ஆதிகால வேதங்களும் இறுதி நூல் அல்குர்ஆனும்!

in 2010 ஆகஸ்ட்

MTM  முஜீபுதீன், இலங்கை

ஜூலை தொடர் :10
அவர் (ஈசா) இறப்பதற்கு முன்னர் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் வேதக்காரர்களில் யாரும் இருக்கமாட்டார்கள். மறுமை நாளில் அவர்களுக்கு எதிரான சாட்சியாக அவர் இருப்பார். (அல்குர்ஆன் :4:159)

ஈசா(அலை) அவர்களுக்கும் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கும் இடைக் காலம் சுமார் 600 வருடங்களாகும். ஒவ்வொரு இறைத்தூதர்களும் ஒரே இறைவனையே வண ங்கி வழிபட வேண்டும் என்றே வலியுறுத்தினர். ஷைத்தானின் தூண்டுதலினால் சில சமுதாயத்தினர் சில இறைத்தூதர்களை இறைவனாகவே உயர்த்தினர். அவ்வழிகேட்டிலிருந்து மக்களை நேர்வழிப்படுத்த தொடர்ந்து இறைத்தூதர்களையும், நெறிநூல்களையும் இறைவன் அனுப்பினான். முன்னைய இறைத் தூதர்களை மக்கள் பிழையாக கடவுள்களாக கொண்டுள்ளதை சுட்டிக்காட்டி புதிய இறைத் தூதர்கள் தடுக்க பிரசாரம் செய்தனர். இதனால் இறைத்தூதரை வணங்கும் மக்கள் அறியாமையால் புதிய இறைத்தூதருக்கும், அவரை விசுவாசித்து ஓர் இறைவனையே வணங்கும் சிறுபான்மை மக்களுக்கும் சொல்ல முடியாத அளவு துன்பங்களை விளைவித்தார்கள். ஆனால் அந்த இறைத்தூதர்களும் இறை விசுவாசிகளும் தாம் இறக்கும் வரை அல்லது ஈஸா(அலை) உயர்த்தப்படும் வரை பிரசாரம் செய்தனர். அவர்களின் ஒரே குறிக்கோள் இம்மையில் ஒரே இறைவன் காட்டிய நேர்வழியில் நடந்து மறுமையில் சுவர்க்கம் அடைவதும், நரக வேதனையிலிருந்து தப்புவதுமாகும்.

(ஆபிரஹாம்) இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் (ஈசாக்கு) இஸ்ஹாக்(அலை) அவர்களின் சந்ததியில் வந்த நபி இஸ்ராயில்(அலை) அவர்களின் சந்ததிகளையே பனி இஸ்ராயீல் அல்லது இஸ்ரவேலர்கள் என்று அழைப்பர். இவர்களின் சந்ததியினர் எகிப்தில் கொடுங்கோல் அரசனால் அடிமையாக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இறைத்தூதராக மூசா(அலை) (மோஸஸ்) அனுப்பப்பட்டார்கள். அவர் ஏக இறைவனையே வணங்கவேண்டும் என அச்சமுதாயத்தினருக்கு வலியுறுத்தினார்கள். அவருக்குப் பின் அச்சமூகம் அவரை இறைவனின் இடைத்தரகராகவும் அவரை ஆக்கிக் கொண்டனர். காளை மாட்டையும் தெய்வமாகக் கொண்டிருந்தனர். அந்த இஸ்ரவேலர்களை நேர்வழிப்படுத்த இறைவன் பல இறைத்தூதர்களைத் தொடர்ந்து அனுப்பினான். இஸ்ரவேலர்கள் அவர்களில் சில தூதர்களை கொலையும் செய்துள்ளனர். இவ்வரிசையில் இறைத்தூதராக அனுப்பப்பட்ட உஷைரை அவர்கள் இறைவனின் மகனாகக் கருதி தெய்வமாக வழிபட்டனர். இறை நெறிநூல்களையும் தமது தேவைகளுக்கேற்ப மாற்றி அமைத்து யூத மதத்தை நிர்மாணித்தனர். யூதர்கள் இறுதியாக எசக்கேயில் என்ற தூதரையே ஏற்றனர். பின் வந்த எந்த இறைத்தூதரையும் ஏற்கவில்லை. ஆனால் எசக்கேயிலின் பின் ஒரு கிறிஸ்துவும், ஒரு எலியாவும், ஒரு பாலை நிலத்தில் அம்மக்களால் துரத்தப்பட்டு, பின் அவர்களை வெற்றி கொண்டு, ஓட்டகத்திலும் குதிரையிலும் பத்தாயிரம் வீரர்களுடன் வந்து வெற்றி கொள்ளும், விருத்த சேதனம் செய்யப்பட்ட தீர்க்கதரிசி வருவார் என எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் இறுதித் தூதராக முஹம்மது நபி(ஸல்) வந்தபோது மறுக்கின்றனர். யூதர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தமது குழந்தையை தனது எனத் தெரிவது போல், இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களே என்பதை அறிந்தே வைத்திருந்தனர். அறிவுமிக்க இம்மக்கள் இப்போதாவது சிந்தித்து சத்தியத்தின் பக்கம் வர முயற்சிக்கக் கூடாதா? சிந்தியுங்கள்.

நெறிநூல் வழங்கப்பெற்ற முஹம்மது நபி (ஸல்) அவர்களை விசுவாசிக்க நினைக்கின்றனர். அதாவது இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த முன்னைய மாசு படுத்தப்பட்ட நெறிநூல்களை நம்பிக்கை கொண்ட மக்களும் தம்மை இறைவன் அல்லது பஹவானுக்கு அல்லது தேவ(அல்லேலூயா) னுக்கு கீழ்ப்படிந்த இறை நம்பிக்கையாளனாக வாழ வேண்டும் என எண்ணுகின்றனர். எனவே நெறிநூல் வழங்கப்பட்ட எல்லா சமுதாய இறை பக்தர்களும் தமது தாய் மொழியில் இறைவனுக்கு “கீழ்ப்படிந்தவன்’ (அரபு மொழியில் முஸ்லிம்) என்று சொல்லவே விரும்புகின்றனர். முன்னைய இறைத்தூதர்களான இஸ்ஹாக்(ஈசாக்கு), யாஃகூப் போன்ற இறைத்தூதர்களும் இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த முஸ்லிமாகவே இருந்தனர். அவர்களின் சந்ததியிலேயே இஸ்ர வேலர்கள் தோன்றினர். இஸ்ரவேலர் என்பதன் பொருள் கீழ்ப்படிதல் என்பதாகும். அதாவது இறைவனுக்கு முற்றிலும் கீழ்படிந்த இஸ்ஹாக், யாஃகூப் போன்ற இறைத்தூதர்களின் சந்ததி (பிள்ளை)யினர் என்பதே ஆகும்.

அன்று இறைவனால் காலத்துக்குக் காலம் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் தமது தாய் மொழியின்படி தம்மை முஸ்லிம் என அழைத்ததாகவும், அக்கால மக்களை இறைவனுக்கு கீழ்ப் படிந்த(முஸ்லிமாக) வாழ வழிகாட்டியதாகவும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அவதானியுங்கள்.
இப்ராஹீம் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (இறைவனுக்கு) முற்றிலும் (கீழ்ப்படிந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார். அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. (அல்குர்ஆன் :3:67)

இதுதான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும். அவன்தான் (அல்லாஹ்) இதிலும் இதற்கு முன்னரும் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (அல்குர்ஆன்: 22:78)

மூஸா(தன் சமூகத்தாரிடம்) என் சமூகத்தாரே நீங்கள் மெய்யாகவே முஸ்லிமாக இருந்தால் அவனையே பூரணமாக நம்பி விடுங்கள் என்று கூறினார். (அல்குர்ஆன்: 10:84)

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) உணர்ந்தபோது அல்லாஹ்வின் (இறைவனின்) பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார் என்று கேட்டார். (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன், “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் முஸ்லிமாக இருக்கின்றோம் என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்’ எனக் கூறினர். (அல்குர்ஆன்: 3:52)

மேலே முன்வைக்கப்பட்ட அல்குர்ஆனின் வசனங்களின்படி முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த இறைத்தூதர்களும் தம்மை முஸ்லிம் என்றே அவர்களின் தாய் மொழிகளில் அழைத்துள்ளனர். இதுவரை முன் வைக்கப்பட்ட இறை வசனங்களிலிருந்து எல்லா இறைத்தூதர்களும் ஒரே இறைவனை வணங்க வேண்டும்; அந்த இறைவனின் நெறிநூல் வழியில் மட்டுமே கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என வழிகாட்டியுள்ளனர். இதன்படி அல்லாஹ்வை விட்டு வேறு மனிதர்களையோ அல்லது வேறு படைப்புகளையோ தெய்வமாகக் கொண்டு வழிபடுவது, ஷைத்தானின் வழிகளே ஆகும். இவையாவும் மனிதனை நரகை அடையவே வழிகாட்டும். மனிதர்களே சிந்தியுங்கள்.

முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்கள் உண்டு. ஒன்று நோன்புப் பெருநாள் இது ஹிஜ்ரி இரண்டிலும், அடுத்தது ஹஜ்ஜுப் பெருநாள். இது இப்ராஹீம்(அலை) அவர்களினால் அல்லாஹ்வின் கட்டளைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பின் அதன் வடிவம் மாற்றம் அடைய, பின் ஹிஜ்ரி ஐந்தில் அல்லாஹ்வின் கட்டளைக்கு அமைய முஹம்மது(ஸல்) அவர்களினால் தூய வடிவில் கடமையாக்கப்பட்டு இன்றும் அதே வடிவில் செயல்படுத்தப்படுகின்றது. இதேபோல் இறைவனின் பண்புகள், தொழுகைகள், ஸக்காத்து, ஏனைய வணக்க வழிபாடுகள், இவைகள் யாவும் அல்லாஹ்வின் கட்டளைக்கமைய முஹம்மது (ஸல்) அவர்களினால் காட்டித்தந்த அதே வடிவில் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இன்றும் அதே அமைப்பிலும், வடிவிலும் இயற்கை நெறிநூலான அல்குர்ஆனும், உண்மையான ஹதீஸ்களும் மாற்றப்படாது இருக்கின்றன. இதனால் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் வேறு மனிதனால் ஒரு மாற்றமும் செய்ய முட யாது உள்ளது. உலகில் யாராவது ஒருவனால், அல்குர்ஆனில் ஒரு வசனத்தினை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியுமா? முடியாது. முஸ்லிம் அறிஞர்கள் இனங்காட்டி விடுவார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மீது ஓர் அவதூறான அல்லது பிழையான புத்தகம் அல்லது முஹம்மது நபியுடையது என ஒரு அழகான அல்லது அவலட்சணமான படம் அல்லது கேலிச் சித்திரம் அல்லது சிலை அல்லது புதிய வணக்க வழிபாட்டை உருவாக்க முடியுமா? முஸ்லிம் சமுதாயம் கொதித்தெழும் அல்லவா? அல்லது தமது உயிர்களையும் இழக்கவும் முன்வந்து விடுவார்கள் அல்லவா? சிந்தியுங்கள்.

அவ்வாறு முஸ்லிம்கள் கொதித்தெழக் காரணம் உண்டு. இறுதி இயற்கை நெறிநூல் அல்குர்ஆன் எப்போது அழிக்கப்பட்டு அல்லாஹ்விடம் உயர்த்தப்பட்டு விடுமோ அப்போது மனிதன் நேர்வழி பெற முடியாது போகும். அதன் பின் அல்லாஹ் (இறைவன்) எனச் சொல்லும் அல்லது நினைக்கும் மனிதன் அழிந்து போவான். பாவம் புண்ணியம் என்றால் என்ன என்று தெரியாத மனித மிருகங்கள் மட்டுமே உலகில் வாழ்வார்கள். இதனால் உலகில் கொலைகள் தலைவிரித்தாடும். பஞ்சமா பாதகங்கள் மலியும், உலகம் அழியும்.

உலகிலுள்ள அறிவுமிக்க கிறித்தவ அறிஞர்களே பின்வரும் கேள்விகளுக்கு ஆதாரத்துடன் பதில் அளிக்க முடியுமா? இக்கேள்வியை ஏனைய சிலை வணக்க வழி பாட்டுக்காரர்களிடமும் கேட்கலாம்; ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு கிட்டிய முன் வந்த இறைத்தூதர் ஈசா(அலை) (இயேசு) அவர்களாக இருப்பதனால் இக்கேள்வியை கிறித்தவ அறிஞர்களிடம் விடுகிறேன். ஆதாரத்துடன் பதில் தரமுடியுமா? அக்கேள்விகள் வருமாறு:

1. ஈசா(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வினால் அருளப்பட்ட இறைநெறிநூல் அவ்இறைத் தூதரின் தாய்மொழியில் பாதுகாக்கப் படுகின்றதா? அல்லது இல்லையா?

2. ஈசா(அலை) அவர்கள் தமக்கு அல்லது தமது தாய்க்கு சிலை செய்து வணங்கக் கட்டளை யிட்டார்களா? இயேசுவுக்கு அல்லது அவர் களின் தாய்க்கு கிறித்துவுக்கு பின் எந்நூற்றாண்டில் சிலை அமைத்து வணங்கும் வழக்கம் நடைமுறைக்க வந்தது. ஆதாரம் காட்ட முடியுமா?

3. ஈசா(அலை) அவர்களுக்குப் பின் எக்காலங்களில் எத்தனை நபர்களினால் பைபிள் புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன?  இதில் பாப்பரசரின் அங்கீகாரம் பெற்றவை எத்தனை? பெறாதவை எத்தனை? ஒவ்வொரு பைபிள்களுக்குமிடையில் எத்தனை ஆயிரம் முரண்பாடுகள் இருக்கின்றன என உங்கள் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்? விளக்கம் தரமுடியுமா?

4. ஈசா அலை பிறந்து 1500 வருடங்களுக்கு பின் அறிமுகப்படுத்தப்பட்ட பெருநாளே கிறித்தவர்கள் கொண்டாடும் டிசம்பர்25ம் நாள் கிறிஸ்மஸ் தினம். அவ்வாறாயின் ஈசா (அலை) கொண்டாடிய கிறித்துவர்கள் தவற விட்ட பெருநாள் எது?

5. கிறித்தவ பக்தர்கள் மத்தியில் உட்புகுந்துள்ள கெட்ட ஆவி, மருத்துவர்களை விட்டு, இயேசு அவதாரமாக கொண்ட போலி மருத்துவ நம்பிக்கைகள், போலி சோதிட நம்பிக்கைகள், போலி சட்ட சடங்குகள் இவை ஈசா(அலை) அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்டவையா?

6. இன்று கிறித்தவர் மத்தியில் மனித உரிமை என்ற பெயரால் உட்புகுந்துள்ள வட்டி, சூது, களவு, மது, விபச்சாரம், பெண் அல்லது ஆண்களின் ஆபாசம், பன்றி இறைச்சி உபயோகம் இயேசுவின் வழிமுறையா? அல்லது சாத்தானின் வழிகாட்டலா?

அறிவுமிக்க இயேசுவை பின்பற்றுவதாகச் சொல்லும் மக்களே! இவை ஈசா(அலை) அவர்களின் வழிகாட்டலா? இல்லவே இல்லை. நீங்கள் இப்பாவச் சுமைகளை அழகாக கண்டதற்கு காரணம் இறைவனால் இரத்துச் செய்யப்பட்ட கலப்படமான வேதங்களை இன்றும் நம்பிப் பின்பற்றுவதாகும். நிச்சயமாக ஈசா (அலை) மீண்டும் இப்பூமிக்கு வருவார். இறுதித் தூதரின் வழியை உண்மைப்படுத்தி நடப்பார். ஆகவே சத்திய நெறிநூலான அல்குர்ஆனின் பக்கம் வந்துவிடுங்கள். அதுவே மோட்சம் பெற ஒரே வழி ஆகும்.

இறுதித் தூதரின் முன்னறிவிப்பு: இறுதி நாட்களில் ஈசா(அலை):
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்னர்) மர்யமின் மைந்தர் ஈசா(அலை) உங்களிடையே நேர்மையாக தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கின்றார். அவர் சிலுவையை உடைப்பார். பன்றியை அழிப்பார், ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்…) (நூல்:ஸஹீஹுல் புகாரீ ஹதீஸ் -3448)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: