மெய்ப்பொருள் காண்போம்; அவ்வழி நடப்போம்

in 1989 நவம்பர்

H. அப்துஸ்ஸமது, BE.,MSc.,(Eng) சென்னை,

    இங்கே இன்னொரு முக்கிய விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். மேலேக் கூறப்பட்ட மனித இயல்புகளுக்குரிய, நியாயமான – முறையான வரையறைக்குட்பட்ட ஆதிக்கம் அறவே அடங்கி ஒடுக்கப்பட்டு விட்டாலும் இம்மை வாழ்க்கையின் முழு பலனையும் அடைய முடியாது. யோகிகள், சந்நியாசிகள். சூபிகள் இவர்களைப் போல் இம்மை வாழ்க்கையைப் புறக்கணித்து, பற்றற்ற வாழ்க்கையை மேற்க்கொள்வது இஸ்லாத்திற்கு முரணானதாகும்.

    சர்வமும், இறைவுணர்விற்கும், உண்மை அறிவு பெறுவதற்கும் தடையாகின்றது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் ரசூல்(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:-

    இதயத்தில் கடுகளவு கர்வமுள்ள எவரும் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, யாரோ ஒருவர் “சிலர் அழகிய உடைகளிலும், காலணிகளிலும் மிகுந்த ஆசையுள்ளவர்களாக இருக்கின்றனரே; அழகிய பொருள்களின் மீது ஆசைக் கொள்ளுவது கர்வமாகுமா? என வினவினார். ரசூல்(ஸல்) அவர்கள் “அல்லாஹ்” அழகுடையோன்; அழகை விரும்புகிறான்; கர்வம் என்பது உண்மையை நிராகரிப்பதும், மற்றவர்களை இழிவாக கருதுவதுமே” என்றார்கள்.

                                                    (இப்னு மஸ்ஊத்(ரழி), முஸ்லிம்)

    உண்மையை நிராகரிப்பதும், பிறரை இழிவாகக் கருதுவதும் கர்வமுடைய செயல்களாகும் என்பது தெளிவாகின்றது. அறிஞர்கள் என்ற தம்மைக் கருதிக் கொள்பவர்களில் பலர் சுய கர்வத்தின் காரணத்தால் தாங்கள் அறிந்திருப்பவையேயல்லாமல், மற்றவர் அறிந்திருப்பவை, கற்ப்பிப்பவை எதுவுமெ உண்மையல்ல என்று இறுமாப்புடன் கூறுகின்றனர். தாங்கள் பெற்ற அறிவும, மக்களால் தரப்படும் கண்ணியமும் அல்லாஹ்வின் அருளே என்ற உணர்வின்றி அவைகள் தங்களின் சிறப்பாற்றலாலும், பிறப்புரிமையாலும் கிடடியவை எனக் கருதுகின்றனர். இன்று அல்லாஹ்வின் மார்க்கத்தை அவனது நல்லடியார்களுக்குப் போதித்து அவர்களை நல்வழிப்படுத்த  முனையும் சீர்த்திருத்தவாதிகளை எதிர்ப்பது இத்தகைய கர்வவாதிகள் தாம். கர்வத்தால் மதி இழந்து தாமும் நேர்வழி நடக்காமல், மற்றவர்களைத் தடுப்பவர்களையும் தடுப்பவர்களும் இவர்களே. கர்வமிகுதியால், உண்மையை உரைப்பவர் மீது பொறாமையும், ஆத்திரமும் கொண்டு உண்மையை ஏற்க மறுக்கின்றனர். சத்தியத்திற்குப் புறம்பாக நடக்கின்றனர்.

    நீண்ட நபிமொழி ஒன்றில் கர்வத்தைப் பற்றிய விபரத்தை மாத்திரம் இங்கே எடுத்து எழுதுகிறோம்:-

    ‘………மூன்று கேடு விளைவிக்கும் காரியங்களில் ஒன்ற சரீர இச்சைக்கு இரையாவது; அடுத்ததது கருமித்தனத்திற்கு கீழ்படிவது; மூன்றாவது சுயகர்வம். இது தான் மூன்றிலும் மிகக் கேடானாது’.

                                                (அபூஹுரைரா(ரழி), பைஹகீ)

    ஷைத்தான் தான் அல்லாஹ்விற்கு எதிராக முதன்முதலாக அகங்காரத்தைக் காட்டியவன். அகங்காரத்தைத் தூண்டியது கர்வமே என்று திருமறைக் கூறுகிறது.

    “அவனோ(இப்லீஸ்) மறுத்து விட்டான்; கர்வமும் கொண்டான்”                 (2:34)

   

    அடுத்து அறியாமையின் காரணமாகவும், முஸ்லிம்கள் இறைவனை உணரவும், மெய்யறிவைத் தேடவும் தவறி விடுகிறார்கள். பாரம்பறிய மரபுகள், மனத்திற்கு உகப்பானவை, பண்டைய பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், முன்னோரின் நடைமுறைகள் இவைகளைப் பற்றிப்பிடிக்கக் காரணமும் அறியாமையே. மூதாதையரின் பழக்க வழக்கங்களையும், நடைமுறைகளையும் கண்மூடிப் பின்பற்றுவதைப் போலவே  அவைகளைக் கண்மூடி ஒதுக்குவதும்  அறிவீனமாகும் அவை விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவை அல்ல; நேரானவை அல்ல என்று ஆய்வில்லாமல் புறக்கணிக்கப்பட வேண்டியவையுமல்ல. அவைகளை விட உண்மையில் உயர்வானவற்றை ஏற்க மறுப்பது தான் அறிவீனம். நபி(ஸல்) அவர்களின் போதனைகளை, அரபிகள் ஆரம்ப காலத்தில் ஏற்காதிருந்தமைக்குக் காரணம் மேலேக் குறிப்பிட்டவைகளின் மீது அவர்கள் கொண்டிருந்த பற்றும், பிணைப்புமேயாகும். தம் காலத்து மக்களை விட தம் முன்னோர்கள் அறிவிலும் அனுபவத்திலும், ஒழுக்கத்திலும், செயல்களிலும் மேன்மையானவர்கள் என்ற பெருமை உணர்வு கொண்டிருந்தார்கள்; எனவே அவர்களின் வழிமுறைகள் தவறானவைகள் அல்லவென்றும், அவைகளை அவர்களுக்குப் பின்பந்தோர் சீர்திருத்த அவசியமில்லை என்றும் நம்பினர். தம் முன்னோர் வழி தவறியவர் என்று ஏற்பது, அவர்களின் நினைவிற்கு அவதூறென்றும், தங்களுக்கு இழிவு என்றும் கருதினர். எனவே நபி(ஸல்) அவர்களின போதனையை ஏற்க மறுத்தனர். உக்கிரமமாக எதிர்த்தனர். முன்னோரின் சித்தாந்தமும், பழக்க வழக்கங்களும் அவை பழமையானவை என்ற ஒரே காரணத்தால் நிறைவானவை என்பது அவர்களின் வாதம்; வேறெந்த வாதத்தையும், சர்ச்சையையும் ஏற்பதில்லை. அறிவார்ந்த முடிவை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நபி(ஸல்) அவர்கள் மூலம் இறங்கிய வேத வெளிப்பாட்டிற்கு (வஹிக்கு) முக்கியத்துவம் அளிக்கவுமில்லை. அவர்கள் சார்ந்திருந்த வழியில் முற்றிலும் திருப்தியுற்றவர்களாக அவ்வழியிலேயே தொடர்ந்து சென்றனர். மனித வர்க்கத்திற்கு உகந்தவை எவை என்பதை அவர்களின் முன்னோர் அறிந்திருந்தனர். அவைகளை மாற்றவோ, கூட்டவோ அவசியமில்லை என்பது அவர்களின் நம்பிக்கை. “எங்கள் மூதாதையர் அவற்றை பின்பற்றக் கண்டோம். என்ற கோஷமே அவர்களுக்கு வேதமாகும்; பாவங்களை நீக்க அவை போதுமானவை என்றெண்ணி அவைகளின் பிடியிலிருந்து விலக விரும்பவில்லை. அல்லாஹ்வின் தூதரே அவைகள் நேரானவை என்று கூறி அழைத்து அவைகளை விட்டு வர மறுத்தனர்.

    பழமையின் மீதுள்ள இத்தகைய மோகமும், நம்பிக்கையுமே கண்மூடித்தனமான அடிபணிதலு(தக்லீது)க்கு வழிகோலியவை. வாழ்ந்து மடிந்த ஒருவர் மீது  அதி தீவிரமான நம்பிக்கைக் கொண்டு அவரையே மார்க்க வழிபாட்டிற்கும், வாழ்க்கை முறைக்கும் வழிகாட்டியாக்கிக் கொண்டு, அவரது சொல்லும் செயலும் , இறைமறைக்கும், நபிவழிக்கும் உட்பட்டவைத்தானா என்று பரிசீலிக்க வேண்டுவனல்ல என்று நம்பிச் செயல்படுவதுத் தான் கண்மூடி அடிபணிதல் (தக்லீது) ஆகும். கண்மூடி அடிப்பணிதல் (தக்லீது) எத்தகையதொரு வழிகேட்டிற்கு மக்களை இட்டுச் சென்றுவிட்டது என்பதை சிந்தியுங்கள்! பின்பற்றுவோரின் சொற்களோ, செயல்களோ அல்லாஹ்வின் திருமறைக்கும். நபி வழிக்கும் மாறானவை என்று அறிந்து எடுத்துக் கூறப்பட்டால் (முகல்லிதுகள்) கண்மூடிப் பின்பற்றுபவர்கள் நினைப்பதென்ன தெரியுமா? இவர்கள் கண்மூடிப் பின்பற்றுபவர்களின் கருத்துக்களும், செயல்களும் குர்ஆனையும், நபிவழியையும் அடிப்படையாகக் கொண்டவைத்தான் என்றும், அவை அப்படிப்பட்டவை அல்லவென்று கூறுபவர்கள் அவைகளை அறிந்துக் கொள்ள ஆற்றல் இல்லாமல் அவ்விதம் கூறுகிறார்கள் என்றும் எண்ணுகிறார்கள். இத்தகைய தக்லீது, திருமறையையும், அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறை (சுன்னத்து)களையும் நடைமுறை சாத்தியமல்லாதவையாக்கி விடுகிறது. காரணம், முகல்லிதுகளில் ஒரு சாரரும், சூபிகளும் குர்ஆனிலிருந்தும், நபி சுன்னத்களிலிருந்தும் எல்லாச் சத்துக்களும் அவர்களின் முன்னோர்களால் உறிஞ்சப்பட்டு இப்போது எஞ்சி இருப்பது வெறும் சக்கை மாத்திரமே என்று நம்புகின்றனர். மார்க்க அறிவில் அந்தரங்கமான ஞானம் என்பதே இவர்களின் சித்தாந்தப்படி சத்து என்று அழைக்கப்படுகிறது.  இவர்கள் ஏற்றிப் புகழ்ந்து வாழ்க்கைக்கு முன்மாதிரியாக கொள்ளும் சூபி ரூமி அவர்கள் கூறுகிறார்கள் : ” நாங்கள் குர்ஆனிலிருந்து எலும்பு முளையை எடுத்துக் கொண்டு வெறும் சக்கை எலும்பை நாய்களின் முன் எறிந்து விட்டோம். என்று, சகோதர சகோதரிகளே! சிந்திக்க வேண்டும். அல்லாஹ் அவனுடைய திருமறையில் கூறுவதென்ன?

    “உலகத்தவர் யாவருக்கும் இஃதொரு நல்லுபதேசமாகும்”

    இது உலகங்கள் யாவுக்கும், உங்களில் எவன் நேரான வழியில் செல்ல விரும்புகிறானோ அவனுக்கும் நல்லுபதேசமின்றி வேறில்லை,                                    (82:27,28)

    நிச்சயமாக நாம் தாம் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். ஆகவே(அதில் எத்தகைய மாறுதலும், அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே பாதுகாப்போம்.                    (15:9)

    குர்ஆன் ரூமிக்கும், சூபிகளுக்கும் மாத்திரம் இறக்கப்பட்டதல்ல; அவர்கள் மாத்திரம் அதன் கருத்து (சத்து)க்களை எடுத்துக் கொண்டு வீசி எறிய அது எலும்புமல்ல. அழிவும், மாறுதலும் ஏற்படாவண்ணம் அல்லாஹ் காத்தருள்கின்றான்.

*************************************************************************************************

நபி(ஸல்) அவர்களின் தனிச்சிறப்பு

நான் மறுமை நாளில் சுவர்க்கத்தின் வாசலுக்கு வந்து (அதைத்) திறந்து விடும்படி கோருவேன். அப்போது அதன் பொருப்பாளர் “நீர் யார்? என கேட்பார், நான் “முஹம்மத்” என்று கூறுவேன். அப்போது அவர் “உங்களுக்கு முன்னர் எவருக்கும் நான் (இதைத்) திறந்து விடக் கூடாது” என்று எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது என்று கூறுவார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

                                                (அனஸ்(ரழி), முஸ்லிம்)

Previous post:

Next post: