மண்ணும் – மனிதனும்
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
மனித படைப்பைப் பற்றி இறைநூல் (அல்குர்ஆன்) கூறும்பொழுது, “மனிதனை மண்ணால் படைத்தோம்‘ என்பதாக. இறைவனால் படைக்கப்பட்ட பொருள்கள் இலட்சக்கணக்கில் இருக்கும்போது “மனிதனை ஏன் மண்ணால் படைத்தான்?’ என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
மேலும் இறைநூலில் மனித படைப்பை பற்றி இறைவன் கீழ்கண்ட வசனங்களில் சுமார் 10 இடங்களில் கூறியுள்ளான்.
அவை: 3:59,4:1, 15:26, 15:28, 23:12, 32:7, 37:11, 38:71, 49:13, 55:14.
மேற்கண்ட வசனங்களுக்கு மாற்றமாக கீழ்கண்ட வசனங்களில் “தண்ணீரால்‘ மனிதனைப் படைத்ததாகவும் இறைநூலில் கூறப்பட்டுள்ளது.
அவை : 21:30, 25:54, 32:8
அதுமட்டுமல்ல வேறு சில இடங்களில் “விந்துத்துளியால்‘ படைக்கப்பட்டதாகவும் இறைநூலில் கூறப்பட்டுள்ளது. பார்க்க வசனம் : 76:12, 86:6
முதல் மனிதன் மண்ணும்–தண்ணீரும் கலந்து படைக்கப்பட்டதாக இருந்தாலும் சிந்தித்துப் பார்க்கும்போது முதல் மனிதர்களான ஆதம்–ஹவ்வாவை தவிர உலகில் தோன்றிய மனிதனின் வழிதோன்றல் அனைவரும் மண்ணை உண்ட, மனிதன் மூலம் உற்பத்தியான விந்து துளி மூலம் தோன்றியவர்கள் என்பதே உண்மை.
எவ்வாறு என்றால்;
பூமியிலுள்ள எல்லா பொருள்களும் மண்ணிலிருந்தே பெறப்பட்டது (இரும்பை தவிர) அதாவது மனிதன் உண்டும், உடுத்தியும் வாழ மற்றும் அவனுக்கு தேவையான அனைத்தும் மண்ணிலிருந்தே பெறப்பட்டவை. இருப்பினும் யாரும் மண்ணை நேரிடையாக உணவாக சாப்பிடுவதில்லை. ஆனால் மண் பல்வேறு உணவு பொருளாக மாறி அதனை உண்டு வாழ்கின்றோம்.
எனவேதான் இறைவன் தன் இறைநூலில் மனிதன் தங்குமிடமும், ஒப்படைக்கப்படும் இடமும் மண்ணே (பூமியே) என்று கூறியுள்ளான்.
“அவனே உங்களை ஒரே ஒரு மனிதரிலிருந்து உருவாக்கினான். தங்குமிடமும், ஒப்படைக்கப்படும் இடமும் இங்குதான் உள்ளன. சிந்திக்கும் சமுதாயத்தினருக்கு இதில் சான்றுகள் உள்ளன” (அல்குர்ஆன் 6:98)
மேற்கண்ட வசனத்திலிருந்து மனிதப் படைப்புக்கு ஏற்ற இடம் மண்தான் (பூமி தான்) என்பது தெளிவாக தெரியவருகிறது. அது மட்டுமல்ல; மனிதனால் வானத்திலோ, சூரிய, சந்திர மண்டலத்திலோ, இதர கோள் களிலோ ஒருபோதும் நிரந்தரமாக உயிர்வாழ முடியாது. மண்ணில் மட்டுமே உயிர்வாழ முடியும். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையும் கூட, குறிப்பாக எல்லாவற்றையும் மக்கச் செய்து அழித்துவிடும் மண், விதைகளை மட்டும் உயிர்பிக்க செய்வது இறைவனின் மிகப்பெரிய அத்தாட்சிகளுமாகும். சந்திர மண்டலத்திலோ, ஏனைய இதர மண்டலத்திலோ மனிதன் வசிக்கமுடியும் என்பது கற்பனையே தவிர, அது உண்மை அல்ல.