விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 1996 ஆகஸ்ட்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

  விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்: ஆகஸ்ட் (1996) வெளிவந்த அந்நஜாத் இதழில் ஐயமும் தெளிவும் என்ற பகுதியில் அறவே ஆதாரம் கிடையாது என்று எழுதியிருந்தீர்கள். ஆனால், அதற்கு தக்க ஆதாரம் ஸஹீஹுல் புகாரி பாகம்-1, மூலம் தமிழாக்கம், வெளியீடு நாள் 17.7.94 என்ற கிரந்தகத்தில் 48 மைல்களுக்கு அப்பால் அதாவது சுமார் 72 கி.மீ.க்கு மேல் கஸ்ர், மற்றும் 19 நாட்களுக்குள்  தங்கியிருந்தால் கஸ்ர் தொழுகை கடமை என்று எழுதப்பட்டுள்ளது. கஸ்ர் என்ற பகுதியில் பக்கம் 818, 821-ஐ ஆராய்ந்து பார்த்து அடுத்த இதழில் எங்களுக்கு தக்க ஆதாரத்துடன் பதிலளிக்க வேண்டுகிறோம்.

S. கசாலி & நண்பர்கள், தூத்துக்குடி

விளக்கம்: நீங்கள் குறிப்பிட்டுள்ள நூலில் குறிப்பிட்ட பக்கங்களிலுள்ள வாசகங்களைக் கவனமாகப் பார்க்க வேண்டுகிறோம். பெரும்பாலும் கஸ்ர் தொழுகை பற்றிய பதிவுகள் அனைத்திலும் பொதுவாக இரண்டு விஷயங்களை நீங்கள் அவதானிக்கலாம். ஒன்று அந்தப்பதிவுகள் அனைத்தும் நபித்தோழர்களின் செயல்பாடுகளைக் குறிக்கும்; அதாவது அஃதர்கள்; மற்றபடி நபி(ஸல்) அவர்களின் சொல் அல்லது செயல் அல்லது அங்கீகாரம் இந்த மூன்றில் ஏதாவதொன்றுக்குள் வரும் சமிக்கை கூட அந்தப் பதிவுகளில் இருக்காது. அடுத்தது இரண்டாவது விஷயம் அந்தப் பதிவுகளில் பொதுவாக அவர்கள் பிரயாணம் செய்த இடத்தையோ அல்லது பிரயாணம் செய்த தூரத்தையோ சொல்லப்பட்டிருக்கிறதேயல்லாமல் குறிப்பாக இத்தனை மைல்கள் தூரத்திற்கு மேல்தான் கஸ்ர் செய்ய வேண்டும் என்று கூறும் நேரடியான ஒரு பதிவையும் பார்க்க முடியவில்லை. இத்தனை மைல்கள் தூரத்திற்கும் மேல் பிரயாணம் செய்தால் தான் கஸ்ர் செய்யவேண்டும் என்ற நேரடியான ஹதீஸ் இருந்தால் அன்றி தூரத்தை நிர்ணயித்துச் சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று கூறுவதற்கு  கீழ்க்கண்ட ஹதீஸ்கள் துணைபுரிகின்றன.

    “தொழுகையை அல்லாஹ் உங்களுடைய நபியின் நாவால், பிரயாணம் செய்யாத போது 4 ரகாஅத்துகள் என்றும், பிரயாணத்தில் 2 ரகாஅத்கள் என்றும்  அச்சமுள்ள நேரத்தில் 1 ராஅத் என்றும் விதியாக்கி இருக்கிறான்”.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி),

நூல்கள் : முஸ்லிம், அபூதாவூது, நஸயீ.

உள்ளூர் தொழுகை இரண்டாக இருந்து பின்னரே நான்காக ஆகி இருக்கிறது. அப்படியானால் தொலைதூரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றால் அந்தச் சமயத்தில் நபி(ஸல்) அவர்களால் தெளிவுப் படுத்தப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் பிரயாணத்தில் ஐங்காலத் தொழுகையும் இரண்டிரண்டு ரகாஅத்துகள் என்ற நிலைக்கு மாறாக பிரயாணத்திலும் உள்ளூரைப் போலவே மஃரிபு 3 ரகாஅத்துகள் என்று மாற்றப்பட்டுள்ளதற்கு தெளிவான ஆதாரங்கள் கிடைப்பது போல், பிரயாண தூரமும் தெளிவுபட்ட ஆதாரம் வேண்டும்.

    இந்த நிலையில் பிரயாணம் என்றாலே ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் காணப்படுவது போல் உள்ளூர் எல்லை தாண்டிவிட்டாலே (நகரங்களில் அவரவர்கள் வசிக்கும் பகுதியையே இது குறிக்கும்; உதாரணமாக திருச்சி நகர் அல்ல- அதிலுள்ள ஒரு பகுதி பாலக்கரை போன்றதாகும்) கஸ்ர் செய்ய மார்க்கத்தில் அனுமதி உண்டு என்றே விளங்க முடிகிறது.

    நபித் தோழர்களின் நடைமுறை தெளிவாக இருக்கும் போது அதை எடுத்து நடப்பதுதானே சரி; அதற்கு மாறாக எப்படிச் செயல்படுவது என்று சிலர் வினவலாம். இங்கு நாம் விளங்க வேண்டியது, ஒரு விஷயத்தில் நபி(ஸல்) அவர்களின் நடைமுறை தெளிவாக இருக்கும் போது அதற்கு முரணாக நபித்தோழர்களின் செயல்பாட்டை நாம் ஏற்று நடக்க மார்க்கம் அனுமதிக்கவில்லை.

    நபித்தோழர்களும் மனிதர்களே; தவறே நிகழாத தெய்வ அம்சம் பெற்றவர்கள் அல்லர். அவர்கள் தவறே செய்யாதவர்கள் என்று ஒரு முஸ்லிம் நம்பினால், அவர் “தவறே செய்யாத தனித்தன்மை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம்; அதில் நபிமார்களும் சொந்தம் கொண்டாட முடியாது” என்ற அல்லாஹ்வின் தனித்தன்மையில் நபித்தோழர்களை இணை வைத்துவிட்டார் என்றே பொருள்படும். இது ஷிர்க்காகிவிடும்.

    தனி மனித வழிபாட்டை உயர்த்தி அத்தவைதத்திற்கு (மனிதன் இறைவனுடன் கலக்க முடியும் என்ற தவறான கொள்கை) வழிவகுத்த சூஃபிகளைப் பின்பற்றி செயல்படும் போலி ஆலிம்களே இதைச் சரிகாண முடியும். மக்களை திசைதிருப்ப முடியும்.

    உண்மையில் நபிமார்களையே தனது கண்காணிப்பில் வைத்து “வஹி” மூலமாக  தவறுகளிலிருந்து திருத்தி நேர்வழியை மக்களுக்கு அந்த நபிமார்கள் போதிக்கும் உயர்ந்த நிலையை அல்லாஹ்வே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

    கஸ்ர் தொழுகை பற்றிய தடுமாற்றம் நபித்தோழர்கள் காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது என்பதற்கு அதே புகாரீயில் காணப்படும் கீழ்க்காணும் ஹதீஸே ஆதாரமாகும்.

    “உஸ்மான்(ரழி) மினாவில் எங்களுக்கு நான்கு ரகாஅத்துகள் தொழ வைத்தார்கள். இது பற்றி இப்னு மஸ்வூது(ரழி) அவர்களிடம் கூறப்பட்டபோது, “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”  என்று கூறினார்கள். பின்னர் “நான் நபி(ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரகாஅத்கள் தொழுதிருக்கிறேன். அபூபக்கர்(ரழி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரகாஅத்கள் தொழுதிருக்கிறேன். உமர்(ரழி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரகாஅத்கள் தொழுதிருக்கிறேன். இந்த நான்கு ரகாஅத்களுக்குப் பகரமாக ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ரகாஅத்கள் எனக்குப் போதும்” என்று கூறினார்கள்.

    அறிவிப்பர்: அப்துர்ரஹ்மான் பின் யஸீ(ரழி),

நூல்: புகரீ. ஹதீஸ 1084 பக்கம் 820

    இதிலிருந்தே நபி(ஸல்) அவர்களின் நடை முறையை நாம் ஆதாரமாகக்  கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறதா? இல்லையா?

    இந்த இடத்தில் நிதானமாக ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபி(ஸல்) அவர்களின் விடைபெறும் ஹஜ் ஹஜ்ஜுக்கு வரும்படி முஸ்லிம்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் அனைவரும் அரஃபாவிலும், முஜ்தலிபாவிலும், மினாவிலும் கூடினார்கள். மக்காவில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவருமே ஹஜ் கடமையை நிறைவேற்றவும் நபி(ஸல்) அவர்களின் உபதேசத்தைக் கேட்கவும் வந்திருப்பர் என்பதிலும் சந்தேகமிருக்க முடியாது. மக்காவுக்கும். மினாவுக்குமிடையே வெறும் ஐந்தே மைல்களுக்குள்தான். இந்த நிலையில் மக்காவாசிகளும் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து 2 ரகாஅத்கள்தான் தொழுதுள்ளனர். அதற்கு மாற்றமாக அவர்கள் பூரணமாக நான்கு தொழ வேண்டுமென்றால் ஸலாம் கொடுத்தவுடன் எழுந்து மீதி 2 ரகாஅத்களை பூர்த்தி செய்து கொள்ளும்படி நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகும் அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) ஆகிய இரு கலீஃபாக்களின்  ஆட்சிகாலத்திலும் அதாவது சுமார் 15 வருடங்களாக மக்காவாசிகளும் ஐந்து மைல்களுக்குள் மட்டுமே தூரமுள்ள மினாவில் கஸ்ராக 2 ரகாஅத்களே தொழுதுள்ளனர். அதன் பின்னரே இந்த கஸ்ர் பற்றிய தூர சர்ச்சை கிளம்பியிருக்கிறது என்பதற்கு இந்த ஹதீஸை விட வேறு ஆதாரம் வேண்டுமா?

    மேலும் புகாரீயில் (பக்கம் 821) காணப்படும் “நபி(ஸல்) அவர்கள் ஒரு பகல் ஒரு இரவைப் பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்” என்பதை கஸ்ர் தொழுகைக்கு ஆதாரமாக எடுக்க வழியில்லை. காரணம் முதலில் இதற்கு அறிவிப்பாளர் வரிசை இல்லை. நபி(ஸல்) அவர்களிடம் கேட்டவரிலிருந்து புகாரீ இமாம் அதைப்பதிவு செய்தவரை உள்ள அறிவிப்புத் தொடர் இல்லை; அதுமட்டுமில்லை. கஸ்ர் தொழுகை சம்பந்தமாக இது சொல்லப்பட்டதா? அல்லது “ஒரு பெண் மணமுடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் பிரயாணம் செய்யக் கூடாது” என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளையில் இடம் பெற்ற பகுதி தனியாக எடுத்துப் போடப்பட்டுள்ளதா என்பதற்கு தெளிவான விபரம் இல்லை. அப்படியே அதை நேரடியாகப் பொருள் கொண்டு செயல்படுத்துவதாக இருந்தாலும் இன்று 500 மைல்கள் பிராயாணத்திற்குக் கூட ‘கஸ்ர்’ செய்ய முடியாது என்றும் சிலர் வாதிடலாம்.

    எனவே இந்த நிலைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து பார்க்கும் போது அனஸ்(ரழி) அவர்கள் அறிவித்து முஸ்லிம், அபூதாவூது, அஹ்மத், பைஹகீ ஆகிய நூல்களில் காணப்படும் சென்ற இதழில் நாம் எடுத்தெழுதியுள்ள ஹதீஸே நபி(ஸல்) அவர்களின் செயல்பாட்டை நேரடியாக நமக்கு அறிவிப்பதால் அதை ஏற்றுச் செயல்படுத்துவதே முறையாகும். காரணம் இப்படிக் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது 4:59 இறைக் கட்டளை முஸ்லிம்களை அல்லாஹ்வின் கட்டளை – குர்ஆன், நபி(ஸல்)  அவர்களின்  சொல், செயல். அங்கீகாரம் – ஹதீஸ் இவற்றின் பால் திரும்பும்படியே வலியுறுத்துகிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிவோமாக.

————————————

விமர்சனம்:  அந்நஜாத் ஜூலை 1996 ‘பிரசார பணி’ மாதம் ஓர் ஊர் தப்லீக் சகோதரர்களைக் காப்பியடிப்பது போல தோன்றுகின்றது என்று ஒரு சகோதரர் கூறுகிறார். அவருக்கு என்ன விளக்கம் தருவது?    கீழக்கரை முஹம்மத் மதார், அபுதாபி.

விளக்கம்: தப்லீக் சகோதரர்கள் செய்தாலும் அல்லது யார் செய்தாலும் அது குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு ஒத்திருந்தால் அதை எடுத்து நடப்பதும். அதற்கு மாற்றமாக இருந்தால் அதை விட்டுவிடுவதுமே முஸ்லிம்களின் கடமையாகும். தப்லீக் பணியில் நாம்  ஏற்று நடக்க வேண்டிய எத்தனையோ அம்சங்கள் இருக்கவே செய்கின்றன.

    அவர்கள் இன்று “தஃலீம்” என்ற பெயரால் வாசித்து வரும் கற்பனைகள், கட்டுக்கதைகள் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்கள் இவை சேர்ந்து 90%ம். குர்ஆன் வசனங்களும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் சேர்ந்து 10%-ம் உள்ள அமல்களின் சிறப்பு என்ற நூலை தூக்கி மூலையில் வைத்து விட்டு 100% குர்ஆன், ஹதீஸ் மொழி பெயர்ப்புகளை முஸ்லிம்களிடையே தஃலீமாக நடைமுறைப்படுத்த முன் வந்தால், நாமெல்லாம் தாராளமாக அவர்கள் செய்யும் அந்தப் பணியில் இணைந்து செயல்படலாம். மற்றபடி ஒவ்வொரு முஸ்லிமும் தன் சக்திக்கு உட்பட்டு அல்லாஹ்வின் பாதையில் சென்று பிரசாரபணி செய்வது குர்ஆன், ஹதீஸ் போதனையிலுள்ளதாகும். தப்லீக் ஜமாஅத்தினர் செய்யும் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட காரியங்களை கண்டிப்பதால். அவர்கள் செய்யும் நல்ல காரியங்களையும் மறுக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.

    இப்படிப்பட்ட தவறான எண்ணம் இன்று முஸ்லிம்களிடையே புரையோடிப் போயிருக்கிறது. நெருக்கமாயிருப்பவர்களின் தவறுகளைத் தவறாக நினைப்பதில்லை; கண்டிப்பதில்லை; இவர்களுக்கு தூரமாக இருப்பவர்களின் நல்ல செயல்களையும் சரி காணாமல்  விமர்சிப்பது. இது குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு  முரணாகும். 9:71 இறைவாக்கை உற்று நோக்குகிறவர்கள் தங்களின் இந்த அணுகுமுறை தவறு என்பதை உணர முடியும்.

——————————————

விமர்சனம்: தொழுபவரின் குறுக்கே செல்வது தடுக்கப்பட்டுள்ளது. ஹதீஸ் எண் 501 பாடம் 94 பக்கம் 403. ஆனால் புகாரீ 1வது பாகத்தில் அன்னை ஆயிஷா(ரழி), நபி(ஸல்) தொழும் போது குறுக்கே படுத்துள்ளதாக அதாவது நபி(ஸல்) அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே படுத்திருந்ததாக அவரது வாக்குமூலமே உள்ளதே? பார்க்க பாடம் 22 ஹதீஸ் எண் 382, 383, 384. இந்த முரண்பாட்டை எப்படி நீக்குவது? (ஜனாஸா போல் படுத்து இருந்ததாக வேறு உள்ளது).

முஹம்மது மொன்னுத்தீன், திண்டுக்கல்.

விளக்கம்: மேற்படி ஹதீஸ்களில் முரண்பாடு ஏதுமில்லை. தொழுகையாளிகளுக்கு குறுக்கே செல்லக் கூடாது. அதே சமயம் தடுப்பு – “சுத்ரா” இருக்கும் நிலையில் அதற்கப்பால் ஒருவர் குறுக்கே செல்லவும் செய்யலாம். தடுப்பு – “சுத்ரா” ஒரு மனிதராகவும் இருக்கலாம். உதாரணமாக பள்ளியில் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் நின்று ஒருவர் தொழுவதையும். இந்த நிலையில் உட்கார்ந்திருக்கும் அந்த மனிதருக்கு முன்னால் வேறொருவரர் குறுக்கே நடந்து செல்வதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். உட்கார்ந்திருக்கும் மனிதர் படுத்திருந்தாலும் அதே நிலைதான். அதாவது தொழுகையாளிக்கு முன்னால் ஒரு ஆணோ  அல்லது ஒரு பெண்ணோ உட்கார்ந்திந்தாலும். படுத்திருந்தாலும் (சுத்ரா போல்) அச்செயல் தவறானதல்ல. ஆனால் தொழுகையாளிக்கு குறுக்காக நடந்து செல்வதுதான் ஹதீஸில் தடுக்கப்பட்டுள்ளது.

Previous post:

Next post: