ஆவியின் அரங்கேற்றத்தில் தோல்வி

in 1989 மே

ஆலிம்சாக்களின் கிஸ்ஸா :

ஆவியின் அரங்கேற்றத்தில் தோல்வி

நல்லம்பல்-ஷேக் அலாவுதீன்

“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்”. (2:42)

தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினத்தை அடுத்துள்ள மஞ்சக் கொல்லை என்ற கிராமத்தில் “சிபிலி பாவா” என்ற ஒரு பெரியவர் சில மாதங்கள் முன்பு வரை உயிருடன் இருந்தார். அவர், குறிகாரன் குறி சொல்வது போல் திடீர் திடீரென பொதுவாக ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். அவரைச் சுற்றி எந்த நேரமும் ஆண்களும், அதைவிடப் பன்மடங்கு பர்தா அணிந்த நம் சமுதாயக் கண்மணிகளாகிய பெண்களும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து, அவர் சொல்லும் செய்தியை வஹியாக நினைத்துக் கொண்டு (பாமர மக்கள்) பக்தியோடு கேட்டு பரவசமடைந்து கொண்டிருப்பார்கள். அவர் சாப்பிட்ட எச்சில் சாப்பாட்டை பெண்மணிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி, முக்காட்டை முழுமைப் படுத்தி, பயபக்தியுடன் வாயில் போட்டுக் கொள்வார்கள்! குறி கேட்டுச் செல்வதில் ஆலிம்சாக்களும் விதிவிலக்கில்லை என்பதுதூன் வேதனைக்குரிய விஷயம்.

நான் ஒரு நாள் முழுவதும் அவருடன் இருந்து அவர் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தேன். அன்றைய பர்ளான தொழுகைகளை தொழவே இல்லை. இன்னுமொரு வேதனையான விஷயம் என்னவென்றால், அவர் உயிருடன் இருக்கும்போதே அவருக்காக ஒரு தர்ஹா கட்டி, அவர் இறந்ததும் அடக்கம் செய்ய தயாரான நிலையில் இருந்தது. குதிரை வாங்குமுன் சவுக்கை வாங்கி வைத்திருந்த கதைதான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அவரோ தன் வீட்டில் இருக்கிறார். பாமர பக்தகோடிகள் அவருக்கு நேர்ச்சை செய்துகொண்டு, அந்த ஆளில்லாத தர்காவில் தங்கி சில்லா இருப்பதும், கறி குருமாவும், புலவு சோறும் சமைத்து பகிர்ந்தளிப்பதும் தடபுடலாக நடந்து கொண்டிருக்கும், இவை எதையும் அந்த அவுலியா(?) தடுத்து நிறுத்தியதாக சரித்திரம் இல்லை.

அவர் இறந்த பின்பு தயாராக இருந்த தர்காவிலேயே அடக்கம் செய்து விட்டார்கள். தமிழகத்து தர்கா வரிசையில் ஒரு எண்ணிக்கை உயர்ந்து விட்டது! நவூதுபில்லாஹ்!

இறந்துவிட்ட ஒருவரை விமர்சிப்பது இக்கட்டுரையில் நோக்கமல்ல; தொடர்ந்து படியுங்கள் சுவையூட்டும் சம்பவங்கள் இனிதான் தொடர்கிறது.

கிபிலி பாவா இறந்ததும் கபுறு வியாபாரிகளின் கம்ப்யூட்டர் மூளைகள் சும்மா இருக்குமா? வயிறு வளர்க்க ஒரு வழி கிடைத்துவிட்டதல்லவா! திட்டம் தீட்டியவர்கள் யார்? நாகூர் ஏழு லெப்பை முஹல்லா பள்ளியில் 45 வருடமாக இமாமாகப் பணிபுரிந்து வரும் ஒரு ஆலிம்சாவும், சில முக்கிய சாபுமார்களும் தான்!

சிறுவனாகிய தன் மகனை செட்டப் செய்து டிரய்னிங் கொடுத்து அரங்கேற்றமும் செய்து விட்டார். மஞ்சக்கொல்லை சிபிலி பாவாவின் ஆவி அந்தப் பையன் மீது ஏறி விட்டதாகவும், அவனுக்கு கராமத் வருவதாகவும் கதைகட்டி, விளம்பரமும் செய்து விட்டார் ஆலிம்சா! குருவை மிஞ்சிய சிஷ்யனாக பையன் அபாரமாக நடித்து சிபிலி பாவாவைப் போலவே (குறி சொல்ல) பினாத்த ஆரம்பித்துவிட்டான். அதைக் கேள்விப்பட்ட பாமரர்கள் நாகூரில் ஆவியின் வீட்டிற்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். வசூலும் ஆரம்பமாகிவிட்டது. இதில் வேடிக்கையும், வேதனையும் என்னவென்றால் ஆலிம்சாக்களில் பல பேர் அந்தப் பையனைத் தேடிச் சென்று அவன் காலில் விழுந்து சஜ்தா செய்துள்ளார்கள். அறிஞர்களாகிய(?) இவர்கள் தம் அறிவை எங்கிழந்தார்கள்? என்பது புரியாத புதிர் தான்.

சிபிலி பாவாவை சுமந்து கொண்டிருக்கும் அந்த பையன் சுவனம் சென்று வந்ததாகவும், சமீபத்தில் நாகூரில் மரணமடைந்த ஒருவர் சுவனத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதாகவும் பினாத்த ஆரம்பித்து விட்டான்.

மேலும் சிபிலியின் ஆவி அவனை ஒரு தடவை சந்திக்க வந்தபோது வெள்ளைப் போர்வை ஒன்றை கொண்டுவந்து போட்டுவிட்டு இது சுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட போர்வை. இதை கொண்டுபோய் மஞ்சக்கொல்லையில் இருக்கும் எனது கப்ரில் போர்த்திவிடு என்று அசரீரி வந்ததாகவும் கூறி ஒரு போர்வையையும் செட்டப் செய்து அதிசயமாக அனைவரிடமும் காட்டிக் கொண்டிருந்தார் அத்தா ஆலிம்சா! பனைமரத்தில் தேள் கொட்டியது தென்னை மரத்திற்கு நெரிகட்டியதாம்! வேடிக்கையாக இல்லை. மஞ்சக்கொல்லைக்குப் போய் சிபிலி பாவாவின் கப்ரில் அந்த சுவனத்துப்(?) போர்வையை போர்த்தும் சாக்கில் தன் தவப்புதல்வனை “சுவனம் சென்று வந்த சிபிலி பாவா” “மறைந்து தோன்றிய மஹான்” என்று பிரகடனப்படுத்தி அந்த கப்ரை அபகரித்துக் கொண்டு அந்த கப்ரடியிலேயே செட்டில் ஆகிவிட்டால் தன் பணப்பிரச்சினை ஒழிந்தது-என்பது அந்த ஆலிம்சாவின் திட்டம் போலும்.

ஒரு டாக்சியை பிடித்துக் கொண்டு, போர்வையையும், பையனையும் தூக்கிப் போட்டுக் கொண்டு மறுநாள் ஆலிம்சா மஞ்சக்கொல்லை போனார். ஆனால் அங்கு அவருக்கு பெரிய ஷாக்! அவர் திட்டம் பலிக்கவில்லை.

முன்பே கப்ரு வியாபாரம் ஆரம்பித்திருந்த மஞ்சக்கொல்லை ஒரிஜினல் வியாபாரிக்கும், இந்த நாகூர் டூப்ளிகேட் வியாபாரிக்கும் பிரச்சினை எழுந்துவிட்டது.

நாகூர் வியாபாரியை பார்த்து மஞ்சக்கொல்லை வியாபாரி அழகாகக் கூறிவிட்டாராம், உமது ஏமாற்று வேலைகளை எல்லாம் நாகூரிலேயே வைத்துக்கொள்ளும்! இங்கு வந்து எங்கள் பிழைப்பில் குறுக்கிட்டால் நடப்பது நல்லதாக இருக்காது. போர்வையைத் தூக்கிக் கொண்டு, உம் புதல்வனையும் இழுத்துக்கொண்டு வந்த சுவடு தெரியாமல் போய்விடும் என்று சீறிப் பாய்ந்திருக்கிறார்.

நாகூர் ஆலிம்சா பார்த்தார்! மஞ்சக்கொல்லைக்காரர் பேசிய தோரணை பீதியை உண்டாக்கி விட்டது. வியாபாரப் போட்டியில் அவர் எதுவும் செய்ய துணிந்துவிட்டார் என்பதை உணர்ந்து போர்வையையும் தூக்கிக்கொண்டு, பையனையும் இழுத்துக்கொண்டு ஆணை விட்டால்போதும் என்று நாகூருக்கே ஓடோடி வந்துவிட்டார். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை இப்படி ஏமாற்றும் பேர்வழிகள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.

எனது அன்பு இஸ்லாமிய உடன் பிறப்புகளே! கப்ரு மோகம் உங்களை வழி தவறச் செய்ய வேண்டாம்.

இன்றும் அல்லாஹ்வின்பால் நேரான வழி இருக்கிறது. (அவனருளை அடைய முடியாத) தவறான வழிகளும் இருக்கின்றன. மேலும் அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்து விடுவான். (16:9)

உங்கள் மத்தியில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள். ஒன்று இறைமறை, மற்றது என் வழிமுறை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ் பின் மாலிக்(ரழி), முஅத்தா)

குர்ஆனையும், ஹதீஸையும்: உங்கள் வழிகாட்டிகளாக்கி அவற்றைப் பலமாகப் பிடித்துக் கொள்ள ஆயத்தமாகுங்கள். நிச்சயமாக நாகூர் ஆலிம்சா, மஞ்சக்கொல்லை கப்ரு வியாபாரி போன்றவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி வழி தவற மாட்டீர்கள். அல்லாஹ் நம் அனைவரையும் உண்மையையும், பொய்யையும் பிரித்தறிந்து நேர்வழி நடக்க அருள் பாலிப்பானாக! ஆமீன்.

Previous post:

Next post: