அன அவ்வலுல் முஸ்லிமீன்

in 2010 பிப்ரவரி,பொதுவானவை

அன அவ்வலுல் முஸ்லிமீன்   மு.முத்துவாப்பா, நெல்லை, ஏர்வாடி.


* அன அவ்வலுல் சுன்னத் வல் ஜமா அத்தீன் அல்ல!
* அன அவ்வலுல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தியீன் அல்ல!
* அன அவ்வலுல் நஜாத்தியீன் அல்ல!
* அன அவ்வலுல் ஜாக்கியீன் அல்ல!
* அன அவ்வலுல் தவ்ஹீதீன் அல்ல!
* அன அவ்வலுல் விடியல் வெள்ளியீன் அல்ல
!

மேல் எழுதப்பட்ட வார்த்தைகளை தொழுகையின் போதோ அல்லது அல்லா ஹுவை நினைவு கூறும்போதோ படிக்க (ஓத) முடியுமா? நிச்சயமாக முடியவே முடியாது! ஆனால் நிச்சயமாக “”அன அவ்வலுல் முஸ்லிமீன்” என்று சொல்லியே ஆக வேண்டும்.
ஏன் என்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக் காக நின்றுவிட்டால்,

“”வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி சத்திய மார்க்கத்தை விரும் பியவனாக என் முகத்தை திருப்பி விட்டேன். மேலும் நான் முஸ்லிம்களில் ஒருவன். எங்கள் இரட்சகனே! நீயே அரசன்! வணக்கத்திற் குரியவன் உன்னைத் தவிர வேறு யாரு மில்லை. நீயே என்னுடைய இரட்சகன்! நான் உன்னுடைய அடிமை! என்று இறுதி வரை ஓதுவார்கள் என அலீ இப்னு அபீதாலீப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

மேல்கண்ட நபி மொழியைப் போன்று, நான் முஸ்லிம்களில் ஒருவன் என்றும், நான் முஸ்லிம்களில் முதன்மையானவன் (“அன அவ்வலுல் முஸ்லிமீன்”) என்றும் இன்னும் ஒரு சில துஆக்களே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்து இருக்கிறார்கள்.

மேலும் இபுராஹீம் அலைஹி ஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும்போது முஸ்லிம் என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையையும் சொல்லவில்லை.

இப்றாஹீம் நபி அவர்களுடைய வார்த்தைகள் பற்றி அல்லாஹு ரப்புல் ஆலமீன்
சத்திய வழிகாட்டல் நூல் வழியாக சொல்லும் போது,

எங்கள் இறைவனே! எங்களிருவரையும் முஸ்லிமானவர்களாக நீ ஆக்கிடுவாயாக! எங்கள் சந்ததியலிருந்தும் முஸ்லிம் சமுதாயத்தை (ஆக்கிடுவாயாக!) (அல்குர்ஆன் 2:128)

என்று இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டுகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் புரோகித மவ்லவிகள்(?) பின்னால் கண்மூடிச் சென்று அவர்களின் ஷைத்தானியக் கற்பனையில் உருவான அமைப்புகளான சுன்னத் வல்ஜமாத், ஜாக், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தப்லீஃ ஜமாஅத் இன்னும் பல பல பெயர்களில் செயல்பட்டு கொண்டு நாங்கள் தான் அசல் இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்லி மார்தட்டுகிறார்கள். அப்படிப்பட்ட இயக்கவாதிகள் பெருமையோடு மார்தட்ட வேண்டாம். அவர்கள் தங்களுடைய அறிவை குர்ஆன், ஹதீஃதைக் கொண்டு தட்டி எழுப்பி அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு என்ன (அமைப்பை) பெயரைச் சூட்டினான் என்பதையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த அமைப்பில் இருக்கும்படி கட்டளையிட்டார்கள் என்பதையும் அறிவுள்ளவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் நெத்தியடியாக அருள்கூறும் சத்திய நெறிநூலில் சொல்லும்போது
மேலும் தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர தூதர் இபுறாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? அவரை இவ்வுலகில் திட்டமாக நாம் தேர்ந்தெடுத்தோம். இன்னும் நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களில் உள்ளவராவார்.

மேலும் அவருடைய இறைவன் அவருக்கு “”நீர் முஸ்லிமாக ஆகிவிடும்” என்று கூறிய போது, “அனைத்துலகங்களின் இறைவனுக்கு நான் (முற்றிலும்) வழிபட்டேன்” என்று அவர் கூறினார்.

மேலும், இதனையே (இறைத்தூதர்) இப்றாஹீம் தம் மக்களுக்கு இறுதி உபதேசம் செய்தார்; இன்னும், யாஃகூபும் (தம் மக்களு க்கு இறுதி உபதேசம் செய்தார்;) என்னுடைய மக்களை, நிச்சயமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை உங்களுக்காகத் தேர்ந்தெடுத் துள்ளான்; எனவே நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி ஒருபோதும் மரணிக்க வேண்டாம்.

அல்லது, யாஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களி டம் “”எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்? எனக் கேட்டதற்கு உங்கள் இறைவனை, உங்கள் மூதாதையர் இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனாகய ஒரே இறைவனையே வணங்கு வோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும்) வழிபட்ட முஸ்லிம்களாக இருப்போம் எனக் கூறினார்கள். (அல்குர்ஆன் 2:130,131,132,133)

மேல்கண்ட சத்திய நெறிநூல் வசனம் 2:130 என்ன சொல்லுகிறது? அறிவுள்ளவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹு ரப்புல் ஆலமீன் நெத்தியடியாக இந்த சமுதாயத்தை பார்த்து கேள்வி தொடுக்கும்போது “”தன்னைத் தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர தூதர் இபுறாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? அப்படி என்றால் இஸ்லாம் என்ற போர்வையில், மார்க்கத்தை மதமாக்கி, பொருளாதார சம்பாத்தியத்திற்காக வியாபாரமாக்கி மக்களை மாக்களாக்கி, “உம்மத்தன் வாஹிதாவை” ஒரே சமுதாயத்தை பல அமைப்புகளாக பிரித்து முழுக்க, முழுக்க ஷைத்தானிய வழியைப் பின்பற்றும் புரோகித மவ்லவிகளும்(?) அவர்கçள அப்படியே பின்பற்றும் இயக்கவாதிகளும் மடையர்களே! மடையர்கள் என்ற வார்த்தையை நாம் சொல்லவில்லை; நம் எல்லோரையும் படைத்த அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான் என்பதை அறிவுள்ளவர்கள், சிந்திக்கவே செய்வார்கள்; சிந்திப்பார்களா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’ என்ற அமைப்பை தவிர, மனித கற்பனையால் உருவான அமைப்புகள் எல்லாம் வழிகேடே என்று சொல்லி இருக்க! இந்தப் புரோகித மவ்லவிகளும்(?) அவர்களைப் பின்பற்றுபவர்களும் “ஜமாஅத் அல் முஸ்லிமீனும்’ ஒரு பிரிவுப் பெயர் தானே? என்ற அறிவில்லாத கேள்வியையும் கேட்கிறார்கள். இவர்களின் மடத்தனமான கேள்விக்கு அல்குர்ஆன் 2:130 சிறந்த பதிலை தந்து கொண்டிருக்கிறது! ஆகவே ஒரு முஸ்லிம் தன்னை “முஸ்லிமீன்” என்றே அல்லாஹு ரப்புல் ஆலமீன் முன் சொல்ல முடியும்.

அன அவ்வலுல் முஸ்லிமீன், அன முஸ்லிமீன் என்பதைத் தவிர வேறு எந்த அமைப்புகளின் பெயரையும் சொல்லவே முடியாது என்பதையும் அறிவுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ் உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயரிட்டான் (22:78). இதற்கான சிறந்த அழகான விளக்கமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்”. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைஃபத்துல் யமான் (ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டபோது:
நீர் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” ஐயும் அதன் “இமாம்”ஐயும் பற்றிக் கொள்வீராக என்றே சொன்னார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்வார்களா? இல்லை செவிடன் காதில் ஊதிய சங்காக, புரோகித மவ்லவிகள் சொல்வதை அப்படியே கேட்டு வழிகேட்டில் சென்று அபூ ஜாஹிலியாக்கள் விடுக்கும் அழைப்பை ஏற்று நரகத்தின் விளிம்புக்கு செல்ல வழிதேடுகிறார்களா? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
கடந்த டிசம்பர் 6.12.2009-ல் சென்னை மட்டும் அல்ல தமிழகத்தின் மற்ற மாவட்ட தலை நகரங்களிலும் வினோதங்கள் அரங்கேறின என்பது நாம் யாவரும் அறிந்ததே, இதில் சென்னையில் மட்டும் ஒவ்வொரு அமைப்பினர்க்கும் தனித்தனியாக நேரங்கள் குறிப்பிட்டு காவல்துறை அனுமதியளித்துள்ளது. இந்தச் செய்தி எல்லா தமிழ் நாளிதழ்களிலும் வெளி வந்துள்ளது.

உதாரணத்திற்கு காலை 10.00 11 .00 மணிவரை சுன்னத்துல் ஜமாஅத் பேரவைக்கு ஆர்ப்பாட்டம் அல்லது மனித சங்கிலிக்கு அனுமதி 11.00 – 12.00 வரை உலமா பேரவைக்கு அனுமதி 12.00 -1.00 TNTJ க்கு அனுமதி 1.00 – 2 .00 இஸ்லாமிய ஜனநாயக பேரவைக்கு அனுமதி 3.00 – 4.00 மணி வரை மற்றும் அதற்கு மேலும் இது போன்ற மனித கற்பனையில் உருவான இஸ்லாமிய அமைப்புகளுக்கு அனுமதி என்று பட்டியலே வெளியான கேலிக் கூத்து இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?
அன்று அபுல் ஹிக்கம் என்று சொல்லக் கூடிய அபூஜஹீல் தாருந்நத்வாவை வைத்துக் கொண்டு பெருமை அடித்தான். இன்று இந்த புரோகித மவ்லவிகள்(?) தங்கள் தங்கள் அமைப்புகளை வைத்து பெருமையடித்து கொண்டு, இந்த சத்திய மார்க்கமான இஸ்லாத்திற்கு பெரும் களங்கத்தையும் நடுநிலை முஸ்லிம்களுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்துகிறார்கள்.

இந்த புரோகித ஸனது பட்டத்துக்கு (நாளை மறுமையில் பட்டம் விடவும் பிரயோஜனப்படாத) சொந்தக்காரர்களான மவ்லவிகளை(?) பின்பற்றும்படி அல்லாஹ்வும் சொல்லவில்லை, இந்த உலகத்தின் அருள்கொடை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வழிகாட்டவில்லை என்பதை அறிவுள்ள முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் சத்திய நெறி நூல் வழியாக சொல்லும்போது அவர்கள் எத்தகையோரென்றால் உம்மீ (எழுதப்படிக் கத் தெரியாத) நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுவார்கள். (அல்குரான் 7:157)

ஆதலால் அல்லாஹுவையும் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்கள் கட்டளையிட்டப்படி அப்படியே, பின்பற்றுபவர்கள் தான் “”அவ்வலுல் முஸ்லிமீன்” ஆவார்கள். அவர்கள் இயக்கவாதிகள், அவ்வலுல் சுன்னத் வல்ஜமா அத்தீன், தவ்ஹீதியீன் நஜாத்தீன், ஜாக்கீன், விடியல் வெள்ளியீன், தப்லீஃ ஜமாஅத்யீன் ஆகவே முடியாது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் புரிந்து செயல்பட முன்வர வேண்டும். அதற்கு அல்லாஹ்வும் அருள் செய்வானாக! ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்.

Previous post:

Next post: