விமர்சனம்: காதியானிகள் அவர்களது இதழில் நஜாத் பிரிவினர் முஷ்ரிகுகள் இல்லையா? என டிசம்பர் 2010, ஜனவரி 2011 இதழ்களில் எழுதியுள்ளனர். இதன் விளக்கம் என்ன? A.சையது இப்ராஹீம், திருச்சி-8.

விளக்கம் : காதியானிகள் செமி நாத்திகர்கள்; முன் உதாரணமின்றி வானம் பூமி மற்றும் அனைத்துக் கோள்களையும் அனைத்து படைப்புகளையும் படைத்த சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கு முன் உதாரணமின்றி ஈஸா(அலை) அவர்களை சுமார் இரண்டாயிரம் வருடங்கள் தன் அளவில் உயர்த்தி வைத்திருப்பதும், அவர் உலகின் அழிவுக்குச் சமீபமாக மீண்டும் உலகிற்கு வந்து வாழ்ந்து மரிப்பார்கள் என அல்லாஹ் அல்குர்ஆனில் கூறி இருப்பதும் சாத்தியமில்லை என்பதே காதியானிகளின் வாதம். 4:157, 158, 159 இறைவாக்குகளிலும், 3:144, 5:75 இறைவாக்குகளிலும், 3:54,55 இறை வாக்குகளிலும், 43:61 இறைவாக்கிலும் அல்லாஹ் நேரடியாகக் கூறி இருப்பதை அப்படியே ஏற்பது ஷிர்க்-இணைவைத்தல் என்பதே காதியானிகளின் தீர்ப்பு.

மேற்படி இறைவாக்குகளுக்கு பொய் நபி மிர்சா குலாம் அளிக்கும் சுயவிளக்கத்தை ஏற்பது தான் தவ்ஹீத்-இறைவனுக்கு இணையற்ற நிலை என்பதுதான் காதியானிகளின் மூடக்கொள்கை.

மேலும் காதியானிகளும் காதியானி மதகுருமார்களை நம்பி அவர்கள் சொல்வதை வேத வாக்காக ஏற்று அவர்கள் பின்னால் செல்பவர்களே. அவர்களும் காதியானில் குருகுல மதரஸா ஒன்றை மற்றப் பிரிவுகளின் மதகுருமார்கள் அதாவது புரோகிதர்கள் நடத்துவது போல் நடத்தி வருகின்றனர். அங்கு குர்ஆன், ஹதீஸ் மட்டும் போதிக்கப்படுவதில்லை; காதியானிகளின் தவறான கொள்கையே போதிக்கப்படுகிறது. காதியானிகளும் மற்ற மதகுருமார்களைப் போல், அவர்களின் குருகுல மடத்தில் பட்டம் பெற்றவர்களை ஹழரத், மவ்லவி, மவ்லானா, அல்லாமா என அழைப்பதே அவர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை உறுதிப்படுத்தும். அதில் மவ்லவி பட்டம் பெற்றவர்களே கூலிக்கு-சம்பளத்துக்கு மார்க்கப் பணி செய்கிறார்கள். வட்டியை கமிஷன் என சிலர் நியாயப்படுத்துவது போல், காதியானி மதகுருமார்கள் பெறும் கூலி-சம்பளத்தை, அன்பளிப்பு-சன்மானம் எனக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். காதியானிகள் பொய்யர்களே. வாக்குமாறும் நயவஞ்சகர்களே என்பதை பல முறை அந்நஜாத்தில் தெளிவு படுத்தியுள்ளோம்.

காதியானிகளின் மதகுருமார்களில் ஒருவ ரான முஹம்மது உமர் H.A 10.9.1983ல் வெளியிட்ட “”ஈஸா நபி(அலை) அவர்களின் மரணம்” என்ற நூலிலுள்ள அபத்தங்களை தெளிவுபடுத்தி ஒரு நூல் வெளியிட்டிருக்கிறோம். அதன் பெயர்

காதியானிகளின் ஆகாசப் புளுகு-1
ஈஸா(அலை) மரணித்துவிட்டார்கள்
உண்மை நிலை!
ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை
ஆயினும் மரணிப்பவர்களே!

மேற்படி நூலை விரும்புகிறவர்கள் கடிதம் மூலம் அறிவிக்கவும் என அந்நஜாத்தில் அறிவிப்பு அப்போது வெளியிட்டோம். நூலைக் கேட்டு மிகமிகக் குறைந்த எண்ணிக்கையினரே கடிதம் எழுதினர்.

இந்த நிலையில் இந்தக் காதியானிகள் அன்றைய அவர்களின் மாத இதழில் “அப்படியயாரு நூல் வெளியானால் அதனைப் பக்கத்துக்குப் பக்கம் விமர்சித்துத் தனிநூல் அச்சிட்டு இலவசமாகக் கொடுப்போம்” என சவால் விட்டனர். காதியானிகள் உண்மையாளர்களாகவும், நேர்மையாளர்களாகவும், சத்தியத்திலிருப்பவர்களாகவும் அவர்களே நம்பி இருந்தால் சவால் எப்படி இருந்திருக்கும்?

“”அந்நஜாத் ஆசிரியர் வெளியிடும் அந்நூலை தீர ஆய்வு செய்து அதில் உண்மையிருந்தால் ஏற்போம், தவறாக இருந்தால் அத்தவறுகளை உரிய ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவோம்” என்றே சவால் விட்டிருக்க வேண்டும். இதிலிருந்தே காதியானிகள் தங்கள் பொய்க் கொள்கையை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறதா? இல்லையா?

அது மட்டுமல்ல, அப்படி 1988ல் சவால் விட்டவர்கள் எமது காதியானிகளின் ஆகாசப் புளுகு-1 நூல் ஹிஜ்ரி 1409 (கி.பி.1988)ல் வெளியாகி இன்று வரை 23 வருடங்கள் உருண்டோடி விட்டன. இன்று வரை காதியானிகள் அவர்களது இதழில் சவால் விட்டு அறிக்கை விட்டது போல் எமது நூலுக்கு வரிக்கு வரி விமர்சித்து தனி நூல் அச்சிட்டு இலவசமாகக் கொடுப்பது இருக்கட்டும், விலைக்குக் கூட வெளியிட முடியவில்லை. இப்படி அவர்களின் மாத இதழில் எதையாவது உளறி விட்டு பதில் அளித்துவிட்டதாக அவர்களின் ஆதரவாளர்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அவர்களது சவடால் வாக்கு தனி நூல் அச்சிட்டு வெளியிடுவதாகத்தான் இருந்தது. அவர்களது மாத இதழில் மறுப்பு வெளியிடுவதாக சவால் விட வில்லை என்பதே இங்கு கவனிக்கத் தக்கதாகும். உண்மை என்னவென்றால் எமது அந்த நூலுக்கு வரிக்கு வரி மறுப்பு தெரிவிக்கும் அறுகதை காதியானிகளுக்கு இல்லை. அப்படி மறுப்பு வெளியிட்டால் அவர்களின் வண்ட வாளங்கள் தண்டவாளங்களில் ஏறிவிடும். அதனால்தான் மறுப்பு வெளியிடும் துணிச்சல் இல்லை. மற்ற மதகுருமார்களைப் போல், காதியானி மதகுருமார்களும் நாம் 1988 ஜனவரி இதழ் பக்கம் 27ல் எழுதியது போல் குப்பையில் எறிய வேண்டிய நூல்களிலிருந்தும், மனித யூகங்களைக் கொண்டும் அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருப்பார்களே அல்லாமல், உரிய நேரடி குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் கருத்து எடுத்து வைக்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை. அவர்களது காதியானி குருகுல மடத்தில் கற்பித்ததை மீண்டும் மீண்டும் சூடு, சுரணை, வெட்கம் எதுவுமின்றி எடுத்து வைத்துக் கொண்டிருப்பார்கள்.

காதியானிகள் நுனிப்புல் மேய்பவர்கள். ஆழ்ந்து சிந்தித்து விளங்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்பதற்கு “”நஜாத் பிரிவினர்” என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பதே போதிய ஆதாரமாகும். தேவைப்பட்டால் அவர்கள் டிச.2010, ஜனவரி 2011 இதழ்களில் எழுதியுள்ள வற்றைத் தீர பரிசீலித்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்போம். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: