ஐயமும்! தெளிவும்!!

in 2011 ஜனவரி,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : காஃபிர்களின் இறப்பு செய்தியைக் கேட்டால் “”இன்னாலில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறலாமா?  கடையநல்லூர், சேமலப்பை, இக்பால், (கேம்ப், ஜித்தா)

தெளிவு : முஸ்லிம்கள் இறந்த செய்தியைக் கேட்டால் மட்டுமே “இன்னாலில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிவூன்” எனக் கூறும்படி சொல்லப் படாததாலும், காஃபிர்கள் இறந்த செய்தியைக் கேட்டால் “”இன்னாலில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிவூன்” எனக் கூறக்கூடாது என தடை இல்லாதிருப்பதாலும், “துன்பம் ஏற்படும் பொழுது, “இன்னாலில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிவூன்” (அல்குர்ஆன் 2:156) எனக் கூறும்படி பொதுவாகக் கூறப்பட்டிருப்பதாலும், காஃபிர்கள் இறப்பு செய்தியைக் கேட்டாலும், “”இன்னாலில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிவூன்” என தாராளமாக சொல்லலாம்.

அந்த வாசகத்தின் பொருளை அறிந்திருப்போமேயானால், காஃபிர்கள் இறந்தாலும் அந்த வாசகத்தை சொல்லலாம் என்ற முடிவிற்கு தாராளமாக வர முடிகிறது.

பொருள்: இன்னா லில்லாஹி: நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், வ இன்னா இலைஹி ராஜிவூன்; மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.

மரணமோ அல்லது மற்றும் துயரமான செய்திகளைக் கேள்விப்படும் பொழுது அல்லாஹ்விடமே நாம் மீள வேண்டியிருக்கிறது என்ற சொற்றொடர், நல்லமல்கள் செய்தவர்களாக இறைவனை சந்திக்க வேண்டுமே என்ற இறையச்சத்தை நம்முள் ஏற்படுத்துவதால், எவரது இறப்புச் செய்தியையோ மற்ற துக்ககரமான செய்தியையோ கேள்விப்படும்போது, இந்த வாக்கியங்களை தாராளமாக சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு சுலபமாக வரமுடிகிறது.

—————————————————

ஐயம்: என் நண்பருடைய தகப்பனார் இறந்து விட்டார். விருந்து அளித்து துஆ செய்யும்படி கூறினார். இந்த விருந்துக்கு செல்வது சுன்னத் ஆகுமா? கடையநல்லூர், சேமலப்பை, இக்பால், (கேம்ப், ஜித்தா)

தெளிவு : இறந்து விட்டவருக்காக விருந்து அளித்துத்தான் துஆ செய்யவேண்டும் என மக்களுக்குப் போதித்தவர்கள், துஆவை பிரதான ஒன்றாகக் கருதுவதாகத் தோன்றவில்லை; மாறாக விருந்தைத்தான் முக்கிய ஒன்றாக எதிர்பார்ப்பது தெரிகிறது. துஆ கேட்க வேண்டியது அல்லாஹ்விடம் மட்டுமே. அல்லாஹ்விடம் துஆ கேட்பதற்கு “விருந்து’ என்ற “லஞ்சம்’ அவனுக்குத் தேவையில்லை.

இறந்தவருக்காக பாவமன்னிப்புக் கோரியும், வேதனைகளிலிருந்து பாதுகாவல் தேடியும், சுவர்க்கத்தை யாசித்தும் இன்னும் இவை போன்றவைகளை நாடி அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும். இதற்காக விருந்தளிப்பது மார்க்கத்தில் இல்லாத நூதன அனுஷ்டானமாகும். நபி(ஸல்) அவர்களது ஜீவித காலத்தில் மரணித்துவிட்ட அவரது அருமை மனைவி (அன்னை) கதீஜா(ரழி) அவர்களின் மறைவிற்குப் பின்னும், நபி(ஸல்) அவர்களது அருமை மகன் இப்ராஹீம்(ரழி) அவர்களின் மறைவிற்குப் பின்னும், நபி(ஸல்) அவர்கள் விருந்தளித்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மேலும் எண்ணற்ற ஸஹாபா பெருமக்கள் பல போர்களில் (ஷஹீத்) மரித்து விட்ட சமயங்களில் கூட, நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்காக விருந்தளித்ததாக சான்றுகளில்லை. மரணித்த வருக்காக விருந்தளிக்க சொல்வது சுன்னத்தா என கேள்வி எழுவதற்கே வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

————————————————

ஐயம்: திருமண விருந்தில் உறவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா? அல்லது ஏழைகளுக்கா? கடையநல்லூர், சேமலப்பை, இக்பால், (கேம்ப், ஜித்தா)

தெளிவு : “வலீமா விருந்துக்கு செல்வந்தர்களை அழைத்து ஏழைகளை மறுத்து விட்டவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தவர் ஆவார்” என நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு உமர்(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், அஹ்மத், பைஹகீ.

ஏழைகளை அவர்கள் ஏழைகள் என்பதற்காக விருந்திற்கு அழைக்காமல் விட்டு விடுவது கூடாது என்பதைத்தான் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறதேயல்லாமல், உற வினர்களை பின்னுக்குத் தள்ளி விடுவது விருந்தின் நோக்கம் அல்ல.
ஏழையா, பணக்காரரா என வித்தியாசம் பாராட்டாமல் விருந்திற்கு அழைக்க வேண்டும் என்பதுதான் இந்த ஹதீஸ் நமக்கு கற்பித்துத் தருகின்ற பாடம் ஆகும். அதிலும் உறவினர்களுக்கு முன்னுரிமையுண்டு என்பதை வேறு ஹதீஸ்கள் மூலம் அறிகிறோம்.

——————————————————-

ஐயம்: நபி(ஸல்) அவர்கள் நான்கு வயதாக இருக்கும்போது, மலக்குகள் அவர்களின் நெஞ்சைப் பிளந்து, இதயத்தை வெளியே எடுத்து, அதிலிருந்து ஒரு கருப்புத்துண்டை அகற்றி எறிந்து விட்டு, இதயத்தை குளிர்ந்த நீரால் கழுவி உள்ளே வைத்ததாகக் கூறப்படும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? விளக்கவும். சோழபுரம், சபீர் அஹமது, கேம்ப், ஜித்தா

தெளிவு: நான்கு வயதாக இருக்கும்போது எனக் கூறுவதும் இதயத்தை வெளியே எடுத்ததாகக் கூறுவதும், இதயத்திலிருந்து ஒரு கறுப்புத் துண்டை அகற்றி எறிந்ததாகக் கூறுவதும் குளிர்ந்த நீரால் கழுவி உள்ளே வைத்ததாகக் கூறு வதும் ஹதீஸில் இல்லாத வாசகங்கள்.

தங்களது வினாவில் கேட்டுள்ள விஷயங்களில் ஹதீஸில் உள்ள விஷயங்களாவன:
1. ஜிப்ரயீல்(அலை) அவர்கள் நெஞ்சைப் பிளந்தர்கள்.
2. அதை ஜம் ஜம் தண்ணீரால் கழுவினார்கள். (இதயத்தை வெளியே எடுத்ததாகக் கூறப்பட வில்லை).
3. பிறகு ஈமான் மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடிவிட்டார்கள். (கவனிக்கவும் உள்ளே வைக்க வில்லை. வெளியே எடுத்ததாக கேள்வியில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், உள்ளே வைத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது? உண்மையில் நடந்தது என்ன? நெஞ்சைப் பிளந்து, (வெளியே எடுக்காமல்) அதை ஜம் ஜம் நீரால் கழுவி, ஈமான் மற்றும் ஞானத்தை அதில் கொட்டிவிட்டு, மூடப்பட்டு விடுகிறது. இதுவே நடைபெற்ற நிகழ்ச்சி.

இந்த சம்பவங்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸின் சுருக்கத்தை மட்டும் கீழே தந்துள்ளோம்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அதன் வழி யாக) ஜிப்ரயீல்(அலை) அவர்கள் இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஜம் ஜம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி விட்டார்கள்.

பிறகு ஜிப்ரயீல்(அலை) அவர்கள் என் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள்…” (ஹதீஸின் சுருக்கம்)
(ஐவேளை தொழுகை கடமையாக்கப் பட்டதும் இந்த நீண்ட ஹதீஸில்தான் இடம் பெற்றுள்ளது). அறிவிப்பவர்:அபூதர்(ரழி), நூல்: புகாரி.

—————————————————————-

ஐயம்: நபி(ஸல்) அவர்களுடைய கபுரை ஜியாரத் செய்வதை நோக்கமாக வைத்து மதீனா செல்ல வேண்டுமா? மஸ்ஜிதில் தொழுவதை நோக்கமாக வைத்து செல்ல வேண்டுமா? நபிவழி முறையை விளக்கவும்.அம்மாபேட்டை, க.முஹம்மது யாகூப், கேம்ப், ஜித்தா

தெளிவு : நபி(ஸல்) அவர்களுடைய கப்ரை ஜியாரத் செய்வதை நோக்கமாக வைத்து மதினா செல்ல வேண்டுமா என்று வினா தொடுத்து விட்டு, நபிவழிமுறைப்படி இதனை விளக்கச் சொல்கிறீர்கள்.

நபி(ஸல்) அவர்கள் உயிருடனிருந்தபோது அவர்களது கப்ரை அவர்களே எப்படி ஜியாரத் செய்திருக்க முடியும். அவர்களது கப்ரில் ஜியாரத் என்பது நபிவழி அல்ல.
நீங்கள் கேட்டுள்ள இரண்டு விஷயங்களுமே ஹஜ்ஜுடைய கடமைகளில் உள்ளவை அல்ல. ஆனால், பொதுவாக நபி(ஸல்) அவர்களின் மஸ்ஜிதை ஜியாரத் செய்வது, நபி (ஸல்) அவர்களால் அனுமதிக்கப்பட்ட சுன்னத் ஆகும்.

————————————————————-

ஐயம் : மதீனாவிற்கு செல்லும்போது, “நபி (ஸல்) அவர்களுக்கு நான் சலாம் சொன்னதாக சொல்லுங்கள்’ என்று சிலர் சொல்லி அனுப்பு கிறார்கள். இப்படி சொல்வதால் நபி(ஸல்) அவர் களிடத்தில் சலாம் ஏற்றுக் கொள்ளப்படுமா?
அம்மாபேட்டை, க.முஹம்மது யாகூப், கேம்ப், ஜித்தா

தெளிவு : இந்தியாவிலிருந்து ஜித்தாவுக்கு புறப்படும் தங்கள் நண்பரிடம், “முஹம்மது யாகூப் அவர்களுக்கு எனது சலாம் சொல்லி விடுங்கள்’ என நான் சொல்லும்பொழுது, முஹம்மது யாகூப் அந்த சலாமை செவியுறுவார் என்ற எண்ணத்தில்தான் நான் தங்கள் நண்பரிடம் தங்களுக்கு சலாம் சொல்லி அனுப்புகிறேன். அதே போல நபி(ஸல்) அவர்களுக்கு சலாம் சொல்லி அனுப்பினால், நபி(ஸல்) அவர்கள் அந்த சலாமை செவியுறுகிறார்கள் என்ற எண்ணத்தில் தான் சிலர் சலாம் சொல்லி அனுப்புகிறார்கள். இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது.

முஹம்மது யாகூப் அவர்கள் உயிருடன் இருப்பதால், அவருக்கு சொல்லப்படுகின்ற சலாமை அவர் செவியுற முடியும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டபின், அவ ர்களுக்காக சொல்லி அனுப்பப்படுகின்ற சலாமை நிச்சயமாக அவர்கள் செவியுற முடியாது.

“”…உங்களின் ஸலவாத் எனக்கு அறிவிக்கப்படுகின்றது” என்று நபி(ஸல்) அவர்கள் அருளி, அவ்ஸ் இப்னு அவ்ஸ்(ரழி) வாயிலாக அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜ்ஜாவில் பதிவாகியுள்ள ஹதீ ஸின்படி, நபி(ஸல்) அவர்களுக்கு சலவாத் அறிவிக்கப்படுகிறது என்பதிலிருந்து நபி(ஸல்) அவர்கள் அதை செவியுறுகிறார்கள் என மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர்.

உண்மையில் அறிவிக்கப்படுகின்றது என்ற வாசக பிரயோகமே, நபி(ஸல்) அவர்கள் அதை செவியுறுவதில்லை என்பதை உணர்த்துகிறது. மலக்குகள் மூலமாக எடுத்துக் காட்டப்படக் கூடிய ஏதோ ஒரு ஏற்பாடுதான் செய்யப்பட்டிருக்கிறது. மலக்குகள் மூலமாக எடுத்துக் காட்டப்படக்கூடிய ஏதோ ஒரு ஏற்பாடுதான் செய்யப் பட்டிருக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள் ளவும் முடிகிறது.

மரணித்து விட்ட பிறகு, நபி(ஸல்)அவர்கள் கூட செவியேற்க முடியாது என்பதை கீழ்க் காணும் அல்குர்ஆன் வசனம் அருளியிருப்பதை சற்று கவனியுங்கள்.

“”மேலும் உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாகமாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான்; கப்றுகளில் உள்ளவர்களைச் செவியேற்கும்படிச் செய்பவராக (நபியே) நீர் இல்லை’. அல்குர்ஆன் 35:22

எனவே மதீனாவிற்கு செல்பவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு நான் சலாம் சொன் னதாக சொல்லுங்கள்! என சொல்லி அனுப்பத் தேவையில்லை. மாறாக இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு நாம் ஸலவாத் சொல்வதால், அந்த ஸலவாத் நமக்கு அறிவித்துத் தரப்படாத ஏதோ ஒரு வகையில் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்பதை மட்டும் நினைவில் நிறுத்தி செயல்படுவோமாக.  இப்படிச் செயல்படுவது, கீழே உள்ள ஹதீஸின்படி செயல் பட்டதாக ஆகி விடுகிறது.

“”என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக் கும் இடமாக ஆக்காதீர்கள்! என் மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும், உங்கள் ஸலவாத் எனக்கு அறிவிக்கப்படுகிறது” என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி),நூல்:அபூதாவூத்

——————————————————–

ஐயம்: நபி(ஸல்) அவர்கள் அடங்கி இருக்கும் ரவ்லா ஷரீஃபை நோக்கி, “அஸ்ஸலாமு அலைக் கும் யா ரசூலல்லாஹ்’ என்று சொல்கிறார்கள்; இப்படி கூறுவது கூடுமா?
அம்மாபேட்டை,க.முஹம்மது யாகூப், கேம்ப். ஜித்தா

தெளிவு : இப்படி கூறுவது கூடாது. முன்னுள்ள வினாவுக்கான விடையே இந்த வினாவிற்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. அதிகப்படி யாக கூடுதல் இருக்கிறது. அதிகப்படியாக கூடுதல் விவரங்கள் தொழுகையின் ஒவ்வொரு இருப்பிலும், “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு'(நபியே! உங்கள் மீது சாந்தியும், மேலும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும், மேலும் பரக்கத்தும் உண்டாவதாக) என சொல்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளதால், அனுமதிக்கப்பட்ட இந்த அமல்களில் நாம் திருப்தியுறுவோமாக!

Previous post:

Next post: