அன்று அல்லாஹ்வுடைய பள்ளி இன்று சுன்னத்வல் ஜமாஅத் பள்ளி

in 1996 ஜனவரி,பொதுவானவை

 அபூ உ வைஸ்

ஹஜ்ரத்மார்களை கண்மூடி பின்பற்றி அவர்களுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கும் எனது அருமை சமுதாயத்தவர்களே! என்று உண்மையை உணரப் போகிறீர்கள்! அன்று அல்லாஹ்வின் இல்லமாம் பாபரிமஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டது. ஒருமித்த குரலில் இறை இல்லம் தகர்க்கப்படுகிறது என நாம் அனைவரும் ஆர்ப்பரித்தோம். இன்னுயிர் பல ஈந்தோம். எனினும் ஒரே இறைவனை மட்டும் வணங்கக் கட்டப்பட்ட வல்ல அல்லாஹ்வின் பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டு பல தெய்வ வணக்கக்காரர்கள் உள்ளே நுழைந்தனர். பல சிலைகளை உள்ளே நிறுவினர். இது நாம் கண்ட கடந்த கால நிகழ்ச்சி.

இன்று அல்லாஹ்வின் பள்ளிகளை சுன்னத்வல் ஜமாஅத் பள்ளி என மாற்றி நம்மை போர்டுகளையும் மாட்ட வைத்து, தங்களது வியாபார ஸ்தலங்களாக நிலை நாட்ட முற்படுவதையும் கண்மூடி ஏற்று கொண்டு இருக்கின்றோம். பிற்காலத்தில் நமது நமுதாய உலமாக்கள் மார்க்கத்தை வியாபாரமாக்கி கூலிக்கு மார்க்கப் பணி புரிவார்கள் என்பதை முன்பே அறிந்த அல்லாஹ் மிகத் தெளிவாக எச்சரிப்பதைப் பாருங்கள். “உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களைப் பின்பற்றுங்கள் ”சூரா யாஸீன் வசனம் 21.

இன்னும் இது போன்ற பன்னிரெண்டுக்கம் மேற்பட்ட வசனங்கள் மார்க்கப் பணிக்கு கூலி வாங்கக் கூடாது என எச்சரிக்கின்றன. மேலும் நாம் உயிரினும் மேலாக போற்றும் நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையைப் பாருங்கள்.

“நிச்சயமாக உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தீனாருக்கோ, திர்ஹமுக்கோ வாரிசாக மாட்டார்கள். ”அறிவிப்பவர் அபூதர்தாஹ் (ரழி)  நூல்:-அபூதாவூத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்,  இப்னுஹிப்பான், பைஹகி, ஹாக்கிம, அபூயஃலா, தப்ரானீ போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இச்செய்தி இடம் பெற்ற உள்ளது.
(தீனார், திர்ஹம் அக்கால அரபு நாட்டு நாணயங்கள்)

மேற்சொன்ன உண்மையான அறிவிப்பில் நாம் இந்த ஹஜ்ரத்மார்களை எச்சரிக்கும் விதமாக வல்ல அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறுகிறார்கள்.

எவன் குர்ஆனை ஓதுகிறானோ அவன் அல்லாஹ்விடம் கேட்கட்டும் வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடம் கூலி கேட்பவர்கள் தோன்றுவார்கள். நூல்: திர்மதி, அஹ்மத்

குர்ஆனை ஓதுங்கள்; அதன் மூலம் பொருள் திரட்டவோ, சாப்பிடவோ செய்யாதீர்கள். நூல்:அஹ்மத்,தப்ரானி, தஹாவி இப்னு அஸாகிர்.
மேலும் வல்ல அல்லாஹ்வும் இவர்களை குறித்தே எச்சரிக்கை செய்கிறான்.

“என் திருவசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள், இன்னும் எனக்கே அஞ்சுவீர்களாக, நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். ” (அல்குர்ஆன் 2:41,42)

இந்த குர்ஆன் வசனங்களை காணும் எனது அருமை சமுதாயமே வல்ல அல்லாஹ் கொடுத்த அறிவை கொண்டு சிந்திக்க வேண்டாமா? அன்று அல்லாஹ்வுடைய பள்ளி என்று புரோகிதர்கள் நம்மை கூறச் செய்து தங்ளது வியாபார ஸ்தலத்தைப் பாதுகாப்ப செய்தார்கள். இன்று சுன்னத்வல் ஜமாஅத், முஜாஹித், அஹ்லே ஹதீஸ், JAQH, TNTJ பள்ளிகள் என்று கூறி தங்கள் வியாபாரத்திற்கு தடையாக வருபவர்களை உண்மை மார்க்கம் போதிப்பவர்களை பள்ளிக்கு வர, பேச, தடை செய்கிறார்கள். இதை முஸ்லிம்கள் புரிய முடியவில்லையா?

அன்புள்ள ஆலிம்சாக்களே! அவர்களை கண்மூடி பின்பற்றும் சகோதர, சகோதரிகளே! இந்த முறை எச்சரிக்கையை ஊன்றிக் கவனியுங்கள்.

” அல்லாய்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைப் சொல்லி துதிப்பதை தடுத்து அவற்றை பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும? இத்தகையோர் அச்சமின்றி பள்ளி வாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்(உலக) வாழ்வில், இழிவுதான்; மேலும், இவர்களுக்கு மறுமையில் கடுமையானவேதனை உண்டு. ”(அல்குர்ஆன் 2:114)

மேலும் நம்மில் 90% மக்கள் ஹழரத்துகள் இருந்தால் தான் இஸ்லாம் மார்க்கம் இருக்கும் எனவும்; மார்க்கம் இருக்க வேண்டுமானால் ஹழரத்துகள் இருந்தாக வேண்டியது அவசியம் எனவும், முழுமையாக நம்பியுள்ளார்கள். நம்மை அந்த அளவுக்கு நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள் இந்த ஆலிம்சாக்கள். நாம் இவ்வாறு ஏமாந்து சோடை போனதற்குக் நிதர்சனமான உண்மை. இதனாலேயே ஹஜ்ரத்துகள் “அல்அவாம் கல்அன்ஆம் ” என்று மவ்லவி அல்லாதவர்களை ஆடு, மாடுகளை போன்றவர்கள் என்று கூறுகின்றனரோ?

அன்பு சமுதாயத்தவர்களே இவ்வுண்மைகளை நாம் தெளிவாக அறிய நாம் ஏற்றுக் கொண்ட  குர்ஆனையும், நாம் உயிரினும் மேலாக போற்றும் நபியவர்களின் வழியையும் அறிய முற்பட வேண்டும். அல்லாஹ்வின் அளப்பெரிய உதவியால் இவைகள் நம் தாய் மொழிகளிலேயே வெளி வந்து விட்டன. பூசாரிகளை நம்பியது போதும்; புறப்படுங்கள் உண்மை மார்க்கம் அறிய!

உயிருள்ள மக்கள் வாழ்வதற்கு வழிகாட்ட வந்த குர்ஆனை கத்தம், பாதிஹா பேரால் செத்தவர்களுக்கு ஓத வைத்து காசுகள் பறித்து இவ்வுலகில் நம்மை மடையர்களாக்கி மறுமையில் நரகில் தள்ள வைப்பதும் இப் பூசாரிகளே! பூசாரிகளை இனியும் நம்ப வேண்டாம். இறைவனும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் கூறியது போல் கூலி வாங்காமல் மார்க்கப் பணி புரியும் அல்லாஹ் கூறும் உண்மை ஆலிம்களை உருவாக்க பாடுபடுவோம். இன்ஷா அல்லாஹ்.

அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் ஆலிம்கள் (அல்குர்ஆன் 35:28) அல்லாஹ்வின் நல்லடியார்களே “எவனொருவன் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்களை மூடிக் கொள்வானோ அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்;
அவன் இவனுடைய நெருங்கிய நண்பனாகி விடுகிறான். ”(அல்குர்ஆன் 43:36)

“இன்னும் (அந்த ஷைத்தான்கள்) அவர்களை நேரான பாதையில் இருந்து தடுத்து விடுகின்றனர். ஆனால் தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்” (அல்குர்ஆன் 43:37)

“எதுவரையென்றால் இறுதியாக அத்தகையவன் நம்மிடம் வரும்போது, (தன்னை கெடுத்தவனிடம் கூறுவான்) ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்கு திசைக்கும், இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே; (எங்களை வழி கெடுத்த) இந்த நண்பன் மிகவும் கெட்டவன் (என்று கூறுவான்)” என வல்ல அல்லாஹ் தனது திருமறையில் திட்டவட்டமாகக் கூறுவதை திடமாக நம்புங்கள். (அல்குர்ஆன் 43:38)

Previous post:

Next post: