சுவர்க்கவாசிகளாக பெண்களின் நிலை என்ன?

in கேள்வி-பதில் (தொகுப்பு)

ஐயம் : சுவர்க்கவாசிகளாகிய ஆண்களுக்கு ஹுருல்யின் என்ற கண்ணழகிகள் உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படி என்றால் சுவர்க்கவாசிகளாக பெண்களின் நிலை என்ன? சதக் இப்றாஹிம், கீழக்கரை.

தெளிவு : இஸ்லாம் மனித ஒழுக்கங்களில் கற்புக்கே முதலிடமளிக்கிறது. கற்புநிலை தவறிய ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்கள் மணமுடிக்காதவர்களாயிருப்பின் தலா நூறு கசையடி கொடுக்க வேண்டுமென்றும், மணம் முடித்தவர்களாயிருப்பின் அவர்களைக் கல்லால் அடித்துக் கொன்று விட வேண்டுமென்றுமென்றும் கட்டளையிடுகிறது.

மணம் செய்து கொண்ட ஒரு பெண் தனது கணவர் தன்னுடன் இருக்கும் பொழுது, மற்றொரு ஆணை மணம் செய்து கொள்வதை மார்க்கம் தடை செய்கிறது. அவள் அதை மீறி பிறருடன் தொடர்பு கொண்டு விட்டால், அவளைக் கற்பிழந்தவள் என்று கூறுவதுடன், கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டிய குற்றம் புரிந்தவள் என்கிறது.

ஆனால் மணம் செய்து கொண்டுள்ள ஒரு ஆண் பல மனைவியரை வைத்து நியாயமான முறையில் நடத்த ஆற்றலுள்ளவராயிருப்பின், நான்கு மனைவிகள் வரை மணம் செய்து கொள்வதை இஸ்லாம் அவருக்கு அனுமதிப்பதுடன் அவ்வாறு அவர் மணமுடித்துக் கொள்வதால் அவரைக் கற்பிழந்தவரென்றோ கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டிய குற்றவாளியென்றோ சொல்வதில்லை.

ஆகவே கற்பு நிலை என்பது இஸ்லாத்தின் அடிப்படையில் ஆண்களுக்கு வேறு, பெண்களுக்கு வேறு என்பதையறிகிறோம். ஒரு பெண் தனது ஒரே கணவருடனிருந்தால் மட்டும் தான் அவள் கற்புள்ளவளாயிருக்க முடியும். ஆனால் ஆண்களோ நான்கு மனைவிகளுடன் கலந்துறவாடிய நிலையிலும் அவர்கள் கற்புள்ளவராகவே கருதப்படுவார்கள்.

வல்ல அல்லாஹ் இவ்வடிப்படையிலேயே மறுமையின் வாழ்வையும் அமைத்திருக்கிறான். திருகுர்ஆனில் சுவர்க்கத்தின் சுகபோகங்களைப் பற்றிச் சொல்லுமிடத்து, சுவாக்கக் கன்னியரைப் பற்றி கூறும் பொழுது, அவர்களின் அழகு, அமைப்பு முதலியவற்றைக் கூறுவதற்கு முன்பே, அவர்களின் உயர் பண்பான (பிற ஆடவரைப் பார்க்க விருப்பமில்லாத) அடக்கமான பார்வையுடைய கன்னிகள் என்று வர்ணித்து, பிற மனிதராலும், ஜின்னாலும் தீண்டப்படாதவர்கள் என்றும் கூறியிருக்கிறான்.

அவற்றில் (பிற ஆடவரைப் பார்க்காது) அடக்கமான பார்வையுடைய கன்னிகள் இருக்கிறார்கள். அவர்களை (இவர்களுக்கு முன்னர்) எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை. (55:56)

ஆகவே மேற்காணும் திருவசனம் பெண்கள் எந்த அளவு தமது கணவரைத் தவிர பிற ஆடவரின் மீது கவனம் செலுத்தாது அடக்கமுள்ள பார்வையுடையோராக அந்நியரின் கரங்கள் தம் மேனியைத் தீண்டாதவாறு நடந்து கொள்வோராகயிருக்கிறார்களோ அந்த அளவு உயர் பண்புடையோராக உத்தமிகளாக பத்தினிகளாகத் திகழ்வார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அடுத்து பின்வரும் ஹதீஸைக் கவனிப்போம். அன்னை உம்மு ஸல்மா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாள் ஒரு நாள் நபி(ஸல்) அவர்களிடம் (மறுமையில்) சுவர்க்கவாசிகளான உலகப் பெண்கள் சிறப்பு மிக்கவர்களா? அல்லது ஹுருல்யீன்களான சுவர்க்கக் கன்னிகளா? என்று கேட்டேன். அதற்கவர்கள் உலகப் பெண்களுக்கும். ஹூருல்யீன்களுக்கும் பட்டாடையின் வெளிப்புறத்திற்கும், உள்புறத்திற்கும் இடையிலுள்ளது போன்று சிறப்பில் வித்தியாமிருக்கிறது. உலகப் பெண்கள் வெளிப்புறத்தைப் போன்றும் அப்பெண்கள் உட்புறத்தைப் போன்றும் ஹூருல்யீன்களைப் பார்க்கினும், உலகப் பெண்களே சுவர்க்கத்தில் சிறப்பு மிக்கோராகயிருப்பார்ள் என்றார்கள். பின்னர் அதற்குக் காரணம் கேட்டதற்கு, உலகப் பெண்கள் தொழுதிருக்கிறார்கள், நோன்பு பிடித்திருக்கிறார்கள், மேலும் அநேக வகையான இபாதத்து செய்திருக்கிறார்கள் அதன் காரணமாகவே சிறப்பாக விளங்குவார்கள் என்றார்கள். (தப்ரானீ)

மேற்காணும் ஹதீஸின் வாயிலாக ஹூருல்யீன்களைப் பார்க்கினும் உலகப் பெண்கள் மிகவும் விசேஷமாக மறுமையில் மதிக்கப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதால், இவர்கள் அந்த ஹூருல்யீன்களைப் பார்க்கினும் அந்நியரைப் பார்க்காதவர்களாக, அடக்கமுள்ள பார்வையுடையோராக, பிற ஆடவரின் தொடர்பில்லாது உயரிய பண்பாடுள்ளவர்களாகயிருப்பார்கள் என்பது தானே பொருள்.

பொதுவாகப் பெண்ணாகப் பிறந்த ஒருவர் தனது கணவரன்றி அந்நிய ஆடவருடன் தொடர்பு கொள்வதென்பது இழுக்கானதொரு செயல் என்றிருக்கும் பொழுது, அல்லாஹ்வின் பேரருளால், சுவர்கத்துக் கன்னிகளைப் பார்க்கினும், மிக்க மேலான நிலையில், சீரும் சிறப்போடும், காலாகாலம் வாழும் பாக்கியம் பெற்ற, அப்புண்ணியவதிகாளன உலகத்துப் பெண்கள், தமது கணவரைத் தவிர, அந்நியரின் பக்கம் ஏறிட்டுப் பார்க்க மாட்டார்கள். அத்தகைய உயர்வானதொரு மனோநிலையை வல்ல ரஹ்மான் அப்பெண்களுக்குக் கொடுத்து விடுவான் என்பதையே மேற்காணும் ஹதீஸ் உணர்த்துகிறது.

Previous post:

Next post: