ஏமாறாதீர்கள்! ஏமாற்றாதீர்கள்!!

in 1989 டிசம்பர்,பொதுவானவை

தொடர் : 2  முஹிப்புல் இஸ்லாம், துபை.

இந்த நிலையில் இன்றையக் காலக்கட்டத்தில் தர்ஹாக்களை ஒழிப்பதென்பது எத்துனை இக்கட்டானது என்பதை எண்ணிப் பாருங்கள்! தர்ஹாக்கள் முற்றாக  ஒழிந்தால்தான் அங்கு நடைபெறும் அனாச்சாரங்களுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் சமாதி கட்ட முடியும். இது எல்லோரும் நன்கறிந்த ஒன்றாகும். இந்த தர்ஹாக்கள் துளிர்விடத் துவங்கியக் காலக்கட்டத்தில் “மண்ணறைகள் மேல் கல்லறைகள் எழுப்புவது தவறு என்று அந்த தர்ஹாக்கள் எழுப்பப்படுவது தடை செய்யப்பட்டிருந்தால்-முளையிலேயேக் கிள்ளி எறியப்பட்டிருந்தால் தர்ஹாக்கள் இவ்வளவு தூரம் தலைத்தோங்கி இருக்குமா? நன்மை, புண்ணியம் ஒரு சிலருக்கு  வாழ்வளிக்கிறது என்று மு.பொ.மக்களால் அனுமதிக்கப்பட்ட தர்ஹாக்கள் இன்று இஸ்லாத்திற்கே இழுக்கைத் தேடித் தந்து கொண்டிருக்கிறது. இஸ்லாத்தின் மூலக்கொள்கையாகிய தவ்ஹீதுக்கே வேட்டுவைத்துக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க தர்ஹாக்கள் வாயிலாக புரோகிதர்களும், புரோகிதமும் செழித்தோங்கி வளர்ந்து கொண்டிருக்கிறது.

தர்ஹாக்கள் ஆரம்பக் காலக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்தப்படாததால் அவைகள் எப்படியோ தழைத்தோங்கி நிலை நிறுத்தப்பட்டு விட்டன. இன்று இஸ்லாத்திற்கும், ஏக இறைக் கொள்கைக்கும் முரணாகவும், இஸ்லாமிய வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிறது. அதுபோல இன்று முஸ்லிம் பொதுமக்களிடையே ஆலிம்கள் அங்கீகாரத்துடன் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிரும் நன்மை, புண்ணியம் என்ற போர்வையில் அனுமதிக்கப்படும் மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள், மூதாதையர் வழக்கங்கள் அனைத்தும் இன்றில்லாவிட்டாலும் நாளை அல்லது எதிர்காலத்தில் இஸ்லாத்தின் வைரியாக விஸ்பரூபம் எடுத்துவிடும் என்பது திண்ணம். இஸ்லாம் வளர இன்று முஸ்லிம் பொதுமக்கள் பாடுபடுவதே மிகவும் அரிது. இஸ்லாத்திற்கு இழுக்கைத் தேடித் தரும் இப்படிப்பட்ட இழிச்செயல்களை வளர்ப்பதில் தங்கள் பொன்னான காலங்களையும், பொருள்களையும் வீன் விரயமாக்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் பொது மக்களே! இனியாவது இது போன்ற இழிச் செயல்களில் ஈடுவடுவதிலிருந்து விலகிக் கொள்வது அவசியமாகும். அதுபோல் ஆலிம்களும் இது போன்ற இழிச் செயல்களுக்கு அங்கீகாரமளிப்பதிலிருந்தும், அரங்கேற்றுவதிலிருந்தும் தங்களைத் தடுத்துக் கொள்ள வேண்டும்; தற்காத்துக் கொள்ள வேண்டும்.

தர்ஹாக்கள் புரோகிதம், புரோகிதர்களின் சரணாலயங்களாய்த் திகழ்கின்றன. உழைத்துப் பொருளீட்டுவதைக் கட்டாயக் கடமையாக்கிய தூய இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றிப் பிழைப்பது சமூக நியதியாகி விட்டது. கடின உழைப்பால் பொருளீட்டியவரும் எளிதாய் ஏமாறும் இடம் தர்ஹாக்கள் தான். ஈண்டு, கடின உழைப்பால் பொருள் ஈட்டியவர்கள், பொருளீட்டும் விஷயத்தில் எச்சரிக்கையோடும் கவனத்தோடும் இருப்பது போல் மார்க்க விஷயத்தில் கவனம் செலுத்தாததால் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய ஹலாலான பொருளை எளிதில் இழக்க நேரிடுகிறது.

இம்மை, மறுமையில் அதன் மூலம் இறையின் அதிருப்தியை ஈட்டிக் கொள்கிறார்கள் என்பதை முஸ்லிம் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். பொருளையும், நேரத்தையும் செலவழித்து  நஷ்டவாளிகளாகிக் கொண்டிருக்கும் முஸ்லிம் பொதுமக்களின் விபரீதப் போக்கை எண்ணி வேதனையடைவதன்றி வேறென்ன செய்ய முடியும்……?

மாற்று மதத்தவர்கள் வழிபாட்டு ஸ்தலங்களில் நடப்பவைகள்-அதில் சிற்சில மாற்றங்கள் அதை சாதாரணச் சாமான்யர் மாற்றாரின் சடங்கு சம்பிரதாயம் என்று உணர்ந்துக் கொள்ள முடியாதவாறு வெகு சாமர்த்தியமாய் தர்ஹாக்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகவே. முஸ்லிம் பொதுமக்கள் இது விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு ஈமானைத் தற்காத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இவற்றில் எவருக்காவது மாற்றுக் கருத்து இருக்கும் பட்சத்தில் தர்ஹாக்களுக்கு செல்லும் முன் அருகிலுள்ள பூஜை புனஜ்காரங்கள் நடக்கும் கோவில் ஒன்றுக்குச் சென்று அங்கு நடப்பவைகளைக் கூர்ந்து கவனித்து விட்டு-தர்ஹாக்களில் நடப்பவைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்வது நல்லது. அதற்கு இயலாதோர் தேர் திருவிழாவையும் சந்தனக் கூட்டையும் ஒப்பு நோக்கி உண்மையை உணருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சந்தனக் கூடு நடக்கும் இடங்களை உற்றுநோக்குங்கள், வசதியுள்ளோருக்கு அது ஒரு பொழுது போக்கு! வசதியற்றவர்களும், நடுத்தர மக்களும் சந்தனக்கூடு நடைபெறும் காலங்களில் எவ்வளவுத் துன்பப்படுகிறார்கள்? பணமில்லாமல் தவித்து வட்டிக்கு கடன் வாங்கி வயிற்றெரிச்சலை மென்று விழுங்கி சந்தனக்கூடு உற்சவத்தை சபித்து(கொண்டாடி)க் கொண்டிருக்கிறார்கள்.

இறந்தவர்கள் வீட்டில் அனுஷ்டிக்கப்படும் அனாச்சாரங்கள், மாற்றாரின் மூடச்சடங்கு சம்பிரதாயங்கள், இவைகளைத் தவறென்று உணர்ந்தோறும் இவைகளிலிருந்து தப்பிக்க முடியாதவாறு சிக்கிக் கொள்கிறார்கள். இஸ்லாத்தின் மூலக்கொள்கைகளை இடித்துத் தள்ளினாலும், பஞ்சமா பாதங்களை அஞ்சாமல் செய்தாலும் பரவாயில்லை. சமுதாயம் கண்டு கொள்ளாமல் விட்டு விடும். ஆனால் இறந்தவர்களின் பெயரால் நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாத்திற்கு இழிவைத் தேடித்தரும் அனாச்சாரங்களை விட்டு விட்டால் முஸ்லிம் பொதுமக்கள் பதறிவிடுகிறார்கள். விட்டவர்களை கன்னா பின்னாவென்று விமர்சித்துத் தள்ளிவிடுகிறார்கள். அந்த அளவுக்கு மக்களது ஊனோடும், உதிரத்தோடும், வாழ்வோடும் ஒன்றி விட்ட அனாச்சாரம் அது. இந்த அனாச்சாரங்கள் அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்டதால் மேற்கூறிய சந்தனக் கூட்டிற்கு சற்றும் குறைவில்லாமல் ஏன்? அதற்கு மேலும் நடுத்தர, ஏழை மக்கள் துன்பப்படுகிறார்கள்-வேதனைக்குள்ளாகுகிறார்கள். மவ்லிது ஓதுதலும் இவ்வகையைச் சார்ந்ததே!

மவ்லிது வைபவங்களிலும், இறந்தவர் வீட்டில் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களிலும், அனாச்சாரங்களிலும், ஊருக்கு ஊர் சிற்சில சில்லறை மாற்றங்கள்! அல்லது புதுப்புது நூதனமான அனுஷ்டானங்கள் இடம் பெற்றாலும் முஸ்லிம் பொதுமக்கள் தினமும் ஐவேளை தொழ வேண்டும்! (இது முஸ்லிமின் நீங்காக் கடமை) என்று எண்ணிப் பார்க்காதோர் கூட இதில் மிகுந்த பக்தி பரவசத்தோடு போட்டி போட்டுக் கொண்டு ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.

இவ்வகை அனாச்சாரங்கள் ஆலிம்களுக்கு இலகுவாய் பொருளீட்டிக் கொடுப்பதால் ஆலிம்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு இவைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்; முஸ்லிம் பொதுமக்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் பொதுமக்களும், ஆலிம்களும் போட்டி போட்டுக் கொண்டு இவ்வகை அனாச்சாரங்களை சமூக நியதியாக்கிவிட்டதால் இவைகளை விட்டவர்கள் விரோதிகளாய் பாவிக்கப்படுகிறார்கள் அது மட்டுமல்ல.

இவ்வகை அனாச்சாரங்களில் ஈடுபடுவதை முஸ்லிம் பொதுமக்களும், ஆலிம்களும் பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள்.

 இதுவரை எடுத்துக் காட்டியவைகள் பலருக்கு எரிச்சலூட்டினாலும், நன்மை, புண்ணியம் என்று மார்க்கம் அனுமதிக்காத மார்க்கத்தில் திணிக்கப்படும் புதுப்புது நூதன அனுஷ்டானங்களும், அனாச்சாரங்களும் புரோகிதர்களையும், புரோகிதத்தையும் வளர்க்க உதவுமேயன்றி அவைகளால் முஸ்லிம்களுக்கு எவ்வித நன்மையுமில்லை. அதனால் பாவமீட்சி(தவ்பா) பெறுவதற்கு வழியில்லாமல் போய்விடுகிறது. அவைகள் இஸ்லாத்திற்கும் இழுக்கைத் தேடித் தந்து கொண்டிருக்கின்றன என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

முஸ்லிம் பொதுமக்கள் புரோகிதர்களை விட்டும், புரோகிதத்தை விட்டும் மீட்சி பெறுவது அவசியம். அதற்குரிய முயற்சிகளில் முஸ்லிம் பொதுமக்கள் ஈடுபடுவதும் அவசியம் என்பதையும் மு.பொ. மக்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். அல்லாஹ்(ஜல்) புரோகிதர்களையும் புரோகிதத்தையும் விட்டு முஸ்லிம் பொதுமக்கள் மீட்சி பெற அருள்பாலிப்பானாக! ஆமின்.

புரோகிதர்களாக மாறிவிட்ட ஆலிம்கள் மட்டுமே ஈண்டு விமர்சிக்கப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் அல்ல என்பதையும் விண்டுரைக்க விரும்புகிறோம். ஆலிம்கள் அனைவரும் உண்மையில் அகத்தாலும், புறத்தாலும் அல்லாஹ்விற்கஞ்சி, இஸ்லாமிய உண்மைகளை உள்ளது உள்ளபடி முஸ்லிம் பொதுமக்களுக்கு துணிவுடன் எடுத்துக் காட்ட முன்வர வேண்டும். அத்துடன் புரோகிதருக்கெதிராக சடங்கு சம்பிரதாயங்களின் கெடுதிகளை விளக்கி பிரச்சாரம் செய்பவர்களாகவும் மாற வேண்டும். இதுவே எங்கள் வேணவா. (வஸ்ஸலாம்) எங்கள் விருப்பம் நிறைவேற  அல்லாஹ்விடம் துஆ செய்து நிறைவு செய்கிறோம். குறிப்பு : புரோகிதர்களையும் புரோகிதத்தையும் முற்றாக நீக்கிட பாடுபட்டுக் கொண்டிருக்கும் அந்நஜாத்துடன் இணைந்து செயல்பட விரும்பும் ஆலிம்களை அந்நஜாத் இருகரம் நீட்டி வரவேற்கிறது.

*************************************************************************************************

ஒரு மூமின் தமது தவறை இருமுறை சுட்டிக்காட்டும்

வகையில் இருக்க மாட்டார்:

ஒரு மூமின் ஒரு புற்றிலிருந்து இருமுறை கொட்டு வாங்க மாட்டான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)

*************************************************************************************************

Previous post:

Next post: