மார்க்கப் பணிக்கு கூலி(சம்பளம்) அனுமதிக்கப்பட்டதா? மார்க்கப் பணிக்கு கூலி பற்றி இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆன் என்ன சொல்கிறது என்று முதலில் பார்ப்போம்.
அல்லாஹ் நபிமார்களுக்கு இட்டக் கட்டளை!
மார்க்கத்தைப் பிழைப்பாக – தொழிலாகக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் நபிமார்களுக்கு இட்டக் கட்டளை:
(நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீங்களும் பின்பற்றுங்கள். மேலும் ‘இந்த குர்ஆனை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்’ என்று கூறும். (6:90)
(அன்றி) பின்னும் நீங்கள் (என்னைப் புறக்கணித்(து நிராகரித்)தால் (அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி (மற்றெவரிடமும்) இல்லை. நான் அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டு, நடக்கும்படியாகவே கட்டளையிடப்பட்டுள்ளேன்’ (என்று கூறினார்). (10:72)
இந்த இறைவாக்கை கவனமாகப் படித்துப் பாருங்கள். நீங்கள் (என் அறிவுரையை) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லைளூ எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்திலும்) இல்லை என்ற பாகத்தை ஆழ்ந்து சிந்தியுங்கள். மக்களிடம் கூலியை எதிர் பாராமல் மார்க்கத்தை உள்ளது உள்ளபடி சொன்னால் பெரும்பாலான மக்கள் ஏற்கமாட்டார்களே என்ற கவலை நபிமார்களுக்கு இருக்கவில்லை. அந்த அடிப்படையில் தனக்குப்பின் ஒருவர் கூட இல்லாத நிலையில் சில நபிமார்கள் தன்னந்தனியாகச் சுவர்க்கம் புகுவார்கள் என ஹதீஸ்களில் பார்க்கிறோம். அதே சமயம் மக்களிடம் கூலியை எதிர்பார்த்திருந்தால் அப்பெரும்பான்மை யினரின் ஆதரவை நோக்கமாகக் கொண்டு குர்ஆன், ஹதீஸை திரித்துச் சொல்லும் கட்டாயம் ஏற்பட்டிருக்கும் (பார்க்க 17:73,74,75). இப்புரோகிதர்கள் கூலியை மக்களிடம் எதிர்பார்ப்பதாலேயே அவர்களது விருப்பப்படி குர்ஆன், ஹதீஸை திரித்து, வளைத்து, மறைத்துச் சொல்லி வழிகெட்டு நரகிற்கு ஆளாகிறார்கள். அவர்கள் மக்களிடம் பெறும் கூலி – சம்பளமே இப்புரோகிதர்களை அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் முஸ்லிம்களின் நிலையி லிருந்து வழிகெட வைக்கிறது என்பதை உறுதிப்படுத்த வில்லையா?
‘அன்றி என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடம் யாதொரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி (உங்களிடம்) இல்லை. (உங்களில் மிகத் தாழ்ந்தவர்களாயினும் சரி) நம்பிக்கை கொண்டவர்களை நான் விரட்டிவிட முடியாது. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக உங்களை(த்தான் மிகத் தாழ்ந்த) மூடர்களாகக் காண்கிறேன். (11:29)
மக்களால் பேரறிஞர்களாக மதிக்கப்பட்டவர்கள் தான் இங்கு அல்லாஹ்வால் மூடர்களாக அடையாளம் காட்டப்படுகிறார்கள்.
என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி என்னை படைத்தவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? (11:51)
(அவர்களை நோக்கி) இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. ஆயினும் எவன் தன் இறைவனின் வழியில் செல்ல விரும்புகின்றானோ அவன் செல்வதை (நீங்கள் தடை செய்யாமல் இருப்பதை)யே (நான் உங்களிடம்) விரும்புகின்றேன் என்று (நபியே) நீர்; கூறும். (25:57)
(இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை: என்னுடைய கூலி யாவும் உலகத்தாரைப்; படைத்து காப்பாற்றி வளர்ப்பவனிடமே இருக்கின்றன. (26:109)
இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை என்னுடைய கூலியெல்லாம் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமே இருக்கிறது. (26:127)
இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை என்னுடைய கூலி யாவும் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. (26:145)
இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி யாவும் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை’. (26:164)
இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லைளூ என்னுடைய கூலியெல்லாம், உலகத்தாரைப் படைத்து வளர்த்து வரும் இறைவனிடமேயன்றி (வேறெவரிடமும்) இல்லை. (26:180)
(நபியே! மேலும்) நீர் கூறும்.. ‘நான் உங்களிடத்தில் யாதொரு கூலியைக் கேட்டிருந்தால் அது உங்களுக்கே சொந்தமாகட்டும், என்னுடைய கூலி அல்லாவிடமேயன்றி (உங்களிடம்) இல்லை. அவன் அனைத்தையும் அறியக்கூடியவனாக இருக்கின்றான். (34:47)
ஆகவே, (நபியே!) நீர்; கூறும்;: (மனிதர்களே) இதனை ஓதிக் காண்பிப்பதற்காக) நான் உங்களிடத்தில யாதொரு கூலியையும் கேட்கவில்லை. (38:86)
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன்னுடைய (நல்) அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவதும் இதுவே. (நபியே!) நீர் கூறும் இதற்காக நான் யாதொரு கூலியும் கேட்கவில்லை (என்று) ‘உறவினர்களை நேசிப்பதைத் தவிர, எவர் நற்செயல்ளைத் தேடிக் கொள்கின்றாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் நன்மையை அதிகரிக்கச் செய்கின்றோம். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நன்றியை அங்கீகரிப்ப வனாகவும் இருக்கின்றான். (42:83)
மார்க்கப் பணியில் எப்படிப்பட்டவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்க முடியும்?
உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்;களையே நீங்கள் பின்பற்றுங்கள். இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள் (யாஸீன் 36:21) இதிலிருந்து மார்க்கப் பணிக்கு கூலி – சம்பளம் வாங்குகிறவர்கள் பின்பற்றப்படுவதற்குத் தகுதியானவர்கள் இல்லை. காரணம் அவர்கள் நேர்வழியில் இல்லை. கூலியை – சம்பளத்தை நோக்கமாகக் கொண்டு கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டி மக்களை நரகில் தள்ளுவார்கள் என்பதை விளங்க முடியும்.
மக்களிடம் சம்பளத்தை எதிர்பார்க்கும்போது அதிகமான மக்களைக் கவரும் கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால் அதிகமான மக்கள் நேர்வழிக்கு வரமாட்டார்கள் என்று அல்லாஹ் எண்ணற்ற இடங்களில் கூறியுள்ளான். (பார்க்க 2:243, 6:116, 7:187, 11:17, 12:21,38,40,68,13:1) அவர்கள் கோணல் வழிகளையே விரும்பு வார்கள். அவர்கள் விரும்பும் கோணல் வழிகளை நேர் வழியாகக் காட்டினால்தான் அதிகமானோர் விரும்பி ஏற்பார்கள். எனவே கூலியை எதிர்பார்க்கும் புரோகிதர்கள் நன்கு அறிந்த நிலையில்தான் கோணல் வழிகளை நேர்வழியாகக் காட்டும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். இதோ அல்குர்ஆனை கூறுகிறது.
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்பகரா 2:42)
எவர்களுக்கு நாம் நெறிநூல்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம்(சொந்த) மக்களை அறிவதைப் போல் (நேர் வழியை) அறிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக் கின்றனர். (அல்பகரா 2:146)
எவரும் தம் குழந்தைகளை அறிவதுபோல், நெறிநூல் கொடுக்கப்பட்டவர்கள் (நேர்வழியை) நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத்தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார் களோ அவர்கள் தாம் நம்பிக்கைக் கொள்ள மாட்டார்கள். (அன்ஆம் 6:20)
புரோகிதர்கள் மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்குவதே முஸ்லிம் சமுதாயம் கடன் சுமை ஏற்பட்டு பல மூடநம்பிக்கை களிலும், வழிகேட்டில் இட்டுச் செல்லும் வெற்றுச் சடங்குகளை வழிபாடுகளாக எண்ணிச் செய்யும் நிலைக்கு ஆளாகின்றது என்பதை 52:40, 68:46 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டுவிட்டதா? (52:40, 68:46)
சம்பளத்திற்கு மார்க்கப் பணி செய்கிறவர்கள் பல தில்லு முல்லுகளைச் செய்து மக்களை கோணல் வழிகளில் அழைத்துச் சென்று நரகில் தள்ளுகிறார்கள் என்பதைக் கீழ்காணும் இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
அவர்கள் மற்றவர்களை (நேர்வழியாகிய) அதை (கேட்க விடாது) தடுக்கிறார்கள்: இவர்களும் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள், அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் (இதை) புரிந்து கொள்வதில்லை. (அல்அன்ஆம் 6:26)
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் மிகவும் கெட்டவை. (அத்தவ்பா 9:9)
அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும், உடன்படிக்கையையும் பொருட்படுத்தமாட்டார்கள். மேலும் அவர்கள் வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்.(அத்தவ்பா 9:10)
நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக பாதிரிகளி லும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் பொருட்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள். மேலும் அல்லாஹ் வின் பாதையை விட்டும்(மக்களை) தடுக்கிறார்கள்.. (அத்தவ்பா 9:34)
அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கிறார்கள். மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள். இவர்கள்தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள். (ஹூது 11:19)
மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அறிவில்லாமல் (பிக்ஹு, சுய கருத்துகள் போன்ற) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு. (லுக்மான் 31:6)
(மேலும் பார்க்க: 2:41,75,78,79,109 3:78,187,188, 4:44,46, 5:41,62,63, 6:21,25, 11:18)
சம்பளத்திற்கு மார்க்கப். பணி புரியும் புரோகிதர்கள் இந்த அளவு தரங்கெட்ட இழி நிலைக்கு ஆளாவதற்குக் காரணம் ஹராமான உணவு அவர்களின் உள்ளங்களை சுருங்கி இறுகச் செய்து கற்பாறைகள் போல் ஆக்கி விடுவதால் புரோகிதர்களால் சத்தியத்தை – நேர்வழியை உணர முடியாத நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். இந்த நிலையையும் அல்லாஹ் அல்குர்ஆனில் கீழ்கண்ட வசனங்களில் சுட்டிக் காட்டுகிறான். 2:74, 5:13, 6:125.
இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன. அவை கற்பாறைகள் போல் ஆகிவிட்டன…….. (2:74)
அப்பால்(புரோகிதர்களாகிய) அவர்கள் தம் உடன்படிக் கையை முறித்துவிட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம். அவர் களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம். (இறை) வசனங்களை அவற்றிற்குரிய இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள்……. (5:13)
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவர் களுடைய நெஞ்சை இஸ்லாத்தின்பால் விசாலமாக்குகிறான். யாரை வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்… (6:125)
அல்லாஹ்வின் எண்ணற்ற நேரடிக் கட்டளைகளை நிராகரித்துப் புறக்கணித்து முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிட்டு மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப் பதால், இப்புரோகிதர்கள் பெரும் பாவிகளாகி விடுவதால் இவர் களுக்கு நேர்வழி பெறும் பாக்கியம் கிட்டவே கிட்டாது. காரணம் பாவிகளுக்கு நாம் ஒருபோதும் நேர்வழி காட்ட மாட்டோம் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் கண்டிப்பாகக் கூறுகிறான்.(பார்க்க: 5:108, 9:24, 80, 61:5, 63:6)
இந்த இடத்தில் இன்னொரு முக்கிய பொருளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் புரோகித மவ்லவிகளை விட மிகப் பெரும் பாவிகளாக நாம் வேறு யாரையும் குர்ஆனுடைய வெளிச்சத்தில் பார்க்க முடியாது. ஒருவன் புரோகிதத் தொழில் செய்யாமல், இதர ஹராமான பொருள்கள் அனைத்தையும் சாப்பிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.
உதாரணமாக, அவன் வட்டி, பன்றிக்கறி, செத்தது, இரத்தம், அனாதைகள் சொத்து, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, விபச்சாரம், குடி என அல்குர்ஆனில் ஹராமாக்கப் பட்ட அனைத்து வகை மூலம் சாப்பிட்டு வயிற்றை நிரப்புகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனைப் பொருத்தமட்டிலும் அல்குர்ஆனிலுள்ள சுமார் 43 இடங்களில் அல்லாஹ் தடுத்துள்ள வற்றில் ஈடுபடுகிறான். அதற்கு மேலும் அவன் தனக்குத்தானே தீங்கிழைத்து தன்னுடைய மறுமை வாழ்க்கையை நட்டப் படுத்தி நரகில் வீழ்கிறான். மேலும் சிலரின் இவ்வுலக வாழ்க்கையில் மட்டும் நட்டத்தை உண்டாக்குகிறானே அல்லாமல் அவர்களில் ஒருவருடைய மறு உலக வாழ்க்கையையும் நட்டப்படுத்தி அவர்களை நரகில் விழச் செய்வதில்லை.
அதற்கு மாறாக இப்புரோகித மவ்லவிகள் அல்குர்ஆனின் சுமார் ஐம்பதுக்கும்(50) மேற்பட்ட இறைக் கட்டளைகளை நிராகரித்துப் புறக்கணித்துவிட்டு, முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிட்டு, துணிந்து மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டிருக்கின்றனர். தங்களை நரகத்திற்குரியவர் களாக ஆக்கும் மிகப் பெரும் பாவிகளாக இருப்பதோடு மற்ற மக்களுக்கு இவ்வுலகிலும் பெருந்தீங்குகள், நட்டங்கள் இழைப்பதோடு, அவர்களின் மறு உலக வாழ்க்கையிலும் ஈடு செய்ய முடியாத மாபெரும் நட்டத்தை உண்டாக்கி அவர்களை நரகில் தள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
இப்போது சிந்தியுங்கள்! வானத்தின் கீழ் இவர்களை விட கேடுகெட்ட படைப்புகள் இருக்க முடியுமா? படைப்புகளிலேயே மிகமிக இழிவானவர்கள், கேடுகெட்டவர்கள் இவர்களே. இதை நாம் சொல்லவில்லை. இறைவனுடைய அத்தாட்சிகளைப் பெற்றிருந்தும் இப்புரோகித மவ்லவிகள் அவற்றை நழுவவிட்டு விட்டு, சம்பளம் என்ற அற்ப உலக ஆதாயத்தைக் குறிக் கோளாகக் கொண்டு அவற்றில் மூழ்கியதால் ஷைத்தான் அவர்களைப் பின் தொடர்கிறான். அதனால் வழி தவறியவர் களாகி விடுகிறார்கள். அல்லாஹ் நாடியிருந்தால், தனது அத்தாட்சி களைக் கொண்டு அவர்களை உயர்த்தி இருப்பான். ஆனால் இப்புரோகிதர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் மார்க்கப் பணிக்காகக் கூலி பெற்று சுவர்க்க வாழ்வை அடைவதைவிட இவ்வுலகிலேயே மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்குவதன் மூலம் இவ்வுலக வாழ்வையே சதம் என மதித்து அவர்களுடைய மன இச்சைகளையே பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள். அதனால் அல்லாஹ்வின் பார்வையில் நாயை விட இழிவானவர்களாக கேடுகெட்டவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதை அல்குர்ஆன் அல் ;அஃராஃப் 7:175 முதல் 179 வரையுள்ள வசனங்களை நீங்களே நேரடியாகப் படித்து அறிந்து கொள்ள முடியும்.
இப்புரோகித மவ்லவிகளின் மார்க்கப் பணிக்குரிய கூலி- சம்பளம் நாளை மறுமையில் இருக்கிறது என்பதை பல இறை வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. இந்த நிலையில் அப்பணிக் காக மக்களிடம் கூலி வாங்குவது 2:188 கண்டித்துக் கூறும் இலஞ்சத்திலேயே சேரும். அரசு அதிகாரிகளுக்கு அவர்களுடைய பணிக்காக அரசு சம்பளம் கொடுக்கிறது. ஆனால் அந்த அரசு அதிகாரிகள் தாங்கள் எந்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருக் கிறார்களோ அதே பணிகளை மக்களுக்குச் செய்து கொடுப்பதற்கு அந்த மக்களிடமிருந்தும் பணம் பெறுவது தண்டனைக்குரிய குற்றமா? இல்லையா? லஞ்சம் இல்லையா?
அந்த அதிகாரிகளுக்குத் திறமை இருந்தால், இவ்வுலக அரசுகளிடமிருந்து தப்பலாம். நாளை மறுமையில் அல்லாஹ்விடம் தப்ப முடியுமா? முடியாது. ஆனால் இந்த இலஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளை விட கேடுகெட்டவர்களாக இருக்கிறார்கள் புரோகித மவ்லவிகள் அரசு அதிகாரிகளோ தங்களைப் போன்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியாளர்களையே ஏமாற்றுகிறார்கள். ஆனால் இப்புரோகித மவ்லவிகளோ அரசர்களுக்கெல்லாம் பேரரசனான, ஆட்சிகளுக்கெல்லாம் மாபெரும் ஆட்சியாளனான சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வையே ஏமாற்றும் நெஞ்சழுத்தத்தோடு, சர்வசக்தி மிக்க ஆட்சியாளனான அல்லாஹ்வே மார்க்கப் பணக்கு கூலி தானே கொடுப்பதாக வாக்களித்துள்ள நிலையில், இப்புரோகிதர்கள் மக்களிடம் கூலி-சம்பளம் வாங்குவது இலஞ்சங்களிலேயே மாபெரும் இலஞ்சமில்லையா? படைத்த அல்லாஹ்வையே ஏமாற்ற முற்படுவதாக இல்லையா? அல்லாஹ் இவர்;களை விட்டு வைப்பானா? இப்புரோகித மவ்லவிகளுக்காக மாபெரும் தண்டனை காத்திருப்பதில் சந்தேகமுண்டா? சொல்லுங்கள்.
அரசு அதிகாரிகளாவது மக்களின் தேவைகளை முடித்துக் கொடுத்தே லஞ்சம் பெறுகிறார்கள்; அதற்கு மாறாக இப்புரோகித மவ்லவிகளில் பலர் தங்களால் செய்து கொடுக்க முடியாதவற்றை செய்து கொடுப்பதாக மக்களை நம்பச் செய்து அவர்களது பொருள்களை அபகரிக்கிறார்கள்.
இதோ அல்குர்ஆனே கூறுகிறது. படித்துப் பாருங்கள்!
எவர்கள், அல்லாஹ் நெறிநூலில் அருளியவற்றை மறைத்து, அதற்குக்கிரயமாக சொற்பத் தெகையைப் பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தவிர வேறெதனையும் உட்கொள்ள வில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்: அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்ளூ அவர் களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
அவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்குப் பதிலாக (கடும்) வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது? (அல்பகரா 2:174,175)
இதற்குக் காரணம், நிச்சயமாக அல்லாஹ் இந்நெறி நூலை உண்மையுடன் அருள் செய்தான். நிச்சயமாக இன்னும் இந்நெறி நூலில் கருத்து வேறுபாடு கொண்டவர் கள் பெரும் பிளவிலேயே இருக்கின்றனர். (அல்பகரா 2:176)
ஆக, இப்புரோகித மவ்லவிகள் தர்கா, தரீக்கா, மத்ஹபு, மஸ்லக், இயக்கம், கழகம், அமைப்பு என பல்வேறு பிரிவுகளில் பிளவுபட்டுக்கிடப்பதற்கு மார்க்கம் அதாவது குர்ஆனோ, ஹதீஸோ காரணமல்ல. மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதே இப்பிளவுகளுக்குக் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குகிறதா? இல்லையா? அவர்கள் பல கோணல் வழிகளிலும், வழிகேட்டிலும் நரகிற்குரியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் இந்த 2:174,175,176 இறைவாக்குகளை மீண்டும் மீண்டும் படித்து விளங்குகிறவர்கள் கண்டிப்பாக உணர முடியும்.
மேலும் ஹதீஸ்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.
இந்தச் சமுதாயத்திற்கு உயர்வும், மதிப்பும் இப்பூமியில் வசதியாக வசிப்பதும் உள்ளது என்று நற்செய்தி கூறுவீராக! அவர்களில் யாரேனும் மறுமைக்குரிய அமலை (செயலை) இவ்வுலகிற்காக (பொருளுக்காக) செய்தால் மறுமையில் அவருக்கு எந்தப் பயனுமில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உபைபின் கஃபு (ரழி) அஹ்மது, இப்னு ஹிப்பான், ஹாகிம், பைஹகி.
ஒரு மனிதன் நீண்ட பிரயாணம் செய்து, புழுதி படிந்த வனாக, பரட்டைத் தலையனாக, இரண்டு கைகளையும் உயர்த்தி இறைவா! இறைவா! என்று பிரார்;த்திக்கிறான். ஆனால் அவனது உணவும் ஹராமானதாக உள்ளதுளூ அவன் அருந்திய பானமும் ஹராமானதாக உள்ளது. அவன் அணிந்துள்ள ஆடையும் ஹராமானதாக உள்ளது. இந்த நிலையில் அவனது பிரார்;த்தனை எங்ஙனம் ஏற்றுக் கொள்ளப்படும்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்.
மிகவும் கடுமையான பிரயாண சிரமங்களுக்கிடையில் இருக்கும் ஒரு பிரயாணியின் பிரார்த்தனை அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவனது உணவு, பானம், ஆடை ஹராமாக இருப்பதால் அந்தப் பிரயாணியின் பிரார்த்தனை நிராகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரயாணத்தின் எவ்விதக் கஷ்டத்தையோ, துன்பத்தையோ அனுபவிக்காமல் வீட்டில் சுகமாக இருக்கும் இந்த புரோகித மவ்லவிகளின் உணவு, பானம், உடை, இருப்பிடம் அனைத்தும் ஹராமாக இருக்கும் நிலையில், அவர்கள் அவர்களுக்காகவும், சமுதாய மக்களுக்காகவும் கேட்கும் பிரார்த்தனைகளை அல்லாஹ் அங்கீகரிப்பானா? நிராகரித்து அப்புரோகிதர்களின் முகத்திலேயே தூக்கி எறிவானா? சகோதரர்களே நிதானமாக சிந்தியுங்கள். வழிகேட்டிலிருக்கும் இப்புரோகித மவ்லவிகள் மக்களுக்கு நேர்வழி காட்ட முடியும் என்று நம்புவதைவிட அடிமுட்டாள்த்தனம் வேறொன்று இருக்க முடியுமா?
அதனால்;;தான் முகல்லிது, கைரமுகல்லிது, தவ்ஹீது என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல் தார்ப்பாயில் வடித்தெடுத்த பொய்களையும், பொய்ச் சத்தியங் களையும், அவதூறுகளையும், எவ்;வித சுய கருத்துக்களையும் புகுத்தாமல் குர்ஆன், ஹதீஸை மட்டும் மக்களிடம் எடுத்துச் சொல்பவர்கள் மீது இப்புரோகித மவ்லவிகளால், சுமத்த முடிகிறது. காரணம் அல்லாஹ்வைப் பற்றியோ மறுமையைப் பற்றியோ அச்சம் அவர்களுக்கு சிறிதளவும் இல்லை என்பதே! இன்னும் பாருங்கள் நபி(ஸல்) அவர்களது எச்சரிக்கைகளை!
குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள். (நபிமொழி, அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அசாகிர்)
எவன் குர்ஆனை ஓதுகிறானோ அவன் அல்லாஹ்விடமே கேட்கட்டும். வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்க ளிடமே (கூலி) கேட்பவர்கள் தோன்றுவார்கள்! (நபிமொழி : திர்மிதி, அஹ்மத்)
இப்புரோகித மவ்லவிகளின் கேடுகெட்ட புத்தியை நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.
இப்புரோகித மவ்லவிகளின் முயற்சியினால் சில சீர்திருத்தங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கும் அவர்களின் சுயநலமே காரணமாகும். நேர்வழியை உள்ளது உள்ளபடி நிலைநாட்ட வேண்டும் என்ற தூய எண்ணத்தோடு அவர்களது முயற்சிகள் அமைவதில்லை. இந்த முஸ்லிம் சமுதாயத்தினர் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக சூஃபிஸ புரோகித மவ்லவிகளின் வலையில் சிக்கி தர்கா வணக்க வழிகேடுகளையும், கந்தூரி, மவ்லிது, கத்தம், ஃபாத்திஹா போன்ற வழிகேட்டுச் சடங்குகளையும் வழிபாடுகளாகச் செய்து வந்தனர்ளூ வருகின்றனர்.
இந்த நிலையில் சில புரோகித மவ்லவிகள் அந்த முஸ்லிம் பெருங்கூட்டத்திலிருந்து ஒரு கூட்டத்தை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் கெட்ட நோக்கத்துடன் தர்கா சமாதி சடங்குகளைக் கடுமையாக எதிர்க்கவும், அதே சமயம் அதற்கு வழி வகுக்கும் தரீக்கா, மத்ஹபுகளை ஆதரிக்கும் நிலையை எடுத்தார்கள். இவர்கள் பரேல்வி புரோகித மவ்லவிகளிலிருந்து வேறுபட்டு தேவ்பந்த் புரோகித மவ்லவிகள் என தங்களை அறிமுகப்படுத்தினார்கள்.
தர்கா-சமாதிச் சடங்குகளில் மூழ்கி இருப்பவர்கள் பரேல்வி கொள்கையுடையோர் என்றும் தர்கா சடங்குகளை எதிர்க்கும் அதே வேளை தரீக்கா, மத்ஹபுகளை ஆதரிப்போர் தேவ்பந்த் கொள்கையுடையோர் எனவும் அடையாளம் காணப்பட்டனர். இரு சாராரும் புரோகித மவ்லவிகளே!.
அந்த தேவ்பந்த்-தப்லீஃக் கொள்கையில் மூழ்கி இருந்தவர்களிலிருந்து ஒரு கூட்டத்தைப் பிரித்தெடுக்க தரீக்காக்களை எதிர்த்தும் அதே சமயம் மத்ஹபுகளை ஆதரித்தும் ஒரு புரோகித மவ்லவி கூட்டம் கிளம்பியது. அவர்கள் தரீக்காக் களை கடுமையாகச் சாடினாலும் மத்ஹபுகளை ஆதரித்தார்கள். இன்றைய ஜமாஅத்தே இஸ்லாமி புரோகித மவ்லவிகள் இந்த வகையினரே.
அடுத்த ஒரு புரோகித மவ்லவி கூட்டம் கிளம்பியது. அவர்கள் மத்ஹபுகளை எதிர்த்து, அவர்களை முகல்லிதுகளாகவும், தங்களை கைர முகல்லிதுகளாகவும், குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு, தங்களது பிரிவை மத்ஹபுக்கு மாற்றமாக மஸ்லக் என்று கூறிக்கொண்டு செயல்பட ஆரம்பித்தனர். அவர்கள் பின்னால் சென்ற கூட்டம் தங்களை அஹ்லஹதீஸ் என்று கூறிக்கொண்டாலும் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள அஹ்லஹதீஸ் புரோகித மவ்லவிகளையே தக்லீது செய்யும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களும் தங்களால் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் படித்து விளங்க முடியாது என்ற நம்பிக்கையில் மூழ்கியவர்களே.
இன்னொரு புரோகித மவ்லவி கூட்டம் தங்களை ஸலஃபிகள், ஸலஃபி மின்ஹாஜ் என்று கூறிக்கொண்டு தங்கள் கட்டுப் பாட்டில் ஒரு கூட்டத்தை வைத்துள்ளனர். அவர்கள் கலஃபிகளான பின்னோர்களைத்தான் பின்பற்றக் கூடாது. ஸலஃபிகளான முன்னோர்களைப் பின்பற்றலாம் எனக் கூறி எப்படியும் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகர்களை ஏற்படுத்தவே முற்படுகின்றன.
இப்போது தமிழகத்தில் புதிதாக முளைத்துள்ள ததஜ தலைமை புரோகித மவ்லவியோ கலஃபிகளையும் பின்பற்றக் கூடாது: ஸலஃபிகளையும் பின்பற்றக் கூடாது: ஆனால் நான் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் கொடுக்கும் சுயவிளக்கங்களை தாராளமாகப் பின்பற்றலாம் என்கிறார். இப்படி புரோகித மவ்லவிகளில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் பின்னால் ஒரு மக்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்த முற்படுகிறார்களே அல்லாமல் எந்தப் புரோகிதக் கூட்டமும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நேரடியாக குர்ஆன், ஹதீஸ் மொழி பெயர்ப்புகளைப் பார்த்து தாராளமாக மார்க்கத்தை விளங்கலாம். அந்த அளவு அல்லாஹ் மார்க்கத்தை எளிதாக்கித் தந்துள்ளான் என்று மக்களிடம் கூறுவதாக இல்லை. அவர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதே இதற்குக் காரணமாகும். தங்களின் தனிப்பட்ட, குடும்ப இவ்வுலக வாழ்க் கையை ஹலாலான வழியில் உழைப்பின் மூலம் நிறைவேற்ற வக்கற்றுப்போய், பொதுமக்களிடம் ஹராமான வழியில் பிச்சை கேட்டு கையேந்தும் இப்புரோகித மவ்லவிகள் மார்க்கத்தை விளங்கிய ஆலிம்களா? அவர்களால் பொதுமக்களுக்கு நேர் வழியைக் காட்ட முடியுமா? குருடன் கண் உள்ளவர்களுக்கு வழிகாட்டினான் என்றால் அதை யாரும் நம்புவார்களா?
மேலும், இந்தப் புரோகித மவ்லவிகள் பின்னால் செல்லும் ஒவ்வொரு கூட்டமும் தாங்கள் நம்பியுள்ள புரோகித மவ்லவிகள் தங்களைப் பேராபத்திலிருந்து காப்பாற்றியுள்ளதாக நம்பிக்கை வைத்துள்ளனர். தேவ்பந் கொள்கையுள்ள தப்லீஃக் புரோகித மவ்லவிகள் தங்களை தொழுகை, நோன்பு மற்றும் மார்க்கக் கடமைகளில் பொடுபோக்காக இருந்த நிலையிலிருந்து கரையேற்றி யுள்ளதாக நம்பி, தப்லீஃக் பிரசாரத்தில் ஈடுபடுகிறவர்கள் தப்லீஃக் புரோகித மவ்லவிகளை உயிருக்குயிராக நேசித்து அவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.
அதே போல் தரீக்கா வழிகேட்டிலிருந்து விடுபட்டுள்ள மக்கள் கூட்டம், தரீக்காக்களை எதிர்த்துப் பேசும் புரோகித மவ்லவிகளை உயிருக்குயிராக நேசித்து அவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். மத்ஹபு பிடியிலிருந்து விடுபட்டு ஸலஃபிகளைப் பின்பற்றும் கூட்டம் ஸலஃபி புரோகித மவ்லவிகளை உயிருக்குயிராக நேசித்து அவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின் றனர். தமிழகத்தில் ததஜ தலைமைப் புரோகித மவ்லவியின் பிரசாரத்தின் காரணமாக தர்கா, தரீக்கா, மத்ஹபு வழிகேடு களிலிருந்து விடுபட்டுள்ள கூட்டம் தங்களை அந்த பேராபத்தி லிருந்து விடுவித்து கரையேற்றிய ததஜ தலைமைப் பூசாரியை தங்களின் ஆபத்பாந்தவனாக நம்பி அவரை உயிருக்குயிராக நேசித்து அவருக்கு அடிமைப்பட்டு அவரது காலடியில் கிடக்கின்றனர்.
இப்படி முஸ்லிம்களில் மிகப் பெருங்கொண்ட கூட்டம் இந்தப் புரோகித மவ்லவிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனரே அல்லாமல், தாங்கள் அல்லாஹ்வின் அடிமை, அவனது கட்டளை களுக்கே முற்றிலும் அடிபணிந்து நடக்க வேண்டும்: இப்புரோகித மவ்லவிகளின் சுய விளக்கங்களைப்;; புறக்கணித்து நேரடியாக குர்ஆன், ஹதீஸைப் படித்து விளங்கி அதன்படி நடக்க வேண்டும் என்பதை உணர மறுக்கிறார்கள். பெரும் நட்டத்திற்குரியவர்கள். (33:36,66,67,68)
புரோகிதர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் பெருங்கொண்ட கூட்டம்; பலதரப்பட்ட இப்புரோகிதர்கள் பெரும் சேவை செய்து தங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுவதாக எண்ணுவது அவர்களின் வடிகட்டின அறியாமையாகும். அவர்கள் இவர்களை நரகிலிருந்து காப்பாற்றவில்லை. வேறு புரோகிதர்களை தக்லீது செய்த இவர்களை தங்களை தக்லீது செய்யும் நிலைக்கு மாற்றி இருக்கிறார்கள். அவ்வளவுதான் மற்றபடி நேரடியாக குர்ஆன், ஹதீஸ்படி நடக்க தங்களுக்குப் போதிக்கவில்லை என்பதை அறியாதிருக்;கிறார்கள்.
மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட அனைத்துப் பிரிவுகளின் புரோகித மவ்லவிகளும், தங்களின் சுய நலனுக்காக, அற்ப இவ்வுலக ஆதாயத்திற்காக முஸ்லிம் சமுதாயத்தைக் கூறு போட்டு, பிளவுபடுத்தி தங்களை தக்லீது செய்ய வைத்திருப்பதால் அவர்கள்; பெரும் பாவிகளாகவே இருக்கிறார்கள். அவர்களது நிய்யத் – எண்ணம் போல் அவர்களுக்கு உலக ஆதாயம் கிடைத்து விட்டது. (பார்க்க புகாரீ(ர.அ) முதல் பாகம் முதல் ஹதீஸ்) ஆயினும் அவர்கள் பெரும் பாவிகளாக இருப்பதால் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்; நரகிற்குரியவர் களாகவே இருக்கிறார்கள் என்பதை பல குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் இப்புரோகிதப் பாவிகளைக் கொண்டும் அல்லாஹ் மார்க்கத்திற்கு வலுவூட்டுகிறான் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கைப்படி (புகாரீ(ர.அ) 3-ம் பாகம் 3062 அறிவிப்பு: அபூஹுரைரா (ரழி) ) அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் (தக்லீது) பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புவது போல் பாவிகளான புரோகித மவ்லவிகளைக் கொண்டும் மார்க்கத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. இந்த இடத்தில் வழி கெடுக்கும் ஷைத்தானே அபூ ஹுரைரா(ரழி) அவர்களுக்கு நல்லுபதேசம் செய்தது நினைவு கூரத்தக்கது. (அபூ ஹுரைரா(ரழி) புகாரீ)
எனவே இந்தப் புரோகித மவ்லவிகள் சமுதாயத்திற்கு நல்லதுதானே செய்கிறார்கள் என்று மயங்க வேண்டியதில்லை.
மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் கூடவே கூடாது, கொடிய ஹராம் என பல இறைவாக்குகள் நேரடியாகக் கூறிக் கொண்டிருந்தும், அந்த இறைவாக்குகள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு (2:39) ஹராமான உணவு, பானம், உடை, இருப்பிடம் என அனைத்தையும் தவறான வழியில் அனுபவித்துக் கொண்டு அதுபற்றி எவ்வித சலனமும், வருத்தமும் இல்லாமல் இப்புரோகிதர்கள் செயல்படுவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
அதுமட்டுமல்ல அன்று அபூபக்கர்(ரழி) மற்றும் கலீ.ஃபாக்கள் சம்பளம் வாங்கவில்லையா? அன்று கவர்னர்கள் சம்பளம் வாங்கவில்லையா? அதுபோல்தான் நாங்கள் சம்பளம் வாங்குவது என்று தங்களின் ஹராமான செயலை நியாயப்படுத்த முற்படுகின்றனர். கலீஃபாக்களும், கவர்னர்களும் அவர்கள் மீது கடமையில்லாத மக்களின் இ;வ்வுலகத் தேவைகளை நிறைவு செய்து கொடுக்கும் ஆட்சிப் பணியைச் செய்ததற்காக சம்பளம் பெற்றார்களே அல்லாமல், அவர்கள் மீது விதிக்கப்பட்ட கடமையாக்கப்பட்ட மார்க்கப் பணிக்குச் சம்பளம் பெறவில்லை என்பதை நன்கு அறிந்த நிலையிலேயே இப்புரோகித மவ்லவிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அடுத்து மார்க்கப் பணியை முழுநேரப் பணியாகச் செய்வதால் பொருளீட்ட எங்களுக்கு நேரமில்லை என்றும் காரணம் கூறுகிறார்கள். கடமையாக்கப்பட்ட (9:71, 103:1-3, 3:110) மார்க்கப் பணியை முழு நேரம் செய்ய வேண்டியதில்லை. ஒரு இமாம் ஐங்காலம் தொழவைக்க, பிள்ளைகளுக்கு கிளிப்பிள்ளை பாடமாக அர்த்தம் புரியாமல் குர்ஆன் ஓதிக்கொடுக்க அதிகபட்சம் ஒரு நாளையில் ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஆகாது. எஞ்சியுள்ள 19 மணி நேரத்தை எப்படிச் செலவிடுகிறார்கள். மார்க்கப் பிரசாரமும் அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரம் மட்டுமே ஆகும். எனவே அவர்கள் முழுநேரப் பணியாளர்கள் என்று கூறி சம்பளம் பெற முற்படுவது பொய்யும் பித்தலாட்டமு மாகும். இப்படி கடமையாக்கப்பட்ட மார்க்கப்பணிக்கு கூலி- சம்பளம் வாங்க புரோகித மவ்லவிகள் கூறும் அனைத்துக் காரணங்களும் ஏற்கத்தக்கவை அல்ல.
இமாமத் பணிக்கு குறிப்பிட்ட பள்ளிக்கு நேரம் ஒதுக்கி வர வேண்டியுள்ளது. அதற்காக சம்பளம் வாங்குகிறோம் என்கின்றனர். இமாம்களைவிட முஅத்தின்கள் முன்கூட்டியே நேரம் ஒதுக்கி பள்ளிக்கு வந்து பாங்கு சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். இமாம்களோ மற்ற தொழுகையாளிகள் போல் ஜமாஅத் நடக்கும் நேரத்திற்கே ஆஜராகிறார்கள். பெரும்பாலான தொழுகையாளிகள் வந்த பின்னர் இகாமத் கூறும் சமயம் வரும் இமாம்களும் உண்டு. இந்த நிலையில் முஅத்தினுக்கே சம்பளம் கொடுக்க அனுமதி இல்லை என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.
முஅத்தினை நியமனம் செய்தால் எந்தவிதமான பிரதி பலனும் (கூலி-சம்பளம்) பெற்றுக் கொள்ளாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இறுதியான உறுதி மொழியாக வாங்கினார்கள் என்று உஸ்மான் இப்னு அபில் ஆஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ)
தொழுகையாளிகள் வரும் முன்னரே முன்கூட்டியே வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே கூலி-சம்பளம் அனுமதி இல்லை எனும்போது, தொழுகையாளிகளுடன் ஒரு தொழுகை யாளியாக வந்து தொழவைக்கும் இமாம் கூலி-சம்பளம் வாங்குவதை மார்க்கம் அனுமதிக்குமா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் ஓர் ஊரில், ஒரு மஹல்லாவில் இருக்கும் முஸ்லிம் களில் சிறந்தவர், அதிகம் குர்ஆன் ஓதத் தெரிந்தவர், தொழுகைச் சட்டங்கள் அறிந்தவர் இமாமத் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்களே அல்லாமல், வெளியூரி லிருந்து இமாமை இறக்குமதி செய்து அவரே தொழ வைக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடவில்லை என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். கூலியை-சம்பளத்தை எதிர்பார்த்தே இந்த இமாம்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் பின்னால் தொழக் கூடியவர்களுக்குப் பெரும் இடையூறாக பித்அத்தான-பத்துஆவான ரெடிமேட் துஆவை(?) செய்வதில் முனைப்புக் காட்டுகின்றனர்.
மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்குவதை நியாயப்படுத்தி அவர்கள் வைக்கும் வாதங்கள் அனைத்தும் தரைமட்டமான பின்னர், அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் என்ன தெரியுமா? கூலி-சம்பளம் இல்லாவிட்டால், மார்க்கப் பணி செய்கிறவர்களும், அவர்களது குடும்பத்தாரும் எப்படி உயிர்; வாழ்வது?: அவர்கள் மண்ணைத் தின்றா உயிர் வாழ்வார்கள்? என்று இப்புரோகித மவ்லவிகளும் அவர்களது பக்தர்களும் கேள்விக் கணை தொடுப்பார்கள்? அவர்களது ஈமான்-நம்பிக்கையின் நிலையைப் பார்த்தீர்களா?
இன்று மார்க்கப் பணிக்கு சம்பளம் வாங்குவதால் ஏற்படும் கெடுதிகளை விவரித்து, அதனால் மார்க்கப் பணிக்கு கூலி கூடாது, என்று எமது சுய கருத்தை-சொந்த அபிப்பிராயத்தை வெளிட்டால் அவர்களின் இக்கேள்வியில் நியாயம் உண்டு. அல்லாஹ் பாதுகாப்பானாக. எமது சுய கருத்துக்களை எந்த நிலையிலும் மார்க்கத்தில் திணிக்க நாம் ஒருபோதும் துணிய மாட்டோம். பெரியாரிய சிந்தனையில் சிக்;கமாட்டோம். மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் கூடவே கூடாது என்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களை அதாவது அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளையே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்.
இந்த நிலையில் அது நடைமுறை சாத்தியமில்லை என்று இப்புரோகிதர்களும், அவர்களது பக்தர்களும் கூறுவார்களே யானால், அதன் பொருள் என்ன? அல்லாஹ்வின் இக்கட்டளைகள் இக்காலத்திற்குப் பொருந்தாது, செல்லுபடியாகாது என்று அவர்கள் கூறுகிறார்கள் என்பதுதானே அதன் பொருள்? அப்படியானால் அவர்கள் அல்லாஹ் மீதும் மறுமை வாழ்க்கை மீதும் நம்பிக்கை உடையவர்கள்தாமா? ஈமானில்லாதவர்கள் மட்டுமே இப்படிக் கூற முடியும். இறை நம்பிக்கையில் உறுதி உடையவர்கள் இறைக் கட்டளைகள் முக்காலத்திற்கும் நடைமுறை சாத்தியமானவை மனிதன் செயல்படுத்த வேண்டியவை என்றே கூற முடியும். இதற்கு மாற்றமான கருத்து ஓர் உண்மை நம்பிக்கையாளனின் நாவிலிருந்து ஒருபோதும் வராது.
உலகில் தோன்றிய பல்லாயிரக்கணக்கான நபிமார்கள் மக்களிடம் கூலி வாங்காமல்தான் மார்க்கப்பணி புரிந்தார்கள். இறுதி நபி(ஸல்) அவர்கள் கூலி வாங்காமல்தான் மார்க்கப் பணி புரிந்தார்கள், நபிதோழர்கள் அனைவரும் கூலி வாங்காமல் தான் மார்க்கப்பணி புரிந்தார்கள். ஹிஜ்ரி 400க்கு முன்னால் வாழ்ந்த மார்க்க அறிஞர்கள் மக்களிடம் கூலி வாங்காமல் தான் மார்க்கப் பணி புரிந்தார்கள.; எந்த இமாம்களின் பெயரால் இவர்கள் கற்பனையாக மத்ஹபுகள் அமைத்துக் கொண்டு மக்களை சுரண்டி வாழ்கிறார்களோ அந்த இமாம்கள் கூலி வாங்காமல் தான் மார்க்கப்பணி புரிந்தார்கள். இத்தனைக்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் முழுநேரமாக மார்க்கப் பணி புரிந்ததாக இவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள்.
இப்படி நபிமார்கள், நபிதோழர்கள், தாபியீன்கள், தப்அதாபியீன்கள், இமாம்கள் அனைவரும் மக்களிடம் கூலி வாங்காமல், மார்க்கப்பணி செய்திருக்கிறார்கள் என்றால், அவர் களுக்கு அது சாத்தியப்பட்டது என்றால், அதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வையும், மறுமையையும் உறுதியாக நம்பிச் செயல்பட்டார்கள். அதற்கு மாறாக இப்புரோகித மவ்லவிகளுக்கு அல்லாஹ்மீதும், மறுமைமீதும் உறுதியான நம்பிக்கை இல்லை என்பதுதானே நிதர்சனமான மறுக்க முடியாத உண்மை.
ஆனால் மக்களை ஆட்சி புரிவது எப்படி கடமையாக்கப் பட்ட பணி இல்லையோ அதேபோல் அல்குர்ஆனை, ஹதீஸை எழுதிக்கொடுப்பது, பிற மொழிகளில் மொழி பெயர்த்துக் கொடுப்பது, மார்க்கப் பத்திரிகைகள் நடத்துவது, ஊர்விட்டு ஊர் பணம் செலவழித்துக் கொண்டு போய் பிரசாரம் செய்வது இவை அனைத்தும் கடமையாக்கப்பட்ட மார்க்கப்பணி அல்ல. கடமையாக்கப்பட்ட மார்க்கப்பணியை செய்யாவிட்டால் நாளை மறுமையில் கேள்வி உண்டுளூ தண்டணை உண்டு. கடமை அல்லாத உபரி மார்க்கப்பணியை செய்யாவிட்டால் மறுமையில் கேள்வியும் இல்லைளூ தண்டனையும் இல்லை. அப்படிப்பட்ட கடமையாக்கப்படாத உபரி மார்க்கப் பணியை செய்வதற்காக கூலி-சம்பளம் வாங்குவதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை.
அன்று நபிமார்கள்மீது கடமையாக்கப்பட்டு அவர்கள் செய்து கொண்டிருந்த மார்க்கப்பணி அனைத்தும், இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி வருகை இல்லாததால் அவர்களது சமுதாயத்தினராகிய நம்மீது கடமையாக்கப்பட்டு ள்ளது. (3:110, 9:71, 103:1-3) அக்கடமையை முறையாகச் செய்வது கொண்டு மட்டுமே முஸ்லிம்களாகிய நாம், அரபி மொழி தெரிந்தவர், தெரியாதவர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் வெற்றி பெற முடியும்; மறுமையில் சுவர்க்கம் புக முடியும். அப்பணியை நபிமார்களைப் போல் கூலி வாங்காமல் செய்யத்தவறினால் 103:1 எச்சரிப்பது போல் பெரும் நட்டமேளூ நரகமே! அன்று நபிமார்கள் மீது விதிக்கப்படாத, கடமையாகப் படாத உபரி மார்க்கப் பணிகள் முஸ்லிம் சமுதாயத்தினர் மீதும் விதிக்கப்படவில்லை. கடமையும் இல்லை. அப்படிப்பட்ட பணிகளை ஏன் செய்யவில்லை என்று கேள்வியும் நாளை மறுமையில் அல்லாஹ்வால் கேட்கப்படவும் மாட்டாது. அப்படிப்பட்ட குர்ஆனை, ஹதீஸ்களை எழுதிக் கொடுப்பது, இதர மொழிகளில் மொழி பெயர்த்துக் கொடுப்பது, நூல்கள், தினசரி, வார, மாத இதழ்கள் நடத்துவது, இத்தியாதி, இத்தியாதி உபரி மார்க்கப் பணிகளுக்காக கூலி-சம்பளம் வாங்குவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல. இவ்விரு வகை பிரசார பணிக்குமுள்ள வேறுபாட்டை நாம் தெளிவாக விளங்கி அதன்படி நடக்க வேண்டும்.
இந்த விபரங்களைத் தெளிவாகப் புரிந்து கூலிக்கு மாரடிக்கும். அதனால் வழிகேட்டிலிருக்கும் புரோகித மவ்லவிகளின் மாயஜால, வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு, தன்னம்பிக்கையுடன் குர்ஆன், ஹதீஸை நமக்குத் தெரிந்த மொழிகளில் நேரடியாகப் பார்த்து விளங்கி அதன்படி நடந்து ஈருலகிலும் வெற்றிவாகை சூடுவோமாக.
மேற்கொண்டு விளக்கம் பெற வீடியோவை கிளிக் செய்யவும் வீடியோ – Video