“ஸலஃபி” – “தவ்ஹீத்” – சுயநல ஆலிம்களின் “சொல்” விளையாட்டு?

in 2010 ஜூலை

S. ஹலரத் அலீ, ஜித்தா.

ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் இட்ட அழகிய பெயர் “முஸ்லிம்கள்’. இந்த முஸ்லிம்களின் கூட்டமைப்பிற்கு நபி(ஸல்) அவர்கள் வைத்த பெயர் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’. இதனை தவிர்த்து வேறு எந்தப் பிரிவுப் பெயர்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் அங்கீகரிக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள்-இவர்களுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டு கால கட்டத்தில் கூட இஸ்லாத்தின் பெயரால் தனி ஜமாஅத் எவரும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று தவ்ஹீது பேசும் நவீன ஆலிம்கள் தங்களை “ஸலஃபிகள்’ என்றும் தவ்ஹீத் வாதிகள் என்றும் கூறி பெருமைப்படுகிறார்கள். ஸலஃபி பெயரால், தவ்ஹீது பெயரால் ஏராளமான இயக்கங்கள் செயல்படுகின்றன.

ஸஹாபா பெருமக்கள் காலத்தில் கூட, ஆட்சி, அதிகாரம் சம்பந்தமாக கருத்து வேறுபாடுகள் தோன்றின. இதைக் காரணமாகக் காட்டி தனி ஜமாஅத் எந்த ஸஹாபியும் தோற்றுவிக்கவில்லை. மார்க்கத்தில் பிரிவினை செய்வது கொடிய ஹராம் என்பதை அவர்கள் விளங்கியிருந்தனர்.

ஸலஃபீ – ” தவ்ஹீத் – “முஹம்மதீ – ” அஸ்ஹாபீ
ஸலஃபி பெயர் வைக்க குர்ஆனிலும்-சுன்னாவிலும் ஏதேனும் ஆதாரம் உண்டா? என்ற கேள்விக்கு… ஸஹாபா பெருமக்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். “ஸலஃப்’ எனும் சொல்லிற்கு ஆதாரம் தேவையில்லை. “ஸலஃபி’ என்று பெயர் வைத்து இயக்கம் நடத்தி மக்களை அழைக்க ஆதாரம் உண்டா? இதுவே நமது கேள்வி.

“நாங்கள் ஸஹாபாக்களை பின்பற்றுகிறோம்; ஆகவே எங்களை “ஸலஃபீ’ என்று அறிவித்துக் கொள்கிறோம்’.. இது சரியான பதில்தானா? சிந்திக்க வேண்டும்! ஒரு முஸ்லிம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதால் தன்னை “முஹம்மதீ’ என்று அழைக்க முடியுமா? ஸஹாபாக்களை பின்பற்றுவதால் தன்னை “அஸ்ஹாபீ’ என்று அழைக்க மார்க்கம் அனுமதிக்கிறதா? நிச்சயம் இல்லை. அந்த ஸஹாபாக்களும் தங்களை “முஸ்லிம்கள்’ என்றே அழைத்தனர். ஸஹாபாக்கள் இருந்த அந்த முஸ்லிம்கள் வட்டத்திற்குள் நாமும் நுழைய விரும்பினால் “முஸ்லிம்கள்’ என்பதை தவிர்த்து வேறு என்ன பெயர் வைத்தாலும் அதில் நுழைய முடியாது. ஸஹாபாக்களைப் பார்த்துத்தான் அல்லாஹ் கூறுகிறான்.

“தானும் நேர்வழியில் நடந்து பிறரையும் நேர்வழியில் அழைத்து தன்னை முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுகிறவனை விட அழகிய சொல் சொல்பவர் யார்?’ ( அல்குர்ஆன் 41:33)

அல்லாஹ்வின் சாட்சியாளர் :
அல்லாஹ்வுடைய நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான, பாடங்கள், படிப்பினைகள், அறிவுறுத்தல், எச்சரிக்கை, அத்தாட்சிகள் விவரிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு எந்த ஒரு செய்தியைக் கூறினாலும், அந்த செய்தியின் முக்கியத்துவத்திற்குத் தகுந்தாற்போல், அல்லாஹ் தன் படைப்பின் மீது சத்தியமிட்டுக் கூறுவான். அல்லது தன் படைப்பினங்களை உதாரணமாகக் காட்டி அச்செய்தியை கூறுவான், அல்லது தனது நபிமார்களை சாட்சியாக வைத்து அச்செய்தியை அறிவிப்பான். இது அல்லாஹ்வின் வழி முறை, அவனது சுன்னத்.

இந்த உம்மத்திற்கு “முஸ்லிம்கள்’ என்று பெயரிட்டு விட்டு அத்துடன் அல்லாஹ் விட்டு விடவில்லை. அதற்கு சாட்சியாக நபி(ஸல்) அவர்களை ஆக்குகிறான். ”

அவன் தான் இதற்கு முன்னரும் இந்(நெறிநூ)லிலும் உங்களுக்கு “முஸ்லிம்கள்’ என்று பெயரிட்டான்; (இதற்கு) நம்முடைய தூதரே சாட்சியாக இருக்கிறார்.’ (அல்குர்ஆன் 22:78)

“முஸ்லிம்’ உம்மத்திற்கு நபி(ஸல்) அவர்கள் சாட்சியாளராகிவிட்டார்கள். இந்த முஸ்லிம்களின் “அல்ஜமாஅத்’திற்கு நபி(ஸல்) அவர்கள் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’ என்று பெயரிட்டார்கள். இதற்கு சாட்சியாக அல்லாஹ்வும், நபி தோழர்களும் இருந்தனர்.

ஆட்டிற்கு ஓநாய் காவல்-வேலிக்கு ஓணான் சாட்சி
இன்றைய நவீன(பித்அத்) ஸலஃபீ-தவ்ஹீத் இயக்கத்திற்கு பெயர் வைத்தது யார்? சாட்சியாளர் யார்? உதாரணமாக, தமிழகத்தில் 1986ல் ஒன்றுபட்டிருந்த ஒரே முஸ்லிம் ஜமாஅத்தை உடைத்து “அஹ்லே குர்ஆன் வல் ஹதீஸ் (AQH)  பின்பு “ஜம்மியத்து அஹ்லே குர்ஆன் வல் ஹதீஸ்’ (JAQH) என்று புது ஜமாஅத்தை நிறுவி பெயரிட்டவர் S.கமாலுத்தீன் மதனீ. இந்த உடைப்பு வேலையில் ஊக்கமுடன் சாட்சியாக இருந்தவர் P. ஜெய்னுலாப்தீன் உலவி.

ஃபித்னா “ஜாக்ஹ்’கிற்கு சாட்சியாக இருந்த ஓணான், பின்பு அதையும் உடைத்து மூன்றாவது ஜமாஅத் (TMMK) “தமுமுக’வை கட்டி எழுப்பினார். இதற்கு சாட்சியாக சில எடுபுடி ஓணான்கள் இருந்தனர். அண்ணன் PJ யின் நாட்டாண்மை அங்கு எடுபடாததால், அதையும் உடைத்து பங்கு பிரித்துக் கொண்டு நாலாவது ஜமாஅத் நிறுவினார். இதற்கு “தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்’ என்று பெயரிட்டார். “ததஜா’விற்கு சாட்சியாளர் பாக்கர்.

நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்களை குறைத்தால்தான் முழு லாபத்தையும் அள்ள முடியும் என்று கணக்குப் போட்டு, PJ யால் “பாலியல் பாக்கர்’ என்று பட்டம் கொடுத்து வெளியேற்றப்பட்டார். பட்டம் வாங்கி வெளியே வந்த பாக்கரும் அண்ணன் வழியில் ஐந்தாவது ஜமாஅத்தை ஏற்படுத்தி விட்டார். “அகில இந்திய தவ்ஹீது ஜமாஅத்’ இதற்கு சில சில்லரை ஓணான்கள் சாட்சியாளரானார்கள். இன்ஷா அல்லாஹ் இனி வருங்காலங்களில் இந்த ஐந்து ஜமாஅத்கள் ஐம்பது ஜமாஅத் ஆக மாறும். அதற்கும் “அகில உலக தவ்ஹீத் ஜமாஅத்’ பின்பு “சந்திர கிரக தவ்ஹீது ஜமாஅத்’ “செவ்வாய் கிரக தவ்ஹீது ஜமாஅத்’ என்று கிரகம் பிடித்து அலைவார்கள்.

சட்டையை உரிக்கும் பாம்பு-நாக்கை தொங்க விடும் நாய்.
ஏன் இவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்? அல்லாஹ் இட்ட முஸ்லிம்கள் பெயரில் ஏன் இவர்களால் ஒன்றுபட முடியவில்லை. காரணம் வேறு ஒன்றும் இல்லை, இவர்கள் தங்கள் உடல், மன இச்சைக்கு அடிமைப்பட்டு விட்டனர். இவர்களுக்கு (7:175ல்) அல்லாஹ் ஒருவனை உதாரணமாக கூறுகிறான். வழிகேட்டில் இருந்தவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டிய பின்பும் (பாம்பு சட்டையை உரிப்பது போல்) மீண்டும் வழிகேட்டில் சென்றவன்.

சில வருடங்களுக்கு முன் தவ்ஹீது பேசும் மவ்லவிகள் தக்லீதுகளாக இருந்து, கத்தம், பாத்திஹா, கந்தூரி சடங்கு, மெளலூது மீலாது என்று கூலிக்கு கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டினான். ஆனாலும் இவர்கள் தங்கள் உடல் மனோ இச்சையை ரப்பாக கருதி, பாம்பு சட்டையை உரிப்பது போல் தக்லீது சட்டையை உரித்து விட்டு, தவ்ஹீது சட்டையை போட்டுக் கொண்டு, கரன்ஸி கலக்க்ஷனில் இறங்கி விட்டனர். ஒன்றுபட்ட உம்மத்தை தொடர்ந்து பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம்! காசை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கூறுபோட்டு சோறு தின்னும் கூட்டம்
ஷிர்க், பித்அத், நிறைந்த தக்லீத் வல் ஜமா அத்தில் இவர்கள் இருந்த போதும், மக்களை ஷாபீ, ஹனபீ எனப் பிரித்து சட்டம் சொல்லி சம்பாதித்தனர். இன்று நேர்வழிக்கு வந்த பின்ன ரும் தவ்ஹீதை சொல்லியே தவ்ஹீதை பிரிக்கிறார்கள். அன்று அன்றாடம் காய்ச்சிபோல் காசைப் பார்த்தனர். தற்போது அன்னிய செலவாணியில் கரன்ஸியை கைப்பற்றுகின்றனர். அல்லாஹ் குர்ஆனில் சொல்வது போல் நாயை விரட்டினாலும் நாக்கை தொங்கவிடும்; விரட்டாமல் விட்டாலும் நாக்கை தொங்கவிடும் என்பதற்கு தவ்ஹீது மவ்லவிகளே சிறந்த உதாரணம். ஒட்டுமொத்தத்தில் முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோட்டு சோறு தின்பவர்கள்.

ஸலஃபீ வந்த வரலாறு
நேர்வழி நடந்த நபி தோழர்களை (ஸலஃபு ஸாலீஹீன்) அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். (அல்குர்ஆன் 9:100) ஸலஃபி எனும் சொல் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த இமாம்களின் நூல்களில் ஒன்றிரண்டில் பார்க்க முடிகிறது. உதாரணமாக, இமாம் அவ் அவ்ஸாலீ-ஹிஜ்ரி 157, அபுல் முதாபர் அஸ் ஸமானீ-ஹி.489, இவ்இமாம்கள் தங்கள் நூல்களில் “ஸலஃபி’ எனும் சொல்லை கையாண்டுள்ளனர். 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) “முகல்லிது யுகல்லிதுஸ் ஸலஃப்’ தக்லீதை விட்டு விடுபட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஸை பின்பற்ற முடியாதவர்கள் ஸலஃபுகளை தக்லீது செய்யட்டும் என்று அன்று தக்லீதின் பிடி கடுமையாக இருந்ததால் கூறியது அவரது ஃபத்வா இப்னு தைமிய்யாவில் பதிவாகியுள்ளது. ஆனால் “ஸலஃபி’ எனும் பெயரை வைத்து தனி ஜமாஅத், இயக்கம் நடத்தவில்லை. கடந்த 1300 வருடங்களுக்கு முன்பு வரை “ஸலஃபீ’-“தவ்ஹீத்’ ஜமாஅத் இல்லை.

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு எகிப்து அல்அஸ்கர் பல்கலைக்கழகத்தில் இருந்த ஜமாலுதீன் ஆப்கானின் மாணவர் முஹம்மது அப்து (1849-1905) என்பவரால் “ஸலஃபீ’ இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் காரணம் “இஸ்லாத்தை மக்கள் சரிவர அறிந்து கொள்ளவில்லை. எங்கு பார்த்தாலும் ஷிர்க், பித்அத் ஆக உள்ளது, எனவே ஸலஃபுஸ்ஸாலிஹீன்களின் நடைமுறையை மீண்டும் நிலைநாட்டவே “ஸலஃபு இயக்கம்’ என்று அறிவித்தார். இதே கால கட்டத்தில் தோன்றிய ஷேக் ஹஸனுல் பன்னாவின்’ “இக்வானுல் முஸ்லிமீன்’ இயக்கமும் அரபு நாடுகளில் பரவியது. இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹாபின் “கிதாபுத் தவ்ஹீத்’ தாக்கம் பெற்ற செளதி அரேபியாவின் மன்னர் ஃபைச லின் ஆதரவில் “ஸலஃபி’ செளதியில் நுழைந்தது. மிகப் பெரிய அளவில் பள்ளிகள் தோறும் தீவிர பிரச்சாரம் நடந்தது. இங்கு மன்னரே அமீராக இருந்ததால் ஒரே ஜமாஅத்-ஒரே அமீர் என்பதால் ஸலஃபி-தவ்ஹீத் ஆதாரவாளர்களால் புதிய ஜமாஅத் எதுவும் ஏற்படுத்த முடியவில்லை.

ஷைத்தானுடன் கை கோர்த்த இயக்க ஆலிம்கள்
இலங்கை, தமிழ்நாடு, கேரளாவிலிருந்து இளம் ஆலிம்கள் மதீனா இஸ்லாமிய பல்கலைக் கழகத்திற்குப் படிக்கச் சென்றனர். இவர்கள் சென்ற காலகட்டத்தில் தான் “ஸலஃபியும் தவ்ஹீதும்’ உச்ச கட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தன. அதி தீவிரவாதம் பேசிய அபு ஜுகைமான் தக்பீர் இயக்கமும்-இன்றைய அல்-காய்தாவும் இங்குதான் அ…ஆ … படித்தனர். படிப்பு முடிந்து மதனீ பட்டத்துடன் இந்தியா வந்த இளம் ஆலிம்கள் ஆங்காங்கே பிரச்சாரம் செய்தனர். லோக்கல் மவ்லவி P.J. மற்றும் மவ்லவி அல்லாத அபூ அப்தில்லாஹ் போன்றோர் ஒன்றிணைந்து “அந்நஜாத்’ வாயிலாக விழிப்புணர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர். மக்களும் சத்தியப் பாதையை நோக்கி கூட்டம் கூட்டமாக ஓடிவந்தனர். இந்நிலை சில வருடங்கள் தொடர்ந்திருந்தால். ஷிர்க் பித்அத் ஒழிந்து தமிழ்நாடு, இந்தியாவிற்கும், இலங்கைக்கும் ஏன் உலகளவில் வழிகாட்டியாய் மாறியிருக்கும்.

இது ஷைத்தானுக்குப் பொறுக்குமா? சதி ஆலோசனை வலை பின்னி அதில் தவ்ஹீது மெளலவிகளை தூண்டிவிட்டான். என்ன தூண்டினான்? புதிதாக ஒன்றும் இல்லை. அன்று இப்லீஸ் அல்லாஹ்விடம் வாதம் செய்து, நான் நெருப்பு உயர்ந்தவன்; மண்ணான தாழ்ந்த ஆதத்திற்கு தலை சாய்க்க முடியாது என்று சொல்லி தோற்று வெளியேறினான். அதே வாதத்தை தவ்ஹீது மெளலவிகளிடம் வைத்து வெற்றி பெற்றான்.

“நாமெல்லாம் அரபி படித்துப் பட்டம் பெற்ற ஆலிம்கள்; சாதாரண பாமர மக்களோடு சேர்ந்து தாவா செய்தால் அது எடுபடாது. நம் மதிப்பு போய்விடும். ஆகவே அவாம் அபூ அப்தில்லாஹ்விற்கு கட்டம் கட்டிவிட்டு “தாருந் நத்வா’ வை தொடங்குவோம். மதனீகள் உலவீகள் உள்ளத்தில் ஷைத்தான் பிரிவினை விஷ விதையை தூவிவிட்டான். முதலில் அது “தவ்ஹீது ஜமாஅத்துல் உலமா’ செடியாக வளர்ந்தது. முஸ்லிம்களை “ஆலிம் -அவாம்’ என இதன் மூலம் பிளந்தனர். இதை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கினான்.

ஸலஃபி-தவ்ஹீத் மல்டி நேசனல் கலக்சன் கம்பெனி
ஒன்றுபட்ட உம்மத்தின் மீது இவர்கள் அடித்த இரண்டாவது அடி… “இணை வைப்பவர்கள் பின்னால் நின்று தொழாதீர்கள்’ உடனடியாக தனிப்பள்ளிக்கு கலக்சன் கரப்சன் செய்து பள்ளி கட்டினர். திருச்சி, சிங்காரத்தோப்பில் கட்டிய JAQH பள்ளி இன்னும் CRACK பள்ளியாகவே உள்ளது. தற்போது ஸலஃபி-தவ்ஹீதுகளின் கையில் ஏராளமான நிறுவனங்கள் தாராளமான பணப்புழக்கம். ஒட்டு மொத்த ஜமாஅத்தை உடைத்து துண்டுபோடுவதற்கு எகிப்து-ஸலஃபி, செளதி தவ்ஹீத் இறக்குமதி சொற்களை கையாண்டனர். “தவ்ஹீது’ எனும் தனிச்சொல் குர்ஆன் -ஹதீதில் இல்லை. வேர்ச் சொற்களே உள்ளது. தற்போது தவ்ஹீது பேசும் மதனிகளும், உலவிகளும் பங்காளிச் சண்டை காரணமாக தனித்தனி “தவ்ஹீது மல்டிநேஷனல் கம்பெனி’ திறந்து மார்கெட்டிங் செய்து வருகின்றனர். “அல்லாஹ்வின் பெயரால்….’ அறுவடை நடந்து கொண்டு வருகிறது. திர்ஹம், ரியால், டாலர் என்று அன்னிய செலவாணியை அள்ளுகின்றனர். குவியும் கோடிகளைக் கொண்டு சமுதாய சேவை செய்வதாக விளம்பரம் செய்து வருகின்றனர்.

அரசு சாராயம் மூலம் சமுதாயத்தை சீரழித்து வரும் லாபத்தில் ஒத்த ரூபா அரசி கொடுப்பது போல், தவ்ஹீது மெளலவிகள் சமுதாய பிரிவினை எனும் கொடிய ஹராமை செய்து சமுதாய சேவை செய்கிறார்கள். “சொல் சுல்த்தான்-செயல் ஷைத்தான்’ ஆம்! “ஸலஃபி -தவ்ஹீத்’ என்ற இரண்டு சொற்களைக் கொண்டு ஷைத்தானிய வழியில் பிரிவினை செய்கிறார்கள். சுயநல ஆலிம்களின் சூது விளையாட்டிற்கு அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.

அன்புள்ள முஸ்லிம் சகோதரர்களே! சகோதரிகளே!
இஸ்லாம் மிக எளிமையான மார்க்கம், எழுதப் படிக்கத் தெரியாத மனிதரை, நம்மைப் போன்ற எளியவர்களுக்காக தூதராக ஆக்கிய மார்க்கம். கொள்கை குழப்பம் இல்லாத ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. தவ்ஹீது புரோகித ஆலிம்களின் சூழ்ச்சிக்கு பலியாகி நாம் பிரிந்து விடக்கூடாது. பிரிவினைக்கு இஸ்லாத்தில் எள் முனையளவும் இடம் இல்லை. இன்றைய இயக்க ஆலிம்களும் ஷைத்தானுடன் கூட்டுச் சேர்ந்து உம்மத்தைப் பிரிக்கிறார்கள்.

பெரும்பாலான சகோதரர்களுக்கு “தவ்ஹீத்’ என்ற வார்த்தையை கேட்டதும் ஒருவித மயக்கமும், ஈர்ப்பும் ஏற்படுகிறது. ஒருவன் “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வர?லுஹூ’ என்ற கலிமா மொழிந்தவுடன் அவன் உடனடி தவ்ஹீதாக ஆகி விடுகின்றான். ஏனென்றால் முஸ்லிம் என்றாலே தவ்ஹீது தான். எனவே தனி தவ்ஹீது லேபிள் ஓட்ட வேண்டியது இல்லை. தனி ஜமாஅத் தேவையில்லை, “சில முஸ்லிம்கள் ஷிர்க்-பித்அத் செய்கிறார்களே? நான் எப்படி பிரித்துக் காட்டுவது? ஆகவே தனி தவ்ஹீத் ஜமாஅத்’. இது ஷைத்தானின் உபதேசம்!

அன்புச் சகோதரர்களே! சகோதரிகளே! நீங்கள் இப்படி பிரித்துக் காட்டினால் தான் அல்லாஹ்வுக்குத் தெரியும் என்ற நிலையில் அல்லாஹ் இல்லை; அவன் பேரறிவாளன், சத்தியமும், அசத்தியமும் விளங்காத கொள்கை குழப்ப முஸ்லிம்கள் தான் 73 கூட்டமாக பிரிவார்கள். ஒரு கூட்டம் மட்டுமே சுவனம் செல்லும். அந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் மட்டுமே தேர்ந்தெடுப்பான். தவ்ஹீது ஆலிம்கள் அல்ல. சுவனம் செல்லும் கூட்டத்தில் நுழைய உங்கள் செயல்கள் முஸ்லிம்கள் என்ற பெயரில் மட்டுமே இருக்க வேண்டும். “முஸ்லிம்களாக’ வாழ்ந்து “முஸ்லிம்களாக’ மரணித்தால் தான் சுவனம். (2:208, 3:102) குர்ஆனில் “தவ்ஹீதாக’ வாழ்ந்து “தவ்ஹீதாக’ மரணிக்கச் சொல்லவில்லை. கவனம்!

ஸஹாபாக்களை பின்பற்றுதல் -“ஸலஃபிகள்’
இமாம் குர்துபீ(ரஹ்) அவர்கள் “அத்தெளபா அத்தியாயம் வசனம் 100க்கு விரிவுரையில், “நற்செயல்கள் மூலம் நன்மையின் பக்கம் முந்திக் கொண்டு சென்றவர்களான ஸஹாபாக்களின் சொல் செயல்களில் எவற்றை பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான். ஸஹாபாக்களிடம் ஏற்பட்ட தடம் புரள்தல்களிலும், சறுக்கல்களிலும் அவர்களைப் பின்பற்றுவது அல்ல. ஏனெனில் அவர்கள் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களாக இருக்கவில்லை (மஃஸும்களாக இல்லை)’ – தப்ஸீர் குர்துபீ பாகம் 8

அல்லாஹ்வின் நேரடி கண்காணிப்பில் வஹியுடன் தொடர்பு கொண்டவர்கள்
முன்பின் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள்
நாளை மறுமையில் “­ஷபாஅத்’ எனும் பரிந்துரைக்கு சொந்தக்காரர்களான நபி (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றுவோம்! இன்ஷா அல்லாஹ் வெற்றி யடைவோம்!

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான். (குர்ஆன் 2:208)

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறை உணர்வு (தக்வா) கொள்ள வேண்டிய முறைப்படி இறை உணர்வு கொள்ளுங்கள். மேலும் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள். இன்னும் நீங்கள் அனைவரும் ஒரே ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிறை (குர்ஆனை) வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (ஒருபோதும்) நீங்கள் பிரிந்து விடாதீர்கள். (குர்ஆன் 3:102, 103)

Previous post:

Next post: