நமது மார்க்கம் இஸ்லாம்! நாம் முஸ்லிம்கள்!

in 2010 அக்டோபர்,பொதுவானவை

நமது மார்க்கம் இஸ்லாம்! நாம் முஸ்லிம்கள்!
அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடையும் படைப்பினங்கள்

முஹிப்புல் இஸ்லாம்
அல்லாஹ்வின் மார்க்க(இஸ்லா)த்தை விட்டு (வேறு மார்க்கத்தையா?) அவ(மனித)ர்கள் தேடுகிறார்கள்?

உண்மை என்னவெனில் வானங்களிலும், பூமியிலும் உள்ள (உயிரினங்கள்) அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே முற்றிலும் (வலஹூ அஸ்லம) சரணடைந்து முஸ்லிமாக இருக்கின்றன. (குர்ஆன்: 3:83)

இறை அருளிய வாழ்க்கை நெறி:
அல்லாஹ் மானுடத்திற்கருளிய வாழ்க்கை நெறி இஸ்லாம். இஸ்லாத்தை ஏற்காதோரும் ஒப்பிய உண்மை இது.

ஏற்ற முஸ்லிம்களுக்கு இஸ்லாம் எட்டிக்காய். இஸ்லாம் தங்களின் தனி உடமை என தப்புக் கணக்குப் போட்டு வருகிறார்கள். ஆனால், இஸ்லாம் அனைத்துப் படைப்பினங்களுக்கும் அல்லாஹ் அருளிய பொதுவான வாழ்க்கை நெறி. மிகப் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு இது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. முஸ்லிம்(கள்) துண்டாடிகளான மார்க்க அறிஞர்கள் இதுகாறும் இப்பேரூண்மையை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கவில்லை. விளைவு, இஸ்லாம் அனைத்து மனிதர்களுக்கான மார்க்கம் என்பதைக் கூட முஸ்லிம்களால் ஏற்க முடியவில்லை.

படைப்பினங்கள் அனைத்தின் மார்க்கம் இஸ்லாம்:
இஸ்லாம் படைப்பினங்கள் அனைத்துக்கு மான மார்க்கம் எனும் அல்லாஹ்வின் பிரகடனத்தை எடுத்துக்காட்டும்போது முஸ்லிம்களாலும் அதை ஜீரணிக்க முடியவில்லை. மனிதர்கள் அஃறிணை என புறந்தள்ளிய விலங்கினங்களும், தாவர வர்க்கங்களும், மனிதர்கள் பார்வையில் பட்டவைகளும், மனிதர்கள் பார்க்க முடியாதவைகளும் மனித அறிவுக்கு எட்டியவைகளும், மனித அறிவுக்கு அப்பாற்பட்ட அனைத்து உயிரினங்களும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடைந்து முஸ்லிம்களாய் வாழ்கின்றன.

அல்லாஹ்வின் மார்க்க(இஸ்லாத்)தை விட்டு (வேறு மார்க்கத்தையா?) அவ(மனித)ர்கள் தேடுகிறார்கள்? உண்மை என்னவெனில், வானங்களிலும், பூமியிலும் உள்ள (உயிரினங்கள்) அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே முற்றிலும் (வலஹூ அஸ்லம) சரணடைந்து முஸ்லிமாக இருக்கின்றன. (ஆலு இம்ரான்:3:83)

மனித அறிவுக்கும், சிந்தனைக்கும் எட்டாத இந்த அரிய, அற்புத தகவலை அனைத்து அறிவுகளின் ஒரே உரிமையாளனான அல்லாஹ் மானுட சிந்தனைக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தியுள்ளான். ஏன்? மனிதர்கள் ஆழ்ந்து சிந்தித்து ஆய்வு செய்து அறிவுரை பெறுவதற்காக.

படிப்பினை பெறவில்லையே!
அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனை ஏற்றுள்ள முஸ்லிம்கள்கூட இன்னும் படிப்பினை பெறவில்லையே! முஸ்லிம்கள் படிப்பினைப் பெற்றால்தானே மற்றவர்களுக்கும் உணர்த்த முடியும்? முஸ்லிம்கள் படிப்பினை பெறுவது எப்போது? மற்றவர்களுக்கு உணர்த்துவது எப்போது? அல்லாஹ்விடம் துஆ செய்து முயற்சியும் செய்வோம்.

மற்ற படைப்பினைங்களைக் காட்டிலும் ஜின், மானுட இனங்களுக்கு அல்லாஹ் பிரத்யேகமாய் அருள் செய்துள்ளான். வாழ்வியல் அறநூல்களையும், அதற்கு செயல் வடிவங்களாய் நபிமார்களையும் அனுப்பி வைத்ததன் மூலம் இவ்விரு இனங்களுக்கும் அல்லாஹ் பிரத்யேக அருள் செய்துள்ளான்.

இஸ்லாமிய மீறல் :
இருந்தும், மனிதர்களில் பெரும்பாலோர் இஸ்லாத்தை நிராகரிப்போராய், இஸ்லாத்தை எதிர்ப்போராய் இருந்தும் வந்தார்கள்; இருந்தும் வருகிறார்கள். வேதனைக்குரியதே! அதைவிடக் கொடுமை ஏற்றோர் மிகப் பலர் இஸ்லாத்தைத் துணிந்து மீறுவது தான்.

அதனால்தான் நாம் மேல் சுட்டியுள்ள (3:83) இறைவாக்கின் முற்பகுதியில் அல்லாஹ் மானுடத்தைப் பார்த்து கோபமாய்க் கேட்கிறான்.

மனிதர்கள் இஸ்லாத்தை விட்டுப் பிரிந்து-விலகி விதவிதமான வழிகேடுகளையா விரும்புகிறார்கள்?
அப்படிச் செய்வது மாபாதகம் என்பதை அவ்விறைவாக்கின் பிற்பகுதியில் அல்லாஹ் மானுடத்துக்கு உணர்த்துகிறான்.

இஸ்லாமிய ஐக்கியம்:
மற்ற படைப்பினங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடைந்து முஸ்லிம்களாய் இஸ்லாத்தோடு ஐக்கியமாகி விட்டன. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் பிரத்யேக அருள் மானுடத்துக்கு இருந்தும், மிகப் பெரும்பாலான மனிதர்கள் இஸ்லாத்தை விட்டு பிரிந்து நிற்கிறார்கள்.

பிரத்யேக இறையருள் இருந்தும் இஸ்லாத்தை விட்டு பிரிந்து நிற்கும் மானுடம் எங்கே? அப்படியேதுமின்றி இயல்பிலேயே இஸ்லாத்தோடு ஐக்கியமாகியுள்ள மற்ற படைப்பினங்கள் எங்கே?

அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடைதல்:
மனித சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடைவதில் முதல் நிலை வகுத்தவர்கள் நபிமார்களே! மானுட முன்னோடிகளான அந்த நபிமார்கள்தான்-முதன்மை முஸ்லிம்கள். நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பிறப்பித்த கட்டளை இதற்கு சான்று பகர்கிறது. நபியே பிரகடனப்படுத்துங்கள். வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வை யன்றி வேறு ஒருவரையா நான் பாதுகாவலானக எடுத்துக் கொள்வேன்?
அவன் உணவு வழங்குபவனேயன்றி உணவைப் பெறுபவன் அல்லன்.

மேலும் நீர் பிரகடனப்படுத்துவீராக! (குல் இன்னீ உமிர்(த்)து அன் அகூன அவ்வல மன்அஸ்லம) அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடைந்த முஸ்லிம்களில் நான் முதன்மையானவனாக இருக்க வேண்டும் என்றும், இன்னும் நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம் என்றும், நான் என் இரட்சகனுக்கு மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை நிச்சயமாக நான் அஞ்சுகிறேன் என்றும் (மனித சமுதாயத்துக்குப்) பிரகடனப்படுத்துவீராக. (அல்குர்ஆன் 6:14,15)

நபிமார்களும் அவர்களது அடிச்சுவடுகளை அடிபிசகாது பின் தொடர்ந்தவர்களும், பின் தொடர்ந்து கொண்டிருப்பவர்களும் நீங்கலாய்..
அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடைவதில்…
* மானுடம் தாழ்ந்தும்,
*மற்றப் படைப்பினங்கள் உயர்ந்தும்,
நிற்பதை அல்லாஹ் நமக்கு ஒப்பிட்டுக் காட்டியுள்ளான் ஏன்? மானுடம் படிப்பினை பெறுவதற்காக.
இன்னும் முஸ்லிம்களே படிப்பினைப் பெறவில்லை. மற்றவர்களுக்கு எப்போது உணர்த்துவார்கள்?
அல்லாஹ்வின் நல்லருளை ஆதரவு வைத்து முயற்சிப்போம். அரிதிலும் முயன்று படிப் பனைப் பெற்றுக் கொள்வோமாக.

அடிப்படை என்ன?
படைப்பினங்கள் அனைத்தும் முஸ்லிம்கள் என்றால் எந்த அடிப்படையில்?
அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்கள் இல்லை; நபிமார்கள் இல்லை; அவைகள் எப்படி முஸ்லிம்களாய் இருக்க முடியும்?

இப்படி நம்மை அடுக்கடுக்காய்த் துளைத் தெடுக்கும் வினாக்களுக்கு, அறிவுகள் அனைத்தின் ஒரே உரிமையாளன் அல்லாஹ் அளித்துள்ள விளக்கம் நம்மை திகைக்க வைக்கிறது. நம் உடலையும், உள்ளத்தையும், சிந்தனையையும் சிலிர்க்கச் செய்கிறது. நாம் அதை அறிய வேண்டாமா?
மற்ற படைப்பினங்களில் இருந்து பாடம் கற்று…

நாமும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரண டைந்த முஸ்லிம்களாய் வாழவும், இஸ்லாத்தோடு ஐக்கியமாகவும் முயற்சிக்குமாறு….
அன்பர்கள் அனைவரிடமும் அன்போடுக் கேட்டுக் கொள்கிறோம்.

அல்லாஹ் அருள் செய்வானாக. ஆமீன். (இன்ஷா அல்லாஹ் மீண்டும் இரண்டாம் இயலில் சந்திப்போம்; சிந்திப்போம்; சீர்பெறுவோம்.)

Previous post:

Next post: