ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!

in 2010 அக்டோபர்

MTM.முஜீபுதீன், இலங்கை

ஆகஸ்டு தொடர் : 11
1400 ஆண்டுகளுக்கு முன் வேதக்காரர்களான யூதர்களும், கிறித்தவர்களும் தமது இறைத் தூதர்களை தமது மார்க்க விசயங்களில் எல்லை கடந்து கடவுளின் தரத்திற்கு உயர்த்தினர். பின் அல்லாஹ்வுக்கு வழிபாடு செய்வது போல் இறைத்தூதர்களை வழிபட்டனர். அதற்கு மேலதிகமாக ஈசா(அலை) அவர்களின் சீடர்கள், பாதிரிகள், சந்நியாசிகள் விசயத்திலும் எல்லை மீறினர். அவர்கள் பாவங்களிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்கள் என நம்பினர். ஈசா(அலை) ஒன்றை ஆகுமாக்கினால் அதை பாதிரிகள் ஆகாததாக்குவார்கள். அப்போது உண்மையோ அல்லது பொய்யோ கிறித்தவ விசுவாசிகள் தமது தூதர் நெறிநூலின் அடிப்படையில் சொன்னதை விட்டு பாதிரிமார்களும், சந்நியாசிகள் சொன்னதை ஏற்றுப் பின் பற்றினர். உதாரணமாக ஈசா(அலை) ஒரே இறைவனையே தெய்வமாகக் கொண்டு வணங்கி வழிபட வேண்டும் எனக் கூறினார். ஆனால் பாதிரிகளும், சந்நியாசிகளும் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என முக்கடவுள் கொள்கைகளையும், வேதத்தில் கூட்டல்களையும், குறைவுகளையும் இறைவனைப் போல் ஏற்படுத்த அதனை கிறித்தவ பக்தர்கள் வழிப்பட்டனர். அதனை அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் யூதர்களும், கிறித்தவர்களும் தமது பாதிரிகளையும், சந்நியாசிகளையும் வணங்கியதாக இச்செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறான். அவதானியுங்கள்:

யூதர்கள்(நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறினார்கள்; கிறித்தவர்கள்(ஈசா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறினார்கள்; இது அவர்கள் வாய்களினால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

அவர்கள் அல்லாஹ்விட்டும் தம் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களோ ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவனில்லை. அவன் அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்த மானவன். (அல்குர்ஆன் :9:30, 31)

மேலே குறித்த வசனங்களில் இருந்து அன்று கிறித்தவ பாதிரிகளும், சந்நியாசிகளும் மக்களை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வழிகாட்டிய துடன், மக்களின் பொருட்களை சுரண்டி ஏழை களுக்கு கொடுக்காது சேமிக்கவும் முயன்றுள் ளார்கள். இதனால் இந்த பாதிரிகளையும், சந்நியாசிகளையும், அதுபோன்ற ஏனையோரையும் அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் பின்வருமாறு எச்சரிக்கின்றான்:

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளும், சந்நியாசிகளிளும் அனேகர் மக்களின் சொத்துகளைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் : 9:34)

அன்று அரேபியா தீபகற்பத்தில் பாதிரிமார்களும், சந்நியாசிகளும் மதபக்தி என்ற போர்வையினுள் மறைந்து கொண்டு மக்களின் பொருட்களை தவறான முறையில் சாப்பிட்டார்கள். அவர்களின் இத்தவறான செயற்பாட்டை அல்லாஹ் இறுதி நெறிநூல் ஒளியினூடாக, முஹம்மது நபி(ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தி மக்களிடம் வெளிப்படுத்துகின்றான். இதனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு குறைஷ் நிராகரிப்பாளருடன் ஒருங்கிணைந்து மதீனாவில் சதி செய்கின்றனர். இதைக்கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இவ்வாறான தொல்லைகளை ஏனைய இறைத் தூதர்களும் எதிர்நோக்கியே இருக்கிறார்கள். முஹம்மது நபி(ஸல்) வேதக்காரர்களை இறைவனுக்கு இணைவைத்தல் என்ற பாவத்திலிருந்து பாதுகாக்க பின்வரும் இறை வசனத்தை முன் வைக்கிறர்கள்.

வேதக்காரர்களே! உங்கள் மார்க்க (விஷய) த்தில் நீங்கள் எல்லை மீறாதீர்கள்; அல்லாஹ் வைப்பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) சொல்லாதீர்கள். நிச்சயமாக மர்யமின் மைந்தர் மசீஹ்(எனப்படும்) ஈசா, அல்லாஹ் வின் தூதரும் அவனது வார்த்தையும் ஆவார். அதை அவன் மர்யமிடம் போட்டான். (அவர்) அவனிடமிருந்து உருவான உயிரும் ஆவார். எனவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்புங்கள். (கடவுள்)மூவர் எனக் கூறாதீர்கள். (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள். (அதுவே) உங்களுக்கு நல்லது. நிச்சயமாக அல்லாஹ் மட்டுமே ஒரே இறைவன் ஆவான். தனக்கு குழந்தை இருப்பதை விட்டும் அவன் மிகவும் தூயவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. பொறுப்பாளர்களில் அல்லாஹ் போது மானவன்ஆவான். (அல்குர்ஆன் : 4:171)

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் வின் கட்டளைக்கமைய, ஈசா(அலை) அவர்களை கிறித்தவர்கள் கடவுளின் மகனாக எடுத்ததைக் கண்டித்தார்கள். அத்துடன் முஸ்லிம்கள் தனது இறப்பின் பின் தன்னையும் அளவு கடந்து புகழ்வதையும் தடுத்தார்கள். அவதானியுங்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களை அளவுக்கு அதிகமாகப் புகழ்வதைப் போன்று, நீங்கள் என்னை அளவுக்கு அதிகமாகப் புகழாதீர்கள். ஏனெனில் நான் ஓர் (இறை) அடியானே. எனவே (என்னை) “அல்லாஹ்வின் அடிமை’, “அல்லாஹ்வின் தூதர்’ என்றே சொல்லுங்கள். (நூல்:முஸ்னது அஹ்மத்)

சித்தார்த்தர் கடவுளின் ஓர் அவதாரமா?
இந்தியாவில் கி.மு. 6ம் நூற்றாண்டில் சித்தார்த்தர் என அழைக்கப்பட்ட கெளதம புத்தர் (பாலி மொழியில் படி போதனையாளர்) வாழ்ந்தார். இவரை சில பிரிவினர் இறைவன் மீது நம்பிக்கை அற்ற நாத்திகன் எனக் குறிப்பிடுவர். ஆனால் அவர் ஒரு இறை நம்பிக்கை உடையவராகவே வாழ்ந்தார். புத்தர் பின்வரு மாறு கூறியதாக “ஸம்யுத்த நீஹாயா’ கூறுகின்றது. புத்தர் பின்வருமாறு கூறினார்.

ஒரு அடர்ந்த காட்டில் தனியாக ஒருவன் அகப்பட்டுக் கொண்டான் என்று கொள்ளுங்கள். அங்கே அவன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்த போது ஒரு பழைய பாதையை கண்டு பிடித்தான். அது முந்தைய காலங்களில் பல சமூகத்தினரால் உபயோகிக்கப்பட்ட ஒரு பாதையாக இருந்தது. காட்டில் அகப்பட்ட அந்த மனிதனும் பாதையில் பயணித்து புராதனமான ஒரு நகரத்தை சென்றடைந்தான். அங்கே அழகிய கம்பீரமான கட்டிடங்களும், தோட்டங்களும், தெருக்களும், குளங்களும், தொடர்ந்து பல நாகரீக வஸ்துக்களும் இருப்பதையும் கண்டறிந்தான். பின்பு அவன் தன்னுடைய நாட்டுக்கு வந்தடைந்தான். அவன் கண்டதைப் பற்றி ஆட்சியாளரிடமும் நாட்டு மக்களிடமும் எடுத்துக் கூறி அந்த புராதன நரகத்தைப் புதுப்பித்து அங்கே மக்களை குடியேற்றுவோம் என்றான். அவனைப் போலவே (புத்தனாகிய) நானும் ஒரு புராதனமான மார்க்கத்தை தர்ம மார்க்கத்தை கண்டு பிடித்திருக்கின்றேன். அந்த மார்க்கத்தையே முன் காலத்தைய புத்தர்கள் அனைவரும் ஏற்று உபதேசித்திருக்கிறார்கள். அவர்கள் வழித் தடத்தைப் பின்தொடர்ந்து நானும் அவ்வாழ்க்கை முறையை பெற்றுக் கொண்டேன். அதையே உங்கள் முன் எடுத்து வைக்கின்றேன். அந்த தர்ம மார்க்கத்தை எல்லா இடத்திற்கும் எடுத்து போதிப்பதே என்னுடைய நோக்கமாகும். (Ref: BUDDHISIM-BY A.G.KRISHNA WARYUR)  நன்றி: உலக சமயங்கள்…

கெளதம புத்தர் உபதேசித்த இந்த உவமையை உற்று அவதானிப்பது மிக அவசியமாகின்றது. ஒவ்வொன்றாக அவதானித்து சிந்தித்துப் பாருங்கள்:

1. இதில் “காடு’ என்பது மனிதன் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக எடுத்துச் செல்ல, பாதுகாக்க முடியாத பஞ்சமாபாதங்கள் நிறைந்த, அறியாமை இருள் சூழ்ந்த நிலையைக் குறிக்கும்.

2. தனியா ஒருவன் என்பது நேர்வழியைத் தேடும் ஒரு இறைத் தூதராக இருக்கலாம். (அல்லாஹ் மிக அறிந்தவன் ஆவான்)

3. ஒரு பழைய பாதை என்பது கெளதம புத்தருக்கு முன் வாழ்ந்த இறைத் தூதர்கள் போதித்த நேர்வழியாக இருக்கலாம்.

4. இந்த நேரிய பாதையாகிய இது முந்தைய காலங்களில் பல சமூகத்தினரால் உபயோகிக்கப்பட்ட (கோணலான பல பாதைகள் அல்ல. இறை அருள் பெற்ற நேரிய) ஒரு பாதையக இருந்தது எனக் குறிக்கப்படுகிறது.

5. பழைய அழகிய நகரம் என்பது இம்மை மறுமை வாழ்க்கை வெற்றிக்கான எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய நேர்வழியைக் குறிக்கலாம்.

இந்த உவமைக்குப் பின் புத்தர் குறிப்பிடுவதைப் பாருங்கள்: நானும் ஒரு புராதன மார்க்கத்தை தர்ம மார்க்கத்தை கண்டுகொண்டுள்ளேன். இந்த மார்க்கத்தையே முன் காலத்தைய புத்தர்கள்(போதகர்கள்) அனைவரும் ஏற்று உபதேசித்திருக்கிறார்கள். அவர்களின் வழித் தடத்தைப் பின்தொடர்ந்தே தாமும் அதே தர்மத்தை எடுத்து வந்திருப்பதாக குறிப்பிடுகிறார். இறைத் தூதர்களும் தாம் புதிய ஒன்றைக் கொண்டு வரவில்லை; முன்னைய இறைத்தூதர்கள் போதித்ததையே போதிப்பதாகவே குறிப்பிட்டார்கள்.

அன்று கெளதம புத்தர் வாழ்ந்த நாட்டில் சத்திய ஏக இறைவனை மட்டும் வணங்கி வழிபடும் வழக்கம் இருக்கவில்லை. மெளட்டீகம், அரசனிடமும் மக்கள் மத்தியிலும் மலிந்து காணப்பட்டது. மனிதனின் எத்தேவைகளுக்கும் சிலைகளுக்கு முன் மிருகங்களை நேர்ச்சை செய்து பலியிடும் வழக்கம் மிகப் பரவலாகக் காணப்பட்டது. புத்தர் வாழ்ந்த சமூகத்தில் காணப்பட்ட சில குறைபாடுகள்.

* பல சிலைகளை தெய்வமாக கொள்ளும் நம்பிக்கைகள்.
* சிலைகளிடம் தமது நோக்கங்கள் நிறைவேற பல்வேறு மிருகங்களை பலியிடல்.
* அரசர்களும், வில்வீரர்களும் தமது வீரத்தை வெளிப்படுத்த உணவாக பயன்படுத்தும் நோக்கமின்றி வீணாக உயிரினங்களை கொலை செய்தல்.
* வயோதிபத்தை அடைந்த ஏழைப் பெற்றோரை கவனியாது பாதையில் அலைய விடுதல்.
* நோயாளிகளை கவனியாது பாதையில் அலைய விடல்.
* மரணம் அடைந்தோரைக் கண்டும் மறுமையை எண்ணாது மது, மாது, இசை, களியாட்டங்களும், ஆடம்பரமான வாழ்க்கையில் மூழ்கி இருத்தல்.
* தமது அரச மாளிகையிலும் இவ் அனாச்சாரங்களைக் கண்டு வெறுப்படைந்து முந்தைய கால புத்தர்கள் சென்ற நேரிய பாதையைத் தேடிச் சென்றார். பின் அவ்வாழ்க்கையைக் கண்டுகொண்டு அதை மக்கள் மத்தியில் போதனை செய்தார்.

இவ் உவமையின்படி கெளதம புத்தர் தமக்கு முன் வாழ்ந்து சென்ற புராதன இறைபோதகர்களின் வழியிலேயே போதனை செய்துள்ளார் என்பது உண்மையாகிறது. அவர் ஒருபோதும் தன்னை கடவுளென்றோ அல்லது கடவுளின் அவதாரம் என்றோ குறிப்பிடவில்லை. அவர் தன்னை ஓர் சாதாரண மனிதரெனவும், மற்ற இறைபோதகர்களைப் போல் தானும் ஓர் போதகர் என்று மட்டுமே குறிப்பிட்டார். அவர் ஒருபோதும் சிலைகளை வணங்கியதாகவோ அல்லது தன்னை சிலையாக வைத்தோ வணங்கும்படி குறிப்பிடவில்லை என்றே வரலாற்றுச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. அவர் ஒருபோதும் உலகில் பிறந்த ஒருவன் இறந்த பின் மீண்டும் தமது பாவ புண்ணியத்தின் படி பலவாறு பூமியில் மறுபிறப்பு எடுப்பதாக குறிப்பிடவில்லை. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் மக்களிடம் இவ்வாறான நம்பிக்கைகள் இருந்தன. உலகில் ஒருவன் தான் மீண்டும் மறு பிறப்பாக பிறந்ததாக குறிப்பிட்டால் அதனை நம்பாதே; அவ்விடத்திற்கு செல்லாதே; அவ்விடத்திலிருந்து வெகுதூரம் ஓடிச் சென்று விடும்படியே கூறினர். ஆதாரம் இலங்கை ITN தொலைக்காட்சி சேவையில் இடம் பெற்ற பெளத்த பிக்குகளின் நேர்காணலில் இருந்து பெறப்பட்டதாகும். இன்று பெளத்த மக்களிடம் காணப்படும் பல மெளட்டீக பழக்க வழக்கங்கள் அந்நிய அரசர்களின், மதகுருமாரின் கண்டு பிடிப்புகள் பெளத்த குருமார்களின் அங்கீகாரத்துடன் உட்புகுந்ததாகவே குறிப்பிடுகின்றது.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: