பொய்யா மொழிகள்

in 1996 ஆகஸ்ட்

எம்.பீ.ரபீக்அஹ்மத்.

    நபிமொழிகள் மற்ற மனிதர்களின் மொழிகளை விட முற்றிலும் மாறபட்ட, வேறுபட்ட மொழிகளாக இருக்கின்றன. நபிமொழிகள் எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டாலும், அது தனி மொழியாக, தனிமை வாய்ந்த தனிப்பட்ட மொழியாக பளிச்சிடுகின்றது.

    உலகில் எத்தனையோ அறிஞர்கள். மாமேதைகள், ஞானிகள், தத்துவமேதைகள் எல்லாம் பிறந்திருக்கின்றார்கள். அவர்களுடைய பொன்மொழிகள் பலவற்றை இந்த உலகம் பதிவு செய்தும் வைத்திருக்கின்றது. அந்த பொன் மொழிகளுக்கும், நபி இருக்கின்றன. அடிப்படையிலேயே பல வேறுபாடுகள் இருக்கின்றன. நபிமொழிகள் அனைத்தும் எந்த இடத்தில், யாருடைய முன்னிலையில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த வகையில் பேசபபட்ட என்ற முழு விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகில் வேறு எந்த மனிதருக்கும் இது போன்ற பதிவுச் சான்றிதழ் தரப்படவில்லை. இது போன்ற ஆதாரப்பூர்வமான செய்திகள் வேறு எந்த மனிதரிடமிருந்தும் பெறப்படவில்லை. இது முதல் வேறுபாடு.

    மற்ற மனிதர்களின் பொன்மொழிகளில் முரண்பாடுகளைக் காண முடிகின்றது. ஒரு தத்துவ மேதை தன் இளம் வயதில் கூறிய கருத்துகளிலிருந்து தன் முதுமை காலத்தில் மாறுபடுகின்றார். சூழ்நிலைகளுக்கேற்ப அவன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கேற்ப அவன் கொண்ட கருத்துகளும் மாறுபடுகின்றன. ஒவ்வொரு தத்துவமேதையும் முரண்பாடுகளின் மொத்த உருவமாக தென்படுகின்றான். நபிமொழிகள் அப்படியல்ல. நபித்துவம் கிடைத்த அந்த 23 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் நபிமொழிகள் பதியப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றிலும் கூட முரண்பாடுகளை காண முடியவில்லை. ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே விதமான சிந்தனை ஒரே விதமான கண்ணோட்டம் அத்தனை ஹதீஸ்களிலும் இழையோடுவதை நம்மால் காண முடிகின்றது.

   மற்ற மனிதர்களின் பொன்மொழிகளில் திட்டவட்டமான, ஒரு உறுதியான முடிவுக்கு வந்து சொல்லப்பட்ட கருத்துகளாக அவைகள் தென்பட வில்லை. தங்களுடைய கருத்துகளில் அவர்களுக்கே நம்பிக்கையிருப்பதாக அவைகள் காட்டவில்லை. யூகங்களின் அடிப்படையில், கற்பனைகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ள கருத்துகளாகத்தான் அவை தென்படுகின்றன. ஆனால் நபிமொழிகள் அவ்வாறில்லை. ஒவ்வொரு நபிமொழியும் திட்டவட்டமாக, தீர்க்தரிசனமான உறுதியான மனப்பான்மையுடன் முழு நம்பிக்கையோடு முழு திருப்தியோடு சொல்லப்படுகின்றன. இது சொல்பவரின் மனோதிடத்தையும் தான் சொல்லும் கருத்தின் மீது சொல்பவருக்கு இருக்கின்ற முழு நம்பிக்கையையும் காட்டுகின்றது.

    அறிவுஜீவிகள் என்றழைக்கப்பட்ட மற்றவர்கள் பேசியவைகள், எழுதியவகைள் அனைத்தும் பொன் மொழிகளானதில்லை. அதில் ஒரு சிலதான்  பொன்மொழிகளாகியுள்ளன. ஆனால் நபி(ஸல்) எதை எதை பேசினார்களோ, அத்தனையும் பொன்னெழுத்துகளாகி விட்டன. இது வேறு எந்த மனிதருக்கும் கிடைக்காத தனிப்பெரும் சிறப்பாகும். நபிகளாரின் ஒவ்வொரு அசைவும் ஏன் அவர்களுடைய நபித்துவத்தின் முழு வாழ்வும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவும் ஒரு தனிச் சிறப்பாகும்.

    மற்ற மனிதர்களின் பொன்மொழிகள் எல்லா காலத்திற்கும், எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதாக அமையவில்லை. நபிமொழிகள் மட்டும் பொருந்துகின்றன.

    மற்றவர்களின் பொன்மொழிகள் அவர்களின் சொந்த அனுபவங்களை வைத்து  சொல்லப்படுகின்றன. அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் தான் மற்றவர்களுக்கு ஏற்படும் என்ற உத்தரவாதத்தை அந்த பொன்மொழிகள் தரவில்லை. நபிமொழிகள் அப்படியல்ல, மொத்த மனித இனத்தின் ஒட்டு மொத்த அனுபவங்களை பிழிந்து தரப்பட்ட  தீர்வுகளாக இருக்கின்றன.

    எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகளும் இருப்பதில்லை. மனிதனுக்கு மனிதன் வாழ்க்கையின் திசைகளும் பிரச்சனைகளின் அம்சங்களும் மாறுகின்றன. மனிதர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.

    நபி(ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் எந்த வகையில் தன் கருத்துகளை எடுத்து வைத்தார்கள் என்பதை எகிப்தில் தோன்றியதை இஸ்லாமிய பேரறிஞர் ‘முஹம்மத் அல் கஸ்ஸாலி’ அவர்கள் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் என்ற தன்னுடைய நூலில் கீழ்வருமாறு கூறுகின்றார்கள். தன்னிடம் வரும் மக்களது புரிந்துக் கொள்ளும் திறன், அறிவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இஸ்லாத்தின் சில அம்சங்களையே ஒவ்வொரு குலத்தாரிடம் நபி(ஸல்) அவர்கள் எடுத்துச் சொல்வார்கள். வருபவர்களின் தகுதி, திறமை இவற்றை மறந்து விட்டு உபதேசிப்பது நபி(ஸல்) அவர்களின் வழக்கத்தில் இல்லாதது என்று அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

    நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய 23 ஆண்டு நபித்துவ காலத்தில் மிக வெகமாக எதிர்நோக்கி வந்த பல தரப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள். இதுவரை யாரும் சந்தித்திருக்காத அளவிற்கு அத்தனை பிரச்சனைகளை அவர்கள் சந்தித்தார்கள். ஆனாலும் எல்லா மனிதர்களும் சந்திக்கும் அத்தனை  பிரச்சனைகளையும் நிச்சயமாக ஒரு தனி மனிதரால் சந்தித்திருக்க முடியாது. ஆனால் அவர்கள் மூலமாக மனித குலம் அனைத்திற்கும் எத்தனை பிரச்சனைகள் தோன்றுமோ, அத்தனை பிரச்சனைகளுக்குரிய தீர்வை அவர்கள் மூலம் வெளிப்படுத்தியாக வேண்டும். இவர்களுக்குப பின்னால் இன்னொரு மனிதனைக் கொண்டு மிச்சம் மீதியுள்ள  பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல வைக்க முடியாது. காரணம் இவர்கள்தான் இறுதித் தூதர்; இறுதி நபி. இவர்களுக்குப் பின்னால் ஒரு நபி வரப்போவதில்லை. ஏனெனில் இவருடன் அந்த நபித்துவ சங்கிலித் தொடர் முடிவடைகின்றது. இதற்காக அல்லாஹ் ஒரு ஏற்பாடு செய்கின்றான். அவர்களைப் பின்பற்றக் கூடிய ஒரு மிகப் பெரிய தோழர்களின் கூட்டம் எப்படிப்பட்டது என்றால், அவர்களுடைய நிழலாக பின் தொடர்கின்றார்கள். அவர்கள் நின்றால் நிற்கின்றார்கள். குனிந்தால் குனிகின்றார்கள். அமர்ந்தால் அமருகின்றார்கள். இப்படிப்பட்ட உண்மைத் தோழர்கள் உலகில் வேறு எந்த மனிதருக்கும் கிடைத்ததில்லை. அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றக் கூடிய இப்படிப்பட்ட ஆதரவாளர்கள் போதாது என்று பெண் குலத்திற்கு வழிகாட்ட ஒரு துணைவியார் போதாது என்று 11 துணைவியார்களை அல்லாஹ் தந்தருளுகின்றான். நபிகளார் வெளி உலகில் மட்டுமல்ல, அந்தரங்கத்தில் அந்தப்புறத்திலும் எப்படி வாழ்ந்தார்கள் என்ற விவரங்களும் மக்களுக்கு வழிகாட்டுதல்கள் ஆகின்றன.

    இந்த நபித்தோழர்களும் தோழியர்களும் எப்படிப்பட்டவர்கள் என்றால் தங்கள் வாழ்வின் சிறிய சிறிய பிரச்சனைகளை எல்லாம் நபி(ஸல்) முன் சமர்ப்பித்து தீர்வு காணுகின்றார்கள். இரவும் பகலும் நேர் காணுதல்களும், நேரடி பேட்டிகளும், நேரடி கேள்வி பதில்களும் பெறப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. இது போன்ற ஒரு பெரும் வாய்ப்பு உலகில் இதுவரை எந்த மனிதருக்கும் கிடைக்கவில்லை. ஒரு சேர பலதரப்பட்ட இவ்வளவு பெரிய ஜனத்திரளின் அனுபவங்களை, சிக்கல்களை, பிரச்சனைகளை பகிர்ந்துக் கொள்ளும் வாய்ப்பு உலகில் வேறு எந்த தலைவருக்கும் கிடைக்கவில்லை. அதனால்தான்  மனித வாழ்வில் அத்தனை அம்சங்களைப் பற்றியும் அவர்களால் பேச முடிந்தது. ஆம் அவர்களால் மட்டும்  தான் பேச முடிந்தது. அவர்கள் பேசாமல் விட்ட விஷயம் இல்லை. அவர்கள் தொட்டுப் பார்க்காத துறையுமில்லை. அதனால்தான் சொல்கின்றேன். இவர்களைப் போல் இப்படி பேசியது யாருமில்லை.

வாழ்க்கையின் அத்தனை பிரச்சனைகளுக்கும் இவர்களிடம் மட்டும்தான் சரியான தெளிவான தீர்க்கமான தீர்வு இருக்கின்றது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கைக்கான முழு வழிகாட்டுதல் இருக்கின்றது. இப்படிப்பட்ட முழுமைத்துவம், பரிபூரணத்துவம், சம்பபூரணத்துவம் வேறு யாருடைய பொன் மொழிகளிலும் காணமுடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக மனித குலத்திற்கே நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது. மற்றவர்களின் உபதேசங்கள் ஊருக்குத்தானே தவிர உனக்கில்லையடி பாப்பா என்று சொல்லாமல் சொல்லுகின்றன. சொல்லும் செயலும ஒருங்கே பெற்ற ஓர் ஒப்பற்ற மாமனிதராக இவர்கள் மட்டும்தான் திகழ்கின்றார்கள்.

    ஒவ்வொரு சொல்லும் நிஜமாக இருக்கின்றது.  நிதர்சனமாக இருக்கின்றது. அதில் கற்பனைகளுக்கோ, யூகங்களுக்கோ இடமேயில்லை.

    மற்றவர்களின் பொன் மொழிகள் எதிர்காலத்தை மனதில் வைத்து மொழியப்பட்டதாக தெரியவில்லை. ஆனால் நபிமொழிகள் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, இந்த வாழ்விற்கு மட்டுமல்ல, இனி வரப்போகும் மறு உலக வாழ்வையும் மனதில் கொண்டு, கவனத்தில் கொண்டு மொழியப்பட்டுள்ளவை .இதுவும் ஒரு தனிச் சிறப்பாகும்.

    மற்ற மனிதர்கள் பல முரண்பட்ட நூல்களிலிருந்தும் பல முரண்பட்ட அறிஞர்களிலிருந்தும் பல முரண்பட்ட கருத்துகளை சேகரித்து தந்திருக்கின்றார்கள். ஆனால் நபிமொழிகள் அப்படியல்ல. முரண்பாடே இல்லாத, காலத்தால் அழிக்கவே, மாற்றவோ முடியாத எல்லாக் காலங்களுக்கும் ஒத்துவரக்கூடிய ஒரே சம்பூரண இறைவேதமான திருமறையிலிருந்து பெறப்பட்ட அறிவை வைத்து எல்லாம் அறிந்த அந்த வல்ல இறையோரின் வழிகாட்டுதலில் இருந்து பெறப்பட்ட, சொல்லப்பட்ட, நிலையான, நேர்மயான, நடைமுறைகளுக்கு சாத்தியமான, நீடித்த பலன்களை தரக்கூடிய நேர்த்தியான தீர்வுகளாக இருக்கின்றன.

    மற்ற பொன்மொழிகளெல்லாம் மனிதனின் குறுகிய அறிவால் பிறந்தவகைள். ஆனால் நபிமொழிகளோ எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல இறைவனால் எது அருளப்பட்டதோ எது சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டதோ அவற்றை மட்டும் சொல்லப்பட்டவைகள், ஏனெனில் நபி(ஸல்) எதையும் தானாகச் சொல்லவில்லை. இறைவனின் விருப்பங்கள் எதுவோ அதை மட்டும் தான் சொன்னார்கள். நபிமொழிகள் என்பது நபி(ஸல்) மூலமாக சொல்லப்பட்ட இறைவனின் அருள்மொழிகள்; மற்றவை எல்லாம் வெறும் மனித மொழிகள்.

    திருமறை என்பது இறைமொழி. நபிமொழி என்பது அதன் விளக்கம்; விரிவுரை; செயலாக்கம்.

    இறைமொழி இறைவனைக் காட்டுகின்றன. நபிமொழி நபியை காட்டுகின்றன.

    ஆம், நபிமொழி ஒவ்வொன்றும் நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் மட்டும் அல்ல. அவர்களே இறுதித் தூதர்; அவர்களுக்குப் பின் ஒரு தூதர் தேவையில்லை என்ற உண்மையை பறை சாட்டுகின்றன.

    நபிமொழிகளை ஒவ்வொரு காலமும் உரசிப் பாரத்து அலசிப் பார்த்து அவை அனைத்தும்பத்தரை மாற்று தங்கங்கள் என்று நற்சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மற்ற மொழிகள் காலமாற்றங்கால் பொலிவிழந்து, அர்த்தமற்ற மொழிகளாக, வெறும் அலங்கார மொழிகளாக – சிங்கார நடைகளாக, அங்காடி பொருள்களாக – அலமாரிகளை அலங்கரிக்கும் அலங்காரப் பொருட்களாக காட்சியளிக்கின்றன – நடைமுறை வாழ்க்கைக்கும் அவற்றிற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.

    மாற்றாரின் மொழிகள் தூசி படிந்த கறையான்கள் அரிக்கும் நூல்கள் – நபிமொழிகள்  நடமாடும் உயிர்மொழிகள்.

    உலகில் தோன்றிய அத்தனை அறிஞர்கள், தீர்க்கதரிசிகளின் அறிவுரைகளை நம்மால் தெரிந்துக் கொள்வது என்பது மிகவும் கடினமாகும். அதற்காக நாம் முழு வாழ்க்கையும் அர்ப்பணித்தாக வேண்டும். அப்படி முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து அந்த அறிவுரைகளை ஒன்று சேர்த்தாலும் அவைகளில் அறிவின் தேட்டத்தை முழுமையாக நிறைவேற்றி வைக்கும் ஆற்றல் இல்லை.

    பெரிய மனிதர்ளின் தத்துவங்கள் சாதாரண மனிதர்களுக்குப் புரிவதில்லை. ஆனால் நபி மொழிகள், பெரிய பெரிய தத்துவ மேதைகள் கண்டு ஆச்சரியப்படும் அளவிற்கு அன்பு மொழிகளாக இருந்தாலும், அதே நேரத்தில் படிக்காத பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் அளிவிற்கு அவைகள் எளிமையாகவும், தெளிவாகவும், இனிமையாகவும், கருத்தாழமிக்கவைகளாவும் இருக்கின்றன. அதனால் எந்தவித கஷ்டமும் இல்லாமல், எந்த முயற்சியும் இல்லாமல், முழுமையான அறிவைப் பெற நபிமொழி தொகுப்புக்களை படித்தல் எளிதாகும். ஒருவன் உலக நூல்களை எல்லாம் படித்திருக்கின்றான். ஆனால் நபிமொழிகளை இன்னும் படிக்கவில்லை என்றால் அவன் அறிவுலகில் எதையுமே படிக்கவில்லை என்று அர்த்தமாகும். நான் செரல்வது உண்மையா இல்லையா என்பதை நபிமொழிகளைப் படித்தால் நீங்களே தெரிந்துக் கொள்வீர்கள்.

    நாடு, மொழி, கலாச்சாரம், ஜாதி, மதம் அத்தனையும் கடந்து நபிமொழிகள் கலங்கரை விளக்குகளாய் தனியாய் நின்று பிரகாசிக்கின்றன. எல்லோருக்கும் வழி காட்டுகின்றன. அறிவொளியை தேடும் அன்பர்கள் நிச்சயம் ஒரு முறையாவது நபி(ஸல்) அவர்களின் அற்புத மொழிகளை அவசியம் படிக்க வேண்டும். படித்துப் பார்க்கட்டும். படித்தால் தங்கள் உள்ளத்துக்குள்ளே, ஒரு ஞான சூரியன் உதயமாவதை காண்பார்கள். அதன் வெளிச்ச வெள்ளத்தில் தங்கள் ஆத்மா முழுவதும் பிரகாசிப்பதை உணருவார்கள். இது உண்மை. இது சத்தியம்.

    “அல்லாஹ்வுக்கும். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படுவதில் முழு வெற்றி இருக்கிறது.”

(அல்குர்ஆன் 33:71)

    “நபி(ஸல்) அவர்களை அனைத்துலகிற்கும் அருட்கொடையாக நியமித்து அனுப்பினான்”

(அல்குர்ஆன் 21:107)

    “(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிக்க கடின மானவன்.”

Previous post:

Next post: