இணை வைத்தலுக்கு துணை போகலாமா?

in 2025 மார்ச்

தலையங்கம் :

இணை வைத்தலுக்கு துணை போகலாமா?

பொதுவாக அனாச்சாரங்கள் எங்கெல் லாம் நடக்குமென்றால் திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் கடைத்தெருக்கள் (பஜாரில்) போன்ற மக்கள் கூடும் இடங்களில் நடக்கும், நடந்து கொண்டும் இருக்கின்றன.

அனாச்சாரங்கள் இப்பொழுது மட்டும் தான் நடக்கின்றனவா? என்றால் இல்லை. சிலை வணக்க வழிபாடு எப்பொழுது தோன்றியதோ அன்று முதல் இன்று வரை நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இது இப்லீஸின் ஏற்பாடு.

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், அவர்களின் காலத்திற்கு முன்பும் காஃபத்துல்லாவில் உள்ள சிலைகள்தான் அன்று அனாச்சாரங்களுக்கு துணை போக கூடியதாக அன்றைய இறைநிராகரிப்பளர்களுக்கு இருந்தது. மேலும் வருமானம் தரக்கூடியதாக அன்றைய அரபு  மக்களுக்கு  இருந்தது.

அத்தகைய சிலைவணக்கத்தை அவர்களால் விட்டு ஒழிக்க முடியவில்லை.

எனவே, நபி(ஸல்) அவர்கள் சொல்லிய ஏகத்துவ கொள்கையை எதிர்த்தார்கள். மேலும்  பல  இன்னல்களையும்  தந்தார்கள். 

அல்லாஹ்வின் பேருதவியால் மக்கா வெற்றியின்போது நபி(ஸல்) அவர்கள் இறை ஆணைக் கிணங்க செய்த முதல் செயல் என்னவென்றால் அங்கிருந்த சுமார் 360 சிலைகளையும் அப்புறப்படத்தியதுதான். எந்த சக்தியும் இல்லாத அந்த சிலைகள் அங்கே இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவைக்கவில்லை. மாறாக அப்புறப்படுத்தினார்கள். 

ஏன்  என்றால்,

சிலைகளையும், சமாதிகளையும் வைத்துக்கொண்டே அனாச்சாரங்களை ஒருபோதும் முழுமையாக ஒழிக்க முடியுமா? என்றால் முடியாது.  அதனால்  அகற்றினார்கள்.

ஆனால் அன்றைய இறைநிராகரிப்பாளர், இஸ்லாமியர்களாக மாறிய பிறகு வறுமை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. மக்கா வெற்றிக்கு பிறகு கூட்டம், கூட்டமாக இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் உள்மனதில் ஒரு அச்சம் ஏற்பட்டது.

அது  என்னவென்றால்,

அன்றைய அரபுகளுக்கு சிலைகள் மீது இருந்த நம்பிக்கையை விட சிலைகள் இருந்தால்தான் திருவிழாக்கள் என்ற பெயரிலும், வழிபடவும் மக்கள் வருவார்கள். அதன்மூலம் வருமானம் வரும் என்பதே. அதாவது அவைகள் அப்புறப்படுத்தபட்டால் வறுமை ஏற்படும் என்று  பயந்தார்கள். அன்றைய இறை நிராகரிப்பாளர்கள், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபிறகு வறுமையைக் கண்டு அஞ்சவேண்டாம் என இறைவன் ஆறுதலாக ஒரு வசனத்தை இறக்கினான்.

இறை நம்பிக்கை கொண்டோரே! இணை வைப்பதும், இணை வைப்போரும் அசுத்தமானவர்கள் தான். எனவே இந்த ஆண்டுக்குப் பிறகு அவர்கள் (முஷ்ரிக்குகள்) மஸ்ஜிதுல் ஹராமை (காஃபத்துல்லாவையும், அதன் சுற்றுப்புறத்தையும்) நெருங்கக் கூடாது. 

நீங்கள் வறுமைக்கு பயந்தால், அல்லாஹ் நாடினால் தனது அருளின் மூலம் உங்களைச் செல்வந்தர்களாக்குவான். அல்லாஹ் நன்கறிந்தவன், நுண்ணறிவாளான்.  அல்குர்ஆன் 9:28

(அல்லாஹ்வின் வாக்குப்படி அந்த இடமும், அந்த மக்களும் செல்வந்தர்களாக இருக்கின்றார்கள்)

அன்றைய அரபு மக்களுக்கு (இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொண்டிருந்தாலும்) சிலைகளில் மீது எத்தகைய நம்பிக்கை இருந்ததோ, அதே நிலைமைதான். சமாதி வணக்கங்கள் மூலம் வருமானம் பார்க்கும் இன்றைய முஸ்லிம்களிடமும் இருக்கின்றது என்பதே உண்மை.  அதாவது இந்த சமாதி வழிபாடுகளை வறுமைக்கு அஞ்சிவிட்டு ஒழிக்க  மறுக்கிறார்கள்.

எனவே நபி(ஸல்) அவர்கள் சொன்னபடி தரைமட்டத்திற்கு மேல் உள்ள கஃப்ருகளை இல்லாமல் ஆக்கவேண்டும். அப்பொழுது தான் அங்கு கந்தூரி, சந்தனக்கூடு, உரூஸ் போன்ற அனாச்சாரங்கள் இல்லாமல் ஆக்கமுடியும். அவ்வாறு செய்யாமல் ஆயிரம்  சிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தினாலும் அனாச்சாரமும்  இணைவைத்தலும்  ஒழிக்கமுடியாது.

ஏன்  என்றால்,

இறை  நம்பிக்கை  கொண்டோரே!

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்கு பகிரங்கமான  எதிரியாவான்.        .கு. 2:208

Previous post: