குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?
தொடர்-10
அவர்கள் கூறுகிறார்கள்:
“இபாததுல் வலீ” என்ற அரபி பதத்திற்கு இறைநேசரை வணங்குதல், இறைநேசர் வணங்குதல் என்று இருபொருள் எடுக்கலாம். தமிழ் மொழியில் வேற்றுமை உருபு (ஜகாரம்) பளிச்சென்று வெளியில் தெரிவதால் எந்தக் குழப்பமும் இல்லை. நேசர், நேசர்+ஐ= நேசரை என்று தமிழ் மொழி வித்தியாசங்களை வெளிப்படுத்துகிறது. அரபி மொழியில் இந்த தெளிவு இல்லை” என்று அவர்கள் எழுதி இருப்பதும் இதனை ஊர்ஜிதப்படுத்துகிறது.
பொதுமக்கள் சுய சிந்தனையில்லாத மிருகங்களைப் போன்றவர்கள் என்பது மவ்லவிகளின் கூற்றல்லவா? அந்தப் பொதுமக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் அவர்களது கூற்றை விளக்குவதாக இருந்தால் “அல்லாஹ் மொழி இலக்கணம் நிறைவாக உள்ள வேறு மொழிகள் இருக்கும் நிலையில் மொழி இலக்கணம் நிறைவில்லாத அரபி மொழியில் தனது இறுதி நெறிநூலான அல்குர்ஆனை இறக்கி விட்டான்: அதனால் குர்ஆனை பொதுமக்களால் விளங்கிக் கொள்ள முடியாது. அரபிமொழி கற்ற மவ்லவிகளால் மட்டுமே சரியாக விளங்கிக் கொள்ள முடியும்? என்பதேயாகும். தமிழ், ஆங்கில மொழி இலக்கணம் முறையாகக் கற்றிருந்தால் அல்லவா அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் குறைபாடு அரபி மொழியில் மட்டுமல்ல. தமிழ் மொழியிலும் உண்டு. இதர எல்லா மொழிகளிலும் உண்டு. எந்த மொழியும் இதற்கு விதிவிலக்கானதல்ல என்பதைப் புரிந்திருப்பார்கள்.
தமிழ் மொழி இலக்கணத்தில் “சிலேடை அணிகள்” என்ற தனிப்பிரிவே உண்டு என்பதை இவர்கள் அறிந்திருந்தால் இவ்வாறு எழுதி இருப்பார்களா? 1967ல் திமுக ஆட்சி அமைந்த சமயம் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.,க்கும், அன்றைய முதன் மந்திரிக்கும் நடந்த வாக்குவாத்தில் இடம் பெற்ற சிலேடை அணி தமிழ்நாட்டில் பிரசித்தமானது. அது போன்ற பல ஆதாரங்களைத் தரமுடியும். உதாரணமாக புத்தியில்லாதவன் இதற்கு மடையன் என்ற பொருளும் பெறலாம். அதற்கு நேர்முரணான “புத்தியில் ஆதவன்” -புத்தியில் சூரியனைப் போல் பிரகாசமானவன் – மிகவும் புத்திசாலி என்ற பொருளும் பெறலாம்.
இன்னொரு உதாரணம் காசாலேசா இதில் காசா, லேசா என்ற பொருளும் “காசாலே -சா” என்ற பொருளும் பெற முடியும். இப்படி பல உதாரணங்களைக் காட்ட முடியும். இவை இடம் பெறும் வசனத்தைக் கவனித்துப் பார்க்கும் ஒருவன் அவற்றை விளங்கிக் கொள்ள முடியும். அதாவது ஒரு வசனத்தை முன்பின் தொடர்களுடன் முறையாகப் பார்க்கும் “புத்தியில்லாதவன்” சரியாக விளங்கிக் கொள்ள முடியும். குறுகிய நோக்குடன் பார்க்கும் “புத்தியில்லாதவன்” மட்டுமே தடுமாறுவான். இங்கு புத்தியில்லாதவன் என்ற பதத்திற்கு முதல் இடத்தில் புத்தியில் சூரியனைப் போல் பிரகாசமானவன் என்றும், இரண்டாவது இடத்தில் மடையன் என்றும் நடுநிலையாளர் விளங்கிக் கொள்ள முடியும். இந்த நிலையில் தமிழ் மொழியில் இப்படிப்பட்ட குறைபாடுகள் இல்லை. அரபி மொழியில்தான் உண்டு என்று கூறுகிறார்கள் என்றால் அதன் பொருள் அவர்களுக்கு தமிழ் மொழி இலக்கணம் தெரியவில்லை என்பது தானே: அதாவது தாய்மொழி தமிழ், அதன் மொழி இலக்கணம் தெரியாதவர்கள், இடையில் கற்றுக் கொண்ட அரபி மொழி இலக்கணத்தில் பண்டிதர்கள் என்று அகந்தை பேசுவது விந்தையாக இல்லை? ஏன்தான் இந்த மவ்லவி வர்க்கம் இப்படி அகந்தை கொள்கிரார்களோ தெரியவில்லை.
அல்ஜன்னத் டிச. 89 இதழ் பக்கம் 85ல், 3:30 வசனத்திற்கு அவர்கள் கொடுத்துள்ள பொருள் வருமாறு:
அந்நாளில் ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நல்லவற்றையும், தான் செய்த தீயவற்றையும் கண் முன்னால் காணும், தனக்கும் தான் செய்த செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டுமென அவை விரும்பும். (3:30)
இப்போது 1987ல் பீ.ஜை. சரிபார்த்துக் கொடுத்த குர்ஆன் மொழிபெயர்ப்பில் உள்ள பொருளை அப்படியே தருகிறோம் பாருங்கள்.
“ஒவ்வோர் ஆத்மாவும் நான் செய்த நன்மைகளும், இன்னும் தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன் கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகுதூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்” (3:30)
இதுவே அவர்களும் சரிகண்டுள்ள மிகச் சரியான மொழி பெயர்ப்பாகும். இப்போது தாங்களே சரிகண்டு ஒப்புக்கொண்ட மொழிபெயர்ப்புக்கு மாற்றமாக புதியதொரு மொழி பெயர்ப்பையும் விளக்கத்தையும் கொடுத்து, தங்கள் வாதத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா? நன்மையும், தீமையும் கண்மூன்னால் கண்ட ஒவ்வொரு ஆத்மாவாகிய அது விரும்பும் என்பதே சரியான மொழிபெயர்ப்பாகும். அவை விரும்பும் என்று மொழி பெயர்த்திருப்பது தவறாகும். அது என்ற இடத்தில் அவை என்று போட்டுக் கொண்டும், நன்மை, தீமையைக் காணும் ஒவ்வொரு ஆத்மாவும் என்பதற்கு நல்ல ஆத்மா, கெட்ட ஆத்மா என்று விளக்கம் கொடுத்தும் தங்கள் வாதத்தை நிலைநாட்ட முற்பட்டுள்ளனர். இவர்களின் வாதப்படி நல்ல ஆத்மாக்கள் தீமையே செய்திருக்காது. கெட்ட ஆத்மாக்கள் நன்மையே செய்திருக்காது. என்னே அறிவீனம்?
“அல்லாஹ்ஹும்ம பாயித் பய்னீ வ பய்ன கதாயாயா…. யா அல்லாஹ்! எனக்கும் எனது தவறுகளுக்குமிடையில் கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ அமைத்திருப்பது போன்ற தூரத்தை அமைத்திடுவாயாக” (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
இது நபி (ஸல்) அவர்கள் கடமையான தொழுகையை ஆரம்பித்தவுடன் ஓதிய துஆவாவாகும். இவ்வாறு அவர்கள் பிரார்த்தனை செய்து இருப்பதால் இவர்களின் வாதத்தின்படி நபி(ஸல்) அவர்களைக் கெட்ட ஆத்மாக்களில் சேர்க்கும் துணிச்சல் இவர்களுக்கு ஏற்பட்டு விட்டதா? அல்லது நபி(ஸல்) அவர்களை விட உயர்ந்த நிலையில் தவறே செய்யாத ஆத்மாக்கள் இருக்கின்றன என்று நம்புகின்றனரா?
இவர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்பில் அரபிமொழியில் மட்டும் இலக்கணப் பிழை செய்யவில்லை. தமிழ் மொழியிலும் இலக்கணப் பிழை செய்துள்ளனர். தனக்கும் தான் செய்த செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கவேண்டு மென்று அது விரும்பும் என்று வருமே அல்லாது அவை என்று வர முடியாது.
தங்கள் வாதத்தை நிலைநாட்ட எத்தனைத் தவறுகளைச் செய்திருக்கிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
3:30 வசனமோ மிகத் தெளிவாக இருக்கிறது ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது செய்த நல்லமல்களையும், கெட்ட அமல்களையும் காட்டப்படுவது பற்றிய வசனமே அது. எந்த ஒரு ஆத்மாவும் தான் செய்த கெட்ட அமல் தன்னிடம் காட்டப்படும்போது அது வருந்தவே செய்யும். 100க்கு 35 மார்க்கு வாங்கினால் பாஸாகி விடுவார்கள். அதே சமயம் 100க்கு 95 மார்க்கு வாங்கும் மாணவனும் 5 மார்க்கை தான் இழந்ததைக் குறித்து வருந்தவே செய்வான். ஆதத்தின் சந்ததிகளில் தீமையே செய்யாத எந்த ஒரு ஆத்மாவும் இருக்க முடியாது.
“ஆதமின் மக்களில் ஒவ்வொருவரும் தவறு செய்யக்கூடியவரே. தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் தங்களின் தவறுக்காக வருந்தி பாவமன்னிப்புத் தேடுபவர்கள் என்பது நபிமொழியாகும். (அனஸ் (ரழி), திர்மிதீ)
இவர்களோ நல்ல ஆத்மாக்கள் வருந்தா என்ற தவறான விளக்கத்தை தந்து, அந்த வசனத்தில் வரும் “அது” என்ற பதத்தை “அவை”யாகத் திரித்து, அவர்களால் திரிக்கப்பட்ட அவை என்ற பதம் நல்ல ஆத்மாக்களைக் கட்டுப்படுத்தாது என்று புது விளக்கம் தருகிறார்கள். தங்களின் வாதத்தை நிலைநாட்ட இப்படியா தரம் தாழ்ந்து செல்வது?
குர்ஆனின் குரல் 5:105 குர்ஆன் வசனத்தில் தவறான விளக்கம் கொடுத்தற்காக “குர்ஆனுடன் விளையாடும் குர்ஆனின் குரல்(?)” என்று 1986 ஜூலையில் அந்நஜாத்தில் நையாண்டி செய்தவர் இன்று 3:30 குர்ஆன் வசனத்தில் அதைவிட பெருந்தவறான நோக்கத்துடன் விளக்கம் கொடுக்க முற்பட்டிருக்கிறாரே! இது நியாயந்தானா? செப்டம்பர் “86ல் குர்ஆன் விளக்கத்தில் நிகழ்ந்து விட்ட ஒரு தவறுக்காக “மாபெரும் தவறு! மன்னித்துக் கொள்க!” என்று கொட்டை எழுத்தில் அந்நஜாத்தில் தலையங்கமே தீட்டியவரிடம் இன்று அநத உயர்ந்த மனோ நிலையைக் காணோமே? தவறுகளை எவர் சுட்டிக்காட்டினாலும் அடக்கத்துடன் ஏற்போம், வரட்டு கெளரவம் பார்ப்பவர்களையும், முரட்டுப் பிடிவாதம் பிடிப்பவர்களையும் அலட்சியம் செய்வோம்! என்று அவர்கள் ஏற்றுள்ள சபதத்தையாவது மதித்து நடக்க வேண்டாமா?
இவ்வளவு பெரிய முயற்சிகள் செய்து அவர்கள் சாதிக்க விரும்புவது என்ன தெரியுமா? 3:7 வசனத்தில் “அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களும் முத்தஷாபிஹாத் வசனங்களின் இறுதிப் பொருளை அறிவார்கள் என்று மொழி பெயர்த்தாலும் அடுத்து வரும் “யகூலூன” என்ற அரபிப்பதம் கல்வியில் உறுதிப்பாடுடையவர்களை மட்டுமே கட்டுப்படுத்தும் அல்லாஹ்வைக் கட்டுப்படுத்தாது என்று நிலைநாட்டவே, சம்பந்தமே இல்லாத ஒரு வசனத்தை எடுத்து எழுதித் தங்கள் அரபு மொழித் திறமையைக் காட்டியுள்ளனர்.
முத்தஷாபிஹாத் வசனங்களை விளங்க முடியாது என்று என்றுமே நாம் சொன்னதில்லை இறுதி முடிவுக்கு வர முடியாது என்றே நாம் கூறி இருக்கிறோம். 3:7 வசனத்தில் “வமா யஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹ்” என்று வரும் இடத்திலுள்ள தஃவீல் என்ற பதத்திற்கு “விளக்கம்” என்ற பொருள் அல்ல. அந்த இடத்தில் “இறுதி முடிவு” என்ற பொருளே பெற முடியும் என்று தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கிறோம். அப்படி இருந்தும் முத்தஷாபிஹாத் வசனங்களை முன்பு விளங்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்து விட்டு பின்னர் விளங்க முடியும் என்று இறங்கி வந்துள்ளதாக அவதூறு பரப்பினர். அதற்கு அந்நஜாத் ஆகஸ்ட் “89 இதழ் பக்கம் 53ல் தெளிவாக விளக்கம் கொடுத்திருந்தோம். மக்களின் மறதி, தக்லீது மனப்பான்மை, சுயசிந்தனையற்ற போக்கு இவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர் என்று தக்க ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி இருந்தோம். விஷயம் இவ்வளவு தெளிவாக இருக்கும் நிலையில் அல்ஜன்னத் ஜனவரி 90 பக்கம் 17ல் இடம் பெற்றுள்ள குறுக்கு விசாரணைக்குரிய பதிலைப் பாருங்கள்.
முதஷாபிஹாத் வசனங்களை விளங்க முயற்சிப்பது தவறில்லை. அதற்கு ஒரு நிலையான அர்த்தம் கொடுப்பதுதான் தவறு என முதல் சாரார் கூறுகிறார்களே. இதன் விளக்கம் என்ன? பரங்கிப்பேட்டை, கு.நிஜமுத்தீன். KSA
அல்லாஹ்வைத் தவிர யாரும் அதை விளங்கிக் கொள்ள முடியாது என்று அல்லாஹ் கூறுவதாக அர்த்தம் செய்துவிட்டு, விளங்கவே முடியாது என்று அல்லாஹ் சொன்னதை (அதாவது அவர்களின் அர்த்தப்படி) விளங்கிக் கொள்ள முயற்சிப்பது தவறில்லை என்று கூறுவது முரண்பாடாக உங்களுக்குத் தோன்றவில்லையா? முடியாது என்பதுதான் அந்த வசனத்தின் அர்த்தம் என்று அவர்கள் நம்பினால் “விளங்கிக் கொள்ள முயற்சிப்பது தவறில்லை” என்று கூறுவது சரியாகப்படுகிறதா? என நீங்களே சிந்தியுங்கள்! என அல்ஜன்னத்தில் பதில் அளித்துள்ளனர்.
இவ்வாறு மனந்துணிந்து உண்மைக்குப் புறம்பாக எழுதலாமா? நாம் சுட்டிக்காட்டுவது போல் நமது இதழின் வருடம் மாதம் பக்கத்தைச் சுட்டிக்காட்டி “முத்தஷாபிஹாத்” வசனங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் விளங்க முடியாது” என்று எழுதி இருப்பதை காட்டட்டும் பார்க்கலாம். எழுத்தில் தெளிவாக வெளிவந்துள்ள விஷயங்களிலேயே இவ்வளவு மனந்துணிந்து பொய்யாக எழுதுகிறவர்கள், மற்ற விஷயங்களில் எந்த அளவு பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி இருப்பார்கள் என்பதை அறிவுள்ளவர்கள் மட்டுமே விளங்க முடியும்.
முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீட்டாளர்கள் தங்களின் குர்ஆன் தமிழ் உரை நான்காம் பதிப்பில் 3:7 வசனத்தில் “அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களும் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள் என்று அச்சிட்டு வெளியிட்டிருந்ததை ஐந்தாம் பதிப்பில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள்” என்று சரியாகத் திருத்தி வெளியிட்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ் 4-ம் பதிப்பை வாங்கியவர்கள் 3:7 வசனத்திலுள்ள தவறைத் திருத்திக் கொள்ளவும்.
அல்குர்ஆன் 3:7 வசனம் அல்குர்ஆனிலுள்ள இரண்டு வகையான வசனங்கள் பற்றி தெள்ளத் தெளிவாகச் சொல்லும் முஹ்க்கமான வசனம். இதில் ஒருவகை, திட்டமான உறுதியான இறுதியான பொருள் கொள்ள முடியாமல் பல பொருள்களில் விளங்க முடிந்த முத்தஷாபிஹ் வசனங்கள்; அப்படிப்பட்ட இரண்டாம் வகையைச் சேர்ந்த வசனங்களின் உண்மைப் பொருளை, இறுதி முடிவை அல்லாஹ் அல்லாத யாராலும் அறிய முடியாது. 3:7 வசனத்திலுள்ள தஃவீல் என்ற அரபி பதத்திற்கு விளக்கம் என்று பொருள் கொள்வது கூடாது; அங்கு இறுதி முடிவு என்று பொருள் கொள்வதே சரி. இரண்டாம் வகையான முத்தஷாபிஹ் வசனங்கள் பற்றி காலத்திற்கேற்றவாறு விஞ்ஞான வளர்ச்சிக்கேற்றவாரெல்லாம் பொருள் கொள்ள முடியும். இந்த வசனங்களை விளங்கிக் கொள்ள அரபி இலக்கண, இலக்கிய ஞானமும் அவசியம் என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கிறோம்.
இவ்வளவு தெளிவான விளக்கததிற்குப் பிறகும் முத்தஷாபிஹ் வசனங்களை விளங்க முடியாது என்று நாம் சொல்வதாக, விளங்கிக் கொள்வதற்கும் அதைப் பற்றிய இறுதி முடிவுக்கு வருவதற்குமுள்ள வித்தியாசம் தெரியாமல் தவ்ஹீத் மவ்லவிகளே தடுமாறுகின்றனர். அல்முபீன் மார்ச் 90 பக்கம் 31லும் இந்த தடுமாற்ற நிலையைப் பார்க்க முடிகின்றது.
3:7 வசனம் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விளக்கிய பின்னும் அது பற்றி விளங்காதவர்கள் ஒன்று அறிவு சூன்யங்களாக இருக்க வேண்டும். அல்லது தங்கள் மவ்லவி வர்க்கத்தை தக்க வைத்துக் கொள்ள விதண்டாவாதம் புரிபவர்களாக இருக்க வேண்டும். மூன்றாம் நிலை இருக்க முடியாது. எனவே தவ்ஹீத் மவ்லவிகளின் நிலை பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். புரோகிதர்கள் நேர்வழிக்கு வந்த வரலாறே இல்லை!
தங்கள் தவறான வாதத்தை நிலைநாட்ட அல்ஜன்னத் பிப்”90 பக்கம் 38ல் அல்குர்ஆன் வசனம் 2:221ஐ எவ்வாறு திரித்துள்ளனர் என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
அதற்கு முன்பு ஒன்றை தெளிவாக்கிட விரும்புகிறோம். 3:7 வசனத்தின் உண்மை நிலையைத் தெள்ளத் தெளிவாக்கிட நாமோ குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிலுருந்தும் நேரடியான விளக்கங்களை எடுத்து எழுதி வருகிறோம். அவர்களோ குர்ஆன் வசனங்களைத் திரித்து எழுதி வருகிறார்கள். அதற்கு அண்மைக் காலத்திய மவ்லவி ஸனாவுல்லாஹ்வை சான்றாக்குகிறார்கள். உண்மையைக் கொண்டு நீதி வழங்கும் பொறுப்பிலிருந்த முன்னாள் தமிழக தலைமை நீதிபதி எம்.எம். இஸ்மாயில் அவர்கள் சொல்லாத ஒன்றை சொன்னதாக இட்டுக்கட்டிப் பொய்யுரைத்து தங்கள் வாதத்தை நிலைநாட்ட முற்படுகின்றனர். “இபாததுல்வலீ” என்ற அரபி பதத்தை வைத்து அகந்தை பேசிய விபரங்களையும், 3:30 வசனத்தைத் திரித்து எழுதி தங்கள் தவறான வாதத்தை நிலைநாட்ட முற்பட்டிருந்ததையும் தெளிவுபடுத்தி இருந்தோம்.
இப்போது அவர்கள் திரித்து எழுதியுள்ள 2:221 வசனத்தை சிறு வாக்கியங்களாகப் பார்ப்போம்.
1. இணை வைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும்வரை-நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
2. இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருந்த போதிலும்,
3. அவளை விட விசுவாசியான ஒரு அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்.
4. அவ்வாறே இணை வைக்கும் ஆண்களுக்கு-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை ( விசுவாசியான பெண்களை) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.
5. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்தபோதிலும்,
6. ஒரு விசுவாசியான அடிமை அவனைவிட மேலானவன்.
7. இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.
8. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்.
9. மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (2:221)
இங்கு ஒவ்வொரு வாக்கியத்திற்கும் தனித்தனி எழுவாய் பயனிலை இருப்பதைக் கவனிக்கவும். அதாவது விசுவாசிகளுக்குத் தனி பயனிலையும், இணை வைப்பவர்களுக்குத் தனி பயனிலையும் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. எனவே 7வது வாக்கியத்திலுள்ள இவர்கள் என்ற எழுவாய் இணைவைப்பவர்களையும், 9வது வாக்கியத்திலுள்ள அவன் அல்லாஹ்வையுமே குறிக்கிறது என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ள முடியும். இப்படிப் பொருள் கொள்வது குர்ஆனிலுள்ள வழக்கப்படியே அமைந்துள்ளது. உதாரணமாக:
12:51 வசனத்தின் இறுதியில் அஜீஸுடைய மனைவி “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள். என்று முடிவுற்றபின். 12:52 வசனத்தில் இதன் காரணம் நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாதபோது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன் நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்” என்றும் 12:53 வசனத்தில் அன்றியும், நான் என் மனதை பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் இல்லை. ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக் கூடியதாக இருக்கிறது. என் இறைவன் அருள் புரிந்தாலன்றி, நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும் அருளாளனாகவும் இருக்கிறான் என்றும் உள்ளது.
இங்கு சிந்திப்பவர்கள் அஜீஸின் மனைவி கூறினாள் என்று 12:51 வசனம் முடிவுற்றாலும், 12:52, 53 வசனங்கள் அவள் கூறியதல்ல. 12:46 வசனத்திலும் இடம்பெறும் யூசுப்(அலை) அவர்கள் கூறிய கூற்றுக்களாகும் என்பதை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். தஃப்ஸீர் இப்னு கதீரில் எழுதப்பட்டுள்ள தவறான விளக்கத்தை நம்பிக்கொண்டு 12:52, 53 வசனங்கள் அஜீஸின் மனைவி கூறியதுதான் என்று அடம் பிடிக்கும் மதனிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதேபோல் 22:78 வசனத்தில் இதுதான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும் என்பதற்குப் பின்னர் வரும் “ஹுவ” என்ற அரபி பதம் இப்றாஹீம்(அலை) அவர்களைக் குறிக்கும் என்று நம்பிக் கொண்டு இப்ராஹீம்(அலை) அவர்கள்தான் “முஸ்லிம்” என்று பெயரிட்டார்கள் என்று நம்புபவர்களும் எழுதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இங்கும் அதற்கு முன்னுள்ள வாக்கியங்கள் குறிக்கும் அல்லாஹ்வையே இந்த “ஹுவ” குறிக்கும் என்பதே சரியாகும். ஆக ஒரு வசனத்தில் தனித்தனி எழுவாய் பயனிலை உள்ள பல வாக்கியங்கள் இடம்பெற்று அதற்குப்பின் அவர் அல்லது அவர்கள் என்ற சொல் இடம் பெறுமானால் அதனை எந்த வாக்கியத் துடன் இணைத்துச் சொல்லவேண்டும் என்பதை முன்பின் தொடர்களைக் கவனிக்கும் போது விளங்கிக் கொள்ள முடியும். அதற்கு முன்னைய வாக்கியத்தையே குறிக்கும் என்று சொல்லுவது தவறு என்பதை 12:51, 52, 53 மற்றும் 22:78 வசனங்களைக் கொண்டு தெளிவுபடுத்தி விட்டோம்.
இப்போது 3:7 வசனத்தை அவர்கள் தவறாக மொழிபெயர்த்துள்ளபடி தனித்தனி வாக்கியங்களாகப் பிரித்து எழுதிப் பார்ப்போம்.
1. அவன்தான் (இந்) நெறிநூலை உம்மீது இறக்கினான். (ஒரே பொருளுள்ள வசனங்கள் என்பதைத் திரித்து விளக்கமான வசனங்கள் என எழுதியுள்ளார்)
2. இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன
3. இவைதான் இந்நெறிநூலின் அடிப்படையாகும்.
4. மற்றவை முத்தஷாபிஹாத் ஆகும்.
5. எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முத்தஷாபிஹாத் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். (இங்கும் முடிவை விளக்கம் என தவறாக எழுதியுருக்கிறார்?
6. அல்லாஹ்வையும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களைத் தவிர வேறு எவரும் அதன் விளக்கத்தை அறிய மாட்டார்கள்.
7. அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று அவர்கள் கூறுவார்கள்.
8. அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
இப்போது குர்ஆனின் நடைமுறைப்படி 7வது வாக்கியத்தில் இடம் பெறும் அவர்கள் என்ற பதத்தை அதற்கு முன்னுள்ள 1,2,3,4,5,6 என்ற ஆறு வாக்கியங்களில் எது ஒன்றுடனாவது இணைத்துச் சொல்லட்டும் நாம் மறுக்கப் போவதில்லை. அல்லது அதற்கு முன்னுள்ள ஆறு வசனங்களுடனாவது பொருந்திக் காட்டட்டும் பார்க்கலாம். 1வது வாக்கியத்திலுள்ள அவனுக்கு அது பொருந்தாது. 2,3,4வது வாக்கியங்களுக்குச் சம்பந்தமே இல்லை. 5வது வாக்கியத்திலுள்ள அவர்களுக்கும் பொருந்தாது.
ஆக, இந்த ஐந்து வாக்கியங்களுக்கோ அல்லது முன்னைய ஆறு வசனங்களுக்கோ 7லுள்ள அவர்கள் பொருந்தாது என்பதை அவர்களும் மறுக்கப் போவதில்லை. எஞ்சி இருப்பது 6வது வாக்கியம் மட்டுமே. அவர்களுக்குத் திறமை இருந்தால் 6வது வாக்கியத்தை இரண்டு தனித்தனி வாக்கியங்களாக எழுவாய், பயனிலையுடன் மூல அரபி மொழியில் பேதம் ஏற்படாமல் பிரித்துக் காட்டட்டும். முடியாது. எனவே, 7லுள்ள அவர்கள் 6லுள்ளவர்களைத்தான் குறிக்கும் என்றால் நிச்சயமாக அல்லாஹ்வும் கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களும் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அவற்றில் நம்பிக்கை கொள்கிறோம்” என்று மொழி பெயர்க்க முடியுமேயல்லாமல், அல்லாஹ்வை விட்டு கல்வியில் உறுதிப்பாடுடையவர்கள் மட்டுமே அவ்வாறு கூறுவார்கள் என்று பிரித்தெடுப்பதற்கு அல்குர்ஆனில் ஆதாரம் இல்லை. அரபி இலக்கண விதிப்படியும் தவறு என்ற முடிவுக்கே வரமுடியும்.
நம்மீதுள்ள ஒரு கடும் குற்றச்சாட்டுக்கு விளக்கம்:
இதுவரை முத்தஷாபிஹாத் வசனங்களை விளங்க முடியாது என்று முல்லாக்கள் சொல்லி மக்களை குர்ஆனை நெருங்க விடாமல் தடுத்து வந்தனர். ஆனால் இன்று முல்லாக்களை எதிர்ப்பதாக கூறிக் கொள்வோர் “முத்தஷாபிஹாத்” வசனங்களை விளங்க முடியாது என்று கூறி முல்லாக்களின் வேலையை எளிதாக்கி வைத்துள்ளதாக ஒரு கடும் குற்றச்சாட்டு நம்மீது சொல்லப்பட்டிருக்கிறது.
“முத்தஷாபிஹாத் வசனங்களை விளங்க முடியாது என்று நாம் அன்றும் சொன்னதில்லை. இன்றும் சொல்வதாக இல்லை. அண்டப் புளுகர், ஆகாசப் பொய்யர்தான் மீண்டு மீண்டும் நாம் கூறாததைக் கூறுவதாக அதாவது விளங்க முடியாது என்று கூறுவதாகத் தொடர்ந்து புளுகிக் கொண்டிருக்கிறார். நாம் சொல்வது எல்லாம் “முத்தஷாபிஹாத்” வசனங்களுக்கு இறுதியான-முடிவான கருத்தைச் சொல்லி “முத்தஷாபிஹாத்” வசனங்களை “முஹ்க்கம்” வசனங்களாக மாற்றும் அதிகாரம் கல்வி அறிவில் உறுதிப் பாடுடையவர்களுக்கும் இல்லை.அந்த அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று என்பதேயாகும்.
குர்ஆனை விளங்கும் தகுதி பொதுமக்களுக்கு இல்லை. அரபி மொழி படித்த எங்களுக்கே அந்த ஆற்றல் உண்டு என்று முல்லாக்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பது உண்மைதான். இந்த நிலையில் முத்தஷாபிஹாத் வசனங்களை முஹ்க்கம் வசனங்களாக மாற்றும் அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. கல்வி அறிவில் உறுதிப்பாடுடையவர்களுக்கும் அந்த அறிவு இல்லை என்று சொல்லும் அதாவது கல்வி அறிவில் உறுதிப்பாடுடையவர்களுக்கு சமுதாயத்தை பிளவுபடுத்தும் வகையில் தனிச் சிறப்பு இல்லை என்று சொல்லும் நாம் முல்லாக்களின் பிரிவினை வாதத்திற்கு துணை போகிறோமா? அல்லது கல்வி அறிவில் உறுதிப்பாடுடையவர்களுக்கும் அல்லாஹ்வுக்கு இருப்பதுபோல் முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு இறுதியான திட்டமான பொருளைக் கொடுத்து அவற்றை முஹ்க்கமான வசனங்களாக ஆக்கும் அறிவு உண்டு என்று சொல்லும் அவர்கள் அந்த முல்லாக்களின் வேலையை இதன் மூலம் எளிதாக்கி வைத்துள்ளனரா? என்பதை சிந்தித்து விளங்க வேண்டும். முல்லாக்களுக்குத் துணை போவது யார் என்பதை முடிவு கட்ட வேண்டும்.
பொதுமக்களால் முடியாத இந்தச் செயல் அறிவில் உறுதிப்பாடுடையவர்களால் ஆகும் என்றால் அதன் பொருள் என்ன? அதுவும் அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றலைப் போல் இவர்களுக்கம் ஆற்றல் இருக்கிறது என்ற பொருளில் 3:7 வசனத்தில் அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களும் தவிர வேறு எவரும் அதன் விளக்கத்தை அறியமாட்டார்கள்” என்று மொழிபெயர்ப்பது எதைக் குறிக்கிறது? ஆலிம்கள்அறிந்தவர்கள்-உயர்ந்தவர்கள், அல்லாஹ்வைச் சார்ந்தவர்கள் -மவ்லவிகள் அவர்களை ஹழரத் -சந்நிதானம், என்று மூச்சுக்கு முப்பது தடவை அழைத்து அவர்களை தெய்வாம்சம் பொருந்தியவர்களாக உயர்த்தி அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்கு (பொதுமக்களுக்குத்தான் முத்தஷாபிஹாத் வசனங்கள் விளங்காதே. மவ்லவிகளாகிய -ஆலிம்களாகிய இவர்களுக்கு மட்டும்தானே விளங்கும்) என கண்மூடி வாய்பொத்தி எவ்வித சுயசிந்தனையுமில்லாமல் ஏற்றுச் செயல்படவேண்டும் என்பதைத்தானே குறிக்கிறது.
இப்போது முல்லாக்களின் புரோகித வாதத்திற்கு-பிரிவினை வாதத்திற்கு துணை போவது நாமா? அவர்களா? நிதானமாகச் சிந்திக்க வேண்டுகிறோம்.
“முத்தஷாபிஹாத்” வசனங்களை விளங்கும் விஷயத்தில் முறையாக முயற்சிப்பவர்கள் அனைவரும் பலவிதமாக விளங்குகிறார்கள். ஒரே கருத்தை உறுதியாக-இறுதியாக சொல்லும் ஆற்றல் அவர்களில் எவருக்கும் இல்லை. அந்த அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. கல்வியறிவில் உறுதிப்பாடுடையவர்கள், இவை அனைத்தும் (முஹ்க்கமாத், முத்தஷாபிஹாத் இருவகை வசனங்களும்) எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அவற்றில் நம்பிக்கை கொள்கிறோம் என்று சொல்லுகிறார்கள் என்று 3:7 வசனத்திற்கு பொருள் கொள்கிறவர்கள் முல்லாக்களுக்குத் துணை போக முடியாது. 3:7 வசனத்திலுள்ள முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை அறிவதால், ஆலிம்களுக்கு -அறிஞர்களுக்கு தனிச்சிறப்பு இருக்கிறது என்று வாதம் செய்வோரே முல்லாக்களின் பிரிவினை வாதத்திற்குத் துணை போகிறார்கள். இதனை சம்பந்தப்பட்டவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். புரோகிதர்கள் புரிய மாட்டார்கள்.
இதுவரை நியாயமான வாதங்கள் அனைத்திற்கும் முறையான விளக்கங்களைக் கொடுத்து விட்டோம். விதண்டாவாதங்களை மட்டுமே தவிர்த்துள்ளோம். நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு 3:7 வசனம் பற்றிய ஐயப்பாடுகள் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறோம். ஆக 3:7 வசனத்தில் முத்தஷாபிஹாத் வசனங்களின் இறுதி முடிவை அல்லாஹ்வோடு, அறிவில் சிறந்தவர்களும் அறிவார்கள் என்று பொருள் கொள்வது அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் கொடிய குற்றம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். முத்தஷாபிஹாத் வசனங்களை முஹ்க்கமாத் வசனங்களின் நிலைக்குக் கொண்டு வரும் தனிப்பெரும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானதாகும். அந்த தனிப்பெரும் ஆற்றலில் அறிவில் உறுதிப்பாடுடையவர்கள் மட்டுமல்ல வேறு எவரும் பங்கு போட முடியாது. இதுவே தெளிவான தீர்ப்பாகும். 3:7 வசனத்தில் வரும் “தஃவீல்” பதத்திற்கு இறுதி முடிவு என்று பொருள் கொள்ளாமல் விளக்கம் என்ற பொருளைக் கொடுத்து தானும் குழம்பி மக்களையும் குழப்புவது பெருங் குற்றமாகும் எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த பெரும் வழிகேட்டிலிருந்து நம்மனைவரையும் காப்பானாக
முடிவுரை:
அல்குர்ஆனை, முயற்சிப்பவர்களனைவரும் விளங்கிக் கொள்ள முடியும் என்று நாம் சொல்வதை சிலர் தப்பாக புரிந்து கொள்கிறார்கள். அரபியில் இருப்பதை அரபி மொழி தெரியாதவர்களும் பார்த்தவுடன் விளங்கிக் கொள்வார்கள் என்று நாம் சொல்வது போல் கதை கட்டி விடுகிறார்கள். ஒரு கூட்டத்தில் முகல்லிது மவ்லவி ஒருவர் திருக்குறளிலிருந்து ஒரு குறளை எடுத்துப் படித்துக்காட்டி அதனை எல்லோரும் விளங்கிக் கொண்டீர்களா? என கேட்டு நையாண்டி செய்துள்ளார். அவர்கள் எண்ணுவது போல் மூளையற்ற வாதத்தை மக்கள் முன் நாம் எடுத்து வைக்கவில்லை. அரபி மொழியிலுள்ள குர்ஆனை அவர்களது தாய் மொழியில் மொழி பெயர்த்துக் கொடுக்கும்போது, அரபி மொழியிலுள்ளதை அரபிகள் எவ்வாறு விளங்கிக் கொள்கிறார்களோ அதே போல் அவரவர்களது தாய்மொழிகளில் பெயர்க்கப்பட்டிருப்பதை அந்தந்த மொழியை பேசுபவர்கள் விளங்கிக் கொள்ள முடியும் என்றே சொல்லுகிறோம்.
திருக்குறள் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பிருந்த தமிழ்மொழி நடையில் இயற்றப்பட்டுள்ளது. இன்றைய தமிழ் மொழி நடையில் அதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். அதிலொன்றைப் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவனும் அதனை விளங்கிக் கொள்வான் என்ற உண்மையை அந்த முகல்லிது மவ்லவி அறியாத அறிவிலியாக இருக்கிறார். தமிழ் மொழிக்காவது இப்படியொரு தடுமாற்றமிருக்கிறது. 100 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு தமிழ் உரையைப் படித்துப் பாருங்கள். உண்மையை உணர்வீர்கள். இந்தத் தடுமாற்றமும் அரபி மொழிக்கு இல்லை என்பதே உண்மையாகும். 1400 வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த அதே மொழி நடை இன்றும் அரபு நாடுகளில் இருக்கத்தான் செய்கிறது. அந்த அளவு அற்புதத்தை அல்குர்ஆன் இன்று வரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதாவது குர்ஆன் இறக்கப்பட்ட அரபி மொழி நடை சாகாமல்-ஏட்டுச் சுரக்காய் ஆகாமல் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஏனைய நெறிநூல்கள் அருளப்பட்ட மொழிகள் அனைத்தும் இன்று மக்களின் நடைமுறையிலிருந்து அழிந்து விட்டன. செத்த மொழிகள் (Dead language) ஆகிவிட்டன.
அல்லாஹ்வின் இறுதி நெறிநூலான அல்குர்ஆனை அகில உலக மக்களும் உலக இறுதி நாள்வரை விளங்கிச் செயல்பட வேண்டும் என்ற காரணத்தினாலேயே அல்லாஹ் இந்த தனி ஏற்பாட்டைச் செய்துள்ளான். இன்று தமிழ் பேசும் ஒருவர் திருக்குறளின் மூலத்தைப் படித்துவிட்டு தடுமாறுவது போல் அரபி மொழி பேசும் ஒருவர் அல்குர்ஆனை படித்துவிட்டு தடுமாற வேண்டியதில்லை. அவரால் அதனை விளங்கிக் கொள்ள முடியும். அந்த அளவு எளிதாக்கப்பட்டுள்ளது அல்குர்ஆன். (பார்க்க அல்குர்ஆன் 54:17, 22, 32, 40)
அல்குர்ஆனை அனைவரும் விளங்க முடியும் என்று நாம் சொல்வது 1400 வருடங்களாக அறிஞர்கள் குர்ஆனின் வசனங்களுக்கு கொடுத்திருக்கும் நேரடி விளக்கங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு சுயமாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் சொல்லவில்லை. குர்ஆனின் கருத்துக்கு மாற்றமான-தவறான கருத்தைச் சொல்லிக் கொண்டு உங்களுக்கு குர்ஆனை விளங்க முடியாது. நாங்கள் சொல்வதுதான் சரியான விளக்கம் என்று பொதுமக்களை சத்தியப்பாதையிலிருந்து -நேர்வழியிலிருந்து வழிகேட்டிற்கு இட்டுச் செல்வதையே வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உதாரணமாக 18:102லிருந்து 106 வரையுள்ள வசனங்கள் அல்லாஹ்வின் அடியார்களை -அவுலியாக்களை தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து தரும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்கள் காஃபிர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்களின் நற்செயல்கள் யாவும் அழிந்து விடுகின்றன. அவர்கள் போய்ச்சேருவது நரகமாகும். அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள் என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால் இந்த முல்லாக்களோ பொது மக்களிடம் இந்த வசனங்கள் குறை´ காஃபிர்களுக்காக இறங்கியது. உங்களுக்காக அல்ல. நீங்கள் தாராளமாக இறந்து போனவர்களுக்காக தர்காக்களைக் கட்டிக் கொண்டு, அவற்றை அழங்கரித்து அங்கு சென்று உங்களின் சகல தேவைகளையும் அவர்களிடம் முறையிடவும். இறந்து போன அவர்கள் உங்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் என்று கூறி வழி கெடுக்கிறார்கள்.
18:102-106 வசனங்கள் நீங்கள் கூறுவதைச் சொல்லவில்லையே என்று அந்த மவ்லவிகளிடம் கேட்டால், உங்களால் குர்ஆனை விளங்க முடியாது. நாங்கள் கூறுவதுதான் விளக்கம் என்று பொதுமக்களை ஏமாற்றி வழி கெடுக்கிறார்கள். ஆக இந்த மவ்லவிகள் சொல்வதுபோல் குர்ஆன் விளங்க முடியாத நிலையில் இல்லை என்றே நாம் சொல்லி வருகிறோம். அதேபோல் 7:3 வசனத்தில் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை பின்பற்றும்படியும், நபி தோழர்களையோ, முன்னோர்களையோ, இமாம்களையோ பாதுகாவலர்களாக்கி அவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்றும் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வால் இறக்கப்பட்டது அல்குர்ஆன், அவனது அனுமதியின்பேரில் அவனது அங்கீகாரத்துடன் உள்ளவை இறுதி நபியின் நடைமுறைகள்-ஹதீஸ்கள். ஆக குர்ஆனையும், ஹதீஸையும் மார்க்கத்தின் அடிப்படைகளாக ஏற்றுக் கொள்வது இந்த 7:3 வசனத்தின் கட்டளை. ஆனால் இந்த மவ்லவிகள் எவற்றை மார்க்கமாக உபதேசிக்கிறார்கள். 7:3 வசனத்தின் கட்டளைக்கு நேர்மாற்றமாக குர்ஆனுக்கும்., ஹதீஸுக்கும் முரணாக முன்னோர்களின் கற்பனை கட்டுக்கதைகளை மார்க்கமாக எடுத்து நடக்கும்படி உபதேசிக்கிறார்கள். தங்களின் தவறான போதனையை நியாயப்படுத்த குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என்று இவர்களாக கற்பனை செய்கிறார்கள். குர்ஆனையும், ஹதீஸையும் போல் இஜ்மா, கியாஸையும் மார்க்கத்தின் அடிப்படைகளாக எங்கிருந்து பெற்றார்கள்? குர்ஆனிலிருந்து ஒரேயொரு வசனத்தையாவது காட்ட முடியுமா?
7:3 வசனத்திற்கு முற்றிலும் முரணான இஜ்மா, கியாஸை அல்லது லாஜிக், பாலிசியை மார்க்கத்தின் அடிப்படைகளாக ஆக்கிக் கொண்டு, உங்களுக்கு குர்ஆனை விளங்க முடியாது நாங்கள் கூறுவது தான் விளக்கம் என்று சொன்னால் அதனையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டுமா? ஆக இப்படி குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முற்றிலும் முரணானவற்றை மார்க்கமாக்கிக் கொண்டு உங்களுக்கு குர்ஆனை விளங்க முடியாது என்று இந்த மவ்லவிகள் மக்களை ஏமாற்றி வருவதைத்தான் நாம் வன்மையாக மறுக்கிறோம். கண்டிக்கிறோம்.
அல்குர்ஆனில் வெள்ளை என்றிருப்பதை கருப்பு என்று சொல்லிக்கொண்டு (உதாரணத்திற்கு குறிப்பிட்டுள்ளோம்) உங்களுக்கு குர்ஆனை விளங்க முடியாது என்று சொல்வதை பகுத்தறிவு சிறிதாவது வேலை செய்யும் எவனாவது ஏற்றுக் கொள்ள முடியுமா? பகுத்தறிவை பயன்படுத்தத் தெரியாத வடிகட்டிய மூடர்கள் மட்டுமே குர்ஆனில் வெள்ளை என்றிருப்பதற்கு கருப்பு என்று இந்த மவ்லவிகள் விளக்கம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியும்.
மவ்லவிகள் பொதுமக்களை இப்படி ஏமாற்றி வருவதையே வன்மையாகக் கண்டிக்கிறோம். அப்படி ஒன்றும் குர்ஆன் விளங்க முடியாத ஒரு வேதம் அல்ல அது நெறிநூல் என்று தெளிவு படுத்துகிறோம். மற்றபடி குர்ஆன் வசனங்களுக்கு இணக்கமான விளக்கங்களைக் கொடுத்துள்ள அறிஞர்களின் கருத்துக்களை மதிக்கிறோம். அவற்றை ஆராய்கிறோம். அவற்றிலுள்ள சத்திய விளக்கங்களை மதித்துப் போற்றுகிறோம்.
இந்த அடிப்படையில் கலீஃபாக்கள், நபிதோழர்கள், தாபியீன்கள், தபவு தாபியீன்கள், இமாம்கள், அறிஞர்கள் அனைவரின் குர்ஆன், ஹதீஸுக்கு ஒத்த கருத்துக்களை மதித்து ஏற்றுக் கொள்கிறோம். தெள்ளத் தெளிவான குர்ஆன், ஹதீஸ் அறிவுரைகளுக்கு முரணான கருத்துக்கள் மேலே சொன்ன பெரியார்களின் பெயரால் சொல்லப் பட்டால் குர்ஆன், ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்கிறோம். 7:3 வசனம் இவ்வாறே கட்டளையிடுகிறது. எந்த நிலையிலும் அல்லாஹ் அல்லாத யாரையும் பாதுகாவலர்களாக எடுத்து அவர்களுக்கு குர்ஆன் தெரியாதா? ஹதீஸ் தெரியாதா? அவர்களை விடவா நாம் அறிந்து கொண்டோம்? என்ற ஷைத்தானின் துர்போதனையில் சிக்கி அவர்களைக் கண்மூடி பின்பற்றுவதை 7:3 வசனம் தெளிவாக மறுக்கிறது. 33:36,66-68 வசனங்கள் உறுதியாக மறுக்கின்றன.
அல்லாஹ்வின் கட்டளையை தலைமேல் கொண்டு அதனையே செயல்படுத்தக் கோருகிறோம்.
இந்த அடிப்படையில் குர்ஆன், ஹதீஸுக்குத் தெள்ளத் தெளிவான விளக்கம் இருக்கும் நிலையில் அதற்கு முரணாக, உங்களுக்கு குர்ஆனை விளங்காது, ஹதீஸ் விளங்காது என்று சொல்லி, முன்னோர்களின் பெயரால் மார்க்க முரணான காரியங்களை மார்க்கமாக கற்பித்து மக்களை வழிகெடுத்து இந்த முல்லாக்கள் அற்ப உலக ஆதாயம் அடைவதையே வன்மையாக கண்டிக்கிறோம். அதனையே மக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். அந்த அடிப்படையிலேயே குர்ஆனை அனைவராலும் விளங்க முடியும் என்று கூறி பொதுமக்களை விழித்தெழச் செய்கிறோம்.
ஆதம்(அலை) அவர்களது சந்ததிகளில் தோன்றிய இடைத்தரகர்கள்-புரோகிதர்கள் துணிந்து செய்த மாபெரும் குற்றம் இறைவனை மனிதனாக்கியதும், மனிதனை இறைவனாக்கியதுமேயாகும். இதனையே “அத்வைதம்” என்றழைக்கிறார்கள். இந்த மாபெரும் குற்றத்தை- இறைவனுக்கு இணைவைக்கும் மாபாதகத்தை இந்த மவ்லவிகள் இஜ்மா, கியாஸ் என்ற பெயரால் இஸ்லாத்திலும் நுழைத்து விட்டார்கள். தூய “இஸ்லாம்” மார்க்கத்தையும் களங்கப்படுத்தி விட்டார்கள்.
எனவே எமது நோக்கம் இதுதான். இஸ்லாத்தில் இடைத்தரகர்களுக்கு இடமேயில்லை. அடியான் அல்லாஹ்விடம் நேரடியாக முறையிட முடியும். எவரும் மார்க்கத்தின் பெயரால் இடைத்தரகர்களாகப் புகுந்து மக்களை ஏமாற்றக் கூடாது. அவர்களின் அற்ப உலக ஆதாயத்திற்காக மக்களை வழிகெடுத்து நரகப் படுகுழியில் கொண்டு தள்ளக் கூடாது. இந்த இடைத்தரகர்களான மவ்லவிகள் நெருப்பை தங்கள் வயிற்றில் நிரப்பக்கடாது. ஆக பொதுமக்களும், இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளும் உண்மையில் வெற்றி பெற்று மறுமையில் ஈடேற்றம் பெறும் வழியையே மக்கள் முன் வைக்கிறோம். எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் அவன் கொடுத்துள்ள நேர்வழி சென்று அவனது பொருத்தம் பெரும் நல்லடியார்களாக நம்மனைவரையும் ஏற்றருள் புரிவானாக!