ஐயமும்! தெளிவும்!!

in 1996 பிப்ரவரி,ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: நான் மாற்றுமத பெண்ணை விரும்புகிறேன்; மாற்றுமத பெண்ணை திருமணம் செய்யலாமா? அந்தப் பெண் இஸ்லாத்திற்கு வர தயாராக இருந்தும் எனது வீட்டில் ஏற்க மறுக்கிறார்கள். இந்நிலையில் நான் என்ன செய்வது? முஜாஹிதீன், தம்மாம்.

தெளிவு: இன்றைய முஸ்லிம் சமுதாயத்திலேயே பல குமரிகள் மணமுடிக்கப்படாமல் பெருமூச்சு விட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிலர் தங்களுக்குத் தகுந்த வரன் கிடைக்காததால் வேறுவழியின்றி தகாத வழியில் சென்றுவிட நேரிடுகிறது. இதை நாம் தமிழகத்தில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நிலைமை இப்படி இருக்க நமது முஸ்லிம் இளைஞர்கள் மாற்றுமதப் பெண்களை மனமுடிப்பது நாகரீகம் (Fashion) ஆகக் கொண்டுள்ளனர். இந்நிலைக்கு நீங்களும் ஆளாக்கப்பட்டு விட்டீர்களே என்று வருந்துகிறோம். இருப்பினும் தங்களது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையில் பதில் கூறுகிறோம்.

மாற்று மதப் பெண்களை தாங்கள் விரும்பி விட்டதால் எப்படியாவாது உங்களுடைய பெற்றோர்களை சம்மதிக்கச் செய்து அவர்களுடைய சம்மத்துடன் அந்த பெண்ணை இஸ்லாத்தில் இணையச் செய்து முறைப்படி திருமணம் செய்துகொள்வதே சாலச் சிறந்ததாகும்.உங்கள் காதல் விவகாரம் காரணமாக உங்களை ஈன்றெடுத்து வளர்த்த பெற்றோர்களை, அவர்களுடைய சம்மதம் இல்லாமல் மணமுடிப்பது கொண்டு மனம் நோகச் செய்வது குர்ஆன், ஹதீஸ் உடைய தெளிவில் குற்றம் என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். அதே சமயம் அவர்கள் கைக்கூலி, சீர்வரிசை, மாற்றும் திருமண சமயத்தில் மார்க்க முரணாக ´ஷிர்க், பித்அத் காரியங்களில் உங்களை வற்புறுத்தினால் அதற்கு நீங்கள் இணங்க வேண்டாம். இங்கு உங்களையும், அவர்களையும் படைத்துப் போஷித்துப் பாதுகாத்து வரும் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடப்தே முதற்கடமையாகும். இதனை அல்லாஹ் அல்குர்ஆன் 31:14, 15 ஆகிய வசனங்களில் தெளிவுபடுத்தியுள்ளான்.

————————————

ஐயம்: நாமெல்லாம் ஐந்து வேளை தொழுகிறோம் சரிதான். ஆனால் எங்கள் ஊரில் சிலர் ஐந்து வேளை தொழுங்கள் என்று குர்ஆனில் சொல்லப்படவில்லையே! ஏன்? என்று கேட்கிறார்கள். நானும் குர்ஆனின் விளக்கங்களை எல்லாம் தேடிப் பார்த்தும் கூட ஐந்து வேளை தொழுகுங்கள் என்று சொல்லக் கூடிய சொல் இல்லை. விளக்கம் தாருங்கள்!   A.K.M.Bசெங்கை

தெளிவு: ஜகாத் 2 1/2 சதவீதம் கொடுக்க வேண்டும் என்றும் குர்ஆனில் இல்லை. தினசரி ஐவேளை தொழவேண்டும் என்றும் குர்ஆனில் இல்லை. ஏன்? இஸ்லாத்தின் மூலக் கலிமாவான லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்பதும் குர்ஆனில் இல்லை. எனவே இவையனைத்தையும் நாம் விரும்பியவாறு செய்யலாமா? இதனை ஒரு வாதத்திற்காக உங்கள் முன் வைத்தோம்.

குர்ஆனில் தெளிவில்லாத இதுபோன்ற விஷயங்களுக்கு ரசூல்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழி முறை(ஹதீஸ்) தெளிவு பகர்கிறது. இதனையே அல்லாஹுவை வணங்குங்கள், அவனது தூதரைப் பின் பற்றுங்கள் என்று அல்லாஹ் திருகுர்ஆனில் திருப்பித் திருப்பி கூறுகிறான்.

அனைத்திற்கும் மேலாக, ரசூல்(ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்து தொழுகையைக் கடமையாக்கியது முதல் இன்று வரை எவரும் இதுபோன்ற ஒரு சர்ச்சையை உருவாக்கியதில்லை. அண்மையில் மேலை நாட்டவர்களின் முயற்சியால் அஹ்லுல் குர்ஆன் என்ற பெயரில் ஒரு சிலர் இச்சர்ச்சையை உருவாக்கியுள்ளனர். இது அவர்களது அறியாமையைத் தெளிவுபடுத்துகிறது தினசரி ஐவேளை தொழுகை உண்டு என்பதை பற்பல உண்மையான ஹதீஸ்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை, நிலவிவரும் உண்மை. இச்சர்ச்சையை உருவாக்குபவர்கள் ஹதீஸ்களை மறுப்பவர்களாக இருந்தால் எம்முடன் நேரில் வாதிட அழைத்து வாருங்கள். அவர்களிடம் எந்த அளவிற்கு அறியாமையும் அவர்களது கொள்கைக்கு ஏற்ப மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் உள்ள தவறுகளையும் உங்கள் முன்பே நிரூபித்துக் காட்டுகிறோம். இது நேரில் நாம் கண்ட உண்மையாகும். அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழிகாட்டப் போதுமானவன்.

——————————-
ஐயம்: குளிர்காலத்தில் இரவில் ஸ்கலிதமாகி விடுகிறது. தண்ணீர் கொண்டு குளித்தால் காய்ச்சல் வரலாம். 4:29 வசனத்தின் படியும்-அம்ருபின் அல் ஆஸ்(ரழி) அறிவிக்கும் (அஹ்மது-அபூதாவூது) ஹதீஸ்படி தயமம் செய்து கொண்டால் போதுமா? விளக்கம் தரவும். (குளிர் பிரதேசங்களில் வசிக்கும் எங்களுக்கு இந்த கேள்வி மிக முக்கியமானது. தாமதம் இல்லாமல் பதில் தாருங்கள்). M.S கமாலுத்தீன், பெங்களூர்.

தெளிவு: குளிர் பிரதேசத்தில் வாழும் நீங்கள் அதற்கொப்ப வெந்நீரை வைத்துக் கொண்டு குளிப்பது, ஒளூ செய்வது கூடுமே. அந்நிலையிலும் தாங்கள் குளித்தால் தங்களுக்கு உடல் சுகவீனம் ஏற்படும் என்று பயந்தால் தாங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸின் அடிப்படையில் தயமம் செய்து கொள்வது கூடும். இதனை பொது சட்ட மாக எடுத்துக் கொள்வது கூடாது.

குளிர் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடல்நிலை, குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை அரவரவர்களே தக்வா இறையச்சத்துடன் கணித்து முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவின் மீதும் அது சுமக்க முடியாத சுமையை சுமத்துவதில்லை. (அல்குர்ஆன் 2:286)

—————————————–

ஐயம்: “ஆயத்துல்குர்ஸி’மட்டும் தொழுகையில் “அல்ஹம்து’க்கு பின் ஓதலாமா?  F.முஹம்மது அதாவுல்லாஹ் உளுந்தூர் பேட்டை.

தெளிவு: ஆயத்துல் குர்ஸி என்பது அல்லாஹ்வின் ஏகத்துவத்தை மட்டும் விளக்கும் ஒரு நீண்ட ஆயத்தாகும். தொழுகையில் அல்ஹம்து சூராவுக்குப் பின் இதை மட்டும் ஓதினாலும் போதுமானது.

———————————-

ஐயம்: கடுகளவு ஈமான் இருந்தாலும் அவரை நரகிலிருந்து வெளியேற்றி சுவர்க்கத்தில் புகுத்துவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபிமொழி உள்ளது.(இதனை வைக்காத நிலையில்) ஆனால் குர்ஆனில் 2:275வது வசனத்தில் வட்டி வாங்கி தின்பவன்”என்றென்றும்’ நரகில் தங்கிவிடுவ ரென்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவர் எல்லா அமல்களும் செய்கிறார். ஆனால் வட்டி வாங்குவது ஹராம் என்று தெரிந்தும் வட்டி வாங்கி தின்கிறார். இருப்பினும் இணைவைக்காத நிலையில் மரணிக்கிறார். இவருக்கு அல்லாஹ் சுவர்க்கம் கொடுப்பானா? அல்லாஹ் வாக்குறுதி மாறாதவன். மேற்கூறிய ஹதீஸையும் குர்ஆன் வசனத்தை பார்க்கும் போது சற்று குழப்பமாக உள்ளது. இது குறித்து எங்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே இதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கம் தரவும். -சாகுல் ஹமீது, விருதுநகர்.
தெளிவு: கடுகளவு ஈமான் இருந்தாலும் அவரை நரகிலிருந்து வெளியேற்ற சுவர்க்கத்தில் புகுத்துவேன் என்று அல்லாஹ் கூறியதாக ஹதீஸில் இருப்பது உண்மையே. திருகுர்ஆன் 2:275 வசனத்தில் வட்டி வாங்கித் தின்பவன் என்றென்றும் நரகில் தங்கி விடுவானென்று அல்லாஹ் கூறியிருப்பதும் உண்மையே. அல்லாஹ் வாக்குத் தவறாதவன் என்பதும் உண்மையே. மேலே குறிப்பிட்ட இரண்டு மட்டுமல்ல அவனது வாக்குகள். தான் நாடியவர்களை தண்டிப்பான். தான் நாடியவர்களை மன்னிப்பான்(2:284, 3:129, 5: 18, 48:14) வாக்குகளாகும். இந்த உரிமையில் கேள்வி கேட்க எவருக்கும் அதிகாரம் கிடையாது.

ஒரு தடவை ரசூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு எவர் இணைவைக்காமல் மரிக்கிறாரோ அவர் நிச்சயம் சொர்க்கம் புகுவார். இதனை செவியுற்ற நான் அம்மனிதர் திருடியிருந்தாலும், விபச்சாரம் செய்திருந்தாலுமா என்று கேட்டேன். அதற்கு ரசூல்(ஸல்) ஆம். அவர் திருடியிருந்தாலும் விபச்சாரம் செய்திருந்தாலும் அல்லாஹ் நாடினால் அக்குற்றங்கள் மன்னிக்கப்பட்டு அவர் சொர்க்கம் நுழைவார் என்றார்கள் என அபூதர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் : புகாரி 2/329, 4/445, 7/717, 8/285, 450,451, 9/579  முஸ்லிம் 1/171,172, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

தாங்கள் குறிப்பிட்டுள்ள நபர் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் வட்டி வாங்கி உண்டிருப்பாரேயானால் அல்லாஹ் நாடினால் அவரது வட்டி பாவத்தை மன்னித்து சுவர்க்கம் புகுத்தலாம்; அல்லது அவர் செய்த வட்டி பாவத்திற்காக அல்லாஹ் நாடிய காலம் அவருக்கு தண்டனையளித்து விட்டு அவரது உள்ளத்தில் கடுகளவாவது ஈமான் இருந்திருக்குமேயானால் அவரை கடைசியில் சொர்க்கம் புகுத்தலாம். ஒருவேளை அவரது இறை நம்பிக்கையிலேயே நாமறியாத ஆனால் அல்லாஹ் நன்கறிந்த தவறுகள் இருக்குமேயானால் அவர் நிரந்தரமாக நரகத்திலும் இருக்கலாம். இவையனைத்தும் அல்லாஹ்வின் ஏகபோக உரிமையில் உள்ளவை. எனவே இதைப்பற்றி சர்ச்சை செய்யாமல் நரகத்தின் கொடிய தண்டனையை அவருக்கு நினைவூட்டி வட்டி எனும் கொடிய பவாத்திலிருந்து விடுவிக்கச் செய்யுங்கள். அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு உதவிபுரிவானாக.

———————————–
ஐயம்: ஒளூ செய்யும்போது பிறருக்கு ஸலாம் கூறலாமா? அல்லது ஸலாமுக்கு பதில் கூறலாமா? அப்துல்லாஹ், திருச்சி -8.

தெளிவு: இதற்கு எந்தத் தடையும் இருப்பதாக நம்மால் காண முடியவில்லை.

Previous post:

Next post: