பெங்களூர் M.S.கமாலுத்தீன்
நீரில் வாழும் மீன் நீர் குடிப்பது தெரியாதது போல் அரசு ஊழியர்கள் செய்யும் ஊழலும் அடுத்தவருக்குத் தெரியாது”. அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியன்.
வாழ்க்கையில் எல்லா வாய்ப்புகளும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி முழுத் திறமையும் வெளிப்படுத்தும்போது சிறப்பை பெறுகின்றார்கள், சிகரத்தை தொடுகிறார்கள். அது ஆத்ம திருப்தியை ஏற்படுத்தும்; அத்தகைய வேலைகளில் ஒன்றுதான் அரசாங்க உத்தியோகம்.
கடவுளின் வேலை என்பார்கள் இதை ஆங்கிலத்தில். நேரடி கண்காணிப்பில் நடக்கும் வேலையிலேயே நிறைய ஏமாற்றுவார்கள். கண்ணில் தென்படாத கடவுளின் வேலையில் நேர்மைத் தனத்தை எதிர்பார்க்க முடியுமா? உழைக்காமல் ஊதியம் பெறவும், அப்படியே உழைத்தாலும் கையூட்டாக லஞ்சம் பெறும் கண்ணியம் இல்லாதவர்களாய் தான் அரசு எந்திரம் ஏதோ இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஏனோ தானோ இயக்கத்தாலே ஏகப்பட்ட இழப்புகள். பொருள் இழப்பை பொருட்படுத்த போவதில்லை; உயிர் இழப்பு எனும் போதுதான் உதிரம் கொதிக்கிறது.
காலாவதியாகிவிட்ட மருந்துகளை மறு தேதியிட்டு மறுபடியும் விற்பனைக்கு விட்ட சமூக விரோத சண்டாளர்களைகளை எடுக்க வேண்டிய சுகாதாரத்துறை, பொருட்களை உரிய விவரங்களுடன் விற்கப்படுகின்றதா எனச் சோதனை செய்ய வேண்டிய தொழிலாளர் நலத்துறை, தரமான பொருளா, சரியான விலையா எனக் கண்கானிக்க வேண்டிய நுகர் வோர் பாதுகாப்புத் துறைகள் லஞ்சத்தை வளமாக வாங்கிக் கொண்டு வளர்ந்து விட்ட தனால் பல உயிர்கள் பலியாகி உள்ளன; எதனால் இறந்தோம் என்பதை அறியாமல் வாழவைத்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களின் அறியாமையைப் பயன்படுத்தி பாழாய்ப் போன பொருட்களைப் பளபளக்கும் பாக்கெட்டுகளில் அடைத்து வருத்தமே இல்லாமல் வருமானம் பார்ப்பவர்கள் தீவிரவாதிகளை விட மிகக் கொடியவர்கள். போலி மருந்து களால் போன உயிர் திரும்ப வராதுதான். இருப்பவர்கள் வாழ்க்கையாவது ஆரோக்கிய மாக வாழ நேர்மையாக உழைக்க வேண்டும் அதிகார வர்க்கம். போலி மருந்துகளை ஒழிக்க தொடங்கியிருக்கும் அதிரடி நடவடிக்கை ஆயுள் முழுவதும் தொடரவேண்டும்.
வர்க்க பேதமில்லாமல் சகலமானவர்களும் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பால், தண்ணீரைக் கலந்து விற்ற காலம் மலையேறி விட்டது. நஞ்சை கலந்து விற்பது தான் தொழில் தர்மம். ஆம் நாம் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும் தனியார் பாக்கெட் பாலில் பிரதான காரணிகள் 4.5 சதவீதம் கொழுப்பு; 8.5 சதவீதம் புரதம் இருக்க வேண்டும். இந்த அறிவியல் நுட்பம் தெரிந்த உடனே, கண்டதையும் பாலோடு கலக்கி காசாக்கும் தொழில் நுட்பம் இணைந்து கொஞ்சம் பாலில் நிறைய விஷத்தையும் குடித்துக் கொண்டிருக்கிறோம். பால் கெட்டுப் போகாமலிருக்கவும் கொழ கொழவென நுரைத்தத் தன்மையுடன் இருக்க தங்களால் இயன்றளவு, “யூரியா, உறிஞ்சுதாள் சோடியம் பைகார்பனேட், விலங்குகளின் கொழுப்பு, ஸ்டார்ச், சோப்புத் தூள் பெயர் தெரியாத ரசாயனக் கலவைகள் எல்லாம் கலக்குகிறார்கள் இந்த நவீன பாக்கெட் பால் வியாபாரிகள்.
கறந்த பாலை குளிரூட்டப்பட்ட நிலையிலும் கூட அதிகபட்சம் மூன்று நாளுக்கு மேல் வைத்திருக்க கூடாது. ஆனால் ஏழு நாள் வரையிலும் பின் தேதியிட்டு விநியோகிக்கப்படுகிறது. உலகில் புற்று நோயால் பாதிக்கப் படுவோர் பட்டியலில் இந்தியர்கள் முன்னணி வகிப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது. ஆண்டு தோறும் சராசரியாக 85,000 பேருக்கு புற்று நோய் கண்டறியப்படுகிறது. இதில் சிகிச்சை பலனின்றி 58,000 பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் வாய், குடல், வயிற்றுப் புற்று நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதாரமற்ற-கலப்பட உணவுப் பொருட் களை நாம் உட்கொள்ளும்போது “”யஹலிகோ பாக்டர் பைலோரை” எனும் பாக்டீரியாவை அவை உருவாக்குகின்றன. இது புகையிலை உருவாக்கும் பாதிப்புக்கு இணையான சேதாரத்தை உருவாக்கும் பாக்டீரியாவாகும்.
மதுவாலும், புகையிலையாலும் புற்று நோயாளிகள் உருவாகும் போது “”மனோ இச்சையை பின்பற்றியவன்; அற்ப சுகத்திற்காக ஆசை பட்டவன், இன்று அவஸ்தையை அனுபவிக்கிறான்” என அனுதாபத்தோடு ஏற்றுக் கொள்ளும் சமூகம், பால்குடித்து புற்று நோயால் பாதிக்கப்படுகிறார் என்றால் என்ன சொல்வது?! எப்படி யாவது சம்பாதிக்க வேண்டும் என என்னும் சமூகமும், இதை கண்டும் காணாமல் இருக்கும் அரசும் வெட்கப்பட வேண்டாமா?
மக்கள் விரோத ஆட்சியாளர்களிடம் இதை எல்லாம் எதிர்பார்ப்பது நம்முடைய தவறு. உலக மயமாக்கலுக்குப் (Globalisation) பிறகு மக்கள நல அரசு என்கிற அடையாளத்தை இழந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதிகள் செய்து தருகின்ற தரகர் என்ற அடையாளத்தை ஆட்சியாளர்கள் தரித்துக் கொண்டார்கள். அடிமை சேவை செய்வதில் அவ்வளவு ஆர்வம்; கண்ணை மூடிக் கொண்டு எல்லா ஒப்பந்தங்களிலும் கை எழுத்து போடுகிறார்கள். இது நமது நாட்டுக்கு வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா? யோசிப்பதேயில்லை. தொலைநோக்கு பார்வையை தொலைத்து விட்ட நமது ஆட்சியாளர்களால் எவ்வளவு தொல்லைகள். மண்ணின் மனம் கமழும் நமது பாரம்பரிய விவசாய முறையை மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் குழிதோண்டி புதைக்க ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளும் சரி, இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளும், ரசாயன உரங்களாலும் விளைவிக்கப்படும் காய், கனிகளில் ஏகப் பட்ட நச்சுத் தன்மை இருப்பதாகவும் இதனால் பல புதிய புதிய நோய்கள் மனிதர்களை தாக்கு வதாக கண்டறியப்பட்டுள்ளது.
இப்போது புதிதாக காய்கறி செடிகளுக்கு “”ஆக்சிடோன்” என்ற ஹார்மோன் ஊசியை போடுகிறார்கள். பூச்சிகள் இதை தொடுவதில்லை; அதனால் சொத்தை ஏற்படுவதில்லை. விளையும் காய்கறிகள் வழக்கத்திற்கு மாறாக பெரிதாக, நன்றாகப் பருத்துக் காணப்படும். இதை சாப்பிட்டால் உடல் குண்டாகும். உடல் குண்டானால் எற்படும் எல்லா தொல்லைகளும் இலவச இணைப்பாக வந்து சேரும். “ஆக்சிடோன்’ என்ற ஹார்மோன் ஊசியை சில நடிகைகள் தங்கள் உடல் பாகங்களை பெரி தாக்கி கொள்வதற்காக போட்டுக் கொள்வார்கள். அதே மருந்துதான் இங்கு பயன்படுத்தப்படுகிறது.
டீ, காப்பியின் முகத்தில் விழிக்காவிட்டால் நம்மில் அநேகம் பேர்களுக்கு பொழுதே விடியாது. அந்த டீயில் தேயிலை கழிவுகளை வாங்கி, சாயம் தோய்த்த மரத்தூள்களையும், முந்திரித்தோல்கள், மஞ்சநத்தி இலை, இலவம் பஞ்சு இலைகள் எல்லாம் கலக்கப்படுகிறது. இதற்கென சென்னையில் மாதவரம், ராயபுரம், சேலையூர் போன்ற இடங்களில் போலி டீ தூள் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதே போல் மிளகு கடுகில் மண் உருண்டைகளை கலக்கும் கிடங்குகள் விருது நகர், மதுரை மேலூர் பகுதிகள் இயங்குகின்றன. இதில் புதிதாக ஆர்ஜிமோன் விதைகளையும் கலப்பதால், வயிற்றுப் போக்கு ஏற்படுவதுடன் கூடுதலாக பார்வை கோளாறும் இதன் இணைப்பாக பக்கவாதமும் உண்டாகும் இவற்றை உண்பதால், பள்ளி கூடம் செல்லும் பிள்ளைகள் சால்ட், பட்டர், நெய் பிஸ்கெட்கள் சாப்பிடாமல் ஒரு வாரத்தை கழிக்க இயலாது. பெரியவர்களும் பஸ், ரயில் பயணங்களில் இத்தகைய “”டைம் பாஸ் பிஸ்கெட்” ருசிப்பது வழக்கம். இதன் மொறு மொறுப்பு எல்லோருக்கும் பிடிக்கும். இதை தருவது மாட்டுக் கொழுப்புதான். இத் துடன் ஃபரீஃபுனோ விங் சால்ட் மற்றும் ஆன்டி கேக்கிங் சேர்ப்பதால் பிஸ்கட்டுகள் உடைவ தில்லை. உடல் உபாதைகள் ஒன்றின் பின் ஒன்றாக வரும்.
“”ஏரியேடட்டிரிங்ஸ்” எனப்படும் காற்ற டைத்த பழரசங்கள், குளிர்பானங்களில் கலக்கப்படும் ரசாயனங்களால் புற்றுநோய் வெகு நிச்சயம். முஸ்லிம்களின் உலகளாவிய உண வான பிரியாணி, கேசரி, சிக்கன்65 வகைகளில் செயற்கை வண்ணம் சேர்த்து எண்ணெயில் தயாரிக்கப்படுகிறது. எண்ணெய் இதயத்துக்கு எதிரி; கலப்பட எண்ணெய்?! மேலே குறிப்பிட்ட உணவு பொருட்களில் உள்ள கலப்ப டத்தை நாம் முகர்ந்தோ, தண்ணீரில் கலந்தோ, புடைத்தோ, தேடியோ கண்டுபிடிக்க கொஞ்சம் வாய்ப்பு உண்டு, எண்ணெயில் கலப்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. காரணம் அதன் கலப்படப் பொருள் மிகமிக வித்தியாசமான குணம் கொண்டது.
கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது. சமையல் எண் ணெய்யில் கலந்தால் வித்தியாசம் வெளியில் தெரியாது. இத்துடன் ஆர்ஜீமோன், ஆமணக்கு எண்ணெய்களும் கலப்பதால், பயன்படுத்து வோர் குடலில் படிய ஆரம்பித்து படிப்படியாக பல நோய்களை கொண்டு வரும், பார்வை குறைவு, இதய நோய், இறுதியில் புற்றுநோயில் முடியும்.
சகோதர சமுதாயத்தவர்கள் மங்களகரமாக நினைக்கும் மஞ்சள் தூளில் மரவள்ளி கிழங்கின் மாவையும் லெட்குரேமைடு, யயல்லோ ஆக்சைடு போன்ற வேதிப் பொருட்களை கலந்து கல்லீரல் புற்று நோய்க்கு வழிவகை செய்கிறார்கள். எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் என்ற வெறியே இதற்கெல்லாம் காரணம். இந்த செல்வங்கள் இனிமையும் பசுமையும் நிறைந்தவையாகும். இவற்றை முறையாக அடைகிறாரோ அதில் அவருக்கு பரக்கத் செய்யப்படும். (முறை தவறி சம்பாதித் தவருக்கு) மறுமையில் நரகைத் தவிர ஏதும் கிடைக்காது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபிவழி செய்தியாளர்: கவ்லா பின்துகைஸ்(ரழி)
நபிவழி தொகுப்பு நூல்: திர்மிதி 2480-அஹமது
முறையாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தலை முழுகி விடுகிறோம். கூடிய சீக்கிரம் முழுவதையும் முழுகி விடுவோம். உலக மயமாக்களுக்குப் பிறகு நல்ல எண்ணெங்கள், நீதி, நேர்மையயல்லாம் ஒழிந்து வருகிறது. நிறைய மனிதர்கள் கடைந்தெடுத்த சுயநலவாதிகளாக மாறி வருகிறார்கள். தன்னை மையப் படுத்திய நடத்தை (Self-Centrism) நான், என்னுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். அதற்காக எதையும் செய்யத் தயார். எப்படிச் சம்பாதித்தேன் என்பது முக்கியம் அல்ல. எவ்வளவு சம்பாதித்தேன் என்பதே முக்கியம். இப்படி ஒரு நிலை வரும் என்று தூதர்(ஸல்) கூறினார்கள். .
“”ஒரு காலம் வரும் மக்கள் தாம் சம்பாதித்தது ஹலாலா, ஹராமா என்று பொருட்படுத்த மாட்டார் கள்” ராவி: அபூஹூரைரா(ரழி)
நூல்: புகாரீ 2059/2 பாகம்
மக்களின் ஆரோக்கியத்தை அழித்துக் கொண்டிருக்கும் கலப்படங்களை கண்டறிந்துகளை எடுக்க வேண்டிய ஆட்சியாளர்கள் வல்லரசு கனவோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எது நிகழ்ந்தாலும் என்னுடைய பங்கு எவ்வளவு என கேட்கும் பொறுப்பில்லாத ஆட்சியாளர்களால் தவறுகள் அனுமதிக்கப்படுகிறது. பணம் பத்தும் செய்யும் என்பார்கள். இந்த அதிகார வர்க்கம் பதினொன்றாவதாக ஊழலை செய்கிறார்கள். தூதர்(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நினைவூட்டுவோம்.
“உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே, நீங்கள் ஒவ்வொருவரும் (அவரவர் கொடுக்கப்பட்ட பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்; ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார்” என்று நபி(ஸல்) கூறினார்கள். ராவி:அப்துல்லாஹ் பின் உமர்(ரழி)
நூல்: புகாரீ 5200/5 பாகம்
நம்மை ஆளும் அதிகார வர்க்கத்திற்கு நல்ல புத்தியைத் தர அல்லாஹ்விடம் துஆ செய்வோம் ஆமீன்.