும் இறைவன் இறைநூலில் குறிப்பிட்டுள்ளான்.
“நபியே! அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கிய பொருளை (தேனை) நீர் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்? நீர் உம் மனைவியரின் ஆசையை (திருப்தியை) விரும்புவதாலா? அல்குர்ஆன் 66:1
அல்லாஹ்வினால் ஆகுமாக்கப்பட்ட பொருளை (தேனை) மனைவியரின் ஆசைக்காக விலக்கிக்கொள்வது அல்லாஹ் விரும்பவில்லை.
ஏன் என்றால்;
நபி(ஸல்) அவர்களின் அந்தஸ்து ஒரு சாதராண மனிதரை போன்றதல்ல, மாறாக அல்லாஹ்வின் தூதரும், வழிகாட்டியாகவும் ஆவார்கள்.
அல்லாஹ் ஆகுமாக்கிய தேனை மனைவியரின் ஆசைக்காக விலக்கிக் கொள்வதால் அவரை பின்பற்றும் உம்மத்திற்கு (சமுதாயத்திற்கு) பெரும் நஷ்டம் ஏற்படும்.
எனவேதான் தேன் சாப்பிடுவதை விலக்கிக் கொண்ட செயலை கைவிடும்படி அல்லாஹ் கட்டளையிட்டான்.
இறை நம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும், கற்களும் எரிபொருளாகக் கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும், உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன்மீது கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 66:6)
எனவே பெண்களே! ஆகுமானதற்கு மட்டும் ஆசைப்படுங்கள். பல துன்பங்களுக்கு காரணம் ஆசையே.