குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

in குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

தொடர்-5

அரபி இலக்கண இலக்கியம் அவசியமா?
அதற்கு முன்பு, அல்குர்ஆனிலுள்ள முஹ்க்கமாத் வசனங்களை விளங்கிக் கொள்ள அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் அவசியமே இல்லை. எனவே மார்க்கத்தை விளங்கிக் கொள்ள அவை அவசியமென்று ஒருசாரார் கூறி வருவது மிகவும் தவறான கூற்று என்பதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறோம். காரணம்: முஹ்க்கமாத் வசனங்கள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் நபித்துவ காலமான 23 வருடங்களில் தெளிவாக தத்துவ ரீதியிலும் (Theoretically)  நடைமுறை (Practically) ரீதியிலும் தெளிவுபடுத்தப்பட்டு விட்டன. கால மாறுதலினால் விஞ்ஞான வளர்ச்சிக் காரணமாக முஹ்க்கமாத் வசனங்களில் எவ்வித மேலதிக விளக்கத்திற்கோ, மாறுதலான விளக்கத்திற்கோ அவசியமே இல்லை. திட்டமான, மாறுதலே இல்லாமல் ஒரே பொருளைத் தரக்கூடிய வசனங்கள் தான் முஹ்க்கமாத் வசனங்கள். இந்த விபரங்கள் அனைத்தையும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளும்படி வேண்டுகிறோம்.

முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு உறுதியான, திட்டமான ஒரு முடிவுக்கு அல்லாஹ் அல்லாத வேறு யாரும் (கல்வியறிவில் நிலையானவர்கள் உட்பட) வரமுடியாது என்பதனால் அந்த வசனங்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது. அவற்றிலுள்ள ஞானங்களை விளங்க முற்படக்கூடாது. உலக ரீதியில் அவற்றிலுள்ள ஞானங்களை விளங்கிச் செயல்படுத்தக் கூடிய விஷயங்கள் நிதர்சனமாக இவ்வுலக வாழ்க்கையில் குர்ஆனுக்கோ, ஹதீதுக்கோ முரணில்லாத நிலையில் நல்ல பலன்களை தரும்பொழுது அவற்றை பயன்படுத்தக் கூடாது என்றோ, நாம் சொல்லவில்லை. மாறாக, முத்தஷாபிஹாத் வசனங்களிலிருந்து திட்டமான ஒரு கருத்தைச் சொல்லி அதைப் பின்பற்றுவதால், மறுமையில் நன்மை கிடைக்கும் என்றோ, உலகத்தில் பரக்கத் ஏற்படும் என்றோ எடுத்து மார்க்கமாகச் செயல்படுத்தக் கூடாது என்றே சொல்கின்றோம். இந்த 3:7 வசனத்திலுள்ள “தஃவீல்” என்ற அரபி பதத்திற்கு உண்மைக் கருத்து (இறுதியான முடிவு) எனற பொருளைத் தராமல் விளக்கங்கள், விரிவுரைகள் என்று பொருளைத் தருவது கொண்டு சிலர் தடுமாறுவதால் இந்த விளக்கத்தை இங்கு தந்துள்ளோம்.

இப்போது நாம் எடுத்துக்கொண்டவிஷயத்திற்கு வருவோம் அரபி இலக்கண, இலக்கிய ஞானம் அவசியம் தேவை என்று மவ்லவிகள் கூறிவருவது இந்த முத்தஷாபிஹாத் வசனங்களைப் பொருத்தமட்டிலும் முற்றிலும் உண்மையே. ஆனால் அதே சமயம் அந்த வசனங்களிலுள்ள ஞானங்களை வெளியே கொண்டு வர அரபி இலக்கண, இலக்கிய ஞானம் மட்டும் போதாது. அதுஉண்மையாக இருந்தால், 1400 வருடங்களுக்கு முன்னால் அரபி நாட்டிலிருந்த தாருந்நத்வாவைச் சார்ந்த அரபி பண்டிதர்கள் இன்றைய அரபி பண்டிதர்களை விட எந்த வகையிலும் குறைவானவர்கள் அல்லர். அது மட்டுமல்ல. அன்றிலிருந்து இன்றுவரை அரபி பண்டிதர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். ஒரு அரபி பதத்திற்கு எத்தனை பொருள்கள் உண்டு என்பதை காலங்காலமாக அரபி பண்டிதர்கள் அறிந்து வைத்து தான் இருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலை என்னவென்றால், ஒரு அரபி பதத்திற்கு வரக்கூடிய பல பொருள்களில் எந்தப் பொருளை குறிப்பிட்ட அந்த இடத்தில் பயன்படுத்துவது என்பதே தடுமாற்றத்திற்குரிய விஷயமாகும். உதாரணமாக, “அலக்” என்ற அரபி பதத்திற்கு இரத்தக்கட்டி என்ற பொருளும், ஒட்டி தொங்கிக் கொண்டு உறிஞ்சம் ஒன்று என்ற பொருளும் இருக்கத்தான் செய்தது. அன்றைய அரபி அறிஞர்களுக்கு “இரத்தக் கட்டி” என்று பொருள் கொள்வதே மிகச் சரியாகத் தெரிந்தது ஆனால், இன்று அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யமும், மனித உடற்கூற்று துறையில் பாண்டித்யமும் உள்ளவர்கட்கே இரத்தக்கட்டி என்ற பொருள் தவறானது. ஒட்டித் தொங்கிக் கொண்டு உறிஞ்சும் ஒன்று என்ற பொருளே பொருத்தமானது என்ற முடிவுக்கு வரமுடிந்தது.

அதே சமயம் 1400 வருடங்களுக்கு முன்னால் அல்ல. சுமார் 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் பெற்றவரும், மருத்துவத்துறை நிபுணருமான ஒருவருக்குக் கூட இந்த உண்மை விளங்கி இருக்க முடியாது. காரணம்: அன்றைய கால கட்டம் தாயின் கர்ப்பப்பையில் குழந்தை எப்படி உருவாகிறது என்பதை அறியாது இருந்த காலமாகும். ஆனால், இன்றோ தாயின் கர்ப்பப்பையில் ஏற்படும் குழந்தை வளர்ச்சி சம்பந்தப்பட்ட நிலைகளை பல ஆய்வுகளின் மூலம் அறிந்திருக்கிறார்கள். டாக்டர் மாரிஸ் புகைல் ஒரு சிறந்த மருத்துவ மேதை, ஆராய்ச்சியாளர், இஸ்லாத்தை தழுவி அரபி அல்லாத மொழிகளில் குர்ஆனை அவர் விளங்கும்போது, இன்றைய விஞ்ஞான கூற்றுகளுக்கு ஒரு சில விஷயங்கள் (உதாரணமாக, “அலக்” என்ற பதத்திற்கு கொள்ளப்பட்ட பொருள்) முரண்படுவது போல் தெரிந்தது. காரணம் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட ஞானமில்லாத வெறும் அரபி மற்றும் மொழி ஞானமுள்ளவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட மொழி பெயர்ப்புகளையே ஆதாரமாகக் கொண்டு அவர் சிந்திக்க வேண்டியிருந்தது. எனவே அந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவையாக ஆகிவிட்டன. அவரின் ஈமானின் உறுதி காரணமாக அல்குர்ஆன் அப்பட்டமான, தெளிவான, சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிலைநாட்டப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக இருக்க முடியாது. காரணம் அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு (கலாம்) என்றால், விஞ்ஞான உண்மைகள் அல்லாஹ்வின் செயல்களாக இருக்கின்றன. எனவே, அல்லாஹ்வின் பேச்சும், செயலும் முரண்பட முடியாது. இங்கு எங்கேயோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதைக் கண்டறிய வேண்டும். அதற்கு அல்குர்ஆன் இறங்கியுள்ள அரபி மொழியை தான் கட்டாயம் கற்றறிய வேண்டும் என்ற ஆர்வத்தோடு அரபி மொழி கற்றார். அரபி மொழியில் ஒவ்வொரு பதத்திற்கும் உள்ள பொருள்களையும் அறிந்தார். எனவே, அவர் ஈடுபட்டிருந்த மருத்துவத்துறையில் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்த பொருள்களை அகற்றி அந்த இடத்திற்குப் பொருத்தமான பொருளைக் கொடுத்து, அல்குர்ஆன் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு விரோதமானது அல்ல என்பதை நிரூபித்துக் காட்டினார்.

ஆக, இந்த இடத்தில் முத்தஷாபிஹாத் வசனங்கள் விளக்கும் விஞ்ஞான உண்மைகளை தெளிவாகப் புரிந்து கொள்ள அரபி இலக்கண, இலக்கியத்தை டாக்டர் மாரிஸ் புகைல் கற்றுக் கொண்டாரேயல்லாமல், முஹ்க்கமாத் வசனங்களையோ, அவை கொண்டு நிலைநாட்டப் பெற்றிருக்கும் மார்க்கத்தையோ, தெளிவாக அறிந்து கொள்ள அவர் அரபி இலக்கண, இலக்கியம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அந்த முத்தஷாபிஹாத் வசனங்களிலுள்ள விஷயங்களை விளங்கிக் கொள்ள அரபி இலக்கண, இலக்கியம் மட்டும் போதாது. அதற்கு மூன்று நிலைகள் இருக்கின்றன. அந்த மூன்று நிலைகளும் நிறைவு செயயப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும் என்பதாகும். அவையாவன:

1. அரபி இலக்கண, இலக்கிய ஞானம்
2. அந்த முத்தஷாபிஹாத் வசனம் எந்தத் துறை சம்பந்தப்பட்டதாக இருக்கின்றதோ, (உதாரணம்: மருத்துவத்துறை வானியல் துறை) அந்தத் துறையில் அன்றைய கால கட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ள உண்மைகள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும்.
3. இதற்கெல்லாம் மேலாக அதற்குரிய காலம் கனிந்திருக்க வேண்டும்.

இதே டாக்டர் மாரிஸ் புகைல் சுமார் 500 வருடங்களுக்கு முன் பிறந்து, வாழ்ந்து இப்போது அவர் செய்த அனைத்து முயற்சிகளை செய்திருந்தாலும், இன்று அவர் கண்டுள்ள உண்மைகளை அன்று கண்டிருக்க முடியாது. காரணம்: அதற்குரிய காலம் கனியவில்லை. கர்ப்பப்பை உண்மைகளை அன்றைய மருத்துவத் துறை அறிஞர்களும் அறிந்திருக்கவில்லை. ஆக அரபி மொழியறிவைக் கொண்டு, பல அர்த்தங்களை முஹ்க்கமாத் எனும் தெளிவான வசனங்களுக்கு கொடுப்பது பெருங்குற்றமாகும். முஹ்க்கமாத் வசனங்களைக் கொண்டு மக்களை தவறான வழிக்கு ஏவுவது ஏமாற்றுவதேயாகும். ஏனெனில் அவற்றின் நேரடியான மொழி பெயர்ப்புகளை படித்த பாமரனும் எளிதில் புரிந்து கொள்ள இயலும்.

விரிவாக விளக்க வேண்டிய கட்டாயம்
இதுவரை தமிழகத்தில் காதியானிகளைத் தவிர வேறு யாரும் இதற்கு மாற்றமாக “முத்தஷாபிஹாத்” வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ்வும், கல்வியில் சிறந்தவர்களும் விளங்குவார்கள் என்ற தவறான கருத்தைச் சொன்னதில்லை. காதியானிகளின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இல்லை என்பதை நாம் அறிவோம். எனவே தமிழகத்தில் பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாத இந்தத் தவறான கருத்தைப் புதிதாக இங்கு அறிமுகப்படுத்தி, அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்ற நல்ல நோக்கோடு, முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ்வும், கல்வியறிவில் சிறந்தவர்களும் விளங்குவார்கள் என்று மிகச் சிலரே சொல்லும் தவறான கருத்தின் விபரீதங்களைப் பற்றி விரிவாக நாம் முன்னர் அலசவில்லை. ஆனால் அல்ஜன்னத் இதழில் “முத்தஷாபிஹாத்” என்ற தலைப்பில் பல தவறான கருத்துக்கள் தமிழகத்திற்குப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே அவற்றை அலசுவதும், அவற்றின் கெடுதிகளை மக்களுக்குத் தெளிவு படுத்துவதும் நம்மீது இப்போது கடமையாக இருக்கிறது.

அந்தக் கட்டுரை எந்த நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டு தொடர் கட்டுரையானது என்பதை, அல்ஜன்னத் ஜூலை “88 பக்கம் 54ல் இடம் பெற்ற 3:7 வசனத்தின் தவறான விளக்கத்தை அடுத்து அல்ஜன்னத் ஆகஸ்ட் “88 பக்கம் 16ல் இடம் பெற்ற விமர்சன விளக்கம் தெளிவுபடுத்துகிறது அது வருமாறு:

விமர்சனம் :
“ஷீராஆல இம்மரானின் 7வது வசனத்தின் அடிப்படையில் பார்த்தால் குர்ஆனின் சில வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வையும், கல்வியில் திறமை மிக்கோரையும் தவிர மற்றவர்கள் அறியமாட்டார்கள் என்று எழுதி இருந்தீர்கள். குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காது என்று சிலர் கூறுவதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது.
எஸ்.எ.அப்துல்காதிர், மேலப்பாளையம்.

விளக்கம் :
“முத்தஷாபிஹாத் என்றால் அல்லாஹ் மட்டுமே அறிந்த ஒன்று என்று சிலர் தவறான கருத்து கொண்டு, மக்களுக்கு விளங்காதவைகளையும் அல்லாஹ் இறக்கி வைத்துள்ளான் என்று தவறாக கூறி, குர்ஆனை குறைபடுத்திட எண்ணுகின்றனர். நல்ல அறிவுடையோர் மட்டுமே விளங்கக் கூடியவைகளும், அனைவரும் விளங்கக் கூடியவைகளும் உண்டு. “முத்தஷாபிஹாத்” பற்றி அடுத்த இதழில் விரிவான கட்டுரை ஒன்று இன்ஷா அல்லாஹ் வருகின்றது. அதில் எல்லா ஐயங்களும் தெளிவுபடுத்தப்படும்”, என்று அல்ஜன்னத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந்த 3:7 வசனம், “முத்தஷாபிஹாத்” வசனங்களின் உண்மைப் பொருளை (இறுதி முடிவை)ப் பற்றியும், “முத்தஷாபிஹாத்” வசனங்களின் முடிவான பொருள் இவைதான் என இறுதியாக முடிவெடுத்து அவற்றைப் பின்பற்றுவது தவறு என்பதையும், உள்ளத்தில் கோணல் (வழிகேடு) உடையவர்களே “முத்தஷாபிஹாத்” வசனங்களில் உறுதியான இறுதி முடிவெடுத்து அவற்றைப் பின்பற்றத் தலைப்படுவர் என்பதையும் தெளிவுபடுத்துகிறதேயல்லாமல், முத்தஷாபிஹாத் வசனங்களிலிருந்து பெறப்படும் பலவிதமான விளக்கங்களை மறுத்துக் கூறவில்லை என்பதையும் புத்திவான்கள் உணர்வார்கள். “முத்தஷாபிஹாத்” வசனங்களிலிருந்து பெறப்படும் பலவிதமான விளக்கங்களுக்கும், அந்த “முத்தஷாபிஹாத்” வசனங்களுக்கு குறிப்பான பொருள் இதுதான் என்று அவற்றை “முஹ்க்கமாத்” வசன நிலைக்குக் கொண்டு வருவதற்கு உள்ள வேறுபாடு இன்னதென்று தெரியாமல், அல்ஜன்னத்தில் “முதஷாபிஹாத்” பற்றி எழுதப்பட்டுள்ளது.

3:7 வசனத்தில் “முதஷாபிஹாத்” வசனங்களுக்கு முஹ்க்கமாத் வசனங்களைப் போல் குறிப்பான பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்பதையே வலியுறுத்தப்படுகிறது. மனிதர்கள் விளங்கிக் கொள்ளும் பல விளக்கங்களை 3:7 வசனம் தடை செய்யவில்லை. ஆனால் “முதஷாபிஹாத்” வசனங்களுக்கு குறிப்பான பொருளை கொடுத்து அவற்றை “முஹ்க்கமாத்” நிலையில் பின்பற்றக் கூடாது என்று மட்டுமே தடைவிதிக்கிறது. குறிப்பாக ஒரே விளக்கத்தை தரும் “முஹ்க்கமாத்” வசனங்களுக்கு எதிரிடையான பல விளக்கங்களைத் தரும் வசனங்களே “முதஷாபிஹாத்” வசனங்கள் மனிதர்கள் பலவிதமாக விளங்கிக் கொள்ள முடியும் என்று குறிப்பிடப்படுகிறதே அல்லாமல் விளங்கிக் கொள்ள முடியாது என்று சொல்லப்படவில்லை. இவற்றைப் புரிந்து கொள்ளாமல் “முதஷாபிஹாத்” வசனங்களை விளங்காது என்று நாம் சொல்வதாக தப்பர்த்தம் செய்து கொண்டு அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அல்குர்ஆனில் பின்பற்றப்பட வேண்டிய எந்த ஒரு அம்சச்தையும் அல்லாஹ்வும், அவனது தூதரும் மக்களுக்கு விளக்காமல் விட்டு வைக்கவில்லை. பின்னால் வருபவர்கள் தங்களின் இலக்கண இலக்கிய அறிவைக் கொண்டும், ஆராய்ச்சி யூகங்களைக் கொண்டும் விளங்கி நடக்கும் நிலையில் மார்க்கம் இல்லை என்பதே உண்மையாகும். ஏன்தான் இந்த மவ்லவிகளில் பலர் இது விஷயத்தில் இப்படி அலட்டிக் கொள்கிறார்களோ தெரியவில்லை. மனிதர்களால் எழுதப்படும் நூல்களைப்போல், அல்குர்ஆனும் ஒரு நூலாக இவர்களிடம் கொடுக்கப்பட்டு இவர்களின் இலக்கண இலக்கிய அறிவைக் கொண்டு விளங்கிச் செயல்படும் நிலையில்அல்லாஹ் இவர்களை அக்கறை இல்லாமல் விட்டு விட்டதாக எண்ணுகிறார்களா? அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறுவதை விட்டு, பின்னால் வந்தவர்களின் மனித அபிப்பிராயங்களையும், யூகங்களையும் இவர்கள் ஏன் பிடித்துத் தெங்குகிறார்கள்?

அல்ஜன்னத் செப். 88 பக்கம் 31ல்
“இந்தக் கருத்து வேறுபாடு இன்றோ, நேற்றோ தோன்றியதல்ல. தப்ஸீர் என்ற பெயரால் பலரும் பலவிதமாக எழுதிவைத்த பின்னர்தான் ஏற்பட்டதா என்றால் அதுவுமில்லை. மாறாக நபிதோழர்களின் காலத்திலேயே இதுபற்றிய அபிப்பிராய பேதங்கள் இருந்து வந்துள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து வஹியுடைய காலத்தில், நபி(ஸல்) அவர்கள் நபி தோழர்களுடன் வாழ்ந்த காலத்தில் இந்த கருத்து வேறுபாடு தோன்றவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. அப்படித் தோன்றியிருந்தால் நபி(ஸல்) அவர்கள் அதனை தீர்க்காமல் விட்டு வைத்திருக்கவும் மாட்டார்கள். (நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு நபி தோழர்களிடம் இந்த 3:7 வசனம் பற்றி கருத்து வேறுபாடுகள் தோன்றினவா? என்பது பற்றி விரிவாக பின்னால் அலசுவோம்) அப்படியானால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இந்த வசனம் எவ்வாறு விளங்கப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டால் சிக்கல் தீர்ந்துவிடும்.

விபரீதங்களைச் சிந்திப்பீர்:
அதற்கு முன்னால் இந்த 3:7 வசனத்தில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு எத்தனை விபரீதங்களை உண்டாக்குகிறது என்பதை முதலில் நாம் விளங்க வேண்டும். 3:7 வசனம் அல்குர்ஆனின் அடிப்படை வசனங்களான “முஹ்க்கமாத்” வசனங்கள் பற்றிக் கூறும் தெளிவான அடிப்படையான “முஹ்க்கமாத்” வசனமாகும் என்பதில் ஐயமில்லை. இந்த வசனத்தில் கருத்து வேறுபாடு என்றால் குர்ஆனின் எல்லா வசனங்களிலும் கருத்து வேறுபாடுகளைத் தோற்றிவிக்க முடியும் என்பதே பொருளாகும். அதாவது மனிதர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க இறக்கி வைக்கப்பட்ட அல்குர்ஆனின் வசனங்களே கருத்து வேறுபாடுகளுக்குக் காரணமாக இவர்களால் ஆக்கப்படுகின்றன. இது எவ்வளவு பெரிய வழிகேடு என்பதை உணர வேண்டும். அந்த வசனங்கள் வருமாறு.

அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் விகற்பங்களைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய நெறிநூலையும் இறக்கி வைத்தான். (2:213)

“(நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ்விஷயத்தில்) தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம்மீது இந்நெறிநூலை இறக்கினோம். இன்னும், ஈமான் கொண்டுள்ள மக்களுக்கு இது நேரான வழியாகவும், ரஹ்மத்தாகவும் (அருளாகவும்) இருக்கிறது. (16:64)

அரபி மொழியறிவைக் கொண்டு பல அர்த்தங்களை “முஹ்க்கமாத்” எனும் தெளிவான வசனங்களுக்குக் கொடுப்பது பெருங்குற்றமாகும். முஹ்க்கமாத் வசனங்களைக் கொண்டு மக்களைத் தவறான வழிக்கு ஏவுவது ஏமாற்றுவதேயாகும். ஏனெனில் அவற்றின் நேரடியான மொழி பெயர்ப்புகளைப் படிக்கும் பாமரனும் அவற்றை எளிதில் புரிந்து கொள்ள இயலும்” என்பதை நடுத்தர அறிவுடையவரும் ஒப்புக் கொள்வர். அப்படிப்பட்ட “முஹ்க்கமாத்” வசனமான 3:7 வசனத்தில் இந்த மவ்லவிகள் தங்கள் கைத்தறிமையைக் காட்டுகின்றனர்.

ஒன்றுக்கு மேல் பொருள் கொள்ள முடிந்த “முதஷாபிஹாத்” வசனங்களிலேயே தவறான பொருள் கொண்டு அதனைப் பின்பற்றுகிறவர்கள் உள்ளத்தில் கோணல் (வழிகேடு) இருப்பவர்கள் என்று 3: 7 வசனமும் குறிப்பிடுகிறது. அது குறித்து நபி(ஸல்) அவர்களும் எச்சரிக்கிறார்கள். (பார்க்க அல்ஜன்னத் ஜூலை 88 பக்கம் 54)

இந்த நிலையில் ஒன்றுக்குமேல் பொருள் கொள்ள முடியாத “முஹ்க்கமாத்” வசனத்தில் தவறான பொருளைத் தேடிப் பின்பற்றுகிறவர்கள் எவ்வளவு பெரிய தவறைச் செய்கிறார்கள் என்பதை சற்றே சிந்திப்பவனும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட 3:7 வசனம் அல்குர்ஆனின் அடிப்படை வசனம் பற்றியும், அல்குர்ஆனைச் செயல்படுத்துவது பற்றியும் தெளிவாகச் சொல்லும் ஒரு அடிப்படை “முஹ்க்கமாத்” வசனமாக இருக்கிறது என்று பார்த்தோம். அதில் ஒன்றுக்கு மேல்பட்ட பொருள் கண்டிப்பாக எடுக்க முடியாது. அல்குர்ஆனைப் பற்றிச் சொல்லும் அடிப்படை வசனமே (3:7) மனிதர்களைத் தடுமாற்ற நிலையில் ஆக்குகிறது என்றால் அதன் பொருள் முழு குர்ஆனே தடுமாற்றத்திற்குரியது என்பதேயாகும். (நவூதுபில்லாஹ்) இது எவ்வளவு பெரிய அறிவீனமான சிந்தனையாகும் என்தை நாம் உணர வேண்டும். 3:7 வசனத்திற்கு ஒன்றுக்கு மேல்பட்ட பொருள் எடுக்க முடியும் என்பது உண்மையானால் ´ஷிஆக்களும், சூஃபிகளும் சொல்லும் “ஒவ்வொரு குர்ஆன் வசனத்திற்கும் வெளிப்படையான (ழாஹிர்) பொருளும், அந்தரங்கமான (பாத்தின்) பொருளும் உண்டு” என்ற தவறான வாதத்தையும் ஏற்க வேண்டிவரும். அல்குர்ஆனில் ஒவ்வொரு வசனத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் எடுக்க முடியும் என்பது உண்மையானால் குர்ஆனைக் கொண்டு செயல்படுவது சாத்தியமாகாது. (திட்டமாகத் தெரியாத ஒன்றைக் கொண்டு செயல்பட முடியாது என்பதுபோல் பலவீனமான ஹதீஸின் நிலையே குர்ஆன் வசனங்களுக்கும் ஏற்பட்டுவிடும்) (நவூதுபில்லாஹ்)

“எதைப் பற்றி உமக்கு (தீர்க்க) ஞானமில்லையோ அதைச் செயல்படுத்த வேண்டாம்” (17:36)
இப்படிப்பட்ட தவறான கருத்தை உடையவர்கள்தான் தக்லீதில் மூழ்கி இருக்கிறார்கள். வேறுசிலர் குர்ஆனை விளங்கிச் செயல்பட முடியாது என்று கூறி குர்ஆனை கத்தம், பாத்தியா ஓதுவதற்கு மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள் ஆக இப்படி 3:7 வசனத்திற்கு ஒன்றுக்குமேல்பட்ட பொருள் கொள்ள முடியும் என்றால் இஸ்லாத்தின் அடிப்படைகள் அனைத்தும் ஆட்டம் கண்டுவிடும். (நவூதுபில்லாஹ்)

எனவே இந்த நச்சுக் கருத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து 3:7 வசனம் “முஹ்க்கமாத்” வசனம் அதில் ஒரு பொருள் மட்டுமே எடுக்க முடியும். ஒன்றுக்கு மேல்பட்ட பொருள் கொள்ளவே முடியாது. அதில் குறிப்பிடப்படும் “முத்ஷாபிஹாத்” வசனங்களில் உண்மைப் பொருளை (முடிவான பொருளை-“முதஷாபிஹாத்தை” முஹ்க்கமாத்திற்கு மாற்றும் இறுதிப் பொருளை) அல்லாஹ் மட்டுமே அறிவான், வேறு யாரும் அறிய முடியாது. “முதஷாபிஹாத்” வசனங்களின் உண்மைப் பொருளை கல்வியில் சிறந்தவர்களும் அறிவார்கள் என்ற தவறான கருத்து “மறைவான விஷயங்களை நபி(ஸல்) அவர்களும் அறிவார்கள்” என்று கூறும் ´ஷிர்க்கான கருத்தைப் போல், ஷிர்க்கை உண்டாக்கும் நச்சுக் கருத்தாகும் என்ற விபரங்களை மிகத் தெளிவான ஆதாரங்களுடன் நாம் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். எனவே அவர்கள் “முதஷாபிஹாத்” என்ற தொடரில் எழுதி வருபவற்றை வரிக்கு வரி ஆய்ந்து அவற்றின் தீய விளைவுகளை விளக்குவோம்.

Previous post:

Next post: