மவ்லவி நிஜாமுத்தீனின் கப்ஸா
அபூ ஹாமித்
காமிலான ‘ஷேக்’கிடம் ஒருவர் வந்து தன்னை முரீதாக ஏற்றுக்கொள்ளக் கூறினார். சில நிபந்தனைகளுடன் ‘ஷேக்’ அவரை முரீதாக ஏற்றுக் கொண்டார். சிஷ்யன் குருவுடன் வெளியில் செல்லும் போது குரு(ஷேக்) செய்கின்றவை அனைத்தையும் அவர் செய்கின்றபடியே சிஷ்யனும் செய்ய வேண்டும் என்பது அந்நிபந்தனைகளில் ஒன்று. ஒருநாள் “ஷேக்” வெளிக்கிளம்பவே சிஷ்யனும் அவருடன் சென்றார். இருவரும் சென்றுகொண்டிருக்கும்போது அவ்வீதி வழியே ஒரு பேரழகியும் வந்துகொண்டிருந்தாள். காமிலான (பூரணத்துவம் எய்திய) ஷேக், அப்பெண்ணை அணுகி, கட்டி அனைத்து முத்தமிட்டாள் ஷேக் செய்வதை சிஷ்யனும் குருவைப் பின்பற்றி வெகு குஷியுடன் ஓடிச்சென்று அப்பெண்மணியை முத்தமிட்டார். கரும்புத் தின்னக் கூலி வேண்டுமா? ஷேக் விதித்த நிபந்தனையை நிறைவுற்றியதை விடப் பேரழகியை முத்தமிட்டதில் அடையும் இன்பக் கிலுகிலுப்பு சிஷ்யனுக்கு! (சிஷ்யனுக்கு குருவின் மீதுள்ள பக்தியும், பாசமும் “ராக்கட்” வேகத்தில் அதிகரித்துவிட்டது).
சிறிது தூரம் நடந்ததும் ஒரு கொல்லப்பட்டறையை அடைந்தனர். பழுக்கக் காய்ச்சி செக்கச் சிவந்த ஜுவாலை வீசிக் கொண்டிருந்த இரும்புத் துண்டை கொல்லர் சம்மட்டியால் அடித்துக் கொண்டிருந்தார். ஷேக் பட்டறைக்குள் நுழைந்து அந்த இரும்புத் துண்டை கையில் எடுத்து முத்தமிட்டார். ஷேக் செய்வதை எல்லாம் தானும் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டிருந்த சிஷ்யனின் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஒரு பெண்ணை, அதிலும் ஒரு கட்டழகியை முத்தமிடுவது மனமும், உடலும் வேட்கையுடன் விழையும் செயல் பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை எப்படி முத்தமிடுவது? முகம் எரிந்து பொக்கலித்து விடுமே! “இது தம்மால் முடியாது” என்று தீர்மானித்து, சிஷ்யன் குருவைப் பின்பற்றாது இருந்துவிட்டான். இதைக் கண்ட குரு, சிஷ்யனை நோக்கி “சிஷ்யா! இரும்புது் துண்டை நான் முத்தமிடுவதுபோல் நீயும் முத்தமிடாதது ஏனோ?” என வினவினார். “மதிப்பிற்குரிய ஷேக் அவர்களே! ஒரு பெண்ணை முத்தமிட்டீர்கள். இன்பம் தரும் செயல் என மனமும் விரும்பியது. தங்களைப் பின்பற்றி நானும் உவகையுடன் பெண்ணை முத்தமிட்டேன். பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை முத்தமிட்டீர்கள். நானும் உங்களைப் பின்பற்றி சூடேறிய இரும்புத் துண்டை முத்தம் இட்டால் என் கதி என்னாவது? என்னால் முடியாது” என்றார் சிஷ்யர், இதைச் செவியுற்ற “ஷேக்” கோமடைந்தார். “சீ போடா! நீ என் முரீதாக இருக்க அருகதையற்றவன்” என்று கூறி சிஷ்யனை அனுப்பிவிட்டார்.
காமீலான (பரிபூரணத்துவம் எய்திய) ஷேக்குகள், தூணிலும் துரும்பிலும், நங்கை நல்லாளிலும் இறைவனைக் காண்பாராம்(பிரகலாதன் கதையை நினைவூட்டுகிறதா!). எனவே இக்களையில் ஷேக்கும் கட்டழகியின் மதி முகத்தில் (தஜல்லியத்தை) இளையொளியைக் காணவே அப்பெண்கள் முத்தமிட்டாராம்!
கதை வெகு சுவாரஷ்யமாக இருக்கிறதல்லவா? எங்கே, யாரால் கூறப்பட்டது இக்கதை என நினைக்கிறீர்கள்? சென்னை மாநகரில் புரசை பள்ளிவாசலில் இமாம் மவ்லானா மவ்லவி நிஜாமுத்தீன் அவர்கள் 8-10-88 அன்று குர்ஆன் விரிவுரை நிகழ்த்தும்போது எடுத்துக் கூறிய கதைதான் இது. கதையைக் கூறிய அப்பெருந்தகை நாம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களை “இன்றைய ஷேக்மார் இப்படிச் செய்தால் நம்பாதீர்கள்” என்று எச்சரிக்கவுமு் தவறவில்லை. நம்புவது ஒருபுறம் இருக்கட்டும். வீதியில் வரும் பெண்ணை முத்தமிட எத்தனித்தால் ஷேக் காமிலானவராயினும் சரியே முழுமையாகத் திரும்புவாரா?
முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
ஏழு வருடம் மதரஸாவில் பயின்று மவ்லவி, மவ்லானா, நபியின் வாரிசு என்றெல்லாம் மார்தட்டும் ஹஜ்ரத்மார்கள் இத்தகைய கதைகளைக் கூறுவதன் நோக்கம் என்ன என்று சிந்தியுங்கள். இக்கதையில் குறிப்பிடப்பட்ட ஷேக்கைப்போல் யாவரும் பெண்களின் வதனங்களில் இறையொளியைக் கண்டதாகக் கூறி முத்தமிட ஆரம்பித்தால் என்னவாகும்? “ஷேக் காமிலானவர் வீதியில் வரும் அந்நியப் பெண்களின் வதனத்தில் இறையொளி அல்லாது காமகிளர்ச்சியைக் காணாத புனிதர்: இச்சையை வென்ற இறைநேசர்:” என்று கூறி மழுப்பலாம். ஆனால் ஷேக்கைப் பின்பற்றி அதே பெண்ணை முத்தமிட்ட முரீதும் காமிலானவரா? அல்லது நடு வீதியில் வந்த பெண்ணை முத்தமிட்டதாலே காமிலாகி விட்டாரா? நட்ட நடுவீதியில் வந்த தன்னை அணைத்து அந்நியர் இருவர் முத்தமிட்டும் வாய் பொத்தி, கைட்டி குருவுக்கும் சிஷ்யனுக்கும் அனுசரணையாக இருக்க வேண்டுமெனில் அப்பெண் விபச்சாரியாக அல்லாமல் ஒழுக்கமுடைய பெண்ணாக இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.
மேற்கூறிய கதை “ஹஜ்ரத்” அவர்கள் கூறுவதுபோல் உண்மை நிகழ்ச்சியாக இருப்பின் எங்கே நிகழ்ந்திருக்கும், அப்பெண் முஸ்லிமல்லாத அந்நித மதத்தினராயின், அம்மதத்தவர் இப்படி ஒரு ஒழுக்கக் கேடான சம்பவம் நடு வீதியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஷேக்கையும், முரீதையும் உடல் வீங்க நையப் புடைத்திருப்பார்கள். நடந்திருந்தால் இந்நிகழ்ச்சி இஸ்லாமிய சமுதாயத்தில் தான் நடந்திருக்க வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தில் நடு வீதியில் காமிலான ஷேக்கும், மாமிலாகத் தயாராகும் அவரது பரம சிஷ்யனும் எந்தப் பெண்ணையும் கட்டியணைக்கலாம். முத்தமிடலாம் என்ற எண்ணற்ற இத்தகைய கதைகள் ஏற்படுத்துமல்லவா? இஸ்லாத்தைக் கடைபிடித்து வாழ்ந்து, அதை உலகெல்லாம் பரப்பப் பாடுபட வேண்டியவர்கள், களங்கம் படுத்துகிறார்களே!
“நபியே! விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறும், அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைக்கவும், தங்கள் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும், நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவைகளை நன்கு அறிந்து கொள்ளுகிறான்!” (24:30)
“அவர்கள் தங்கள் மறைவிடங்களையும் (கற்புடன்) காப்பாற்றிக் கொள்ளுவார்கள். எனினும் தங்கள் மனைவிகளிடத்திலும், தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவரிடத்திலும் தவிர, நிச்சயமாக அவர்கள் நியமிக்கப்படமாட்டார்கள்.
இதனையன்றி (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால் அத்தகையோர் வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்.” (70:29,30,31)
மேற்கண்ட குர்ஆன் வசனங்களுக்கொப்ப உள்ள நபிமொழிகளும் உள்ளன. நபி(ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.
ஓ! அலி! (பெண்களைப் பார்ப்பதில்) முதல் பார்வைக்குப் பின்பு இரண்டாவது பார்வையை தவிர்க்கவும், முதல் பார்வை மன்னிக்கப்படும். இரண்டாவது பார்வை (ஷைத்தானுடையது) மன்னிக்கப்படுவது அல்ல. (அபூதாவூது, அஹ்மது)
ரசூல்(ஸல்) அவர்களின் மக்கா வெற்றிக்குப் பின் ஆண்களும் பெண்களும் இஸ்லாத்தில் இணைந்து, நபி(ஸல்) அவர்களிடம் “பைஆத்” செய்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஆண்களைத் தவிர பெண்களிடம் தன் கைகளால் (தொட்டு) பைஅத் செய்யவில்லை. வாயால் மொழிந்தே பைஅத் செய்தார்கள். தான் மணந்து கொள்ளாத எந்தப் பெண்ணின் கையையும், நபி(ஸல்) அவர்கள் தொட்டதில்லை என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரீ, அஹ்மது)
ஷேக், சூடேறி செக்கச் செிவந்திருந்த நெருப்புத் துண்டை முத்தமிட்டுள்ளார். இரும்புத் துண்டிலும் இறை ஒளியைக் கண்டாராம். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நிச்சயமாக நெருப்பு உங்களுக்கு விரோதியாகும். அதனை அணைத்து விடுங்கள். (அபூ மூஸா அல் அஸ்அரி(ரழி), புகாரீ, முஸ்லிம், அஹ்மத்)
மேலே தரப்பட்ட இறைவசனங்கள், நபிமொழிகளின் அடிப்படையில் “மவ்லானா” அவர்களின் கிஸ்ஸாவை சீர்தூக்கிப் பாருங்கள். இத்தகைய மவ்லவிகளுடைய கண்ணோட்டத்தில் நபிமார்களையும், நபித்தோழர்களையும் விட காமிலான ஷேக்மார்களின் அந்தஸ்து உயர்வானதாக ஆகிவிட்டது போலும்!
இறை வழங்கிய இஸ்லாத்தை, ரசூல்(ஸல்) அவர்கள் கற்பித்த இஸ்லாத்தை, நபித்தோழர் ஏற்று வாழ்ந்த புனித இஸ்லாத்தை மக்களுக்கும் போதிக்க மேலே கூறிய கதை தகுதி வாய்ந்தது தானா? இது போன்று ஆதாரமற்ற, இட்டுக்கட்டப்பட்ட தரங்கெட்ட கதைகளை ஹஜ்ரத்மார் கூறினார், ஆதாரம் கோரும் எங்களை குழுப்பவாதிகள் என்று துணிந்து பொய்யுரைக்கிறார்கள். இவர்கள் சாதிக்க நாடுவதும் பெற விழைவதும் யாது? முஸ்லிம், சகோரர்களே சிந்தியுங்கள்!
இஸ்லாத்தில் லீலைகள் இல்லை, மவ்லவிகளே! லீலைகளைக் கூறி சதா காலஷேபம் செய்யாது உண்மை வரலாறுகளை எடுத்துக் கூறுங்கள். ஊர், பெயர் அற்ற ஷேக்குகளில் (மன்மத) லீலைகளை எடுத்துக் கூறுவதை விட்டு விடுங்கள். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை, சஹாபா பெருமக்களில் வரலாறு, மற்றும் இஸ்லாமிய சரித்திரம் கூறும் பெரியார்களின் வரலாறு இவைகளைக் கூறி மக்களை நேர்வழிப்படுத்தி, நீங்களும் நேர்வழிக்கு வாருங்கள்.
கற்ற கல்விக்கும், உறுத்திக்கொண்டு இருக்கும் உங்களின் மனச்சாட்சிக்கும் எதிராக, வெறும் கவுரவம் நாடி, அகங்காரத்தால் உண்மையை ஏற்காமல், புணையப்பட்டவைகளைக் கூறி, மக்களை நேர்வழியினின்றும் அகற்றிச் செல்லாதீர்”!
(இதே மவ்லவி நிஜாமுத்தீன், தராவீஹ் 20 ரகாஅத் என்பதை நிரூபிக்க இவ்வாறே இமாம் ஷாபி(ரஹ்) அவர்களை அவமதித்து எழுதி இருந்ததை அந்நஜாத் ஜனவரி 1988 இதழில் “போஸ்ட் மார்ட்டம்” என்ற தலைப்பில் விமர்சித்திருந்ததை யாவரும் அறிவர். ஆசிரியர்.