மார்க்கத்தில் குழப்பமா? மக்களிடம் குழப்பமா?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
“…இன்று இஸ்லாம் மார்க்கத்தை உங்களுக்காக முழுமைக்கிவிட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் இஸ்லாத்தை (மார்க்க)த்தை வாழ்க்கைக்கு வழிகாட்டியாக ஆக்கி வைத்துள்ளேன்”. அல்குர்ஆன் 5:3
என்று இறைநூலில் இறைவன் பிரகடனப்படுத்தியுள்ளான்.
எந்தவொரு சரியான வழிகாட்டுதலும் இல்லாத எத்தனையோ மதங்கள் உலகில் இருக்கின்றன. ஆனால் இதுதான் நேர்வழி (இஸ்லாம் மார்க்கம் மட்டுமே) என தெளிவு படுத்திய பின்பும் ஏன் இத்தனை பிரிவுகள், பல சர்ச்சைகள், பல்வேறான சடங்குகள் வந்தன.
அதற்கு காரணம், நேர்வழி என்னும் படகில் பயணிக்க (குர்ஆன், ஹதீத் அடிப்படையில் மட்டுமே நடக்க) முயற்சிக்கும்போது நம் படகை (முஸ்லிம்களை) கவிழ்க்க ஏராளமான திமிங்களங்கள் (யூதர்களாலும், கிருஸ்தவர்களாலும், இமாம்கள் பெயராலும், மத்ஹபுகள் பெயராலும், இயக்கங்களாலும், பிரிவுகளின் பெயராலும்) சுற்றிக்கொண்டே இருக்கின்றன.. நாம்தான் முன்னெப் பொழுதையும் விட மிக அதிக விழிப்புடன் பயணிக்க (நடக்க) வேண்டி இருக்கிறது. எனவே கவனம் தேவை.
“கடப்பாறையை விழுங்கிவிட்டு சுக்கு கசாயம் குடிப்பது” என்று ஒரு சொல்லடை இருக்கின்றது. அதாவது மார்க்கத்தில் இல்லாத பல அனாச்சாரங்களை அனுமதித்துவிட்டும், பழக்கதோசத்திற்கு அடிமையாகி விட்டும் அவதிப்படுகிறோம். எனவே எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மார்க்கத்தில் இல்லாத கீழ்க்கண்டவைகளை சரி செய்யும் முயற்சியில் நாம் இறங்கவேண்டும்.
அவைகள் :
1. நபி(ஸல்) அவர்கள் ஜமாத்தாக தொழுது காட்டித்தராத தராவீஹ் 20+3 அல்லது 8ல் 3 என்று ஜமாத்தாக தொழுவதை தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் தொழவேண்டும்.
2. பிறையை பார்த்துதான் நோன்பை துவக்க முடியும் என்று அல்லாமல் கணக்கிட்டும் நோன்பின் துவக்கத்தையும், முடிவையும் அறியலாம் என்பதை நிலைநாட்ட வேண்டும்.
3. சஹர் நேரங்களில் இபாதத்தில் ஈடுபட வேண்டும், மாறாக டி.வி. மூலம் வரும் சஹர் நேர பயான் நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
4. பெருநாள் நேற்றா, இன்றா, நாளையா என்ற சர்ச்சையில் ஈடுபடாமல் உரிய காலத்தில் சரியாக கணக்கிட்டு நிறைவு செய்ய வேண்டும்.
5. ஜகாத் (தனி கட்டுரையில் காண்க). குர்ஆன், ஹதீத் என்று முழங்கக்கூடிய கொள்கை சகோதரர்களிடமும் இந்த தராவீஹ் தொழுகை விசயத்தில் மாற்று கருத்துகளும், குறைபாடுகளும் உள்ளன. எனவே அதை களைய முன்வரவேண்டும்.
“உங்கள் நபியிடம் அழகிய முன்மாதிரி உள்ளது” என்று இறைவன் கூறுகிறான். மேலும் “”நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னை பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை மன்னிப்பான்”. அல்குர்ஆன் 3:31
“எந்தவொரு சமுதாயத்தவர்களும் தம் நிலைகளை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் ஒருபோதும் அவர்களை மாற்ற போவதாக இல்லை”. அல்குர்ஆன் 8:53
மேற்படி வசனங்களுக்கு ஏற்ப நமது வணக்க வழிபாடுகளை குர்ஆன், ஹதீத் அடிப்படையில் மட்டுமே குழப்பம் இல்லாமல் செய்து இறைவனின் பொருத்தத்தை ரமழானில் அடைய முயல்வோம்.