தொடர்:34 அபூஅப்திர் ரஹ்மான்
என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
சென்ற இதழில் தொழுகையில் இடம் பெற்றுள்ள தொழுகையை “முறித்துவிடும் காரியங்கள்” எனும் தலைப்பில் “மறதியின்றி வேண்டுமென்றே பேசுதல்” எனும் தொடர் வருமாறு;
*நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் இருக்கும்போது அவர்களுக்கு “ஸலாம்” கூறிக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள் பதில் கூறிக்கொண்டும் இருந்தார்கள். பின்னர் நஜ்ஜாஷி அரசரிடமிருந்து நாங்கள் திரும்பி வந்தபோது, நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினோம். ஆனால் அவர்கள் அதற்கு பதில் கூறவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள்) தொழும்போது உங்களுக்கு நாங்கள் “ஸலாம்” கூறிக் கொண்டிருந்தோம். தாங்களும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். (இப்போது என்ன?) என்று கேட்டோம். அதற்க அவர்கள் “நிச்சயமாக தொழுகையில் (இதல்லாத) வேறு வேலை இருக்கிறது” என்று கூறினார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
ஒருவர் சட்டம் அறியாமல் தாம் தொழும்போது பேசி விட்டால் தொழுகை முறியாது :
*நான் நபி(ஸல்) அவர்களோடு தொழுது கொண்டிருந்தேன். அப்போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார். அதற்கு நான் “யர்ஹக்குமுல்லாஹ்” அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக! என்றேன். உடனே அங்குள்ளோர் அனைவரும் என்னை கூர்ந்து பார்த்தார்கள். அப்போது நான் “ஏன் என்னை நீங்கள் இவ்வாறு முறைத்துப் பார்க்கிறீர்கள்? உங்கள் தாய்மார்கள் உங்களை இழக்கக் கூடாது” என்றேன். அப்போது அவர்கள் தம் தொடைகளில் தமது கைகளை அடித்தார்கள். அவர்கள் என்னை மெளனமாக இருக்கும்படி சிமிக்கை செய்வதாக உணர்ந்து நான் மெளனமாக இருந்து கொண்டேன்.
நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன், அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னை அவர்கள் அதட்டவோ, அடிக்கவோ. ஏசவோ, பேசவோ செய்யவில்லை, எனது தாயையும். தந்தையையும் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர்களுக்கு முன்னரும், பின்னரும் அவர்களை விடச் சிறியதொரு அழகான போதகரை நான் கண்டதேயில்லை.
அப்போது அவர்கள் என்னை நோக்கி, நிச்சயமாக இத்தொழுகையானது இதில் மனிதர்களின் எவ்விதமான பேச்சுக்கும் இடமில்லை. தொழுகை என்றால் “தஸ்பீஹ்” செய்தல், தக்பீர் கூறல், குர்ஆன் ஓதுதல் ஆகியவையேயாகும் என்றார்கள்.
(முஆவியத்துப்னில் ஹக்கம்(ரழி), முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)
மேற்காணும் ஹதீஸில் “ஒருவர் தாம் தொழும்போது பேசக்கூடாது” என்ற சட்டம் தெரியாத நிலையில் பேசியுள்ளார். அதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் அவரை மீண்டும் தொழும்படிக் கூறாமல், தொழுகையின் ஒழுக்க நெறிகளை மட்டும் அவருக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்பதை அறிகிறோம். இவ்வறிவிப்பின்படி சட்டம் தெரியாதவர் தொழும்போது பேசிவிட்டால் அவரது தொழுகை முறியாது என்பதை அறிகிறோம்.
ஒருவர் தமது தொழுகையில் நிகழ்ந்த தவறைச் சுட்டிக்காட்டும் வகையில் பேசினாலும் தொழுகை முறியாது:
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ளுஹ்ரையோ அல்லது அஸ்ரையோ தொழ வைத்தபோது இரண்டாவது ரகாஅத்தில் “ஸலாம்” கொடுத்து விட்டார்கள். அப்போது “துல்யதைன்” என்பவர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? அல்லது நீங்கள் தான் மறந்து விட்டீர்களா? என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “தொழுகை குறைக்கப்படவுமில்லை. நான் மறந்து விடவுமில்லை” என்றார்கள். அதற்கு மீண்டும் அவர் அல்லாஹ்வின் தூதரே!” இல்லை நீங்கள் தாம் மறந்து விட்டீர்கள்” என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “துல்யதைன்” கூறுவது உண்மையா?”’ என்று கேட்டார்கள். அனைவரும் “ஆமாம்” என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் (விடுபட்டுள்ள) இரண்டு ரகாஅத்துக்களையும் தொழுதுவிட்டு 2 ஸஜ்தாக்கள் செய்தார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
மேற்காணும் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்களும், மற்றுமுள்ளோரும் தமது தொழுகைக்கு மத்தியில் பேசியுள்ளார்கள். எவ்வாறெனில் 4 ரகாஅத்து தொழுகையில் 2வது ரகாஅத்தில் மறதியாக நபி(ஸல்) அவர்கள் “ஸலாம்” கொடுத்து விட்டர்கள். அப்போது தொழுதவர்களில் ஒருவர் தவறுதல் பற்றி கேள்வி கேட்க, அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதற்கு பதில் கூற இவ்வாறு இரண்டு ரகாஅத்துக்கள் மட்டும் தொழுதுவிட்டு 3வது, 4வது ரகாஅத்துக்கள் தொழுவதற்கு முன்பே இடையில் பேசியுள்ளார்கள்.
ஆனால் அவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் தமது தொழகையில் நிகழ்ந்துள்ள தவறை சரி செய்து கொள்வது சம்பந்தமாகவே இருந்துள்ளன. ஆகவே அவர்கள் இவ்வாறு தமக்குள் பேசிக் கொண்டதால் தொழுகை முறியவில்லை. அவ்வாறு அவர்கள் பேசியதால் தொழுகை முறிந்திருக்குமாயின், அவர்கள் மீண்டும் 4 ரகாஅத்துக்கள் முழுமையாக தொழுதிருப்பார்கள். அவ்வாறின்றி விடுபட்டுள்ள மீதி 2 ரகாஅத்துகளை மட்டுமே தொழுதுள்ளார்கள். இதிலிருந்து அவர்கள் தொழுகை முறியவில்லை என்பதை அறிகிறோம்.
தொழும்போது மிதியடி முதலியவற்றில் அசுத்தம் இருப்பது தெரிந்து, உடன் அதை அகற்றிவிட்டால் தொழுகை முறியாது :
நபி(ஸல்) அவர்கள் தமது ஸஹாபாக்களுக்கு தொழ வைத்துக் கொண்டிருக்கும்போது, தமது மிதியடியை சுழற்றித் தமது வலப்புறத்தில் வைத்தார்கள். அப்போது மற்றவர்களும் தமது மிதியடிகளைக் கழற்றி வைத்து விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தமது தொழுகையை நிறைவு செய்துவிட்டு, அவர்களை நோக்கி, ஏன் நீங்கள் உங்கள் மிதியடிகளைக் கழற்றி விட்டீர்கள்? என்றார்கள். அதற்கு அவர்கள் “நீங்கள் தங்களின் மிதியடிகளைக் கழற்றி வைப்பதைப் பார்த்து நாங்களும் எங்கள் மிதியடிகளைக் கழற்றி வைத்து விட்டோம்” என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ஜிப்ரீல்(அலை) வந்து மிதியடி அசுத்தமாயிருப்பதாகக் கூறினார் (அதனால் அவற்றைக் கழற்றி விட்டேன்) என்றார்கள்.
(அபூஸயீதில் குத்ரீ(ரழி), அபூதாவூத்)
தொழுகைக்கு சம்பந்தமில்லாத செய்கைகளைத் தொழும்போது அதிக அளவில் செய்தல்:
இத்தகைய செய்கைகளைக் குறைந்த அளவு தேவைக்கேற்ப செய்துகொண்டால் தொழுகை முறியாது. “அதிக அளவு, குறைந்த அளவு” என்பதற்கு அளவுகோல் “தொழுகையின் போது ஆகுமான செயல்கள்” என்ற தலைப்பில் மேலே இடம்பெற்றுள்ள நபி(ஸல்) அவர்களின் சொற் செயல்களேயாகும். இவற்றை அளவுகோலாகக் கொண்டே ஒருவருடைய செய்கை அதிக அளவு, குறைந்த அளவு என்பதை நிர்ணயிக்க வேண்டும்.
ஒரு சிலர், தொழும் ஒருவர் தொழுகைக்கு சம்பந்தமில்லாத செய்கைகளை நிலை, ருகூஃ, ஸுஜுது போன்ற கட்டங்களில் ஒரே கட்டத்தில் மும்முறை செய்து விட்டால் தொழுகை முறிந்து விடும் என்கின்றனர்.
வேறு சிலரோ, “அவ்வாறு செய்வதால் தொழுகை முறியாது” என்று கூறிவிட்டு, ஒருவர் தொழுகைக்கு சம்பந்தமில்லாத செயலைத் தொழுகையில் அவர் செய்து கொண்டிருக்கும்போது அவரை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் பார்வையில் அவர் தொழுகையில் இல்லை என்று கருதும் அளவுக்கு அவரது செய்கை இருக்குமானால், தொழுகை முறிந்துவிடும் என்கின்றனர்.
இவர்களாகக் கூறும் இந்த அளவுகோலின்படி பார்த்தால் நபி(ஸல்) அவர்கள் தமது பேத்தியான உமாமாவைத் தமது தொழுகையில் நிற்கும்போது தமது தோளின் மீது சுமந்து கொண்டும் பிறகு ருகூஃவுக்குச் செல்லும்போது கீழே இறக்கிக் கொண்டும், தூக்கித் ஸுஜுதிலிருந்து எழும்போது மீண்டும் அக்குழந்தையைத் தமது தோளின் மீது வைத்துக் கொண்டும் இருந்தார்கள் என்பதை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் பார்வையில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை முறிந்து விட்டது என்ற முடிவுக்கு வர முடியுமா? ஆகவே நாம் மேலே குறிப்பிட்டுள்ளவாறு சரியான அளவுகோல் இது சம்பந்தமாக ஹதீஸில் காணப்படும் சொற் செயல்களேயாகும்.
6. தொழும் போது சப்தமிட்டுச் சிரித்தல் :
நாங்கள் தொழுகையில் பேசுபவர்களாயிருந்து கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தமக்கு அடுத்துள்ள நபரிடம் தொழும்போது (சாதாரணமாகப்)பேசிக் கொண்டிருப்பார். இந்நிலையில்தான் “அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்”(2:238) எனும் வசனம் அருளப்பட்டது. அப்போது நாங்கள் (தொழுகையில்) மெளனமாக இருக்கும்படி ஏவப்பட்டு பேசக்கூடாது என தடை விதிக்கப்பட்டோம்.
(ஜைதுபின் அர்க்கம்(ரழி), புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா)
ஜாபிர்(ரழி) அவர்களிடம் தொழும்போது சப்தமிட்டுச் சிரித்து ஒருவரின் நிலை பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர் தொழுகையை(மட்டும்) மீட்ட வேண்டும்; ஒளூவை மீண்டும் செய்ய வேண்டியதில்லை என்று கூறினார்கள்.
மேற்காணும் வசனத்தில் தொழுபவர் உள்ளச்சப்பாட்டுடன் நிற்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பதோடு ஹதீஸில் மெளனமாயிருக்க வேண்டும் என்பதாகவும் கட்டளை இடப்பட்டுள்ளது. ஆகவே சப்தமிட்டுச் சிரிப்பதானது உள்ளச்சத்திற்கும், மெளனமாயிருப்பதற்கும் புறம்பான செயலாயிருப்பதால் தொழுகையை முறித்து விடுகிறது.
*நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்துக் கொண்டிருக்கும்போது, பார்வைக் கோளாறினால் பள்ளியில் பிரவேசித்த ஒருவர் பக்கத்திலிருந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்து விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களோடு தொழுது கொண்டிருந்தோரில் அநேகர் தாம் தொழும்போதே (அவர் விழுந்ததைப் பார்த்து) சப்தமிட்டுச் சிரித்து விட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு சிரித்தவர்களை நோக்கி அவர்கள் ஒளுவையும் மீட்ட வேண்டும், தொழுகையையும் மீட்ட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (அபூமூஸா(ரழி), தப்ரானீ)
மேற்காணும் இவ்வறிவிப்பை ஆதாரமாகக் கொண்டு சிலர் தொழும்போது ஒருவர் சப்தமிட்டுச் சிரித்து விட்டால், அவர் தமது தொழுகையை மீட்டுவதுடனும், தமது ஒளூவையும் மீட்டியாக வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பெரும்பாலோர் நம்பகமானவறாயிருப்பினும் ஒரு சில நம்பகமற்றவரும் இடம் பெற்றிருப்பதால் அதை ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டாது. (மஜ்மஉஜ்ஜாயித், பாகம் 2, பக்கம் 85)
சப்பதமில்லாது புன்முறுவலாகச் சிரித்தவர் தொழுகையின் நிலை:
“சப்தமின்றி புன்முறுவலாகச் சிரிப்பதானது தொழுகையை முறிக்காது, ஆனால் சப்தமிட்டுச் சிரிப்பதானது தொழுகையை முறிக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), தப்ரானீ)
இறை அச்சத்தின் காரணடாக சப்தமிட்டு அழுவதால் தொழுகை முறியாது :
ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால் அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜுது செய்தவர்களாகவும் விழுவார்கள். (19:58)
நான் நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது அழுகையின் காரணத்தால் அவர்களின் நெஞ்சிலிருந்து செம்புப் பாத்திரத்திலிருந்து வரும் சப்தத்தைப் போன்றதொரு சப்தம் வருவதைக் கண்டேன்.
(அப்துல்லாஹிஷ் ஷிக்கீர்(ரழி), அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)
“திருகையின் சப்தத்தைப் போன்றதொரு சப்தத்தைக் கண்டேன்” என்று அபூதாவூதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பில் காணப்படுகிறது.
*நபி(ஸல்) அவர்களுக்கு வியாதி கடுமையாயிருந்தபோது, அவர்களிடம் தொழுகை பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள் “அபூபக்ரு அவர்களை மக்களுக்கு தொழ வைக்கும்படி கூறுங்கள்” என்றார்கள். அப்போது “அபூபக்ரு அவர்கள் இளகிய உள்ளம் படைத்தவர்கள். அவர்கள் குர்ஆனை ஓதினால் அழுகை அவர்களை மிகைத்து விடும்” என்று ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் “அவரைத் தொழ வைக்கும்படி கூறுங்கள்” என்றார்கள். (சுருக்கம்) (இப்னு உமர்(ரழி), புகாரீ)
ஒருவர் தாம் தொழுது கொண்டிருக்கும்போது, இறை அச்சத்தின் காரணமாகவோ அல்லது தமது நோய், நொம்பலம், துன்பம், துயரம் முதலியவற்றைத் தம்மால் தாங்கிக் கொள்ள இயலாததன் காரணமாகவோ சப்தமிட்டு அழுதுவிட்டால் தொழுகை முறியாது. அவ்வாறு அவர் சப்தமிட்டு அழும்போது “ஆஹ்” என்பன போன்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்டுள்ள வார்த்தைகள் அவருடைய நாவிலிருந்து வந்துவிட்டாலும் தொழுகை முறியாது.
காரணம், இறை அச்சத்தால் அழுவதானது தொழுகைக்கு உடன்பாடான செயலே. அதனால் தொழுகை முறியாது. இவ்வாறே நோய், நொம்பலம், துன்பம், துயரம் முதலிய காரணங்களால் சப்தமிட்டு அழுவதாலும் தொழுகை முறியாது. ஏனெனில் இவற்றிற்காக ஒருவர் அழுகிறார் என்றால், இவற்றின் கஷ்டங்களைத் தம்மால் தாங்கிக் கொள்ள முயலாததன் காரணமாகவே அழுகிறார். இந்நிலையில் “அவரது தொழுகை முறிந்து விடும்” என்று கூறுவதற்கு குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் வாயிலாக போதுமான முறையான ஆதாரங்கள் எதுவுமில்லை.
“அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை”. (2:280)
இவ்வசனத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இவ்விதமான இக்கட்டான நிலையில் சப்தமிட்டு அழுபவரின் தொழுகை முறிந்து விடாத என்பதை அறிகிறோம்.