கூட்டு துஆ, துஆவா? பத்துஆவா?

in 2010 டிசம்பர்

அபூ அப்தில்லாஹ்

இக்கட்டுரை முழுக்க முழுக்க அல்குர்ஆன் வச னங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கொண்டதாகும். யாருடைய உள்ளத்தில் இறை நம்பிக்கையான ஈமான் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே அல்குர்ஆனின் கட்டளைகளையும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்ட லையும் ஒருபோதும் துச்சமாக எண்ணிப் புறக்கணிக்கமாட்டார்கள். கவனமாக உள்ளச்சத்துடன் படித்து விளங்கி, அதன்படி நடப்பார்கள் என்பதை குர்ஆன் 2:38, 51:55 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. யாருடைய உள்ளத்தில் ஈமான் இல்லையோ பெயர் தாங்கி முஸ்லிம்களாக, புரோகிதர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே இந்த குர்ஆனின் கட்டளைகளை நிராகரித்து, அதற்கு மாற்றமாக முன்னோர்களின் கட்டுக் கதைகளை நம்பி ஏற்று நடப்பதன் மூலம் நரகம் புகுந்து அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள் என்பதை 2:39 இறைவாக்கு கட்டியம் கூறி உறுதிப்படுத்துகிறது.

துஆ பிரார்த்தனைப் பற்றிய அல்லாஹ்வின் கட்டளை என்ன? இதோ! அல்குர்ஆன் அல் அஃராஃப் : 7:55
(முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்; வரம்பு மீறுகிறவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:55)
அடுத்து-திக்ர் அல்லாஹ்வை நினைவு கூர்தல் பற்றிய அல்லாஹ்வின் கட்டளை என்ன? இதோ அதேஅத்தியாயம் 7:205

“”நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனை திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அல்லாஹ்வை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம். (7:205)

நபி(ஸல்) மிஃராஜுக்குப் போன தமது 52-வது வயதிலிருந்து 63வது வயது வரை 12 ஆண்டுகள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகை என 21900 தொழுகைகள் தொழுத இடத்தில் ஒரேயொரு தொழுகையிலாவது, இன்று இந்த சுன்னத் ஜமாஅத் எனப் பீற்றிக் கொள்ளும் மவ்லவிகள் செய்வது போல் நபி(ஸல்) தொழுகைக்குப் பின் சப்தமாக துஆ கேட்டு நபிதோழர்கள் ஆமீன் சொன்ன ஒரேயொரு ஆதாரமாவது இந்த மவ்லவிகளிடம் இருக்கிறதா? இல்லவே இல்லை.

அப்படி இல்லை என்றால் இந்த மவ்லவிகள் பின்பற்றுவது நபி(ஸல்) அவர்களையா? அல்லது நபி(ஸல்) மறைவுக்குப் பிறகு முஸ்லிம்களிடையே புகுந்து கொண்ட யூத கைக்கூலிகளையா? சுன்னத் ஜமாஅத் மவ்லவிகள் யாரைப் பின்பற்றுகிறார்கள்? நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதும் தொழுகைகளின்போது குர்ஆனிலுள்ள துஆக்களை சப்தமிட்டு ஓதியிருக்கிறார்கள். நபி தோழர்களுக்கு துஆக்களைக் கற்றுக் கொடுக்கும்போது சப்தமிட்டுக் கூறி இருக்கிறார்கள். மக்களுக்கு உபதேசம் செய்யும்போது ஓரிரு சந்தர்ப்பங்களில் மக்கள் கேட்கும் அளவில் மழை, சீற்றம் போன்ற சந்தர்ப்பங்களில் துஆ செய்திருக்கிறார்கள். யூனூஸ் 10:88,89களில் மூஸா (அலை), ஹாரூன்(அலை) அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு துஆ கேட்க, உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றிருக்கிறதே அல்லாமல், இங்கும் ஹாரூன்(அலை) ஆமீன் சொன்னதாக இல்லை. ஆதாரபூர்வமான ஹதீஸும் இல்லை. தொழுகையில் “வலழ்ழால்லீன்” என்று சொன்னவுடன் நபி(ஸல்) அவர்கள் முதல் வரிசைக்கு கேட்கும் அளவுக்கு “ஆமீன்” என்று கூற நபிதோழர்கள் ஒட்டுமொத்தமாக கோரசாக “”ஆமீன்” என நடுநிலைச் சத்தத்துடன் கூறியதாக ஆதாரம் கிடைக்கிறது.(பார்க்க புகாரி (ர.அ.) 780, 781, 782)

இந்த இடத்தில் ஹனபி மவ்லவிகளும், ஹனபிகளும் இந்த ஆதாரபூர்வமான ஹதீஸை புறக்கணித்து நிராகரிக்கிறார்கள். ததஜவினரும், ஜாக்கினரும் காட்டுக்கத்தாக “”ஆம்ம்ம்மீமீமீன்ன்ன்” என நீட்டி முழங்கு கிறார்கள். இந்த இரண்டு வழிகளும் நேர்வழி அல்ல. அது அல்லாமல் கூட்டு துஆ என்ற அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு துஆ செய்து நபிதோழர்கள் “ஆமீன்” கூறிய ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸும் இல்லை. இட்டுக்கட்டப்பட்ட, பலகீனமான ஹதீஸ்களையே இந்த மவ்லவிகள் எடுத்து ரீல் விடுவார்கள்.
ஒன்றை முஸ்லிம்கள் தெளிவாக விளங்குவது மிக மிக அவசியம். மூஸா(அலை), ஈசா (அலை) போன்ற முன்னைய நபிமார்களின் சமுதாயங்களில் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்ட மத குருமார்கள் இறைவனால் இறக்கியருளப்பட்ட தவ்றாத், இன்ஜீல் போன்ற நெறிநூல்களிலேயே தங்கள் கைவரிசையைக் காட்டி, பொய்யான செய்திகளை அல்லாஹ் சொன்னதாக நபி சொன்னதாக அளந்து விட்டார்கள். நெறிநூல்களில் மனிதக் கற்பனைகளைப் புகுத்தினார்கள். ஆனால் இறுதி நெறிநூல் அல்குர்ஆன் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால் முஸ்லிம் சமுதாயத்திலும் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்ட இந்த மத குருமார்களால் அதில் தங்கள் கைவரிசையைக் காட்டி ஒரு வசனத்தைக் கூட இடைச் செருகலாகப் புகுத்த முடியவில்லை.

ஆனால் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. எனவே நபி(ஸல்) சொன்ன தாக எண்ணற்ற பொய்யான செய்திகளை இந்த மதகுருமார்கள் பின்பற்றும் யூதக் கைக் கூலிகள் ஹதீஸ் என்ற பெயரால் கற்பனை செய்து புகுத்திவிட்டார்கள். ஒரு மவ்லவி ஜும்ஆ மேடையிலோ, அல்லது வேறு பிரசங்க மேடைகளிலோ உரை ஆற்றும் போது அவர் 10 ஹதீஸ்களைச் சொன்னால் அவற்றில் 9 ஹதீஸ்கள் பொய்யான பலவீனமான, இட்டுக் கட்டப் பட்ட ஹதீஸ்களாகவே இருக்கும். எப்படி குர்ஆனின் ஆயத்துகள் 6236 இருக்கின்ற னவோ. அதுபோல் ஆதாரபூர்வமான ஹதீஸ்க ளைத் திரட்டினால் அவை 6 ஆயிரத்தைத் தாண்டா. 6236 குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்வின் 16:44,64 கட்டளைப்படி தேவையான ஒரு சில வசனங்களுக்கு மட்டுமே நபி(ஸல்) விளக்கம் கொடுத்திருப்பதைப் பார்க்கலாம். எஞ்சியவை படிப்பறிவே இல்லா பாமரனும் அவற்றைப் பிறர் படிக்கக்காதால் கேட்ட மாத்திரத்தில் விளங்கும் நிலையிலேயே இருக்கின்றன.

ஆனால் இந்த மத குருமார்களின் முன்னோர்களான யூதக் கைக்கூலிகள் சுமார் 10 லட்சம் ஹதீஸ்களை இட்டுக் கட்டி இருக்கிறார்கள் என்றால் அவர்களின் மோசடியை விளங்கிக் கொள்ளுங்கள். அப்படி கற்பனை செய்யப் பட்ட ஹதீஸ்களைக் கொண்டுதான் நபி(ஸல்) அவர்கள் கூட்டு துஆ செய்தார்கள். நபி தோழர்கள் “”ஆமீன்” கூறினார்கள் என வடிகட்டிய பொய்யை அவிழ்த்து விடுகிறார்கள், பொது மக்களும் ஏமாறுகிறார்கள். மக்கள் சிறிது சிந்திக்க வேண்டும். அல்லாஹ் ஹலாலாக்கிய ஒரு பொருளை நபி(ஸல்) ஹராம் என்று கூறியவுடன், அல்லாஹ் எவ்வளவு கடுமையாகக் கண்டிக்கிறான் என்பதை அத்தஹ்ரீம் 66:1,2 வசனங்களைப் படித்துப் பாருங்கள். கண்டித்தது மட்டுமல்ல, சத்தியத்தை முறிக்கச் செய்து அதற்குப் பரிகாரமும் கொடுக்க வைத்தான். இந்த நிலையில் 7:55, 205 இறைக் கட்ட ளைகளுக்கு முரணாக அல்லாஹ்வின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த (பார்க்க 52:48) நபி (ஸல்) அவர்கள் அக்கட்டளைகளை நிராகரித்து கூட்டு துஆவோ, கூட்டு திக்ரோ செய்திருப்பார்களா? நடுநிலையுடன் சிந்தித்துப் பாருங்கள்.

தொழுகையாளிகளுக்கு இடையூறாக குர்ஆனையே சப்தமிட்டு ஓதக் கூடாது என்று மார்க்கம் தெளிவாகக் கட்டளையிட்டிருக்க, தொழுகையில் சலாம் கொடுத்தவுடன், 2-ம், 3ம், 4-ம் ரகாஅத்துகளில் வந்து சேர்ந்தவர்கள் எழுந்து தொழுது கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் சப்தமாக துஆ செய்து பின்னால் இருப்பவர்கள் ஆமீன், ஆமீன் எனச் சொல்லி தொழுகையாளிகளுக்கு இடையூறு செய்யலாமா? அதேபோல் அய்யாமுல் தஷ்ரீக் நாட்க ளில் அல்லாஹ்வை பெருமைப்படுத்தி அதிக மாக “திக்ர்’ செய்வது அனைவர் மீதும் சுமத்தப் பட்ட நபிவழி. 7:205 இறைக் கட்டளைப்படி அனைவரும் தனித்தனியே மனதிற்குள் மிக்க பணிவோடு, அச்சத்தோடு சப்தமின்றி காலையிலும் மாலையிலும் திக்ர் செய்வதற்கு மாறாக தொழுகையில் மட்டும் இமாம் சலாம் கொடுத் தாரோ இல்லையோ பின்னால் எழுந்து தொழு பவர்களுக்கு இடையூறாக காட்டுக்கத்தாக இமாம் கத்த பின்னால் உள்ளவர்களும் பதிலுக்கு காட்டுக் கத்தாகக் கத்துவதுதான் சுன்ன த்து நபி வழியா? அல்லாஹ்வின் நேரடிக் கட்ட ளைகளை புறக்கணித்து 2:39 குர்ஆன் வசனம் சொல்வது போல் நிராகரித்து குஃப்ரிலாகி யூதக் கைக்கூலிகள் முஸ்லிம் சமுதாயத்தை வழிகெடுக்கும் தீய நோக்குடன் புகுத்திய வழிகேடான-பித்அத்தான இந்த கூட்டு துஆ, கூட்டு திக்ர் இவற்றை முஸ்லிம் சமுதாயத்தில் புகுத்தும் அவசியம் இந்த மத குருமார்களான மவ்ல விகளுக்கு ஏன் ஏற்பட்டது?

ஆம்! மார்க்கப் பணியை அதாவது தொழ வைப்பதற்கு (இமாம்), பிராசரம் செய்வதற்கு (தாயி) அல்குர்ஆனின் 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47 போன்ற எண்ணற்ற வசனங்களைப் புறக்கணித்து நிராகரித்து 2:39 சொல்வதுபோல் குஃப்ரிலாகி சம்பளம் வாங்கி பணி புரிவதால், இந்த மவ்லவிகளின் உள்ளங்கள் 5:13, 6:125 வசனங்கள் கூறுவது போல் சுருங்கி இறுகி கல்லாய்ப் போய் விட்டதால் அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளான இறைவாக்குகளை நிராகரித்து யூதக் கைக்கூலிகள் கற்பனை செய்துள்ள குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் முர ணான சட்டங்களை மார்க்கமாக மக்களுக்குப் போதித்து மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். அதனால்தான் அபூஜஹீலின் அரபி ஆணவம் பேசுகிறார்கள்.

அபுல் ஹிக்கம் என குறைஷ்களால் புகழாரம் சூட்டப்பட்டவனை அபூ ஜஹீல் என நபி(ஸல்) ஏன் அடையாளம் காட்டினார்கள்? எழுதப் படிக்கத் தெரியாத, படிப்பறிவற்ற முஹம்மது எப்படி மார்க்கம் பேசலாம் என அபூ ஜஹீல் ஆணவம் பேசியது போல், இந்த மவ்லவிகள் அரபி மொழி கல்லாத, அல்லாஹ் என்ற பதம் லில்லாஹ் என்று எப்படி வந்தது என்பதை அறியாதவர்கள் எல்லாம் எப்படி மார்க்கம் சொல்லலாம் என அறிவீனமாக அபூ ஜஹீல் வாதம் பேசுகின்றனர். 7:175 முதல் 179 வரை அல்குர்ஆன் இப்படி ஆணவம் பேசுகிறவர்களை அற்ப சம்பளத்திற்காக ஹதீஸ்களின் பேரால் பொய்யானவற்றை மார்க்கமாக்கும் இந்த மவ்லவிகளை ஆடு மாடுகளை விட கேடு கெட்டவர்கள் எனக் கடுமை யாக எச்சரிக்கிறான் அல்லாஹ்.

உண்மைதான்! கூலி வாங்காமல் மார்க்கப் பணி புரிகிறவர்கள்தான் நேர்வழியில் இருக்கிறார்கள்; கூலி வாங்கி மார்க்கப் பணி செய்கிறவர்கள் நேர்வழியில் இருக்க முடியாது என்று அல்லாஹ் அல்குர்ஆன் யாசீன் 36:21ல் கூறுவது எந்த அளவு உண்மை என்பதை, இந்த மவ்லவிகளை நம்பாமல் அல்குர்ஆன் மொழி பெயர்ப்பு களைப் படித்து விளங்குகிறவர்கள் மட்டுமே அறிய முடியும். சம்பளம் வாங்கும் கேடுகெட்ட புத்தி காரணமாகவே பொது மக்களில் யாரும் தொழவைக்க முன்வந்துவிடக் கூடாது என்ற கெட்ட நோக்கத்துடன் கற்பனை செய்யப்பட்டதே இந்த பத்துஆவான கூட்டு துஆ-கூட்டு திக்ர். இந்த பித்அத் கூட்டு துஆ இல்லை என்றால் பொது மக்களில் அநேகர் தைரியமாக தொழவைக்க முன்வந்து விடுவார்கள். இந்த பித்அத் துஆ தெரியாத காரணத்தால் மட்டுமே இமாமத் செய்யத் தயங்குகிறார்கள்.

நபி(ஸல்) தொழுகைக்குப் பின்னரும் கூட்டு துஆ செய்யக் கற்றுத்தரவில்லை. ஹஜ்ஜு டைய அமல்கள் அனைத்தையும் தான் செய்வ தைப் பார்த்து செய்யக் கட்டளையிட்டார்களே அல்லாமல் எந்த இடத்திலும் கூட்டு துஆ செய்யவில்லை. குறிப்பாக அரஃபா நாளில் ளுஹர் அஸரை கஸ்ர் ஜம்ஆக 2+2=4 மட்டுமே தொழுதுவிட்டு, மஃறிபு வரை மனதிற்குள் துஆ செய்தார்களே அல்லாமல், மஹத்துவமுள்ள அந்த நாளில், மஹத்துவமுள்ள அந்த இடத் தில், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் புனிதமான அந்த நேரத்தில் கூட கூட்டு துஆ செய்து நபி தோழர்களை ஆமீன் சொல்ல ஏவவில்லை. ஆக ஆதாரபூர்வமான ஒரு ஹதீஸைக் கொண்டும் கூட்டு துஆவை இந்த மவ்லவிகளால் நிலை நாட்ட முடியவே முடியாது. யூதக் கைக் கூலிகள் கட்டிவிட்ட பொய் ஹதீஸ்களை மட்டுமே அவர்களால் காட்ட முடியும். அவர்கள் உண்மையாளர்கள் என்றால் அப்படி ஒரு ஹதீஸை அறிவிப்பாளர் வரிசையுடன் (சனது) ஹதீஸின் மத்தனுடன் அரபி மொழியிலேயே எடுத்துத் தரட்டும். அதிலுள்ள பொய்யனை, பலவீனமானவனை, மறதியாளனை நாம் உரிய ஆதாரங்களுடன் அடையாளம் காட்டுவோம். இன்ஷா அல்லாஹ்!

இந்த மவ்லவிகள் வெறுமனே அரபி ஆண வம் பேசுகிறார்களே அல்லாமல் அரபியிலும் அரை குறை, தாய் மொழியிலும் அரைகுறை என்பதை ஆதாரங்களுடன் நிலைநாட்டுவோம். இன்ஷா அல்லாஹ்! அரபு நாடுகளிலிருந்து அரபியில் வரும் ஒரு விசாவிலுள்ளதை சரியாக எடுத்துச் சொல்லத் தெரியாதவர்கள் தான் இந்த மவ்லவிகள். புரோகித அரபி மதர ஸாக்களில் உண்டு, உறங்கி சில ஆண்டுகளைக் கழித்து விட்டால் தாங்கள் பெரும் மேதைகள் என இறுமாப்புக் கொள்கிறார்களே அல்லாமல் முறையான அறிவுடையவர்கள் அல்ல. நிறை குடம் தழும்பாது; குறை குடமே தழும் பும். அற்ப  உலக ஆதாயங்களுக்குப் பல்லிளிக்கும் இழி குணம் படைத்தவர்களே இந்த மதகுருமார்கள். எமது 18வது வயதிலிருந்து 68 வயது வரை கடந்த 50 ஆண்டுகளாக தர்கா, தரீக்கா, தப்லீஃக், மத்ஹபு, முஜாஹித், அஹ்ல ஹதீஸ், ஜாக், ததஜ, இதஜ, ஸலஃபி என அனைத்து வகை மதகுருமார்களுடன் நெருங்கிப் பழகி, ஒட்டி உறவாடி அவர்களின் பலம், பலகீனம், ஒழுக்கக் கேடுகள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் பெரும் வாய்ப்பை அல்லாஹ் எமக்குக் கொடுத்தான்.

“… எதுகை மோனையுடன் பிரார்த்திப்பதில் கவனமாக இருந்து தவிர்த்து விடுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் இவ்வாறு செய்வதிலிருந்து தவிர்ந்திருக்கவே நான் கண்டுள்ளேன்”
இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ 6337.

இன்று மதகுருமார்களான மவ்லவிகள் அறிவு குறைந்த மக்களை கவர்ந்து இழுப்பதற்காக, அதுவும் ஜும்ஆவுக்கு மட்டும் வரும் வார முசல்லிகளைக் கவர்ந்து இழுப்பதற்காக, நபி(ஸல்) அவர்களின் நடைமுறையைப் புறக் கணித்து எதுகை மோனையுடன் உள்ளச்சமின்றி, பணிவின்றி சப்தமாக கூட்டு துஆ-பத்துஆ செய்வதை நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? இவர்களை வழிகாட்டிகளாக ஏற்க முடியுமா?
இமாம் “ஆமீன்’ கூறும்போது நீங்களும் “ஆமீன்’ கூறுங்கள். ஏனெனில், வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். யார் கூறும் ஆமீன் வான வர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்திருக்கிறதோ அவருடைய முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ ஹுரைரா (ரழி) புகாரீ 6402

தங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டாம் என்றும் மேலும் பாவங்களை அள்ளிக் கட்ட வேண்டும் என்றும் இறுமாப்புடையவர் களே இமாமுக்குப் பின்னால் நிற்கும் முக்ததிகள் அனைவரும் தொழுகையில் நிலையில் நிற்கும் போது “ஆமீன்’ சொல்வதை மறுத்து, தொழுகை முடிந்தவுடன் பின்னால் வந்து தொழுகையில் சேர்ந்தவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது, நபி(ஸல்) அவர்களின் நேரடியான கட்டளைக்கு முரணாக அவர்களின் தொழுகைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இமாம் சப்தமிட்டு துஆ என்ற பேரில் பத்து ஆவைச் செய்து பின்னால் இருப்பவர்கள் கோர சாகச் சப்தமிட்டு ஆமீன், ஆமீன், ஆமீன் என கத்த வைப்பார்கள்.

“நாங்கள் ஒரு பிரயாணத்தில் இருந்தோம். அப்பொழுது மக்கள் இரைந்து சப்தமாக தக்பீர் கூறினர். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், “நீங்கள் உங்களின் உயிர்மீது இரக்கம் காட்டுங்கள். ஏனெனில் நிச்சயமாக, நீங்கள் செவிடனையோ, மறைந்திருப்பவனையோ அழைக்கவில்லை. நிச்சயமாக, நீங்கள் செவியுறுவோனையும் பார்ப்பவனையும்தான் அழைக்கின்றீர்கள். அன்றி அவன் உங்களுடன்தான் இருக்கின்றான். மேலும் நீங்கள் எவனை அழைக்கின்றீர்களோ அவன் உங்கள் பிடறி நரம்பைவிட அருகில்தான் இருக்கிறான்” (50:16).
புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி. அல்ஹதீஸ் 4125.

பிரயாணத்தில் பிரயாணக் களைப்பை மறக்க சப்தமாக “திக்ர்’ செய்வதையே நபி(ஸல்) தடுத்துள்ளார்கள். இந்த நிலையில் தொழுகை முடிந்தவுடன், பின்னால் வந்தவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் தொழுகையைப் பாழாக்கும் வகையில் இடை யூறாக சப்தமிட்டு துஆ செய்வதையும், திக்ரு செய்வதையும் நபி(ஸல்) அனுமதிப்பார்களா? விரும்புவார்களா? என்பதை தூய நிலையில் இறையச்சத்துடன் நடப்பவர்களே அறிவார்கள். இறையச்சமின்றி கூலிக்கு மாரடிப்பதுபோல் சம்பளத்திற்கு தொழவைக்கும் மவ்லவிகள் ஒருபோதும் இதை உணர மாட்டார்கள். மதகுருமார்களான மவ்லவிகளைப் பின்பற்றுகிறவர்கள் நேர்வழி நடக்கும் வாய்ப்பை இழக்கிறார்கள்.

பித்அத்தான கூட்டு துஆவையும், ஆதத்தான தொப்பியையும் சுன்னத் என்றும் வலியுறுத்தும் இந்த மவ்லவிகள், மஃறிபு, இஷா தொழுகைக் குப் பின்னுள்ள வலியுறுத்தப்பட்ட சுன்னத் தான தொழுகைகளை தொழாமல் புறக் கணித்து விட்டு, பித்அத்தான கத்தம், பாத்தியா இவற்றின் மூலம் அற்ப காசுகளை அடைய வெளியில் பறந்து செல்வதையும் நீங்கள் நிதர்சனமாகப் பார்க்கலாம். ஆதத்தான தொப்பியை வலியுறுத்தும் அவர்கள் வலியுறுத்தப் பட்ட சுன்னத்தான தாடியை வலியுறுத்துவதில்லை. இதுதான் இந்த மத குருமார்களான மவ்லவிகளின் இழி நிலை. நபி(ஸல்) அவர்கள் எப்பொழுதும் தொப்பி தலைப்பாகையுடன் இருந்ததாக உள்ள ஹதீஸை எடுத்து எழுதி தொழுகையில் தொப்பி போடுவதை வலியுறுத்துகிறார்கள். நபி(ஸல்) காலத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்ல; யூதர்கள், கிறிஸ்தவர்கள், குறைஷ் காஃபிர்கள் என அனைவரும் பெரும்பாலும் தலைப்பாகையுடன் இருந்துள்ளனர். எனவே இது அன்றைய ஆதத்து, பழக்க வழக்கங்களிலுள்ளது.

தொப்பி தலைப்பாகை சுன்னத்து-நபி வழி என நம்புகிறவர்கள் என்ன செய்யவேண்டும்? எப்போதும் எங்கு சென்றாலும், தொப்பி தலைப்பாகையுடனேயே காணப்பட வேண்டும். அப்படி இருக்கிறார்களா? இல்லையே! தொழ வைப்பதற்காக தொழுகை விரிப்பில் நின்றவுடன் இகாமத் சொல்லும்போது அல்லவா அங்கு கிடக்கும் தலைப்பாகையை எடுத்துக் கட்டுகிறார்கள். அதுவும் தொழுகை முடிந்ததோ இல்லையோ அவசர அவசரமாக ஏதோ நெருப்பைத் தலையில் சுமந்து கொண்டிருப்பது போல் தலைப்பாகையை தொழுகை விரிப்பில் எறிந்து விடுகிறார்கள். இது என்ன நடிப்பு?

சம்பளத்திற்காக நடிக்கும் நடிகன் தான் நடிப்பதற்காக வேடம் போடுவான். நடித்து முடிந்ததும் வேடத்தைக் கலைந்து விடுவான். அப்படியானால் இந்த மவ்லவிகளும் தொழுகையில் நடிக்கிறார்களா? ஆம்! இந்த மவ்லவிகளும் சம்பளத்திற்காக தொழுகையில் நடிப்பதற்காகவே இந்த தலைப்பாகை என்ற வேடத்தைப் போடுகிறார்கள். தொழுது முடித்தவுடன் அந்த வேடத்துடன் வெளியில் வர வெட்கப்பட்டு வேடத்தைக் கலைந்து விடுகிறார்கள் என்று சொன்னால் அதில் தவறு உண்டா?

ஆம்! எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக இந்த மவ்லவிகள் இவ்வுலக அற்பமான சம்பளத்திற்காகத் தொழ வைப்பதால் அவர்களும் நடிகர்களைப் போல், தலைப் பாகை அணிந்து நடிக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். நடித்து முடித்ததும் வேடத்தைக் களைந்து அதைத் தரையில் எறிந்து விடுகிறார்கள். இதை அவர்கள் பெரிதும் மதிக்கும் அஷ்ரஃப் அலி தானவியும் கண்டித்துள்ளார்.

சரி! அவர்கள்தான் சம்பளத்திற்காக நடிக்கிறார்கள். சம்பளத்தை எதிர்பாராமல் அல்லாஹ் வுக்காகவே தொழ வரும் தொழுகையாளிகளையும் வேடம் போட வைக்கிறார்களே. தொழுகையில் மட்டும் தொப்பி போட கட்டாயப் படுத்துகிறார்கள். அந்த அப்பாவிகளும் இந்த மதகுருமார்களின் சொல்லை வேத வாக்காக ஏற்று அங்கு ரெடிமேடாக வைக்கப்பட்டுள்ள ஓலைத் தொப்பியை எடுத்து தலையில் மாட்டி, மற்றவர்களின் பேன், பொடுகு, சொரி, சிரங்கு, சோரியாஸிஸ் போன்ற நோய் களை இலவசமாக கொள்முதல் செய்து கொள்கிறார்கள். வெளியே செல்லும்போது வெட்கப் பட்டு அந்த ஓலைத் தொப்பியை பள்ளியிலேயே எறிந்துவிட்டு கொள்முதல் செய்த நோயுடன் வெளியே செல்கிறார்கள். அந்தோ பரிதாபம்.

அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட  அல குர்ஆனையும், வஹியின் தொடர்பிலும் (குர் ஆன் 21:45, 53:4) அவனது கண்காணிப்பிலும் (குர்ஆன் 52:48) இருந்த அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களது நடைமுறை களான ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்; அப்படி விளங்கி குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறவர்கள் மிகச் சொற்பமானவர்களாகவே இருப்பார்கள் என்று குர்ஆன் 7:3 இறைக் கட்டளை வலியுறுத்துகிறது. அல்குர்ஆனிலோ, நபி(ஸல்) நடைமுறையிலோ இல்லாத ஒரு மாற்றுக் கருத்தைச் சொல்ல இறை நம்பிக்கையுள்ள ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையே இல்லை; (மாற்றுக் கருத்துக் கொண்டு) அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள் என குர்ஆன் அல்அஹ்ஜாப் 33:36 இறைவாக்கு நெத்தியடியாகக் கூறிக் கொண்டிருக்கிறது.

எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழிக்கும் இந்த இறைவாக்குகள் படித்துக் காட்டப்பட்டால் அவனால் இவற்றை மிகச் சரியாக விளங்க முடியும். வெள்ளை வெளேர் எனத் தெளிவாக விளக்கப்பட்ட பின்னரும், 25:30ல் நபி(ஸல்) நாளை முறையிடுவதுபோல் இந்த இறைவாக்குகளை நிராகரித்துவிட்டு, இமாம்கள் சொல்லியிருக்கிறார்கள், அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது எனக் கூறி 2:170, 5:104, 7:28, 10:78, 21:53, 26:73, 31:21, 43:22,23 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளை நிராகரித்து விட்டு முன் சென்றவர்களைப் பின்பற்றுகிறவர்கள், நாளை மறுமையில் நரகில் கிடந்து வெந்து கொண்டு வேதனை தாங்க இயலாமல் ஒப்பாரி வைப்பதை அதே 33 அத்தியாயத்தின் 66,67,68 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

அவை வருமாறு:
“”அவர்களுடைய முகங்கள் நெருப்பில் புரட்டப்படும் அந்நாளில், ஆ, கைசேதமே! நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கு வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கதறுவார்கள்.
“”எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் (மவ்லவிகள், ஆலிம்கள், இமாம்கள், நாதாக்கள் போன்ற) தலைவர்களுக்கும், பெரியார்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்!” என்று கதறுவார்கள்.

“”எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெரும் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக!” என இறைவனிடம் முறையிடுவார்கள்.

இவ்வுலகில், மார்க்கம் அறிந்த மேதைகள் எனக் கர்வம் கொண்டு பொது மக்களை அவாம்கள்-ஆடு மாடுகளைப் போன்றவர்கள் என இழிவாக நினைக்கும் இந்த மவ்லவி-ஆலிம்களை கண்மூடிப் பின்பற்றிவிட்டு, நாளை மறுமையில் புலம்புவதால் பலன் கிடைக்குமா? நரகை விட்டு விடுதலை கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது. நிரந்தர நரகமே என்பதை 2:39, 18:102-106 இறை வாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும். அல்லாஹ்வுக்கு வழி பட வேண்டும், அவனது தூதருக்கு வழிப்பட வேண்டும் என அல்குர்ஆனில் 19 இடங்களிலும், அல்லாஹ்வை அஞ்சி இறைத்தூதரைப் பின்பற்றுங்கள் என்று 11 இடங்களிலும் நம்மால் காட்ட முடியும். இந்த மவ்லவி ஆலிம்களைப் பின்பற்ற வேண்டும் என அல்குர் ஆனில் ஒரேயொரு இடத்திலாவது இந்த மவ்லவிகளால் காட்டமுடியுமா? ஒருபோதும் முடியாது. அதற்கு மாறாக நாங்கள்தான் அரபி கற்ற ஆலிம் கள்-மேதைகள் என ஆணவம் பேசி பெருமை கொள்பவர்கள் நரகில் எறியப்படுவார்கள் என்பதை நிலைநாட்ட குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை எம்மால் தர முடியும்.

அல்மாயிதா 5:95ல் இஹ்ராமுடைய நிலையில் ஒருவர் ஒரு பிராணியைக் கொன்று விட்டால், கொன்றதற்குச் சமமான ஒன்றைப் பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும் என்று இருக்கிறதே அல்லாமல் இரு ஆலிம்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடவில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த மவ்லவி-ஆலிம்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்கு ஓர் அற்ப ஆதாரத்தையும் இவர்களால் காட்டமுடியாது. சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு மக்கள் பணத்தைத் தவறான முறையில் சாப்பிடுகிறவர்கள், மக்களைத் தவறான வழிகளில் இட்டுச் செல்கிறவர்கள் தான் இந்த மதகுருமார்கள் என்பதை குர்ஆன் 2:41, 42, 79, 9:9, 34, 31:6 போன்ற எண்ணற்ற இறை வாக்குகள் அம்பலப்படுத்துகின்றன.

எனவே நாம் எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்களை எடுத்து நீங்களே நேரடியாகப் படித்து விளங்கினால், இந்த மத குருமார்களான மவ்லவிகள் அற்ப உலக ஆதாயங்களைக் குறியாகக் கொண்டே கூட்டு துஆ என்ற வழிகேட்டை பத்துஆவை நடை முறைப்படுத்துவதில் மிகமிகக் குறியாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும்.

“அல்லாஹ் நாடியவர்களுக்கே நேர்வழியைக் கொடுக்கிறான். மேலும் நேர்வழி பெற்றவர்களை அவனே நன்கறிகிறான். (அல்கஸஸ் 28:56)

மிகமிக சிரமமிக்க காலக்கட்டத்தில் நபி (ஸல்) அவர்களுக்குப் பெரிதும் துணையாக இருந்து, குறைஷ்களின் கடும் எதிர்ப்புகளைக் கேடயமாக இருந்து நபி(ஸல்) அவர்களைப் பாதுகாத்த, தீனுடைய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய நபி(ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ்வுடன் கூடப் பிறந்த சகோதரர் அபூ தாலிபுக்கு இறுதி வரை இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியம் கிட்டவில்லை. காரணம் முன்னோர்கள், பெரியோர்கள், நாதாக்களைப் பின்பற்ற வேண்டும் என்ற முரட்டுப் பக்தியே அவர் நேர்வழியை ஏற்க முட்டுக்கட்டையாக இருந்தது. அதே போல் இன்று பெயரளவில் இருக்கும் முஸ்லிம்களிடமும் இமாம்கள், பெரியார்கள், நாதாக்கள் என்ற பெயரால் முன்னோர்களைப் பின்பற்றும் முரட்டுப் பக்தியே அதிகமாக இருக்கிறது. ஷைத்தானின் மிகப் பெரிய சூழ்ச்சியான முன்னோர்கள் பக்தியை விட்டு விடுபடாதவரை நேர்வழியை பெறவே முடியாது. பெயர்தாங்கி முஸ்லிம்களையும், மத குருமார்களையும் எச்சரிக்கக் கடமைப் பட்டுள்ளோம். வஸ்ஸலாம்.
தொடர்புக்கு : 9443955333, 9710122152

Previous post:

Next post: