விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2011 மே,காதியானிகள்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்: 13.3.2011 அன்று மேலப்பாளையத்தில் தமிழக முஸ்லிம்களிலுள்ள அனைத்துப் பிரிவினரும், மதகுருமார்களும், தலைவர்களும் ஒன்றுகூடி காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல எனத் தீர்மானம் ஏகோபித்து ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர். நீங்கள் அவர்களை முஸ்லிம்கள் இல்லை காஃபிர்கள் எனக் கூறக் கூடாது என்கிறீர்கள். ஒட்டுமொத்த ஆலிம் அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயமும் கூறுவதை ஏற்பதா? நீங்கள் மாத்திரம் தனிப்பட்டுக் கூறுவதை ஏற்பதா? அவர்கள் அனைவரையும் விட நீங்கள் அறிவாளியா? அப்துல்லாஹ், திருச்சி.

விளக்கம் : காதியானிகள் நேர்வழியில் இல்லை; முஸ்லிம் சமுதாயம் சென்றுகொண்டிருக்கும் எண்ணற்ற கோணல் வழிகளில் ஒரு கோணல் வழியில் இந்தக் காதியானிகளும் செல்கிறார்கள் என்பதை 1986லிருந்து குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டே நிலைநாட்டி வருகிறோம். கோணல் வழிகளில் செல்லும் ஒவ்வொரு பிரிவினரில் 95% நேரடியாக குர்ஆன், ஹதீஸை பார்த்து சிந்தித்து விளங்கி அதன்படி நடக்காமல், அவர்களில் 5% மவ்லவி, ஆலிம் எனத் தம்பட்டம் அடிக்கும் சிறுகூட்டத்தினரை நம்பி அப்புரோகிதர்களின் சுயநலக் கூற்றை வேதவாக்காக(?) எடுத்து நடப்பது போல், இந்தக் காதியானிப் பிரிவினரும் காதியானிலுள்ள குருகுல மடத்தில் குருகுல கல்வி கற்று எச்.ஏ.பட்டம் பெற்று வரும் புரோகிதர்களின் சுயநலக் கூற்றை வேதவாக்காக(?) எடுத்து நடப்பவர்களே! கோணல் வழி செல்பவர்களே. 7:3, 33:36,66, 67,68, 2:39 இறைவாக்குகள் கூறுவது போல் அவர்கள் மாபெரும் நட்டவாளர்களே! மறுமையில் நரகை நிரப்புபவர்களே!

உலக அழிவுக்குச் சமீபமாக, 4:157,158 இறை வாக்குகள்படி அல்லாஹ் தன்னளவில் உயர்த்தி வைத்திருக்கும் மரியம்(அலை) அவர்களின் குமாரர் ஈஸா(அலை) மீண்டும் இவ்வுலகிற்கு வந்து(43:61) வாழ்ந்து மரணிப்பவர்களை, அப்போதே 120 வருடங்கள் வாழ்ந்து மரணித்து விட்டார்கள் என்பது காதியானிகளின் வாதம். மனிதனாகப் பிறந்தவன் மரணிக்காமல் நீண்ட காலம் எப்படி வாழ முடியும்? மரணிக்காமல் அல்லாஹ் ஒரு மனிதனை எப்படி வானத்தில்(?) உயர்த்த முடியும்? இதற்கு முன் உதாரணம் இருக்கிறதா? என்பதுதான் காதியானிகளின் வாதம். அல்லாஹ்வின் வல்லமையில் நம்பிக்கையற்ற செமி நாத்திகர்கள் காதியானிகள்.

ஆம்! பொய் நபி மிர்சா குலாமை நபி என நிலை நாட்ட நபிமார்கள் பற்றிக் குறிப்பிடும் இறைவாக்குகள், அல்லாஹ் 2:159ல் குறிப்பிடுவது போல் நேர்வழியும், ஆதாரங்களும் தெள்ளத் தெளிவாக, நேரடியாக, எவ்வித சந்தேகத்திற்கும் இட மின்றி சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் நிலையில் விளக்கமாக இருக்கும் நிலையில், அவற்றிற்குக் காதியானிகள் சுயவிளக்கம் கொடுத்து அசலான கருத்துக்களை மறைத்து அல்லாஹ்வினதும், சபிப்பவர்களதும் சாபத்திற்கு ஆளாகிறார்கள்.

அதேபோல் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட மர்யமின் மகனார் ஈஸா(அலை), இந்த மிர்சா குலாம் தான் என்று நிலைநாட்ட மர்யமின் மகனார் பற்றிய இறைவாக்குகள் அனைத்திற்கும் சுய விளக்கம் கொடுத்து அவற்றின் அசலான கருத்துகளை மறைத்து வழிகேட்டில் செல்கின்றனர். மிர்சா குலாம் என்பவர் நபி, ஈசா(அலை) அவர்கள் 2000 வருடங்களுக்கு முன்னரே மரணித்து விட்டார்கள் போன்ற பொய் வாதங்களை நிலை நாட்ட இன்னும் பல இறைவாக்குகளுக்குச் சுய விளக்கம் கொடுத்து, அவற்றின் அசலான கருத்துக்களை மறைத்துக் காதியானிகள் வழிகேட்டில் செல்கின்றனர்.

காதியானிகளின் வழிகேடுகள் அனைத்தும் உரிய குர்ஆன் வசனங்களைக் கொண்டு 1986 லிருந்து எடுத்துக் காட்டிய பின்னரும், 2:160 சொல்வது போல் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு நேர்வழி பெறாமல், காதியானிகள் தங்கள் தவறுகளிலேயே நிலைத்திருக்கின்றார்கள். இதே நிலையில் அவர்கள் மரணித்தால் 2:161 கூறுவதுபோல், அல்லாஹ்வுடைய, மலக்குகளுடைய, மனிதர்கள் அனைவருடைய சாபத்திற்கு ஆளாகி, அதிலேயே நிலைத்திருப்பார்கள்; அவர்களுடைய வேதனை எளிதாக்கப்படாது என்று அல்லாஹ் 2:162ல் கூறி இருப்பது நிச்சயம் நிறைவேறியே தீரும்.

தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே!
மறுமையில் காதியானிகளின் நிலை பற்றி அல்குர்ஆன் தெள்ளத் தெளிவாகக் கூறுவதை அறிந்துள்ள நாம் ஏன் அவர்களை முஸ்லிம்கள் இல்லை என்றோ, காஃபிர்கள் என்றோ கூறத் துணியவில்லை என்பதை விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். சர்வ வல்லமை படைத்த, தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே தீர்ப்பளிப்பதை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருப்பதாக 10:19, 11:110, 41:45, 42:14,21 போன்ற பல இறைவாக்குகளில் கூறி எச்சரிக்கிறான். அல்லாஹ் தீர்ப்பளிப்பதை மறுமைக்கென்று ஒத்தி வைக்காமல் இவ்வுலகிலேயே உடனுக்குடன் தீர்ப்பு அளிப்பதாக இருந்தால் ஓர் ஆத்மாவும் தப்ப முடியாது. ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவகாசம் அளித்து மரணத்திற்கு முன்னர் தன் தவறை உணர்ந்து வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான்.

மரணம் வரை தம் தவறிலேயே நிலைத்திருப்பவர்களுக்கே மறுமையில் தீர்ப்பளித்து நரகில் போடுகிறான் அல்லாஹ். முழு அதிகாரம் பெற்ற அல்லாஹ் தீர்ப்பளிப்பதை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருப்பது மட்டுமல்ல, உலகில் அந்த அதிகாரத்தை தன்னுடைய தூதர்களுக்கே கொடுக்கவில்லை. ´ஷிர்ர்க், குஃப்ரிலேயே மூழ்கி வாழ்ந்து இறந்து போனவர்கள் பற்றிய தீர்ப்பை அளிக்கும் அதிகாரத்தைக் கூட மூசா(அலை) போன்ற நபி மார்களுக்கும் அல்லாஹ் அளிக்கவில்லை என்பதை 20:51,52 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

இறைவனின் இறுதித் தூதருக்கே அதிகாரம் இல்லை!
அது மட்டுமா? அல்லாஹ்வின் இறுதித் தூதர் உஹத் யுத்த களத்தில் குறைஷ்களால் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டு, நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற தவறான செய்தியே பரவியது. முஸ்லிம் படைகள் சிதறி ஓடின. அப்போதுதான் 3:144 இறைவாக்கு இறங்கியது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை யில் அன்று பஜ்ர் தொழுகையில், மிகவும் வேதனையுற்று தங்களைக் கடுமையாக எதிர்த்த சில குறைஷ் காஃபிர்களின் பெயரைக் குறிப்பிட்டு, “”இறைவா அவர்களை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று மட்டுமே பிரார்த்தித்தார்கள். அதற்கே அல்லாஹ் “”அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உமக்கு எவ்வித அதிகாரமும் இல்லை” எனும் 3:128ஆவது இறை வாக்கை அருளினான். (பார்க்க புகாரீ.4559,4560)

அல்குர்ஆன் இவ்வளவு தெளிவாக நேரடியாகக் கூறிக் கொண்டிருக்க, இறைவனிடம் தங்கள் தவறை உணர்ந்து மரணத்திற்கு முன் மன்னிப்புக் கேட்டுத் திருந்த வாய்ப்புள்ள, உயிரோடிருப்பவர்கள், தங்களை முஸ்லிம்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், “”அவர்கள் முஸ்லிம்கள் இல்லை; காஃபிர்கள், முர்த்தத்கள்” என ஃபத்வா (தீர்ப்பு) கொடுப்பவர்கள் தங்களை மூசா(அலை) அவர்களை விட, இறுதித் தூதர் முஹம்மது(சல்) அவர்களைவிட ஏன்? அல்லாஹ்வை விட அதிகாரம் பெற்றவர்களாக மட்டுமே எண்ண முடியும். (பார்க்க 42:21, 49:16)

உள்ளத்தில் ஈமான் இல்லாது முஸ்லிம்கள் என்போரும் முஸ்லிம்களே!
உள்ளத்தில் ஈமான்-நம்பிக்கை இல்லாத நாட்டு புறத்து அரபிகளும் தங்களை முஸ்லிம்கள் எனக் கூறிக்கொள்ள அல்லாஹ் அனுமதித்துள்ளதை 49:14 இறைவாக்குத் திட்டமாகக் கூறிக் கொண்டிருப்பதை நிராகரிப்பவர்கள் மட்டுமே தங்களை முஸ்லிம்கள் என்று கூறுவோரை முஸ்லிம்கள் இல்லை என்று ஃபத்வா கொடுக்க முடியும்.

நயவஞ்சகர்கள் ஈமான் கொள்ளவில்லை, அல் லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற முற்படுகிறார்கள். பூமியில் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டு, சமாதானவாதிகள் எனப் பிதற்றுகிறார்கள். அவர்கள் நேர்வழி பெறுகிறவர்கள் அல்லர்; அவர்கள் செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள் என்று அல்லாஹ் அல்பகரா 2:8 முதல் 20 வரை திட்டமாகத் தெளிவாகக் கூறியுள்ளான்.

மேலும் இந்த நயவஞ்சகர்கள் நரகின் ஆக அடித்தட்டில் கிடந்து வெந்து கரியாவார்கள் என்று 4:145ல் அல்லாஹ் திட்டமாகக் கூறுகிறான். மேலும் அல்குர்ஆனில், சுமார் 32 இடங்களில் இந்த நயவஞ்சகர்கள் பற்றித் திட்டமாகத் தெளிவாக அறிவித்துள்ளான்.
இப்படி இந்த நயவஞ்சகர் பற்றி அல்லாஹ் திட்டமாக காஃபிர்கள், நரகத்திற்குரியவர்கள் என பல இடங்களில் அறிவித்திருந்தும், அந்த நயவஞ்சகர்கள் காஃபிர்கள்-முஸ்லிம்கள் இல்லை என்று நபி(ஸல்) ஃபத்வா கொடுத்து தமது உம்மத்திலிருந்து அவர்களை ஏன் வெளியேற்றவில்லை? காரணம் புரிகிறதா? ஆம்! அந்த அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை; அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே தீர்ப்பளிப்பதை நாளை மறுமைக் கென்று ஒத்தி வைத்திருக்கிறான். தீர்ப்பளிப்பதை அல்லாஹ்வே நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கும் நிலையில், நாம் இவ்வுலகிலேயே முஸ்லிம்கள் என்று சொல்லுவோரை முஸ்லிம்கள் இல்லை என்று தீர்ப்பளித்தால் 42:21ல் அல்லாஹ் கூறுவதுபோல் அல்லாஹ்வுக்கு இணையாளராக, 49:16 கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்கும், அல்லாஹ்வை விட அதிகாரம் படைத்தவராக தம் பட்டம் அடிப்பதாக ஆகிவிடும். பெரும் பாவியாக நேரிடும் என்பதைத் தெளிவாக நபி(ஸல்) அறிந்திருந் ததால் உள்ளத்தில் ஈமான் இல்லாமல் உதட்டளவில் முஸ்லிம்கள் எனச் சொல்லிக் கொண்டு, முஸ்லிம் களுக்கு எண்ணற்றத் துன்பங்களையும், கேடுகளையும் விளைவித்துக் கொண்டிருந்த அந்தக் கொடும் பாவிகளான நயவஞ்சகர்களை முஸ்லிம்கள் இல்லை; காஃபிர்கள் எனக் கூறி முஸ்லிம்களிலிருந்து வெளியேற்றவில்லை.

நபியிடமே நேரில் வந்து தன்னையும் நபி என வாதிட்டவர்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்கத் துணியவில்லை!
தம்முடைய நபித்துவக் காலத்திலேயே தம் முன்னாலேயே நபி என வாதிட்டவர்களைக் கூட முஸ்லிம் இல்லை; முர்த்தத்-காஃபிர் என ஃபத்வா கொடுக்கத் துணியவில்லை நபி(ஸல்) அவர்கள். காரணம் தீர்ப்பளிக்கும் அதிகாரம் அனைத்தையும் படைத்த சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வைத் தவிர நபிமார்களுக்கோ, இறுதி நபியான தமக்கோ, ஆதத்தின் சந்ததிகளில் எவருக்குமோ அணுவளவும் அனுமதி இல்லை என்பதைத் திட்டமாகத் தெளிவாக அறிந்திருந்தார்கள்.

அல்லாஹ்வை விட அதிகாரம் பெற்றவர்களா?
ஆம்! நபிமார்களுக்கோ, நபி மூசா(அலை) அவர்களுக்கோ, இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கோ இல்லாத தனி அதிகாரம் மதகுருமார்களான இப்புரோகிதர்களாகிய தங்களுக்கு இருப்பதாக நம்பிக் கொண்டுதான் இந்த மதகுருமார்களும், அவர்கள் பின்னால் செல்லும் அரசியல் தலைவர்களும், இறுதி நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னரும் நபி வர முடியும் என்ற குருட்டு நம்பிக்கையில் இருக்கும் காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை; முர்த்தத்கள்; காஃபிர்கள் என ஏகோபித்து ஃபத்வா கொடுத்திருக்கிறார்கள்.

காஃபிர் ஃபத்வா கொடுக்கப்படாதார் உண்டா?
இதில் இன்னும் சிரிப்பை ஏற்படுத்தும் நிகழ்வு என்ன தெரியுமா? 13.03.2011 அன்று ஒரே மேடையில் அணி வகுத்து ஏகோபித்து காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை; காஃபிர்கள் என ஃபத்வா கொடுத்தவர்கள், முன்னர் ஒருவருக்கொருவர் காஃபிர் ஃபத்வா கொடுத்துக் கொண்டவர்கள்தான். நமக்கு பசுமையாக நினைவிருக்கிறது. 1960களில் நாம் தீவிரமாக இல்யாஸ் சாஹிபின் தப்லீஃக் பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில், தர்கா சடங்குகளை அன்றைய தப்லீஃக் அமீர்களே தடுக்கும் அளவில் கடுமையாகச் சாடும் போக்கைக் கடைபிடித்தோம். தப்லீஃக் தலைவர்கள் நம்மை வெறுப்பதற்கு அதுவும் ஒரு காரணமாயிற்று. அப்போது தப்லீஃகில் ஈடுபடுகிறவர்கள் காஃபிர்கள், அவர்களை காஃபிர்கள் இல்லை, முஸ்லிம்கள் என்போரும் காஃபிர்கள் என ஃபத்வா கொடுப்போரும் தர்கா, தரீக்கா மவ்லவிகளில் இருந்தனர். இப்படி முன்னர் ஒருவருக்கொருவர் காஃபிர் ஃபத்வா கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்தான் அன்று ஒன்று கூடி காதியானிக ளுக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்துள்ளனர்.

சாதித்தது என்ன?
அது சரி! அன்றும் அதற்கு முன்னரும் காதியானிகளுக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்து என்ன சாதித்து விட்டனர்? அரசு பதிவுகளில் காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என மாற்றத்தான் முடியுமா? அவர்கள் “”அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்” எனப் பிரிவுப் பெயருடன் தனிப்பள்ளி, தனி ஜமாஅத், தனி நிர்வாகம் என உலகளாவிய அளவில் செயல்படுவதை இவர்களால் தடுத்து நிறுத்த முடியுமா? குறைந்த பட்சம் இவர்களது பள்ளிகளில் காதியானிகள் வந்து தொழுவதைச் சட்டப்படி தடுத்து நிறுத்தத்தான் முடியுமா?
ஆனால் இவர்கள் காதியானிகளை முஸ்லிம்கள் இல்லை; அவர்கள் பின்னால் தொழுவது கூடாது எனக் கூறுவது போல், காதியானிகளும் பதிலுக்கு பொய் நபி மிர்சா குலாமை நபியாக ஏற்காதவர்கள் முஸ்லிம்கள் இல்லை; அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது எனக் கூறி வருகிறார்கள். அந்த வகையில் இரு சாராரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே; நேர் வழி விட்டு கோணல் வழிகளில் செல்பவர்களே!

குஃப்ர் ஃபத்வாவுக்குப் பதில் குஃப்ர் ஃபத்வாவா?
காதியானிகள் எங்களை முஸ்லிமாக ஏற்றுக் கொள்வதில்லை; எங்கள் பின்னால் நின்று தொழு வதில்லை; எனவே அவர்கள் காஃபிர்கள், அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுப்பதில் தவறு என்ன? என்ற வாதத்தை இம் மதகுருமார்கள் வைக்கிறார்கள். இதன் பொருள் என்ன? காதியானிகள் வழிகேட்டில் செல்வதால் நாங்களும் வழிகேட்டில் செல்கிறோம் என்பதுதானே?

ஆக! இவர்களின் காதியானிகள் பற்றிய ஃபத்வா அவர்கள் முஸ்லிம்கள் என்று செயல்படுவதில் ஓர் அணுவளவையும் தடுத்து நிறுத்த முடியாது. பின் ஏன் இப்படி வரிந்து கட்டிக் கொண்டு இவர்கள் காதியானிகளுக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்க முற்படுகிறார்கள்? ஆம்! உண்மை இதுதான். “”ஆதாயம் இல்லாமலா செட்டியார் ஆத்தோடு போவார்?” என்றதொரு பழமொழி மக்கள் அறிந்ததுதான். அதுபோல் இந்த மதகுருமார்களும், தலைவர்களும் தங்களின் சொந்த ஆதாயம் கருதியே குஃப்ர் ஃபத்வா கொடுக்கின்றனர்.

அல்லாஹ்வின் 7:3 நேரடிக் கட்டளைக்கு அடி பணிந்து அல்குர்ஆனை நேரடியாகப் படித்து, சிந்தித்து, விளங்கி அதன்படி நடக்காமல், 7:3 இறை வாக்கை நிராகரித்து, 47:24 இறைவாக்குக் கூறுவது போல் தங்கள் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு, இந்த மதகுருமார்களின், தலைவர்களின் சுயநலக் கூற்றுக்களை அப்படியே வேதவாக்காக(?) கொண்டு கண்மூடி நடக்கிறார்களே அந்தப் பக்தர்கள் தப்பித் தவறியும் காதியானிகள் பக்கம் சென்று விடக் கூடாது என்ற அச்சம் காணமாகவே இந்தக் குருட்டு ஃபத்வா!
பலன் என்ன?

இந்த மதகுருமார்கள் எதிர்பார்ப்பது போல் இந்த ஃபத்வா அவர்களுக்கு முழுமையான பலனைத் தந்துவிடாது. அல்குர்ஆன் 7:3, 33:21,36 இறைவாக்குகள் கூறும் கருத்துக்களைப் புறக் கணித்துச் செயல்பட்டு 33:66, 67,68 இறைவாக்குகள் கூறுவது போல் தங்கள் இடத்தை நரகத்தில் முன்பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே இந்த குருட்டு ஃபத்வாவை அப்படியே கண்மூடி ஏற்பார்கள்.
அல்லாஹ் 51:55ல் கூறுவதுபோல் ஓரளவு ஈமான் உடையவர்களும் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். மத குருமார்கள், தலைவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக காதியானிகளுக்கு ஏன் காஃபிர் ஃபத்வா கொடுக்கிறார்கள்? அப்படி அவர்களிடம் என்ன வழிகேடு இருக்கிறது என்று ஆராய முற்பட்டால், இந்த மதகுருமார்கள், தலைவர்களிடம் காணப்படும் தர்கா, கபுரு, தரீக்கா சடங்குகள், கத்தம், ஃபாத்தியா, 3ம், 7ம், 40ம் வருட ஃபாத்தியாக்கள், மீலாது, மவ்லூது, கந்தூரி, கூடு, கொடி சடங்குகள், பால் கிதாப், மோர் கிதாப் போன்ற மூட நம்பிக்கைகள், வசீலா-பொருட்டால் கேட்கும் பித்அத், ´ஷிர்க் செயல்பாடுகள் இவை எதுவும் காதியானிகளிடம் இல்லை என்பதை அறிந்து அக்கொள்கையின் பக்கம் சாயத்தான் செய்வார்கள்.

அபூ ஜஹீல் வர்க்கமான இந்த மூட முல்லாக்களுக்கு குருட்டுத்தனமாக குஃப்ர் ஃபத்வா கொடுக்கத் தெரிகிறதே அல்லாமல், அவர்கள் பற்றி அவதூறுகளைக் கூறத் தெரிகிறதே அல்லாமல், காதியானிகளின் வழிகேட்டை, குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல்பாடுகளை, குர்ஆன், ஹதீஸுக்கு அவர்கள் கொடுக்கும் மூடத்தனமான சுயவிளக்கங்களைத் துல்லியமாக, விளக்கமாக மக்களுக்குப் புரியும் விதத்தில் எடுத்து வைக்கும் ஆற்றல் இல்லையே! அதனால் இவர்களின் இந்த குருட்டு ஃபத்வா அவர்கள் பின்னால் செல்லும் சிலரையாவது சிந்திக்க வைத்து காதியானிகள் பக்கம் செல்லவே வழிவகுக்கும்.

மதகுருமார்களுக்கு அதிகாரம் உண்டா?
அது சரி! மவ்லவிகள், ஆலிம்கள், ஷேக்கள் என பீற்றிக் கொள்ளும் இந்த மதகுருமார்கள், மார்க்கத்தைப் போதிக்கும் மதகுருமார்கள் என்ற பதவியை எங்கிருந்து பெற்றார்கள்? குருகுல மடங்களான மதரஸாக்களில் இலவசமாகத் தங்கி உண்டு, உறங்கி சில காலம் கழித்து மவ்லவி, முஃப்தி என வெறும் காகிதப் பட்டத்தைப் பெற்றதைத் தவிர வேறு தகுதி இருக்கிறதா?

மனிதர்களால் கற்பனை செய்யப்பட்டு அமைக்கப்படும் அழிந்துபடும் அற்ப ஆட்சி. இந்த மனித ஆட்சியிலும் கூட உயர் பதவிகள் வகிக்கும் உயர் அதிகாரிகளிலிருந்து கடை நிலை ஊழியன் அதாவது தெருக் கூட்டும் தோட்டி முதல் அரசிடமிருந்து பணி ஆணை பெற்றே அப்பணியில் ஈடுபட முடியும். இந்த நிலையில் ஆட்சிகள் அனைத்தையும் அடக்கி ஆளும் சர்வ வல்லமை படைத்த அழிவற்ற ஆட்சி இறையாட்சி.

அந்த இறையாட்சிக்கு முழுச் சொந்தக்காரனான ஈடு, இணையில்லா இறைவனிடமிருந்து இந்த மதகுருமார்கள் மார்க்கப் பணி புரிய அதிகாரம் பெற்றவர்கள் என்பதற்கு பணி ஆணை பெற்றிருக்கிறார்களா? இல்லையே! மார்க்கப் பணி புரிய அனைத்து நபிமார்களும் பணி ஆணை பெற்றே வந்தார்கள் என்பதற்கு ஆதாரமாகப் பல குர்ஆன் வசனங்கள் இருக்கின்றன. இறுதி நபிக்குப் பிறகு ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மார்க்கப் பணி செய்ய வேண்டும்; அவர்களே வெற்றி பெற முடியும் என்று வலியுறுத்தும் குர்ஆன் வசனங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் குருகுல மடங்களில் மவ்லவி, முஃப்தி என காகிதப் பட்டம் பெற்ற இந்த மதகுருமார்கள் மார்க்கப் பணி புரிய அதிகாரம் பெற்றவர்கள் என்பதற்கு ஒரேயயாரு குர்ஆன் வசனமும் இல்லையே!

அல்குர்ஆன் ஆலிம் யார் என்று விளக்குகிறது!
எவ்வித பாகுபாடுமின்றி, ஆலிம்-அவாம் என்ற ஏற்றத் தாழ்வுமின்றி, முஸ்லிம்-முஸ்லிம் அல்லாதார் என்ற பாகுபாடின்றி ஆதத்தின் மக்கள் அனைவருக்கும் நேர்வழியைத் தெளிவாகக் காட்டும் அல்குர்ஆனில் நாஸ்-மனிதர்கள் என்று சுமார் 241 இடங்களிலும், மனிதர்களை நேரடியாக விழித்து ஓ மனிதர்களே-யாஅய்யுஹன்னாஸ் என்று 9 இடங்களிலும் காணப்படுகிறது.

அடுத்த நிலையில் நம்பிக்கை கொண்டவர்கள்-ஆமனூ என்று 258 இடங்களிலும், ஓ நம்பிக்கை கொண்டவர்களே யாஅய்யுஹல்லதீன ஆமனூ என்று 86 இடங்களில் குர்ஆனில் காணப்படுகிறது. அடுத்து மார்க்கப் பணிபுரிய கடமைப்பட்ட நபி என்று 43 இடங்களிலும், ஓ நபியே-யா அய்யு ஹன்னபி என்று இறுதித் தூதரை விழித்து 14 இடங்களில் இருக்கிறது.

இந்த நிலையில் சம்பளத்திற்கு மார்க்கப் பணி புரிய அதிகாரம் பெற்றவர்கள் எனத் தம்பட்டம் அடிக்கும் இந்த மதகுருமார்களை விளித்து ஓ உலமாக்களே-யாஅய்யுஹல் உலமா என ஒரேயொரு இடத்திலாவது காட்ட முடியுமா? நிச்சயமாக அப்படி இல்லவே இல்லை.

“”ஆலிம்” என்று 13 இடங்களில் காணப்படுகிறது. இவை அனைத்தும், அல்லாஹ்வையே குறிக்கின்றன. 29:43ல் “”ஆலிமூன்” என்ற பதம் இருக்கிறது. அது என்ன கூறுகிறது? 29:43ல் “”இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காகவே (ஆலிம்களுக்காக அல்ல) விளக்கி இருக்கிறோம். ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஆம்! முன் சென்ற பெரியார்கள், நாதாக்கள், சலபுஸ் ஸாலிஹீன்கள் விளங்கியது போல் நாம் விளங்க முடியாது என்று, அல்லாஹ் 47:24ல் கூறுவது போல் தங்கள் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்ட இந்த மதகுருமார்களும், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவோர்களும் அல்குர்ஆனை விளங்க முடியாது தான். 12:44, 21:51,81, 30:22 ஆக நான்கு இடங்களில் “”ஆலிமீன்” என்ற பதம் இருக்கிறது. அவற்றில் 21:51,81 அல்லாஹ் அறிந்துள்ளவற்றையே குறிக்கின்றன.

12:44ல் உலகியல் அறிஞர்கள் கனவுகளின் விளக்கங்களை அறியமாட்டார்கள் என்கிறது. 30:22 முறையான அறிவை பெற்றவர்கள் மட்டுமே இறைவனின் அத்தாட்சிகளை அறிய முடியும் என்று கூறுகிறது.

“”அலீம்” என்ற அரபி பதம் 140 இடங்களில் அல்குர்ஆனில் இருக்கிறது. இவை அனைத்தும் அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் என்று தான் கூறுகின்றன.

“”அலிம” என்று 12 இடங்களில் இருக்கிறது. இவற்றிலும் பெரும்பாலானவை அல்லாஹ் அறிவதையே குறிக்கின்றன. மேலும் “”இல்ம்” என்ற அரபி பதம் 80 இடங்களில் இருக்கிறது. அவற்றில் மிகப் பெரும்பாலானவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து அதாவது அல்குர்ஆனிலிருந்து கிடைப்பதுதான் அசலான “”இல்ம்” என்று கூறுகின்றனவே அல்லாமல், சாதாத்துகள், அகாபிரீன்கள், இமாம்கள், அவுலியாக்கள், ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் போன்றோரிடமிருந்து கிடைக்கும் மனித யூகம் “இல்ம்’ என்று ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

“”அல்லம” என்ற அரபி பதம் நான்கு இடங்களில் இருக்கிறது (2:31, 55:2, 96:4,5) இந்த நான்கும் அல்லாஹ் கற்றுக் கொடுத்ததைக் கூறுகின்றனவே அல்லாமல், மனிதர்களில் யாரும் கற்றுக் கொடுத்ததைக் குறிப்பிடவில்லை.

14 இடங்களில் “”இல்மன்” என்று காணப்படுகிறது. இவை அனைத்தும் இறைவனே மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் சூழ்ந்தறிகிறான். அவனிடமிருந்து பெறப்படுவதே உண்மையான அறிவு, அவனிடமே அறிவை அதிகப்படுத்திக் கேட்கவேண்டும் என்றே கூறுகின்றன. (பார்க்க 20:114) அதே 20ம் அத்தியாயம் 110ம் இறைவாக்குக் கூறுவதைப் பாருங்கள்.

“அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்க ளுக்குப் பின்னால் இருப்பதையம் அவன் நன்கறிவான். ஆனால் அவர்கள் அதை(தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறியமாட்டார்கள் (20:110) இவ்வாறு திட்டமாகக் கூறியுள்ளான் அல்லாஹ். இவ்வளவு தெளிவாக அல்லாஹ் கூறியிருந்தும், அல்லாஹ் நேரடியாகக் கூறுவதைப் புறக்கணித்து விட்டு, இமாம்கள், அவுலியாக்கள், பெரியார்கள், நாதாக்கள், சாதாத்துகள், ஸலஃபுகள் போன்ற முன்னோர்களின் மனிதக் கருத்துக்களை மார்க்கமாக மக்களுக்குப் போதிப்பவர்கள் யாராக இருக்க முடியும்? சொல்லுங்கள்.

இதோ அல்லாஹ்வே, இப்படி அல்லாஹ்வின் வாக்குகளை முன்னோர்களின் பெயரால் பொய்ப்பித்து நிராகரித்தவர்கள் பற்றி 27:83, 84ல் என்ன கூறுகிறான் என்று சுய சிந்தனையுடன் பாருங்கள்.

“”ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை(பிரித்து) ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே!) நீர் நினை வூட்டுவீராக!

அவர்கள் யாவரும் வந்ததும்: “”நீங்கள் என் வசனங்களைச் சூழ்ந்தறியாத நிலையில் அவற்றைப் பொய்ப் பித்துக் கொண்டிருந்தீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்பான். (27: 83, 84)

திருட்டுத்தனமாக, எவ்வித ஆதாரமும் இல்லாமல் ஒவ்வொரு சமுதாயத்திலும் நுழைந்து அவர்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் இந்த மதகுருமார்களுக்குரிய கடும் எச்சரிக்கையே இது என்பதில் சந்தேகம் உண்டா?

உலமாக்கள் யார்?
இறுதியாக அவர்கள் உலமாக்கள், உலமாக்கள் எனத் தம்பட்டம் அடிக்கும், பீற்றிக் கொண்டு பெருமை-ஆணவம் பேசும் “”உலமா” என்ற அரபி பதம் 26:197, 35:28 என இரண்டு இடங்களில் மட்டுமே அல்குர்ஆனில் இருக்கிறது. அவற்றில் ஒன்று : “”பனூ இஸ்ராயீல்களில் உள்ள உலமாக்கள் இதை அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சி யல்லவா?” (26:197) என்று கூறுகிறது.

இங்கு 26:192லிருந்து 201 வரை படித்துப் பார்ப்பீர்களாயின் அல்குர்ஆனிலுள்ள இறைவாக்குகளை நன்கு அறிந்த நிலையில்தான் பனூ இஸ்ராயீல்களிலுள்ள உலமாக்கள் அவற்றை மறுத்துப் புறக்கணித்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? உலமாக்கள் என, 4:49, 53:32 இறைக் கட்டளைகளுக்கு முரணாகத் தம்பட்டம் அடிப்போர் அல்குர்ஆனின் நேரடிக் கருத்துக்களைப் புறக்கணிப்போர் தான் என்பது உறுதியாகிறதல்லவா?

ஆம்! ஆலிம்கள், உலமாக்கள் என பெருமை பேசும் மதகுருமார்கள், அல்குர்ஆன் நேரடியாகச் சொல்லும் கருத்துக்களை 2:159 சொல்வது போல் திரித்து, வளைத்து, மறைத்துப் புறக்கணிப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்பது புரிகிறதல்லவா? அரபி மொழி கற்றவர்கள், மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், உலமாக்கள், ஷேக்குகள் எனப் பெருமை பேசும் மதகுருமார்களின் நிலை இதேதான். அல்குர்ஆன் நேரடியாகச் சொல்வதை மறுப்பதே அவர்களின் கொள்கையாகும்.

அடுத்து 35:28 உலமா பற்றி என்ன கூறுகிறது?
“”அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்களே உலமாக்கள்” என்று கூறுவதை இந்த மதகுருமார்கள் “”ஆலிம்கள் தான் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள்” எனத் திரித்து வளைத்து தங்களுக்குச் சாதகமாகப் பொருள் சொல்வார்கள்.

அல்குர்ஆன் வசனங்களை புறக்கணிப்போர் உலமாக்களா?
இங்கு கவனிக்கவேண்டியது 21:92, 23:52 இறைக் கட்டளைகளை நிராகரித்து சமுதாயத்தை ஆலிம்-அவாம் என பிளவுபடுத்தியவர்கள், 3:103,105, 6:153, 159, 30:32, 42:13,14 போன்ற பல இறைக் கட்டளைகளை நிராகரித்துச் சமுதாயத்தைப் பல பிரிவுகளாக்கியவர்கள், சுமார் 50 வசனங்கள் நேரடியாகவும், அதே போல் பல வசனங்கள் மறைமுகமாகவும் மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் கூடவே கூடாது என பகிரங்க மாக சொல்லும் நிலையில் இவை அனைத்தையும் நிராகரித்து, நரக நெருப்பால் தங்கள் வயிறுகளை நிரப்புகிறவர்கள் (2:174). அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்களாக இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

2:186, 7:3, 33:21,36,66,67,68, 50:16, 56:85 போன்ற இறைவாக்குகளை நிராகரித்து, அல்லாஹ்வுக்கும், அவனது அடியார்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாகப் புகும் இந்த மதகுருமார்கள் அல்லாஹ்வின் அச்சமுடையவர்களா? ஆலிம்களா? உலமாக்களா? சொல்லுங்கள்.
“”உலமாக்கள் நபிமார்களுடைய வாரிசுகள்” என்ற ஹதீஸை ஆதாரமாகக் காட்டி தங்களுக்கு மார்க்கத்தில் அதிகாரமிருப்பதாக வாதிடுவார்கள். உலமாக் களுக்குரிய எந்த தகுதியும் அவர்களிடம் இல்லை; அது மட்டுமல்ல மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட இந்த மதகுருமார்கள், கூலி, சம்பளம் கேட்காமல் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி மட்டுமே மார்க்கப் பணி புரிந்த நபிமார்களின் வாரிசாக முடியுமா?

ஆக மார்க்கத்தில் எங்களுக்கு அதிகாரம் உண்டு எனத் தம்பட்டம் அடிக்கும் இந்த மதகுருமார்கள் அல்குர்ஆனிலிருந்தோ, ஆதாரபூர்வமான ஹதீஸ் களிலிருந்தோ ஒரேயொரு ஆதாரத்தையும் தரவே முடியாது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.
கடந்த 1000 வருடங்களாக இருந்த இருக்கிற அறிஞர்களை விட நீங்கள் அறிஞராகி விட்டீர்களா?

அடுத்து உலகமனைத்திலுமுள்ள உலமாக்கள், தலைவர்கள் சொல்வதை ஏற்பதா? தன்னந்தனியாக நீங்கள் சொல்வதை ஏற்பதா? அவர்களை விட நீங்கள் அறிவாளி ஆகிவிட்டீர்களா? என்று கேட்டிருக்கிறீர்கள். தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள். இந்த மதகுருமார்கள், தலைவர்கள், முன்னோர்கள் மூதாதையரின் பெயரால் சுயவிளக்கம் கூறுவதுபோல், நாமும் இன்றைய தமிழக நவீன இமாம்(?) போல் எமது சுயவிளக்கத்தைக் கொடுத்தால் உங்கள் கேள்வி நியாய மானதே. ஆனால் மார்க்கத்தில் எமது சுயவிளக்கங்களை இணைக்காமல் ஜின், மனு வர்க்கத்தினரை விட கோடானு கோடி பேரறிவு பெற்ற ஒரே இறைவனின் வாக்குகளை மட்டுமே உங்கள் முன் வைக்கிறோம். அகில உலகிலுமுள்ள ஆலிம்கள், அல்லாமாக்கள், உலமாக்கள், தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏகோபித்து மட்டுமல்ல, நாமும் அவர்களுடன் சேர்ந்து அல்குர்ஆனில் இல்லாததை, ஆதாரபூர்வ மான ஹதீஸ்களில் இல்லாததை மார்க்கமாக்கினால் அது ஒருபோதும் மார்க்கமாகாது.

அதே சமயம் எழுத்தறிவோ, படிப்பறிவோ அறவே அற்ற, இந்த மதகுருமார்களால் அவாம்-பாமரன் என்று சொல்லப்படும் ஒரு சாதாரண நபர் அல்குர்ஆனிலிருந்தோ, ஆதாரபூர்வமான ஹதீஸ் களிலிருந்தோ அவர் மற்றவர்களிடமிருந்து காதால் கேட்டு மனதில் இருத்திக் கொண்டதை எடுத்துச் சொன்னால், அதற்கு உடனடியாக ஆலிம்கள், உலமாக்கள், ஷேக்கள், முஸ்லிம்கள் அனைவரும் அடிபணிவதே உண்மையான ஈமானின் அடையாளமாகும். ஒரு பாமரன் சொல்வதா என்ற அகந்தையில் அந்த குர்ஆன் வசனத்தை ஆதாரபூர்வ மான ஹதீஸை நிராகரிப்பது குஃப்ரிலாக்கி நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை 2:39 இறைவாக்கு எச்சரிக்கிறது.
இதுவரை எழுதியதில் எமது சொந்தக் கருத்து இருக்குமானால் அது கால் காசு பெறாது. குப்பையில் எறிய வேண்டியதுதான். நாம் எடுத்து எழுதியுள்ள, எண்ணிட்டுள்ள குர்ஆன் வசனங்களை அல்குர்ஆனை நீங்களே எடுத்து படித்துச் சிந்தித்து விளங்க முற்படுங்கள். அல்லாஹ் 29:69ல் வாக்களித்துள்ளது போல் நேர்வழியை எளிதாக்குவான்.

அல்லாஹ்வின் அறிவுக்கு முன்னால் ஒட்டுமொத்த மனிதர்களின் அறிவு ஈடாகுமா?
உலகிற்கு மனிதன் என்று அனுப்பப்பட்டானோ அன்றிலிருந்து இன்றுவரை, ஏன்? உலகம் அழியும் முன்னர் வந்த நபிமார்கள், உண்மையான அறிஞர்கள், போலி அறிஞர்களாகிய மதகுருமார்கள், பெரும் பெரும் கண்டுபிடிப்பாளர்கள், அனைத்து அறிவியல் துறைகளிலுமுள்ள பேரறிஞர்கள், இவர்கள் அனைவரது அறிவையும் ஒன்று சேர்த்து இறைவனுடைய மகாமகா பேரறிவுடன் ஒப்பிடும்போது கடலில் ஒரு ஊசியை முக்கி எடுத்தால் அதில் எந்த அளவு நீர் இருக்குமோ அந்த அளவு தானும் ஒட்டுமொத்த மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவு இருக்காது.

இந்தப் பேருண்மையைத்தான் அல்லாஹ் அல்குர்ஆன் 17:85ல் “”(நபியே!) உம்மிடம் உயி ரைப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள். உயிர் என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டா னது; இன்னும் அறிவில் உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமே அன்றி வேறில்லை” எனக் கூறுவீராக (17:85) என்று அல்லாஹ் திட்டமாகக் கூறியுள்ளான்.

இப்றாஹீம்(அலை) முன்மாதிரி!
இந்த உண்மையை நபி இப்றாஹீம்(அலை) திட்டமாகத் தெளிவாக அறிந்த காரணத்தினால் தான் தனது அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அல்லாஹ்வின் விருப்பப்படி பச்சிளம் பாலகனாகிய அருமை மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும், அக்குழந்தையின் தாயையும் தண்ணீர் இல்லாத பொட்டல் காட்டில்-பாலைவனத்தில் கொண்டு விட்டார்கள். அக்குழந்தை அங்கு வளர்ந்து நடமாடும் பருவத்தில், தனது அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இறை விருப்பப்படி அம்மகனை அறுக்கத் துணிந்தார்கள். (37:102-113) அல்லாஹ்வின் அறிவுரைக்கு மாறாக நடந்தால் அது தமது மனோ இச்சையை ரப்பாக எடுத்துக் கொண்ட நிலைக்கு அதாவது இறைவனுக்கு இணை வைக்கும் (´ஷிர்க்) மிகக் கொடிய குற்றத்திற்கு ஆளாக்கிவிடும் (பார்க்க 25:43) என்பதைத் திட்டமாக, தெளிவாக இப்றாஹீம்(அலை) அறிந்திருந்த காரணத்தால் தமது மனோ விருப்பத்தி ற்கு அவர்கள் இடம் கொடுக்கவில்லை. அதனால் தான் அவர்கள் அல்லாஹ்வின் மிக நெருக்கமான உற்ற நண்பராக ஆக முடிந்தது. (பார்க்க 4:125)

ஆனால் இந்த மதகுருமார்களோ தங்களின் மனோ விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எண்ணற்ற இறைக் கட்டளைகளை சுய விளக்கம் மூலம் நிராகரித்து ஷைத்தானின் உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள். 25:27லிருந்து 29வரை கூறுவது போல் நாளை மறுமையில் புலம்பப் போகிறார்கள்.

2:256,257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17 ஆகிய “தாஃகூத்’ என்று வரும் வசனங்களையும், 51:53, 52:32 இரண்டு இடங்களில் “”தாஃகூன்” என்று வரும் வசனங்களையும் நடுநிலையுடன் சுய சிந்தனையுடன் படித்துப் பாருங்கள். ஆதத்தின் மக்களை வழி கெடுத்து நரகில் தள்ளிவரும் இந்த மத குருமார்கள் பற்றித் தான் அவை கூறுகின்றன என்பதை நீங்களே விளங்கலாம்.

மதகுருமார்களிடம் இருக்கும் இன்னொரு பெரும் வழிகேடு!
இந்த மதகுருமார்கள் இன்னொரு வகையிலும் மிகப் பெரும் தவறைச் செய்து வருகிறார்கள். உண்மையான ஒரு நம்பிக்கையாளன் தன்னைவிட, தன் மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் உறவினரை விட நபி(ஸல்) அவர்களை அதிகமாக நேசிக்க வேண்டும். நேசிப்பது என்றால் மவ்லூது, மீலாது என வாய்ப் பந்தல் போடுவது இல்லை. 3:31, 33:21,36 இறைக் கட்டளைகள்படி நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலில் எவ்வித சுய விருப்பங்களையும் புகுத்தாமல் நூல்பிடித்தது போல் அப்படியே எடுத்து நடப்பதாகும்.
ஆனால் இந்த மதகுருமார்கள் நபி(ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுவதை விட்டு, வாயளவில் புகழோ புகழ் எனப் புகழ்வதுடன், அல்லாஹ் வின் தனித்தன்மைகளை நபிக்குக் கொடுத்து இணை வைக்கும் குற்றத்திற்கு ஆளாகிறார்கள். இந்த மதகுருமார்கள் அல்லாஹ்வை விட அல்லாஹ்வின் தூதரை அதிகமாக நேசிக்கும் தவறான வழியை மக்களுக்குக் காட்டுகிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம்:

ஹிஜ்ரி 1111ல் பிறந்த அதாவது சுமார் 321 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த அப்துல் வஹ்ஹா பின் மகன் முஹம்மது என்பார் இந்த மதகுருமார்கள் மக்களுக்குப் போதித்துவரும் கபுரு சடங்குகள், கூடு, கொடி, கந்தூரி மற்றும் பல மூட நம்பிக்கை களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு கடுமையாக விமர்சித்து மக்களை நேர்வழியின்பால் அழைத்து வந்தார். அதனால் முஹம்மதாகிய அவர்மீது கடும் கோபம் கொண்ட இந்த மதகுரு மார்கள் அவரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு அவரது கொள்கை “”வஹ்ஹாபி” கொள்கை என்றும் அவரது போதனைகளை ஏற்று நடப்பவர்களை “”வஹ்ஹாபிகள்” என்றும் தங்களின் பக்தர்களுக்குக் கூறி “”வஹ்ஹாபி” என்றால் ஓர் இழிவான பெயர் என தங்கள் பக்தர்களை நம்ப வைத்தார்கள். இன்று வரை “”வஹ்ஹாபி” அதாவது அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்ற புனிதமான பெயர் இந்த மதகுருமார்களின் பக்தர்களால் மிக இழிவாகக் கருதப் பட்டு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.

இங்குதான் இந்த மதகுருமார்கள் அல்லாஹ்வை விட அல்லாஹ்வின் தூதரை அதிகமாக நேசிப்பதாக நடிக்கும் வேடம் சிந்தனையாளர்களுக்குப் புரிகிறது. மூடச் சடங்குகளை எதிர்த்தவர் முஹம்மது என்பவராவார். அவரின் தந்தையான அப்துல் வஹ்ஹாப் அதாவது வஹ்ஹாபின் அடிமை என்ற பெயரை உடையவருக்கு முஹம்மதின் கொள்கையில் உடன்பாடில்லை. அவரும் ஒரு மதகுரு.

இந்த நிலையில் அவரின் பெயரான அப்துல் வஹ்ஹாபிலுள்ள அல்லாஹ்வின் பெயரான வஹ்ஹாபை இழுத்து அக்கொள்கைக்கு “”வஹ்ஹாபி” என பெயர் சூட்டி ஏன் இழிவு படுத்த வேண்டும்? இங்கு தான் இந்த மூட முல்லாக்களின் அறிவீனம் வெளிப்படுகிறது.
முஹம்மது வெளிப்படுத்திய கொள்கையை இழிவு படுத்துவதாக இருந்தால் “”முஹம்மதீ” என்று தான் இழிவு படுத்த வேண்டும். ஏன் அவ்வாறு இழிவுபடுத்தவில்லை தெரியுமா? “”முஹம்மதீ” என்றால் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதாக ஆகிவிடும் என்ற தவறான நம்பிக்கையில் “”முஹம்மதீ” என்று அறிமுகப் படுத்தாமல் “”வஹ்ஹாபி” எனக் கூறி இழிவுபடுத்த முற்பட்டார்கள். இந்த மூடர்களுக்கு “”வஹ்ஹாப்” அல்லாஹ்வுடைய திரு நாமங்களில் ஒன்று, கொடையாளன் என்று பொருள், வஹ்ஹாபி என்று கூறி இழிவு படுத்த முற்பட்டால் அது அல்லாஹ்வை இழிவு படுத்தியதாகிவிடும் என்ற சாதாரண அற்ப அறிவு கூட இல்லை. இந்த நிலையில் தங்களை ஆலிம்கள்-அறிஞர்கள் எனத் தம்பட்டம் அடிக்கிறார்கள். பெருமை பேசுகிறார்கள். ஆம்! அவர்களது உள்ளங்களில் அல்லாஹ்வை விட அவனது தூதராகிய முஹம்மது(ஸல்) அவர்கள் மீதே அதிக மான முரட்டு முஹப்பத் இருக்கிறது. அதாவது கிறித்தவர்களுக்கு அல்லாஹ்வை விட அல்லாஹ் வின் தூதரான ஈஸா(அலை) அவர்களிடம் இருக்கும் முரட்டு முஹப்பத்து போல் இந்த முஸ்லிம் மதகுருமார்களிடமும் காணப்படுகிறது.

அதே போல் கிறித்தவர்கள் ஈசா(அலை) அவர்களை கடவுள் குமாரன் என வாயளவில் புகழ்ந்து கொண்டு யூதன் பவுல் போதித்த முக்கடவுள் கொள்கையை பின்பற்றுவது போல், இந்த முஸ்லிம் மத குருமார்கள் முஹம்மது(ஸல்) அவர்களை வாயளவில் புகழ்ந்து கொண்டு, அதே யூதக் கைக் கூலிகள் போதித்த தர்கா, தரீக்கா, மத்ஹபு, இயக்கம் போன்ற பிரிவுக் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.

முரட்டு முஹப்பத்தில் குஃப்ர் ஃபத்வா!
அதே முரட்டு முஹப்பத்துதான் காதியானிகளுக்கு காஃபிர் ஃபத்வா கொடுப்பதிலும் காணப்படுகிறது. அது எப்படி என்று பாருங்கள்.
அல்குர்ஆனின் 112ம் அத்தியாயம் அல்லாஹ் வின் தனித்தன்மையை திட்டமாக அறிவிக்கிறது. அவனுக்கு இணை துணை இல்லை; தேவையற்றவன். யாருடைய பரிந்துரையையும் ஏற்கும் கட்டாயத்தில், அதாவது தேவையுடைய நிலையில் அவன் இல்லை என்பதைத் திட்டமாகப் பறை சாற்றுகிறது. முஸ்லிம்கள் உறுதி கூறும் கலிமாவிலும் அல்லாஹ் அல்லாத இறைவன் இல்லை என்றே சான்று பகர்கிறோம். அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையில் இடைத்தரகர்களைப் புகுத்துவது அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்(ஷிர்க்) என திட்டமாக 2:186, 7:3, 9:31, 10:18, 39:3, 50:16, 56:85 போன்ற எண்ணற்ற இறைவாக குகள் திட்டமாக நேரடியாக அறிவிக்கின்றன.

இணை வைத்தல்(ஷிர்க்) எனும் பெருங் குற்றத்தை நான் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் என்று அல்லாஹ் 4:48,116 இறை வாக்குகளில் திட்டமாக நேரடியாக அறிவிக்கிறான். அதற்கு மாறாக ஆதம்(அலை) அவர்களது காலத்திலிருந்து இறுதி நபி(ஸல்) அவர்கள் வரை பல்லாயிரக்கணக்கான நபிமார்களை அல்லாஹ் இவ்வுலகிற்கு அனுப்பி இருக்கிறான். 33:40 இறைவாக்கு நபி (ஸல்) முத்திரை நபி; அவர்களின் வருகையோடு நபிமார்களின் வருகை முத்திரை இடப்பட்டு முற்றுப்பெற்றுவிட்டது எனத் திட்டமாகக் கூறுகிறது. மார்க்கம் நிறைவு பெற்று அல்குர்ஆன் உடனுடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால், அதுவே உலகம் அழியும் வரை நடைமுறையில் இருக்கும் என அல்லாஹ் 5:3, 3:19,85, 15:9 போன்ற இறை வாக்குகளில் உறுதிப்படுத்தி இருப்பதால், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நுபுவ்வத்தின் வஹி வர வேண்டிய தேவையோ, அதனால் ஒரு நபி வர வேண்டிய அவசியமோ இல்லவே இல்லை.

உண்மையை மறுக்கும் காதியானிகள்!
ஆனால் காதியானிகள் இந்த இறைவாக்குகளை நிராகரித்து இறுதி நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகும் நபி வரமுடியும் என்ற தவறான-பொய்யான வாதத்தை வைக்கிறார்கள். உண்மையை மறுக்கிறார்கள்!

இங்கு நாம், காதியானிகளுக்கு குஃப்ர் ஃபத்வா கொடுத்த இந்த அனைத்துப் பிரிவுகளின் மதகுருமார்கள், தலைவர்களுக்கும் காதியானிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை உற்று கவனிக்க வேண்டும். இந்த அனைத்துப் பிரிவு மதகுருமார்களும் 2:186, 7:3, 9:31, 10:18, 39:3, 50:16, 56:85, 4:48,116 இந்த அனைத்து இறைக் கட்டளைகளையும் நிராகரித்து அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மன்னிக்கப்படாத பெருங்குற்றத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையிலுள்ள அனைத்துப் பிரிவு மத குருமார்கள், காதியானிகள் 33:40 இறைவாக்கை நிராகரித்து நபி(ஸல்) அவர்களுக்குப் பின் நபி வர முடியும் என்ற வாதத்தை வைக்கிறார்கள். நபி(ஸல்) இறுதி நபி என்பதை மறுக்கிறார்கள்; நிராகரிக்கிறார்கள். அதனால் காஃபிர்கள் என ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் இதை மன்னிக்கப் படாத பெருங்குற்றம் என்று அல்லாஹ் சொல்லவில்லை. ஆயினும் காதியானி மத்ஹபினரும் அவர்களின் மதகுருமார்களை அல்லாஹ்வுக்கும் தங்க ளுக்கும் இடையில் இடைத்தரகர்களாகக் கொண்டு 2:186, 7:3, 9:31, 10:18, 39:3, 50:16, 56:85, 4:48,116 இறைவாக்குகளை நிராகரித்து மற்றப் பிரிவு மத குருமார்களின் அதே நிலையில்தான் இருக்கிறார்கள்.

ஆனால், இதர பிரிவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்கள் மீது இந்தக் குற்றத்தைச் சுமத்தவில்லை. மாறாக நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னரும் நபி வரமுடியும் என்ற அவர்களின் பொய் வாதத்தை மட்டும் கடுமையாக விமர்சித்தே அவர்களுக்கு குஃப்ர் ஃபத்வா கொடுத்துள்ளனர். இதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று அவர்களும் அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக இருக்கிறார்கள். எனவே அதைக் குற்றமாகச் சொல்லும் துணிச்சல் அவர்களுக்கு ஒரு போதும் வராது.
இரண்டாவது காரணம்: இந்த மதகுருமார்கள் அல்லாஹ்வை நேசிப்பதை விட, அல்லாஹ்வின் இறுதித் தூதரான நபி(ஸல்) அவர்களை அதிகமாக நேசிப்பதாக நடிக்கிறார்கள்; முரட்டு முஹப்பத்து. 3:31 இறைவாக்கும் “”அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை மன்னிப்பான்” என்று நபியே நீர் கூறும் என்று கட்டளையிடுகிறதே அல்லாமல் என்னை நேசித்து என்னைப் பின்பற்றுங்கள் என்று கூறக் கட்டளையிடவில்லை.
ஆனால் இந்த அனைத்துப் பிரிவுகளின் மதகுரு மார்கள் நபி(ஸல்) அவர்கள் மீது முரட்டு முஹப் பத்தை வாயளவில் காட்டிக் கொண்டு, அவர் களைப் பின்பற்றாமல் 2:134, 141 இறைக் கட்டளை களுக்கு முரணாக முன் சென்ற இமாம்கள், அகா பிரீன்கள், சாதாத்துகள், ஸலஃபுகள் போன்றோரைப் பின்பற்றுகின்றனர்.

மதகுருமார்களிடம் “´ஷிர்க்’ சாதாரண செயல்!
அதனால்தான் அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்குமிடையில் இடைத்தரகர்கள் ஆகும் ஷிர்க்குடைய கொடிய செயலை சாதாரண செயலாகக் கருதி, இந்த அநியாயங்களிலேயே கொடிய அநியாயச் செயலைச் செய்பவர்களை (31:13) அந்த மேடையில் அரவணைத்து வைத்துக் கொண்டு, நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகும் நபி வரமுடியும் என்று 33:40 இறைவாக்கை நிராகரிக்கும் காதியானிகளுக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்தால், இவர்கள் அல்லாஹ்வை விட அவனது இறுதித் தூதரிடம் அதிக முரட்டு முஹப்பத்து வைத்திருக்கிறார்கள் என்பதுதானே அதன் பொருள். சுயமாகச் சிந்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் விளக்கத்தைத் தருவான் (29:69).
அதனால்தான் தன்னந்தனியனான இணை, துணை இல்லாத அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை சாதாரணக் குற்றமாகவும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகும் நபி வரமுடியும் என்பதை பெருங் குற்றமாகவும் இந்த மதகுருமார்கள் நினைத்து காதியானிகளுக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்துள்ளனர்.

மதகுருமார்களை மிகக் கடுமையாக விமர்சிக்கிறோம்; ஏன்?
அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்கு மிடையில் இடைத்தரகர்களாகப் புகுந்துள்ள இந்த மதகுருமார்களை நாம் மிகமிகக் கடுமையாகச் சாடுவதைச் சரி காணாமல் பலர் முகம் சுளிக்கின்றனர்; பலர் எம்மை வெறுக்கின்றனர்; பலர் எம்மைச் சபிக்கின்றனர். இவர்களைப் பொருட் படுத்தாமல் இந்த மதகுருமார்களை விமர்சிப்பதில் நாம் மேலும் மேலும் கடுமை காட்ட முற்படுவதற்கு ஒரே காரணம், நாம் மீண்டும் மீண்டும் இறுதி நெறி நூல் அல்குர்ஆனை ஆராய, ஆராய இந்த மதகுரு மார்களின் மிகமிக இழிவான நிலையை நாம் தெளிவாகப் புரிவதால் மட்டுமே.

மனித குலத்திற்கு கேடு விளைவிக்கும் நிலையில், அவர்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் நிலையில், ஷைத்தானின் சபதப்படி ஆதத்தின் சந்ததிகளை நரகில் தள்ளி நரகை நிரப்புவதற்கு ஷைத்தானுக்குத் துணை புரியும் நிலையில் இந்த மத குருமார்களை விட முன்னணியில் நிற்கும் வேறு யாரையும் நம்மால் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு நபியின் காலத்திலும் அந்த நபிமார்களை எதிர்ப்பதில் முன்னணியில் நின்று கடுமையாக எதிர்த்துவிட்டு, அந்த நபிமார்களின் மறைவுக்குப் பின்னர் திருட்டுத்தனமாக, சட்ட விரோதமாக அச்சமுதாயத்தில் புகுந்து கொண்டு அந்த நபிமார்களின் பெயராலேயே அல்லாஹ் மன்னிக்காத அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் கொடுஞ் செயல்களை ஷைத்தானின் துணையுடன் அந்த மக்களிடையே அரங்கேற்றியவர்கள் இந்த மத குருமார்கள்.
இதர மத குருமார்களின் நிலை தெரியும்!

மற்ற மதங்களிலுள்ள மதகுருமார்களை நீங்கள் உற்றுநோக்கினால் இந்த உண்மை உங்களுக்கும் தெளிவாகத் தெரியும். நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள். அப்படியானால் மாற்றுமத மதகுருமார்களைப் போலவே முஸ்லிம் மதகுருமார்களும் ஒரே நேர்வழியை எண்ணற்ற கோணல் வழிகளாக்கி, மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாக-தொழிலாக ஆக்கியுள்ள இந்த முஸ்லிம் மதகுருமார்களின் உண்மை நிலை மறை பொருளாக இருக்கக் காரணம் என்ன?

காரணம் இதுதான்!
ஆம்! உண்மை இதுதான். இந்த மதகுருமார்கள் ஆதத்தின் சந்ததிகளான மனிதகுலத்திற்கே நேர் வழியைக் காட்டும் இறுதி நெறிநூல் அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அல்குர்ஆனில் எவ்வித உரிமையும் இல்லை. அவர்களுக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது என்று கூறி முதலில் முஸ்லிம் அல்லாத ஆதத்தின் சந்ததிகளை அல்குர்ஆனை விட்டும் தூரப்படுத்தி விட்டார்கள். முஸ்லிம் அல்லாதாரும் குர்ஆன் முஸ்லிம்களின் வேதம்(?); அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை எனப் புறக்கணிப்பதோடு, பொறாமை காரணமாக குர்ஆனை விமர்சிக்கவும் துணிகிறார்கள்.

அடுத்து சூழ்ச்சி மனதோடு என்ன செய்தார்கள் தெரியுமா? குருகுல மடங்களான மதரஸாக்களில் சில ஆண்டுகள் இலவசமாகத் தங்கி உண்டு, உறங்கி, சில காலம் செலவிட்டு புரோகிதக் கல்வி காகிதப் பட்டத்துடன் வெளிவருபவர்களே மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள். அவர்களே மார்க்கத்தில் உரிமை பெற்றவர்கள். மற்றபடி கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப் படிப்புகளில் அரபியை ஒரு மொழியாகத் தேர்ந்தெடுத்து அதில் பெரும் திறமையுடன் பல பட்டங்கள் பெற்றாலும் அவர்கள் ஆலிம்கள் அல்ல; அவர்களுக்கும் அல்குர்ஆன் விளங்காது என அப்பட்டமாகப் பொய் கூறி புருடா விட்டு அவர்களையும் ஆக முஸ்லிம்கள் அனைவரையும் குர்ஆனை விட்டுத் தூரப்படுத்தி விட்டார்கள்.

இந்த அவர்களின் அற்ப உலக ஆதாய சுயநலத்துடன் கூடிய துர்போதனை இன்றைய முஸ்லிம்களின் உள்ளங்களில் புரையோடிப் போய் இருக்கிறது. அல்குர்ஆனை நம்மால் விளங்க முடியாது. தங்க ளுக்குத் தெரிந்த மொழியிலுள்ள மொழி பெயர்ப்புகளைப் படித்தும் விளங்க முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையால் குர்ஆனைப் படித்துச் சிந்தித்து விளங்க முஸ்லிம்கள் முற்படுவதே இல்லை. அல்லாஹ் அல்குர்ஆன் 47:24ல் கூறுவது போல் தங்கள் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு மத குருமார்களான இந்த மவ்லவி ஆலிம்கள் கூறுவதை அப்படியே வேதவாக்காக(?) நம்பிச் செயல்படுகின்றனர் முஸ்லிம்கள். மேலும் கடந்த 1000 ஆண்டுகளாக முஸ்லிம்களின் முன்னோர்கள் மூதாதையர்கள் கடைபிடித்து வரும் மதச் சடங்கு சம்பிரதாயங்களே மறுமையில் வெற்றியை ஈட்டித் தருவன என்ற மூட நம்பிக்கையில் முழுமையாக மூழ்கியுள்ளனர் முஸ்லிம்கள். ஷைத்தான் ஆதத்தின் சந்ததிகளுக்கு மார்க்கம் பற்றி மட்டும் முன்னோர்கள் மூதாதையர்களைப் பின்பற்றியே நடக்க வேண்டும் என்ற நச்சுக் கருத்தை வலுவாக ஊட்டியுள்ளான். முஸ்லிம்களின் பெருங்கொண்ட கூட்டம் அல்லாஹ் 6:116ல் குறிப்பிடுவதுபோல் ஆதார மற்ற வெறும் யூகங்களையும், கற்பனைகளையுமே பின்பற்றுகின்றனர்.

யார் சபிக்கிறார்கள்? ஏன்?
இந்த நிலையில் இது காலம் வரை மனித குலத்தை அல்குர்ஆனை விட்டும் தூரப்படுத்தி, அவர்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்த்து வரும் மதகுருமார்கள், நாம் அவர்களின் சூழ்ச்சிகள் நிறைந்த கபட நாடகத்தை அல்குர்ஆன் வசனங்களைக் கொண்டே அம்பலப்படுத்துவதால், அவர்களின் உண்மையான சுய உருவை தோலுரித்துக் காட்டுவதால் அதைப் பொறுக்க முடியாமல் நம்மை சபிக்கிறார்கள்.

நாமும் அவர்களைப் போல் எமது சுய கருத்துக்களை மார்க்கமாகச் சொன்னால் நிச்சயம் அவர்களின் சாபம் பலிக்கும். நாமோ அல்லாஹ்வின் கலாம் அல்குர்ஆனிலிருந்தே வசனங்களை எடுத்து வைக்கிறோம். அந்த இறைவாக்குகளைப் பார்த்து இந்த மதகுருமார்கள் கொதித்து எழுந்தால் அதற்கு யார் பொறுப்பு? ஒவ்வொரு நபியின் காலத்திலும் இறை அறிவிப்புகள் எடுத்துக் காட்டப்படும் போது அந்தந்தக் காலத்து மதகுருமார்கள் கொதித் தெழுந்து அந்த நபியைச் சபித்தார்கள். சிலரைக் கொலையும் செய்தார்கள். இறுதி நபியவர்கள், அவர்களுக்கு இறைவனால் வஹி மூலம் அறிவிக்கப் பட்ட அல்குர்ஆன் வசனங்களை மக்களுக்குப் படித்துக் காட்டும்போது, அன்றைய மதகுருமார்களான தாருந்நத்வாவினரும், அதன் தலைவனும் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை என்று அவர்களால் புகழப்பட்ட அபூ ஜஹீலும் கொதித்தெழுந்து நபி (ஸல்) அவர்களைச் சபித்தார்கள். கடுந்துன்பங்களைக் கொடுத்தார்கள். கொலை செய்ய முற்பட்டார்கள். மக்காவை விட்டே விரட்டி அடித்தார்கள். இறுதியில் அந்த தாருந்நத்வா மத குருமார்களின் நிலை என்ன ஆயிற்று? முஸ்லிம்கள் அனைவரும் அறிந்த உண்மை.

அதேபோல் இன்று, இறுதி நபிக்கு இறக்கியருளப்பட்ட அல்குர்ஆன் வசனங்களையே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம். அதற்காக இந்த மதகுருமார்கள் எம்மைச் சபித்தால் அந்தச் சாபம் அவர்களை நோக்கித் திரும்புமே அல்லாமல் எம்மை அணுவளவும் பாதிக்காது. எமக்குக் கொலை மிரட்ட லும் விட்டார்கள். நாமோ அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட அல்குர்ஆனை ஒளிக்காமல், மறைக் காமல் உள்ளது உள்ளபடி எடுத்து வைக்காவிட்டால் நாம் நம்மீது விதிக்கப்பட்ட பணியைச் செய்தவனாக மாட்டோம். அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பான்(5:67) எமது அஜல் முன்னரே குறிக்கப்பட்டுவிட்டது. எமது ரிஜ்க்கும், பணியும் முடியு முன்னர், ஜப்பானில் முன்பு போடப்பட்ட அணுகுண்டே எம்மீது போடப் பட்டாலும் அல்லாஹ் எம்மை அற்புதமாகப் பாது காப்பான் என்ற உறுதியான நம்பிக்கை காரணமாக இவர்களின் கொலை மிரட்டல் எம்மை இப்பணியி லிருந்து பின்வாங்கச் செய்யவில்லை.
அப்படியே எமது அஜலில், சில நபிமார்கள் மதகுருமார்களால் கொல்லப்பட்டது போல், நாமும் இம்மதகுருமார்களால் கொல்லப்பட விதிக்கப்பட் டிருந்தால் அதை மாற்றி அமைக்கும் சக்தி எமக்கில்லை. 5:28,29 கூறுவது போல் என் பாவச் சுமையையும், அவர்கள் பாவச்சுமையையும் சுமந்து கொண்டு வரு வதையே நாம் விரும்புகிறோம்.

யார் வெறுக்கிறார்கள்? ஏன்?
அடுத்து இந்த மதகுருமார்களை நாம் தோலுரித்துக் காட்டுவதால் நம்மை வெறுப்பவர்கள் யார் தெரியுமா? தங்களுடைய உள்ளங்களுக்கு, அல்லாஹ் 47:24ல் சொல்லுவதுபோல் பூட்டுப் போட்டுக் கொண்டு, இந்த மதகுருமார்களை முழுமையாக நம்பி அவர்களின் போதனைகளைக் கண்மூடிப் பின்பற்றுகிறவர்கள். இந்த மதகுருமார்களிலும் பல பிரிவுகள் உண்டு அல்லவா? நேர்வழி மட்டும் தானே ஒன்றாக இருக்கும். வழிகேடுகள் அதாவது கோணல் வழிகள் பல இருக்கத்தானே செய்யும். இதையும் நபி(ஸல்) அவர்கள் 6:153 இறைவாக்கை மக்களுக்குப் படித்துக் காட்டி தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிரிவு மதகுருமார் பின்னாலும் ஒரு பெருங்கூட்டம் செல்லுவதற்கும், அவர்களை அளவு மீறி நம்புவதற்கும் ஒரு காரணம் இருக்கும். உதாரணமாக கபுரு வணங்கி மதகுருமார்களை நம்பி கபுரு வணக்கத்தில் மூழ்கி இருந்தவர்கள், கபுரு வணக்கத்தை எதிர்க்கும் மதகுருமார்களின் பேச்சில் மயங்கி கபுரு வணக்கத்திலிருந்து மீண்டு விட்டால், புதிய மதகுருமார்களை தங்களை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றிய ஆபத்பாந்தவனாக நம்பி அவர்களை கண்மூடிப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். அவர்களின் பேச்சுகள் அனைத்தையும் வேதவாக்காக(?) நம்பி அப்படியே எடுத்து நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இப்படியே தரீக்காக்களிலிருந்து, மத்ஹபுகளிலிருந்து விடுபட்டவர்கள் அதற்குக் காரணமான மத குருமார் பிரிவினரை ஆபத்பாந்தவனாக நம்பி அவர்களைக் கண்மூடிப் பின்பற்ற ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படி இந்த மதகுருமார்களை ஆபத்பாந்தவனாக, நேர்வழி காட்டிகளாக நம்பிச் செயல்படுகிறவர்களும் நாம் இந்த மதகுருமார்களைக் கடுமையாகச் சாடுவதைச் சகிக்க முடியாமல் எம்மை வெறுக்கின்றனர். இவர்களுக்கும் அல்குர்ஆனோடு நேரடித் தொடர்பு இல்லாத காரணத்தால், அல்குர்ஆன் வசனங்களையே நாம் எடுத்து வைத்தாலும் எமது சுய கருத்தைச் சொல்வதாக நினைக்கிறார்கள். அல்லது அல்குர்ஆன் நேரடியாகக் கூறும் கருத்துக்கள் பின்பற்ற வேண்டிய கருத்துக்கள் அல்ல; அதற்கு தாங்கள் நம்பியுள்ள மதகுருமார்கள் கொடுக்கும் சுய விளக்கக் கருத்தே பின்பற்ற வேண்டிய கருத்துக்கள் என நம்பி அவர்கள் நம்பும் மத குருமார்கள் சுயநலத்துடன் சொல்வதை அப்படியே முழுமையாக நம்பி நம்மை வெறுக்கிறார்கள்.

தர்கா, தரீக்கா, மத்ஹபுகளிலிருந்து விடுபட்டு, குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம். தவ்ஹீத்வாதி என பெருமையடிக்கும் இயக்கப் பிரிவினரும், குர்ஆன் கூறும் சரியான விளக்கத்தை மவ்லவிகள் மட்டுமே சொல்ல முடியும் என்ற குருட்டு நம்பிக்கையில் மூழ்கி இருப்பதை இன்று பார்க்கிறோம் அல்லவா? அவர்களும் மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்லும் முகல்லிதுகளே! தவ்ஹீத்வாதிகள் என்பதில் பொய்யர்களே! 2:159,161,162 இறை வசனங்களை படித்து விளங்காததால் இந்தப் பரிதாப நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். எனவே இப்படிப்பட்டவர்களின் வெறுப்பும் எம்மை ஒருபோதும் பாதிக்காது. நாமும் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

முகம் சுளிப்பவர்கள் யார்? ஏன்?
அடுத்து நாம் இந்த மதகுருமார்களை மிகக் கடுமையாக விமர்சித்து எழுதுவதைப் பார்த்து முகம் சுளிப்பவர்கள் யார் தெரியுமா? அவர்கள் கபுரு சடங்குகள், தரீக்கா சடங்குகள், மத்ஹபு சடங்கு கள், இயக்கப் பிரிவுகள் இவை அனைத்தையும் விட்டு விடுபட்டவர்கள். குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என ஒப்புக் கொண்டவர்கள். இக் கருத் தைச் சொல்லும் இதழ்களைப் பார்ப்பவர்கள்; இப்படிப்பட்டவர்களின் உரைகளைக் கேட்பவர் கள். குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாயளவில் சொல்லிக் கொண்டு, உலகியல் ஆதாயங்களைக் காட்டி சுய கருத்துக்களைப் புகுத்தி வழி கெட்ட இயக்கப் பிரிவுகளை நேர்வழியாகக் காட்டும் மதகுருமார்களின் மயக்கும் உரைகளையும் கேட்பவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இந்த மத குருமார்கள் மீது ஒரு பாசம் உண்டு.
எனவே நாம் ஒட்டுமொத்த மதகுருமார்களையும் எவ்வித வேறுபாடும் காட்டாமல் கடுமையாகச் சாடுவதைச் சகிக்க முடியாமல் முகம் சுளிக்கிறார்கள். இவர்கள் குர்ஆன், ஹதீஸ் கருத்தைச் சொல்லும் இதழ்களைப் படிக்கிறார்கள், உரைகளைக் கேட்கிறார்கள். அவை மூலம் பெறும் அறிவையே எல்லையாகக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி நேரடியாக குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் படித்துச் சிந்தித்து விளங்க முற்படுவதில்லை. அவர்கள் நேரடியாக குர்ஆனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் அல்லர். அதனால்தான் மார்க்கத்தில் எத்தனையோ கருத்துகள் சொல்ல வேண்டியிருக்க எப்போது பார்த்தாலும் புரோகிதம், புரோகிதம், புரோகிதர்கள், மதகுருமார்கள், மதகுருமார்கள் என்று ஓயாது அந்நஜாத்தில் எழுதப்பட்டு வருவதாகக் குறை காண்கிறார்கள்.

மனித விருப்பத்தை ஏற்றால்…?
அவர்கள் விருப்பப்படி நாமும் மதகுருமார்களை அடையாளம் காட்டுவதை விட்டு, மதகுருமார்கள் பாணியில் எழுத ஆம்பித்தால் அந்நஜாத்தின் விற்பனை அமோகமாக வளர்வதுடன், அந்நஜாத்தை தக்லீது செய்யும் ஒரு பெருங் கூட்டம் தான் உருவாகுமே தவிர அதாவது அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையில் அந்நஜாத்தைப் புகுத்தும் நிலை உருவாகுமே தவிர, நேர்வழியைப் பற்றிப் பிடிக்கும் நிலை உருவாகாது. எனவே இப்படிப் பட்டவர்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற நாம் முன் வரவில்லை. (பார்க்க 17:73-75)
அந்நஜாத்திலிருந்து வெளியேறிய மதகுருமார்களின் அவதூறு பிரசாரத்தினால் அந்நஜாத் சந்தாக்கள் சரிந்தது ஒரு பக்கம் என்றால், இப்படிப்பட்ட வர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முன் வராததால் இன்னொரு பக்கமும் சந்தாக்கள் சரிந்தன. ஆனால் நாம் மனம் தளரவில்லை. காரணம் நாம் அந்நஜாத் வெளியிடுவதை கெளரவமாக, தொழிலாகக் கொள்ளும் துர்பாக்கிய நிலையை அல்லாஹ் எமக்குத் தரவில்லை. அந்நஜாத்தை எமது வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருந்தால் எமக்கு இந்த அசாத்தியத் துணிச்சலும், மனோ உறுதியும் வந்திருக்குமா என்பது சந்தேகமே! நிர்பந்த நிலையில் கொள்கையில் வளைந்து கொடுக்கும் கட்டாயம் எமக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபை!
ஆனால் அல்லாஹ் தனது தனிப் பெரும் கிருபையைக் கொண்டு 1955ல் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போதே கடிகாரம் போன்ற கருவிகளை சுயமாக அவை செயல்படுவதைப் பார்த்தே அவற்றின் பழுதுகளை நீக்கும் ஆற்றலைத் தந்தான். எந்த குருவிடமும் போய் தொழில் கற்காமல் படிப்படியாக வீட்டு உபயோகப் பொருள்களில் பலவற்றை செப்பணிடும் ஆற்றலையும் அல்லாஹ் தந்தான். அவனது அருளால் பொருளீட்டும் சில கைத்தொழில்களை நாம் கொண்டிருந்ததால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளும் பரிதாப நிலை எமக்கு ஏற்படவில்லை. அதனால் பெரும்பான்மை மக்களின் விருப்பங்களை நிர்பந்தம் காரணமாக ஒப்புக்கொள்ளும் ஆபத்தான நிலையை விட்டும் அல்லாஹ் எம்மைப் பாதுகாத்தான்.

குர்ஆனுடன் நேரடி தொடர்புடையோரின் விருப்பம்!
அந்நஜாத்தையோ எம்மையோ தக்லீது செய்யாமல் அந்நஜாத்தில் எழுதப்படும் குர்ஆன் வசனங்களை நேரடியாகவே அல்குர்ஆனில் ஒப்பிட்டுப் பார்ப்பதோடு, வெறும் அத்தியாய, வசன எண்களை மட்டும் குறிப்பிட்டிருந்தாலும் சிரமம் பாராமல் உடனுடன் குர்ஆனை எடுத்து சம்பந்தப்பட்ட வசனங்களை நேரடியாகப் படித்து, சிந்தித்து, விளங்கி அதன்படி நடக்க முன்வந்தவர்கள் மட்டுமே, அதாவது 7:3 இறைக் கட்டளைப்படி அல்குர்ஆனுடன், ஹதீஸுடன் நேரடித் தொடர்பு டையவர்கள் மட்டுமே இந்த மதகுருமார்களின் கேடுகெட்ட நிலையை, இந்த வானத்தின்கீழ் அவர்களை விட கேடுகெட்ட ஒரு ஜென்மம் (பார்க்க 7:175-179) இல்லை என்பதைச் சந்தேகமில்லாமல் அறிந்து கொண்டு, அந்நஜாத் இம் மதகுருமார்களை விமர்சிப்பது போதாது; இன்னும் அதிகமாக அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்கிறார்கள்.

ஆக, அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் தரகர்களாகப் புகுந்துள்ள இந்த மதகுருமார்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி, அவர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுவிக்க அயராது பாடுபடுவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. ஆம்! மனித குலமே இவர்களிடம் சிக்கி அழிவின் விளிம்பில், நரகின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது.

அல்லாஹ் அருள்புரிந்தோர் மட்டுமே நேர்வழி பெறுவர்!
ஆயினும் மக்கள் அனைவரையும் இந்த மதகுருமார்களின் பிடியிலிருந்து விடுவிப்பது சாத்தியமே இல்லை. ஏனென்றால் ஜின், மனித இனத்தைக் கொண்டு நரகத்தை நிரப்புவோம் என்ற வார்த்தை முந்திவிட்டது; அந்த வார்த்தை நிறைவேறியே தீரும் என்று அல்லாஹ் கூறி இருக்கிறான். (பார்க்க 32:13, 11:118,119) ஆயினும் அல்லாஹ் அருள் புரிந்த சொற்பமானவர்கள் இந்த மதகுருமார்களின் பிடியிலிருந்து விடுபடுவார்கள், கடலிலிருந்து எடுக்கப்படும் கோடிக்கணக்கான சிப்பிகளில் ஒரு சிலவற்றில் மட்டும் முத்துகள் இருப்பதுபோல். அந்த முத்தான மனிதர்கள் யார் என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளான். (பார்க்க. 2:2-5, 3:31, 102, 103, 6:153, 7:3, 33:21, 36, 39:17,18) 39:17 குறிப்பிடும் தாஃகூத் இந்த மதகுருமார்கள்தான். 9:31 இந்த மதகுருமார்களைக் கண்மூடிப் பின்பற்றுவதுதான் அவர்களை ரப்பாக ஆக்கி அவர்களை வணங்குவது என எச்சரிக்கிறது. இப்படி எண்ணற்ற இடங்களில் அல்லாஹ் உள்ளங்கை நெல்லிக்கனியாக, குன்றிலிட்ட தீபமாக விளக்கி இருந்தாலும் மக்களில் பெருங்கூட்டம் இந்த மதகுருமார்கள் பின்னால் தான் செல்லும்.

2:186, 7:3 இறைக் கட்டளைகள்படி அல்லாஹ்வை முற்றிலும் நம்பி இடைத்தரகர்கள் இல்லாமல், 3:103 இறைக் கட்டளைப்படி குர்ஆனை நேரடியாகப் பற்றிப் பிடித்தவர்கள் நேர்வழி பெறுகிறார்கள். அல்லாஹ்வை நம்பாமல் இந்த மதகுருமார்களான மவ்லவிகளை நம்பி அவர்கள் பின்னால் செல்பவர்கள் ஒரு போதும் நேர்வழியைப் பெறப் போவதில்லை.

காரணம் என்ன?
இதற்கும் காரணம் இருக்கிறது. மனிதகுலத் தந்தை ஆதத்திற்கு அல்லாஹ் இட்டக் கட்டளை குறிப்பிட்ட ஒரு மரத்தை நெருங்கக் கூடாது என்பதாகும். ஷைத்தான் உமக்கும் உமது சந்ததிகளுக்கும் பகிரங்க விரோதி; அவனுக்கு ஒருபோதும் வழிபடாதீர் என்று கடுமையாக எச்சரித்தும் இருந்தான். (பார்க்க 2:35, 7:12-25)

ஆயினும் ஆதம்(அலை) ஷைத்தானின் சூன்ய பேச்சில் மயங்கி அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்துப் பாவியானார். ஆனால் அல்லாஹ் தனது கட்டளையை நினைவூட்டியவுடன் தனது தவறை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். அல்லாஹ் மன்னித்தான். (பார்க்க: 7:23,24) அதற்கு மாறாக அல்லாஹ்வின் கட்ட ளைக்கு அடிபணிந்து ஆதமுக்கு சுஜூது செய்ய மறுத்ததை அல்லாஹ் நினைவுபடுத்திய பின்னரும் ஷைத்தான் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்காமல் தனது செயலை நியாயப்படுத்தினான். (பார்க்க: 7:12-18) அதனால் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்கு ஆளானான். ஆதம் மன்னிப்புக் கேட்டார், மன்னிக்கப்பட்டார். ஷைத்தான் மன்னிப்புக் கேட்க மறுத்தான், நரகவாதியானான்.

இதையே நபி(ஸல்) அவர்கள்,
ஆதம் தவறு செய்தார்; ஆதத்தின் சந்ததிகளும் தவறு செய்கிறவர்களே. தவறு செய்கிறவர்களில் சிறந்தவர்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்ப வர்களே! என்று அறிவுரை கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் மன்னிப்புக் கேட்பதை விரும்புகிறான்!
எனவே தவறு செய்வது மனித சுபாவம். ஆயினும் அத்தவறுகள் இறைவனின் இறுதி நெறிநூல் மூலம் சுட்டிக்காட்டப்பட்டால் ஆதம்(அலை) போல் உடனே அதை ஏற்று அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். மன்னிப்புக் கேட்பதை அல்லாஹ் விரும்பி அவர்களை நேசிக்கிறான். அதற்கு மாறாக மனிதர்கள் குறிப்பாக மதகுருமார்கள் செய்யும் தவறுகள் குர்ஆன் வசனங்களைக் கொண்டு சுட்டிக் காட்டப்பட்டால் ஷைத்தானைப் போல் தங்களின் சுய விளக்கங்களைச் சொல்லி அத்தவறுகளை நியாயப்படுத்தி அந்த இறை வசனங்களைப் புறக்கணித்து நிராகரித்தால் அவர்களுக்கும் ஷைத்தானின் கதியே ஏற்படும் என்பதில் ஐயமுண்டா?

இப்போது இந்த தாஃகூத்களான மதகுருமார்கள் ஆதம்(அலை) அவர்களைப் பின்பற்றுகிறார்களா? ஷைத்தானைப் பின்பற்றுகிறார்களா? என்று இந்த இறைவாக்குகளை நேரடியாகப் படித்து சிந்தித்து நீங்களே விளங்க முற்படுங்கள். 29:69 இறைவாக்குப்படி நிச்சயம் அல்லாஹ் முயலுகிறவர்களை தனது நேர்வழியில் செலுத்துகிறான்.

2:38:39, 5:3, 3:19,31,85,102,103,105,110, 6:103, 153,159, 7:3, 33:21,36, 21:92, 23:52, 7:55,205, 12:108, 30:32, 42:13, 14,21, 6:90 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23, 36:21, 52:40, 68:46, 2:41, 79, 3:78, 187, 188, 4:44,46, 5:41,63, 6:21,25,26, 9:9,10,34,11:18,19, 31:6, 2:75,78,79,109,146, 6:20, 5:13, 2:174, 2:159,160,161,162, 2:188, 4:112, 33:66,67,68, 7:175-179, 4:49, 53:32, 2:90,213, 10:90, 45:17, 4:119-121, 7:14-18, 8:48, 14:22, 15:36-43, 16:63, 17:62-65, 22:34,53, 26:221,222, 35:6, 38:79-86, 58:19, 22:78, 41:33, 49:14, 2:8-20, 49:16, 59:7 இன்னும் பல இறை வாக்குகள் இருக்கின்றன. மலைப்பு ஏற்படாதிருக்க இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்.

யாரும் சோம்பல் படாமல் ஆர்வத்துடன் விடா முயற்சியாக மேலே எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்களைப் பொறுமையாக, நிதானமாக, சுய சிந்தனையுடன் தங்கள், தங்கள் மொழியிலுள்ள குர்ஆன் வசனங்களைப் படித்து விளங்க முயற்சிப்பார்களாயின், பாடுபடுவார்களாயின் அல்லாஹ் 29:69ல் வாக்களித்துள்ளபடி இந்த மதகுருமார்களின் திருட்டுத்தனத்தையும், தில்லுமுல்லுகளையும், அறிவீனங்களையும், தற்பெருமை, அகங்காரம் இவை அனைத்தையும் நிச்சயம் புரிய வைப்பான்.

தங்களுக்கு குர்ஆனை விளங்கும் அளவுக்கு அறிவு இல்லை; அரபி ஞானம் இல்லை; பல கலைகளில் தேர்ச்சி இல்லை; பொறுமையாக உட்கார்ந்து குர்ஆனைப் படித்துச் சிந்தித்து விளங்க நேரமில்லை போன்ற நொண்டிக் காரணங்களைச் சொல்லிக் கொண்டு, மதகுருமார்கள் சொல்வதுதான் வேத வாக்கு(?); அவற்றிற்கு ஈடு இணை இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையுடன் 47:24ல் அல்லாஹ் கூறு வதுபோல் தங்கள் உள்ளத்திற்குப் பூட்டுப் போட்டுக் கொண்டவர்கள் நேர்வழியை ஒரு போதும் அறியமுடியாது. அப்படிப்பட்டவர்கள்தான் உலகில் மிகமிக அதிகம் என்பதை அல்குர்ஆனை தொடர்ந்து பொருள் அறிந்து படிப்பவர்கள் அறியமுடியும்.
ஆம்! கடலிலிருந்து வெளியே எடுத்து உடைத்துப் பார்த்து முத்து இல்லை என அறியப்பட்டு எறியப்பட்டு அம்பாரமாக குவிக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான வெற்றுச் சிப்பிகள் போன்றவர்கள். வெற்றுச் சிற்பிகள் நெருப்பில் பொசுக்கப்பட்டு சுண்ணாம்பாக ஆக்கப்படுவது போல் இவர்களும் 33:66,67,68 இறைவாக்குகள் கூறுவது போல் நாளை மறுமையில் நரக நெருப்பில் கிடந்து வெந்து கொண்டு இம்மதகுருமார்கள் பற்றிய ஞானம் வந்து அவர்களை சபிக்கவும், அவர்களுக்கு இரு மடங்கு வேதனை கொடுக்கும்படி அல்லாஹ்விடம் முறையிடவும் முற்படுவார்கள். ஆயினும் அவர்களின் இந்த கூப்பாடு அவர்களுக்கு அணுவளவும் லாபம் தராது.

இவ்வுலகில் மதகுருமார்களுக்குரிய ஒரே சாதகமான சூழ்நிலை இவ்வுலக ஆதாயங்களையே குறிக்கோளாகக் கொண்ட அவர்களுக்குப் பின்னால் நரகை நிரப்ப இருக்கும் பெருங் கொண்ட மக்கள் அணிவகுப்பது தான். இவ்வுலகில் இந்த மதகுருமார்கள் விரும்பும் பட்டம், பதவி, பேர், புகழ், ஆள் அம்பு, பணம் காசு இவை அனைத்தும் தாராளமாகவே கிடைக்கும். ஆனால் மறுமையில் இம்மத குருமார்களையும், அவர்க ளைக் கண்மூடிப் பின்பற்றிய பெருங்கொண்ட மக்களையும் நரகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்பதை கீழ்க்கண்ட இறைவாக்குகள் மூலம் நினைவூட்டுகிறோம். 43:33-45, 38:55-64, 70-88, 33:66-68, 47:25-28, 34:31-33, 37:27-33, 40:47-50, 41:29.

மதகுருமார்களின் இன்னொரு பித்தலாட்டம்!
முஸ்லிம் மதகுருமார்கள் தங்களின் பக்தர்களை இன்னொரு வகையில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அல்குர்ஆனில் காஃபிர்-நிராகரிப்பாளர் என்று வரும் வசனங்கள் அனைத்தும் இன்று உலகில் இஸ்லாத்தை ஏற்காமல் காஃபிர் நிலையில் இருப்பவர்கள் பற்றியதாகும். முஸ்லிம்களை அந்த வசனங்கள் கட்டுப்படுத்தா எனக் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப் பார்த்தால் ஆதம்(அலை) முஸ்லிம்; நபியும் கூட. எனவே அவரது மக்கள் அனைவரும் முஸ்லிமாகத்தானே ஏற்கப்பட வேண்டும். ஏன் ஏற்கப்படுவதில்லை? உண்மை என்ன? உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இஸ்லாத்தில்தான் பிறக்கின்றன. அப்படி பிறந்த குழந்தைகள், அவர்கள் முஸ்லிம்களுக்குப் பிறந்திருந்தாலும், காஃபிர்களுக்குப் பிறந்திருந்தாலும், அவர்கள் வளர்ந்து பருவமடைந்த பின்னர், குர்ஆனின் கட்டளைப்படி வாழ்ந்தால் அவர்கள் இவ்வுலகிலும் முஸ்லிம்கள்; மறுமையிலும் முஸ்லிம்களாக ஏற்கப்படுவார்கள்.

முஸ்லிம் குடும்பத்திலே பிறந்து வளர்ந்து பருவ மடைந்த பின்னர் குர்ஆனின் கட்டளைகளுக்கு முரணாக நடந்தால், இவ்வுலகில் அவர்கள் முஸ்லிம்களாகக் கணக்கிடப்பட்டாலும் நாளை மறுமையில் அவர்கள் நிராகரிப்பாளர்கள்தான். நரகத்திற்குரிய வர்கள்தான்.
எனவே இவ்வுலகில் முஸ்லிம்களாக இருந்தா லும், குர்ஆனின் நேரடிக் கட்டளைகளை நிரா கரித்து, இம்மதகுருமார்களின் சுயநலக் கருத்துக் களை வேதவாக்காக(?) எடுத்து நடப்பவர்கள் நாளை நரகை நிரப்புபவர்களே! (பார்க்க 33:66,67,68)

முஸ்லிம் மதகுருமார்களின் மிகத் தவறான வாதம்:
மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், ஷேக்கு கள், உலமாக்கள் எனத் தங்களுக்குத் தாங்களே பெருமையாகப் பெயர் சூட்டிக் கொண்ட முஸ்லிம் மதகுருமார்கள், தங்களுக்கு இஸ்லாமிய மார்க்கத் தில் அதிகாரம் உண்டு என்பதை நிலைநாட்ட அல்குர்ஆனிலிருந்து ஒரேயொரு வசனத்தையோ, அல்லது ஒரேயொரு ஆதாரபூர்வமான ஹதீஸையோ எடுத்துக் காட்டுவதில் தோல்வியுற்று வேறு வழியில்லாமல் இறுதியில் இதர மதங்களிலுள்ள மத குருமார்களை ஆதாரம் காட்டி முஸ்லிம்களுக்கு நாங்கள் தான் மதகுருமார்கள் என்ற வாதத்தை வைக்கின்றனர்.

அதாவது இந்துக்களுக்கு மடாதிபதிகளும், சந்நிதானங்களும், சுவாமிகளும் மதகுருமார்களாக இருப்பது போல், கிறித்தவர்களுக்கு போப், , பாதிரிகள் போன்றோர் மதகுருமார்களாக இருப்பது போல், பெளத்த மதத்தினருக்கு ஆமுதுருக்கள் மத குருமார்களாக இருப்பது போல், இப்படி உலகிலுள்ள அனைத்து மதத்தினருக்கும் மதகுருமார்களே வழிகாட்டிகளாக இருப்பது போல், முஸ்லிம்களுக்கு ஆலிம்களாகிய நாங்கள் மத குருமார்களாக இருந்து இறைவனை அடைய வழிகாட்டுகிறோம் என்கின்றனர். இந்த அவர்களது வாதத்திலும் அவர்களது அறிவீனமே வெளிப்படுகிறது. அனைத்து மதங்களும், மனிதக் கற்பனையில் உருவானவையே; இறைவனுக்கு இறைத் தூதர்களையும், இதர மனிதர்களையும் இணையாக்கி பல தெய்வ வழிபாட்டை கற்பனை செய்து கற்பனைச் சிலைகளை வடித்து கோடானு கோடி பொய்த் தெய்வங்களைக் கற்பித்து அவர்களது பக்தர்களை இறைவனுக்கு இணை வைக்கச் செய்து நரகில் தள்ளுகிறார்கள் என்பதில் முஸ்லிம் மதகுருமார்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?

அப்படியானால், அவர்களைப் பின்பற்றி நாங்களும் இணை தெய்வங்களை கற்பனை செய்து இணை துணை இல்லாத அல்லாஹ்வுக்கு இணை வைக்கச் செய்து இதர மதகுருமார்களைப் போல் நாங்களும் முஸ்லிம்களை நரகில் தள்ளுகிறோம் என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்களா?

உலகியல் துறைகளின் குருமார்களை ஆதாரம் காட்டும் அறிவீனர்கள்!
இந்த மதகுருமார்களின் வாதங்கள் அனைத்தும் மண் மூடிப்போன பின்னர், இறுதியாக உலகியல் துறைகளிலுள்ள மருத்துவர், பொறிஞர், வழக்குரைஞர் போன்ற துறைகளில் படித்துப் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் என்ற குருமார்கள் இருப்பது போல், அங்கு படித்துப் பட்டம் பெற்றவர்களே அத்துறைகளில் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பது போல், நாங்கள் மதத் துறையில் படித்துப் பட்டம் பெற்று முஸ்லிம் மதத்தில் அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறோம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இங்கும் அவர்களின் அறிவீனமே வெளிப்படுகிறது. இத்துறைகள் முழுக்க முழுக்க உலகம் சம்பந்தப்பட்டவை. மக்கள் அனைவரும் அத்துறைகளில் படித்து அறிவு பெற வேண்டும் என்ற கட்டாயமில்லை. மக்களில் 5% அத்துறைகளில் படித்துப் பட்டம் பெற்றால் போதும். எஞ்சிய 95% மக்களின் அத்துறைகள் சம்பந்தப்பட்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்ய முடியும்.

அது மட்டுமல்ல; அந்த 5% அறிஞர்களின் திறமை, திறமை இன்மை அனைத்தையும் இவ்வுலகிலேயே அனுபவத்திலேயே கண்டறிந்து திறமையற்ற அந்த உலகியல் அறிஞர்களிடமிருந்து விடுபட முடியும். எனவே அவர்களது பட்டத்தை வைத்து அவர்கள் பொருளீட்டவும் அவர்களுக்கு அனுமதி உண்டு.

ஆனால் மார்க்கத்துறை உலகியல் துறைகள் போன்றல்லவே. 5% மட்டும் மார்க்கம் தெரிந்தவர்களாக இருந்தால் போதும் என்ற நிலை இங்கு இல்லையே! 100% முஸ்லிம்களும் மார்க்கம் கற்று மார்க்க அறிவுடையவர்களாக இருப்பது கட்டாயக் கடமையாயிற்றே. மார்க்கத்தைப் பொறுத்த மட்டிலும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கக் கூடாது என்றும் ஒருத்தரை ஒருத்தர் காப்பி அடிக்கக் கூடாது; இவ்வுலக வாழ்க்கை பரீட்சை வாழ்க்கை என்று குர்ஆன் கூறுகிறதே (67:2) மேலும் மதகுருமார்கள் எனத் தம்பட்டம் அடிக்கும் இவர்கள் கூறுவது சரியா? தவறா? என இவ் வுலகில் அறிய முடியாதே! மரணித்து மறுமையை அடைந்த பின்னரல்லவா தெரிய வரும். அதனால் மதகுருமார்கள் மதத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதும் கடுமையாக அல்குர்ஆனில் தடுக்கப்பட்டுள்ளதே. எனவே மதகுருமார்களின் இந்த வாதமும் தவறானதே!

மூட முல்லாக்கள் எனக் கூறுவது தவறா?
நாம் இந்த மதகுருமார்களை மூட முல்லாக்கள் என்று கூறுவதை அவர்களும் அவர்களது பக்தர்களும் மிகக் கடுமையாக ஆட்சேபிக்கிறார்கள். அல்குர்ஆனின் ஆதாரமில்லாமல் எதையும் நாம் கூறுவதில்லை. அல்குர்ஆன் 3:154, 5:50, 6:35, 7:199, 11:46, 12:33,89, 25:63, 28:55, 33:33, 39:64, 48:26 இந்த இறைவாக்குகளை நீங்களே நேரடியாகப் படித்தப் பாருங்கள். அல்லாஹ்வின் வழிகாட்ட லுக்கு மாறான கருத்துக்கள் அனைத்தும் மூடத் தனமான கருத்துக்களே என்பதை நீங்களே விளங்கிக் கொள்வீர்கள். அவற்றில் 39:64 என்ன கூறுகிறது என்று பாருங்கள்.

“”மூடர்களே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (39:64)

இப்போது சிந்தியுங்கள் 7:3, 33:36 இன்னும் இவை போல் அல்லாஹ்வுக்கு மட்டுமே வழிபட்டு, அவனது வழிகாட்டல்படியே நடக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பல இறைவாக்குகளை நிராகரித்து புறக்கணித்துவிட்டு, உல மாக்கள், இமாம்கள், அவுலியாக்கள், ஸலஃபுகள் போன்ற சாதாத்துகளின் அகாபிரீன்களின் வழிகாட்டல்படி, அவர்கள் கூறிய மார்க்க விளக்கப்படிதான் நடக்க வேண்டும், 9:31ல் அல்லாஹ் கூறுவது போல் அவர்களையே ரப்புகளாக்கி வழிபட வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை கூறும் இந்த மத குருமார்கள் மூடர்களா? அறிவுள்ளவர்களா?

இப்படிப் போதித்த தாருந்நத்வா மதகுருமார்களையும், அவர்களின் தலைவனும், “”அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை” என்று அந்த மக்களால் போற்றப்பட்டவனான மதகுருவையும் நபி(ஸல்) அவர்கள், மூடர்கள், மூடர்களின் தலைவன்-அபூ ஜஹீல் என்று அடையாளம் காட்டி இருப்பது ஆதாரமில்லையா?  இதற்கெல்லாம் மேலாக இந்த மதகுருமார்கள் அவிழ்த்து விடும் முல்லாக்கதை இந்த உண்மையைப் படம் பிடித்து காட்டுவது நீங்கள் அறியாததா?

அந்த முல்லா சாவியைத் தொலைத்து விட்டு, தெரு விளக்கின் அடியில் அதைத் தேடிக் கொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற ஒருவர் சாவி தொலைந்து விட்டதாக முல்லா சொன்னதைக் கேட்டவுடன் அவரும் முல்லாவுடன் சாவியைத் தேட ஆரம்பித்தார். சாவி கிடைக்கவே இல்லை. இறுதியில் அவர் முல்லாவிடம் சாவியை எந்த இடத்தில் தொலைத்தீர் என்று கேட்க, முல்லா பொறுமையாக வீட்டு முற்றத்தில் தொலைத்தேன் என்று பதில் கூறினார். வந்த நபர் ஆத்திரப்பட்டு, வீட்டில் தொலைத்து விட்டு, தெருவில் சாவியைத் தேடினால் கிடைக்குமா? என்று கேட்க, முல்லா பொறுமையாக வீட்டில் வெளிச்சம் இல்லை; இங்குதானே தெரு விளக்கு வெளிச்சம் இருக்கிறது என்று பதில் கூறினாரே பார்க்கலாம்.

இது அவர்கள் சொல்லும் கதை. அந்த முல்லாவின் மூடத்தனமும் நமக்குப் புரிகிறது. அதே போல்தான் இந்த மதகுருமார்களும் இறுதி நெறிநூல் அல்குர் ஆனில் தேட வேண்டிய சட்டங்களை, குர்ஆனை விட முன்னோர்களின் விளக்கங்களே தெளிவாக-வெளிச்சமாக இருக்கிறது என்று கூறி இமாம்கள், சாதாதுகள், அகாபிரீன்கள், ஸலஃபுகள் போன்றோரின் சுய கருத்துகள் நிறைந்த பிக்ஹு நூல்களிலும், குர்ஆன் தஃப்ஸீர்களிலும், ஹதீஸ் தஃப்ஸீர்களிலும் மார்க்கத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நேர்வழி என்ற சாவி கிடைக்குமா? ஒரு போதும் கிடைக்காது. இவர்களை மூட முல்லாக்கள் என்று கூறுவதில் தவறு உண்டா சொல்லுங்கள். இன்று உலகம் அனைத்து அட்டூழியங்கள், அநியாயங்கள், பஞ்சமா பாவங்கள் அனைத்திலும் மூழ்கி அழிவின் விளிம்பில், நரக விளிம்பில் நிற்பதற்கு இந்த மதகுருமார்களே முழுமுதல் காரணம் என்பதில் ஐயமுண்டா?

நபிமார்களுக்கு மட்டும்தான் மார்க்கப்பணிக்கு கூலி ஹராமா?
இந்த மதகுருமார்கள் அல்லாஹ் அல்குர்ஆனில் நேரடியாகக் கூறி இருப்பதைப் பொருட்படுத்த மாட்டார்கள். தங்கள் மனம்போன போக்கில் சுய விளக்கங்கள் கூறி அந்த இறைவாக்குகளை நிராகரிப்பார்கள் என்று நாம் கூறி வருகிறோம். எமது கூற்று உண்மைதான் என்பதற்கு ஒரு மன்பஈ ஒரு மாத இதழில் ஆதாரம் தந்துள்ளார். அவர் கூறுகிறார்:

26:109,127,145,164,180, 10:72, 6:90 இறைவாக்குகளில் நபிமார்கள் மக்களிடம் கூலி கேட்கவில்லை; அல்லாஹ்விடமே மறுமையில் கூலியை எதிர் பார்த்து மார்க்கப்பணி புரிவதாக பிரகடனப்படுத்தியது நபிமார்களை மட்டுமே கட்டுப்படுத்தும். மத குருமார்களைக் கட்டுப்படுத்தாது என்கிறார். அதற்கு அவர் கூறும் சுயவிளக்கம் வருமாறு:

“”அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்துரைக்க நபிமார்கள் செய்த பிரசாரமும், மார்க்கக் கல்வியைக் கற்றுத்தர ஆசிரியர் பணி செய்வதும் வெவ்வேறானது” என்று தனது சுய கருத்தை எழுதியுள்ளார்.

முன்னர் தமிழக நவீன இமாம்(?) இடம், பள்ளியில் அவர்கள் முஷ்ரிக்; அரசியல் கூட்டங்களுக்கு அவர்கள் முஸ்லிம்கள் என முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறீர்களே இது சரியா எனக் கேட்டதற்கு, “”பள்ளியில் முஷ்ரிக் என்பதும் அரசியலில் முஸ்லிம் என்று அவர்களது உரிமைகளைப் பெற்றுத்தருவதும் வெவ்வேறானது” என்று கூறினாரே அதே பாணியில்தான் இவரது சுய விளக்கமும் அமைந்துள்ளது.

இப்போது மன்பயீயின் சுய விளக்கம் எந்த அளவு குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகிறது என்பதை நீங்களே 62:2 இறைவாக்கை நேரடியாகப் படித்து விளங்க முடியும். முஸ்லிம்களுக்கு முதல் ஆசிரியரே நபி(ஸல்) அவர்கள்தான். மன்பயீ சொல்வது போல் அவர்கள் வெறும் மார்க்கத்தை எடுத்துரைக்கும் பிரசாரம் மட்டும் செய்யவில்லை. முஸ்லிம்களுக்கு தலைசிறந்த ஆசிரியராகவும் இருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தவில்லையா? 62:2 மட்டுமல்ல 2:129, 151, 3:164 இறைவாக்குகளும் நபி(ஸல்) மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் தலைசிறந்த ஆசிரியராக இருந்தார்கள். ஆயினும் தாங்கள் செய்த ஆசிரியப் பணிக்கு மக்களிடம் கூலி கேட்கவில்லை; சம்பளம் வாங்கவில்லை என்பதை நெற்றிடியாகக் கூறவில்லையா? மன்பயீயின் கூற்று எவ்வளவு அபத்தமானது; 2:159 சொல்வது போல் அல்லாஹ் மனிதர்களுக்காக தெள்ளத் தெளிவாக நேரடியாகக் கூறி இருப்பதை மறைக்க மன்பயீ முற்பட்டிருக்கிறார் என்பது புரிகிறதல்லவா?

அது மட்டுமல்ல, மார்க்கப் பணிக்கு, மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியப் பணிக்கு கூலி வாங்கக் கூடாது என்று கூறும் இவ்வசனங்களை உறுதிப்படுத்திச் சொல்லும் அஃதர்களையும், விளக்கங்களையும் புறந்தள்ளிவிட்டு, இந்த இறைக் கட்டளைகளுக்கு முரணாகச் சொல்லும் முன்னோர்களின் சுய விளக்கங்களைத் தூக்கிப் பிடிக்கிறார் மன்பயீ. 2:134, 141 இறைவாக்குகளை அவர் கண்டுகொண்டதாகவோ, பொருட்படுத்தியதாகவோ தெரியவில்லை.

மதகுருமார்கள் அவர்கள் எப்பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அல்குர்ஆன் நேரடியாகச் சொல்வதையோ, ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் நேரடியாகச் சொல்வதையோ கண்டு கொள்ள மாட்டார்கள். குர்ஆன் வசனங்களுக்கு, ஹதீஸ்களுக்கு இவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்கள், 2:159 சொல்வது போல் வளைத்து, திரித்து, மறைத்துக் கொடுக்கும் சுய விளக்கங்களையே பெரிய ஆதாரமாகத் தருவார்கள் என்று நாம் குற்றப் படுத்துவதை மன்பயீ உண்மைப்படுத்தியுள்ளார்.

இந்த அடிப்படையில்தான் விஷத்தை இறக்கியதுக்காக மருத்துவ அடிப்படையில் கூலியாக கொடுத்ததையும், நிர்பந்த நிலையில் சில வசனங்களைக் கற்றுக் கொடுப்பதை மஹராகக் கொடுத்ததையும் பெரிய ஆதாரமாகக் காட்டி, எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக சுய விளக்கம் கொடுக்கப்பட்டதை ஆதாரமாகக் காட்டி கூலி-சம்பளம் வாங்குவதை நியாயப்படுத்தியுள்ளார் மன்பயீ. ஆம்! அல்குர்ஆன் 36:21 சொல்வது போல் கூலி வாங்காமல் பணி புரிகிறவர்களே நேர்வழியில் இருக்க முடியும். கூலி வாங்குகிறவர்கள் நேர்வழியில் இல்லை என்பதை மன்பயீ உறுதிப்படுத்தியுள்ளார்.

கூலி-சம்பளத்திற்காக மார்க்கத்தை வளைப்பது தான் குற்றம் என்று கூலி வாங்குவதால் விளையும் தில்லுமுல்லுகளைக் கூறும் குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுத்துள்ளார். கூலிக்காக 21:92, 23:52 இறைக்கட்டளைகளுக்கு முரணாக ஆலிம்-அவாம் என சமுதாயத்தைப் பிளவுபடுத்துவது குற்றமில்லையா? 4:49, 53:32 இறைக் கட்டளைகளுக்கு முரணாக ஆலிம்-மார்க்கம் கற்றவர் என பெருமை பேசுவது குற்றமில்லையா? குருகுல மடமான மதர ஸாவில் படித்துப் பட்டம் பெறாதவர்கள் அவாம்கள் என இழிவுபடுத்துவது குற்றமில்லையா? உண்மையை மறைப்பவனும், மற்றவர்களை இழிவாக நினைப்பவனும் சுவர்க்கம் நுழைய முடியாது என்று நபி(ஸல்) எச்சரித்திருப்பது மதகுருமார்களுக்கு உறைக்காதா?

முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, மனித குலததின் சாபக்கேட்டிற்கும், சீர்கேடுகளுக்கும், சீரழிவுகளுக்கும் முழுமுதல் காரணம் இந்த முஸ்லிம் மதகுருமார்களே. 3:139படி பயமோ துக்கமோ இல்லாமல் உலகை வழிநடத்திச் செல்ல பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட முஸ்லிம்கள், இன்று நாத்திகர்கள் பின்னாலும், பொய்க் கடவுள்களை வணங்குப வர்கள் பின்னாலும் செல்ல முஸ்லிம் மதகுருமார்களே காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். இவர்களது உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டால் மட்டுமே சமுதாயம் 3:139, 24:55 இறைவாக்குகள் கூறும் உன்னத நிலையை அடைய வழி பிறக்கும். அல்லாஹ் அருள் புரிவானாக!

Previous post:

Next post: