* நஜாத் ஆசிரியர், “சமாதான வழி” ஆசிரியரை நேருக்கு நேர் சில விஷயங்களைப் பேசிக்கொள்ள அழைத்ததாகவும், “சமாதான வழி” ஆசிரியர் “பத்திரிகை வாயிலாகவே அதை வைத்துக் கொள்ளலாம்” என்று பதில் தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாரே! நீங்கள் முன் வரலாமே! A.ரபீவுல்லாஹ்(+2 இறுதி) சேரன்மாதேவி

“சமாதான வழி”யில் குறிப்பிட்டிருந்த இரண்டு கேள்விகளுக்கும் சென்ற மாத இதழிலேயே பதில் தந்துள்ளோம்.

* பேய், பிசாசு உண்டா? தர்ஹாக்களில் சில அதிசயங்கள் நடக்கின்றனவே இது எப்படி? என்பது போன்ற விவரங்களை மக்களுக்கு விளக்கலாமே! முகம்மது மைதீன், கொடைக்கானல்.

நிச்சயம் விளக்கத்தான் வேண்டும்! இதுபோன்ற ஐயங்களைத் தெளிவுபடுத்தி உண்மையை உணர வைப்பதற்குத்தான் நஜாத் தோன்றியுள்ளது அதுபற்றி தனியாக ஒரு விரிவான கட்டுரை விரைவில் வெளிவரும்.

* ஆதம்(அலை) முகம்மது(ஸல்) அவர்கள் பொருட்டால், மன்னிப்புக் கேட்டதாக பல ஆதாரங்கள் உள்ளன. உங்கள் கட்டுரை அதற்கு முரண்பாடாக உள்ளது. உலகமெல்லாம் 20 ரகஅத்துகள் தொழுகின்றபோது உங்களுக்கு மட்டும் தனியாக ஹதீஸ் கிடைத்துவிட்டதோ? நஜாத்தைப் படித்தால் இருக்கின்ற ஈமானும் போய்விடும். பஷீர் அஹ்மது (D.E.E.E.,) திருச்சி.

ஆதம்(அலை) அவ்வாறு கேட்டதற்கு பல ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளாதீர்கள்! அந்த ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள்! அந்த ஆதாரங்களை நமக்கு அனுப்பி வையுங்கள்! நஜாத்தில் இடம்பெறச் செய்கிறோம். 8 ரகஅத்துக்கான ஹதீஸ்கள் எங்களுக்கு மட்டும் தனியாக கிடைத்துவிட்டது என்று எப்போது நாம் எழுதினோம்? புகாதி இமாம் உட்பட ஹதீஸ்கலையின் மாமேதைகளுக:கு கிடைத்துள்ள ஹதீஸ்களை எடுத்து எழுதியுள்ளோம் “தராவீஹ்” பற்றிய நமது கட்டுரையை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்! உண்மை விளங்கும்!

குர்ஆன், நபிமொழிகளைத்தான் நஜாத்தில் நாம் இடம்பெறச் செய்கிறோம். குர்ஆன், நபிமொழிகளைப் படிப்பதால் ஈமான் பலப்படும் என்பதுதான் உண்மை. நீங்கள் குறிப்பிட்ட அந்த வாசகம்தான் ஈமானைப் போக்கும் வார்த்தையாகும்.

* சென்ற மாத இதழில் இறந்தவர்கள், இருப்பவர்களின் அறை கூவலுக்கு செவி சாய்ப்பதில்லை என்று எழுதி இருந்தீர்கள்! அதுபற்றி நான் விவாதம் செய்ய எண்ணுகிறேன். அதற்கு முன்னால் என்னுடைய சில கேள்விகளுக்கு பதில் தந்தால் என் விவாதத்தை அதிலிருந்து தொடர்கிறேன்.

மவுத்து என்றால் என்ன?

ஏன் மவுத்தாக வேண்டும்?

மவுத்தாவது எது?

அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள் தான் அவுலியா என்றால், நானும் நீங்களும் அவ்லியா ஆகலாமே! டாக்டர் அப்துல் மஜீது, தோகமலை.

அருமையான கேள்விகளைத்தான் கேட்டுள்ளீர்கள்! மவுத்து என்றால் மரணம், நம்முடைய விதி முடிவதால் மவுத்தாகிறோம். உயிரினங்கள் மவ்தாகும். நீங்களும் நானும் அவ்லியாவாக இருக்க அல்லாஹ் போதுமானவன், பதில் தந்துவிட்டோம். இனி நீங்கள் விவாதத்தை தொடரலாம்.

* இரவில் வீட்டைக் கூட்டினால் வறுமை ஏற்படும் என்று எந்த கிதாபில் உள்ளது. ஒடுக்கத்து புதனுக்கும் நாகூர் கந்தூரிக்கும் விடுமுறை விடும் மதரஸாக்களை குறிப்பிட்டுச் சொல்ல இயலுமா? மவ்லிது கூடாது என்பதற்கு குர்ஆன், ஹதீஸ் மூலம் ஆதாரம் தேவை!

இப்னு அப்பாஸ்(ரழி) மக்கா To ஜித்தா, மக்கா To தாயிப், மக்கா To கஸ்பான் ஆகிய பயணங்களில் கஸர் செய்துள்ள ஹதீஸ் “முஅத்தா” என்ற நூலில் வருகின்றது. அந்த தூரம் ஏறக்குறைய 48 அமல்களாகும். இதற்கு உங்கள் விளக்கம் என்ன? நீர் எல்லா ஹதீஸ்களையும் ஆராய்ந்து விட்டீரோ?

பிர்அவ்ன், தமூது கூட்டத்தினர் பற்றி இறங்கிய வசனங்களை முமின்கள் விஷயத்தில் பயன்படுத்தி இருக்கிறீரே! இது ஏன்? விளக்கம் தேவை! S.A.M.அப்துல் காதிர், திருநரையூர்.

“வறுமையை ஏற்படுத்துபவை” என்ற தலைப்பில் “தஃலீமுல் முதஅல்லிம்” என்ற நூலில் (இந்த நூல் தமிழகத்தின் பல மதரஸாக்களின் பாடத் திட்டத்தில் உள்ளது) நாம் குறிப்பிட்டுள்ள விஷயம் உள்ளது. ஒரு விஷயத்தை உதாரணத்துக்குத்தான் எடுத்துக்காட்டி இருந்தோம். இன்னும் பல அபத்தங்கள் அடங்கிய நூல்களும் போதிக்கப்படுகின்றன. தேவைக்கேற்ப அவற்றையும் நாம் வெளியிடத்தானிருக்கிறோம். கினியனூர் அரபிக்கல்லூரியில் நான் ஆசிரியராக பணியாற்றிய காலம் வரை ஒடுக்கத்துப் புதனுக்கு லீவு விட்டிருக்கிறார்கள், பொரவாச்சேரியில் உள்ள மதரஸாவில் நாகூர் கந்தூரிக்கு விடுமுறை விடுவதாக அறிகிறோம்.

மவ்லீது கூடாது என்பதற்கு, குர்ஆன், ஹதீஸ் மூலம் ஆதாரம் தருவதற்குத் தானே “ஓதுவோம் வாருங்கள்!” என்ற கட்டுரையைத் தொடங்கி இருக்கிறோம். கட்டுரை முற்றுப் பெற்றதும் சந்தேகம் இருந்தால் எழுதுங்கள்!

“48 மைல்கள் தூரத்திற்கு பயணம் சென்றபோது இப்னு அப்பாஸ்(ரழி) கஸர் செய்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்!” “48 மைல்களுக்கு கஸர் கிடையாது” என்று எங்கேயும் நாம் கூறவில்லை. “48 மைல்களுக்கும் கஸர் செய்யலாம். அதற்கு குறைவான ஐந்தேகால் கிலோ மீட்டர் தூரங்களுக்கும் கஸர் செய்யலாம்” என்பது தான் நமது கட்டுரையின் கருத்து. நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸில் “48 மைல்களுக்கு குறைந்த தூரத்திற்கு கஸர் கிடையாது” என்று பொருள் எப்படி வரும்? 48 மைல்களுக்கு குறைவான தூரங்களில் கஸர் செய்யலாம் என்ற ஹதீஸ்களை நாம் முன்பே வெளியிட்டிருக்கிறோம். ஆக நாங்கள் இந்த ஹதீஸையும், அந்த ஹதீஸையும் ஒரே நேரத்தில் ஏற்கிறோம். நீங்கள் 48 மைல்தான் என்று வரம்பு கட்டியதன் மூலம், ஆதாரபூர்வமான நாங்கள் சுட்டிக் காட்டி இருந்த ஹதீஸை மறுக்கிறீர்கள்.

அடுத்து தமூது கூட்டத்தினருக்கும் பிர்அவ்னுக்கும் உரிய சொற்களை முஸ்லிம்கள், விஷயத்தில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி இருங்கள்! இதுபோன்ற ஐயங்களுக்கெல்லாம் “ஓதுவோம் வாருங்கள் என்ற கட்டுரைத் தொடர் விரிவான விளக்கம் தரும். எனினும் தற்போது சுருக்கமாக அதற்கு விளக்கம் தருகிறோம்.

தமூது கூட்டத்தினரும், பிர்அவ்னும் சொன்ன சொற்களை இவர்களும் சொல்வதால் அவ்வாறு பயன்படுத்தியுள்ளோம். மூமின் என்று தன்னைச் சொல்லிக் கொண்டால் அவர் எந்த வார்த்தையை வேண்டுமானாலும் சொல்லிவிடலாம் என்பது உங்கள் எண்ணமா? “ஒரே வார்த்தையை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவன் சொல்லிவிட்டால் அது பாவமில்லை” என்பது எந்த வகையில் நியாயமாகும்? பின் வரும் திருக்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்!

“நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சைக்காக செல்கின்றீர்கள்! என்னே! நீங்கள் மிகவும் வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்!” என்று (லூத்-அலை) கூறினார்கள். (அல்குர்ஆன் 7:81)

இந்த வசனம் லூத்(அலை) அவர்களின் சமுதாயத்தினரைப் பற்றி இறங்கியது. நான் என்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதால் நான் ஆண்புணர்ச்சியில் ஈடுபடுவதில் தவறில்லை. நான் இதைச் செய்யாதபோது வரம்பு மீறியவனாக மாட்டேன்” என்று ஒரு முஸ்லிம் சொன்னால், அதற்கும், நீங்கள் கூறியதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் இல்லை.

* “மக்காவிலும், மதீனாவிலும் 20 ரகஅத்துகள் தொழுகிறார்கள்!” எந்த அடிப்படையில் தொழுகிறார்கள்? இதற்கு விரிவாக விளக்கம் தாருங்களேன். A.அலாவுத்தீன்(பாகவி) ஆத்தங்கரை, F.சபருல்லா, சவுதி அரேபியா.

இதற்கு விளக்கம் எழுதுவதாகத் தானிருந்தோம் அதற்கிடையில் குர்ஆனின் குதலில் ஏதோ மறுப்பு எழுதத் துவங்கியுள்ளனர். அது முற்றுப் பெற்றதும் தராவீஹ் சம்பந்தமாக நாடு முழுவதும் கிளப்பப்பட்டுள்ள எல்லா ஐயங்களையும், உங்கள் போன்றவர்களின் சந்தேகங்களையும், தராவீஹ் பற்றிய அனைத்துப் பிரச்சனைகளையும், வேலூர் பேராசிரியரின் மறுப்புகளுக்கான விளக்கங்களையும், நஜாத்தின் இலவச இணைப்பாக வெளியிடுகிறோம் அவர்களின் மறுப்புத் தொடர் முடியட்டும்! அதுவரை பொறுத்திருங்கள்! சரிதானே!

* எங்கள் ஊரில் சில ஆலிம்கள்(?) அவ்லியாக்கள் மூலாமாகத் தேவைகளைக் கேட்கலாம் என்கிறார்கள். அதற்கு ஆதாரமாக பின்வருமாறு கூறுகிறார்கள். அல்லாஹ் பல காரியங்களை தன் அடியார்களுக்கு மலக்குகள் மூலமாகவே செய்கிறான். அல்லாஹ்வே மலக்குகளின் துணையோடு செய்யும்போது, நாம் அவ்லியாக்களின் துணையோடு கேட்பதில் என்ன தவறு? என்று ஆதாரத்துடன் கேட்கின்றனர். விளக்கம் தேவை! S.A.நாகூர் மைதீன், கடையநல்லூர்.

நல்ல ஆதாரமாகத்தான் இருக்கின்றது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் மனிதன் நடக்க ஆரம்பித்து விட்டால் உலகில் பிரச்சனைகளே இருக்காது. அல்லாஹ் சாப்பிடாமல் இருக்கிறான். அல்லாஹ்வே சாப்பிடாமல் இருக்கும்போது நாம் மட்டும் சாப்பிடலாமா? அல்லாஹ்வுக்கு உறக்கம் கிடையாது. நாம் எதற்காக உறங்க வேண்டும்? அல்லாஹ்வுக்கு மனைவி மக்களில்லை. நமக்கும் மட்டும் ஏன்? இப்படி எல்லோரும் இருந்துவிட்டால் பிரச்சனைகளுக்கே வழி இல்லை அல்லவா? குறைந்தபட்சம் அந்த ஆதாரத்தைச் சொல்பவர்களையாவது அவ்வாறு இருக்கச் சொல்லுங்கள்! உலகம் உருப்படும்.

அன்புச் சகோதரரே! அல்லாஹ் நமக்கு எதைச் செய்யச் சொன்னானோ அதை நாம் செய்ய வேண்டும்! “அவன் செய்வது போல் நானும் செய்யப் போகிறேன்” என்ற ரீதியில் எந்த மட ஆலிமாவது கூறினால் அவன் தன்னை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதிக் கொண்டான் என்றே பொருள்! பர்அவ்ன்தான் இந்த மனப்பான்மையைக் கொண்டிருந்தான். அவனுக்கு நம் சமுதாயத்திலும் வாரிசுகள் உள்ளனர் என்பதை உங்கள் கடிதம் மெய்ப்பிக்கின்றது.

இவர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. அல்லாஹ் அழகாக, தெளிவாக தன் திருமறைமூலம் இதோ பதில் தருகிறான்:

அவன்(அல்லாஹ்) செய்பவற்றைப் பற்றிக் கேட்கப்படமாட்டான். நாம் செய்தவைப் பற்றி அவர்கள் (மனிதர்கள்) கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 21:23)

* சில மாதங்களுக்கு முன்னால் குர்ஆனின் குரல் பத்திரிகையில் “இறந்துவிட்ட அவ்லியாக்கள் உயிருடன் உள்ளவர்கள் மீது வந்து இறங்குவார்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. நான் நேரடியாகவே அதன் ஆசிரியரிடம் அது பற்றி கேட்டேன். அதற்கு அவர் “அதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்! இல்லாவிட்டால் பல தர்ஹாக்களில் நடப்பவைகளுக்கு பதில் கூற இயலாது. இப்படிப் பதில் சொல்வதே சுலபமான வழி” என்று கூறினார். இதற்கு விளக்கம் தேவை. மவ்லவி A.அலாவுத்தீன்(பாகவி), ஆத்தங்கரை.

அந்த அபத்தத்தைப் படித்துவிட்டுத்தான் முதல் இதழிலேயே “உயிரே ஓடிவா!” என்ற மறுப்புக் கட்டுரையை வெளியிட்டோம். வந்து இறங்குவது ஷைத்தான்கள் தான் என்பதற்கான, குர்ஆன், ஹதீதுகளையும் குறிப்பிட்டிருந்தோம். தர்ஹாக்களில் நடக்கும் அற்புதங்கள் பற்றி விரைவில் தனிக்கட்டுரை வெளியாகும். (இன்ஷா அல்லாஹ்)

* ஹஜ் பற்றிய கட்டுரையில் “சீதேவித்தனம்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அது “சீதாதேவி” என்ற சொல்லின் சுருக்கம் என்றே நான் நினைக்கிறேன். புராணங்களை நினைவுபடுத்தும், இதுபோன்ற சொற்கள் நஜாத்தில் இடம் பெறலாமா? M.யூசுப் ரஹ்மதுல்லாஹ், நாகூர்.

முகவை, மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் “நற்பேறு” என்ற பொருளில் இந்த வார்த்தையை மக்கள் பயன்படுத்துகிறார்கள். தங்கள் குழந்தைகளைக் கொஞ்சும்போது, சீதேவி என்பார்கள் நீங்கள் குறிப்பிட்டது போல் புராணத்தின் நினைவு எவருக்கும் வருவதில்லை. அந்த “நற்பேறு” என்ற பொருளில் தான் கட்டுரையாளர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார். அந்த வார்த்தைக்கு நீங்கள் குறிப்பிட்டது போன்ற பொருளிருந்தால் இனிமேல் அது போன்ற சொற்கள் இடம் பெறாமல் தவிர்த்துக் கொள்கிறோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! வாசகர்களின் விழிப்புணர்வு, பிரகாசமான எதிர்காலம் வெகு அருகில் இருப்பதைக் காட்டுகின்றது.

“இறந்தவர்களிடம் கேட்கக் கூடாது” என்று சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தீர்கள்! அப்படியானால் உங்கள் கருத்துப்படி உயிரோடு உள்ள ஈஸா(அலை) அவர்களை அழைத்து உதவி தேடலாமா? அது எப்படி ஷிர்க் ஆகும். ம.சே.ரஹ்மதுல்லாஹ், கடையநல்லூர்.

“இறந்தவர்களிடம் கேட்கக்கூடாது” என்பதற்கு நாம் குறிப்பிட்டிருந்த காரணங்களையும், நாம் சுட்டிக்காட்டி இருந்த இரண்டு வேறுபாடுகளையும் இன்னொரு முறை படித்துப் பாருங்கள்! அதுவும் ஷிர்க் என்பது தெளிவாகும்! அதன் பின்னரும் ஐயமிருந்தால் எழுதுங்கள்! விரிவாகவே விளக்கம் தருகிறோம்.

* எங்கள் ஊரில் சுமார் நான்கு ஆண்டுகளாக “ஏகத்துவ மெஞ்ஞான சபை” என்ற பெயரில் ஒரு இயக்கம் செயல்பட்டு வருகின்றது. அவர்களின் மாத வெளியீடு ஒன்றையும் உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். அந்த இயக்கம் இஸ்லாத்திற்கு உடன்பட்டதா? முரண்பட்டதா? முரண்பட்டது எனில் அவர்களின் வளர்ச்சியைத் தடுக்க நீங்கள் எந்த அளவு ஒத்துழைப்புத் தருவீர்கள்? A.G.முகம்மது ரபீக், மதுக்கூர்

நீங்கள் அனுப்பி இருந்த ஒரு இதழே அந்த இயக்கத்தைப் புரிந்து கொள்ள போதுமானதாக உள்ளது. பெயரில்தான் ஏகத்துவம் இருக்கின்றது. இஸ்லாத்திற்கும் அந்த இயக்கத்துக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. அத்வைதம் என்ற இஸ்லாத்திற்கு முரண்பட்ட கொள்கையைக் கொண்டவர்கள் அவர்கள், அவர்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த எங்களால் இயன்ற எல்லாவிதமான ஒத்துழைப்பையும் தர நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களிடம் எந்த மாதிரியான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறீர்கள் என்று எழுதுங்கள்!

* கோட்டாறு அப்துர்ரஸாக் ஆலிம் அவர்கள் “கை நகம் கண்தொட்டு” என்ற கட்டுரையைப் பற்றி ஒரு கருத்து எழுதியுள்ளார்கள். அதன் நகலை மாநில ஜமாஅத்துல் உலமாசபைத் தலைவர் அவர்களுக்கும் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்தக் கட்டுரையில் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவரைப் பற்றியும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளதால், அதுபற்றி அவர்களின் கருத்தைக் கேட்டுள்ளோம். அவர்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறோம். அதன்பின், நமது விளக்கத்தையும், அப்துர்ரஸாக் ஆலிம் அவர்களின் கருத்தையும் வெளிவிடுகிறோம்.

* சில இடங்களில்(ரழி) என்றும், சில இடங்களில்(ரலி) என்றும் போடப்படுகின்றதே! எது சரியானது? ஷம்ஸுல் ஹுதா என்பதை ஷம்ஸுள்ளுஹா என்று போட்டுள்ளீர்களே! R. பிர்தவஸ்கான், தொண்டி.

அரபியில் சிறப்பு எழுத்தாக உள்ள “ழாத்” என்ற எழுத்தின் உச்சறிப்பைத் தரக்கூடிய தமிழ் எழுத்து கிடையாது. லகரமும், ழகரமும் அந்த உச்சரிப்பைத்தர முடியாது. இதைப் போட்டாலும், அதைப் போட்டாலும் எல்லாம் ஒன்றுதான். ஷம்ஸுள்ளுஹா என்றும் பெயர் உள்ளது. தவறாக அச்சாகவில்லை.

கேள்வி: நஜாத் படிக்காதீர்கள் என்று சில ஆலிம்கள் பேசி வருகின்றனர். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? பதுருன் முனீரா, பொன்மலை, திருச்சி.

அவர்கள் சத்தியத்தின்பால் இருந்தால் “நஜாத் படியுங்கள்” அதில் கூறப்படுபவைகளுக்கு நாங்கள் விளக்கம் தருகிறோம் என்றுதான் அவர்கள் கூறவேண்டும். அவர்களிடம் குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் அறவே கிடையாது என்ற காரணத்திற்காகவும், மக்கள் விழித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவும் அப்படிச் சொல்கிறார்கள். நஜாத்தையும் படியுங்கள்! அதற்கு முரண்பட்ட பத்திரிகைகளையும் படியுங்கள்! இரண்டையும் ஒப்பிட்டு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்! என்று நாங்கள் சொல்கிறோம்.

Previous post:

Next post: