ஐயமும் தெளிவும்

in 2009 ஜூன்,ஐயமும்! தெளிவும்!!

ஐயமும் தெளிவும்

ஐயம் : பெண் குழந்தை பிறந்தால் கொலை செய்துவிடும் பழக்கம் அரபியாவில் அப்போது இருந்து வந்ததா? அமானுல்லாஹ், வேடந்தாங்கல்

தெளிவு : அறியாமை காலத்தில் இருந்த அப்பழக்கத்தை இஸ்லாம் முற்றிலுமாக நீக்கி விட்டது. அப்பழக்கம் இருந்து வந்ததை திருகுர்ஆன் தெளிவு படுத்துகிறது.

‘உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை, அது எந்தக் குற்றத்திற்காக கொல்லப்பட்டது என்று விசாரிக்கப்படும் அந்நாளில்…..’ அல்குர்ஆன் 81:8,9

மேலும் இறைத்தூதர் அவர்களின் எச்சரிக்கையையும் கவனியுங்கள் :

‘பெண் குழந்தையை உயிருடன் புதைப்பவன் நரகம் செல்வான்’ என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எச்சரித்தனர். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரழி), நூல்: அபூதாவூது.

அறியாமைக் காலத்தில் நடந்து கொண்டிருந்த இந்த காட்டுமிராண்டித்தனமான மூடப் பழக்கத்திற்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

ஐயம் : மறுமையில் மனிதர்கள் நிர்வாணமாக இருப்பார்களா? ஷேக் அப்துல்லாஹ், காரைக்கால்.

தெளிவு : தங்களின் வினாவிற்கான விடையாக கீழேயுள்ள ஆயத்தையும், ஹதீஸையும் தருகிறோம்.

‘மறுமை நாளில் மக்கள் வெறுங்காலுடன், நிர்வாணமாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும், ஒன்று சேர்க்கப்படுவார்கள்’ என நபி(ஸல்) அறிவித்தனர். அப்போது ஒரு பெண்மணி, ‘அல்லாஹ்வின் தூதரே! (அப்படியானால்) நம்மில் சிலர் சிலரின் இன உறுப்புக்களைப் பார்ப்பார்களே!’ என்று வினவினார். அதுகேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘இன்னவளே! அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களை கவனிக்க இயலாத வண்ணம் ஒருவித நிலை ஏற்பட்டு விடும்’ எனக்கூறிவிட்டு,

‘அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் நிலையே போதுமானதாயிருக்கம்’ என்ற 80:37வது வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

ஐயம்: அடியார்களை அல்லாஹ் மன்னித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவனுக்கு இருக்கிறதாமே? அரவாமுதன், திருச்சி.

தெளிவு : எதுவுமே அல்லாஹ்வைக் கட்டுப்படுத்தாது. அவனை எவர் தான் நிர்ப்பந்திக்க முடியும்? அடியார்களை மன்னிப்பதும் தண்டிப்பதும் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் விருப்பத்தின் பேரில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சி.

‘……தான் நாடியவரை மன்னிப்பான், தான் நாடியவரை வேதனையும் செய்வான். அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் சக்தியுடையவன்’. அல்குர்ஆன் 2:284

‘….அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே பயபக்திக்குரியவன், அவனே மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்’. அல்குர்ஆன் 74:56

‘பயப்படுவதற்குரியவனும், மன்னிக்கக்கூடியவனும் அல்லாஹ்தான் என்ற 74:56வது வசனத்திற்கு, ‘நானே பயப்படுவதற்குரியவன்: எனவே எவர் எனக்குப் பயந்து, என்னுடன் எந்தத் தெய்வத்தையும், எவரையும் இணை ஆக்கவில்லையோ அவருக்கு மன்னிப்பதே எனக்கு உரிய தகுதியாகும் என்று அல்லாஹ் கூறுகிறான்’ என நபி(ஸல்) அவர்கள் 74:56வது வசனத்திற்கு விளக்கம் அளித்துள்ளதாக அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : திர்மிதி

எனவே இஸ்லாத்தை ஏற்றபின் இணை வைத்தல் என்ற மாபாவ செயலை செய்யாதிருக்கும் அடியானுக்கு மட்டுமே. இணை வைத்தல் அல்லாத மற்ற பாவங்களை அல்லாஹ் மன்னிக்க விரும்புகிறான் என்பது தெளிவு. இதனை 4:48,116 இறை வசனங்களிலிருந்தும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்க மாட்டான்: இதைத்தவிர எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்’. அல்குர்ஆன் 4:48

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்: இது அல்லாததை தான் நாடியவருக்கு மன்னிப்பான்: எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ அல்குர்ஆன் 4:116

எனவே, இணை வைக்காதவர்களின் மற்ற பாவங்களைக்கூட தான் நாடியவர்களுக்குத்தான் மன்னிப்பதாகவே அல்லாஹ் மேற்கண்ட 4:48, 116 வசனங்களில் வாக்களித்துள்ளான். மன்னிப்பதற்கு உரிமையுடையவன் அல்லாஹ்தான் என்ற 74:56 வசனத்தின் மூலம் அந்த பாக்கியம் இணை வைக்காதவர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்பதை 4:48,116 வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. எனவே அல்லாஹ்வுக்கு பயந்து, இணை வைக்காமலிருப்பவர்களின் பாவங்களை மன்னிக்க அல்லாஹ் நாட்டம் கொள்கிறான் என்பதை அறிவோமாக.

அடுத்து இன்று தவ்ஹீத்வாதிகள் அல்லாஹ் இணைவைத்தலை மட்டுமே மன்னிக்க மாட்டான். மற்ற எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுவான் என்ற தவறான நம்பிக்கையில் பெரும் பெரும் பாவங்களை செய்து வருகின்றனர். அல்லாஹ்மீதே ஆணையிட்டுப் பொய் சத்தியமும் செய்கின்றனர். இது பெரும் தவறாகும். ஒரு வகையில் அல்லாஹ்வை விவரம் கெட்டவன் என்று ஏமாற்றுவதாகும். இப்படி ஏமாற்றுகிறவர்களை அல்லாஹ் எப்படி விரும்பி மன்னிப்பான்? எனவே அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வார்களாக.

ஐயம்: தொழுகைக்குப் பிறகு, தஸ்பீஹ் செய்வதை இடது கையால் செய்யலாமா? (ஷேக்தாவூது, திருச்சி.

தெளிவு : ‘நபி(ஸல்)அவர்கள் தங்களது வலது கரத்தில் தஸ்பீஹ் எண்ணுவதை தான் பார்த்திருக்கிறேன்’ என்ற அப்துல்லாஹ் இப்ன அம்ர்(ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தி அபூதாவூத், திர்மிதி, ஹாகிம், பைஹகீ ஆகிய ஹதீஸ் நூல்களில் பதிவாகியுள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்கு அவர்களின் அனைத்துக் காரியங்களிலும் வலது பாகமே பிரியமானதாக இருந்தது. அவர்களின் பரிசுத்தம் (ஒளு செய்தல், குளித்தல்) தலை முடி சீவுதல், செருப்பு அணிதல் ஆகியவற்றில் வலது பாகத்தையே விரும்புவார்கள். அறிவிப்பவர்:: ஆயிஷா(ரழி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

எனவே நபி(ஸல்) அவர்களின் முன் மாதிரியை அழகாகப் பின்பற்றி இடது கரத்தில் தஸ்பீஹ் எண்ணுவதை விட்டுவிட்டு வலது கரத்தில் தஸ்பீஹ் எண்ணுங்கள்.’

ஐயம் மனிதர்களைப் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹ் மலக்குகளிடம் கூறும் பொழுது, அல்லாஹ் அவர்களிடம் கருத்து எதுவுமே கேட்காத நிலையில் மலக்குகள் அல்லாஹ்வுக்குக் கருத்துக் கூறுகிறார்கள். எனவே அவர்களை அடக்கும் விதமாக, அல்லாஹ், ‘நீங்கள் அறியாததை அறிவேன்’ என்று கூறுகிறான். அல்லாஹ் கூறியதை மறுபேச்சு இல்லாமல் நிறைவேற்றும் மலக்குகள் இப்படிக் கருத்துக் கூறுகிறார்களே! கருத்துச் சுதந்திரத்தை அல்லாஹ் மலக்குகளுக்கு வழங்கி உள்ளானா? இதன் முழு விளக்கம் தரவும். -முஹம்மது மொய்னுதீன், திண்டுக்கல்-1.

பதில்: தங்கள் வினாவிற்கு விடைகாணும் முன்பாக, சில விஷயங்களைத் தெளிவு படுத்திக் கொள்வோம். மனிதர்களாகட்டும், மலக்குகளாகட்டும், யாராயிருந்தாலும் அல்லாஹ் அறிவித்துத் தந்தால்தான், எவரும் எதையும் அறிந்து கொள்ளமுடியும். ‘..அவன் நாட்டமின்றி அவன் ஞானத்திலிருந்து எவரும் எதனையும் அறிந்து கொள்ள முடியாது…..’ (அல்குர்ஆன் 2:255 ஆயத்துல் குர்ஸீயில் ஒரு பகுதி) எல்லாப் பொருட்களின் பெயர்களை ஆதம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்ததால், ஆதம்(அலை) அவர்கள் அவற்றின் பெயர்களை விவரித்தார்கள். மலக்குகளுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுக்காததால் மலக்குகளால் பெயர்களைக் கூற முடியவில்லை.

‘இன்னும் (அல்லாஹ்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான்…’ அல்குர்ஆன் 2:31

‘ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக! என்று (இறைவன்) சொன்னான். அவர் அப்பெயர்களை விவரித்தார்….’ அல்குர்ஆன் 2:33

மலக்குகளுக்கு அல்லாஹ் பெயர்களைக் கற்றுக் கொடுக்காததால், மலக்குகளால் பெயர்களைக் கூறமுடியவில்லை என்பதை திருமறையின் 2:31,32 வசனங்களிலிருந்து அறிய முடிகிறது.

தாங்கள் வினா எழுப்பிய 2:30 இறை வசனத்தை இப்போது காண்போம்.

‘இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி, ‘நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை (ஹலீஃபாவை) அமைக்கப் போகிறேன்’ என்று கூறியபோது, அவர்கள், ‘குழப்பத்தை உண்டாக்கி இரத்தம் சிந்துவோரையா நீ அதில் அமைக்கப் போகிறாய்? இன்னும் நாங்களோ, உன் புகழ் ஓதியவர்களாக, உன்னைத்துதித்து உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்.’ அதற்கு இறைவன் ‘நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்’ எனக் கூறினான். அல்குர்ஆன் 2:30.

பூமியில் குழப்பம் உண்டாக்கி, இரத்தம் சிந்துவது மனிதர்களின் தன்மைகளுள் உள்ளவை என்ற சரியான எண்ணம், மனிதர்கள் படைக்கப்படுவதற்கு முன்பே, மலக்குகளுக்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் மலக்குகள் கருத்துக் கூறினார்கள்.

மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே மலக்குகளுக்கு இந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது? மேலே காட்டியுள்ள ஆயத்துல் குர்ஸி (2:255) வசனத்தின் பிரகாரம், இறைவன் ஏற்கனவே அறிவித்துத் தந்திருந்தால் மட்டுமே, மலக்குகள் இப்படியான கருத்தைக் கூறியிருக்க முடியும். ஆகவே மனிதர்களைப் பற்றி இறைவன் மலக்குகளுக்கு ஏற்கனவே கற்றுக் கொடுத்துள்ளதால்தான் மலக்குகள் கருத்துக் கூறியிருக்கிறார்கள். சுயமாக நாம் இம்முடிவிற்கு வரவில்லை. மேலேயுள்ள 2:255 வசனப்பகுதியே இதற்கு அடிப்படை; மேலும் 2:32 வசனத்தில் மலக்குகளே அவ்வாறு கூறுவதைப் பாருங்கள்.

‘அவர்(மலக்கு)கள், (இறைவா!) நீயே பரிசுத்தமானவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்:; விவேகம் மிக்கவன் எனக் கூறினார்கள்.’ அல்குர்ஆன் 2:31.

எனவே மலக்குகள் மனிதர்களைப் பற்றிய கருத்துக் கூறியதில் ஆச்சரியமில்லை. தங்களுக்குத் தெரிந்ததைத் தான் கேட்டுள்ளார்கள். ‘அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக, துதித்தவர்களாக, அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மையைப் போற்றியவர்களாக தாங்கள் இருக்கும்போது, மனிதர்களை எதற்காகப் படைக்க வேண்டும்?’ என்பதுதான் மலக்குகளின் ஆதங்கம்.

மனிதர்களை எதற்காக அல்லாஹ் படைக்கப் போகிறான் என்பது, அல்லாஹ் மலக்குகளுக்கு அறிவித்துத் தராத விஷயம். எனவே தான், ‘மனிதர்களை எதற்காகப் படைக்கப் போகிறாய்?’ என வினவிய மலக்குகளிடம், ‘நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்’ என அல்லாஹ் பதிலளிக்கிறான். அல்லாஹ் அறிவித்துத் தராத விஷயங்களிலும், சிந்தனை செய்து மலக்குகள் வினா எழுப்பியுள்ளார்கள். சிந்திக்கும் திறன் மலக்குகளுக்கு உண்டு என்பதையும் இதிலிருந்து அறிய முடிகிறது.

இப்போது தங்களின் வினாவிற்கு வருவோம்.

அல்லாஹ் கூறுவதற்கு மறுபேச்சு இல்லாமல் நிறைவேற்றும் மலக்குகள் இப்படிக் கருத்துக் கூறுகிறார்களே என்பதுதான் தங்களின் வினா, அதுமட்டுமல்ல தங்களுக்குள்ளேயுள்ள ஆச்சரியமும் கூட இது.

மலக்குகள் மறுபேச்சு பேசாதவர்கள் என்ற முடிவிற்கு வந்த தாங்கள், இப்படிப்பட்ட முடிவிற்கு எப்படி வந்தீர்கள்? அல்லாஹ் திருமறையில் அது போன்று எதையும் அறிவித்திருக்கவும் இல்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதுபோன்று எதையும் தெரிவிக்கவும் இல்லை. மலக்குகள் சிந்திக்கும் திறனற்றவர்கள், மறுபேச்சு பேசாதவர்கள் என்ற தவறான எண்ணம் பலரிடம் இருப்பதற்குக் காரணம். காலம்காலமாக மக்கள் இப்படியான கருத்துக்களால் போதிக்கப்பட்டு வருவதன் விளைவே இது. உண்மை அதுவல்ல.

தாங்கள் எடுத்துக்காட்டிய 2:30 இறைவசனமே இதற்குப் போதிய சான்றாக அமைந்துள்ளது. மலக்குகள் தங்களின் கருத்தைக் கூறுகிறார்கள்; அவர்கள் சிந்தித்து வினா எழுப்பியதில் இறைவன் அந்த வினாவிற்கு பதிலளிக்கவும் செய்கிறான். இறைவனின் பதிலைக் கேட்ட மலக்குகள் தங்களின் தவறை உணர்ந்து இறைவனைப் புகழ்கின்றனர். (2:32)

கருத்து சுதந்திரத்தை இறைவன் மலக்குகளுக்கு மட்டும் அளிக்கவில்லை. ஜின் இனத்தைச் சார்ந்த இப்லீஸ் (அல்குர்ஆன் 18:50). ஆதமுக்கு சுஜூது செய்யும்படியான அல்லாஹ்வின் கட்டளையை மறுத்ததோடல்லாமல் அவன் சுஜூது செய்யாததற்கான காரணங்களை கூற அல்லாஹ் சுதந்திரம் வழங்கியிருப்பதை 7:12, 15:33 என இன்னும் சில வசனங்களிலும் அறிய முடிகிறது.

அது மட்டுமா? பாவம் செய்த பாவி ஒருவர் மறுமையில் தனது பாவத்தை நிரூபிக்க முடியுமா? என அல்லாஹ்விடமே கேட்டு வாதாடி தோற்றுப்போகும் பரிதாப நிலையை ஹதீஸ்களில் பார்க்கவும் முடிகிறது.

சுதந்திரத்தை அல்லாஹ் வாரியே வழங்கியிருக்கிறான். அதைத் தவறாகப் பயன்படுத்துவது இப்லீஸின் வேலையாகும்.

ஐயம்: தொழுகையின் அத்தஹிய்யாத்தில் இறுதியில் இரண்டு சலாம் கொடுத்து தொழுகையை நிறைவு செய்கிறோம். சலாம் யாருக்குக் கொடுக்கப்படுகிறது? ஃபைரோஸ் கான், மதுரை.

தெளிவு: :ஹதீஸ்: ‘தொழுகையின் இறுதியில் உங்களின் இமாம்களுக்கும், ஒருவர் மற்றவர்க்கும் சலாம் கூறிக்கொள்ள வேண்டும்’ என்றும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (ஒரு அறிவிப்பு) ‘நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமான (முகர்ரபான) மலக்குகளுக்கும், மற்றும் முஃமின்களுக்கும் சலாம் கூறுவார்கள்’ (மற்றோர் அறிவிப்பு) அறிவிப்பவர்:: ஸமூரத்து பின் ஜுன்துப் நூல்கள்: அஹ்மத், ஹாக்கிம், ஃபஜ்ஜார்.

ஐயம்: ஸஜ்தா ஆயத்துக்களை ஓதினாலோ அல்லது ஓதக்கேட்டாலோ ஸஜ்தா செய்கிறோமே. அந்த ஸஜ்தாவில் எதையும் ஓத வேண்டுமா? அல்லது சுப்ஹான ரப்பியல் அஃலா மட்டும் 3 தடவை தொழுகையில் ஓதுவது போல் ஒதவேண்டுமா? அபூபக்கர் சித்தீக், திருநெல்வேலி.

தெளிவு : நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா ஆயத்துக்களை ஓதி ஸஜ்தா செய்யும் போது, ஸஜ்தாவில், ‘ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலக்கஹூ வ ஸவ்வலரஹூவ ஷக்க ஸம்அஹூ, வ பஸரஹூ, பிஹவ்லிஹீ, வகுவ்வத்திஹீ ஃபதபாரக்கல்லாஹு அஹ்சனுல் காலிக்கீன்’ என்று ஒதுவார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள : திர்மிதீ, அபூதாவூது, தாரகுத்னீ, பைஹகீ, ஹாக்கிம்.

பொருள்: ஆக்கும் திறன், அழிக்கும் திறன் ஆகியவற்றால் சுயமாக எனது முகத்தைப் படைத்து உருவாக்கியவனுக்கு, அது அடிபணிந்து விட்டது. மேலும் கேட்கும் சக்தியையும், பார்க்கும் சக்தியையும் அவனே அதில் ஏற்படுத்தினான். மேலும் அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன், மிக அழகான படைப்பாளன்.

Previous post:

Next post: