ஐயமும்! தெளிவும்!!

in 2009 நவம்பர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயமும்! தெளிவும்!!
ஐயம்: நபி(ஸல்) அவர்களின் அந்தஸ்தை திண்ணைத் தோழர்கள் அடைந்து விட்டார்கள் என்பது சரியா? B.A.ஜலீல், நெய்வேலி-2.

தெளிவு : இது ஒரு தவறான எண்ணமாகும். திண்ணைத் தோழர்கள் சிறப்புக்குரியவர்தான். ஆயினும் நபி(ஸல்) அவர்களின் அந்தஸ்தையோ ஏனைய நபிமார்களின் அந்தஸ்தையோ ஒருபோதும் அடைய முடியாது. பொதுவாக நபி தோழர்களைப் பற்றி எல்லை மீறிய எண்ணங்களை முஸ்லிம் சமுதாயத் தில் ஒரு சாரார் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். குர்ஆன், ஹதீஸுடன் நேரடி தொடர்பு கொள்ளும் சாதாரண ஒரு பாமரனும் இதை எளிதில் புரிய முடியும்.

ஐயம்: நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண ஏதேனும் தனிப்பட்ட முறையில் துஆ உண்டா?  A.முஜாஹிதீன், சவுதி,

தெளிவு : அப்படி தனிப்பட்ட எந்த ஒரு துஆவையும் நபி(ஸல்) அவர்கள் தமது உம்மத்திற்குக் கற்றுத் தரவில்லை. பின்னால் வந்தவர்கள் கற்பனையாக கூறுவதை துஆ என்று ஒரு முஸ்லிம் சொல்ல முடியாது.

ஐயம்: மார்க்க அறிஞர்களை மவ்லான, மவ்லவி என அழைக்கலாமா? அல்லது எப்படி அழைக்க வேண்டும்? A.முஜாஹிதீன், சவுதி,
தெளிவு : நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த நடைமுறையில் மார்க்க அறிஞர்களை தனிப் பட்ட முறையில் வேறுபடுத்தி விஷேசமாக எப் பெயரையும் சூட்டி அழைத்ததற்கு துளி கூட சான்று இல்லை. நபி தோழர்கள் அப்படியொரு தனிப்பிரிவை ஏற்படுத்திக் கொண்டதில்லை. இதுவும் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திக் கொண்டதே. மவ்லவி, மவ்லானா, ஹஜ்ரத் போன்ற பதங்களின்; பொருளை உற்று நோக்கும் போது இந்த உண்மை தெளிவாக விளங்கும். மவ்லவி என்றால் அல்லாஹ்வைச் சேர்ந்தவர் என்பது பொருள், 2:286-ல் அல்லாஹ்வே மவ்லானா என்றிருக்கிறது. ஹழரத் என்றால் சந்நிதானம் என்பது பொருள். தங்களைத் தெய்வாம்சம் பெருந்தியவர்கள் என மக்களை மயக்கி ஏமாற்றிச் சுரண்டுவதற்காக இவர்களாகக் கற்பனை செய்துகொண்ட தவறான பெயர்கள் இவை. அவர்களும் முஸ்லிம் சமுதாயத்திலுள்ளவர்கள்-சகோதரர்கள் என்று கருதி நமது மூத்த சகோதரர்களை எப்படி அழைப்போமோ அப்படி அழைப்பதே சமுதாயம் வழிகெடாமல் இருப்பதற்குரிய வழியாகும்.

ஐயம் : ‘ஸதகா’ என்கிற தர்மத்தை ஏழையாகிய காஃபிர்களுக்கும் கொடுக்கலாமா? அனுமதி உண்டா? A.முஜாஹிதீன், சவுதி,

தெளிவு : தான தர்மங்களை முஸ்லிம், காஃபிர் என்று பார்க்காமல் ஏழைகளுக்கு, தேவைப்பட்டவர்களுக்கு வழங்குவதில் தடை ஏதும் இல்லை. தாராளமாக கொடுக்கலாம்.

ஐயம்: நான்கு இமாம்களால் உருவாக்கப்பட்டதா மத்ஹபுகள்? அல்லது பின்னால் வந்தவர்களால் உருவாக்கப்பட்டதா? தெளிவு தாருங்கள். கீழக்கரை முஹம்மத் மதார், அபுதாபி.

தெளிவு : நான்கு இமாம்களின் காலகட்டம் ஹி;.80லிருந்து ஹி.241 வரையாகும். மத்ஹபுகள் பின்னால் வந்தவர்களால் உருவாக்கப் பட்டவை, ஹி.400க்கு பிறகாகும். எனவே இந்த மத்ஹபுகளின்; தோற்றத்திற்கும் இமாம்களுக்கும் அணுவின் முனை அளவும் சம்பந்தமில்லை. அந்த நான்கு இமாம்களின் உபதேசங்களை உற்று நோக்கினால் குர்ஆன், ஹதீஸ் போதனைப்படி நடப்பதையே அவர்கள் வலியுறுத்தினர் என்பது விளங்கும். நாங்கள் எங்கிருந்து சட்டத்தை எடுத்தோம் என்பதற் குரிய (குர்ஆன், ஹதீஸ்) ஆதாரங்களைப் பார்க்காமல் எங்கள் சட்டங்களை எடுத்து நடப்பது கூடாது என்றே அந்த இமாம்கள் கூறியுள்ளனர். கிறிஸ்தவர்கள், ஈஸா (அலை) அவர்களின் பெயரைச் சொல்லி தவறாக திரியேகத்துவத்தை உண்டாக்கி மக்களை ஏமாற்றுவது போல், இந்த முகல்லிது கள் இமாம்களின் பெயரால் தவறாக மத்ஹபுகளை உண்டாக்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஷைத்தானும் அவர்களுக்குத் துணையாக இருக்கிறான்.

ஐயம்: இமாம் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரகுத்னீ போன்றவர்கள் இமாம்கள் (ஹனபி, ஷாஃபி, ஹன்பலி, மாலிக்கி) நால்வருக்கும் முன்னால் உள்ளவர்களா? பின்னால் தோன்றியவர்களா? கீழக்கரை முஹம்மத்மதார், அபுதாபி.

தெளிவு: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இமாம்கள் அனைவரும் மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்களுக்கும் பின்னால் தோன்றியவர்களே. அவர்களின் பிறப்பு, இறப்பு வருடங்களை கீழே தருகிறோம்.. அதிலிருந்து நீங்கள் தெளிவாகப் புரிந்துக் கொள்ளலாம்.
1. இமாம் அபூஹனீபா(ரஹ்) ஹி.80-150
2. இமாம் மாலிக்(ரஹ்) ஹி.93-179
3. இமாம் ஷாபியீ(ரஹ்) ஹி.150-204
4. இமாம் ஹம்பல்(ரஹ்) ஹி.164-241
5. இமாம் புகாரி(ரஹ்) ஹி.194-256
6. இமாம் முஸ்லிம்(ரஹ்) ஹி.204-261
7. இமாம் அபூதாவூத்(ரஹ்) ஹி.202-271
8. இமாம் திர்மிதி(ரஹ்) ஹி.209-273
9. இமாம் நஸயீ(ரஹ்) ஹி.215-303
10. இமாம்இப்னுமாஜ்ஜா(ரஹ்) ஹி.209-279
11. இமாம் அபூயூசுப் .. ஹி.113-182
12. இமாம் பைஹகி ஹி.384-458
13. இமாம் தாருகுத்னீ ஹி. -385

ஐயம்: தந்தையின்றிப் பிறந்ததால் ஈஸா(அலை) அவர்களை ‘இப்னுமர்யம்’ என்று கூறுவதாக எழுதியுள்ளீர்கள்.
பாத்திமா(ரழி) அவர்களுக்கும், அலீ(ரழி) அவர்களுக்கும் பிறந்தவர்களே ஹஸன்(ரழி, ஹுஸைன்(ரழி) ஆவர். அவர்களிலிருந்து அவர்களின் சந்ததிகள் வழி வழியாக வருகிறார்கள். பாத்திமா(ரழி) அவர்களுக்கும், அலீ(ரழி) அவர்களுக்கும் ஏற்பட்ட சந்ததிகளை அலீ(ரழி) சந்ததிகள் என்று கூறாமல் பாத்திமாவின் சந்ததிகள் என்று கூறப்படுகிறதே! அந்த அடிப்படையில்தான் மஹ்தி(அலை) அவர்கள் பாத்திமா(ரழி) அவர்களின் சந்ததியிலிருந்து தோன்றுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் கூறுகிறது.

அப்படியானால் பாத்திமா(ரழி) அவர்களின் சந்ததிகள் என்பதால் அவர்களுக்கு மட்டும் ஆண் துணையின்றி பிறந்தவர்களிலிருந்து வரக்கூடிய சந்ததிகளா? ஏன் அலீ(ரழி) சந்ததிகள் என்று கூறாமல் பாத்திமா(ரழி)யின் சந்ததிகள் (பனுபாத்திமா) என்று கூறப்பட்டுள்ளது? விளக்கம் தருக. அபூபாத்திமா, உடன்குடி.

தெளிவு: நாம் எழுதியுள்ளதைத் தவறாகப் புரிந்துக் கொண்டு கேள்வி கேட்டுள்ளீர்கள். மேலும் உங்களின் கேள்வியின் பிற்பகுதி தெளிவாகவும் இல்லை. பொதுவாக எந்த ஒரு நபரும் இன்னார்தான் என்று திட்டமிட்டு அடையாளம் காட்டப்படுவதற்காக இன்னாருடைய மகன் இன்னார் என்று அவரது தந்தையின் பெயருடன் இணைத்துச் சொல்லப்படும், தாயின் பெயருடன் இணைத்துச் சொல்லும் பழக்கம் இல்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள பாத்திமா(ரழி) அவர்களின் மகன்களான ஹஸன் ;(ரழி), ஹுஸைன்(ரழி) இருவரும் ஹஸன் இப்னு அலீ(ரழி) ஹுசைன் இப்னு அலீ(ரழி) என்றுதான் ஏடுகளில் பதியப்பட்டுள்ளதே அல் லாமல் ஹஸன் இப்னு பாத்திமா(ரழி), ஹுஸைன் இப்னு பாத்திமா (ரழி) என்று பதி யப்படவில்லை என்பதை விளங்கவும். நாம் குறிப்பிட்டிருப்பது இன்னாரின் மகன் இன்னார் என்று குறிப்பாகச் சொல்வது பற்றி. நீங்களோ சந்ததிகளைப் பற்றிய விபரத்தை இதனுடன் போட்டு குழப்பி இருக்கிறீர்கள். பாத்திமா(ரழி) அவர்களின் சந்ததியிலிருந்து (பனூ பாத்திமா) மஹ்தி (அலை) அவர்கள் வருவார்கள் என்ப தால் அவர்கள் தகப்பனின்றி பிறப்பார்கள் என்பது பொருள் அல்ல. நீங்கள் தவறாகப் புரிந்து வைத்துள்ளீர்கள். பாத்திமா(ரழி) அவர் களின் சந்ததியில் வந்தாலும் அவர்கள் அவர் களுடைய தகப்பானாரைக் கொண்டே குறிப்பிட்டுச் சொல்லப்படுவார்கள்.

ஆனால் ஈஸா(அலை) அவர்கள் தந்தையின்றியே பிறந்தார்கள். எனவேதான் தாயின் பெயரைக் கொண்டு குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறார்கள்.
பின்னால் (இப்னு மர்யம் என்றில்லாமல்) ஈஸா(அலை) அவர்கள் வருவார்கள் என்று மட்டும் முன்னறிவிப்புகளில் சொல்லப்பட்டிருந் தாலாவது அவர்களின் சாயலில் வேறொருவர் வருவார் என்று பொருள் கொள்ள இடம் இருக்கிறது. இப்னு மர்யம் வருவார்கள் என்று தெளிவாக முன்னறிவிப்புகள் சொல்வதால் அதே தந்தையின்றி பிறந்த குறிப்பிட்ட இப்னு மர்யம் அல்லாத, வழமையான முறைப்படி தந்தைக்குப் பிறக்கும் எவரையும் இப்னு மர்யம் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுச் சொல்லி யிருக்கமாட்டார்கள் என்றே தெளிவுபடுத்தி இருந்தோம். குறிப்பாக திட்டப்படுத்தி இன்னாருடைய மகன் இன்னார் என்று ஒருவரை அடையாளம் காட்டுவதற்கும், பொதுவாக இன்னாருடைய சந்ததிகள் என்று குறிப்பிடுவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் விள ங்கி இருந்தால் இப்படியொரு கேள்வியை எழுதியிருக்க மாட்டீர்கள். அலீ(ரழி) அவர்களின் சந்ததி என்று குறிப்பிடாமல், பனூ பாத்திமா என்று கூறப்பட்டதன் நோக்கம் இறுதி நபிக்கு ஆண் சந்ததிகள் இல்லாததாலும், மகள் பாத்திமாவுக்குப் பிறந்த குழந்தைகளிலிருந்தே சந்ததிகள் ஏற்பட்டதாலும் நபியின் சிறப்பைக் கொண்டு அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஐயம்: விரலசைத்தல் பற்றி சர்ச்சையாக யிருக்கும் பட்சத்தில் மக்கள் எதை தேர்ந தெடுப்பது? M.F.முன்ஷிசந்தா, பி.ஏ., பாண்டிச்சேரி-1.

தெளிவு: மக்களிடையே கருத்து வேறுபாடு வந்து விட்டால் எப்படிச் செயல்படுவது என்பதற்கு 4:59 அல்குர்ஆன் வசனம் தெளிவான வழிகாட்டலைக் கூறுகிறது. அவரவர் அபிப்பிராயத்தை விட்டு குர்ஆன், ஹதீஸ் பக்கம் மீண்டுவிட வேண்டும். எனவே ‘சந்தேகமானதை தொடர வேண்டாம்’ என்ற 17:36 அல்குர்ஆன் வசனமும் ‘சந்தேகமானதை விட்டு சந்தேகமற்றதின் பால் சென்றுவிடு’ என்ற புகாரியில் காணப்படும் ஹதீஸும் தெளிவுபடுத்தியுள்ளபடி முஸ்லிம்கள் செயல்பட முன்வந்தால் கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம்.
இப்போது விரலசைத்தல் பற்றிய சர்ச்சையை எடுத்துக் கொள்வோம். விரலசைப்பது பற்றிய ஹதீஸ்கள் அனைத்திலும் (‘யுஹர்ரிக்குஹா யதுவூ பிஹா’) ஆஸிம்பின் குலைப் இடம் பெறுகிறார். அவரைப் பற்றிய சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. அதே சமயம் சமிக்கை(இஷாரா) செய்வது பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் மேற்படி ஹதீஸை விட தரம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றன. சமிக்கை என்றால் நீட்டுவதா, அசைப்பதா என்பதற்கு விளக்கமாக கிப்லாவை நோக்கி சமிக்கை அதாவது நீட்டுதல் என்பதை நஸயீயில் காணப்படும்; ஹதீஸ் உறுதிப் படுத்துகிறது.
எனவே விரலசைப்பது பற்றிய ஹதீஸ் தரம் தாழ்ந்தும், விரலை நீட்டுவது பற்றிய ஹதீஸ் தரத்தில் உயர்ந்தும் காணப்படுவதால் விரலை நீட்டுவதைப் பற்றியுள்ள ஹதீஸை பற்றிப் பிடித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே சாலச் சிறந்தது. இதுவே குர்ஆன், ஹதீஸ் காட்டும் வழியாகும்.
அன்பு வேண்டுகோள்!
தங்களின் சந்தா தீர்ந்த சகோதரர்கள்
சந்தாவை புதிப்பதோடு உங்களின் நண்பர்
களையும் சந்தாதாரராக்கி அந்நஜாத் தொய்
வின்றி தொடர உங்களின் மிக உயர்வான,
மிகத் தேவையான ஒத்துழைப்பைத் தாராள
மாகத் தந்துதவ அன்புடன் வேண்டுகிறோம்.

Previous post:

Next post: