சாமி யார்?

in 1996 மே

மனித சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் இணைவது என்பது ஒரு நியதி. அதை விடுத்து, ஆணோ, பெண்ணோ, தனித்துத் துறவறம் என்ற நிலையில் வாழ்வது என்பது மனித நீதிக்கும் மனித நேயத்துக்கும் மட்டுமல்ல, முழு மனித சமுதாயத்துக்கும் எதிரான செயலாகும். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் தாய், தந்தையர் துறவறம் பூண்டிருந்தால் இந்த மனிதன் உருவாயிருக்கவே முடியாது. தான் வந்த பாதையை மறந்த – உணராதவர்களின் தத்துவமே துறவறம்.

இன்றைய இந்தியாவை எடுத்துக் கொண்டால் துறவறம் கொண்டுள்ள சாமியார்கள் அதாவது காவி அணிந்த போலிகள், பொது ஒழுக்கச் சிதைவுகளின் புகலிடங்காளக மடங்களை அமைத்து, தங்களைக் கடவுளின் அவதாரங்கள் என்று சுய விளம்பரம் செய்கிறார்கள். தங்களால் உருவாக்கப்பட்ட போலி மதச் சடங்குகளை கவர்ச்சிப் பேச்சாலும், மாய ஜால மாஜிக் வித்தைகளாலும் பரப்பி பக்தர்களை – பக்தைகளைக் கவிர்கிறார்கள்.(பக்த கூட்டங்கள் கவிழ்கிறார்கள்) ஆன்மீகம் என்ற போர்வையில் பாலியல் வன்முறைகளையும், சுய கற்பனையில் அமைந்த கடவுள் கொள்கைகளையும் செயல்படுத்துகிறார்கள்.

“அந்த ஆன்மீகவாதிகளை,’ “நடமாடும் தெய்வங்களை(?) – சாமியார்களை’ நாடிச் செல்கின்ற எந்த சீடரும் தனது சொந்த நலனுக்காக -சுயநலனுக்காக, ஓடுகிறார்களே தவிர, சமுதாய நலனுக்காக அல்ல. உண்மையான கடவுள் பக்தி என்பது, சக மனிதர்களுக்குத் தொண்டாற்றுவதிலும், சமுதாயத்துக்குப் பயன்படக் கூடிய வகையில் செயல்களை அமைத்துக் கொள்வதும், சுரண்டலுக்கும், அடிமைத்தனத்துக்கும் ஆட்பட்ட மக்களை விடுவிப்பதும், தனி மனித வாழ்க்கையின் பூரண ஒழுக்கம் போன்ற பல உயர்தர லட்சியங்களைப் பின்பற்றும் அடிப்படையில் அமைய வேண்டும். இதுவே கடவுகளுக்குப் பயப்படுதல் என்ற இலக்கணத்தில் அடங்கும்.

சாமி என்றால் என்ன? சாமி, யார் என்று அறியாத சிந்திக்க சோம்பேறிப்படும் மக்களை, புட்டப்பர்த்திகளும், பிரேமானந்தாக்களும், சந்திரசாமிகளும் ஏமாற்றுகிறார்கள்.இந்திய நாட்டை எடுத்துக் கொண்டால், ஜனநாயகமா? சாமியார்கள் ராஜ்யமா? என சந்தேகப்படும் அளவிற்கு சாமியார்களுக்கு தலை வணங்கும் ஒரே நாடு இந்தியா!
தியோரகா பாபா என்கிற சாமியார் உயரமாக பந்தல் போட்டு அதில் முழு நிர்வாணமாக அமர்ந்திருப்பார். ஆசி பெற விரும்புவர்களை மேலே இருந்துக் கொண்டு உதைப்பது போல மிதிப்பார். இப்படி இவரிடம் ஆசி வாங்கியது குப்பனோ, சுப்பனோ அல்ல; நாட்டை ஆளும் வர்க்கத்தினர்; பெரிய(?) மனிதர்கள்.

நாகரிகம் தெரியாதவர்களா இவர்கள்? நாட்டுக்கே நாகரிகத்தைப் போதிக்கிறோம் என்றல்லவா கூறுபவர்கள்! சிந்திக்க தெரியாதவர்களா அவர்கள்? சீட்டோ, நாட்டோ என்றும் ஐ.நா மன்றம் வரை ஏறி மணிக்கணக்கில் ஆங்கிலத்தில் உரையாற்றும் விற்பன்னர்கள் தான்! என்ன செய்வது?

மேஜிக் நிபுணர், சூப்பர் ஸ்டார் புட்டப்பர்த்தி சாய்பாபா, தன்னை கடவுளின் அவதாரம என்கிறார். ஆனால் புட்டப்பர்த்தி வளாகத்தில் நடைபெற்ற கொலைகள், விழுந்த பிணங்கள்,சாயிபாபாவின் சங்கதியை நாற்றமெடுக்க வைத்துவிட்டன. ஆனால் இந்தச் சாமியாரின் காலைக் கழுவிக் குடிப்பதிலே, ஆளும் வர்க்கம் கூச்சப்படுவதில்லை. மக்கள் தம் காலிலே விழுவார்கள் என்று வித்தைக்காரர்கள் காவி உடை தரிக்கிறார்கள்! அவர்களது காலித்தனங்களை அரசாங்கங்கள் கண்டுக் கொள்வதேயில்லை. அதனால் தான் மூலைக்கு மூலை சாமியார்கள் முண்டாதட்டி எழுகிறார்கள்.
சந்திரசாமியின் சாகசங்கள் தினசரிகளில் தொடர்வது அண்மைக்கால் ரிலீஸ்.

குளியலறையில் வீடியோ காமிரா வைத்து பெண்களை நிர்வாணமாகப் படம் பிடித்து புளூ ஃபிலிம் வேட்டை நடத்தி வந்த திருச்சி பிரேமனந்த சாமியின் சங்கதிகள் நாற்றமெடுத்த செய்திகள் இதற்கு முன்னைய ரிலீஸ்! பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமைகளை கொடுக்காததால் விளைந்த விபரீதங்கள் அவை! இப்படிப்பட்ட சாமியார்களின் மாஜிக் வித்தை மந்திர ஜாலங்களை மக்கள் மத்தியில் காட்டும் போது, அறிவுடையோர்,அதாவது தெளிவான இறைக் கொள்கைகளை விளங்கியவர்கள், அவற்றை புரட்டல் என ஏசி ஒதுக்குவர்.

ஆராயும் தன்மையில்லாத, அதாவது சிந்திக்க சோம்பேறித்தனம் உள்ளவர்கள், கடவுள் கொள்கையின் வரையறை தெரியாமல், மதங்களில் வாழும் மாந்தர்கள் அப்படியா? என ஆச்சரியத்தால் வாய் பிளக்க நின்று கேட்பர்; கை கூப்புவர்; ஆசிரமங்களை நோக்கி பயணிப்பர்.

வீரவேசங்க கொண்ட வேங்கையானாலும் சதுப்பு நிலத்திலன் படுகுழியிலே வீழ்ந்து விட்டால் சாகத்தானே வேண்டும்!
சுய சிந்தனையில்லா மக்கள், பல கடவுளை நம்பும் மக்கள், மனித உருவங்களை தெய்வமாக வழிபடும் மக்கள் எல்லாம் மதம் எனும் குழியிலே விழுந்து அறிவையும் ஆற்றலையும் இழந்து வருகிறார்கள். இன்றைய உலகில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து மதங்களிலும் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே புரோகிதர்களைத் தரகர்களாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அனைத்து மதங்களிலலும் புரோகிதர்கள் சாதாரண மக்களைப் பயமுறுத்தி, பக்திகாட்டிப் பிழைக்கிறார்கள்!

கற்பனைக் காவியங்களை வேதங்களாக்கி, மக்களின் மனங்களிலே மதம் எனும் மாயையை ஏற்படுத்தியிருப்பதால் மூலைக்கு மூலை சாமியார்கள் உருவெடுக்கிறார்கள். மக்கள் இவர்களைக் கண்டதும் இவர்களை வணங்காவிட்டால் , இவர்களுக்குப் பயப்படாவிட்டால் இவர்களுக்கு மரியாதை செய்யா விட்டால் நம்மை ஏதும் செய்து விடுவார்களோ என்று அச்சப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல! நிறைய பணம் வேண்டும்; கார், பங்களா, பட்டம், பதவி வேண்டும் என்று பேராசைப்படுகிறார்கள்; ஆக, இப்படிப்பட்ட அச்சத்திற்கும், பேராசைக்கும் பிறக்கும் மூட பக்தி மக்களை ஆட்டிப்படைக்கிறது.

சாமிகளோ,வசதி படைத்தவர்களிடம், பொன்னும், பொருளும் கறந்து பண இச்சையைத் தணிக்கிறார்கள்! அப்பாவிப் பெண்களிடம் காம இச்சையைத் தணிக்கிறார்கள். இப்படிப்பட்ட சாமியார்கள் கேவலம் ஒரு மயிரைக் கூடப் படைக்கச் சக்தி இல்லாதவர்கள் என்பதை . மக்கள் ஏனோ, உணராமல் உள்ளார்கள். மக்கள் விழித்துக் கொள்வது எப்போது?
உண்மையான அச்சம் எது தெரியுமா?

ஒவ்வொரு தனி மனிதனும் நம்மை இறைவன் கண்காணிக்கிறான் என்ற உணர்வைப் பெறுவது தான், உண்மையான அக, புற ஒழுக்கமுள்ள மனிதனாக வாழ வைக்கும்! அறிவுள்ளவனாக, பிறருக்குத் துன்பம் விளைவிக்காதவனாக, தன்னுடைய குடும்பம், விஷயங்களையும் நேர்மையானதாகவும், உண்மையானதாகவும் ஆக்கும்! அப்படிப்பட்ட இறையச்சத்தைத்தான் இவ்வுலகிற்கு, இஸ்லாம் போதிக்கின்றது.

உண்மையான அக, புற ஒழுக்கமுள்ள மனிதனாக வாழ வைக்கும்! அறிவுள்ளவனாக, பிறருக்குத் துன்பம் விளைவிக்காதவனாக, தன்னுடைய குடும்பம், வியாபாரம், உத்தியோகம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நேர்மையானதாகவும், உண்மையானதாகவும் ஆக்கும்! அப்படிப்பட்ட இறையச்சத்தைத்தான் இவ்வுலகிற்கு, இஸ்லாம் போதிக்கின்றது.

உண்மையான ஆசை எது தெரியுமா?
ஒரு மனிதன் “” ஆசைபிடித்தவன்” என்றவுடன் பணம், தங்கம்,கார், பங்களா என்று நினைத்தால் அது தவறு. இவையெல்லாம் “”பேராசையை” குறிக்கும். உண்மையிலேயே ஆசை என்பது “”முயற்சி” என்ற செயலின் முதல் படியாகும். வாழ்க்கையில் முயற்சி எனும் செயலைச் செய்யாதவன் கேடு கெட்டச் சோம்பேறி என்பதைத் தவிர வேறில்லை.கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை முயற்சிதானே! பொன்னும், பொருளும், சம்பாதிப்பது குற்றமல்ல; அதை எப்படிச் சம்பாதிப்பது என்பதுதான் கேள்வி! அது மட்டுமா? சம்பாதித்ததை எந்தெந்த வழிவகையில் செலவு செய்வது என்பது அதைவிட முக்கியம். இந்த நேர்மையான முயற்சியுடைய ஆசையை இறைவணக்கமாகவே போதிப்பது இஸ்லாம்.

ஆக இப்படிப்பட்ட உன்னதமான லட்சியங்களையும், உயர்வான கொள்கைகளையும் உலகளாவிய சகோதரத்துவ பண்புகளையும் உள்ளடக்கிய கோட்டை தான் இஸ்லாம். இந்த நேரத்தல் ஒரு முக்கிய விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.கலாச்சார தாக்கம் என்பார்களே, அதுபோல, ஆரிய மாயையிலே தன்னுணர்வை இழந்த தமிழன் போல; வடவர்கள் ஆண்டதினால் தன்னுரிமை இழந்த தமிழகம் போல; பெரும்பான்மையான முஸ்லிம்கள் இஸ்லாமிய இலட்சியங்களையும், கொள்கைகளையும் அறியாமல், இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் போலவே வாழ்கிறார்கள்! அந்தோ பரிதாபம்!

23 வருட உலகளாவிய லட்சியப் போராட்டத்தில் உலக நாகரிகத்தையே மாற்றியதைத்த முஹம்மது நபி(ஸல்) அவர்களை முறையாக அறியாமல் உள்ளார்கள், முஸ்லிம்கள்! ஆகையால்,

1. சமாதி வழிபாடு எனும் சகதியில் சிக்கியிருக்கும் முஸ்லிம்களுக்கும், தனி மனிதர்களை உயர்த்திப் பிடித்து தலைவணங்கும் முஸ்லிம்களுக்கும் முதல் வேண்டுகோள்!

2. மனிதனுக்கு உயர்வு தாழ்வு கற்பித்து, ஆசிரமங்களில் வசிக்கின்றவர்களை நம்பி வாழ்க்கை நடத்தும் மாற்று மத சகோதரர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

3. படைத்த ஒரே கடவுளை மட்டும் வணங்கு! மனிதனை வணங்காதே என்று ஏகத்துவப் புரட்சி செய்த ஏசு(ஈஸா)வையே வணங்கும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் ஒரு வேண்டுகோள்!

4. மனிதர்களின் மடத்தனமான மதக் கொள்கைகளைப் பார்த்து, பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்காமல் இறை நிராகரிப்புச் செய்யும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இஸ்லாம் உங்கள் அனைவரையும் அழைக்கிறது!
ஆம்! இஸ்லாம் மதம் அல்ல! நேரிய வாழ்க்கை நெறி! ஓர் உலகளாவிய இயக்கமே இஸ்லாம்! இஸ்லாம் குறிப்பிட்ட மொழியினருக்கோ, பகுதியினருக்கோ, குலத்தினருக்கோ, நாட்டினருக்கோ உரிய மார்க்கம் அன்று! அது மனித குலம் முழுமைக்கும் சொந்தமான முழுமையான வாழ்க்கைத் திட்டம்! இஸ்லாத்தில் பிறப்பால் – நிறத்தால் – மொழியால் – குலத்தால் எவரும் உயர்ந்தவராகவோ, தாழ்ந்தவராகவோ முடியாது. இஸ்லாமிய மார்க்கத்தில் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் எவருமில்லை. புரோகிதர்களுக்கும் இஸ்லாத்தில் இடமில்லை.

இஸ்லாத்தில் ஏக இறைவனைத் தவிர வேறு எவர் முன்னிலையிலும், எதன் முன்னிலையிலும் எவரும் தன் சுய மரியாதையை இழக்கக் கூடாது. குனிவது, பணிவது, சாஷ்டாங்கமான விழுவது உள்ளிட்ட எல்லா மரியாதைகளும் ஏக இறைவனுக்கு மட்டுமே சொந்தமானவை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் அறிவுக்குப் பொருத்தமானவை! நடைமுறைப்படுத்த எளிமையானவை! கடந்த பதினான்கு நூற்றாண்டுகளில் இஸ்லாமியச் சட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
இஸ்லாம் மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சிறப்பான வழிகாட்டுகிறது. மனிதனைத் தன்மானத்துடனும், நேர்மையுடனும் வாழச் செய்கிறது. எனவே தூய இஸ்லாத்தின் உயர்போதனைகளை அறிந்து பின்பற்றுவீர்!

ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் வானத்திலிருந்து இறங்குகின்றனர். அதில் ஒருவர் யா அல்லாஹ் தன் பொருளிலிருந்து (தான தர்மத்திற்காக) செலவு செய்கிறவனுக்கு அபிவிருத்தி செய்வானாக என்கிறார் மற்றவர் கருமியின் பொருட் செல்வத்தை அழிப்பாயாக என்கிறார். என நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரழி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

Previous post:

Next post: