ஐயமும் தெளிவும்
ஐயம் : குடிக்கும் பானங்களில் சூட்டைக் குறைப்பதற்காக ஊதலாமா? கூடாது என்கிறார்களே ஏன்? பாத்திரத்திலிருந்து நேரடியாகத் தண்ணீர் குடிக்கலாமா? அரப்ஜான், செவ்வாய்பேட்டை, சேலம்.
தெளிவு: அபூசயீது(ரழி)அவர்கள் மர்வான் அரசரிடம் சென்றனர். “பாத்திரங்களில் ஊதுவதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தடைசெய்ததைத் தாங்கள் அறிவீர்களா?’ என்று மன்னர் கேட்டார்.
“ஆம்’, “ஒரே மூச்சில் தண்ணீர் குடிப்பதால் தாகம் நமக்குத் தீருவதில்லை’ என்றும், “பாத்திரத்தில் மூச்சு விடலாமா?’ என்றும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார்.
“உம் வாயைவிட்டு பாத்திரத்தை நகர்த்திக் கொண்டு பிறகு மூச்சு விடவும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்.
“தண்ணீரில் தூசிகள் இருக்கக் காண்கிறேன். வாயால் ஊதி அதனை ஒதுக்கி விடலாமா? என்று அவர் மேலும் கேட்டார்.
“அதை(சிறிது) கீழே ஊற்றுவதால் அது போய் விடும்’ என்று நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். அறிவிப்பாளர்: அபுல் முஸன்னல் ஜுஹ்னிய்யீ ஆதாரம்: முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.
“உங்களில் எவரும் எதையாவது அருந்தினால், அதன் பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பார்: அபூ கதாதா(ரழி) நூல்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.
“நபி(ஸல்) அவர்கள் எதையாவது குடிக்கும் பொழுது (தம் வாயை அருந்தும் பாத்திரத்திலிருந்து எடுத்து) 3 முறை மூச்சு விட்டு வந்தனர்”அறிவிப்பாeர்: அனஸ்(ரழி)நூல்:புகாரீ, முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ.
“ஒட்டகம் தண்ணீர் குடிப்பது போன்று, ஒரே மூச்சில் நீங்கள் நீர் அருந்தாதீர்கள் என்றாலும், இரண்டு மூன்று முறை மூச்சு விட்டு அல்லது எடுத்து எடுத்து தண்ணீர் அருந்துங்கள். மேலும், நீர் அருந்தும் போது “பிஸ்மி’யும் கூறுங்கள். நீர் அருந்தி விட்டால் “அல்ஹம்துலில்லாஹ்’ என்றும் கூறுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: திர்மிதீ
மேற்குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களிலிருந்து குடிக்கும் பானங்களில் ஊதிக் குடிக்கக் கூடாது என்று அறிய முடிகிறது.
பானங்களின் அதிகமான சூட்டைக் குறைப்பதற்காக, பானங்களை மற்றொரு பாத்திரத்தின் உதவியுடன் ஆற்றிக் குடியுங்கள். அல்லது பானங்கள் உள்ள பாத்திரத்தைக் கையால் அசைத்து அசைத்து சூட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். சூட்டைக் குறைப்பதற்காக வாயால் பானங்களில் ஊதாதீர்கள்.
ஏன் ஊதக் கூடாது என்று அடுத்த வினாவைத் தொடுக்கிறீர்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை ஏற்று அப்படியே செயல்படுவதுதான் விசுவாசிகளின் பணி. அக்கட்டளைகளில் நிறை பொருட்கள் செறிந்து இருக்கும். இருப்பினும் எமக்குத் தெரிந்ததைத் தெரிவிக்கிறோம்.
நாம் வெளிவிடும் மூச்சில் உலோகத் தொடர்பில்லாத கரியம் (அணு எண் 6) வெளியாகும்.
இது கரியமிலம் (CORBONIC ACID) அல்லது கரியமில வாயு (CORBONIC ACID GAS) என்று அழைக்கப்படுகிறது.
நீர்மத்திலிருந்து காற்றூட்ட அழுத்தம் குறைவால் குமிழாக வெளிவரும் “கரிய-அமில-ஆவி’ இது. இதனை உட்கொள்வதால் ஆரோக்யம் பாதித்திடும்; தாகம் தீராது; செரிமனத்தைத் தடுக்கும். எனவே, பானங்களில் ஊதிக் குடிக்கக் கூடாது என்பதை அறிவோமாக.
தங்களின் மூன்றாவது கேள்வி, பாத்திரத்திலிருந்து நேரடியாகத் தண்ணீர் குடிக்கலாமா என்பதே. இவ்வாறு குடிப்பதை கீழுள்ள ஹதீஸ் தடைசெய்கிறது.
“தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரத்தை சாய்த்து அதன் வாயில், வாய்வைத்துத் தண்ணீர் அருந்து வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தனர்’ அறிவிப்பாளர்: அபூசயீது(ரழி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ.
ஏன் குடிக்கக் கூடாது என்று தாங்கள் கேட்காவிட்டாலும், அதனையும் தெரிவிக்கின்றோம். தெரிந்து கொள்ளுங்கள்.
தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரத்தை சாய்த்து, அதன் வாயில்-வாய் வைத்துத் தண்ணீர் அருந்துவதால், நாம் வெளிவிடும் மூச்சில் உள்ள கரியமில வாயு பாத்திரத்திலுள்ள நீரில் கலந்து நீரை அசுத்தமாக்குகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.