காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி!

in 2010 நவம்பர்,தலையங்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி!
சமீபத்தில் நமது இந்திய நாட்டில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக் காக நமது நாடு 70 ஆயிரம் கோடி செலவிட்டதாக வும், அதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகவும் ஊடகங்கள் செய்திகள் பரப்பி வருகின்றன. நடைபெற்ற ஊழல்களை விசாரித்துக் கண்டறிய சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன. பல நாடுகள் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் நடந்தேறியுள்ள இலஞ்சம், ஊழல், ஒழுங்கீனங்கள் அனைத்து நாடுகளின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி நமது நாட்டுக்குப் பெருத்த தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமையை விட அதில் இடம் பெற்ற இலஞ்சம், ஊழல், ஒழுங்கீனங்கள் பற்றிய செய்திகளே அனைத்து நாடுகளிலும் கொடி கட்டிப் பறக்கின்றன. ஊழல் செய்து பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டவே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நம் நாட்டில் நடத்த பெரும்பாடு பட்டுப் பெற்றதாக மற்ற நாடுகள் பேசும் அளவிற்கு நமது நாட்டிற்குத் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

மனித நேய மிக்கவர்களின் வேதனை!
நமது நட்டின் மக்கள் தொகையில் கணிசமான வர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கிறார் கள். அவர்களின் கும்பிகள் கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வழியின்றி கூப்பாடு போட்டுக் கொதித்துக் கொண்டிருக்கும்போது, நமது நாட்டிற்கு இந்த விளையாட்டுப் போட்டித் தேவையா? என ஏழை களின் நிலை உணர்ந்த பண்பாளர்கள் கேட்கிறார்கள்.

உணவு தானியங்கள் பாழ்!
அரசு சேமித்து வைக்கும் உணவு தானியங்களை முறையான, பாதுகாப்பான முறையில் சேமிக்க உறுதியான சேமிப்புக் கிடங்குகள் இல்லை. வெட்ட வெளியில் வைக்கப்பட்டுள்ள  உணவு தானியங்கள் வெயிலிலும் மழையிலும் அடிபட்டு வீணாகிக் கொண்டிருக்கின்றன. அவை மனிதனுக்கு மட்டுமல்ல கால்நடைகளின் உணவுத் தேவையைக் கூட நிறைவேற்றும் தகுதி இழந்து, வீண் செலவு செய்து குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன. இப்படி வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக விநியோகித்து விடுங்கள் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் உதாசீனம் செய்யும் நிலையில் நடுவண் அரசு அமெரிக்க அராஜகப் போக்கை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.நமது நாடு அமெரிக்க நாட்டுக் கட்டுப்பாட்டிலும், அமெரிக்கா யூதர்களின் கட்டுப்பாட்டிலும் இருப்பதாக அறிவு ஜீவிகள் வேதனைப் படுவதாகச் செய்திகள் பரவுகின்றன.

ஆக அந்த உணவு தானியங்களை முறையான சேமிப்புக் கிடங்குகள் அமைத்து அவற்றை பாதுகாக்கும் அளவிற்கு அரசில் பணம் இல்லை எனும்போது, கும்பி காயும் ஏழைகளைப் புறக் கணித்து, குபேரர்கள் பார்த்து மகிழ எழுபதாயிரம் கோடிச் செலவில் இந்த விளையாட்டுப் போட்டிகள் தேவையா? இல்லை, இந்த விளையாட்டுப் போட்டியை வைத்து பண முதலைகள் மேலும் கோடிக்கணக்கில் பணம் குவிக்கும் தந்திரமா? என நடுத்தர மக்களின் உள்ளங்களில் ஏற்படும் சந்தேகத்தை யார் தீர்ப்பது?

குபேரர்களுக்கான ஆட்சியா?
நாங்கள் பல்லாயிரம் கோடி பணம் படைத்த பெருஞ் செல்வந்தர்களுக்காகவே, அவர்களின் வசதிக்காகவே ஆட்சி செய்கிறோம். அவர்கள் கொடுக்கும் பல்லாயிரம் கோடிகளைச் செல விட்டே நாங்கள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும் என்று சொல்லாமல் சொல்கிறார்களா? அந்தப் பல்லாயிரம் கோடிகளில் சில ஆயிரம் கோடிகளை அறிவு குறைந்த மக்களிடையே வாரி இறைத்து, அவர்களது பொன்னான விலை மதிப்பற்ற வாக்குகளை விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்களா?

போலி ஜனநாயகம்!
ஆம்! நமது நாட்டின் மக்களாட்சி முறையை அதாவது போலி ஜனநாயக ஆட்சியை இந்த அளவு இழிவிலும் இழிவான நிலைக்கு நமது நாட்டின் அரசியல்வாதிகள் கொண்டு சென்று விட்டார்கள். குண்டர்கள், தாதாக்கள், மோசடியாளர்கள், சாராய வியாபாரிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கிரிமினல்கள் என தரங்கெட்டவர்களே ஆட்சியில் நிறைந்துள்ளனர். பாராளுமன்றம், சட்டசபைகளில் அடிக்கடி அரங்கேறும் அடிதடிகள், மோதல்கள் இதை உண்மைப்படுத்தும் ஆட்சியில் அமர்ந் திருப்பவர்களும் கோடி கோடியாக கொள்ளை அடிக்கவே திட்டம் தீட்டுகிறார்கள். ஆட்சியில் அமர ஆலாய்ப் பறப்பவர்களும் கோடி கோடியாய் மக்கள் பணத்தைச் சுருட்ட என்ன வழி எனத் தேடி அலைகிறார்கள்.

ஆட்சியாளர்களும், ஆட்சியில் அமரத் துடிப்பவர்களும் இலஞ்சத்திலும், ஊழல்களிலும், ஒழுங்கீனங்களிலும் முங்கிக் குளிக்கும் போது அவர்களின் கீழ் செயல்படும் நீதிபதிகள், அதிகாரிகள், சிப்பந்திகள் என அனைவரும் இலஞ்சத்திலும், ஊழல்களிலும், ஒழுங்கீனங்களிலும் ஈடுபட கேட்கவா வேண்டும். அதைத் தொடர்ந்து பொது மக்களும் லஞ்சம், ஊழல், ஒழுங்கீனம் என அவர்கள் பங்குக்கு ஜமாய்க்கிறார்கள். “அரசு எவ்வழி குடிகள் அவ்வழி’ என்ற முதுமொழி பொய்யாக முடியுமா? ஒரு எம்.எல்.ஏ. எம்.பி., பதவிக்காக பல கோடிகளை செலவிடுபவர்கள் ஒன்றுக்குப் பத்தாய், நூறாய் சுருட்ட முடியும் என்ற துணிச்சல் இல்லாமலா கோடி கோடியாய் இறைக்கிறார்கள். அரசில் எந்தப் பதவியாக இருந்தாலும் தகுதி அடிப்படையிலா கொடுக்கப் படுகிறது? பதவிக்கேற்றவாறு கோடி, லக்கம் எனக் கொட்டிக் கொடுத்தே அப்பதவியை அடைய முடிகிறது.

ஊழலின் ஊற்றுக்கண்!
ஒரு கல்லூரிக்கு அரசிடம் அனுமதி பெற ஒரு கோடி இலஞ்சம் கொடுக்கும் நிலை இருக்கும் போது, கல்லூரி நடத்துகிறவர்கள் கோவிந்தராஜன் குழு விதித்த கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலித்து ஈடுகட்ட முடியுமா? ஒரு மருத்துவ சீட்டுக்கு 40 இலக்கம், 50 இலக்கம் எனக் கொடுத்துப் படித்து பட்டம் பெறும் மறுத்துவர் தான் விட்டதை பல நூறாகப் பெருக்கித் திரும்பப் பெற முனைவாரா? அதற்கு மாறாக மனித நேயத்துடன் சமூக சேவை செய்ய முன்வருவாரா? பல கோடிகளை, லக்கங்களைக் கொட்டிக் கொடுத்து நீதிபதிகளாக, உயர் அதிகாரிகளாக, அதிகாரிகளாக, சிப்பந்திகளாகப் பதவிக்கு வருகிறவர்கள் தாங்கள் கொடுத்ததை பல மடங்காகப் பெற முனைவார்களா? இலஞ்சமே வாங்காமல் நேர்மையாகப் பணி புரிவார்களா?

அரசுப் பணியாளர்கள் இலஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் நோக்குடன் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறையினரே இலஞ்சம் வாங்கும் அவலத்தை எங்கே போய்ச் சொல்வது? காரணம் என்ன? அவர்களும் இலஞ்சம் கொடுத்தே அப் பதவிகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆம்! இலஞ்சம் இடம் பெறாத அரசுத் துறையே இல்லை என உறுதியாகச் சொல்லிவிடலாம்.

1947க்குப் பின்னர்!
1947 சுதந்திரத்திற்கு முன்னால் நடந்ததை விட்டு விடுவோம். சுதந்திரம் பெற்ற பின் நாட்டின் நிலவரங்களை உற்று நோக்குவோம். கடந்த 63ஆண்டுகளாக நமது நாட்டை ஆண்ட பிரதம மந்திரிகள், மத்திய மந்திரிகள், மானிலங்களின் முதன் மந்திரிகள், மந்திரிகள் இவர்களில் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் எத்தனை பேர்? நமக்குத் தெரிந்து நந்தா, சாஸ்திரி, கக்கன் என விரல் விட்டுச் சொல்லும் ஓரிருவரை மட்டுமே சுட்டிக் காட்டமுடியும்.

ஆக இந்திய திருநாட்டில் இலஞ்சம், ஊழல், ஒழுங்கீனம் மலிவதற்குப் பிரதம மந்திரிகளும், முதன் மந்திரிகளும், மத்திய, மாநில மந்திரிகளும் முழுமுதல் காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆட்சியின் தலையே இலஞ்சம், ஊழல், ஒழுங்கீனம் இவற்றில் ஈடுபடும்போது அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகளும், சிப்பந்திகளும், பணியாளர்களும் இலஞ்சம், ஊழல், ஒழுங்கீனம் என ஈடுபடுவதைத் தடுக்க முடியுமா? அதைத் தொடர்ந்து பொது மக்களும் இலஞ்சம், ஊழல், ஒழுங்கீனங்களுக்கு ஆட்படுகிறார்கள். இதுதான் “அரசு எவ்வழி; குடிகள் அவ்வழி’ என்ற முதுமொழி உணர்த்தும் உண்மையாகும்.

ஊழல் எப்போது ஒழியும்?
நாட்டில் இலஞ்சம், ஊழல், ஒழுங்கீனம் ஒழிய வேண்டும் என்றால், முதலில் பிரதம மந்திரி, மத்திய மந்திரிகள், முதன் மந்திரிகள், மாநில மந்திரிகள் இலஞ்சம் வாங்குவதை விட்டும், ஊழல்களில் ஈடுபடுவதை விட்டும், ஒழுங்கீனங்களில் ஈடுபடுவதை விட்டும் முற்றிலுமாக விலகி அவர்கள் பதவி ஏற்கும் போது செய்து கொடுக்கும் சத்திய பிரமாணத்தைப் பேணி நடக்க வேண்டும்.இப்போது அதிகாரிகள், சிப்பந்திகள் வாங்கும் இலஞ்சத்தில் குறிப்பிட்ட பங்கு அனைத்து வகை மந்திரிகள் வரை செல்வதாகவே செய்திகள் அடிபடுகின்றன. மந்திரிகளுக்கே பங்கு போய் சேருகிறது என்ற தைரியத்தில்தான் அதிகாரிகள், சிப்பந்திகள் துணிந்து இலஞ்சம் வாங்குகின்றனர். திருடுவதில் பங்கு காவல் துறை அதிகாரிகளுக்கும் போய்ச் சேர்கிறது என்ற தைரியத்தில்தான் திருடர்கள், கொள் ளையர்கள் துணிந்து திருட்டில், கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இன்று நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை என அனைத்து பஞ்சமா பாதகங்களும் நீக்கமற நிறைந்து காணப்படுவதற்கு யார் காரணம் என்று புரிகிறதா?

ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும்!
இந்த அநீதமான ஆட்சிமுறை மாற்றப் பட வேண்டும் என்றால், நமது போலி ஜனநாயக ஆட்சி முறை மாற்றப்படவேண்டும். ஒவ்வொரு நாடும் அந்நாட்டினரின் ஒரு சிலரால் அமைக் கப்பட்ட சட்ட விதிகளின்படி ஆளப்படுகிறது. மனிதர்களில் ஓரிருவரோ, ஒரு குழுவோ சேர்ந்து சட்ட விதிகளை அமைத்தாலும், அவர்களுக்குள்ள அற்ப அறிவைக் கொண்டே சட்ட விதிகளை அமைக்க முடியும். அதுவும் அவர்கள் எந்த மதத்தை, எந்தக் கொள்கையைச் சார்ந்து இருக்கிறார்களோ அதற்கேற்றவாறுதான் அவர்கள் அமைக்கும் சட்டங்கள் இருக்க முடியும். அனைத்து சாதி, மத, மொழி, இன, பிரதேச என அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்ட விதி முறைகளை எந்த மனிதனாலும், எந்தக் குழுவாலும் அமைக்க ஒருபோதும் முடியாது.

இறையாட்சியே நீதமான ஆட்சி!
மனித இனத்திற்கே பொதுவான சட்டங்கள் எப்போது சாத்தியம் என்றால், மனித இனத்திற்கு அப்பாற்பட்டு அகில உலகையும், அனைத்துப் படைப்புகளையும், பகுத்தறிவுடன் கூடிய மனிதனையும் படைத்த ஒரே இறைவன் வகுத்தளித்த வாழ்வு நெறிச் சட்டமாக மட்டுமே இருக்க முடியும். என்று ஆதிமனிதன் படைக்கப்பட்டானோ அன்றிலிருந்தே மனிதனுக்குரிய வாழ்க்கை நெறித்திட்டத்தை இறைவன் அளித்தே வந்திருக்கிறான். ஹிந்துக்களிடம் காணப்படும் வேதங்கள், யூதர்களிடம் காணப்படும் தோரா, கிறித்தவர்களிடம் காணப்படும் பைபிள், மற்றும் மதங்களில் காணப்படும் வேதப் புத்தகங்கள் இவை அனைத் தும் இறைவன் புறத்திலிருந்து இறக்கி அருளப் பட்ட தூய வாழ்க்கை நெறித் திட்டத்தில் மனிதக் கரம் பட்டு மாசடைந்தவையே. மேலும் அவை அனைத்தும் அரசுகளால் புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுகள் செல்லாதவை ஆக்கப்படுவது போல் ஏகன் இறைவனால் செல்லாதவை ஆக்கப் பட்டுவிட்டன.

இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆன்!
இறைவனால் முழுமைப் படுத்தப்பட்டு, உலகம் அழியும் வரை இதுதான் இறுதி வாழ்க்கை நெறி நூல் என இறக்கப்பட்டதே அல்குர்ஆன். முன்னைய நெறிநூல்களை மதகுருமார்கள் தங்கள் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு சிதைத்துச் சீரழித்தது போல் கடந்த 1450 ஆண்டுகளாக அல்குர்ஆன் மதகுருமார்களின் கரம் பட்டு மாசடையவில்லை. இறக்கியருளப் பட்ட நிலையில் மிக மிகத் தூய்மையாக இன்றும் இருக்கிறது. மேலும் முஸ்லிம் மதகுருமார்கள் “அல்குர்ஆன்’ முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம். முஸ்லிம் அல்லாதவர் களுக்கு அல்குர்ஆனில் எவ்வித உரிமையும் இல்லை என்று கூறிவருவது ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யாகும். அரபி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே அல்குர்ஆனை விளங்க முடியும் என்று அவர்கள் கூறி வருவது தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய்யாகும். முஸ்லிம் மத குருமார்களுக்கு மார்க்கத்தில்- அல்குர்ஆனில் உரிமையோ, அதிகாரமோ அணுவளவு கூட இல்லை என்பதை அல்குர் ஆனே பல இடங்களில் கூறுவதை மக்கள் விளங்க வேண்டும்.

அல்குர்ஆன் அகில உலக மக்கள் அனை வருக்கும் சொந்தம்!
அல்குர்ஆன் அகில உலக மக்களுக்கும் சொந்தமான மனித வாழ்க்கை நெறியை விவரிக்கும் நெறி நூலாகும். மனித குலம் அனைத்திற்கும் அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் தெள்ளத் தெளிவாக எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி அந்த இறைவனே விளக்கி விட்டதாக இறைவனே அல்குர்ஆனில் பல இடங்களில் திட்டமாகக் கூறியுள்ளான். உண்மையை-சத்தியத்தை அறிந்து கொள்ளும் சுயவேட்கையுடன் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் சரியாக மொழி பெயர்க்கப்பட்ட அல்குர்ஆனை அவர்களே படித்து தெளிவாக விளங்க முடியும்.

இடைத் தரகர்கள் இல்லை!
இறைவனுக்கும் அவனது அடிமைகளான மனிதர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக- வழிகாட்டிகளாக எந்த மதகுருவும் இடம்பெற முடியாது. இறைவனின் நேரடிக் கண்காணிப்பிலிருந்த இறுதித் தூதர் முஹம்மது(சல்) அவர்களுக்குப் பிறகு வேறு எந்த மதகுருவுக்கோ, இதர மனிதர்களுக்கோ அணுவளவும் அனுமதி இல்லை. அல்குர்ஆனில் இருப்பதை அப்படியே எடுத்து நடப்பதே நேர்வழியாகும். மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைக்கும் வழியாகக் கொள்பவர்கள் கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள். எண்ணற்ற குர்ஆன் போதனைக்கு முரணாக மார்க்கத்தை மதமாக்கி ஒரே நேர்வழியை பல கோணல்வழிகளாக்கி அவற்றைத் தங்கள் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதால் அல்குர்ஆனை நேரடியாகப் படித்து அவர்களின் தில்லுமுல்லுகளை மக்கள் அறிந்து கொள்வதைத் தடுக்கும் தீய நோக்குடன் அல்குர்ஆன் என்ற இறுதி வாழ்க்கை நெறிநூல் அரபி மொழி தெரியாவர்களுக்கு விளங்காது என்ற ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யை கடந்த ஆயிரம்(1000) ஆண்டுகளாகக் கூறி மக்களை வஞ்சித்து அவர்களை நரக நெருப்பில் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் மதகுருமார்கள்.

அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்!
இறைவன் மக்களுக்காக அளித்த வாழ்க்கை நெறிநூல் நடுநிலையுடன் மனித குலம் அனை வருக்குமாகக் கொடுக்கும் வாழ்க்கைத் திட் டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தால் மட் டுமே இன்றைய உலகின் இழிநிலை மாறி உயர்வடைய வழி பிறக்கும். “அரசு அன்று கொல்லும்’ தெய்வம் நிற்று கொல்லும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப இறைவன் ஒருவன் இருக்கிறான். மறுமை விசாரணை நாள் ஒன்று உண்டு; அன்று தான் செய்த குற்றங்களை ஒரு போதும் மறைக்க முடியாது; இன்று மனிதன் கண்டுபிடித்துள்ள வீடியோ கருவியை விட மிகத் துல்லியமான கருவி மூலம் நமது செயல்கள் அனைத்தும் பதிவாகி நாளை நேரடியாகக் காட்டப்படும். எதையும் மறைக்க முடியாது; கடும் தண்டனை பெற நேரிடும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே குற்றங்கள் புரிவதிலிருந்து விலகி நிற்பார்கள்.

குற்றங்கள் பெருக காரணம் என்ன?
இறைவனைப் பற்றியும், மறுமையைப் பற்றியும் அரைகுறை நம்பிக்கை உள்ளவர்களும், இறைவனுக்கு இணையாக அவனது படைப்புகளை தெய்வங்களாக நம்பி வழிபடுகிறவர்களும், இறை வனோ மறுமையோ இல்லை என்ற நாத்திகச் சிந்தனை உடைகிறவர்களும் மட்டுமே அரசை யும், அதிகாரிகளையும் ஏமாற்றிவிட்டு எவ்வளவு பெரிய குற்றங்களையும் செய்துவிட்டுத் தப்பி விடலாம். அல்லது ஆட்சியாளருக்கும், அதிகாரி களுக்கும் பெருந்தொகை கொடுத்து குற்றங்களை மறைத்துத் தப்பிவிடலாம் என்ற துணிச்சலில் பஞ்சமா பாவங்களைத் துணிந்து செய்ய முடியும். இன்று நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு ஓரிறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்களும் காரணமாகவே இருக்கிறார்கள்.

உலகம் உய்ய ஒரே வழி!
எனவே குட்டி குட்டி பொய்த் தெய்வங்களை, பொய்க் கற்பனை கடவுள்களை நிராகரித்து உண்மையான ஓரிறைவனை மட்டும் ஏற்று, அவனது இறுதி வழிகாட்டலான அல்குர் ஆனின் சட்டங்களை, அமுல்படுத்த முன்வந்தால் மட்டுமே உலகில் பெருகி வரும் அராஜ கங்கள், அட்டூழியங்கள், பஞ்சமா பாவங்கள், இலஞ்சம், ஊழல், ஒழுங்கீனங்கள் அனைத்தும் ஒழிந்து உலகம் உய்ய வழி பிறக்கும். அதற்கு இந்திய மக்கள் தயார் இல்லை என்றால் குறைந்த பட்சம் போலி ஜனநாயகத்தை அதாவது பணநாயகத்தை ஒழித்து உண்மையான ஜனநாயகம் வளர்ந்தோங்கவாவது வழி காண வேண்டும். அதற்கு நாட்டில் இன்று நடை முறையிலிருக்கும் தேர்தல் முறை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படவேண்டும்.

தேர்தல் முறை மாற்றம்!
ஒரு தொகுதியில் வேட்பாளராக நிற்பவர் கண்டிப்பாக அத்தொகுதியில் குடும்பம் சகிதம் வசிப்பவராக இருக்க வேண்டும். ஒரு தொகுதியில் வேட்பாளராக நிற்பவர் பிறிதொரு தொகுதியில் குடியிருப்பவராக ஒருபோதும் இருக்கக் கூடாது. தான் குடியிருக்கும் தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும். அவர் எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. என எப்பதவி யில் இல்லாத நிலையிலும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் மக்கள் தொண்டே இலட்சியம், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற குறிக்கோளோடு மக்கள் தொண்டு செய்வதன் மூலம் அத்தொகுதி யிலுள்ள அனைவருக்கும் நன்கு அறிமுகமாக வேண்டும்.

தேர்தல் ஒழுங்கீனம் எப்போது அரங்கேறுகிறது?
தேர்தல் அல்லாத காலங்களில் வீடு வீடாகச் சென்று அவர்களின் தேவைகளைக் கண்ட றிந்து தன்னால் ஆன காரியங்களைச் செய்து கொடுக்க வேண்டும். அப்படி ஓடோடி மக்கள் தொண்டு செய்கிறவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தன் வீடு உண்டு தான் உண்டு என்று இருக்க வேண்டுமேயல்லாது, தேர்தல் காலத்தில் தொகுதி மக்களை சந்திக்கும் வாய்ப்பு கண்டிப்பாகக் கூடாது. அப்போது அவரோ அவரது கட்சியோ, ஆதரவாளர்களோ தொகுதியைச் சுற்றி சுற்றி வரும் நிலை கூடவே கூடாது. அப்போதுதான் சகல ஒழுங்கீனங்களும், வாக்குகளை விலைக்கு வாங்கும் அராஜக ங்களும் அரங்கேற வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த தவறான நடைமுறையால் வேட்பாளர் தேர்தல் காலத்தில் தொகுதியை சுற்றி சுற்றி குட்டிபோட்ட நாய் போல் வந்தவர், எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. எனத் தேர்ந்தெடுக்கப் பட்ட பின், அதுதான் வாக்குகளைப் பெருந் தொகை கொடுத்து வாங்கிவிட்டோமே என்ற துணிச்சலில், தொகுதி பக்கம் எட்டியும் பார்க்காமல் தேர்தல் காலத்தில் செலவிட்ட சில கோடிகளை ஒன்றுக்கு நூறாக திரும்பப் பெறுவதில் குறியாகச் செயல்படும் அவல நிலை ஏற்படுகிறது. கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களுக்கு 25 கோடி, 50 கோடி என குதிரைப் பேரம் நடந்து வருவது நாடறிந்த உண்மை. இன்றைய இந்தப் பணநாயக தேர்தல் முறையால்தான் இப்படி நாடு சீரழிந்து வருகிறது. இந்த தேர்தல் முறை மாற்றப்படாத வரை நாடு உருப்படப் போவதில்லை.

தொகுதிப் பக்கம் போவதைத் தடுத்தால் எப்படி தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியும்? என சுயநலமிகள் கேட்கலாம். தேர்தல் அல்லாத காலத்தில் தொகுதியைச் சுற்றிச் சுற்றி மக்களுக்குத் தொண்டு செய்து 4,5 வருடங்களாக தொகுதிக்கு அறிமுகமானவர் தேர்தல் காலமான சில மாதங்கள் தொகுதிக்குச் சென்று தேர்தல் பிரசாரம் செய்யும் அவசியம் இருக்கிறதா? இல்லையே! மற்ற காலங்களில் தொகுதி பக்கமே தலை காட்டாதவர்கள்தான் பதவியை சொந்த நலனுக்காக அடையும் கீழ்மதி படைத்தவர்களே வாக்களர்களை விலைக்கு வாங்கும் கட்டாயத்தில் தொகுதியை தேர்தல் காலத்தில் சுற்றி சுற்றி வரும் கட்டாயம் ஏற்படுகிறது. கூலிக்கு ஆட்களைப் பிடித்துக் கூட்டத்தைக் காட்டி அறிவு குறைந்த மக்களை ஏமாற்ற முடிகிறது. தொலைக்காட்சி வசதி இல்லாத அக்காலத்திலாவது மக்களை நேரடியாகக் கண்டு தங்களின் வீரப் பிரதாபங்களை எடுத்துச் சொல்லும் கட்டாயம் இருந்தது. அதுவும் தொகுதியின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே நேரிலும், மேடை அமைத்தும் பேச முடியும். அன்று வேறு வழி இல்லை.

ஆனால் இன்றோ தொலைக்காட்சி பெட்டி இல்லாத வீடே இல்லை. கஞ்சிக்கு வழி இல்லா விட்டாலும் அரசு கொடுத்த தொ.கா. பெட்டி இருக்கவே இருக்கிறது. அன்று முழுத்தொகுதியை ஒரே நேரத்தில் அடைய முடியாத வேட்பாளர் இன்று தொலைக்காட்சி மூலம் தனது தொகுதி மட்டுமல்ல, அனைத்துத் தொகுதி மக்களையும், அத்தொகுதி மக்கள் உலகில் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் அவர்களையும் தொலைக் காட்சி மூலம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கும்போது தேவை இல்லாமல் ஏன் தொகுதியைச் சுற்றி சுற்றி வர வேண்டும்? பொது மக்களின் பொன்னான வாக்குகளை விலைக்கு வாங்கும் நோக்க முடையவர்கள் மட்டுமே தேர்தல் காலத்தில் மட்டும் தொகுதியச் சுற்றி சுற்றி வரும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

எனவே தேர்தல் முறை உண்மையிலேயே பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி நடக்கும் ஜனநாயகத் தேர்தல் முறை என்றால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் அரசு புதிய திட்டங்களையோ, சலுகைகளையோ அறிவிக்கக் கூடாது, அளிக்கக் கூடாது என்ற விதி சட்டமாக்கப்பட்டிருப்பதுபோல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் கட்சிகளும் தொகுதி பக்கம் தலைகாட்டவே கூடாது, தொகுதி மக்களை நேரடியாகச் சந்திக்கக் கூடாது என்ற விதியும் சட்டமாக்கப்பட வேண்டும். அச்சட்டம் மிகமிக உறுதியாக நடைமுறைப்படுத்தப் படவேண்டும். அப் போதுதான் அது உண்மையான ஜனநாயக முறைத் தேர்தலாக அமையும். இதற்கு அரசும், அரசியல்வாதிகளும் தயார் இல்லை என்றால், ஜனநாயகம், ஜன நாயகம் என மக்களை ஏமாற்ற வேண்டாம்.

இது பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி முறை – ஜன நாயக ஆட்சி என்று பொய் சொல்ல வேண்டாம். இது சிறுபான்மையினரான குபேரர்களின் – செல்வச் சீமான்களின் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்படும் குபேரர்களின் – செல்வச் சீமான்களின் ஆட்சி-பணநாயக ஆட்சி என பகிரங்கமாக அறிவித்துச் செயல்படட்டும். தற்போது நடைமுறையிலிருக்கும் போலி ஜனநாயக தேர்தல் முறை கோடிக் கணக்கில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர் களும் செலவிட வேண்டியுள்ளதால், அவர்கள் குபேரர்களின் பெரும் பெரும் செல்வச் சீமான்களின் விருப்பத்திற்கு மாறாக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது. செல்வச் சீமான்களின் விருப்பமோ ஏழைகளை வதைத்து தாங்கள் மேலும் மேலும் செல்வத்தை குவிக்க வேண்டும் என்ற பேராசையாகவே இருக்கிறது.  எனவே ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் பணநாயக ஆட்சி கொண்டு நாடு உருப்படவே உருப்படாது. இதுவே உண்மை

Previous post:

Next post: