விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2010 ஜூலை,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : என் அகவை 70. என் பள்ளிப் பருவத்திலிருந்தே பல இஸ்லாமியத் தோழர்களுடன் ஆத்மார்த்தமாகப் பழகி இருக்கிறேன். அரசுப் பணியிலிருந்த காலத்திலும், பணியின் நிமித்தம் நெல்லை பேட்டை தொடங்கி சென்னை இராயப்பேட்டை (அமீர் மகால்) வரை எனக்குத் தோழர்கள் இருந்தனர், இருக்கின்றனர். மனித நேயத்திற்கும் மத நல்லிணக்கத்துக்கும் அந்த இஸ்லாமிய நண்பர்கள் முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றனர். அவர்களுடன் நான் மசூதித் தொழுகைக்குச் சென்றுள்ளேன். என் இஸ்லாமியத் தோழர்கள் பலர் எங்களுடன் ஆலயங்களுக்கு வந்து அங்குள்ள சிற்ப ஓவியங்களை, நயங்களை வியந்து பாராட்டியுள்ளனர். ஆனால் எந்த நிலையிலும் மதக் கோட்பாட்டை விட்டுக் கொடுக்கவும் இல்லை. அதைப் பிறர் மேல் திணிக்கவும் இல்லை. ஆகவே மத நல்லிணக்கமும், மனித நேயமும் கடைபிடிக்கும் தமிழ் இஸ்லாமியத் தோழர்களை “அறிவு சார்ந்த சமூகம் அல்ல’ என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது. (மனம் திறந்த மடல், ஜூன் 10) ஏற்புடையதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் நீங்கள் இந்த பெரியார்தாசனை பெரிய சமூக மாற்றத்துக்கு அவதரித்தவராக உருவகப்படுத்துவதும், புனர் நிர்மாணம் செய்ய அவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றுவோம் என்று புகழ்ந்து தள்ளி இருப்பது வேதனை தருவதாக உள்ளது. பெ.தாசனிடம் உள்ளது எல்லாம், எல்லா திராவிட இயக்கத்தவர்களிடமும் காணப்படும் பேச்சுத்திறமை மட்டுமே. சைவக் குடும்பத்தில் பிறந்து பிழைப்புக்காக திராவிட இயக்கத்தைப் பற்றிக் கொண்டு பிறகு பெளத்தனாக வேட மணிந்து இப்போது அப்துல்லாஹ் பாய் ஆக மாறியுள்ளார். “தொழுகையை விடத் தூக்கமே பெரிது’ என்று பகடி பேசியவர் அவர். ஒரு சராசரி மனிதரின் பொறுப்புக் கூட இல்லாதவர். அவருக்கு அளவுக்கும் அதிக மதிப்புத் தருவது சரியா? துலாக்கோல் சோம. நடராசன், எம்.கே.நகர், கரூர் 6. 9245256730, 9367141663

விளக்கம் : சகோதரர் சோம. நடராசன் அவர்களே எல்லாம் வல்ல ஏகனாகிய இறைவன், பெரியார் தாசனை பெரும் தேடலுக்குப் பின்னர் தவறான வழியான பெரியார்தாசனிலிருந்து நேரான வழியான ஏக இறைவனின் தாசன் என்னும் அப்துல்லாஹ்வாக கடைத்தேற்றியது போல், உங்களுக்கும் அந்த நேர்வழியை அதே இறைவன் அருள பிரார்த்திக்கிறேன். எந்த ஒரு மனிதனும் சத்தியத்தை-நேர்வழியைத் தேடி அதற்காக கடின உழைப்பு (ஜிஹாத்) செய்வானேயானால் இறைவன் அந்த நேர்வழியை நிச்சயம் காட்டுவதாக வாக்களிக்கிறான். (அல்குர்ஆன் 29:69) ஆனால் பெயரளவிலுள்ள முஸ்லிம்களில் சிலரும், மற்றவர்களில் பலரும் மற்றவர்களை எதிர்த்துப் போரிடுவதே “ஜிஹாத்’ என தப்பர்த்தம் கொண்டுள்ளனர்; பிரசாரமும் செய்கின்றனர்.

சகோதரர் அப்துல்லாஹ் சைவக் குடும்பத்தில் பிறந்து பிழைப்புக்காக திராவிட  இயக்கத்தைப் பற்றிக்கொண்டு, பிறகு பெளத்தனாக வேட மணிந்து இப்போது அப்துல்லாஹ் பாய் ஆக மாறியுள்ளார் என உங்களது உள்ளக் கிடக்கை வெளிப்படுத்தியுள்ளீர்கள். சத்தியத்தை -நேர்வழியை ஒருவன் அறியாதவரை அவன் அதற்குக் கடும் எதிரியாக இருப்பான். இது நியதி.

இந்தியாவில் உமருடைய ஆட்சி!
உமருடைய ஆட்சி முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துங்கள் என்று மக்களால் மஹாத்மா எனப் போற்றப்படும் காந்திஜி சிறப்பித்துச் சொன்ன இறைவனின் இறுதித் தூதருக்குப்பின் இரண்டாவதாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உமர் இஸ்லாத்தைத் தழுவுதற்கு முன்னர் எப்படிப் பட்ட வரலாற்றை உடையவராக இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அனைத்து வித மாபாதகங்களும் குடிகொண்டவராக இருந்தார். அவற்றின் உச்சக்கட்டமாக இறைவனின் இறுதித் தூதரையே தீர்த்துக் கட்டும் ஆவேசத்துடன் சபதமிட்டு வாளை உருவிக்கொண்டு சிங்கம் போல் கர்ஜித்து வந்தவர். அவரது அந்த அறியாமையை எது போக்கியது? ஏகனாகிய இறைவனின் இறுதி வழிகாட்டி நெறி நூலின் சில வசனங்களைப் படித்துப் பார்த்தவுடன் சத்தியத்தை-நேர் வழியை அறிந்து முஸ்லிமானார்.

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித் தொழிக்கும் தீவிர வெறியோடு மக்காவிலிருந்து மதீனாவுக்குப் படையெடுத்து வந்து போரிட்ட உஹத் யுத்த களத்தில், முஸ்லிம்களை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டு, இறைத் தூதர் கொல்லப் பட்டுவிட்டார் என்ற தவறான செய்தி பரவக் காரணமாக இருந்த காலித் இப்னு வலீதை இஸ்லாத்தில் நுழையச் செய்தது அல்குர்ஆனின் சில வசனங்களே. ஆக இரண்டாவது கலீஃபா உமர் (ரழி), இறைவனின் போர் வாள் என்ற சிறப்புப் பெயர் பெற்ற காலித் இப்னு வலீத் ஆகிய இருவரைக் கொண்டும் இறைவன் இஸ்லாத்திற்காக வாங்கிய வேலையை அளவிடவே முடியாது.

இப்போது ஆத்திகக் குடும்பத்தில் பிறந்து பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பெரியார்தாசன் நாத்திகரானார். ஆயினும் பெரியார் சொன்னது போல் “இறைவனோ, மறுமையோ இல்லை என்றால் பிரச்சனையே இல்லை; அதற்கு மாறாக இறைவனும், மறுமையும் இருந்து விட்டால் உனது நிலை என்ன ஆகும்’ என்று ஒரு முஸ்லிம் நண்பனின் கேள்வி பெரியார்தாசனை சிந்திக்க வைத்துள்ளது. அதன் விளைவு “நான் நாத்திகன் இல்லை” என பல ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு இதழில் தொடர் கட்டுரை எழுதியுள்ளார். அம்பேத்கர் வழியில் பெளத்தராகியுள்ளார்.

முஸ்லிம் அல்லாதாருக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாதா?
அதுவரை குர்ஆனுடன் தொடர்பு அவருக்கு ஏற்படவில்லை. முஸ்லிம் மூட முல்லாக்கள் தான், முஸ்லிம்களும் குர்ஆனை ஒளூ-அங்கசுத்தி இல்லாமல் தொடக்கூடாது; முஸ்லிம் அல்லாதாருக்கு ஒருபோதும் குர்ஆனை கொடுக்கக் கூடாது என்று சுயநலத்துடன் குருட்டுச் சட்டம் இயற்றி இருக்கிறார்களே. பெரும்பான்மை முஸ்லிம்களும் அந்தக் குருட்டுச் சட்டத்தை அப்படியே கண்மூடி ஏற்று நடக்கிறார்களே. நீங்கள் ஏற்றுப் போற்றி இருக்கிறீர்களே அந்த முஸ்லிம் நண்பர்கள் உங்களுக்கு குர்ஆனை கொடுக்க முன்வந்திருக்க மாட்டார்கள். நீங்களும் அதை வாங்கி படிக்க வேண்டும் என்று ஆர்வப்பட்டிருக்க மாட்டீர்கள்.

ஆனால் பெரியார்தாசன் ஆர்வத்துடன் முயன்று எப்படியோ ஒரு குர்ஆன் பிரதியை 10 ஆண்டுகளுக்கு முன்னரே பெற்று, அதை உள்ளத்திலிருந்த நாத்திகச் சிந்தனை மற்றும் சிந்தனைகளையும் ஒதுக்கி உள்ளத்தைக் காலியாக வைத்துக் கொண்டு அல்குர்ஆனைத் தொடர்ந்து படித்து ஆராய்ந்து வந்திருக்கிறார். உண்மையை அறியும் ஆவலுடன் பெரிதும் பாடுபட்டிருக்கிறார். அதன் விளைவு ஏக இறைவன் தனது நேர் வழியைக் காட்டி இருக்கிறான். மற்றபடி இன்றைய முஸ்லிம்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம் ஆகவில்லை.

உள்ளம் காலியாக இருக்கும் நிலையில் குர்ஆனை ஆராய வேண்டும்:
நீங்களும் உங்களின் உள்ளத்தை இதர சிந்தனைகள் நிறைந்ததாக வைத்துக் கொண்டு குர்ஆனைப் படித்து ஆராயாமல், உள்ளத்தைக் காலியாக வைத்துக் கொண்டு நடுநிலையோடு குர்ஆனை படித்து ஆராய்ந்தால் உங்களுக்கும் சத்தியம்-நேர்வழி கிடைக்கலாம். ஏற்கனவே உள்ளத்தில் நிறைந்து வழியும் நாத்திக சிந்தனையோ, பல கடவுள்கள் கொள்கையோ அப்படியே இருக்கும் நிலையில் குர்ஆனை நீங்கள் மீண்டும் மீண்டும் படித்தாலும், சாராயத்தால் நிறைந்து வழியும் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றினாலும் அது வெளியே வழியுமே அல்லாது உள்ளே போகாதது போல் குர்ஆனின் அழகிய கருத்து உள்ளத்தில் புகாது. முறையாக நடுநிலையுடன் முயற்சி செய்து பாருங்கள்.

கூடா நட்பு பெருங்கேடே!
கூடா நட்பின் காரணமாக ஒருவன் குடிகாரனாக, சூதாடியாக, விபச்சாரனாக ஆகிவிட்டான். அப்படிப்பட்டவன் ஒருவருடைய நல்லுரையைக் கேட்டு அவற்றைவிட்டு முற்றிலும் நீங்கி ஒழுக்க சீலனாகத் திருந்திவிட்டான். இப்போது அவனைப் பார்த்து நீ முன்பு குடிகாரனாக, சூதாடியாக, விபச்சாரனாக இருந்தவன் தானே என பழித்துப் பேசுவது மனித நாகரீகமா? இல்லையே!

மனிதனை ஷைத்தான் என்ற தீய சக்தி எப்பொழுதும் வழிகேட்டில் இழுத்துச் செல்லவே முயற்சிக்கும். அறியாத நிலையில் அவனது வலையில் சிக்குவோர் கணக்கற்றோர். ஷைத்தானின் வலையிலிருந்து விடுபட்டு வருவோரை வாழ்த்தி வர வேற்க வேண்டுமேயல்லாமல், அவர்களின் முன்னைய தீய செயல்களைச் சுட்டிக் காட்டி பழிப்பது மனிதப் பண்பாக ஒருபோதும் இருக்காது. நேர்வழியிலிருந்து வழி பிறழ்ந்தவனை விமர்சிக்கலாம்; வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கு வந்தவனை ஒருபோதும் விமர்சிக்கக் கூடாது. அது ஷைத்தானின் செயலாகும்.

சிலரைப் போல் தர்கா(சமாதி) மூட நம்பிக்கையில் சிக்கி பேராசிரியர் இஸ்லாத்தைத் தழுவவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இறைவனின் இறுதி வழிகாட்டல்-வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனை மீண்டும் மீண்டும் படித்து விளங்கிய பின்னர் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறார். உலகியல் ஆதாயங்கள் எதையும் குறிப்பாக பெயர் புகழை (இது கொண்டுதான் ஷைத்தான் பெரும்பாலோரை வழிகேட்டில் இட்டுச் செல்கிறான்) குறிக்கோளாகக் கொள்ளாமல் தூய்மையான எண்ணத்துடன் பேராசிரியர் அப்துல்லாஹ்வின் பிரசார பணி இருக்குமானால் தமிழகத்தில் அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதை யாராலும் மறுக்க முடியுமா? உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பிரிவினைவாத இயக்கங்களில் எது ஒன்றிலும் சிக்காமலும், முஸ்லிம் மதகுருமார்களின் ஷைத்தானிய வலையில் சிக்காமலும் இறைவன் அல்குர்ஆன் 2:186, 50:16, 56:85 இறைவாக்குகளில் கட்டளையிட்டிருப்பது போல் தனக்கும் இறைவனுக்கும் இடையில் எப்படிப்பட்ட இடைத்தரகர்களான புரோகிதர்களையும் புகுத்தாமல் 2:208, 3:102,103 இறைக் கட்டளைகள்படி பேராசிரியர் அப்துல்லாஹ் செயல்பட்டால் நிச்சயம் அவரது முயற்சி தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம். அல்லாஹ் நாடினால்!

அடுத்து, முஸ்லிம் சமூகம் அறிவு சார்ந்த சமூகம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளதை நீங்கள் ஏற்கவில்லை. அதற்குக் காரணமாக உங்களோடு பழகிய, பழகிவரும் முஸ்லிம் சகோதரர்கள் மத நல்லிணக்க மும், மனித நேயமும் கடைபிடிப்பவர்கள், மதக் கோட்பாட்டை விட்டுக் கொடுக்கவும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

இணைவைப்பு பலவிதம்!
உண்மைதான்! கடந்த 1450 வருடங்களாக முஸ்லிம் சமுதாயத்தில் சிலை வழிபாடு வந்து புகவில்லை. அதைத்தான் மதக்கோட்பாட்டை விட்டுக் கொடுக்கவும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதே சமயம் நாடு முழுவதும் தர்க்காக்கள் என்ற பெயரால் இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளை நீங்கள் பார்க்கிறீர்கள். அஜ்மீர் தர்கா, நிஜாமுத்தீன் தர்கா, நாகூர் தர்கா, திருச்சி தர்கா, முத்துப்பேட்டை தர்கா இவை அல்லாமல் ஆயிரக்கணக்கான குட்டி, குட்டி தர்காக்களை (சமாதிகளை) பாதைகளுக்கு குறுக்கே நீங்கள் பார்க்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? சிலை வழிபாடும், தர்கா(சமாதி) வழிபாடும் ஏறக்குறைய ஒன்றுதான்.

அங்கு சிலைக்குரியவர்களை வழிபாடு செய்கிறார்கள். இங்கு சமாதிக்குரியவர்களை வழிபாடு செய்கிறார்கள். அங்கு மனிதக் கற்பனை சிலைகளும் உண்டு; இங்கும் மனிதக் கற்பனைச் சமாதிகளும் உண்டு. அங்கும் ஏக இறைவனுக்கு இணை வைக்கும் குற்றம் அரங்கேறுகிறது. இங்கும் ஏக இறைவனுக்கு இணை வைக்கும் அதே கொடிய குற்றம்தான் அரங்கேறுகிறது. சிலை வழிபாட்டினரின் இறுதி முடிவு எதுவோ, அதேதான் சமாதி (தர்கா) வழிபாட்டினரின் இறுதி முடிவுமாகும். அணுவளவும் வித்தியாசமில்லை.

சமாதி வழிபாட்டை சரிகண்டு ஆதரிக்கும் முஸ்லிம் மத குருமார்களுக்கு சிலைக்குரியவர்களின் வழிபாடும், சமாதிக்குரியவர்களின் வழிபாடும் இரண்டும் ஒன்றுதான் என்பது நன்கு தெரியும். இதை இறைவன் இறுதியாகக் கொடுத்த வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனில் 2:75,78,79,109,146, 6:20 ஆகிய பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான். அனைத்து மதங்களிலுமுள்ள புரோகிதர்களின் நிலை இதுதான். முஸ்லிம் மதகுருமார்கள் சிலை வழிபாட்டை முஸ்லிம் சமுதாயத்தில் நுழைக்க முற்படாததற்குக் காரணம் ஏற்கனவே கொட்டை போட்ட சிலை வழிபாட்டை ஆதரிக்கும் மத குருமார்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்ற அச்சமே.

இதே அடிப்படையில் தான் முஸ்லிம் மத குருமார்களில் ஒரு சாரார் சமாதி வழிபாட்டை எதிர்த்தாலும் இறைவனுக்கு இணை வைக்கும் “அத்வைதம்'(தரீக்கா) என்ற ஷைகு வழிபாடு கொள்கையை ஆதரிக்கிறார்கள். பிரிதொரு சாரார் சமாதி வழிபாடு, அத்வைதம் என்ற ஷைகு வழிபாடு இரண்டையும் எதிர்த்தாலும், இறைவனுக்கு இணை வைக்கும் செயலான கலஃபிகள் என்ற இமாம்களைக் கண்மூடிப் பின்பற்றும் மத்ஹபுகளை ஆதரிக்கிறார்கள். பிரிதொரு சாரார் சமாதி வழிபாடு, ஷைகு வழிபாடு, இமாம் வழிபாடு போன்ற மூன்றை எதிர்த்தாலும், ஸலஃபி என்ற இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செய லான முன் சென்ற நல்லடியார்கள் வழிபாட்டை ஆதரிக்கிறார்கள். பிரிதொரு சாரார் சமாதி வழிபாடு, ஷைகு வழிபாடு, இமாம் வழிபாடு, முன் சென்ற நல்லடியார்கள் வழிபாடு(ஸலஃபி) போன்ற நான்கையும் எதிர்த்தாலும், அவர்கள் அனைவரையும் விட குர்ஆனை விளங்குவதில் நாங்கள்தான் ஆற்றல்மிக்கவர்கள் என ஆணவத்துடன் கூறிக் கொண்டு, அல்குர்ஆனின் நேரடிக் கருத்துக்களை மறைத்துத் தங்கள் சுயநலக் கருத்துக்களைப் புகுத்துகிறார்கள்.

அல்லாஹ்வும் கல்விமான்களும் ஒன்றா?
அந்த அடிப்படையில் 3:7ல் வணக்க வழிபாடு சம்பந்தமில்லாத விஞ்ஞான நுட்பங்களையும், மற்றும் சில விஷயங்களையும் கூறும் பலவிதமான கருத்துக்களைத் தரும் “முத்தஷாபிஹாத்’ வசனங்களை குறிப்பான ஒரே பொருளைத் தரும் “முஹ்க்கமாத்’ வசனங்களாக்கும் ஆற்றல் ஏகன் இறைவனுக்கு மட்டுமே உண்டு என்று கூறுவதை, அந்த ஆற்றல் கல்வியாளர்களுக்கும் உண்டு என்று கூறி இறைவனும், அறிஞர்களும் ஒன்றுதான் என்று, இறைவனை விளங்கும் மனிதனாகத் தாழ்த்தியும், அறிஞர்களை இறைவன் அளவில் உயர்த்தியும் கொடிய இறைவனுக்கு இணை வைக்கும் செயலை செய்கிறார்கள். மேலும் 2:102ல் இறைவன் “பாபிலில் இரண்டு மலக்குகள்’ என்று நேரடியாகக் கூறி இருப்பதை “பாபிலில் இரண்டு ஷைத்தான்கள்’ என்று விளக்கமளித்து 49:16ல் அல்லாஹ் கண்டித்துக் கூறுவது போல் இறைவனுக்கே பாடம் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இப்படி அனைத்து முஸ்லிம் மதப்புரோகிதர்களும் ஒருவரை ஒருவர் பொறாமை கொண்டு, மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி உலக ஆதாயம் அடைய வேண்டும் என்ற குறுகிய நோக்கில் பிரிவினைவாதிகளாகச் செயல்படுகிறார்களே அல்லாமல் இறையளித்த வாழ்க்கை நெறிநூல் அல்குர் ஆனில் இருப்பதை உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் ஒரேயயாரு மதகுருவையும் நீங்கள் பார்க்க முடியாது. அப்படி இருந்தால் அவர்கள் தங்களை மதகுரு என்றும் சொல்ல மாட்டார்கள். மதத்தை வைத்து வயிறு வளர்க்கவும் மாட்டார்கள். பொது மக்களை இழிவாகக் கருதவும் மாட்டார்கள்.

போட்டி, பொறாமையினாலேயே பிரிவினை!
உலகியல் ஆதிக்க மனப்பான்மை ஏற்படும் போது போட்டா போட்டி பொறாமை ஏற்படும். நீயா, நானா என்ற ஆணவம் ஏற்படும். அகந்தை பேசுவார்கள். இதுவே புரோகிதர்களின் நிலை. இவர்கள் பொறாமை காரணமாகவே சமுதாயத்தைப் பிளவு படுத்துவார்கள் என்பதை ஏகன் இறைவன் 2:90, 213, 3:19, 42:14, 45:17 போன்ற பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.

மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட இந்த மதகுருமார்களை நம்பக் கூடாது, அவர்களை வழிகாட்டிகளாக, இடைத்தரகர்களாகக் கொள்ளக் கூடாது என்பதை 7:3, 33:36,66,67,68, 2:186, 50:16, 56:85 ஆகிய பல இடங்களில் அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரிக்கிறான். தங்களுக்குத் தெரிந்த மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட அல்குர்ஆனை நேரடியாகப் பார்த்து படித்து விளங்கி அதன்படி செயல்பட வேண்டும் என்றே இறைவன் கட்டளையிடுகிறான்.

இப்போது சொல்லுங்கள். இந்த அடிப்படையில் முஸ்லிம் மத குருமார்கள் என்று தம்பட்டம் அடிக்கும் புரோகிதர்களைப் புறக்கணித்து, இறைவன் அருள்புரிந்து அளித்துள்ள வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்கி அதன்படி செயல்படுகிறவர்கள் சமுதாயத்தில் எத்தனை பேர் தேறுவார்கள். அப்படியானால் இந்தச் சமுதாயம் “அறிவு சார்ந்த சமூகம் அல்ல’ என்று கூறுவது ஏற்புடையதா? இல்லையா? நீங்களே சிந்தியுங்கள். சொல்லுங்கள்!

Previous post:

Next post: